வெற்றிகரமான ஜெபம் - சரியான நோக்கம் தேவ மகிமை

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 9
'வெற்றிகரமான ஜெபத்தின் கூறுகள் 2 - சரியான நோக்கம்: தேவனுடைய மகிமைக்காக' என்ற செய்தியில், தேவனை மகிமைப்படுத்தும் நோக்கத்துடன் ஜெபிப்பதன் முக்கியத்துவத்தை டெரெக் பிரின்ஸ் வலியுறுத்துகிறார். வெளித்தோற்றத்தை விட இருதயத்தின் நோக்கங்களையே தேவன் பார்க்கிறார் என்பதை அவர் விளக்குகிறார். தேவனுடைய மகிமையைத் தேடும் உண்மையான ஜெபங்களின் அவசியத்தை இது உணர்த்துகிறது. இது 'எப்படி ஜெபிப்பது மற்றும் நீங்கள் ஜெபிப்பதைப் பெறுவது எப்படி' தொடரின் 7-ஆம் பகுதியாகும்.
Transcript
திரும்பவும், உங்களோடு இருப்பது நன்றாக இருக்கிறது. அன்றாட வாழ்க்கையில், நம் எல்லோருக்குமே மிகவும் முக்கியமாய் தேவைப்படுகிற ஒரு சத்தியத்தை நான் உங்களோடு பகிர்ந்து கொண்டு வருகின்றேன். “எவ்வாறு ஜெபித்து, நீங்கள் எதற்காக ஜெபித்தீர்களோ அதையே பெற்றுக் கொள்வது?” என்ற தலைப்பில் நாம் கற்றுக் கொண்டு வருகின்றோம். முழுமையான, வெற்றிகரமான ஜெபத்திற்கு அத்தியாவசியமாக தேவைப்படும் கூறுகளைக் குறித்து இந்த வாரம் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.
வெற்றிகரமான ஜெபத்திற்கு அத்தியாவசியமான முதல் கூறைக் குறித்து நேற்றைய செய்தியில் நான் பிரசங்கித்தேன். இரண்டு விதமான பார்வையிலிருந்து நாம் பார்த்தோம். நாம் தைரியமாய் வர வேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான பார்வையையும், ஆக்கினைத்தீர்ப்பின் உணர்வு இல்லாமல் வர வேண்டும் என்ற எதிர்மறையான பார்வையையும் குறித்து நாம் கற்றுக் கொண்டோம். இது ஒரு நாணயத்தின் இரண்டு எதிரெதிர் பக்கங்கள் என்று நான் ஒப்பிட்டுச் சொன்னேன். தைரியம் என்பது ஆக்கப்பூர்வமான பக்கமாகவும், ஆக்கினைத்தீர்ப்பின் உணர்வு இல்லாமல் என்பது எதிர்மறையான பக்கமாகவும் இருக்கின்றது. ஆக்கினைத்தீர்ப்பின் உணர்வு இல்லாமல் நம்மை வரச் செய்யக்கூடிய அடிப்படை நிபந்தனைகளைக் குறித்து நான் விளக்கிச் சொன்னேன்.
வெற்றிகரமான ஜெபத்திற்கு தேவையான இரண்டாவது அத்தியாவசியமான கூறைக் குறித்து இன்றைய செய்தியில் நான் பிரசங்கிக்கப் போகிறேன். நாம் சரியான நோக்கத்தோடு ஜெபிக்க வேண்டும் என்பதுதான் அது. எது சரியான நோக்கம் என்பதை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். தேவனுடைய மகிமைக்காக என்பதுதான் சரியான நோக்கமாயிருக்கிறது.
