ிரும்பவும் உங்களோடு இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விதத்தில் மிகவும் அதிக முக்கியத்துவம் உடைய ஒரு சத்தியத்தை நாம் தொடர்ந்து கற்றுக் கொண்டு வருகிறோம். “மரணத்தின் மீது வெற்றி” என்பதுதான் அது.

“மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும்?” என்பதைக் குறித்து நேற்றைய செய்தியில் நாம் பார்த்தோம். இது எப்பொழுதுமே மனுஷனுடைய கற்பனையைக் கவர்ந்து இழுக்கிற ஒரு விஷயமாயிருக்கிறது. மரணத்திற்கு பிறகு, மனுஷருடைய ஆத்துமாக்களுக்கு என்ன நடக்கிறது என்பதைக் குறித்து வேதாகமம் கொடுக்கிற சில படங்களை நாம் பார்க்கிறோம். அவை கண்களால் காண முடியாத உலகத்திற்குள் கடந்து செல்கின்றன. சில குறிப்பிட்ட விஷயங்கள், பல்வேறு வேதப்பகுதிகளில் திரும்பத் திரும்ப வருவதை நாம் பார்க்கின்றோம். அந்தக் குறிப்புகளை நாம் திரும்பப் பார்ப்போம்:

முதலாவது குறிப்பு: பூமியில் முன்பு அவர்கள் வாழ்ந்தபோது நிகழ்ந்தவைகளெல்லாம் அந்த ஆத்துமாக்களின் நினைவில் இருந்தன.

இரண்டாவது குறிப்பு: அங்கே அந்த ஆத்துமாக்களின் ஆளுமையோ, சுபாவமோ மாறவே இல்லை.

மூன்றாவது குறிப்பு: அங்கே ஒருவருடைய ஆத்துமா, இன்னொருவருடைய ஆத்துமாவை அறிந்து வைத்திருந்தது, அடையாளம் கண்டு கொண்டது.

நான்காவது குறிப்பு, அங்கே அந்த ஆத்துமாக்கள் ஒன்றோடொன்று பேசிக் கொண்டன, உரையாடின.

ஐந்தாவது குறிப்பு, கண்களால் பார்க்க முடியாத அந்த உலகத்தில், அந்த ஆத்துமாக்களின் அப்பொழுதைய நிலை என்ன என்பதை அவை நன்கு அறிந்து வைத்திருந்தன.

ஆறாவது குறிப்பு: பூமியில் முன்பு வாழ்ந்தபோது இருந்த அவர்களுடைய நிலையோடு ஏதோ ஒரு வகையான தொடர்பு இருந்தது. எடுத்துக்காட்டிற்கும், பூமியில் அவர்கள் ராஜாக்களாய் வாழ்ந்திருந்தார்கள் என்றால், கண்களால் பார்க்க முடியாத இந்த உலகத்திலும் அவர்கள் ராஜாக்களாகவே அங்கீகரிக்கப்பட்டனர்.

ஆனாலும் லாசரு மற்றும் ஐசுவரியவானைக் குறித்த சம்பவத்தில் இயேசு ஒரு முக்கியமான விஷயத்தை கூடுதலாக வெளிப்படுத்துகிறார். அவ்விடத்தில், நீதிமான்களின் ஆத்துமாக்களுக்கும், அநீதிமான்களின் ஆத்துமாக்களுக்கும் இடையே நிரந்தரமான பிரிவு, பிளவு இருந்தது. நீதிமான்களின் ஆத்துமாக்கள், ஆபிரகாமின் மடி என்று பெயரிடப்பட்ட இளைப்பாறுதலின் இடத்தில் இருந்தன. அநீதிமான்களின் ஆத்துமாக்கள், சிறையிருப்பின் இடத்திலே விடப்பட்டன. அங்கே அவை மகா கொடுமையாய் வேதனைகளை அனுபவித்தன.

இன்றைக்கு நான் இன்னொரு காரியத்தை விளக்கிச் சொல்லப் போகிறேன். அதாவது இயேசுவின் மரணத்திற்குப் பிறகு, அவருடைய சரீரம் கல்லறையில் இருந்த நிலையில், அவருடைய ஆத்துமா பாதாளத்திற்குள் இறங்கிச் சென்றது. அதன் விளைவாக, சில முக்கியமான, நிரந்தரமான மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்தச் சம்பவங்களைக் குறித்து பிரதானமாக, பேதுரு எழுதிய முதல் நிருபத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இரண்டு முக்கியமான வேதப்பகுதிகளை நாம் இங்கே பார்ப்போம்:

முதலில், 1 பேதுரு 3:18-20 வசனங்களை வாசிப்போம்.

