ஏற்றவிதத்தில் ஆயத்தப்படு

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 10
உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய திட்டத்தை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதைக் கண்டறியுங்கள்! 'உங்கள் வாழ்க்கைக்கான தேவனுடைய திட்டத்தை எப்படிக் கண்டறிவது' பகுதி 5-ல், கர்த்தருடைய கிருபை மற்றும் வார்த்தையின் மூலம் தகுந்த முறையில் ஆயத்தப்படுத்தப்படுதல் என்ற ஐந்தாவது படியை டெரெக் பிரின்ஸ் வெளிப்படுத்துகிறார். கிறிஸ்துவின் சரீரத்தில் உங்கள் இடத்தைக் கண்டறிந்து, நோக்கமுள்ள வாழ்க்கையை வாழ்வது எப்படி என்று கற்றுக்கொள்ளுங்கள்.
Transcript
உங்களுடைய வாழ்க்கையைக் குறித்த தேவனுடைய திட்டத்தை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதைக் குறித்த சத்தியங்களை இவ்வாரத்தில் உங்களோடு நான் பகிர்ந்து கொண்டு வருகின்றேன். அதற்கு நீங்கள் எடுக்க வேண்டிய நான்கு அடிகளைக் குறித்து இதுவரை நான் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். முதல் அடி, தேவன் உங்களைத் திரும்பவும் சிருஷ்டிக்க வேண்டும். அவர் உங்களை முற்றிலும் புதிய சிருஷ்டிப்பாக உருவாக்க வேண்டும். இரண்டாவது அடி, உங்களுடைய சரீரத்தை ஜீவ பலியாய் நீங்கள் தேவனிடத்தில் அர்ப்பணிக்க வேண்டும். மூன்றாவது அடி, தேவன் உங்களுடைய மனதைப் புதுப்பிக்க வேண்டும். முற்றிலும் புதிய வழியில் சிந்திக்கும் திறனை தேவனே உங்களுக்குக் கொடுக்க வேண்டும். நான்காவது அடி, கிறிஸ்துவினுடைய சரீரமாகிய சபையில் ஒரு உறுப்பாய் உங்களுக்குரிய இடத்தை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
உங்களுக்கான தேவனுடைய திட்டத்தைக் கண்டறிவதில் ஐந்தாவது மற்றும் கடைசி அடியைக் குறித்து இன்று நான் உங்களுக்கு விளக்கிச் சொல்லப் போகிறேன். கிறிஸ்துவின் சரீரத்தில் தேவன் உங்களை எங்கே, எதற்காக வைத்திருக்கிறாரோ, அந்தப் பணியை செய்து முடிக்கும்படி நீங்கள் தகுந்த விதத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும், ஆயத்தமாக வேண்டும். ஆக, சரீரத்தில் உங்களுடைய இடத்தை நிரப்பும்படி, நீங்கள் தகுந்த விதத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பதுதான் இன்றைய என்னுடைய செய்தியின் மையக் கருத்தாக இருக்கிறது.
நாம் திரும்பவும் ரோமர் 12-ம் அதிகாரத்திற்குச் செல்வோம். நான் நேற்று வாசித்த மூன்று வசனங்களை இன்றும் வாசிக்கப் போகிறேன். பிறகு அதற்கு அடுத்த வசனங்களையும் நாம் வாசிப்போம். பவுலின் சிந்தனையில், அடுத்து என்ன இருந்தது என்பதையும் நாம் பார்ப்போம். இப்பொழுது நாம் ரோமர் 12:3-5 வசனங்களை முதலில் வாசிப்போம்.
3 அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது. உங்களில் எவனானாலும் தன்னைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ண வேண்டும். 4 ஏனெனில் நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இராததுபோல, 5 அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்.
புதுப்பிக்கப்பட்ட மனம், ஒரு விமானத்தின் ரேடாரைப் போல இருக்கிறது என்று நான் நேற்று சொன்னேன். அது நம்மை கிறிஸ்துவின் சரீரத்தில் ஒரு உறுப்பாய் நமக்கு நியமிக்கப்பட்ட இடத்திற்கு நேராக நடத்துகிறது.