தவறான மதவைராக்கியம் கொண்ட மதவாதிகள், வெளியே பார்க்கின்ற `விஷயங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஜனங்கள் உடை உடுத்தும் விதம், அவர்கள் ரசித்து, அனுபவிக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், அவர்கள் உண்ணும் உணவு என்பது போன்ற விஷயங்களைக் குறித்துதான் அவர்கள் அதிக அக்கறை கொள்கிறார்கள். பரிசேயர்களின் நாட்களில், உணவு உண்பதற்கு முன் தங்கள் கைகளைக் கழுவ வேண்டும் என்பதுபோன்ற எல்லா வகையான மதக்கட்டுப்பாடுகளையும் அவர்கள் விதித்திருந்தனர். பொதுவாகச் சொன்னால், மதம் வெளியே இருந்துதான் ஆரம்பிக்கின்றது. அது புறம்பான காரியங்களைத்தான் பார்க்கிறது. ஆனால் தேவன் உள்ளேயிருந்து ஆரம்பிக்கிறார், உள்ளேயிருந்து கிரியை செய்து, வெளியே மாற்றங்களை உண்டு பண்ணுகிறார் என்பதை ஏற்றுக்கொள்வதென்பது இந்த மதவாதிகளுக்குக் கடினமாக இருக்கிறது. தேவன் வெளியே காணப்படுகிற விஷயத்தையும் தாண்டி உள்ளே பார்க்கிறார். 1 சாமுவேல் 16-ம் அதிகாரத்தில், இதைக் குறித்த மிகவும் தெளிவான ஒரு எடுத்துக்காட்டு எழுதப்பட்டிருக்கிறது. இஸ்ரவேலை ஆளப் போகும் ராஜாவாக, ஈசாயின் குமாரர்களில் ஒருவனை அபிஷேகம் பண்ணும்படி தேவன் சாமுவேலை அனுப்பியிருந்தார். ஈசாய் தன்னுடைய ஏழு குமாரர்களையும் அழைத்து வந்து, முன்னே நிறுத்தினான். எல்லோரும் பார்ப்பதற்கு நன்றாக, உறுதியாக, கம்பீரமான வாலிபர்களாய் நின்றனர். அவர்கள் ஒவ்வொருவரையும் பார்க்கும்போது, “இவனாகத்தான் இருக்க வேண்டும்,” என்று சாமுவேல் நினைத்தான். ஆனால் ஒவ்வொரு முறையும், “இவன் அல்ல,” என்று சொல்லி, தேவன் அவனுடைய சிந்தையை சரி செய்தார். பிறகு தேவன் ஒரு விளக்கத்தை அவனுக்குக் கொடுத்தார். 1 சாமுவேல் 16:7-ஐ வாசிப்போம்:
7 .............மனுஷன் பார்க்கிறபடி நான் (தேவன்) பாரேன். மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்.
நீங்கள் ஜெபிக்க வரும்போது, கர்த்தர் உங்களுடைய இருதயத்தைப் பார்க்கிறார் என்பதை நிச்சயமாய் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். “அவர் இருதயங்களையும், உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறார்,” என்று ஒரு வேதவசனம் சொல்கிறது. அவர் நம்முடைய இருதயத்தின் சிந்தைகளையும், நோக்கங்களையும் ஆராய்ந்து பார்க்கிறார். அதிலும் குறிப்பாக, அவர் நம் உள்நோக்கங்களை ஆராய்ந்து பார்க்கிறார். நாம் ஜெபிக்கும்போது, நாம் என்ன கேட்கிறோம் என்பது மட்டும் அவருக்கு முக்கியமல்ல. நாம் ஏன் அதைக் கேட்கிறோம், நாம் ஏன் அதை விரும்புகிறோம் என்பதும் அவருக்கு முக்கியமான ஒரு விஷயமாக இருக்கிறது. இது யாக்கோபு 4:2-3 வசனங்களில் மிகவும் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 2-ம் வசனத்தில், யாக்கோபு எழுதுகிறார்:
2 ............நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை. [நீங்கள் கேட்கவில்லை. ஆகையால் உங்களுக்குக் கிடைக்கவில்லை.]
