அத்தி மரமும் திராட்சைக்கொடியும்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 9
'மீட்பு' தொடரின் இரண்டாம் பகுதியான 'அத்திமரமும் திராட்சைக்கொடியும்' என்பதில் தேவன் தமது மக்களுக்காக வைத்துள்ள மேலான திட்டத்தைக் கண்டறியுங்கள். உலகக் குழப்பங்களுக்கு மத்தியில், தேவனின் நோக்கம் "மீட்பு" - அதாவது தமது மக்களை மீண்டும் சரியான இடத்திலும் நிலையிலும் நிலைநிறுத்துவதே என்பதை டெரெக் பிரின்ஸ் விளக்குகிறார். வேதாகமத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தச் செய்தி, நம்பிக்கையையும் தேவனுடைய வார்த்தையைப் பற்றிய ஆழமான புரிதலையும் வழங்குகிறது.
Transcript
இன்றைய உலகச் சூழ்நிலையை ஊடகங்களின் பார்வையிலிருந்து அல்ல, தேவனுடைய கண்ணோட்டத்திலிருந்து நாம் ஒன்றாகத் தொடர்ந்து பார்க்கும்போது, மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது.
இந்த உலகத்தின் ஒட்டுமொத்த சூழ்நிலையைப் பார்க்கும்போது, அது அமைதியற்ற, அங்குமிங்கும் அலசடிபடுகிற ஒரு கடலை நம் நினைவுக்குக் கொண்டு வருகிறது. பலத்த சூறாவளி அங்கே அடிக்கிறது. வலிமையான நீரோட்டங்கள் ஒன்றையொன்று எதிர்த்து நிற்கின்றன. நம்முடைய புரிந்துகொள்ளுதலுக்கும், கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்ப்பட்ட சக்திகள் அங்கே கட்டவிழ்த்து விடப்பட்டதுபோல இருக்கிறது. இருந்தாலும், அவை எல்லாவற்றின் மத்தியிலும் தேவன் தம்முடைய முக்கியமான திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். வரலாறு தன் ஓட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே, தேவன் அத்திட்டத்தை தன் மனதில் உறுதியாய் நிலைவரப்படுத்தியிருந்தார். இதையெல்லாம் நான் நேற்று சொன்னேன்.
தேவனுடைய திட்டம், அவருடைய ஜனங்களை மையமாகக் கொண்டிருக்கிறது. அவர் தம் உடன்படிக்கையினால் தம்மை அவர்களுக்கு அர்ப்பணித்திருக்கிறார். அவர்களும் அவரிடத்தில் தங்களை உண்மையாகவே அர்ப்பணித்திருக்கிறார்கள். இந்த நிபந்தனைகளை நிறைவேற்றுகிற இந்த ஜனங்களுக்கு, தேவனுடைய உச்சகட்ட நோக்கம் எப்பொழுதும் நன்மையாகவே இருக்கிறது. இதை ஒரு வார்த்தையில் தொகுத்துச் சொல்லலாம்: “புதுப்பித்தல்” என்ற வார்த்தைதான் அது.
நான் தொடர்ந்து செல்வதற்கு முன், புதுப்பித்தல் என்றால் நான் என்ன அர்த்தத்தில் சொல்கிறேன் என்பதை விளக்கிச் சொல்லி விடுகிறேன். புதுப்பித்தல் என்றால், ஒரு காரியத்தை திரும்பவும் அதற்குரிய சரியான இடத்தில், அதற்குரிய சரியான நிலையில் வைப்பதாகும். ஒரு காரியத்தை புதுப்பித்தல் செய்ய வேண்டும் என்ற அந்த உண்மை, அந்தக் காரியம் அதற்குரிய சரியான இடத்திலும், அதற்குரிய சரியான நிலையிலும் இல்லை என்பதைச் சுட்டிக் காண்பிக்கிறது. இப்பொழுது நாம் இந்த விளக்கத்தை தேவனுடைய ஜனங்களுக்குப் பொருத்திப் பார்ப்போம்.