இப்பொழுது அடுத்ததாக, பயிற்றுவிக்கப்படுவதைக் குறித்து பவுல் பேச ஆரம்பிக்கிறார். அவர் இங்கு பயன்படுத்துகிற வார்த்தை, வரங்களாகும். ஆக, இப்பொழுது நான் வாசித்த வசனங்களுக்கு அடுத்த மூன்று வசனங்களை நான் வாசிக்கப் போகிறேன். ரோமர் 12:6-8 வசனங்களை நாம் வாசிப்போம்:
6 நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்கள் உள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனம் சொல்கிற வரத்தை உடையவன் விசுவாசப் பிரமாணத்துக்கு ஏற்றதாகச் சொல்லக்கடவன். 7 ஊழியம் செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும், 8 புத்தி சொல்கிறவன் புத்தி சொல்கிறதிலும் தரித்திருக்கக்கடவன் (அதாவது, மனச்சோர்வடைந்தவர்களை உற்சாகமூட்டுகிறவன் தொடர்ந்து உற்சாகமூட்டக்கடவன்). பகிர்ந்து கொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன் (அதாவது, மற்றவர்களுடைய தேவைகளைச் சந்திக்கும்படி கொடுக்கிறவன், தாராளமாய் கொடுக்கக்கடவன்). முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன் (அதாவது, தலைமைப்பொறுப்பில் இருப்பவன், ஜாக்கிரதையாய் நிர்வகிக்கக்கடவன்). இரக்கம் செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்.
ஆக, தேவனுடைய இந்த வரங்களெல்லாம் நம்மை பயிற்றுவித்து தயார் செய்யும்படி கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று நாம் பார்க்கிறோம். நம்முடைய பணிக்கேற்ற வரங்களாய் இவை இருக்கின்றன. இந்த ஒழுங்கை நாம் சரியான வரிசையில் வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் பணி, பின்னர் அதற்கான கருவி. சிலர் ஆவிக்குரிய வரங்களைக் குறித்து அனல் மூட்டப்பட்டவர்களாய், உற்சாகமூட்டப்பட்டவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இந்த வரிசையை தவற விட்டு விடுகிறார்கள். காரணம், கிறிஸ்துவின் சரீரத்தில் தாங்கள் எந்த உறுப்பு என்பதையே அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். ஆகையால் ஒரு உறுப்பாய் தாங்கள் செய்ய வேண்டிய பணிக்கு ஏற்ற வரங்கள் என்ன என்பதையும் அவர்கள் அறியாமலிருக்கிறார்கள்.
ஒரு எளிமையான எடுத்துக்காட்டை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். ஒரு மனுஷனுடைய சரீரத்தில் கால் மற்றும் கையை எடுத்துக் கொள்வோம். கால்களின் பொறுப்பு என்ன? எளிமையாகச் சொன்னால், அது எடையைத் தாங்க வேண்டும், விழுந்து விடாதபடி சமநிலையை காத்துக் கொள்ள வேண்டும். கைகளின் பொறுப்பு என்ன? எடையைத் தூக்க வேண்டும், ஒன்றை பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும். இந்த உறுப்புகள் ஒவ்வொன்றும் அவற்றின் பணிக்கேற்றபடி தகுந்த விதத்தில் உருவாக்கப்பட்டு, பொருத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் இவை தங்களுக்குரிய பணியை ஒன்றுக்கொன்று இடம் மாற்றிக் கொண்டால், அது எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்! கையானது எடையைத் தூக்கும்படி, சமநிலையை காத்துக் கொள்ளும்படி முயற்சித்தால், அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். அது எவ்வளவு கடினமானது என்பது நமக்குத் தெரியும். ஜிம்னாஸ்டிக் செய்கிறவர்கள் வேண்டுமானால் அதைச் செய்யலாம். அதேபோல, காலானது எடையைத் தூக்கும்படி, ஒன்றைப் பற்றிப் பிடிக்கும்படி