இன்றைக்கு நிறைய கிறிஸ்தவர்கள் தேவனிடமிருந்து நிறைய நன்மைகளைப் பெற்றுக் கொள்ளாமலிருப்பதற்கு மிகவும் எளிமையான ஒரு நடைமுறை காரணம், அவர்கள் கேட்கவில்லை, ஜெபிக்கவில்லை என்பதுதான். என்னுடைய வாழ்க்கையை நான் திரும்பிப் பார்க்கிறேன். பல நேரங்களில், பல சூழ்நிலைகளில், தேவன் விரும்பி எனக்குக் கொடுத்திருக்கக்கூடிய நன்மைகளும், ஆசீர்வாதங்களும் இல்லாமல் நான் செயல்பட்டிருக்கிறேன். அதற்கு எளிமையான காரணம் இதுதான், நான் அவைகளுக்காக ஜெபிக்கவில்லை. ஆக, நம்மிடம் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிற காரியங்கள் உங்களிடமும், என்னிடமும் இல்லாமல் இருப்பதற்கான ஒரு காரணத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் ஜெபிக்கவில்லை என்பதுதான் அது. ஆனாலும் இது மட்டுமே காரணம் அல்ல. அடுத்த வசனத்தில், அதாவது 3-வது வசனத்தில் யாக்கோபு இதையும் சொல்கிறார்:
3 நீங்கள் விண்ணப்பம் பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்க வேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால் பெற்றுக் கொள்ளாமலிருக்கிறீர்கள்.
நிறைய கிறிஸ்தவர்கள் நிறைய ஜெபிக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதையும் நாம் கவனிக்கிறோம். காரணம், அவர்கள் தவறான நோக்கங்களோடு ஜெபிக்கிறார்கள். குறிப்பாக, ஒரு தவறான நோக்கத்தை யாக்கோபு இங்கே சுட்டிக் காண்பிக்கிறார். நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட சந்தோஷங்களுக்காக அதைப் பயன்படுத்த வேண்டுமென்று நினைக்கிறீர்கள், அதை செலவழிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள் என்பதுதான் அது. இது நம்மை திரும்பவும், புதிய மனுஷனுக்கும் பழைய மனுஷனுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கருத்தில் கொள்ளும்படி கொண்டு வருகின்றது. இதைக் குறித்து என்னுடைய கடந்த வாரச் செய்திகளில் ஒன்றில் நான் பிரசங்கித்தேன். பழைய மனுஷனை நாம் களைந்து போட்டு, புதிய மனுஷனை நாம் தரித்துக் கொள்ள வேண்டும் என்று பவுல் சொன்னதை நினைவுகூருங்கள். பழைய மனுஷன் முரட்டாட்டக்காரன், அவன் தன் சுயத்தைக் குறித்தே மேன்மைபாராட்டுகிறவன், அவன் துணிகரமானவன், தற்பெருமை கொண்டவன் என்பதையெல்லாம் நான் உங்களுக்குச் சொன்னேன். அவன் தன்னுடைய தனிப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களை மட்டுமே எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருப்பான். “எனக்கு இது வேண்டும். எனக்கு அது வேண்டும். நான் இப்படி நினைக்கிறேன். நான் அப்படி நினைக்கிறேன்,” என்பதைத்தான் அவன் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பான். தேவன் பழைய மனுஷனோடு பேச்சுவார்த்தை நடத்துகிறதில்லை. உண்மையைச் சொன்னால், பழைய மனுஷன் என்ற பிரச்சனைக்கு தேவனிடம் ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது. அது மரண தண்டனை. அதாவது பழைய மனுஷன் கொல்லப்பட வேண்டும். இயேசு சிலுவையில் மரித்தபோது, கிறிஸ்துவுக்குள் அந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது என்பதுதான் சுவிசேஷத்தின் நற்செய்தியாக இருக்கிறது. நம்முடைய பழைய மனுஷன் கிறிஸ்துவோடு கூட சிலுவையில் அறையப்பட்டான். ஆனால் இது நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நிஜமாய் மாற வேண்டும். சிலுவையில் இயேசு என்ன செய்தாரோ, அதன் அடிப்படையில், நாம் ஒவ்வொருவரும் அந்த பழைய மனுஷனையும், அவனுடைய சுய நலத்தையும், அவனுடைய சுய நாட்டங்களையும், தன் தனிப்பட்ட தேவைகள் மற்றும் சந்தோஷங்களுக்கு அவன் கொடுக்கிற முக்கியத்துவத்தையும் களைந்தெறிய வேண்டும். இந்த நோக்கங்களோடு நாம் ஜெபித்து கொண்டே இருக்கும் வரைக்கும், நம்முடைய நோக்கங்கள் தவறானவைகளாய் இருக்கும். நாம் எதற்காக ஜெபிக்கிறோமோ, அது நல்ல காரியமாக இருந்தாலும், நம் நோக்கம் தவறானதாக இருக்கிறபடியால், தேவன் அதற்கு பதில் கொடுக்க மாட்டார். ஆகையால் இப்பொழுது ஒரு கேள்வி நமக்குள் எழுகின்றது: “அப்படியென்றால், ஜெபத்திற்கான சரியான நோக்கம் என்ன?” இந்தக் கேள்விக்கு இயேசு தெளிவான ஒரு பதிலைக் கொடுக்கிறார். யோவான் 14:13-ஐ வாசிப்போம்:
13 நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.
