விசுவாசம்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: செப்டம்பர் 2026
Read Time: 9
விசுவாசத்திற்கும் உண்மைத்தன்மைக்கும் இடையிலான பிரிக்க முடியாத பிணைப்பைக் கண்டறியுங்கள். இவை கர்த்தருடைய பார்வையில் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். 'ஆவியின் கனி' தொடரின் 8-ஆம் பாகத்தில், டெரெக் பிரின்ஸ் கிறிஸ்தவ வாழ்வின் இந்த முக்கிய அம்சத்தை வேதாகமத்தின் அடிப்படையில் விளக்குகிறார். உண்மையான விசுவாசம் எவ்வாறு உறுதியான உண்மைத்தன்மைக்கு வழிவகுக்கிறது என்பதை அறிந்து, பரிசுத்த ஆவியின் இந்த அவசியமான கனியை உங்கள் வாழ்வில் வளர்த்துக் கொள்ளுங்கள்.
Transcript
மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. கடந்த வாரமும், இந்த வாரமும் ஆவியின் கனியைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். நேற்று நான் நற்குணத்தின் கனியைக் கையாண்டேன். இன்று நான் விசுவாசத்தின் கனியைப் பற்றி பேசப் போகிறேன்.
சிறிது நேரத்திற்கு முன்பு, ஆவியின் வரங்களைப் பற்றிய எனது பேச்சில், புதிய ஏற்பாட்டில் நாம் காணும் விசுவாசத்தின் மூன்று வடிவங்களைப் பற்றி விளக்கினேன். நான் சுருக்கமாக திரும்ப சொல்கிறேன். முதல் வகையான விசுவாசத்தை, நான் “வாழ்வதற்கான விசுவாசம்” என்று அழைக்கிறேன். இந்த வகையான விசுவாசம் தான் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ நமக்கு உதவுகிறது. இது கிறிஸ்தவ வாழ்க்கைக்கான உந்துதலையும், வல்லமையும் வழங்கும் தேவனுடனான நிரந்தர தனிப்பட்ட உறவை அடிப்படையாகக் கொண்டது.
இரண்டாவது வகையான விசுவாசம், ஆவியின் மற்ற வரங்களுடன் பட்டியலிடப்பட்ட விசுவாசத்தின் வரமாகும். இது தேவனின் சொந்த விசுவாசம், இயற்கைக்கு அப்பாற்பட்ட விசுவாசம், பரிசுத்த ஆவியானவரால் தேவைப்படும் சூழ்நிலையில் இறையாண்மையாக நமக்கு வழங்கப்பட்டது.
மூன்றாவது வகையான விசுவாசம், விசுவாசத்தின் கனி, குணத்தின் ஒரு அம்சமாகும், அது கவனமாக வளர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். இப்போது நான் இன்று விசுவாசத்தின் கனியைத்தான் பேசப் போகிறேன்.
இந்த குறிப்பிட்ட கனியை மொழிபெயர்க்க இரண்டு வெவ்வேறு வழிகள் உள்ளன. சில பதிப்புகளில், இது “விசுவாசம்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, மற்றவற்றில் இது “உண்மைத்தன்மை (நம்பத்தகுந்த)” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கிரேக்க வார்த்தை உண்மையில் “விசுவாசம்” என்பதற்கான சாதாரண புதிய ஏற்பாட்டு வார்த்தையாகும், இது புதிய ஏற்பாட்டில் 100 முறைக்கு மேல் வருகிறது. இரண்டு மொழிபெயர்ப்பும் முறையானது, ஆனால் இரண்டும் முழுமையானதல்ல. இந்த வார்த்தையின் அர்த்தம், உண்மையில், விசுவாசம் மற்றும் உண்மைத்தன்மை என்பதை குறிக்கும். உண்மையில், விசுவாசத்திற்கும் உண்மைத்தன்மைக்கும் இடையிலான நமது சிந்தனையில் உள்ள பிரிவு ஓரளவு செயற்கையானது. ஏனெனில், வேதாகமத்தின் மூல மொழியில் விசுவாசம் என்பது உண்மைத்தன்மையை உள்ளடக்கியது, மேலும், உண்மைத்தன்மை இல்லாமல் விசுவாசம் சாத்தியமற்றது.
