தேவனுடனான ஒரு தொடரும் தனிப்பட்ட உறவுக்கான அடிப்படையாக உடன்படிக்கையைப் பற்றி நான் இந்த வாரம் உங்களிடம் பேசிக்கொண்டு வருகிறேன்.

நேற்று, ஆதியாகமம் 15ஆம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, தேவன் ஆபிரகாமுடன் எப்படி உடன்படிக்கை செய்துகொண்டார் என்பதை நான் விவரித்தேன். ஆபிரகாம் எப்படி பலியிடப்படும் மிருகங்களை எடுத்து, அவற்றைக் கொன்று, உடல்களை இரண்டாகப் பிரிக்க வேண்டும், பின்னர் ஆபிரகாம் அந்தத் துண்டுகலின் நடுவே கடந்ததையும், தேவன் அக்கினி ஜுவாலையின் வடிவத்தில் அதை கடந்ததையும் நினைவுகூறுவீர்கள். பலியின் துண்டுகளை கடந்து ஆண்டவரும் ஆபிரகாமும் ஒருவரோடு ஒருவர் உடன்படிக்கை செய்துகொண்டனர். அந்த பலியிடப்பட்ட விலங்குகள் உடன்படிக்கைக்குள் நுழைந்தவர்களின் மரணத்தைப் பற்றிப் பேசின. அப்படியானால், உடன்படிக்கைக்குள் செல்லும் வழி, மரணத்தின் மூலம்தான் அல்லது நம் ஜீவனை அர்ப்பணிப்பதாகும்.

அந்த உடன்படிக்கையின் செயல்பாட்டினை சரித்திரத்திலும், தேவனுக்கும் ஆபிரகாமுக்கும் இடையே அது ஏற்படுத்திய தனிப்பட்ட உறவிலும் இன்று நான் பின்தொடர விரும்புகிறேன். "திருமண உடன்படிக்கை" என்ற எனது புத்தகத்தில் இதை நான் தெளிவாகவும் சுருக்கமாகவும் வெளிப்படுத்தியுள்ளேன், எனவே அந்தப் புத்தகத்திலிருந்து சில பத்திகளை உங்களுக்காகப் படிக்கப் போகிறேன். கர்த்தர் ஆபிரகாமுடன் செய்துகொண்ட உடன்படிக்கை, வரலாற்றில் செயல்படும் விதத்தை இந்தப் பத்திகள் விளக்குகின்றன.