முடிவு காலத்திற்கான தேவனுடைய நோக்கம், அவருடைய ஜனங்களை அவர்களுக்குரிய தகுதியான இடத்திலும், அவர்களுக்குரிய தகுதியான நிலையிலும் திரும்ப வைப்பதாகும்.
தம்முடைய ஜனங்களுக்காக தேவன் வைத்திருக்கிற முடிவு கால திட்டத்தின் ஒட்டுமொத்த படத்தைப் பார்க்கும்படி, நான் யோவேலின் தீர்க்கதரிசனப் புத்தகத்திற்குத் திரும்பப் போகிறேன். யோவேல் புத்தகம், ஒப்பீட்டளவில் ஒரு சுருக்கமான தீர்க்கதரிசனப் புத்தகமாகும். இது தேவன் தம்முடைய ஜனங்களைக் குறித்து வைத்திருக்கிற நோக்கங்களையும், அவர் அவற்றை எவ்வாறு செயல்படுத்துகிறார் என்பதையும் எளிமையாக, அதே நேரத்தில் விரிவாக எடுத்துரைக்கிறது. யோவேல் தீர்க்கதரிசனப் புத்தகத்தில் மூன்று அதிகாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரமும், தேவனுடைய ஒட்டுமொத்த நோக்கத்தின் ஒரு கட்டத்தை வெளிப்படுத்துவதாக எடுத்துக் கொள்ளலாம். முதல் அதிகாரத்தைத் தொகுத்துச் சொல்கிற வார்த்தை, ஜீவனற்ற நிலை. இரண்டாம் அதிகாரத்தைத் தொகுத்துச் சொல்கிற வார்த்தை, புதுப்பித்தலாகும். மூன்றாம் அதிகாரம், நியாயத்தீர்ப்பைக் குறித்துப் பேசுகிறது. தேவனுடைய புதுப்பித்தலின் கிரியைக்கு நாம் எவ்வாறு ஒத்துழைக்கிறோம் என்பதைப் பொறுத்து நியாயத்தீர்ப்பு வரும். அதில் தேவனுக்குக் கீழ்ப்படிந்து ஒத்துழைக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். ஆனால் தேவனுடைய புதுப்பித்தலின் கிரியைக்குக் கீழ்ப்படிய மறுக்கிறவர்கள், நியாயத்தீர்ப்பில் தண்டிக்கப்படுவார்கள்.
இன்று நான் முதல் இரண்டு அதிகாரங்களில் எழுதப்பட்டிருக்கும் சத்தியங்களின் மீது பிரதானமாக கவனம் செலுத்தப் போகிறேன்: ஜீவனற்று, பாழாய்க் கிடக்கும் நிலை; அடுத்ததாக, புதுப்பித்தல்.
தீர்க்கதரிசனம் எதையும் நான் வாசிப்பதற்கு முன், நான் உங்களிடம் ஒன்றைச் சுட்டிக் காண்பிக்க விரும்புகிறேன். எல்லாத் தீர்க்கதரிசனங்களின் முன்னணியிலும், இரண்டு விசேஷமான மரங்கள் இருக்கின்றன: அத்திமரம், திராட்சைக்கொடி. ஒரு விதத்தில், தீர்க்கதரிசனத்தில் சகலமும் இந்த இரண்டு மரங்களின் நிலையைச் சுற்றித்தான் சுழலுகின்றன. இந்த இரண்டு மரங்களும் பட்டுப்போய், பாழாய்க் கிடந்ததென்றால், மற்ற சகலமும் ஜீவனற்றுப் பாழாய்க் கிடக்கும். இந்த இரண்டு மரங்களும் திரும்பவும் தழைத்து, செழிக்கும்போது, மற்ற சகலமும் அவைகளோடு தழைத்து செழிக்கும்.