நாம் எதைக் கேட்டாலும், இயேசு அதைச் செய்வார். இது எல்லாவற்றையும் உள்ளடக்கிய, விசாலமான ஒரு வாக்குத்தத்தமாக இருக்கிறது. ஆனால் அவர் எதன் அடிப்படையில் அதைச் செய்வார் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். “குமாரனில் பிதாவாகிய தேவன் மகிமைப்பட வேண்டும்,” என்பதுதான் இங்கு நோக்கமாயிருக்கிறது. ஆக, தேவனுக்கு மகிமையைக் கொண்டு வருவதுதான், ஜெபிப்பதற்கான சரியான நோக்கமாக இருக்கிறது. அதாவது, நாம் ஜெபிக்கும்போது, நம் ஜெபத்திற்குக் கிடைக்கின்ற பதில், தேவனுக்கு மகிமையைக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் இங்கு நோக்கமாயிருக்கிறது.
உண்மையைச் சொன்னால், இது ஜெபத்திற்கான சரியான நோக்கம் என்பது மட்டுமல்ல, இது நம் வாழ்க்கைக்கான சரியான நோக்கமாகவும் இருக்கின்றது. நம்முடைய வாழ்க்கையின் ஒரே பிரதானமான, முக்கியமான நோக்கம், தேவனை மகிமைப்படுத்துவதுதான். தேவனுக்கு மகிமையைக் கொண்டு வருவதுதான், தேவனுடைய சிருஷ்டிப்புகளுக்கு உண்டாயிருக்கிற விசேஷமான சிலாக்கியமாயிருக்கிறது. இயேசுவின் நாமத்தில் நம்முடைய ஜெபங்களுக்குப் பதில் கிடைக்கும்போது, அதன் மூலம் நாம் தேவனுக்கு மகிமையைக் கொண்டு வர வேண்டும் என்று தேவன், ஜெபத்தை அதற்கு ஒரு வழியாக நியமித்திருக்கிறார்.
ஜெபத்திற்கு ஒரே ஒரு சரியான நோக்கம்தான் இருக்கிறது. தேவனுடைய மகிமைக்காக என்பதுதான் அந்த நோக்கம் என்று நான் சொன்னேன். இதை அதன் எதிர்ப்பக்கத்திலிருந்தும் நாம் பார்க்க முடியும். உண்மையில் எது பாவம் என்பதையும் நாம் இங்கு பார்க்க் முடியும். பாவம் என்பது தவறான ஒரு வாழ்க்கைமுறையாகும். அது தேவனுக்குரிய மகிமையை அவரிடமிருந்து திருடி விடுகின்றது. பலர் இதைப் பார்ப்பதில்லை. ஆனால் இது ரோமர் நிருபத்தில் பலமுறை சொல்லப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டிற்கு, ரோமர் 1:21-ஐ வாசித்துப் பாருங்கள். எவ்வாறு மனுஷர்கள் எல்லோரும் தேவனிடமிருந்து விலகிப் போனார்கள், அந்தகாரம் – அறியாமை – துன்மார்க்கம் மற்றும் கனியற்ற வாழ்க்கைக்குள் எவ்வாறு அவர்கள் விழுந்தார்கள் என்பதைக் குறித்து பவுல் இதில் விளக்கமாக எழுதியிருக்கிறார். அந்தகாரம் மற்றும் பாவம் எனும் அதலபாதாளத்திற்குள் விழச் செய்கிற படிப்படியான நிலைகளைக் குறித்து பவுல் 21-ம் வசனத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார்:
21 அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்தரியாமலுமிருந்து (தேவனுக்கு நன்றியுணர்வுள்ளவர்களாய் வாழாமலுமிருந்து), தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள். உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