இரண்டிலும், முக்கிய சிந்தனை “சார்ந்திருப்பது” என்ற வார்த்தையில் உள்ளது. இரண்டு பக்கங்களைக் கொண்ட ஒற்றை நாணயம் போல் நீங்கள் நினைக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். ஒருபக்கம் விசுவாசம், மறுபக்கம் உண்மைத்தன்மை. ஆனால் இரண்டிலும், திறவுகோல் “சார்ந்திருப்பது” என்ற வார்த்தையில் உள்ளது.
முதலில், ஒரு பக்கத்தை எடுத்துக் கொள்வோம், அதை நாம் “விசுவாசம்” என்று அழைப்போம். விசுவாசம் என்பது ஒவ்வொரு சந்தர்பங்களிலும், சூழ்நிலைகளிலும் தேவனை சார்ந்திருக்கக் கற்றுக்கொள்வதாகும். மறுபுறம், அதன் மறுபக்கத்திலுள்ள “உண்மைத்தன்மை” என்பது நம்பகமானவராக இருப்பது, மற்றவர்கள் சார்ந்திருக்கக்கூடிய நபராக இருப்பது, இது தேவன் மற்றும் மக்கள் ஆகிய இருவரையும் உள்ளடக்கியது. ஆகவே, முதலில் விசுவாசத்தைப் பற்றி கொஞ்சம் கூறுகிறேன்.
விசுவாசம் என்பது தேவனின் உண்மைத்தன்மையில் அமைதியாக, நிலையானதாக, தொடர்ந்து நம்பிக்கை வைப்பதாகும். விசுவாசத்தின் கனியானது பதறாது, பதைபதைக்காது, வெற்றியை இழக்காது, பின்வாங்கவும், விட்டுவிடவும் நினைக்காது. இது ஒரு அமைதியான, நிலையான, தடையற்ற, மற்றும் தேவன் மீது தொடர்ந்து நம்பிக்கை கொண்டதாகும். இந்த நம்பிக்கை மனப்பான்மைக்கு போதுமான வேத அடிப்படை ஒன்று உள்ளது. இது ரோமர் 8:28 இல் காணப்படுகிறது:
28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
சரி, எல்லாமே நமக்கு நன்மைக்காக ஒன்றாகச் செயல்படுகின்றன என்பதை நாம் அறிந்தால், நம்பிக்கையைத் தவிர வேறு எதையும் செய்ய எந்த காரணமும் இல்லை. முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் தேவனின் நிபந்தனைகளை சந்திக்கிறோம் என்பதை நாம் அறியவேண்டும். இப்போது தேவனின் நிபந்தனைகள் என்னவென்றால், நாம் அவருக்கு அர்ப்பணிப்புடன் இருந்து, நம் வாழ்க்கைக்கான அவரது நோக்கத்தில் செல்வதாகும். நாம் தேவனுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பதிலும், நம் வாழ்விற்கான அவருடைய நோக்கத்தில் செல்வதிலும் உறுதியாக இருந்தால், என்ன நடந்தாலும், அது நம் நன்மைக்காக ஒன்றாகச் செயல்பட தேவன் ஏற்படுத்தப் போகிறார் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். எனவே அச்சமடைய அல்லது உங்கள் நம்பிக்கையை கைவிட எந்த காரணமும் இல்லை.