முயற்சித்தால் அதுவும் எவ்வளவு பெரிய முட்டாள்தனமாக இருக்கிறது என்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு குரங்காக இருந்தால் மட்டுமே அப்படிச் செய்ய முடியும். ஆனாலும் இன்றைக்கு நிறைய விசுவாசிகள் அந்த நிலையில்தான் இருக்கிறார்கள். அதைக் கண்டாலே எனக்கு பயமாக இருக்கிறது. தேவன் அவர்களை ஒரு காலாக முன் குறித்திருக்கிறார். ஆனால் அவர்களோ ஒரு கையாக செயல்படும்படி முயற்சிக்கின்றார்கள். இங்கு தேவன் நியமித்த ஒழுங்கே தவறி விட்டது. அவர்கள் எல்லோருமே இந்த ஒழுங்கை மீறிய நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான விசுவாசம், அவர்களுக்குள் இல்லை. காரணம், அவர்கள் நிறைவேற்ற வேண்டிய ஒரு பணிக்காகத்தான், தேவன் அவர்களுக்கு விசுவாசத்தைப் பகிர்ந்தளித்திருக்கிறார். அவர்களுக்குத் தேவையான வரங்களும் அவர்களிடம் இல்லை. காரணம், அந்த வரங்களும், அவர்கள் செய்ய வேண்டிய பணியோடு தொடர்புள்ளவையாகத்தான் இருக்கின்றன.
பல்வேறு வகையான வரங்கள் இருக்கின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும். பவுல் இங்கே நமக்கு சில எடுத்துக்காட்டுகளைக் கொடுத்திருக்கிறார். அவை ஒரு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே, இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல என்றுதான் நான் நினைக்கிறேன். அவர் இங்கு ஏழு வகையான வரங்களை (கருவிகளை) பட்டியலிடுகிறார். முதலாவதாக, தீர்க்கதரிசனம் சொல்லும் வரம்; இரண்டாவதாக, ஊழியம் செய்யும் வரம்; மூன்றாவதாக, போதிக்கிற வரம்; நான்காவதாக, உற்சாகமூட்டும் வரம்; ஐந்தாவதாக, பொருளுதவி செய்யும் வரம்; ஆறாவதாக, தலைமைப் பொறுப்பில் இருந்து நிர்வகிக்கும் வரம்; ஏழாவதாக, இரக்கம் காண்பிக்கும் வரம்.
நிறைய பேர் இன்று தீர்க்கதரிசனம் சொல்வதைக் குறித்து உற்சாகமாக இருக்கிறார்கள். அது அவர்களுக்குள் அனலாய் பற்றி எரிகின்றது. அது அவர்களுக்குள் பேராவலைத் தூண்டி விடுகிறது. தீர்க்கதரிசனம் சொல்வதைக் குறித்து நீங்கள் உற்சாகமாய், அனல் மூட்டப்பட்டவர்களாய் இருக்கலாம். ஆனால் இரக்கம் காண்பிக்கிற ஊழியத்தைக் குறித்து தேவன் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். வியாதிப்பட்டவர்களையும், ஆதரவற்றவர்களையும் சென்று சந்திக்கிற ஒரு ஊழியமாய் இது இருக்கிறது. அமைதியாய், யாருடைய கண்களிலும் படாத ஒரு ஊழியமாய் இது இருக்கிறது. கிறிஸ்துவின் சரீரத்தில் இந்த ஒரு இடத்தையும், பணியையும்தான் தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார் என்றால், எதைச் செய்யும்படி தேவன் உங்களை நியமித்திருக்கிறாரோ, அதற்கு மாறான ஒன்றைச் செய்யும்படி நீங்கள் முயற்சிக்கக்கூடாது. இதை கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். ஆகையால், முதலில் உங்களுக்குரிய இடத்தைக் கண்டுபிடியுங்கள். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை நிறைவேற்றுங்கள். அதற்கேற்ற சரியான கருவியை, வரத்தை தேவனிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது தேவன் உங்களுக்குப் பகிர்ந்தளித்த விசுவாசத்தைக் கொண்டு உங்களால் செயல்பட முடியும். காரணம், அந்த விசுவாசம், உங்களுக்குரிய பணியோடு நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கிறது.