18 ஏனெனில் கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய் பாவங்களினிமித்தம் ஒரு தரம் பாடுபட்டார். அவர் மாம்சத்திலே கொலையுண்டு ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். 19 அந்த ஆவியிலே அவர் போய் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். 20 அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம் பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமல் போனவைகள். அந்தப் பேழையிலே சிலராகிய எட்டு பேர் மாத்திரம் காக்கப்பட்டார்கள்.

ஆக, இது கிறிஸ்துவைக் குறித்துப் பேசுகிறது. அவர் தம்முடைய சரீரத்தில் அல்ல, ஆவியில் பாதாளத்திற்குள் இறங்கிச் சென்றார். அங்கே சிறைப்பட்டுக் கிடந்த அநீதியான நபர்களின் ஆவிகளுக்கு ஒரு செய்தியை பிரசங்கித்தார் என்று இவ்வேதப்பகுதி சொல்கிறது. இங்கே குறிப்பிடப்பட்ட நபர்கள், நோவாவின் நாட்களில், தேவனுடைய பிரமாணங்களை மீறி, தேவனுக்குக் கீழ்ப்படியாமல் வாழ்ந்தவர்களாவர்.

இரண்டாவதாக, 1 பேதுரு 4:6-ம் வசனத்தை வாசிப்போம்:

6 இதற்காக மரித்தோரானவர்கள், மனுஷர் முன்பாக மாம்சத்திலே ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன் முன்பாக ஆவியிலே பிழைக்கும்படியாக, அவர்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது.

இந்த வசனம், இதற்கு முந்தி நாம் பார்த்த வசனத்தில் சொல்லப்பட்ட அதே காரியத்தைப் பேசவில்லை. ஒரு முக்கியமான வித்தியாசம் இங்கே இருக்கிறது. கிரேக்க மொழியில், வித்தியாசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. முதலில் பார்த்த வசனத்தில், “இயேசு பிரசங்கித்தார்,” என்று அது சொல்கிறது. ஆனால் இரண்டாவதாக, நாம் பார்த்த வசனத்தில், “சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது,” என்று அது சொல்கிறது. சுவிசேஷம் என்பது என்ன? அது எப்பொழுதுமே இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை மையமாகக் கொண்ட ஒரு நற்செய்தியாக இருக்கிறது.

இங்கே என்ன வித்தியாசம் இருக்கிறது? உண்மையில் என்ன நடந்தது? நான் இதை இவ்வாறாகத்தான் விசுவாசிக்கிறேன். முதலில், ஆபிரகாமின் மடியிலிருந்த நீதிமான் விசுவாசிகளுக்கு என்ன நிகழ்ந்தது என்று நாம் பார்ப்போம். இயேசுவே அவர்களுக்கு சுவிசேஷமாகிய நற்செய்தியைக் கொண்டு வந்தார். எது நற்செய்தி? என்னுடைய மரணம் மற்றும் நான் சிந்தின இரத்தத்தினால் பாவத்திற்கான விலைக்கிரயம் இப்பொழுது செலுத்தி தீர்க்கப்பட்டிருக்கிறது. அதன் விளைவாக, முழுமையான பாவ மன்னிப்பை உங்களுக்குக் கொடுப்பதற்கு தேவன் இப்பொழுது ஆயத்தமாயிருக்கிறார். பல நூற்றாண்டுகளாகக் காத்திருக்கிற இந்த இடத்திலிருந்து தேவன் உங்களை விடுவிக்கவும் தயாராக இருக்கிறார். இதைத்தான் இயேசு பிரசங்கித்திருப்பார். பாவத்தின் தண்டனையாகிய மரணத்தை அவர்களுடைய சரீரங்கள் அனுபவித்திருந்தன. ஆனால் இயேசுவின் மீது விசுவாசம் வைப்பதன் மூலம், அவர்களுடைய ஆத்துமாக்கள் தேவனுடைய மன்னிப்பைப் பெற்றுக் கொண்டன.

