மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்த, என் வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் வித்தியாசத்தை ஏற்படுத்திய, உங்களுடைய வாழ்க்கையிலும் அதையே செய்யக்கூடிய சத்தியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

புதுப்பித்தல் கிரியையில் நடக்க வேண்டிய முதல் முக்கியமான வேலையைக் குறித்து நேற்று நான் சொன்னேன். அதாவது பரிசுத்த ஆவியானவருடைய இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட வல்லமையைக் குறித்துப் பார்த்தோம். அதில் நடக்க வேண்டிய இரண்டாவது முக்கியமான வேலையைக் குறித்து இன்று நாம் பார்க்கப் போகிறோம். கிறிஸ்துவின் சரீரமாகிய சபையைக் கட்டியெழுப்பும்படி அவர் கொடுத்த ஊழியங்களைக் குறித்து இன்று நாம் பார்ப்போம்.

இதற்கு ஒரு அறிமுகமாக, எபேசியர் 4-ம் அதிகாரத்தின் 8-ம் வசனத்திலிருந்து நான் வாசிக்கப் போகிறேன்.

ஆதலால், அவர் (கிறிஸ்து) உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.

பிறகு 13-ம் வசனத்தில், கிறிஸ்து பரமேறிச் சென்ற பிறகு, தம்முடைய சபைக்குக் கொடுத்த வரங்களைக் குறித்து பவுல் எழுதுகிறார்.

அவர் சிலரை அப்போஸ்தலராகவும், சிலரை தீர்க்கதரிசிகளாகவும், சிலரை சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.

பரமேறிச் சென்ற கிறிஸ்து ஐந்து ஊழிய வரங்களைக் கொடுத்திருக்கிறார்: அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள், போதகர்கள். பிறகு அவை என்ன நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று பவுல் நமக்குச் சொல்கிறார்.

11 நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும், அறிவிலும், ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும், 12 பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்…..

இந்த ஊழிய வரங்கள் என்ன நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் குறித்து நான் விளக்கமாகப் பேசப் போகிறேன். இந்த ஊழியங்களின் விளைவாக நடக்கின்ற இன்னொரு பலனைக் குறித்து பவுல் 14-ம் வசனத்தில் குறிப்பிடுகிறார்.

14 (இந்த ஊழியங்களின் பலனாக) நாம் இனி குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்…..

ஒன்று, சபையானது இந்த ஊழிய வரங்களின் பலன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், தேவனுடைய ஜனங்கள் இன்னும் சிறு குழந்தைகளாகத்தான் இருப்பார்கள். அப்படித்தான் நான் விசுவாசிக்கிறேன். ஆவிக்குரிய வளர்ச்சியை அவர்கள் ஒருபோதும் அடைய மாட்டார்கள். வேதாகமத்திற்கு முரண்பட்ட பல்வேறு போதனைகளினால், காற்றினால் அலசடிபடுகிறவர்கள்போல அங்குமிங்கும் அவர்கள் அலசடிபடுவார்கள். வஞ்சகங்களுக்கும், தந்திரங்களுக்கும் அவர்கள் எப்பொழுதும் இரையாகிக் கொண்டே இருப்பார்கள். இந்த இரண்டு வாய்ப்புகளைத் தவிர வேறு ஏதும் அங்கு இருப்பதாக நான் விசுவாசிக்கவில்லை.

பிறகு பவுல் தேவனுடைய ஆக்கப்பூர்வமான, உண்மையான நோக்கத்தைக் குறித்து எழுதுகிறார்:

15 அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார். 16 அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன் தன் அளவுக்குத் தக்கதாய் கிரியை செய்கிறபடியே, அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீர வளர்ச்சியை உண்டாக்குகிறது.

இந்த வேதப்பகுதியில், பவுல் சபையை இரண்டு காரியங்களோடு ஒப்பிட்டுப் பேசுகிறார். ஒரு கட்டிடம் மற்றும் ஒரு சரீரம் என்ற நமக்குத் தெரிந்த இரண்டு காரியங்கள்தான் அவை. ஊழிய வரங்களின் நோக்கங்களைக் குறித்துப் பேசும்போது, அவர் இவ்விரண்டையும் பயன்படுத்துகிறார். கட்டிடத்தைக் கட்டியெழுப்புவதும், கிறிஸ்துவின் சபையாகிய சரீரத்தை பூரண வளர்ச்சியடையச் செய்வதும்தான் இந்த ஊழிய வரங்களின் நோக்கங்களாய் இருக்கின்றன. இந்த ஐந்து அத்தியாவசியமான ஊழியங்கள், அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள் மற்றும் போதகர்கள் என்பவர்கள் செய்கிற ஊழியங்களாகும். அவர்கள் செய்ய வேண்டிய நான்கு முக்கியமான பணிகளைக் குறித்து பவுல் இங்கு சொல்கிறார். முதலில், விசுவாசிகள் தங்களுடைய பணியை நிறைவாய் செய்து முடிக்கும்படி அவர்களை தயார் செய்வதாகும். இரண்டாவது, சரீரத்தைக் கட்டியெழுப்புவதாகும். மூன்றாவதாக, எல்லோரையும் ஒருமனப்பாட்டிற்குள் கொண்டு வருவதாகும். நான்காவதாக, முழுமையான, நிறைவான பூரண வளர்ச்சியை உருவாக்குவதாகும்.

