இந்த வாரம் நான் தேவனுடனான உறவைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன். அத்தகைய உறவுக்கான ஒரே நிலையான அடிப்படை ஒரு உடன்படிக்கை என்பதையும், இரண்டு தரப்பினரும் ஒரு உடன்படிக்கையில் நுழையும் போது ஒவ்வொருவரும் மற்றவருக்காக தனது உயிரைக் கொடுக்கிறார்கள் என்பதையும் நாம் பார்த்தோம். ஒவ்வொருவரும் தன்னையும் தன்னிடம் உள்ள அனைத்தையும் மற்றவர் வசம் வைக்கிறார்கள். குறிப்பாக, தேவனும் ஆபிரகாமும் ஒருவருக்கொருவர் உடன்படிக்கை செய்துகொண்டதையும், அதன் விளைவாக, ஆபிரகாம் எவ்வாறு தேவனுடைய நண்பரானார் என்பதையும் பார்த்தோம்.

தேவன் மனிதனுடன் நிரந்தர உறவில் நுழைவதற்கு ஒரே ஒரு அடிப்படை மட்டுமே உள்ளது என்று நேற்று நான் விளக்கினேன் - ஒரு பலியின் அடிப்படையிலான ஒரு உடன்படிக்கை. எளிமையாகச் சொன்னால், தேவனுடனான உறவு ஒரு உடன்படிக்கையின் அடிப்படையிலும், ஒரு உடன்படிக்கை ஒரு பலியின் அடிப்படையிலும் இருக்க வேண்டும்.

இன்று நான் ஆதியாகமம் 15 ஆம் அதிகாரத்தில் தேவன் ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையைப் பற்றி பேசப் போகிறேன். தேவன் மனிதனுடன் எப்படி உடன்படிக்கையில் நுழைகிறார் என்பது பற்றிய மிக அழகான மற்றும் விரிவான படம் இது. இந்த அதிகாரத்தின் 6ம் வசனத்தில் இருந்து 18ம் வசனம் வரை படித்து தொடங்குகிறேன்:

6 அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். 7 பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்து வந்த கர்த்தர் நானே என்றார். 8 அதற்கு அவன்: கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச் சுதந்தரித்துக்கொள்வேன் என்று எதினால் அறிவேன் என்றான். 9 அதற்கு அவர்: மூன்று வயதுக் கிடாரியையும், மூன்று வயது வெள்ளாட்டையும், மூன்று வயது ஆட்டுக்கடாவையும், ஒரு காட்டுப் புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில் கொண்டுவா என்றார். 10 அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பட்சிகளை அவன் துண்டிக்கவில்லை. 11 பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்கின; அவைகளை ஆபிராம் துரத்தினான். 12 சூரியன் அஸ்தமிக்கும்போது, ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது; திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது. 13 அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியՠύகடவாய். 14 இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள். 15 நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய். 16 நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார். 17 சூரியன் அஸ்தமித்துக் காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினி ஜுவாலையும் தோன்றின. 18 அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதி துவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும் … தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.

இது மிகவும் அசாதாரண விளக்கம். தேவன் மனிதனுடன் எவ்வாறு உறவில் நுழைகிறார் என்பது வேதத்தில் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். இது உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டது. உடன்படிக்கைக்கு பலி தேவை.

அந்தப் பகுதியில் சில விஷயங்களை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஆபிரகாம் கேட்ட ஒரு கேளிவில் இருந்து இது தொடங்கியது, “தேவனே நீர் எனக்கு கொடுத்த வாக்குத்தத்ததை நிறைவேற்றுவீர் என்பதை நான் எப்படி அறிவேன்?" தேவனுடைய பதில்: அவர் ஒரு உடன்படிக்கை செய்தார். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், அவர் வாக்குறுதியளித்ததைச் செய்ய, தேவனுடைய இறுதி அர்ப்பணிப்பு, ஒரு உடன்படிக்கையில் உள்ளது. தேவன் ஒரு உடன்படிக்கை செய்துவிட்டால், தம்மை ஒப்புக்கொடுக்க அதற்கும் மேல் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. உடன்படிக்கை என்பது இறுதி உறுதிப்பாடு.