“இப்படியிருக்க, முக்கியமான வரங்களை நாடுங்கள்,” என்று 1 கொரிந்தியர் 12:31-ல் பவுல் சொல்கிறார். முக்கியமான வரங்களை ஆர்வமாய் நாடுங்கள் என்று இன்னொரு மொழிபெயர்ப்பு சொல்கிறது. ஆனால் அந்த முக்கியமான வரங்கள் எவை என்பதை அவர் நமக்குச் சொல்லவில்லை என்பது மிக மிக முக்கியமானதாக இருக்கிறது. நான் வேதாகமத்தை பலமுறை வாசித்திருக்கிறேன். ஆனால் எவை அதிக முக்கியத்துவம் உள்ள வரங்கள், எவை குறைவான முக்கியத்துவம் உள்ள வரங்கள் என்று சரியாக எடுத்துக் காண்பிக்கிற ஒரு பட்டியலை என்னால் வேதாகமத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகையால் நான் இந்த ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை, அதிக முக்கியமான வரங்கள் என்பவை, கிறிஸ்துவின் சரீரத்தில் தேவன் என்னை எங்கே வைத்திருக்கிறாரோ, அந்தக் குறிப்பிட்ட இடத்தில் இருந்து கொண்டு, உகந்த விதத்தில் சிறப்பாக என்னைச் செயல்பட வைக்கின்றன. ஆகையால், எனக்கு எது மிக முக்கியமான வரமாக இருக்கிறதோ, அது உங்களுக்கும் முக்கியமான ஒரு வரமாக இருக்க முடியாது. வரங்களிடமிருந்து உங்களைத் துண்டித்துக் கொள்ளாதீர்கள். அவை நீங்கள் பணிபுரிவதற்குத் தேவையான கருவிகளாய் இருக்கின்றன. கிறிஸ்துவின் சரீரத்தில் நீங்கள் எங்கே இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதற்கு உதவி செய்யும் கருவிகளாய் அவை உங்களுக்கு இருக்கின்றன.
சரீரத்தில் இயங்குவதற்குத் தேவையான ஆவிக்குரிய கருவியைக் குறித்து நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். நான் இன்னும் கொஞ்சம் முன்னே செல்ல விரும்புகிறேன். தகுந்த விதத்தில் தயார்படுத்தப்படுவதற்கும், பயிற்றுவிக்கப் படுவதற்கும் புதிய ஏற்பாடு எவ்வளவு அதிகமான முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது என்பதை உங்களுக்கு எடுத்துக் காண்பிக்கிறேன். இயேசு தம்முடைய சீஷர்களிடம் பேசிய வார்த்தைகளை நாம் கவனிப்போம். ஊழியத்திற்குச் செல்வதற்கு முன், அவர் அவர்களிடம் பேசுகிறார். அவர் பரமேறுவதற்கு முன், அவர் அவர்களிடம் இவ்வாறு சொல்கிறார், “இப்பொழுது உடனே புறப்பட்டு, ஊழியம் செய்ய ஆரம்பித்து விடாதீர்கள். காரணம், உங்களிடம் வல்லமை இல்லை. நீங்கள் இன்னும் ஆயத்தமாகவில்லை. ஆகையால் எருசலேமிலே காத்திருங்கள். நீங்கள் அந்த வல்லமையைப் பெற்றுக் கொண்ட பிறகு, நீங்கள் ஊழியம் செய்ய ஆரம்பிக்கலாம்.” பாருங்கள், அந்த அப்போஸ்தலர்கள் இயேசுவோடு கூட சேர்ந்து, மூன்றரை வருடங்கள் ஊழியம் செய்தார்கள்; அவருடைய போதனைகளையெல்லாம் கேட்டிருக்கிறார்கள்; அவருடைய அற்புதங்களையெல்லாம் பார்த்திருக்கிறார்கள். அவர்களுக்கே அது தேவையாயிருந்தது என்றால், உங்களுக்கும் எனக்கும் அது தேவையாயிருக்காதா? அது நிச்சயம் நமக்குத் தேவைப்படும். நமக்கென்று தேவன் முன் குறித்திருக்கிற பெலனை, கருவியை நாம் பெற்றுக் கொள்ளாதவரை, நாம் வெளியே சென்று, ஊழியம் செய்யத் தகுந்தவர்களாக காணப்பட மாட்டோம். லூக்கா 24:46-49 வசனங்களில் இயேசு என்ன சொல்கிறார் என்பதைக் கவனிப்போம்:
