மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. என் வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் வித்தியாசத்தை ஏற்படுத்திய, உங்களுடைய வாழ்க்கையிலும் அதையே செய்யக்கூடிய விலையேறப்பெற்ற சத்தியங்களையும், ஆழமான புரிந்துகொள்ளுதல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்று சபையின் புதுப்பித்தலைக் குறித்த என்னுடைய கடைசி செய்தியை உங்களுக்குக் கொடுக்கப் போகிறேன். அடுத்த வாரம் முழுவதும் தேவனுடைய முடிவுகால நோக்கத்தின் மற்றொரு முக்கிய அம்சமான இஸ்ரவேலின் புதுப்பித்தலைக் குறித்து பேசப் போகிறேன்.

சபைக்குள் புதுப்பிக்கப்பட வேண்டிய ஒற்றுமையைக் குறித்து இன்றைய செய்தியில் நான் பேசப் போகிறேன். இரண்டு அடிப்படைக் கோட்பாடுகளைச் சொல்லி விட்டு, இந்தச் செய்தியை ஆரம்பிக்கிறேன். முதலில், சபையைக் குறித்த தேவனுடைய உச்சகட்ட குறிக்கோள், ஒற்றுமைதான். இரண்டாவதாக, பிரிந்து கிடக்கின்ற சபையினால், ஒற்றுமையாய் செயல்படுகிற சாத்தானுடைய ராஜ்யத்தை ஒருக்காலும் தோற்கடிக்க முடியாது.

நாம் இந்தக் கோட்பாடுகளைக் குறித்து சுருக்கமாகப் பார்ப்போம். முதலில், சபையைக் குறித்த தேவனுடைய உச்சகட்ட இலக்கு, ஒற்றுமையாகும். யோவான் 17-ம் அதிகாரத்தில், இயேசு ஜெபித்த ஜெபத்தில் இது தெளிவாகப் வெளிப்படுகிறது. இது இயேசு மகா பிரதான ஆசாரியனாய் தம்முடைய ஜனங்களுக்காக ஜெபித்த ஜெபம் என்றழைக்கப்படுகிறது. இந்த ஜெபத்தின் முடிவில், 21 மற்றும் 23 வசனங்களில், அவர் இவ்வாறு சொல்கிறார். அவர் தம்மை விசுவாசிக்கிற எல்லோரையும் குறித்து பேசுகின்றார்:

21 அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும், நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல, அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக் கொள்கிறேன். [திரும்பவும் 23-ம் வசனத்தில் ஜெபிக்கிறார்] 23 ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும், உலகம் அறியும்படிக்கு, நான் அவர்களிலும், நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

இரண்டு முக்கியமான வார்த்தைகளைக் கவனியுங்கள். முதலில், “உலகம் விசுவாசிக்கும்படி” என்றும், “உலகம் அறிந்து கொள்ளும்படி” என்றும் வருகின்றது. இயேசுவைக் குறித்த எப்படிப்பட்ட சாட்சியை இவ்வுலகம் பார்க்க வேண்டும், எது மிகவும் வலிமையான ஒரு தாக்கத்தை உண்டாக்கக்கூடிய ஒன்றாக இருக்கும்? அது மிஷனரி ஊழியங்களிலோ, சுவிசேஷ ஊழியங்களிலோ, துண்டுப்பிரசுரம் விநியோகிப்பதிலோ இல்லை. இவையெல்லாம் நல்லவைதான். ஆனால் இவையெல்லாவற்றைக் காட்டிலும் மிக வலிமையான தாக்கத்தை உண்டாக்கக்கூடிய இயேசுவின் சாட்சி ஒன்று இருக்கிறது. இது இல்லாமல், மற்ற அவையெல்லாம் ஒரு தாக்கத்தையும் உண்டாக்கப் போவதில்லை. எல்லா விசுவாசிகளுக்கும் இடையே இருக்க வேண்டிய ஒற்றுமைதான் அந்த சாட்சியாய் இருக்கிறது. இதைத் தெளிவாகக் குறிப்பிட்டு இயேசு தன் ஜெபத்தில் ஜெபித்தார். காரணம், அதன் மூலமாகத்தான், இவ்வுலகம் அவரை விசுவாசிக்கும், இவ்வுலகம் அவரை அறிந்து கொள்ளும் என்று அவரே சொல்கிறார்.

