அமெரிக்க கிறிஸ்தவர்களாகிய நாம் ஒரு கடுமையான, மறுக்க முடியாத உண்மையை எதிர்கொள்கிறோம்: நமது தேசம் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கீழ் வந்துள்ளது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன, ஆனால் அவற்றை ஒரு எளிய வாக்கியத்தில் சுருக்கமாகக் கூறலாம்: எந்த பாவத்திற்காக ஏசா தள்ளப்பட்டனோ, அதையே நாம் செய்துள்ளோம் - நம்முடைய சேஷ்டபுத்திரபாகத்தை அசட்டை செய்துவிட்டோம் (எபிரெயர் 12:15-17).

இந்தப் பகுப்பாய்வு அமெரிக்காவின் நிலைமைக்கு மட்டும் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நான் சொல்வதில் பெரும்பாலானவை யூத-கிறிஸ்தவ பரம்பரைக்கு சுதந்திரவாளிகளாக இருக்கும் மற்ற நாடுகளுக்கும், உலகெங்கிலும் உள்ள சபைக்கும் பொருந்தும். நம்முடைய தனிப்பட்ட பொறுப்பை ஏற்க தேவன் நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக!

நாம் பெற்ற வெளிச்சத்தின் அளவின்படி தேவன் நம்மை நியாயந்தீர்க்கிறார். இயேசு தம் காலத்து யூதர்களிடம், அவர்கள் பெறக்கூடிய நியாயத்தீர்ப்பு, சோதோம் கொமோராவின் நியாயத்தீர்ப்புகளை விட மிகக் கடுமையானதாக இருக்கும் என்று கூறினார், ஏனென்றால் அவர்களைவிட இவர்கள் சத்தியத்தை குறித்த மிகப் பெரிய வெளிப்பாட்டைப் பெற்றிருந்தார்கள் (மத்தேயு 11:20-24).

இந்த நூற்றாண்டில் அமெரிக்காவிற்கும் இது பொருந்தும். தேவனுடைய வார்த்தையை பெற அமெரிக்க மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வழிகளை விட வேறெந்த தேசமும் அதிகம் பெற்றதில்லை. கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் மூலம், தேவாலயங்கள் மற்றும் சுவிசேஷகர்கள் மூலம், வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம், மற்றும் அச்சிடப்பட்ட வார்த்தை மூலம், அமெரிக்கா தேவனுடைய சத்தியத்தின் அறிவால் மற்ற எல்லா நாடுகளையும் விட ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. அதை நிராகரிப்பதற்கான நம்முடைய நியாயத்தீர்ப்பும் அதற்கேற்ப கடுமையானதாக இருக்கும். பல கிறிஸ்தவர்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பு உலக மக்களிடமிருந்து துவங்குவதில்லை, மாறாக தேவனுடைய மக்களிடமிருந்து துவங்குகிறது என்பதை உணரவில்லை. பேதுரு தன் காலத்தைப் பற்றி கிறிஸ்தவர்களிடம் கூறினார்:

“நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங் காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?” (1 பேதுரு 4:17)

இந்த வார்த்தைகள் இன்று அமெரிக்காவில் உள்ள சபைக்கும் பொருந்தும். தற்காலத்து சபைக்கு விரதமாக குற்றம்சுமத்த பயன்படக்கூடிய எல்லா பாவங்களிலும், இரண்டின் மீது கவனம் செலுத்தினால் போதும்: பொருளாதாரத்தை முக்கித்துவப்படுத்துதல் மற்றம் சமரசம் செய்தல். லூக்கா 17:26-30 இல் இயேசு தாம் திரும்பி வருவதற்கு முந்தைய காலம் நோவா மற்றும் லோத்தின் நாட்களைப் போல இருக்கும் என்று கணித்தார். அந்த நாட்களை அடையாளப்படுத்தும் எட்டு செயல்பாடுகளை அவர் குறிப்பிட்டு சொல்கிறார்: புசித்தல், குடித்தல், பெண் கொண்டு, பெண் கொடுத்தல், வாங்குதல், விற்றல், கட்டுதல், நடுதல். ஆயினும் இந்தச் செயல்கள் எதிலும் குறிப்பாக பாவம் எதுவும் இல்லை. அப்படியானால், என்ன பிரச்சனை?