சிறையிருப்பில் இருந்த அநீதிமான்களுக்கு என்ன நிகழ்ந்தது என்று இப்பொழுது பார்ப்போம். இயேசு அவர்களிடம் ஒன்றை அறிவிக்கிறார். இந்த அறிவிப்பு என்ன என்று எனக்குத் தெரிந்தவரை, வேதாகமத்தில் எங்கும் சொல்லப்படவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனாலும், “இந்த இடம் இனி புதிய நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது,” என்று இயேசு சொன்னதாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். நான் ஏன் இப்படிச் சொல்கிறேன்? பத்மு தீவிலிருந்த யோவானிடம் இயேசு என்ன சொன்னார் என்பதை நாம் கவனிப்போம். அங்கே அவர் தம்முடைய மகிமையில் அவனிடம் தோன்றினார். வெளிப்படுத்தின விசேஷம் 1:17,18 வசனங்களை நாம் வாசிப்போம். யோவான் இவ்வாறு எழுதியிருக்கிறார்:

17 நான் அவரைக் கண்டபோது, செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன். அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என் மேல் வைத்து, என்னை நோக்கி, “பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன். 18 மரித்தேன். ஆனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன். ஆமென். நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.”

இயேசு சிலுவையில் கிருபாதார பலியாய் தம்மையே ஒப்புக்கொடுத்து, மரித்ததன் மூலம், மரணம் மற்றும் பாதாளம் என்ற சாத்தானுடைய இரண்டு தூதர்களோடு மல்யுத்தம் செய்து, ஜெயமெடுத்து, அந்தச் சிறையிருப்பின் இடத்திற்குரிய திறவுகோல்களை தமக்குச் சொந்தமானதாக்கிக் கொண்டார். அதன் விளைவாக, அந்த நேரத்திலிருந்து, மன்னிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கக்கூடிய உரிமையை இயேசு உடையவரானார். பிறகு அவர் இதைச் செய்தார். பாதாளத்திலிருந்து அவர் ஏறி வெளியே வந்த பிறகு, நேராக பரலோகத்திற்குச் சென்றார். அப்பொழுது அவர் ஆபிரகாமின் மடியிலிருந்து விடுதலையாக்கப்பட்ட ஆத்துமாக்களை தம்மோடு கூட்டிக் கொண்டு சென்றான். இதைக் குறித்து எபேசியர் 4:8-10 வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் அதை வாசிப்போம்:

8 ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார் [அதாவது, பாதாளத்தின் சிறையிருப்பில் இருந்தவர்களை, இயேசு தம்முடைய கிருபாதார பலியின் மூலம் தமக்கென்று சிறைப்பிடித்துக் கொண்டார். இதற்காக, அவர் தம்முடைய இரத்தத்தை விலைக்கிரயமாய் செலுத்தி, சிந்தியிருந்தார். இதன் மூலம், சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கக்கூடிய உரிமையை அவர் பெற்றுக் கொண்டார். அவர் உன்னதத்திற்கு ஏறிச் சென்றபோது, அவர்களை தம்மோடு கூட்டிக் கொண்டு சென்றார். பவுல் இதைத்தான் இங்கு தெளிவுபட எழுதியிருக்கிறார். அடுத்த இரண்டு வசனங்களையும் நாம் வாசிப்போம்]. 9 ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா? 10 இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.

ஆக, இயேசு பூமியில் தாழ்விடத்திற்கு இறங்கினார். பிறகு ஆபிரகாமின் மடியில் சிறைப்பட்டுக் கிடந்தவர்களுக்கு நற்செய்தியை அறிவித்து, விடுதலையாக்கினார். அவர் பெற்றுக் கொண்ட மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களைப் பயன்படுத்தி, அவர் அவர்களை விடுதலையாக்கினார். தேவனுடைய பிரசன்னம் இருக்கும் பரலோகத்திற்கு அவர் ஏறிச் சென்றபோது, அவர் அவர்களையும் தம்மோடு கூட்டிச் சென்றார். சிறைப்பட்டிருந்தவர்களை அவர் சிறையாக்கிக் கூட்டிச் சென்றார். சிறைப்பட்டிருந்த கூட்டத்தாரை விடுதலையாக்கி, அவர்களைத் தமக்கென்று சிறைப்பிடித்துக் கொண்டு, கூட்டிச் சென்றார்.

இது மத்தேயு 27:51-53 வசனங்களிலும் விளக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது. சிலுவையில் நிகழ்ந்த இயேசுவின் மரணத்தைக் குறித்தும், அதற்குப் பின் நிகழ்ந்த சம்பவங்களைக் குறித்தும் இவ்வசனங்கள் பேசுகின்றன. நாம் அதை வாசிப்போம்:

51 அப்பொழுது தேவாலயத்தின் திரைச்சீலை மேல் தொடங்கி, கீழ் வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. பூமியும் அதிர்ந்தது. கன்மலைகளும் பிளந்தது. 52 கல்லறைகளும் திறந்தது. நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான் களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. 53 அவர் உயிர்த்தெழுந்த பின்பு, இவர்கள் கல்லறைகளை விட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள்.