இப்போது, இதற்கான திறவுகோல் அர்ப்பணிப்பாகும். நான் 2 தீமோத்தேயு 1:12 லிருந்து படிக்க விரும்புகிறேன். முதலில் நான் பின்னணியில் உள்ளதை சொல்லுகிறேன். இந்த நிருபம் பவுலின் வாழ்க்கையின் முடிவில் எழுதப்பட்டது. அவர் ரோமானிய சிறையில் கைதியாக இருந்தார், அவர் வயதானவர், அவர் ஒருவித வலியால் அவதிப்பட்டார், அவருக்கு போதுமான வெப்ப உடை இல்லை (அவர் தனது குளிர்கால ஆடையைக் கொண்டுவரும்படி தீமோத்தேயுவுக்கு கடிதம் எழுதினார்). அவர் நீரோ என்ற கொடுங்கோலரின் கைகளில் விசாரணையின் சாத்தியமான மரணதண்டனைக்காக காத்திருந்தார். அவருடைய உண்மையுள்ள நண்பர்களில் சிலர் அவரைக் கைவிட்டார்கள். அவரை ஊக்கப்படுத்துவதற்கான சூழ்நிலை எதுவும் இல்லை. இருந்தபோதிலும், அவர் எழுதியது இதுதான்:
12 அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அநுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்பட்டுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்.
அங்குள்ள முக்கிய வார்த்தை “நம்பகமானது” ஆகும். கிங் ஜேம்ஸ் பதிப்பில் “ஒப்படைப்பு” என்று கூறுகிறது, ஆனால் எந்த வார்த்தையும் சமமாக சரியானதுதான். நம்பிக்கையின் திறவுகோல் நம்புதல் ஆகும். எந்த ஒரு மறைவும் இல்லாமல், முழுவதுமாக தேவனின் கைகளில் கொடுத்துவிட்டால், அதுதான் நம்புதல் ஆகும், அதுதான் ஒப்படைப்பாகும். பின்பு, உங்களை தொடர்ந்து வரும் அனைத்தும், தேவன் உங்களுக்காக சிறப்பாக செயல்படுகிறார் என்பதை நீங்கள் உறுதியாக அறியலாம். எனவே, நம்பிக்கையானது நம்புவதில் இருந்து வருகிறது.
இப்போது நான் நாணயத்தின் எதிர்பக்கத்தை கருத்தில் கொள்ளபோகிறேன்: “உண்மைத்தன்மை,” நம்பகமானதாக இருப்பது. வேதாகமத்தில் மீண்டும் மீண்டும் கூறப்பட்ட ஒரு உண்மையை நாம் பிடித்துக் கொள்ள வேண்டும். தேவன் உண்மையுள்ளவர். நான் நம்புகிறேன், நான் பூமியை விட்டு வெளியேறி, தேவன் என்னை வீட்டிற்கு அழைக்கும்போது, நான் விட்டு செல்லும் ஒரு சாட்சி இருந்தால், எனது குடும்பத்தினருக்கும், என்னைப் பின்தொடருபவர்களுக்கும் நான் விட்டுச் செல்ல விரும்பும் ஒரு எளிய செய்தி இருந்தால், அதை அந்த மூன்று வார்த்தைகளில் சுருக்கமாகக் கூறுவேன்: தேவன் உண்மை உள்ளவர்.
அவருடைய உண்மைத்தன்மையை என் வாழ்வில் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளேன். தேவன் உண்மையுள்ளவர் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இப்போது உண்மைத்தன்மையின் கனியானது, தேவன் தம்முடைய உண்மைத்தன்மையை உங்களில் செயல்படுத்த அனுமதிப்பதாகும். அதற்கு பயிற்சி தேவை என்பதை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அது அப்படியே நடந்துவிடாது. நான் சொன்னது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா, எல்லா கனிகளும் பயிரிடப்பட வேண்டும். உண்மைத்தன்மையின் கனியை விட அதிகமாக பயிரிட வேண்டிய கனி எதுவும் இல்லை, அது சிறிய விஷயங்களில் தொடங்குகிறது. லூக்கா 16:10 இல், இயேசு சொல்வதைக் கேளுங்கள்:
10 கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.