எபேசியர் 4:11-ல், பவுல் முக்கியமான ஊழியங்களைக் குறித்துப் பேசுகிறார். இவற்றைக் குறித்துதான் நாம் இந்த வாரத்தின் முந்திய செய்திகளில் கற்றுக் கொண்டோம். பவுல் இந்த ஊழியங்களின் குறிக்கோளாக இதைச் சொல்கின்றார்:

11 …….நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும், அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்…

நாம் “விசுவாசத்தில் ஒருமனப்பட்டவர்களாகும் வரைக்கும்” என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். நாம் விசுவாசத்தில் ஒருமனப்பட்ட நிலையை அடைய வேண்டும் என்பதுதான் சபையைக் குறித்த தேவனுடைய ஒரு இறுதி இலக்கு என்று இதில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் ஒருமனப்பாடுதான் சபையைக் குறித்த தேவனுடைய உச்சகட்ட குறிக்கோளாய் இருக்கிறது என்று சொல்வது வேதவசனத்தின் அடிப்படையில் சரியானது என்று நான் விசுவாசிக்கிறேன்.

இப்பொழுது அடுத்த கோட்பாட்டையும் பார்ப்போம். பிளவுபட்டிருக்கிற சபையினால், ஒற்றுமையாய் செயல்படுகிற சாத்தானுடைய ராஜ்யத்தை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. மத்தேயு 12:25-26 வசனங்களில், இயேசு இந்தக் கோட்பாட்டை தெளிவுபடச் சொல்கிறார்.

25 இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி, “தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம். தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்க மாட்டாது. 26 சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே. அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்?” என்றார்.

தனக்குத் தானே விரோதமாய் பிளவுபட்டிருக்கிற ஒரு ராஜ்யத்தைக் குறித்தும், தனக்குத் தானே விரோதமாய் பிரிந்திருக்கிற ஒரு குடும்பத்தைக் குறித்தும் இயேசு இங்கு பேசுகிற வார்த்தைகளை நாம் கவனிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு ராஜ்யமோ அல்லது ஒரு குடும்பமோ நிலைநிற்காது என்று அவர் சொல்கிறார். வேதவசனம் சபையை ஒரு ராஜ்யமாகவும், ஒரு வீடாகவும் குறிப்பிடுகிறது. ஆகையால் சபையானது தனக்கு எதிராக தானே பிளவுபட்டிருக்குமானால், அது நிலைத்து நிற்காது. அடுத்ததாக, சாத்தானைக் குறித்துப் பேசும்போது, சாத்தானுடைய ராஜ்யம் பிளவுபட்டிருக்கவில்லை என்பதை அவர் தெளிவாகச் சுட்டிக் காண்பிக்கிறார். ஆகையால் சபை பிளவுபட்டிருந்து, சாத்தானுடைய ராஜ்யம் பிளவுபடாமலிருக்கும்வரை, சபையினால் ஒருபோதும் சாத்தானுடைய ராஜ்யத்தை வீழ்த்த முடியாது.

இது சாத்தானுக்கு நன்றாகத் தெரியும். அவன் வேதவசனங்களை நன்கு அறிந்து வைத்திருக்கிறான். அவனுடைய உச்சகட்ட இலக்கு, சபையை பிளவுபட்ட நிலையில் தொடர்ந்து வைத்திருப்பதுதான். ஆகையால் பிரிவினையை உண்டாக்கக்கூடிய எந்த ஒரு காரியத்தை நாம் செய்தாலும், நாம் சாத்தானின் கிரியையைச் செய்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

அதிகாரம் ஒற்றுமைக்கு நேராக நடத்தும் ஒரு முக்கியமான படிக்கல்லாக இருக்கிறது என்று நேற்று நான் சொன்னேன். அதற்கான காரணத்தை இங்கே நான் விளக்கிச் சொல்ல விரும்புகிறேன். ஒற்றுமை என்பது தலையிலிருந்து கீழ் நோக்கி வழிந்தோடுகிறது என்பதுதான் அந்தக் காரணம். இந்தக் கோட்பாடு, சங்கீதம் 133-ல் சொல்லப்பட்டிருக்கிறது. இது மூன்று வசனங்களை மட்டுமே கொண்ட ஒரு சிறிய சங்கீதமாகும்.