சிறைப்பட்டிருந்த இவர்களைத்தான் இயேசு விடுதலையாக்கினார். எபிரெயர் 11:40-ம் வசனம், பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களை புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களோடு ஒப்பிட்டுப் பேசுகிறது: “பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களாகிய அவர்கள், புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களாகிய நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன், புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களாகிய நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.” இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகுதான், பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள், எது நிறைவேற வேண்டும் என்ற வாஞ்சையோடு விசுவாசித்து, நம்பிக் காத்திருந்தார்களோ அதற்குள் பிரவேசித்தார்கள். இயேசு அவர்களுடைய சிறையிருப்பின் இடத்திற்கு இறங்கி வந்து, அவர்களை விடுதலையாக்கி, அவர்களை தம்மோடு கூட்டிக் கொண்டு சென்றபோது, அது நிறைவேறியது.

இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மற்றும் இப்பொழுது நாம் பார்த்த சம்பவங்களின் விளைவாக, அந்த நேரத்திலிருந்து, நீதிமான் விசுவாசிகளுக்கான சூழ்நிலை முழுமையாய், முற்றிலுமாய் மாற்றப்பட்டிருக்கிறது. அந்த நேரத்திலிருந்து, நீதிமான் விசுவாசிகள் தங்களுடைய மரணத்திற்குப் பிறகு, சிறையிருப்பில் காத்திருக்கிற ஒரு இடத்திற்கு இறங்கிச் செல்வதில்லை. மாறாக, தேவனுடைய பிரசன்னம் இருக்கும் பரலோகத்திற்கு நேரடியாகச் செல்கிறது.

முதல் இரத்த சாட்சியாய் மரித்த ஸ்தேவான்தான், இதைத் தெளிவாக நமக்கு எடுத்துக் காண்பிக்கிற முதல் எடுத்துக்காட்டாய் இருக்கிறான். இதைக் குறித்து அப்போஸ்தலர் நடபடிகள் 7:55-56 வசனங்கள் என்ன சொல்கின்றன என்பதை நாம் கவனிப்போம்:

55 அவன் (ஸ்தேவான்) பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்து பார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு, 56 “அதோ, வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்,” என்றான்.

தொடர்ந்து, 59-60 வசனங்களையும் வாசிப்போம்.

59 அப்பொழுது, “கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக் கொள்ளும்,” என்று ஸ்தேவான் தொழுது கொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள். 60 அவனோ, முழங்காற்படியிட்டு, “ஆண்டவரே, இவர்கள் மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும்,” என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி நித்திரையடைந்தான்.

மரணமடைவதற்கு முன், ஸ்தேவானுக்கு ஒரு தெளிவான தரிசனம் உண்டானது. இவ்வுலகத்தையும் தாண்டி, பரலோகத்தில் நடக்கின்ற நிகழ்வை ஒரு தரிசனமாய் அவன் பார்க்கிறான். அவன் தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிற இயேசுவையும் கண்டான். அவன் எங்கே போகிறான் என்பது அவனுக்குத் தெரிந்தது. அப்பொழுது, “என் ஆவியை ஏற்றுக் கொள்ளும்,” என்று அவன் ஜெபிக்கிறான். அவன் ஷியோல் எனும் பாதாளத்திற்குள் இறங்கிச் செல்லவில்லை. மாறாக, அவனுடைய ஆவி, நேரடியாக கர்த்தருடைய பிரசன்னத்திற்குள் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இப்பொழுது நாம் பவுலின் சாட்சியை பார்ப்போம். 2 கொரிந்தியர் 5-ம் அதிகாரத்தின், 7 மற்றும் 8 வசனங்களில், பவுல் இதைச் சொல்கிறார்:

7 இந்தத் தேகத்தில் குடியிருக்கையில், கர்த்தரிடத்தில் குடியிராதவர் களாயிருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும் தைரியமாயிருக்கிறோம். 8 நாம் தைரியமாகவேயிருந்து, இந்த தேகத்தை விட்டுக் குடிபோகவும், கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்.

