இதில் நம்முடைய பங்கு என்ன

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 9
'மறுசீரமைப்பு' தொடரின் 15-ஆம் பகுதியான 'நமது பதில்' மூலம் தேவனுடைய முடிவுக்கால நோக்கம் மற்றும் இஸ்ரவேலின் மறுசீரமைப்பைக் கண்டறியுங்கள். வேதவசனம் எவ்வாறு தேவனுடைய வார்த்தையை உறுதிப்படுத்துகிறது என்பதையும், அவருடைய திட்டத்தோடு இணைந்திருப்பது வெற்றியைத் தரும் என்பதையும் கற்றுக்கொள்ளுங்கள். இஸ்ரவேலுக்கு அவர் காட்டும் உண்மைத்தன்மைக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள்; இது அவருடைய ராஜ்யத்தின் வாக்குத்தத்தங்களுக்கு ஒரு சான்றாகும்.
Transcript
தேவனுடைய முடிவுகால நோக்கம் இஸ்ரவேலின் புதுப்பித்தலில் இன்றைய நாளில் எவ்வாறு நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் ஒன்றாகத் தொடர்ந்து பார்க்கும்போது, மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது.
கடந்த மூன்று நாட்களில், என்னுடைய செய்திகளில், இஸ்ரவேல் புதுப்பிக்கப்படுதலைக் குறித்த மூன்று தனித்துவம் வாய்ந்த, வித்தியாசமான, ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புடைய அம்சங்களைக் குறித்து நான் பேசினேன். முதலில், புதுப்பிக்கப்படுதலைக் குறித்த வாக்குத்தத்தங்களையும், இரண்டாவதாக, எவ்வாறு அந்தப் புதுப்பிக்கப்படுதல் நிகழும் என்பதையும், மூன்றாவதாக, புதுப்பிக்கப்படுதலுக்கான நோக்கத்தையும் நாம் பார்த்தோம். இன்று இந்தத் தலைப்பில் என்னுடைய செய்தியை நான் முடிக்கிறேன். மிகவும் முக்கியமான, நடைமுறைக்கேற்ற ஒரு கேள்வியை நான் கேட்டு விட்டு, பிறகு அதற்கான பதிலை நாம் கண்டுபிடிப்போம்: இஸ்ரவேலை புதுப்பிக்கும்படி தேவன் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கும்போது, அதற்கு நம்முடைய பதிற்செய்கை என்னவாக இருக்க வேண்டும், அதற்கு நாம் எவ்வாறு இணங்கி ஒத்துழைக்க வேண்டும்? இதில் நம்முடைய பங்கு என்ன?
முதலில், இந்த வாரத்தின் ஆரம்பத்தில் நான் சொன்ன ஒரு விஷயத்தை திரும்பவும் ஒருமுறை சொல்லி விடுகிறேன். இஸ்ரவேல் தங்களுடைய சொந்த தேசத்திற்குள் திரும்பக் கூட்டிச் சேர்க்கப்படும்படி தற்பொழுது நடக்கின்ற இந்த நிகழ்வைக் குறித்த செய்திகள், ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களிலும், டிவியிலும், இன்னும் எல்லா ஊடகங்களிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தச் செய்திகள், வேதாகமத்தை விசுவாசிக்கும் விசுவாசிகளாகிய நமக்கு, வேதாகமம் என்பது மெய்யான, இன்றைய தேதிக்கும் பொருந்துகிற ஒரு புத்தகம் என்பதை உலகளாகிய விதத்தில் நம் கண்களுக்குத் தெரியக்கூடிய அளவில் நிரூபிக்கின்ற ஆதாரமாக இருக்கின்றன. ஆகையால் என்னுடைய அபிப்பிராயத்தின்படி, வேதாகமத்தை விசுவாசிக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசியும், இஸ்ரவேலுக்காக தேவன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை ஒவ்வொரு தடவையும் பார்க்கும் போது, தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். காரணம், தேவன் இஸ்ரவேலுக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களைக் காத்துக் கொள்வதிலும், அவற்றை நிறைவேற்றுவதிலும் உண்மையுள்ளவராய் இருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது, அதுவே அவர் சபைக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களையும் உண்மையாய் காத்துக் கொள்வார், அவற்றை நிறைவேற்றுவார் என்பதற்கு ஒரு வலிமையான, அதிநிச்சயமான, ஒருபோதும் மாறாத உத்தரவாதமாக இருக்கிறது. ஆனால் இதற்கு நேரெதிரான ஒன்றும் உண்மைதான் என்பதை நான் தனிப்பட்ட விதத்தில் விசுவாசிக்கிறேன். தேவன் இஸ்ரவேலுக்குக் கொடுத்த தம்முடைய எண்ணற்ற வாக்குத்தத்தங்களை காத்துக் கொள்ளவில்லை என்றால், தேவன் சபைக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களைக் காத்துக் கொள்வார் என்பதில் எனக்கு எந்த நம்பிக்கையும் இருக்காது என்றுதான் நான் நினைக்கிறேன். வேதவசனத்தில் தேவன் இஸ்ரவேலுக்குக் கொடுத்த பலப் பல வாக்குத்தத்தங்களை நிறைவேற்றவில்லை என்றால், வேதாகமம் நம்பத்தகுந்த ஒரு புத்தகம் அல்ல என்ற ஒரு முடிவுக்குத்தான் நான் வருவேன். ஆனால் தேவனுக்கு நன்றி. நான் அந்த முடிவுக்கு வர வேண்டிய அவசியமில்லை. காரணம், தேவன் இஸ்ரவேலுக்குக் கொடுத்த தம்முடைய வாக்குத்தத்தங்களை காத்து, அவைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். இன்றைய வரலாறு, அந்த உண்மைக்கு ஒரு தொடர்ச்சியான சாட்சியாய், ஆதாரமாய் இருக்கிறது.