1 இதோ, சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது! 2 அது ஆரோனுடைய சிரசின் மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின் மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும், 3 எர்மோன் மேலும், சீயோன் பர்வதங்கள் மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது.

இது ஒற்றுமையை எர்மோனின் பனிக்கு ஒப்பிட்டுச் சொல்கிறது. ஒற்றுமை என்பது தலையில் ஆரம்பித்து, கீழ் நோக்கி வழிந்தோடுவதை இங்கே நாம் கவனிக்க வேண்டும். அது ஒருபோதும் மேல் நோக்கிச் செல்வதில்லை. சபைக்குள்ளும் ஒற்றுமை அப்படித்தான் வருகின்றது. வேறு வழி ஏதும் இல்லை. ஆகையால் ஒற்றுமை என்பது தலைவர்களிடமிருந்து ஜனங்களுக்குள் கடந்து வர வேண்டும். ஒரு எளிமையான கோட்பாட்டை நான் சொல்கிறேன். பிரிந்து செயல்படுகிற போதகர்கள், ஜனங்களுக்குள் பிரிவினையை உண்டாக்குவார்கள். ஒற்றுமையாய் செயல்படுகிற போதகர்கள், ஜனங்களுக்குள் ஒற்றுமையை உண்டாக்குவார்கள். சரீரமாகிய சபையில் காணப்படும் பிரிவினை, தலைவர்களுக்கிடையே காணப்படும் பிரிவினையைத்தான் பிரதிபலிக்கிறது. தலைவர்கள் பிளவுபடவில்லை என்றால், ஜனங்களுக்கிடையே பிரிவினை இருக்காது.

எசேக்கியேல் 34-ம் அதிகாரத்தில், இஸ்ரவேல் ஜனங்களின் மேய்ப்பர்கள் மீது தேவன் ஒரு குற்றச்சாட்டு வைப்பதை நாம் பார்க்கிறோம். இது வாசிப்பதற்கு மிகவும் நீளமான ஒரு பகுதியாகும். ஆகையால் இதிலிருக்கும் ஒரு முக்கியமான கோட்பாட்டை மாத்திரம் நான் எடுத்துக் காட்டுகிறேன். தேவன் மேய்ப்பர்களை அவர்களுடைய ஆடுகளின் நிலையைக் கொண்டு நியாயந்தீர்க்கிறார். அவர்களுடைய பின்னணியைக் கொண்டோ, அவர்கள் படித்து வாங்கின பட்டங்களைக் கொண்டோ, அவர்கள் எந்தச் சபைப் பிரிவினைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கொண்டோ அவர் நியாயந்தீர்க்கவில்லை. அவருடைய ஜனங்களாகிய அவர்களுடைய ஆடுகளுக்குள் அந்த மேய்ப்பர்கள் உண்டாக்கிய விளைவுகளைக் கொண்டுதான் தேவன் நியாயந்தீர்த்தார்.