அந்த பலிகள் என்ன செய்யப்பட்டன என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஆபிரகாம் விலங்குகளைக் கொல்ல வேண்டும், அவற்றின் உடல்களை இரண்டாக வெட்ட வேண்டும், பின்னர் அவர் பலிகளின் துண்டுகளுக்கு இடையில் நடந்தார். இன்னும், மிகவும் குறிப்பிடத்தக்கது, தேவனே தாமே, அந்த புகைகிற சூளையின் நபராக, வானத்திலிருந்து இறங்கி வந்தார், அவரும் தனது முறைப்படி, பலியின் துண்டுகளுக்கு இடையில் சென்றார். எனவே உடன்படிக்கை செய்யப்பட்டது, அல்லது எபிரேய மொழியில் அவர்கள் சொல்வது போல், "உடன்படிக்கை வெட்டப்பட்டது". இரு தரப்பினரும் பலியின் துண்டுகளுக்கு இடையில் சென்றபோது. அதற்கு என்ன பொருள்? அந்த பலி, ஒவ்வொரு தரப்பினரின் மரணத்தையும் குறிக்கிறது. ஒவ்வொருவரும் பலியின் வழியாகச் செல்லும்போது, அவர், “அது என் மரணம். இந்த நேரத்தில், நான் என் உயிரைக் கொடுக்கிறேன். இப்போது நான் உடன்படிக்கையில் இருக்கிறேன், நான் இனி எனக்காக வாழவில்லை; நான் யாருடன் உடன்படிக்கை செய்துகொண்டேனோ அவருக்காக வாழ்கிறேன்" என்று கூறுவதாகும்.

மனிதர்கள் உயிருடன் இருக்கும் வரை உடன்படிக்கை செல்லாது என்று எபிரேயருக்கு எழுதிய நிருபத்தில் எழுத்தப்பட்டிருப்பதை நேற்று சுட்டிக்காட்டினோம். உடன்படிக்கையை செல்லுபடியாக்க மரணம் தேவைப்படுகிறது. அந்த புகைகிற சூளையையும், அக்கினி ஜுவாலையையும் நினைத்துப் பாருங்கள். அந்த நேரத்தில் ஆபிரகாமுக்கு என்ன ஒரு இருள் வந்தது. இரவின் இருள் மட்டுமல்ல, அடுப்பிலிருந்து வரும் புகையின் இருளும் சேர்ந்துகொண்டது. ஆனால் அந்த இருளின் நடுவில் வெளிச்சம் தந்தது ஒன்றுதான். அந்த அக்கினி ஜுவாலை. இது, யோவான் வெளிப்படுத்துதல் 4 ஆம் அதிகாரத்தில் பார்த்த சிம்மாசனத்திற்கு முன்னால் இருந்த ஏழு அக்கினி தீபங்களை நமக்கு நினைப்பூட்டுகிறது. எனவே தேவன் தாமே இறங்கி வந்து அந்த துண்டுகளுக்கு இடையே சென்றார். தேவன் இவ்வளவு தூரம் சென்று, மிகவும் திட்டவட்டமாகவும், குறிப்பிட்டதாகவும், ஒரு விதத்தில் சொன்னால் மிக சாதாரணமாகவும், ஒரு மனிதனுடன் தனிப்பட்ட உறவில் நுழைகிறார் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா?

அந்த பலியின் அர்த்தம் என்ன? அந்த துண்டுகளுக்கு இடையில் செல்கிறது என்ன? தேவன் ஆபிரகாமிடம் என்ன கூறுகிறார்? ஆபிரகாம் தேவனிடம் என்ன சொல்கிறார்? உண்மை என்னவென்றால், அந்த நேரத்தில் இருவரும் மற்றவருக்கு ஆதரவாக தனது வாழ்க்கையைத் துறந்தார்கள். இருவரும், “இனிமேல், என் வாழ்வில் நான் முதன்மை அல்ல, என்னுடையதை விட உன் வாழ்க்கை முக்கியமானது. நான் உனக்காக வாழப் போகிறேன். அதற்காக என் சொந்த வாழ்க்கையைத் துறந்தேன்" என்றார்கள்.