வீழ்ச்சியை நோக்கிய முதல் இரண்டு படிகள் எவை? முதல் படி, அவர்கள் தேவனை மகிமைப்படுத்தத் தவறினார்கள், தேவனுக்குரிய மகிமையை செலுத்தத் தவறினார்கள். இரண்டாவது படி, அவர்கள் தேவனுக்கு நன்றியுணர்வுள்ளவர்களாய் வாழத் தவறினார்கள். வீழ்ச்சியை நோக்கிய முதல் இரண்டு படிகளில் கால் எடுத்து வைத்தவர்கள், நினைப்பதற்கே பயங்கரமான ஒன்றில் முடியப்போகிற வழுக்கலான, சறுக்கலான பாதையில் நடக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகையால் ஜெபிக்கும்போது, இப்படிப்பட்ட தவறுகளை நாம் செய்து விடாதபடி, நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். தேவனை மகிமைப்படுத்த வேண்டும், தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற சரியான நோக்கத்தோடு நாம் ஆரம்பிக்கிறோமா என்பதையும் நாம் எச்சரிக்கையோடு நிச்சயித்துக் கொள்ள வேண்டும். ரோமர் 3:23-ல், பவுல் இந்தக் குறிப்பைச் சொல்கிறார். நாம் வாசிப்போம்:
23 எல்லோரும் பாவம் செய்து, தேவமகிமையற்றவர்களானார்கள்.
உண்மையில் எது பாவம்? ஒரு வங்கியை கொள்ளையடிப்பதும், வேசித்தனச் செயலில் விழுவதும், தவறான மதவைராக்கியம் கொண்டவர்களின் பார்வையிம் மகா பயங்கரமான ஒரு செயலைச் செய்வதும் மட்டுமே பாவமாகாது. தேவனுக்கு மகிமையைக் கொடுக்கிற விதத்தில் வாழாமல் இருப்பதுதான் பாவத்தின் வேராயிருக்கிறது. அதாவது, தேவனுக்குரிய மகிமையை நம் வாழ்க்கையில் தேவனுக்கு கொடுக்காமல் இருப்பதுதான் பாவமாகும். மறு பக்கத்தில் பார்க்கும்போது, விசுவாசத்தின் அடிப்படையில் வாழும் நீதியின் வாழ்க்கை, இதுவரை கொடுக்காமலிருந்த மகிமையை தேவனுக்குத் திரும்பவும் கொடுக்க ஆரம்பிக்கிறது. ரோமர் 4-ம் அதிகாரத்தில், ஆபிரகாமின் வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காண்பித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. எல்லாமே நேரெதிராக சென்று கொண்டிருந்தபோதும், உற்சாகத்தையும் ஊக்கத்தையும் இழக்கச் செய்யும் நிகழ்வுகள் நடந்தபோதும், சுதந்தரவாளியைக் குறித்து தேவன் தந்த வாக்குத்தத்தத்தை ஆபிரகாம் எவ்வாறு உறுதியாகப் பற்றிப் பிடித்திருந்தான் என்று இப்பகுதி பேசுகிறது. பவுல் சொல்கிறார்:
20 தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல், 21 தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.
ஒன்றை நாம் இங்கு கவனிக்க வேண்டும். ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தை விசுவாசத்தோடு உறுதியாகப் பிடித்துக் கொண்டிருந்ததன் மூலம், அவன் தேவனுக்கு மகிமையைக் கொடுத்தான். அவன் பாவத்தின் எதிர்மறையான விளைவை தலைகீழாக மாற்றினான். தேவனை விசுவாசித்து, இயேசுவின் மூலம் அவரிடம் வருகின்ற நாம் ஒவ்வொருவரும் அதைத்தான் செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். வீழ்ச்சியை நோக்கி நம்மை இழுக்கும் பாவத்தின் வல்லமையிலிருந்து, நம்மை விடுதலையாக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். தேவனுக்கு மகிமையைக் கொடுக்க வேண்டும் என்ற சரியான நோக்கத்திற்கு நேரான பாதையை நோக்கி நம்மைத் திருப்ப வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அந்த நோக்கத்தோடு நாம் ஜெபிக்கும்போது, தேவன் அங்கே மகிமைப்படுகிறார். மெய்யாகவே இன்னும் அருமையான ஒன்றைக் குறித்தும் தேவன் சொல்லியிருக்கிறார். அவருடைய எல்லா வாக்குத்தத்தங்களும் நமக்குக் கிடைக்கக்கூடியதாய் இருக்கின்றன என்றும் அவர் சொல்லியிருக்கிறார். 2 கொரிந்தியர் 1:20-ல் நாம் இதை வாசிக்கிறோம்:
20 எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.