நான் இந்த நான்கு பணிகளையும் திரும்பவும் சொல்லப் போகிறேன். அவை மிகவும் முக்கியமானவை.

1. விசுவாசிகள் தங்களுடைய பணிகளை நிறைவாய் செய்து முடிக்கும்படி அவர்களை ஆயத்தப்படுத்துவதாகும்.

2. சரீரத்தைக் கட்டியெழுப்புவதாகும்.

3. எல்லோரையும் ஒருமனப்பாட்டிற்குள் கொண்டு வருவதாகும்.

4. நிறைவான, பூரண வளர்ச்சியை உருவாக்குவதாகும்.

இப்பொழுது இந்த ஐந்து ஊழியங்களில், முதல் இரண்டு ஊழியங்கள், அதாவது அப்போஸ்தல மற்றும் தீர்க்கதரிசன ஊழியங்கள் பிரதானமானவை. இந்த ஊழியங்களுக்கு இரண்டு முக்கியமான பொறுப்புகள் இருக்கின்றன. ஒன்று, ஒரு சபைக்கு அஸ்திபாரம் போடுவதாகும். இரண்டாவது, சபைக்கு வெளிப்பாட்டைக் கொடுக்கிற ஒரு ஊடகமாக இருப்பதாகும். இந்தப் பொறுப்புகளைக் குறித்து, பவுல் எபேசியர் நிருபத்தில் இன்னொரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறார். எபேசியர் 2:20-ல், அவர் சொல்கிறார், “விசுவாசிகளாகிய நாம் அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டவர்களாயிருக்கிறோம். அதற்கு இயேசுகிறிஸ்துதாமே மூலைக்கல்லாயிருக்கிறார்.” ஆக, கிறிஸ்து மூலைத் தலைக்கல்லாய் இருக்க, சபைகளெல்லாம் அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளை தங்களுடைய அஸ்திபாரமாகக் கொண்டு கட்டப்படுகின்றன.

வெளிப்பாட்டைக் குறித்துப் பேசும்போது, எபேசியர் 3:6-ம் வசனத்தில் பவுல் இவ்வாறு சொல்கிறார்:

6 இந்த இரகசியம் (கிறிஸ்துவைக் குறித்த இரகசியம்) இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும், தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை.

ஆக, சபையைக் குறித்த தேவனுடைய திட்டத்தின் இரகசியம், அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைத்தான் இவ்வசனம் சொல்கிறது. இதை நாம் வேறு வார்த்தைகளிலும் சொல்லலாம். அப்போஸ்தலர்கள், சபையைக் கட்டியெழுப்புகிற கட்டிடக்கலைஞர்களாக, கட்டிடத்தை வடிவமைக்கிறவர்களாக இருக்கின்றனர்.

இன்றைக்கு நாகரீகம் நன்கு வளர்ந்திருக்கிற பட்டணங்களில், ஒருவர் ஒரு கட்டிடத்தைக் கட்டுவதற்கு அனுமதி பெற வேண்டுமென்றால், முதலில் அந்தக் கட்டிடத்திற்கான திட்டத்திற்கு ஒப்புதலையும், கையொப்பத்தையும் ஒரு கட்டிடக்கலைஞரிடமிருந்து பெற வேண்டும். ஒரு கட்டிடக் கலைஞரின் வேலைதான் என்ன? எளிமையாகச் சொன்னால், அஸ்திபாரத்திலிருந்து மேற்கூரை வரை ஒரு கட்டிடத்தைக் கட்டியெழுப்புவதற்கு, அதன் ஒவ்வொரு கட்டத்திலும் என்னவெல்லாம் தேவை என்பதை அவர் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்லலாம். கட்டுமானப் பொருட்கள், பல்வேறு அளவுகள், மின்சார இணைப்பு – குழாய் இணைப்புக்குத் தேவையான பல்வேறு காரியங்கள், இன்னும் பல விஷயங்கள் இதில் அடங்கியிருக்கிறது. இதை அவர் ஒரு தொழிலாகச் செய்கிறார். இதற்குத் தேவையான பயிற்சியையும் அவர் பெற்றிருக்கிறார். இந்த ஒரு நபர்தான், அந்த எல்லாக் காரியங்களுக்கும் பொறுப்பானவராக, பதில் சொல்ல வேண்டியவராக இருக்கிறார். ஒரு கட்டிடத்திற்கு கட்டிடக்கலைஞர் எவ்வளவு முக்கியமானவரோ, ஆவிக்குரிய விதத்தில், அப்போஸ்தலர் என்பவர் அதைக் காட்டிலும் மிக முக்கியமானவராய் இருக்கிறார்.