உண்மைத்தன்மை என்பது மிகச் சிறிய விஷயங்களில் தொடங்குகிறது. அதனால் பலர் தவறான எண்ணத்தை பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஒப்பீட்டளவில் சிறிய பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன – அது வேலையில் இருக்கலாம் அல்லது அது அவர்களின் குடும்பத்தில் இருக்கலாம் – அவர்களின் அணுகுமுறை என்னவென்றால், “சரி, இது மிகவும் சிறிய விஷயம்தான், இதில் அதிக கவனம் செலுத்துவதற்கு மதிப்புக்குரியது அல்ல. இப்போதும் பெரிய முக்கியமான ஏதாவது ஒன்று எனக்கு ஒப்படைக்கப்பட்டால், நான் எப்படிப்பட்ட நபர் என்பதைக் காட்டுவேன்.” நான் உங்களைத் திருத்துகிறேன். சிறிய, வெளிப்படையான, முக்கியமற்ற பொறுப்பை நீங்கள் பொறுப்பேற்கும்போது, நீங்கள் எப்படிப்பட்ட நபர் என்பதை நீங்கள் தெளிவாகக் காட்டுகிறீர்கள். அங்குதான் உங்கள் குணம் சோதிக்கப்படுகிறது. தேவனுடைய ராஜ்யத்தில், நீங்கள் சிறிய விஷயங்களில் உண்மையாக இல்லாவிட்டால், நீங்கள் ஒருபோதும் பெரிய விஷயங்களுக்கு உயர்த்தப்பட மாட்டீர்கள். எனவே, இப்போதே உங்களை நீங்களே சரிபார்க்க வேண்டும். நீங்கள் எவ்வளவு உண்மையுள்ளவர்கள்? நீங்கள் எவ்வளவு நம்பகமானவர்?
நான் உங்களிடம் நான்கு தனிப்பட்ட கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். முதலில், உங்கள் குழந்தைகளுக்கு அல்லது உங்கள் மனைவிக்கு நீங்கள் வாக்குறுதிகளை அளித்து, பின்னர் அவற்றை மீறினீர்களா? உங்களுக்கு தெரியுமா, எனது சில கிறிஸ்தவ நண்பர்களைப் பற்றி நான் கவனித்த ஒரு விஷயம் என்னவென்றால், அவர்கள் தங்கள் மனைவிகளைக் காட்டிலும் தங்கள் பணியாளர்களுக்கு தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் மிகவும் உண்மையுள்ளவர்களாக இருக்கிறார்கள். சரி, அது உண்மைத்தன்மை அல்ல.
இரண்டாவது கேள்வி: சந்திப்புகளுக்கு தாமதமாக செல்கிறீர்களா? நீங்கள் கவனிக்க வேண்டிய ஒன்று: தேவன் ஒருபோதும் தாமதிப்பதில்லை. தேவனின் சூரியன் ஒருபோதும் தாமதமாக உதிப்பதும் இல்லை, தாமதமாக மறைவதும் இல்லை. அது எப்போதும் சரியான நேரத்தில் இருக்கும். இந்தப் பிரபஞ்சத்தில் தேவன் பொறுப்பாயிருக்கும் அனைத்தும் நேரந்தவறாதவை. நீங்கள் நேரந்தவறினால், நீங்கள் தேவனின் உண்மைத்தன்மையைக் காட்டவில்லை.