பொருளாதாரம்தான் பிரச்சனை. அன்றைய மக்கள் இந்த பொருளாதார செயல்களில் மிகவும் மூழ்கியிருந்தனர், மாம்சீகத்தில் மூழ்கின அவர்களின் வாழ்க்கை முறையின் மீது வரவிருந்த தேவனின் நியாயத்தீர்ப்பைப் பற்றி அவர்கள் அறியாத்திருந்தார்கள். நியாயத்தீர்ப்பு வந்தபோது, ​​அவர்கள் கொஞ்சமேனும் ஆயத்தமாக இல்லை. இன்று அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவர்களிடமும் இதே நிலைதான் உள்ளது. தேவனின் இறுதி நியாயத்தீர்ப்புகள் திடீரென்று கிறிஸ்துவின் வருகைக்கு வழிவகுத்தால், அவர்கள் முற்றிலும் ஆயத்தமற்று இருப்பார்கள்.

பொருளாதாரத்தைப் போலவே, சமரசம் செய்தலின் பாவமும் பெரும்பாலும் அடையாளம் காணப்படாமல் போகிறது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஜெபித்துக்கொண்டிருந்த போது, ​​ஒரு தேவாலய கட்டிடத்தின் சித்திரத்தை மனதில் கண்டேன், அதில் வரிசை வரிசையாக ஆலய இருக்கைகள், ஒரு மேடை, ஒரு பிரசங்க பீடம், ஒரு பியானோ மற்றும் பலவற்றைக் கண்டேன். ஆனால் கட்டிடம் முழுவதிலும் ஒருவித பனிமூட்டம் ஊடுருவியிருந்தது. பொருள்களின் வெளிக்கோட்டைக் கண்டறிய முடிந்தது, ஆனால் எதையும் தெளிவாக காண முடியவில்லை. மூடுபனி எதைக் குறிக்கிறது என்று நான் யோசித்துக்கொண்டிருந்தபோது, ​​தேவன் எனக்கு ஒரு தெளிவான வார்த்தையைக் கொடுத்தார்: சமரசம்.

தற்காலத்து சபையில், புதிய ஏற்பாட்டில் மிகத் தெளிவாகக் கூறப்பட்ட பெரும்பாலான முக்கிய நல்நடத்தைக்குரிய மற்றும் உபதேசத்திற்கடுத்த சத்தியங்கள், மங்கலானதாயும், பயனற்றதாயும் மாறிவிட்டன. 1 கொரிந்தியர் 6:9-10ல் பவுல் எழுதினார்:

“அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்கராரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.”

ஆயினும், இன்று சபை முற்றிலும் அக்கறையற்றவர்களாக இருந்து, இந்தப் பாவங்களைச் செய்யும் மக்களால் நிரம்பியுள்ளது. பெரும்பாலும், அவர்கள் இத்தகைய பாவங்களைப் பற்றி பெருமையாய் பேசிக்கொள்ளுகிறார்கள்.

ஓரினச்சேர்க்கையின் மூலம் ஏற்பட்ட எய்ட்ஸ் நோயால், சபை உறுப்பினர் ஒருவர் மருத்துவமனையில் மரிக்கும் தருவாயில் இருந்தார். அப்போது அவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார், அவருக்கு ஒரு புதிய ஏற்பாடு வழங்கப்பட்டது. புதிய ஏற்பாடை கொஞ்சம் படித்த பிறகு, கிறிஸ்துவிடம் அவரை வழிநடத்திய நபருக்கு அவர் அவசரச் செய்தியை அனுப்பினார்: "வாருங்கள், எனக்காக ஜெபம் செய்யுங்கள். எனக்கு விடுதலை வேண்டும். என் வாழ்க்கை முறையில் தவறு இருப்பதை நான் அறியாதிருந்தேன்."