பலியிடப்பட்ட விலங்கின் மரணம் உடல் ரீதியானது, ஆனால் அது பலியைச் செலுத்தி துண்டுகளை கடந்து செல்லும் ஒருவருக்கு மரணத்தின் மற்றொரு வடிவத்தை குறிக்கிறது. இதைச் செய்பவன், அந்தத் தருணத்திலிருந்து, தனக்காக வாழ்வதற்கான எல்லா உரிமையையும் துறக்கிறான். ஒவ்வொரு தரப்பினரும் பலியின் துண்டுகளைக் கடந்து செல்லும்போது, அவர் மற்றவரிடம் கூறுகிறார்: “தேவைப்பட்டால், நான் உங்களுக்காக மரிப்பேன். இனிமேல், என் விருப்பத்தை விட உங்கள் நலன்களே முதன்மை பெறுகின்றன. உங்களுக்குத் தேவையான எதுவும் என்னிடம் இருந்தால், எனது பொருள் உங்கள் பொருளாக மாறும். நான் இனி எனக்காக வாழவில்லை, உங்களுக்காக வாழ்கிறேன். தேவனுடைய பார்வையில், இந்த உடன்படிக்கையை செய்யும் செயல் வெற்று சடங்கு அல்ல. இது ஒரு புனிதமான மற்றும் கனமான அர்ப்பணிப்பு. ஆபிராமுடன் கர்த்தர் செய்த உடன்படிக்கையின் விளைவாக வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களை நாம் கண்டறிந்தால், உடன்படிக்கையை செய்த இரு தரப்பினரும் அந்த உடன்படிக்கை எந்த அர்ப்பணிப்பை பிரதிநிதித்துவப்படுத்தியதோ, அதை நிறைவேற்ற வேண்டியதாய் இருந்தது. சில வருடங்களுக்குப் பிறகு, ஆபிராம் ஆபிரகாமாக மாறியபோது, தேவன் அவரிடம்: “எனக்கு உன் மகன் ஈசாக்கு வேண்டும்—உன் ஒரே மகன். நீயும் நானும் உடன்படிக்கையில் இருப்பதால் உன்னிடம் உள்ள விலைமதிப்பற்ற பொருள் இனி உன்னுடையது அல்ல. இது என்னுடையது" என்று கூறினார். அவருக்கு நித்திய புகழ்ச்சி உண்டாக, ஆபிரகாம் தடுமாறவில்லை. அவர் ஈசாக்கைக் கூட கொடுக்கத் தயாராக இருந்தார். கடைசி நேரத்தில்தான் தேவன் வானத்திலிருந்து நேரடியாகத் தலையிட்டு, உண்மையில் தன் மகனைக் கொல்லாமல் தடுத்து நிறுத்தினார். இருப்பினும், அது அச்சம்பவத்தின் முடிவு அல்ல. தேவனும் தம்மை ஆபிரகாமுக்கு ஒப்புக்கொடுத்திருந்தார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, தேவன், உடன்படிக்கையில் தன்னுடைய பகுதியை நிறைவேற்றினார். ஆபிரகாம் மற்றும் அவரது சந்ததியினரின் தேவையை பூர்த்தி செய்ய, தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை பலியிட்டார். ஆனால் இம்முறை கடைசி நிமிட மாற்றங்கள் எதுவும் இல்லை. சிலுவையில், ஆபிரகாம் மற்றும் அவரது சந்ததியினர் அனைவருக்கும் மீட்பின் முழு கிரயமாக, இயேசு தம் ஜீவனைக் கொடுத்தார். அச்செயல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்த இரவில், பலியின் துண்டங்களுக்கு இடையே கடந்து சென்றபோது, தேவனும் அபிராமும் ஒருவருக்கொருவர் செய்த அர்ப்பணிப்பின் விளைவு. அன்றிலிருந்து வரலாற்றின் போக்கில் நடந்த அனைத்தும் அவர்களின் உடன்படிக்கையால் தீர்மானிக்கப்பட்டது. ஒரு உடன்படிக்கையில் செய்யப்படும் அர்ப்பணிப்பு அந்த அளவிற்கு மிகவும் புனிதமானது, மிகவும் பூரணமானது மற்றும் மாற்ற முடியாதது.

அதுதான் வரலாற்றில் அந்த உடன்படிக்கையின் நடைமுறைச் செயல்பாடாகும். தேவன் மற்றும் ஆபிரகாம் இருவரும் ஒரு முழுமையான அர்ப்பணிப்பைச் செய்திருந்தனர். ஆபிரகாம் தனது உறுதிமொழியை நிறைவேற்ற ஈசாக்கை பலியாக கொடுக்கும்படி, தேவன் அவனுக்கு அழைப்பு விடுத்த ஒரு காலம் வந்தது. ஆனால் தேவனின் அர்ப்பணிப்பும் ஆபிரகாமின் அர்ப்பணிப்பை போலவே இருந்தது. எனவே, இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, உடன்படிக்கையின் மறுபக்கம் நடைமுறைக்கு வந்தது - தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஒப்புக்கொடுத்தார். தேவனுக்கு நீங்கள் செய்யும் அர்ப்பணிப்பு, தேவன் உங்களுக்கு எவ்வளவு அர்ப்பணிப்புள்ளவராய் இருப்பார் என்பதை தீர்மானிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவனிடம் முழுமையாக அர்ப்பணித்தல், தேவனிடமிருந்து முழு அர்ப்பணிப்பைக் கோருகிறது. அதுதான் உடன்படிக்கையின் சாராம்சம்.

இருப்பினும், தேவனுடனான ஆபிரகாமின் தனிப்பட்ட உறவில் அந்த உடன்படிக்கை கூடுதலான நடைமுறை விளைவைக் கொண்டிருந்தது. யாக்கோபின் நிருபத்தின் 2ம் அதிகாரத்தில், ஈசாக்கைப் பலியாக கொடுத்தபோது ஆபிரகாம் என்ன செய்தார் என்பதையும், அதன் விளைவைப் பற்றியும் யாக்கோபு பேசுகிறார். அவர் இவ்வாறு கூறுகிறார்:

21 நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்? 22 விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே. 23 அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.