ஆகையால் சபை இன்று சண்டை சச்சரவுகளால் பிளவுபட்டு, பெலவீனப்பட்டிருக்கிறது என்றால், சபையினால் சாத்தானுடைய ராஜ்யத்தை மேற்கொள்ள முடியவில்லை என்றால், அதற்கான பொறுப்பு தேவனுடைய ஜனங்களின் தலைவர்கள் மீதுதான் விழுந்திருக்கிறது. ஏதோ ஒரு சிலர் மீது மட்டுமல்ல, எல்லோர் மீதும் அது விழுந்திருக்கிறது. அந்தப் பொறுப்பில் எனக்கும் பங்கு இருக்கிறது. தேவனுடைய ஜனங்களுக்கிடையே காணப்படும் பிரிவினைக்கு, தேவனுடைய ஜனங்களின் தலைவர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதத்திலும், மற்றவர்களோடு சேர்ந்தும் அந்தப் பொறுப்பைச் சுமக்க வேண்டும். இது நம் மீது சுமத்தப்பட்ட பயங்கரமான ஒரு பொறுப்பாயிருக்கிறது.

தேவனுடைய ஜனங்கள் ஒற்றுமைக்குள் வருவதற்கான நடைமுறை மாதிரியைக் குறித்து சுருக்கமாக உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். இது பழைய ஏற்பாட்டிலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும், அந்தக் கோட்பாடுகள் இன்றைக்கும் நமக்குப் பொருந்துகின்றன. சங்கீதம் 122:3-7 வசனங்களை நான் வாசிக்கின்றேன்.

3 எருசலேம் இசைவிணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது. 4 அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாக கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தை ஸ்தோத்தரிப்பதற்குப் போகும். 5 அங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது. 6 எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக் கொள்ளுங்கள். உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. 7 உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.

பழைய ஏற்பாட்டில், எருசலேம் பட்டணமானது, புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்துவினுடைய சபைக்கு ஒரு அடையாளமாக இருக்கிறது. பழைய ஏற்பாட்டில், எருசலேம் ஒரு மையப்புள்ளியாய் இருந்தது. அது தேவனுடைய ஜனங்களின் ஒற்றுமைக்கான ஒரு மையமாகவும் இருந்தது.

இப்பொழுது நான் வாசித்த இந்த சங்கீதத்திலிருந்து சில முக்கியமான குறிப்புகளை எடுத்துக் காட்டுகிறேன். முதலில், இது சொல்கிறது, “எருசலேம் இசைவிணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது.” இங்கு “இசைவிணைப்பான” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற எபிரெய வார்த்தை, அடிப்படையில் “உடன் இருக்கிற” அல்லது “கூடவே வருகின்ற” என்ற அர்த்தத்தில் வரும் ஒரு எபிரெய வார்த்தையின் வேரிலிருந்து உண்டாகியிருக்கிறது என்பது சுவாரசியமான ஒரு தகவலாகும். உண்மையில், அதே வார்த்தையின் வேரிலிருந்துதான் எப்ரோன் என்ற வார்த்தை நமக்குக் கிடைத்திருக்கிறது. ஆகையால் சபையின் இசைவும், இணைப்பும் ஐக்கியத்தில்தான் இருக்கிறது. சக விசுவாசிகளுக்கிடையே இருக்கும் ஐக்கியத்தில்தான் அது உண்டாகிறது.

இரண்டாவதாக, இஸ்ரவேல் ஜனங்கள், தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் கீழ், கோத்திரம் கோத்திரமாக, அவர்களுடைய ஒற்றுமையின் இடமாகிய எருசலேமுக்கு ஒவ்வொரு வருடமும் மூன்று முறை சென்றார்கள். அவர்கள் தனித்தனியாகச் செல்லவில்லை. ஒவ்வொரு கோத்திரமும் தங்களுடைய தலைமையின் கீழ் சென்றார்கள். ஒற்றுமையைக் குறிக்கும் இடத்திற்கு தங்களுடைய ஜனங்களை நடத்திச் செல்வது, தலைவர்களின் பொறுப்பாயிருந்தது.