வாழ்க்கையில் வெற்றியடைவதற்கான ஒரு முக்கியமான கோட்பாட்டை இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்கிறேன். மனுஷ வரலாற்றின் எந்தவொரு காலகட்டத்திலும், வெற்றிக்கான திறவுகோல் என்பது, தேவன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து, அதோடு இசைந்து, சேர்ந்து பிரயாணிப்பதில்தான் இருக்கிறது. நான் இதைத் திரும்பச் சொல்கிறேன். இப்பொழுது தேவன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை முதலில் கண்டுபிடியுங்கள். பிறகு அதோடு இசைந்து செல்லுங்கள். மாறாக, தேவன் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கும்போது, அதை எதிர்த்து நின்றால், நிச்சயம், அது தோல்வி, விரக்தி மற்றும் நம்பிக்கையற்ற நிலைக்கு நேராக நடத்தும். இது தனி நபர்களுக்கும், தேசங்களுக்கும் பொருந்தும். ஏசாயா 60-ம் அதிகாரத்தில், இஸ்ரவேல் புதுப்பிக்கப்படுவதைக் குறித்த மிகவும் தெளிவான, அழகான ஒரு கணிப்பை நாம் வாசிக்க முடியும். இது நமக்கு நிறைய விவரங்களைக் கொடுக்கிறது. இந்த வேதப்பகுதியை வாசிப்பதற்கு எனக்கு நேரமில்லை. ஆனால் இந்த அதிகாரத்தின் 12- ம் வசனத்தில், ஒரு உறுதியான, கடுமையான எச்சரிக்கையை தேவன் கொடுக்கிறார். அவர் சொல்கிறார்:
12 “உன்னைச் சேவிக்காத ஜாதியும், ராஜ்யமும் அழியும். அந்த ஜாதிகள் நிச்சயமாய் பாழாகும்.”
நான் இதை இவ்வாறு புரிந்து கொள்கிறேன்: இஸ்ரவேலைப் புதுப்பித்து, திரும்பக் கூட்டிச் சேர்க்கும்படி தேவனால் அறிவிக்கப்பட்ட நோக்கங்களை இன்று இந்தப் பூமியில் எதிர்க்கிற எந்த ஒரு தேசமும், ராஜ்யமும் அழிக்கப்படும். நான் அதை விசுவாசிக்கிறேன். இது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வாழ்கின்ற நமக்கு, இந்த உண்மையைப் புரிந்து கொண்டு பற்றிக் கொள்ள வேண்டியது மிக மிக முக்கியமானதாயிருக்கிறது. என் தாய் நாடு, பிரிட்டன் என்பதை நீங்கள் அநேகமாக அறிந்திருப்பீர்கள். பிரிட்டனுக்கு என்ன நடந்தது என்பதை நான் உங்களிடம் சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன். பிரிட்டனுக்கு இது நடந்த நேரத்தில், நான் இஸ்ரேலில் வாழ்ந்து கொண்டிருந்தேன். நான் அதை நேரடியாகப் பார்த்த சாட்சியாயிருக்கிறேன்.