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கிறிஸ்மஸ் காலங்களில், ரூத்தையும் என்னையும் PTL இன் இரண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்படி எங்கள் ஊழியர்கள் உறுதியளித்திருந்தனர். நாங்கள் தொலைக்காட்சியைப் பார்க்காததால், என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. நான் "முக்கிய பேச்சாளராக" அழைக்கப்பட்டிருந்தேன். முதல் ஒரு மணி நேரத்தில், எனக்கு பத்து நிமிடங்களும், இரண்டாவது மணி நேரத்தில், இருபது நிமிடங்களும் எனக்கு வழங்கப்பட்டன. பணத்திற்காக முறையிடுவதற்கும், டாமி பொம்மைகளை விற்பதற்கும் பெரும்பாலான நேரம் வழங்கப்பட்டது. எனக்கு நினைவிருக்கும் வரையில், ரூத்தும் நானும் மட்டுமே இயேசுவைக் குறிப்பிட்டு பேசினோம்.

சற்று காலத்திற்கு பின்பு, இப்போது பிரபலமாகிவிட்ட ஊழல்கள் பொதுவெளியில் அம்பலமானது. ஆனால் தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரை மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் பாலியல் அல்லது நிதி சார்ந்த தவறான செயல்கள் அல்ல, அது மிகவும் வேதனையானது. அன்று என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, இன்றும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது, மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் கிறிஸ்தவத்தின் முற்றிலும் தவறான சித்திரத்தை கொண்டு தொடர்ந்து எதிர்கொள்ளப்பட்டார்கள் - தாழ்மை, பரிசுத்தம் மற்றும் தியாகமான வாழ்வை கோரும் சிலுவைக்கு இடமில்லாத ஒன்று. அத்தகைய காட்சியால் மயக்கப்பட்ட மக்கள் நற்செய்தியின் உண்மையான சத்தியத்தை ஒருபோதும் கேட்க மாட்டார்கள் என்பதை உணருவது எவ்வளவு பயங்கரமானது!

PTLலில் நடந்த ஊழல் இப்போது வரலாறாயிற்று, ஆனால் நாம் பதிலளிக்க வேண்டிய ஒரு கேள்வியை அது நமக்கு விட்டுச்சென்றுள்ளது: இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வா அல்லது அமெரிக்கா முழுவதும் கிறிஸ்துவின் சரீரத்தை பாதிக்கும் ஒரு நோயின் அறிகுறியா?

ஆயினும், சபையில் இன்னும் இயேசுவை நேர்மையாய், பக்தியுடன் பின்பற்றும் ஒரு மீதியானவர்களின் கூட்டம் உள்ளது. நாம் அந்த எண்ணிக்கையில் இருந்தால், தற்போதைய நெருக்கடிகளுக்கு நாம் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்?

ஒரு தெளிவான பதில் 2 நாளாகமம் 7:14இல் கொடுக்கப்பட்டுள்ளது:

"என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்."

"என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள்" என்ற சொற்றொடர், கிறிஸ்துவின் பெயரைத் தங்கள் மீது எடுத்துக் கொள்ளும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும்.

குறைந்தது 30 ஆண்டுகளாக நான் இந்த வேத வசனத்தை கற்பித்து வருகிறேன், ஆனால் சமீபத்தில் நான் ஒரு அதிர்ச்சியூட்டும் உணர்வை எதிர்கொண்டேன்! நம்முடைய நாட்களில் தேவனுடைய மக்கள் முதல் நிபந்தனையை ஒருபோதும் நிறைவேற்றினதில்லை. நாம் ஒருபோதும் நம்மை உண்மையாக தாழ்த்திக் கொண்டதில்லை. நம்முடைய பெருமை—மதம் மற்றும் இனம் சார்ந்த பெருமை - நமக்காகவும் நம் தேசத்திற்காகவும் நாம் செய்யும் ஜெபங்களுக்கு வரும் பதிலைத் தடுக்கும் ஒரு முற்றுக்கட்டையாக உள்ளது.