இது உங்களை அசைக்கவில்லையா! இது உங்களை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு செல்லவில்லையா! தேவன் எவ்வளவு வாக்குத்தத்தங்களைக் கொடுத்திருந்தாலும், அவையெல்லாம் கிறிஸ்துவுக்குள் “ஆம்” என்று இருக்கின்றன. வேதவசனங்களில் 8000 தேவனுடைய வாக்குத்தத்தங்கள் இருக்கின்றன என்று ஒருவர் கணக்கிட்டிருக்கிறார். இந்த 8000 வாக்குத்தத்தங்களும் கிறிஸ்துவுக்குள் “ஆம்” என்று நமக்குக் கிடைக்கக்கூடியவைகளாய் இருக்கின்றன. நாம் கிறிஸ்துவுக்குள் தேவனிடம் வரும்போது, “உனக்கு அந்த வாக்குத்தத்தம் உண்டாகாது. நான் அந்த அர்த்தத்தில் அந்த வாக்குத்தத்தத்தைச் சொல்லவில்லை,” என்று அவர் ஒருபோதும் சொல்ல மாட்டார். அவை அனைத்திற்கும், அவர் “ஆம்” என்று சொல்கிறார். தேவன் அதற்கு “ஆம்” என்று சொல்லும்போது, நாம் விசுவாசத்தோடு அதற்கு “ஆமென்” என்று சொல்ல வேண்டும். நம்முடைய “ஆமென்” என்ற வார்த்தைதான், தேவனுடைய “ஆம்” என்ற வார்த்தையைப் பற்றிப் பிடிக்கின்றது. வாக்குத்தத்தத்தை அது நம்முடையதாகவும் ஆக்குகிறது. ஆனாலும் தேவனுடைய மகிமைக்காகவே நாம் “ஆமென்” என்று சொல்கிறோம். நான் அதைத் திரும்பவும் வாசிக்கிறேன்.
20 எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் [தேவன் எவ்வளவு அதிகமான வாக்குத்தத்தங்களைக் கொடுத்திருந்தாலும், அவையெல்லாம்] இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.
இவ்விதத்தில்தான் தேவனுடைய வாக்குத்தத்தங்களை சரியான விதத்தில் நாம் சுதந்தரிக்கின்றோம். தேவனுடைய மகிமைக்காவே நாம் அவற்றை உரிமைபாராட்டி சுதந்தரிக்கின்றோம். இந்த வேதவசனத்தை நான் கொஞ்சம் மாற்றியமைத்து, இவ்வாறு சொல்கிறேன். நீங்களும் இதை தியானிக்கும்படி, உங்களிடமே விட்டு விடுகிறேன்.
என்னுடைய சூழ்நிலைக்கு பொருந்துகிற, என் தேவையை சந்திக்கிற ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் இயேசுவின் நாமத்தில் இப்பொழுதே நான் உரிமைபாராட்டுவேன் என்றால், தேவனுடைய மகிமைக்காக நான் உரிமைபாராட்டுவேன் என்றால், அது எனக்குரியதாகவே மாறுகிறது.
சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். இன்றைக்கு சரியான நோக்கங்களோடு ஜெபிக்க வேண்டிய தேவையைக் குறித்து பேசினேன். வெற்றிகரமான ஜெபத்திற்கான அடுத்த முக்கியமான கூறான “சரியான உறவுகள்” குறித்து நாளை பேசுவேன்.
குறியீடு: RP-R019-102-TAM