46 எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது. 47 அன்றியும் மனந்திரும்புதலும், பாவ மன்னிப்பும் எருசலேம் தொடங்கி சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. 48 நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள். [அவருடைய சாட்சிகளாய் இருப்பது எவ்வளவு முக்கியமான ஒரு விஷயம். ஆனால் அவர் அடுத்து என்ன சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள்.] 49 என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.
இது பரிசுத்த ஆவியானவரின் இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட வல்லமையாய் இருக்கிறது. இதுதான் அந்தக் கருவியாகும். இதே காரியம், அப்போஸ்தலர் நடபடிகள் 1:8- ம் வசனத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. இயேசு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன், அவர்கள் அவரை ஒலிவ மலையில் பார்த்தனர். அவர்கள் இனி அவரைக் காணப் போவதில்லை. அப்பொழுது அவர்களிடம் அவர் பேசிய கடைசி வார்த்தைகள் இவை:
8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது, நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.
அறிவிக்க வேண்டிய செய்தி, அவர்களிடம் இருந்தபோதும், அவர்கள் வெளியே செல்லவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஊழியம் செய்வதற்குத் தேவையான கருவியை, வல்லமையை அவர்கள் பெறும்வரை, அவர்கள் வெளியே செல்லவில்லை, எதையும் அறிவிக்கவில்லை. எபிரெயர் 2:3-4 வசனங்களில், இந்த நிருபத்தை எழுதியவர், தேவன் தம்முடைய ஜனங்களுக்கென்று ஆயத்தம் செய்து வைத்திருக்கிற கருவியைக் குறித்து திரும்பவும் பேசுகிறார்.
3 முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், 4 அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்து கொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால், தண்டனைக்கு எப்படித் தப்பித்துக் கொள்வோம்.
இங்கு ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். சுவிசேஷ செய்தியும், இயேசுவின் சாட்சியும் பரிசுத்த ஆவியானவரின் வரங்களோடு சேர்ந்தே வெளிப்பட வேண்டும் என்பதுதான் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. இதுதான் தேவனுடைய சித்தம். ஆகையால் நாம் ஆவிக்குரிய வரங்களை ஏதோ விளையாட்டுப் பொம்மைகளைப்போல கையாளக் கூடாது. மாறாக, நாம் அவைகளை கருவிகளாகப் பார்க்க வேண்டும். தகுந்த கருவிகள் இல்லாமல், நம்மால் நம்முடைய பணியைச் செய்ய முடியாது. தேவன் நமக்குக் கொடுத்திருக்கிற வேலையை நம்மால் நிறைவேற்றி முடிக்கவும் முடியாது.
இன்னொரு குறிப்பையும் நான் சொல்கிறேன். இது என்னுடைய கடைசி குறிப்பாகும். நாம் முறையாக பயிற்றுவிக்கப்படுவதற்கு, தேவனால் கொடுக்கப்பட்ட ஊழியங்களின் உதவி நமக்குத் தேவையாயிருக்கிறது. பவுல் இதை எபேசியர் 4:12-13 வசனங்களில் தெளிவுபடுத்துகிறார்.