பவுலின் முன்பாக இரண்டு வாய்ப்புகள் இருந்தன என்று இங்கு பார்க்கிறோம். பவுல் தன்னுடைய சரீரத்தில் உயிர் வாழும் வரைக்கும், அவர் கர்த்தருடைய பிரசன்னத்தில் இல்லை என்று அர்த்தம். ஆனால் சரீரத்தை விட்டு அவருடைய உயிர் பிரிந்த அந்தக் கணமே, அவர் கர்த்தருடைய பிரசன்னத்தில் இருப்பார். அவர் ஷியோல் எனும் பாதாளத்திற்கு இறங்கிச் செல்ல வேண்டும் என்ற கேள்விக்கே அங்கு இடமில்லை. அவருடைய சாட்சியைக் குறித்து, திரும்பவும், பிலிப்பியர் 1:21-24 வசனங்களில் வாசிப்போம்.

21 கிறிஸ்து எனக்கு ஜீவன். சாவு எனக்கு ஆதாயம். 22 ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்கு பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்து கொள்ள வேண்டியது இன்னதென்று அறியேன். 23 ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன். தேகத்தை விட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனே கூட இருக்க எனக்கு ஆசையுண்டு. அது அதிக நன்மையாயிருக்கும். 24 அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.

தனக்கு முன் வைக்கப்பட்டிருக்கிற இந்த இரண்டு வாய்ப்புகளையும் பவுல் தெளிவாகப் பார்க்கிறார். ஒன்று, சரீரத்தில் உயிரோடிருந்து, அவர் யாருக்கு ஊழியம் செய்கிறாரோ, அவர்களுக்கு பயனுள்ள விதத்தில் வாழலாம். இன்னொன்று, சரீரத்தை விட்டு பிரிந்து, கிறிஸ்துவுடனே கூட இருப்பதாகும். இதை அவர் அதிகமாக விரும்பினார்.

ஆக, சிலுவையில் நிகழ்ந்த இயேசுகிறிஸ்துவின் மரணமும், நம்முடைய மீட்பிற்காக அவர் சிந்திய இரத்தமும், நீதிமான் விசுவாசிகள் சென்றடைய வேண்டிய இடத்தையே முற்றிலும் மாற்றின. அந்தக் கணத்திலிருந்து, ஷியோல் எனும் பாதாளத்திற்கு இறங்கி, அங்கே ஆபிரகாமின் மடியில் இரட்சிப்பு மற்றும் விடுதலையின் நேரத்திற்காக காத்திருக்க வேண்டிய அவசியமே எழவில்லை. மாறாக, இயேசுவின் மீது விசுவாசம் வைப்பதன் மூலம் அவருடைய நீதியினால் நீதிமானாக்கப்பட்ட, அவருடைய இரத்தத்தினால் மீட்கப்பட்ட நீதிமான்களின் ஆவிகள், இப்பொழுது நேரடியாக பரலோகத்திற்குள் நுழைகின்றன. வெளிப்படுத்தின விசேஷத்தில் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது. வானங்களில், இளைப்பாறுதலின் தோட்டமாக பரதீசு எனும் ஒரு இடம் இருக்கிறது. இதற்குள் நுழைவதற்கான உரிமையை நீதிமான்களின் ஆத்துமாக்கள் பெற்றிருக்கின்றன.

1 கொரிந்தியர் 15:55-ம் வசனத்தை வாசித்து, இன்றைய செய்தியை நாம் முடிப்போம்.

55 “மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?”

இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல், மரணத்தின் வெற்றியையும், அதன் கொடுக்கையும் பிடுங்கி, பறித்துப் போட்டிருக்கிறது. இயேசுவின் மரணத்தின் மூலம் விலைக்கிரயம் கொடுத்து வாங்கப்பட்ட எல்லா நன்மைகளுக்காகவும், நாம் தேவனுக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் வாழ வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்!

நல்லது, இன்றைக்கு நம்முடைய நேரம் முடிந்து விட்டது. நாளை இதே நேரம், நான் திரும்பவும் உங்களை சந்திக்கிறேன்.

சரீரத்தில் உயிர் பிரிந்தபிறகு, நீதிமான்களின் ஆத்துமாக்கள் எங்கே செல்கின்றன என்பதைக் குறித்து இன்றைய செய்தியில் நாம் பார்த்தோம். தேவனுடைய திட்டத்தில் அடுத்த முக்கியமான கட்டத்தைக் குறித்து நாளைய செய்தியில் நாம் பார்ப்போம். அதாவது, உயிர்த்தெழுதலில் ஆத்துமாவும், சரீரமும் ஒன்றாய் இணைகின்ற நிகழ்வைக் குறித்துப் பார்ப்போம்.