யோவேலின் தீர்க்கதரிசனப் படத்தில், இந்த இரண்டு மரங்களும் தேவனுடைய இரண்டு வகையான உடன்படிக்கை ஜனங்களை அடையாளப்படுத்துகின்றன என்று நான் விசுவாசிக்கிறேன். தேவன் தம் உடன்படிக்கையினால் இவ்விரண்டு வகையான ஜனங்களிடமும் தம்மை அர்ப்பணித்திருக்கிறார். தேவன் தம் உடன்படிக்கையை மீற மாட்டார், முறிக்க மாட்டார். அத்திமரம் இஸ்ரவேலையும், திராட்சைக்கொடி சபையையும் சுட்டிக் காண்பிக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். பல வேதப்பகுதிகளில், அத்திமரம் பெரும்பாலும் பிரதானமாக இஸ்ரவேலையும், திராட்சைக்கொடி என்பது சபையையும் குறிக்கின்றது என்றுதான் நான் விசுவாசிக்கிறேன்.
ஆக, இந்த அடையாளத்தை மனதில் கொண்டவர்களாய், யோவேல் முதல் அதிகாரத்திலிருந்து ஒரு வேதப்பகுதியை நான் வாசிக்கிறேன். இது ஜீவனற்று, முற்றிலும் பாழாய்க் கிடக்கிற ஒரு காட்சியை நமக்கு முன் வைக்கிறது. இந்தக் காட்சியின் ஆரம்பத்திலும், முடிவிலும் கவனம், திராட்சைக்கொடி மற்றும் அத்திமரத்தின் மீது பதிக்கப்பட்டிருப்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தேவனுடைய ஜனங்களின் சுதந்திரத்தை அந்நிய சக்திகள் ஊடுருவி, எல்லாவற்றையும் அழித்துப் பாழாக்கிப் போடுகின்றன. 6-ம் வசனத்திலிருந்து வாசிப்போம்:
6 எண்ணி முடியாத ஒரு பலத்த ஜாதி என் தேசத்தின் மேல் வருகிறது………(7-ம் வசனத்திற்குச் செல்வோம்). 7 அது என் திராட்சைச் செடியை அழித்து, என் அத்திமரத்தை உரித்து, அதின் பட்டையை முற்றிலும் தின்று போட்டது. அதின் கிளைகள் வெண்மையாயிற்று. (திராட்சைச் செடியும், அத்திமரமும் இங்கு முன்னணியில் இருப்பதைக் கவனியுங்கள். அவை முற்றிலும் அழிக்கப்பட்டு, பாழான நிலையில் இருக்கின்றன. பிறகு படத்தின் எஞ்சிய பகுதி 10-ம் வசனத்தில் எழுதப்பட்டிருக்கிறது.) 10 வயல்வெளி பாழாயிற்று. பூமி துக்கம் கொண்டாடுகிறது. விளைச்சல் அழிக்கப்பட்டது. புது திராட்சை ரசம் வற்றிப் போயிற்று. எண்ணெய் மாண்டு போயிற்று. (இங்கு இன்னும் மூன்று காரியங்கள் அடையாளமாக காண்பிக்கப்படுகின்றன. தானிய விளைச்சல், புதிய திராட்சை ரசம், எண்ணெய். தீர்க்கதரிசனத்தில், தானியம் என்பது தேவனுடைய ஜனங்களின் வல்லமைக்கு பிரதானமான ஆதாரமாக இருக்கிற தேவனுடைய வார்த்தையை அடையாளப்படுத்துகிறது. புதிய திராட்சை ரசம், சந்தோஷத்தைக் குறிக்கின்றது. அதுவும் வல்லமையின் ஒரு அடையாளமாயிருக்கிறது. புதிய எண்ணெய், பரிசுத்த ஆவியானவரால் உயிரூட்டப்பட்ட புத்தம் புதிய அபிஷேகத்தையே எப்பொழுதும் குறிக்கின்றது. (11-ம் வசனம் தொடர்ந்து சொல்கிறது) 11 பயிரிடும் குடிகளே (ஓ விவசாயம் செய்கிறவர்களே), வெட்கப்படுங்கள். கோதுமையும் வாற்கோதுமையும் இல்லாமல் போயிற்று. திராட்சைரசத் தோட்டக்காரரே, அலறுங்கள். வயல்வெளியின் அறுப்பு அழிந்து போயிற்று (இப்பொழுது நாம் திரும்பவும் அந்த மரங்களுக்குச் செல்கிறோம்). 12 திராட்சைச் செடி வதங்கி (உலர்ந்து போனது), அத்திமரம் சாரமற்றுப் போகிறது (கனி கொடாமல் போனது). மாதுளை, பேரீச்சம், கிச்சிலி (ஆப்பிள்) முதலிய வெளியின் செடிகள் எல்லாம் வாடி (உலர்ந்து காய்ந்து) போயின. (மற்ற மரங்களும் இதில் சேர்க்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். ஆனால் கவனம், திராட்சைச் செடி மற்றும் அத்திமரத்தின் மீது வைக்கப்பட்டிருக்கிறது. கடைசியில் இவையனைத்தும் ஒரு வாக்கியத்தில் தொகுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது). (மெய்யாகவே) சந்தோஷம் மனுபுத்திரரை விட்டு ஒழிந்து போயிற்று (சந்தோஷம் என்பதே இஸ்ரவேல் ஜனங்களுக்குள் முற்றிலும் இல்லாமல் போனது).