எனது சொந்த வாழ்க்கையில் தேவனுடைய கடுமையான இடைப்படுதல்களின் மூலம், நம்மை நாமே தாழ்த்துவதற்கான மிகச் சிறந்த பயனுள்ள வழியை நான் கற்றுக்கொண்டுள்ளேன். மிக எளிமையாக, நம் பாவங்களை அறிக்கையிடுவதின் மூலம். நாம் தவறாமல், உண்மையுடன் நம் பாவங்களை தேவனிடம் அறிக்கை செய்தால், பெருமையுடன் அவரை அணுகுவது சாத்தியமில்லை. மேலும் நான் பார்த்தது என்னவென்றால், நாம் அறிக்கையிடும் பாவங்களை மட்டுமே மன்னிக்க தேவன் ஒப்புக்கொண்டுள்ளார்.

“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவான் 1:9)

அறிக்கையிடப்படாத பாவங்கள் மன்னிக்கப்படாத பாவங்களாவன. இவ்வாறாக பெருமை என்ற தடையானது மன்னிக்கப்படாத பாவம் என்ற இரண்டாம் தடையை உருவாக்குகிறது.

தேவனிடம் மட்டுமல்ல, ஒருவருக்கொருவர் நம்முடைய பாவங்களை அறிக்கையிடுமாறு வேதம் நமக்கு அறிவுறுத்துகிறது.

“நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்.” (யாக்கோபு 5:16)

தேவனிடம் நமது பாவங்களை அறிக்கையிடுவது செங்குத்தான பெருமையை எதிர்கொள்கிறது; ஒருவருக்கொருவர் அறிக்கையிடுவது கிடைமட்ட பெருமையை எதிர்கொள்கிறது. நம்முடைய தனிப்பட்ட பாவங்களை நாம் யாரிடம் அறிக்கை செய்கிறோமோ, அவரிடம் நாம் பெருமையான மனநிலையுடன் இனி இருக்க முடியாது.

இது குறிப்பாக கணவன்-மனைவி இடையேயான உறவுக்கு பொருந்தும். தவறாமல் ஒருவருக்கொருவர் தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்பவர்கள் பெருமையின் தடையால் பிரிக்கப்படுவதில்லை.

மேலும், பயனுள்ள பரிந்துமன்றாடுதலுக்கு பாவத்தை அறிக்கைசெய்வது இன்றியமையாத முன் நிபந்தனையாகும். வேதத்தில் மிகவும் நீதியுள்ள பாத்திரங்களில் தானியேல் ஒருவராக இருந்தார், ஆனால் அவர் தனது மக்களாகிய இஸ்ரவேலுக்காகப் பரிந்து பேசத் தொடங்கியபோது, ​​அவர்களுடைய பாவத்தில் தன்னுடைய பங்கை அறிக்கைசெய்யத் தொடங்கினார் (தானி. 9:3-13).

அமெரிக்க கிறிஸ்தவர்களாகிய நாம் நம்முடைய பாவங்களை தேவனுக்கும், ஒருவருக்கு முன் ஒருவர் அறிக்கை செய்வதினால் நம்மை தாழ்த்தவும், தேவன் நமக்காக காத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அதைச் செய்த பின்னரே, நம்முடைய தேசத்தின் க்ஷேமத்தை (சுகத்தை) நாம் கோர முடியும். ஆனால் நான் ஒரு எச்சரிக்கையை இங்கு சேர்க்க வேண்டும். விரும்பத்தகாத எதிர்மறையான சுயபரிசோதனையில் ஈடுபடத் தொடங்காதீர்கள்! பரிசுத்த ஆவியானவர் "தேவனுடைய விரல்" ஆவார் (மத். 12:28; லூக்கா 11:20). அறிக்கையிட வேண்டிய பாவங்களின் மீது தமது விரலை வைக்க தேவனிடம் கேளுங்கள். அவர் அதை தவறாத துல்லியத்துடன் செய்வார், ஒருவேளை நீங்கள் அடையாளம் காணாத பாவங்களை கூட அவர் வெளிச்சத்திற்கு கொண்டு வருவார்!

7
பகிரவும்