இரண்டு உலக யுத்தங்களிலும் பிரிட்டன் ஜெயமெடுத்தது. யுத்தத்தில் பிரிட்டன் ஒருபோதும் தோற்கடிக்கப்பட்டதில்லை. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில், அது ஒரு பெரிய தேசமாயிருந்தது. பயங்கரமான தாக்கத்தை உண்டாக்கக்கூடிய அளவிற்கு பயங்கரமான ஆயுதங்களை உடைய ஒரு பேரரசாக அது இருந்தது. பிரிட்டனின் ஆதிக்கம் இந்த உலகத்தில் கிட்டத்தட்ட எல்லாப் பகுதிகளுக்கும் பரவியிருந்தது. 30 வருடங்கள் கழித்து இப்பொழுது, வல்லமையில் இரண்டாம் தரத்திற்கு பிரிட்டன் இறங்கி விட்டது. அது தன் செல்வாக்கையும், அந்தஸ்த்தையும் இழந்து விட்டது. அது தன் ஆதிக்கத்தை, சொத்துக்களை, தன் ஸ்தானத்தை இழந்து நிற்கிறது. இங்கு எது திருப்பு முனையாய் இருந்தது? நான் என்ன விசுவாசிக்கிறேன் என்பதை உங்களுக்குச் சொல்கிறேன். இது நிகழ்ந்தபோது, நான் அங்கே இருந்தேன், இதைப் பார்த்தேன். இஸ்ரேலுக்கென்று திரும்பவும் ஒரு சொந்த தேசம் உருவாக வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்தது. பாலஸ்தீனம் இஸ்ரேலாக மாறுவதற்கு முன்பு, அங்கு ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு இந்தத் தீர்மானத்தை தன்னால் இயன்ற எல்லா வழிகளிலும் வேண்டுமென்றே எதிர்த்து நின்றது. ஒரு நேரடி யுத்தம் வரக்கூடிய சூழ்நிலை உருவாகும் அளவிற்கு அது எதிர்த்தது. இதன் விவரங்களுக்குள் செல்வதற்கு இப்பொழுது எனக்கு நேரமில்லை. ஆனால் நான் ஒரு பிரிட்டிஷ்காரன் என்பதை உங்களிடம் சொல்லி விடுகிறேன். நான் அந்த இடத்தில் இருந்தேன். அது நிகழ்ந்ததை நான் பார்த்தேன். இது வெறும் எழுத்துக்களில் எழுதப்பட்ட கோட்பாடோ அல்லது ஒரு விதியோ அல்ல. இஸ்ரவேல் தேசத்தைப் புதுப்பிக்கும்படி கிரியை செய்த தேவனுடைய நோக்கங்களை எதிர்த்து நின்றதுதான், பிரிட்டனின் வீழ்ச்சிக்கு திருப்புமுனையாய் இருந்தது என்று நான் விசுவாசிக்கிறேன்.
இங்கே அமெரிக்க ஐக்கிய நாடுகளைக் குறித்து, ஒரு விஷயத்தை நான் சொல்கிறேன். இந்த தேசம், இஸ்ரவேல் தேசத்தோடு ஒரு நட்புறவில் தொடர்ந்து இருந்து வருகிறது. அதுதான் இந்த தேசத்தின் மிக முக்கியமான ஆசீர்வாதங்களில் ஒன்றாக இருக்கிறது. நான் இந்த தேசத்தை நேசிக்கிறேன். ஒரு தனி நபராகிய எனக்கு இந்த தேசம் நிறைய நன்மைகளை பெருமளவில் செய்திருக்கிறது. நான் இடைவிடாமல் தொடர்ந்து, ஊக்கமாய் ஜெபிக்கின்ற ஜெபங்களில் இதுவும் ஒன்று: பிரிட்டன் செய்த அதே தவறை அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஒருபோதும் செய்து விடக் கூடாது, இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பி விடக்கூடாது, இஸ்ரவேலின் எதிரிகளோடு அணிவகுத்து நின்று விடக் கூடாது என்பதுதான் அந்த ஜெபம். காரணம், அது பிரிட்டனுக்கு வீழ்ச்சியையும், அழிவையும் உண்டாக்கினதுபோல, நிச்சயம், அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் அதை உண்டாக்கி விடும்.
இப்பொழுது நான் இதன் நேர்மறையான, ஆக்கப்பூர்வமான பக்கம் திரும்ப விரும்புகிறேன். இஸ்ரவேலைக் குறித்த தேவனுடைய நோக்கங்களோடு ஆக்கப்பூர்வமான விதத்தில், நாம் எவ்வாறு ஒன்றாய் இசைந்து செல்ல முடியும்? சில எளிமையான ஆலோசனைகளை வேதவசனத்திலிருந்து நான் உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன். இப்பொழுது நாம், சங்கீதம் 122:6-ம் வசனத்திற்குச் செல்வோம். அதை வாசிக்கக் கேட்போம்:
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள். “உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.”