அந்த உடன்படிக்கையின் அர்ப்பணிப்பின் மூலமாகவும், ஈசாக்கின் பலியில் அதன் செயல்பாட்டின் மூலமாகவும், ஆபிரகாம் தேவனுடைய நண்பராகக் கருதப்பட்டார். இது மிகவும் குறிப்பிடத்தக்க, மரியாதைக்குரிய தலைப்பு. பாடம் இதுதான்: உடன்படிக்கை உண்மையான நட்புக்கான கதவு. இரண்டு மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் உடன்படிக்கை செய்துகொண்டால், இருவர் உடன்படிக்கை செய்துகொண்டு, தங்கள் உடன்படிக்கையின் விதிமுறைகளை கடைப்பிடிக்கும்போது, அதுவே உண்மையான நட்பு.

ஆனால் ஐயோ! இன்று உலகில் “நண்பன்” என்ற வார்த்தை நீர்த்துப் போய்விட்டது. இது மிகவும் மலிவான வார்த்தையாகி விட்டது. நட்பு மிகவும் மலிவான ஒன்றாய் இருக்க கூடும். ஆனால் தேவனை பொறுத்த மட்டும் நட்பின் தரம் மாறவில்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தேவனைப் பொறுத்தவரை, நட்பு என்பது உடன்படிக்கையின் உறுதிப்பாட்டின் அடிப்படையிலானது. உடன்படிக்கையின் மூலம், ஆபிரகாம் தேவனுடைய நண்பரானார். பழைய உடன்படிக்கையின் கீழ் ஆபிரகாம் தன்னுடன் கொண்டிருந்த அதே உறவில், அவருடைய நண்பர்களைப் போலவே, புதிய உடன்படிக்கையின் கீழ், நம்மையும் இயேசு கொண்டு வர விரும்புகிறார். யோவான் 15ஆம் அதிகாரம் 15ஆம் வசனத்தில், இயேசு தம் சீடர்களிடம் கூறுகிறார்:

இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, …. நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், …

அது ஒரு அடிமையாக இருந்து நண்பனாக மாறும் பதவி உயர்வு. ஆனால் ஆபிரகாமைப் போலவே நமக்காகவும், நட்பு மலிவானது அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இயேசுவின் நண்பராக இருப்பதற்கு ஏதாவது செலவாகும். ஆபிரகாமுக்கு இருந்த அடிப்படையே நமக்கும் உண்டு. அது உடன்படிக்கையின் உறுதி. இயேசு தம் உயிரைக் கொடுத்தார், "தன் நண்பர்களுக்காகத் தன் உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு ஒருவனிடம் இல்லை" என்றார். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், நாம் இயேசுவின் நண்பர்களாக இருக்க வேண்டுமானால், அவருக்காக நம் உயிரைக் கொடுக்க வேண்டும். இது இரு வழி உறவு, இரு வழி அர்ப்பணிப்பு.

யோவானின் முதல் நிருபத்தில் 1ம் அதிகாரம் 3வது வசனத்தில் யோவான் இவ்வாறு கூறுகிறார்:

நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சுவிசேஷம் என்பது பிதாவும் குமாரனும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் ஐக்கியத்தைப், நாமும் பகிர்ந்து கொள்வதற்கு தேவனின் அழைப்பாகும். கிரேக்க மொழியில் "ஐக்கியம்" என்பது "கொய்னோனியா" என்பதாகும். இது புதிய ஏற்பாட்டு கிரேக்க மொழியில் மிக முக்கியமான வார்த்தை. அதாவது, பொதுவாகப் பகிர்தல் என்ற அர்த்தம் கொண்டது. எனவே ஐக்கியம் என்பது பொதுவாக பகிர்ந்துகொள்வது. பிதாவாகிய தேவனும் குமாரனாகிய தேவனும் ஒன்றாகக் கொண்டிருக்கும் அதே உறவைப் பகிர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். அந்த உறவைப் பற்றி ஒரு விஷயம் மிகவும் தெளிவாக உள்ளது: பிதாவாகிய தேவனுக்கும் குமாரனாகிய தேவனுக்கும் அனைத்தும் பொதுவாக உள்ளது. இருவருமே ஒருவருக்கொருவர் எதையும் தடை செய்வதில்லை. யோவான் 17 வது அதிகாரம் 10ம் வசனத்தில், இயேசு பிதாவிடம் பேசுகிறார், அவர் இவ்வாறு கூறுகிறார்:

என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்;