கர்த்தரும் ஆபிரகாமும் உடன்படிக்கைக்குள் நுழைவதைப் பற்றிய விளக்கத்தை மீண்டும் ஒரு கணம் திரும்பிப் பார்ப்போம். அதிலிருந்து சில படிப்பினைகளைப் பெற விரும்புகிறேன், இன்று தேவனுடனான நமது உறவில் உங்களுக்கும் எனக்கும் கவலை அளிக்கும் பாடங்கள். முதலாவதாக, நமது மொத்த ஆவிக்குரிய அனுபவமும் இருள் சூழ்ந்த காலங்களை உள்ளடக்குகிறது. கிறிஸ்தவம் என்பது நியாயமான காலநிலையிலும், விஷயங்கள் நன்றாக நடக்கும் போதும், எல்லாம் சரியாகத் தோன்றும் போதும் செயல்படும் மதம் அல்ல. கிறித்துவம் என்பது எல்லாப் பருவங்களுக்கும் உரிய மதம்.

ஆபிரகாம் பின்வாங்கியவரல்ல, அல்லது அவர் பலவீனமான அல்லது முதிர்ச்சியற்ற விசுவாசியும் அல்ல. அவர் வலுவாக, உறுதியாக தேவனைப் பின்பற்றுபவர். இருப்பினும் அவர் இருள் சூழ்ந்த காலத்தை கடந்து சென்றார். ஒவ்வொரு உறுதியான விசுவாசியின் வாழ்விலும் இருள் சூழ்ந்த காலம் நிச்சயம் வரும். நீங்கள் இப்போது அப்படிப்பட்ட நேரத்தில் இருந்தால், நான் உற்சாகப்படுத்தும் வார்த்தையை உங்களிடம் பேச விரும்புகிறேன். நீங்கள் பின்வாங்கிவிட்டீர்கள், அல்லது தேவன் உங்களைத் கைவிட்டார் என்று எண்ணாதீர்கள். அந்த இருளில் தேவன் உங்களை நம்ப முடியும். ஒருவேளை நீங்கள் இளையவராகவோ அல்லது குறைந்த முதிர்ச்சியுள்ள விசுவாசியாகவோ இருந்தால், தேவன் உங்களை நம்ப முடியாது. ஆகவே, இருள் என்பது நமது மொத்த கிறிஸ்தவ அனுபவத்தின் ஒரு பகுதியாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் கிறிஸ்தவத்தில் அந்த இருளில் நம்மை வெற்றியில் அழைத்துச் செல்லும் ஒன்றும் இருக்கிறது.

இரண்டாவதாக, அந்த சூளை துன்பத்தைப் பற்றி பேசுகிறது. இது தேவனுடைய சுத்திகரிக்கும் அக்கினியைப் பற்றி பேசுகிறது. வேதாகமத்தில் பல இடங்களில் சூலை அல்லது உலை என்பது ஒரு வகையான கடுமையான துன்பத்தின் மாதிரியாக இருக்கிறது. உதாரணமாக, ஏசாயா 48:10ல் தேவன் இஸ்ரவேலரிடம் கூறினார்:

10 இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்.

நீங்கள், "தேவனே, நான் ஏன் இந்த உலையில் இருக்க வேண்டும்?" என்கிறீர்கள். தேவன் கூறுகிறார், "ஏனென்றால் வேறு எதுவும் செய்ய கூடாதவைகளை உலை உங்களுக்கு செய்கிறது."

மல்கியாவில், தேவன் தம்முடைய ஆசாரியரான லேவியின் சந்ததியினருக்கு, வெள்ளியை சுத்திகரிப்பதைப் போலவும், தங்கம் சுத்திகரிக்கப்படுவதைப் போலவும் அவர்களைச் செம்மைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்தார். தேவன் ஒரு ஆசாரியனை உருவாக்க விரும்பினால், அவர் அவனை துன்பத்தின் சுத்திகரிப்பு உலை வழியாக கொண்டு வர வேண்டும். அதனால்தான் ஆபிரகாமும் சூளையின் அந்த அனுபவத்தைப் கடந்து வர வேண்டியது இருந்தது. சூளை, ஒரு வகையில், அவருடைய மக்கள் எகிப்தில் அடையப் போகும் இன்னல்களின் முன்னோட்டமாக இருந்தது. ஆனால் எப்படியோ தேவன், ஆபிரகாமுக்கு ஒரு முன்னோட்டத்தை அனுமதித்தார் என்று எனக்குத் தோன்றுகிறது, ஏனென்றால் குழந்தைகள் எங்கு செல்ல வேண்டும், அவர்கள் என்ன கடந்து செல்ல வேண்டும் என்பதை தந்தை புரிந்து கொள்ள வேண்டும். எனவே, துன்பத்தின் சூளை நீங்கள் தேவனுடைய சித்தத்திற்கு புறம்பாக இருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். துன்பம் உங்களுக்காக எதையோ செய்து, உங்களைச் செம்மைப்படுத்தி, வேறு எதுவும் செய்யாத வகையில் உங்களைத் தூய்மைப்படுத்துகிறது என்று அர்த்தம்.