12 பரிசுத்தவான்கள் சீர் பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும்............ 13 அவர் சிலரை அப்போஸ்தலராகவும், சிலரை தீர்க்கதரிசிகளாகவும், சிலரை சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.
திரும்பவும் கவனியுங்கள், தம்முடைய ஜனங்கள் செய்ய வேண்டிய வேலைக்கு ஏற்றவாறு, அவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பது தேவனுடைய சித்தமாயிருக்கிறது. ஆனால் தேவன் அதற்காக கிறிஸ்துவின் சரீரத்தில் சில முக்கியமான ஊழியங்களை வைத்திருக்கிறார். தேவனுடைய ஜனங்களைப் பயிற்றுவித்து, தயார்படுத்துவதுதான் இந்த ஊழியங்களின் பொறுப்பாகும். கிறிஸ்துவின் சரீரத்தில் இருக்க வேண்டியது ஏன் அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது என்பதற்கு இது இன்னொரு காரணமாகும். காரணம், நீங்கள் சரீரத்தில் இருக்கும்போதுதான், இந்த ஊழியங்களால் உண்டாகும் நன்மையை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். அது உங்களை சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்கென்று பயிற்றுவித்து, ஆயத்தப்படுத்தும். ஆகையால் நமக்கு ஆயத்தம் தேவை. நாம் பணிபுரிவதற்கு கருவி தேவை.
இப்பொழுது என்னுடைய செய்தியின் முடிவில், உங்களுடைய வாழ்க்கையைக் குறித்த தேவனுடைய திட்டத்தைக் கண்டுபிடிக்கும்படி நீங்கள் எடுக்க வேண்டிய ஐந்து அடிகளை திரும்பவும் ஒருமுறை சொல்லி விடுகிறேன்.
முதலில், நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாய் மாற வேண்டும்.
இரண்டாவதாக, தேவனுடைய பலிபீடத்தில், நீங்கள் உங்களுடைய சரீரத்தை ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும்.
மூன்றாவதாக, நீங்கள் உங்களுடைய மனதைப் புதுப்பிக்க வேண்டும். நீங்கள் வித்தியாசமாக சிந்திக்க வேண்டும். உங்களுடைய மதிப்பீடுகளும், அளவுகோல்களும், நோக்கங்களும், இலக்குகளும் வித்தியாசமானதாக மாற வேண்டும். புதுப்பிக்கப்படாத பழைய மனம், தேவனுக்கு விரோதமாக யுத்தம் செய்கிறது. அதினால் ஒருபோதும் தேவனுடைய சித்தத்தைக் கண்டறியவே முடியாது.
நான்காவதாக, உங்களுடைய புதுப்பிக்கப்பட்ட மனம், கிறிஸ்துவின் சரீரத்தில் உங்களுக்குரிய இடத்திற்கு நேராக உங்களை நடத்தும். இது சரியான ரன்வேயில் விமானத்தை தரையிறங்கச் செய்கிற அதன் ரேடாரைப் போல இருக்கிறது.
ஐந்தாவதாக, கிறிஸ்துவின் சரீரத்தில் நீங்கள் உங்களுக்குரிய இடத்தைக் கண்டறியும்போது, பரிசுத்த ஆவியானவர் நமக்குக் கிடைக்கும்படி செய்கிற இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட கருவிகளால் நாம் தகுந்த விதத்தில் ஆயத்தமாக வேண்டும், பயிற்றுவிக்கப்பட வேண்டும். இந்தக் கருவிகளும், தேவன் தம்முடைய சரீரத்தில் அமைத்திருக்கிற ஊழியங்கள் மூலமாக நமக்குக் கிடைக்கின்றன.
குறியீடு: RP-R014-105-TAM