அதுதான் சரியான கொயினோனியா, சரியான ஐக்கியம், எல்லாவற்றிலும் சரியான பகிர்ந்து கொள்ளுதல். இது தேவன் நம்மை கொண்டு வர விரும்பும் சரியான உறவு முறை. ஒரு குறிப்பிட்ட ஒழுங்கு இருக்க வேண்டும். பேசுபவர் "என்னுடையது" என்பதற்கு முன் "உன்னுடையது" என்று வைக்க வேண்டும். இயேசு, "என்னிடம் உள்ளதெல்லாம் உம்முடையது" என்றார். அதனடிப்படையில், "உம்மிடம் உள்ள அனைத்தும் என்னுடையது" என்று கூறிக்கொள்ள முடிந்தது. இப்போது, அத்தகைய உறவை நாம் விரும்பினால், அதே ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும். நாம் கர்த்தரிடம், “ஆண்டவரே, என்னிடமிருப்பதெல்லாம் உம்முடையது. நான் எதையும் தடுக்கவில்லை. நான் ஒரு முழுமையான, தடையற்ற அர்ப்பணிப்பைச் செய்கிறேன்" என்று கூற வேண்டும். அப்படி "என்னுடையவை அனைத்தும் உம்முடையவை" என்று நீங்கள் சொன்னவுடன், "உம்முடையவை அனைத்தும் என்னுடையவை" என்றும் நீங்கள் அறியலாம். நீங்கள் தேவனுக்கு முழுமையான அர்ப்பணிப்பு செய்தால், தேவனும் உங்களுக்கு முழு அர்ப்பணிப்புடன் பதிலளிப்பார். நான் ஏற்கனவே சொன்னதைச் சொல்கிறேன். தேவன் உங்களுக்கு எவ்வளவு அர்ப்பணிப்போடு இருக்கிறார் என்பது, நீங்கள் தேவனுக்கு அப்பணித்திருக்கும் அளவால் தீர்மானிக்கப்படுகிறது. தேவன் பகுதி அர்ப்பணிப்புகளை செய்வதில்லை, பாதி அர்ப்பணிப்பை அவர் விரும்புவதில்லை. தேவன் கிரயத்தை நிர்ணயித்துள்ளார். அந்த உறவுக்கான கிரயத்தை தீர்மானித்துள்ளார். அது: உங்களிடம் உள்ள அனைத்தும் ஆகும். "ஒருவன் தனக்கு உண்டானவைகளை எல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்."

"அது கடினமாக இருக்கிறது" என்று சொல்கிறீர்கள். சரி, இது யதார்த்தமானது. நான் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்கிறேன். தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றி இரண்டு உண்மைகள் உள்ளன. முதலில், தேவன் ஒருபோதும் தள்ளுபடி விற்பனை செய்வதில்லை. அவர் எந்தப் பொருளின் விலையையும் குறைப்பதில்லை. பேதுருவும் பவுலும் யோவானும் கர்த்தருடன் கொண்டிருந்த உறவை நீங்கள் விரும்பினால், அவர்கள் செலுத்தியதை நீங்களும் செலுத்த வேண்டும். ஆனால் மறுபக்கம் நல்ல செய்தி இதுதான்: தேவனுடைய ராஜ்யத்தில் பணவீக்கம் இல்லை. விலை ஏறியதே இல்லை, குறைந்ததும் இல்லை, இன்னும் அப்படியே இருக்கிறது. அந்த அர்ப்பணிப்பின் விளைவு சமாதானம், பாதுகாப்பு, மகிழ்ச்சி. உங்களுக்கு இது வேண்டுமா? நீங்கள் தீர்மானிக்க வேண்டும். இயேசு கூறுகிறார், “இதோ, நான் வாசலில் நின்று தட்டுகிறேன். ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், நான் அவனிடத்தில் வந்து, நான் அவனோடும் அவன் என்னோடும் போஜனம்பண்ணுவேன்." வரிசையை கவனியுங்கள்: நீங்கள் இயேசுவுக்கு உங்கள் உணவைக் கொடுக்கிறீர்கள், பின்னர் அவர் உங்களுக்குத் தருகிறார். "என்னுடையவை அனைத்தும் உம்முடையவை" மற்றும் "உம்முடையவை அனைத்தும் என்னுடையவை." தேவனுக்கு அந்த வகையான அர்ப்பணிப்பைச் செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

லைக்
பகிரவும்