இப்பொழுது நாம் புதுப்பித்தலின் படத்தை யோவேல் 2-ம் அதிகாரத்தில் பார்க்கப் போகிறோம். யோவேல் 2:21-ம் வசனத்தில் ஆரம்பிப்போம்.
21 தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு. கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். 22 வெளியின் மிருகங்களே, பயப்படாதேயுங்கள். வனாந்திரத்திலே மேய்ச்சல்கள் உண்டாகும். விருட்சங்கள் காய்களைக் காய்க்கும் (கனிகளை விளையச் செய்யும்). அத்திமரமும், திராட்சைச் செடியும் (மிகுதியான) பலனைத் தரும்.
திரும்பவும் கவனியுங்கள். வனாந்திரமாய் பாழாய்க் கிடந்த காட்சியின் முன்னணியில் இருந்ததுபோலவே, இப்பொழுது புதுப்பித்தல் நடக்கின்ற காட்சியின் முன்னணியிலும், நாம் இந்த இரண்டு மரங்களை ஒரு அடையாளமாகப் பார்க்கிறோம். இஸ்ரவேலை அடையாளப்படுத்தும் அத்திமரம்; சபையை அடையாளப்படுத்தும் திராட்சைக்கொடி. அவற்றின் நிலைதான், எஞ்சிய தேவனுடைய சுதந்திரத்தின் நிலையைப் பிரதிபலிக்கிறது.
தேவன் தம்முடைய ஜனங்களின் அடிப்படைத் தேவைகளைத் திரும்பவும் மீட்டுக் கொடுப்பதைக் குறித்த ஒரு வாக்குத்தத்தத்தை 24-ம் வசனத்தில் நாம் வாசிக்கின்றோம்.
24 களங்கள் தானியத்தினால் நிரம்பும். ஆலைகளில் திராட்சை ரசமும் எண்ணெயும் வழிந்தோடும்.
திரும்பவும் இங்கே மூன்று காரியங்கள் வருவதைக் கவனியுங்கள்: தானியம், புதிய திராட்சை ரசம், எண்ணெய். தானியம் என்பது தேவனுடைய வார்த்தையிலிருந்து கிடைக்கும் வலிமை அல்லது பெலனை அடையாளப்படுத்துகிறது. கர்த்தருக்குள் சந்தோஷமாயிருக்கும் நிலையை புதிய திராட்சை ரசம் அடையாளப்படுத்துகிறது. இதுவும் நமக்கு பெலனைக் கொடுக்கிறது. எண்ணெய், பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தையும், வல்லமையையும் அடையாளமாக காண்பிக்கிறது.
பிறகு அடுத்த வசனத்தில், தேவன் தம்முடைய ஜனங்களின் சார்பில் தலையிட்டு, எதை நிறைவேற்றி முடித்திருக்கிறார் என்பதை அவரே தொகுத்துச் சொல்கிறார். “திரும்ப மீட்டுக் கொடுப்பேன்” என்பதுதான் இதில் மிக முக்கியமான திறவுகோல் வார்த்தையாகும்.