மூன்றாவது கேள்வி: உங்கள் பில்களை தாமதமாக செலுத்துகிறீர்களா? நீங்கள் சொல்லலாம், “சரி, நான் மிகவும் முயற்சி செய்தேன். நான் கவனிக்க வேண்டிய இன்னும் பல விஷயங்கள் இருந்தன.” ஆனால், உங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் பற்றி என்ன? ஒருவேளை அவர்களும் முயற்சிசெய்திருக்கலாம். உங்கள் பில்களை செலுத்துவதில் மெதுவாகவும், மந்தமாகவும் இருப்பது தேவனின் உண்மைத்தன்மையைக் காட்டுவதல்ல. நான், கடந்த காலங்களில், பல்வேறு கிறிஸ்தவ புத்தகக் கடைகள் மூலம் எனது சில புத்தகங்களை சில்லறை விற்பனை செய்துள்ளேன். அவர்களில் சிலருக்கு மிகவும் விருப்பார்வ (ஆடம்பரமான) பெயர்கள் இருந்தன, பொதுவாக இயேசு என்ற பெயர் அதில் எங்காவது இருக்கும். ஆனால், உங்களுக்குத் தெரியுமா, அந்த விருப்பார்வ பெயர்களைக் கொண்ட அந்த புத்தகக் கடைகளில் சில அவர்களின் கணக்கில் பணம் செலுத்துவதில் பெரும்பாலும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் தாமதமாக இருப்பார்கள். அது உண்மைத்தன்மையல்ல.
நான்காவது கேள்வி: நீங்கள் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறீர்களா? சங்கீதம் 37:21 இல் என்ன சொல்கிறது தெரியுமா?
21 துன்மார்க்கன் கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறான்….
இப்போது, கோபப்பட வேண்டாம். நீங்கள் துன்மார்க்கன் என்று நான் சொல்லவில்லை. ஆனால், நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருந்து, நீங்கள் கடன் வாங்கி அதைத் திரும்பச் செலுத்தாமல் இருந்தால், உங்கள் வாழ்க்கையில் தேவனின் உண்மைத்தன்மையை பிரதிபலிக்காத ஒரு பகுதி அது. நீங்கள் என்னிடம், “சரி, நீங்கள் பணத்தைப் பற்றி அதிகம் பேசுகிறீர்கள். பணம் முக்கியமில்லை. பணம் ஆவிக்குரிய காரியமல்ல” என்று சொல்லலாம். பணம் ஆவிக்குரியதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அது மிகவும் முக்கியமானது என்று நான் உங்களுக்கு சொல்கிறேன். உண்மையில் நாம் பணத்தை எவ்வாறு கையாள்கிறோம் என்பது நமது உண்மைத்தன்மையின் அமில சோதனையாகும். லூக்கா 16:11 இல், இயேசு சொல்வதைக் கேளுங்கள்:
11 அநீதியான உலகப்பொருளைப்பற்றி [அது பணத்திற்கான பைபிளில் சொல்லப்படும் பெயர்] நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?
நீங்கள் பார்க்கலாம், உண்மைத்தன்மை என்பது சிறிய விஷயங்களில் தொடங்குகிறது, பெரிய விஷயங்களில் அல்ல. இது உலகப்பொருளின் விஷயங்களில் தொடங்குகிறது, ஆவிக்குரிய விஷயங்களில் அல்ல. நீங்கள் சிறிய விஷயங்களில் உண்மையாக இருந்தால், பெரிய விஷயங்களை தேவன் உங்களுக்கு ஒப்படைப்பார். நீங்கள் பொருளில் – பணத்தில், நிதியில், உங்கள் நிதியால் உங்கள் தசமபாகம் மற்றும் காணிக்கைகள் மூலம் தேவனைக் கனம்பண்ணுவதில் உண்மையாக இருந்தால், அப்போது தேவன் உங்களுக்கு உண்மையான ஆவிக்குரிய செல்வத்தை ஒப்படைப்பார்.
ஆனால், அது விசுவாசமாக இருந்தாலும் சரி, உண்மைத்தன்மையாக இருந்தாலும் சரி, முக்கியமானது அர்ப்பணிப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எல்லாம் சரி, இன்றைக்கு எங்களின் நேரம் முடிந்துவிட்டது, ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். ஆவியின் கனியின் இந்த தலைப்பில் நான் தொடரப்போகிறேன். நாளை நான் சாந்தத்தின் கனியைக் கையாள்வேன்.
குறியீடு: RP-R010-103-TAM