இஸ்ரவேலருக்குக் தேவன் கொடுத்த அந்த அழகான வார்த்தையை மீண்டும் ஒருமுறை உங்களுக்குத் தருகிறேன்: “இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்.” ஆங்கில கிங் ஜேம்ஸ் பதிப்பு கூறுகிறது, "நான் உன்னை துன்பத்தின் சூளையில் தேர்ந்தெடுத்தேன்." நீங்கள் அந்தச் சூளையில் என்ன எதிர்வினை அளிக்கிறீர்கள் என்பதுதான் தேவன் உங்களோடு எவ்வாறு இடைப்படுவார் என்பதை தீர்மானிக்கப் போகிறது.

மூன்றாவது மற்றும் இறுதி பாடம் இதுதான்: அந்த இருளின் நடுவில், தேவனுடைய இயற்கைக்கு அப்பாற்பட்ட பிரசன்னமாக இருந்த அந்த அக்கினி ஜுவாலை, ஒரு விஷயத்தின் மேல் மட்டுமே ஒளி வீசியது: பலியின் பொருட்கள். இவை உடன்படிக்கையின் அடிப்படையாக இருந்தன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பெரும் இருளான காலங்களில் தேவன் ஒரு வேளை உங்களுக்காக எதையும் ஒளிரச் செய்யாமல் போகலாம். நீங்கள் ஏன் அங்கு இருக்கிறீர்கள் அல்லது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை அவர் உங்களுக்குத் தெரிவிக்க மாட்டார், ஆனால் அவர் உங்களுக்காக ஒரு விஷயத்தை மட்டும் ஒளிரச் செய்வார்: உடன்படிக்கையின் சின்னமான பலி. ஏனென்றால் அவர் ஒரு உடன்படிக்கை செய்தபோது, அவர் தன்னை ஒப்புக்கொடுத்தார், அந்த உடன்படிக்கையை செய்வதைத் தவிர தேவன் தம்மை ஒப்புக்கொடுக்க வேறு எதுவும் செய்ய முடியாது என்பதை நீங்கள் உங்கள் அனுபவத்தில் அறிய கூடிய இடத்திற்கு வர வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.

ரோமர் 8:32ல் உள்ள பவுலின் வார்த்தைகள் எனக்கு நினைவிற்கு வருகின்றன:

32 தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?

அதுவே இறுதி பலி. நம்முடைய பாவங்களுக்காக தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையின் மரணம். உங்களைச் சுற்றி இருக்கும் இருளினால் நீங்கள் வேறு எதையும் பார்க்க முடியாவிட்டாலும், இயேசுவின் தியாகத்தை, அவர் மரணத்தை நீங்கள் காணும் வரை, தேவன் உங்கள் பட்சத்தில் இருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ரோமர் 8ல் பவுல் பின்பு கூறுகிறார்:

31 தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?

இது ஒரு நல்ல கேள்வி! தேவன் உங்கள் பட்சத்தில் இருக்கிறார் என்பதை எப்படி அறிந்து கொள்வது? நீங்கள் அதை இவ்வாறு அறிந்து கொள்ளலாம்: தேவன் உங்களுக்குச் செய்த அதே அர்ப்பணிப்பை நீங்கள் தேவனுக்கு செய்வதன் மூலம். அந்த அர்ப்பணிப்பின் அடிப்படையில், தேவன் உங்களை தன்னுடன் உடன்படிக்கையின் உறவில் ஏற்றுக்கொள்வார்.

லைக்
பகிரவும்