25 நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த (தின்று அழித்த) வருஷங்களின் விளைவை (விளைச்சலை) உங்களுக்குத் திரும்ப அளிப்பேன் (திரும்ப மீட்டுக் கொடுப்பேன்).
ஆக, இங்கு பாருங்கள், தம்முடைய ஜனங்களைக் குறித்த தேவனுடைய நோக்கத்தின் மையம், இவ்வார்த்தைகளில்தான் இருக்கிறது: “நான் உங்களுக்கு திரும்ப மீட்டுக் கொடுப்பேன் (அளிப்பேன்)….” தேவனுடைய வாக்குத்தத்தம் எது வரை செல்கிறது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது வழக்கமாக நாம் எதிர்பார்க்கக்கூடிய விஷயங்களுக்கும் அப்பாற்ப்பட்டு, நீண்ட தூரம் விரிவடைந்து செல்கிறது. வயல்வெளிகளுக்குள் படையெடுத்த பூச்சிகளின் ராணுவத்தை துரத்துவேன் என்று மட்டும் தேவன் சொல்லவில்லை. அவைகள் தின்று அழித்துப் போட்ட எல்லாவற்றையும் நான் திரும்ப மீட்டுக் கொடுப்பேன் என்றும் அவர் சொல்கிறார். இது தேவனுடைய மகத்தான, விசேஷமான வாக்குத்தத்தம். நாம் இதை உறுதியாய் இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
ஒருமுறை எனக்கு நேரிட்ட அனுபவத்தின் மூலம் இதை நான் தெளிவாக, சந்தேகத்திற்கு அப்பாற்ப்பட்ட விதத்தில் கற்றுக் கொண்டேன். நான் ஒரு பெண்ணுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தேன். அவள் ஒரு வியாதியினால் பெலவீனப்பட்டிருந்தாள். அவளுடைய முகம் ஒரு பக்கமாய் கோணிப் போயிருந்தது. அந்த வியாதியின் விளைவாக, அவளுடைய முகம் நிரந்தரமாய் முறுக்கிக் திருகிக் கொண்டது. அவளுடைய வாயின் ஒரு ஓரம் கொஞ்சம் மேலே இழுத்த நிலையிலிருந்தது. அவளால் இயல்பாக சிரிக்கக்கூட முடியாது என்பதுதான் இதில் உண்மையாகவே சோகமான ஒரு விஷயம். நான் அவளுக்காக ஜெபித்தேன். பிறகு ஒரு அடி பின்னால் எடுத்து வைத்து, ஊழியத்தில் பங்கெடுத்த ஒரு சிறு கூட்ட ஜனங்களுடன் சேர்ந்து நின்றேன். தேவன் ஒரு அற்புதத்தைச் செய்வார் என்று நாங்கள் காத்திருந்தோம். 10 நிமிடங்களில், அந்தப் பெண்ணின் முகம் மாறியது. அவளுடைய இறுக்கமான தசைநார்கள் விடுவிக்கப்பட்டன. நிறம் திரும்பவும் வந்தது. முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த அவளுடைய இடது காலும், இடது கையும் முழுமையாய் சுகமடைந்தன. பத்தே நிமிடங்களில், அவள் பூரணமாய் சுகமடைந்தாள். இதில் மெய்யாகவே என் மனதில் ஆழமாய் பதிந்த விஷயம் இதுதான்: அந்தக் கூட்டத்திற்கு அந்தப் பெண்ணை அழைத்து வந்த பெண் அவளிடம் பிரமிப்படைந்தவளாய் இவ்வாறு சொன்னாள், “நீ இங்கு வந்த போது இருந்ததை விட, இப்பொழுது 10 வருடம் இளமையாய் தெரிகிறாயே. அது எப்படி!” பத்தே நிமிடங்களில், தேவன் அவளுக்கு, அவள் இழந்த பத்து வருடங்களை திரும்ப மீட்டுக் கொடுத்தார்.