இன்னொரு பக்கத்தில், தீர்க்கதரிசிகள், தேவனுடைய திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு புதிய சூழ்நிலையிலும் தேவைப்படுகிற வெளிப்பாடு எனும் புதிய எண்ணையை கொடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறார்கள். சகரியா புத்தகத்தில், சபையானது ஏழு கிளைகளைக் கொண்ட ஒரு அழகான விளக்குத்தண்டாக படம் பிடித்துக் காண்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த விளக்குத்தண்டின் இரண்டு பக்கமும், இரண்டு ஒலிவ மரங்கள் இருக்கின்றன. பொன்னினால் செய்யப்பட்ட குழாய்கள் மூலமாக, அதிலிருந்து புத்தம் புதிய எண்ணெய் விளக்குத்தண்டிற்குள் வருகின்றது. “இந்த இரண்டு ஒலிவ மரங்களும் எதைக் குறிக்கின்றன?” என்று சகரியா தீர்க்கதரிசி கேட்டபோது, அவை அபிஷேகம் பெற்ற இருவரை, சபையாகிய விளக்குத்தண்டிற்கு வருகிற இரண்டு எண்ணைய்க் குழாய்களைக் குறிக்கிறது என்று அவனுக்குச் சொல்லப்பட்டது (சகரியா 4:14). வெளிப்படுத்தின விசேஷத்தில், இந்த ஒலிவமரங்கள் திரும்பவும் ஒரு அடையாளமாக எழுதப்பட்டிருக்கின்றன. இவை இங்கே தீர்க்கதரிசிகள் என்றே குறிப்பாக சுட்டிக் காண்பிக்கப்பட்டு எழுதப்பட்டிருக்கின்றன (வெளிப்படுத்தல் 11). ஆக, சபையாகிய விளக்குத்தண்டிற்கு தொடர்ந்து இடைவிடாமல் புத்தம்புதிய எண்ணெயைக் கொடுக்கிற ஒரு ஒலிவமரமாய் தீர்க்கதரிசியின் ஊழியம் இருக்க வேண்டும். அப்பொழுது தண்டிலிருக்கும் விளக்கு எப்பொழுதும் பிரகாசமாக, தெளிவாக எரிந்து கொண்டே இருக்கும். காரணம், புத்தம் புதிய எண்ணெய் அதற்குத் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும்.

தீர்க்கதரிசி கொடுக்கிற அந்தப் புத்தம் புதிய எண்ணெய் என்பது, தேவனுடைய நோக்கத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் குறித்து தொடர்ச்சியாய் கொடுக்கப்படுகிற வெளிப்பாடாகும். ஒவ்வொரு சூழ்நிலையைக் குறித்தும் தேவனுடைய சிந்தையில் என்ன இருக்கிறது, தேவனுடைய வழிகாட்டுதல் என்ன என்பதை அது வெளிப்படுத்துகிறது. தேவனுடைய திட்டத்தில் மாற்றம் வரும்போது, சபை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய புதிய திசையைக் குறித்த எண்ணம் தேவனுக்குள் இருக்கும்போது, சபைக்கு, அதாவது தேவனுடைய ஜனங்களுக்கு அதை அறிவிப்பதுதான் தீர்க்கதரிசியின் ஊழியமாகும்.