மூன்றாவதாக, இஸ்ரவேல் ஜனங்கள் இவ்வாறு ஒன்று கூடி வருவது, ஒரு சாட்சியாக இருந்தது. ஆகையால்தான் அவர்கள் இதை ஒவ்வொரு வருடமும் மூன்று முறை செய்ய வேண்டும் என்று தேவன் ஒரு கட்டளையாகக் கொடுத்து, இதை நியமித்திருந்தார். காரணம், அவர்கள் இவ்வாறு ஒன்று கூடி வந்ததன் மூலம், தங்களைச் சுற்றியிருந்த உலகத்திற்கு அவர்கள் ஒன்றை பிரத்தியட்சமாய் வெளிப்படுத்திக் காண்பித்தார்கள். அவர்கள் ஒரே தேசமாய், ஒரே தேவனை ஆராதித்தார்கள், அந்த ஒரே தேவனுக்காகவே அவர்கள் வாழ்ந்தார்கள். இது அவர்களுடைய தேசத்தின் ஒற்றுமையை வெளியரங்கமாய் வெளிப்படுத்திக் காண்பித்தது.

இவ்வாறு அவர்கள் ஒன்றுகூடி வந்தது, மூன்று நன்மைகளை விளையச் செய்தது: அதிகாரம், சமாதானம், செழிப்பு. இந்த வரிசையில்தான் அவை சொல்லப்பட்டிருக்கின்றன. சிங்காசனம் இருந்த இடத்திற்கு நேராகத்தான் அவர்கள் எல்லோரும் சேர்ந்து, ஒன்றாய் கூடி வந்தனர். சிங்காசனம் என்பது எப்பொழுதுமே தெய்வீக அதிகாரதைச் சுட்டிக் காண்பிக்கும் ஒரு படமாக இருக்கிறது. பிறகு இது சொல்கிறது, “எருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக் கொள்ளுங்கள். உன்னை நேசிக்கிறவர்கள் சுகமாய் வாழ்ந்திருப்பார்களாக. உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகவாழ்வும் இருப்பதாக.” இங்கே சமாதானம் என்பது சுகவாழ்வுக்கு முன்னால் வருவதை நாம் கவனிக்க வேண்டும். இயேசுகிறிஸ்துவின் சபைக்கு முதலில் சமாதானம் உண்டாகாமல், அது ஒருபோதும் மெய்யான செழிப்பையும், சுகவாழ்வையும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை. ஆகையால் இங்கு ஒரு ஒழுங்கு வரிசை இருக்கிறது: அதிகாரம், சமாதானம், சுகவாழ்வு. சமாதானத்திற்கு அதிகாரம் அத்தியாவசியமானதாக இருக்கிறது, சுகவாழ்விற்கு சமாதானம் அத்தியாவசியமானதாக இருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.

இந்த மாதிரியைப் பின்பற்றி, சபைக்குள் ஒற்றுமை புதுப்பிக்கப்பட வேண்டுமென்றால், அதற்கு இரண்டு அடிப்படை நிபந்தனைகள் இருக்கின்றன. அவை மிகவும் எளிமையானவை. முதலில், தேவனுடைய ஜனங்கள் தங்களுடைய தலைவர்களை ஏற்றுக் கொண்டு, அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். இரண்டாவதாக, தலைவர்கள் ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்ள வேண்டும், ஒருவரோடொருவர் உறவின் ஐக்கியம் கொண்டிருக்க வேண்டும். அடிப்படையில் அவ்வளவுதான், அதற்கு மேல் வேறொன்றுமில்லை. நான் அந்த இரண்டு நிபந்தனைகளையும் திரும்பவும் சொல்லி, இந்தச் செய்தியை முடிக்கின்றேன். முதலில், தேவனுடைய ஜனங்கள் தங்களுடைய தலைவர்களை ஏற்றுக் கொண்டு, அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். இரண்டாவதாக, தலைவர்கள் ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்ள வேண்டும், ஒருவரோடொருவர் உறவின் ஐக்கியம் கொண்டிருக்க வேண்டும்.

சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. அடுத்த வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை இதே நேரத்தில் மீண்டும் உங்களுடன் இருப்பேன். அடுத்த வாரம் தேவனுடைய முடிவுகால நோக்கத்தின் மற்றொரு முக்கிய அம்சமான இஸ்ரவேலின் புதுப்பித்தலைக் குறித்து பேசப் போகிறேன்.

லைக்
பகிரவும்