பூச்சிகள் தின்று அழித்துப் போட்ட எல்லாவற்றையும் தேவன் திரும்பக் கொடுத்தார். இதுதான் புதுப்பித்தலாகும் (இழந்த எல்லாவற்றையும் தேவன் திரும்ப மீட்டுக் கொடுப்பதாகும்).
“நான் திரும்ப மீட்டுக் கொடுப்பேன்,” என்பது வேதாகமத்தின் மிகவும் அழகான வாக்குத்தத்தங்களில் ஒன்றாகும். இதில் எல்லாம் உள்ளடங்கியிருக்கிறது. புதுப்பித்தல் என்பது ஆவிக்குரிய, உணர்வுகளுக்குரிய, சரீரப்பிரகாரமான என எல்லா பகுதிகளையும் உள்ளடக்கியிருக்கிறது. இது தனி நபரையும் உள்ளடக்கியிருக்கிறது, இது ஒட்டுமொத்த ஜனக்கூட்டத்தையும் உள்ளடக்கியிருக்கிறது. இது குடும்பத்தையும் உள்ளடக்கியிருக்கிறது, இது தேவனுடைய ஜனங்களை ஒட்டுமொத்தமாகவும் உள்ளடக்கியிருக்கிறது.
இதைக் கவனியுங்கள். பழைய உடன்படிக்கையின் கீழ், இஸ்ரவேலில், ஒவ்வொரு ஐம்பதாவது வருஷத்தையும் யூபிலி வருடமாகக் கொண்டாட வேண்டும் என்பது தேவனுடைய கட்டளை. அது ஒரு விடுதலையின் வருஷமாக, இழந்ததையெல்லாம் திரும்பப் பெற்றுக் கொள்கிற வருஷமாய் இருக்கிறது. அது எவ்வாறு இருக்க வேண்டும் என்று தேவனே அதை வரையறுத்திருக்கிறார். லேவியராகமம் 25:10 சொல்கிறது:
10 ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள். அது உங்களுக்கு யூபிலி வருஷம். அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன் தன் காணியாட்சிக்கும் (அல்லது சுதந்திரத்திற்கும்) தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக்கடவன்.
நல்லது, இதுதான் யூபிலி வருஷத்தின் நன்மைகள். பாரங்கள், கஷ்டங்களிலிருந்து விடுதலை, கடன் பிடியிலிருந்து விடுதலை, அந்நிய தேசத்தில் அகதியாய் வாழ்ந்த நிலையிலிருந்து விடுதலை. இது இழந்த நன்மைகளையெல்லாம் திரும்பப் பெற்றுக் கொள்கிற நேரம். தேவனுடைய ஜனங்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு சுதந்தரமாய் கிடைத்த தங்களுடைய சொந்தக் காணியாட்சிக்குத் திரும்பிச் செல்கிறார்கள். குடும்ப உறவுகள் திரும்ப மீட்கப்பட்டு, ஒன்றாய் இணைக்கப்படுகின்றன. ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்தக் குடும்பத்திற்குத் திரும்பிச் செல்கிறார்கள் என்பதை இன்றைய சூழ்நிலையில் சிந்தித்துப் பாருங்கள். உடைக்கப்பட்ட குடும்பங்களெல்லாம் அவ்வளவு அழகாய் ஒன்று சேருவதை சிந்தித்துப் பாருங்கள். இவையெல்லாம் “பூச்சிகள் தின்று அழித்துப் போட்ட வருஷங்களை விளைச்சலை நான் உங்களுக்குத் திரும்ப மீட்டுக் கொடுப்பேன்,” என்று தேவன் நமக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றன.
சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். தேவனுடைய ஜனங்களுக்கான புதுப்பித்தல் திட்டம் என்ற இதே கருப்பொருளைத் தொடர்ந்து பேசுவேன். அது இன்றைய உலகத்தில் ஏற்கனவே எவ்வாறு உருவெடுத்து வருகிறது என்பதை உங்களுக்குக் காண்பிப்பேன்.
குறியீடு: RP-R011-102-TAM