நீதிமொழிகள் 29:18 சொல்கிறது, “தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப் போவார்கள்” இது தீர்க்கதரிசி கொடுக்கிற தரிசனத்தை மிகவும் குறிப்பாக சுட்டிக் காண்பித்துப் பேசுகிறது. புத்தம்புதிய தொடர்ச்சியான அப்பொழுதைக்கு அப்பொழுது கிடைக்க வேண்டிய தீர்க்கதரிசன தரிசனம் இல்லாமல் தேவனுடைய ஜனங்கள் நிறைந்த சபையினால் வாழ முடியாது. ஒரு மதம் அதைச் செய்யாது. இந்தத் தரிசனமில்லாத சபையினால், விளக்குத்தண்டின் விளக்கை பிரகாசமாகத் தொடர்ந்து எரிய வைக்க முடியாது. இதை வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கிற தேவனுடைய ஜனங்களின் வரலாறும், சபையின் வரலாறும் திரும்பத் திரும்ப நிரூபித்திருக்கின்றன. தரிசனம் அத்தியாவசியமானது. தரிசனம் எப்பொழுது புத்தம்புதியதாய் இருக்க வேண்டும். அது எப்பொழுதும் தொடர்ச்சியாக, அப்பொழுதைக்கு அப்பொழுது கிடைத்துக் கொண்டே வேண்டும். தேவனுடைய நோக்கத்தின் ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஒவ்வொரு கட்டத்திலும் அவர் தம்முடைய ஜனங்களுக்கென்று ஒரு குறிப்பான வழிகாட்டுதலையும், ஒரு குறிப்பான வார்த்தையையும் வைத்திருக்கிறார். ஆகையால் கிறிஸ்து, அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள், போதகர்கள் என்ற ஐந்து முக்கியமான ஊழியங்களைக் கொடுத்திருக்கிறார். அவருடைய சபையைக் கட்டியெழுப்பி, அவருடைய சரீரத்தை பரிபூரண வளர்ச்சியடையச் செய்ய வேண்டிய பொறுப்பு இந்த ஐந்து முக்கியமான ஊழியங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இன்றைக்கு சபையின் நிலையைப் பார்த்தால், உண்மையில், ஐந்தில் மூன்று ஊழியங்கள் மட்டுமே செயல்படுவதை நாம் பார்க்க முடியும். சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள், போதகர்கள் என்ற இந்த மூன்று ஊழியங்களைத்தான் நாம் பார்க்கிறோம். சபையின் இன்றைய நிலையை ஒரு எளிமையான எடுத்துக்காட்டைக் கொண்டு சொன்னால், ஐந்து சிலிண்டர்களோடு வடிவமைக்கப்பட்ட ஒரு கார் மூன்று சிலிண்டர்களில் மட்டுமே ஓடுகிறது என்று சொல்லலாம். அது நகருமா என்றே சந்தேகமாக இருக்கிறது. இது ஒரு சுவாரசியமான செய்தி. சமீபத்தில் ஜெர்மனியில், ஐந்து சிலிண்டர்களைக் கொண்ட ஒரு காரை புதிதாக வடிவமைத்திருக்கிறார்கள். இதற்கு ஆகும் கேஸ் எரிபொருள் செலவு மிக மிகக் குறைவு. ஒருவேளை, அதினால்தானோ, என்னவோ, கர்த்தரும் தம் வாகனத்தை ஐந்து சிலிண்டர்களைக் கொண்டதாக வடிவமைத்திருக்கிறார். ஒன்று மட்டும் நிச்சயம். வெறும் மூன்று சிலிண்டர்களைக் கொண்டு, அதனால் ஒழுங்காக ஓட முடியாது.

இங்கு நாம் ஒரு உண்மையை நம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். தேவன் தம்முடைய நிபந்தனைகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய மனுஷர்கள் மூலமாகத்தான் கிரியை செய்ய வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார். “வழிமுறைகளை அல்ல, மனுஷர்களைத்தான் தேவன் பயன்படுத்துகிறார்.” என்று ஒருவர் சொன்னார். நான் இதைத் திருத்தியமைத்து, “மனுஷர்கள்தான் தேவனுடைய வழிமுறைகளாய் இருக்கிறார்கள்,” என்று சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். தேவன் ஆயத்தப்படுத்தி, பயிற்றுவித்து, பயன்படுத்தக்கூடிய நபர்களாய் அவர்கள் இருக்கிறார்கள்.

எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் விடுதலையாகிய நிகழ்வு, இதற்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டாய் இருக்கிறது. இஸ்ரவேல் ஜனங்கள் அடிமைத்தனத்தில் ஒடுக்கப்பட்டு பரிதாபமான நிலையில் விடுதலைக்காகவும், இரக்கத்திற்காகவும் பல நூறு வருடங்களாக தேவனை நோக்கி கதறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் தேவன் தாம் பயன்படுத்தக்கூடிய ஒரு மனுஷனை அவர் ஆயத்தம் செய்யும்வரை, அவர் அவர்களை விடுதலை செய்யும்படி இறங்கவில்லை. அந்த மனுஷனாகிய மோசேயை ஆயத்தப்படுத்துவதற்கு அவருக்கு 80 வருடங்கள் ஆனது. இன்று சபையிலும், தேவனுடைய ஜனங்களின் வாழ்க்கையிலும் அதுதான் உண்மை என்று நான் விசுவாசிக்கிறேன். தேவன் தம்முடைய நோக்கங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று முன்குறித்திருக்கிற அந்த மனுஷன் இல்லாமல், அவர் முக்கியமான காரியங்கள் எதையும் செய்ய மாட்டார்.

சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை புதுப்பித்தலுக்குத் தேவையான மூன்றாவது முக்கிய அம்சமான ஒழுங்கான ஆவிக்குரிய அரசாங்கம் அல்லது அதிகாரத்தைப் பற்றி பேசப் போகிறேன்.

லைக்
பகிரவும்