சில முக்கியமான விஷயங்களை இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டும். வேதாகமத் தீர்க்கதரிசனங்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எருசலேமின் சமாதானமும், இஸ்ரவேலின் புதுப்பிக்கப்படுதலும் பிரிக்க முடியாத விதத்தில், ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. இஸ்ரவேலின் புதுப்பிக்கப்படுதல் நிறைவடையாதவரை, எருசலேமிற்கு நிரந்தர சமாதானம் ஒருபோதும் உண்டாகாது.
இரண்டாவதாக, கடைசி கட்டத்தில், மனுக்குலம் எல்லோருடைய சமாதானமும், எருசலேமின் சமாதானத்தைத்தான் சார்ந்திருக்கும். காரணம், எருசலேமை மையமாகக் கொண்டுதான் தம்முடைய அரசாங்கம் இந்த பூமியில் நிறுவப்பட வேண்டும் என்று தேவன் தம்முடைய நித்திய ஆலோசனையில் முன்குறித்து, நியமித்திருந்தார். சமாதானம் மற்றும் சுகவாழ்வின் ஆசீர்வாதங்களெல்லாம் எருசலேம் மூலமாகத்தான் மற்ற தேசங்களுக்கும், ஜனங்களுக்கும் வந்து சேர வேண்டும் என்பதையும் தேவனே நித்தியத்தில் முன் கூட்டியே நியமித்திருந்தார்.
மூன்றாவதாக, இந்தக் குறிப்பினை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்ரேல் மற்றும் எருசலேமின் விஷயத்தில் தேவன் தலையிட வேண்டும் என்று தேவனுடைய ஜனங்களாகிய நாம் இடைவிடாமல், தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். தேவன் கிரியை செய்வார். ஆனால் நாம் ஜெபிக்காமல், அவர் கிரியை செய்ய மாட்டார். ஜெபம் என்பது ஒரு சம்பிரதாயம் அல்ல. அது ஒரு சடங்குமல்ல. ஜெபம் என்பது தேவனுடைய நோக்கங்கள் நிறைவேற்றப்படுவதற்கு அத்தியாவசியமான தேவையாயிருக்கிறது. தேவன் தம்முடைய ஜனங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் காரியங்களைச் செய்ய மாட்டார். இது சபைக்கும், இஸ்ரவேலுக்கும், இவ்விரண்டிற்கும் பொருந்தும். சபைக்கிருக்கும் மிக முக்கியமான பொறுப்புகளில் ஒன்று, இஸ்ரவேல் மற்றும் எருசலேமிற்காக ஜெபிப்பதாகும். நம்முடைய தனிப்பட்ட நலனிற்காகவும் நாம் இதைச் செய்கிறோம். காரணம், இந்த உலகம் நாடுகிற சமாதானத்தை அடைவதற்கு இது ஒன்றுதான் ஒரே வழியாயிருக்கிறது. தேவனுக்குக் கீழ்ப்படிந்து, எருசலேமைக் குறித்த அக்கறையோடு நாம் ஜெபிக்கும்போது, நாம் நம்முடைய தனிப்பட்ட சுகவாழ்வையும் பெற்றுக் கொள்கிறோம். காரணம் தேவன் சொல்கிறார், “எருசலேமை நேசித்து, அதற்காக ஜெபிக்கிறவர்கள் சுகமாய் வாழ்ந்திருப்பார்கள்.” இது நம் சுக வாழ்விற்கான ஒரு நல்ல வழியாயிருக்கிறது.
இப்பொழுது நாம் இன்னொரு வேதப்பகுதியை வாசிப்போம். ஏசாயா 62:6-7 வசனங்களும் இதே அர்த்தத்தில் பேசுகின்றன. நாம் அதை கவனிப்போம்.
6 எருசலேமே, உன் மதில்களின் மேல் பகல்முழுதும் இராமுழுதும் ஒருக்காலும் மவுனமாயிராத ஜாமக்காரரைக் கட்டளையிடுகிறேன். கர்த்தரைப் பிரஸ்தாபம் பண்ணுகிறவர்களே, நீங்கள் அமரிக்கையாயிருக்கலாகாது. 7 அவர் எருசலேமை ஸ்திரப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும் வரைக்கும் அவரை அமர்ந்திருக்க விடாதிருங்கள்.
தேவன் குறிப்பிடுகிற இந்த ஜாமக்காரர் அல்லது காவற்காரரைத்தான் இன்று நாம் “பரிந்து மன்றாடுகிறவர்கள்” என்று அழைக்கிறோம். அவர்கள் எருசலேமைக் குறித்து அக்கறையாயிருக்கிறார்கள். அவர்களுடைய கண்கள் அவளின் மீது பதிந்திருக்கிறது. அவள் நிமித்தம் அவர்கள் தேவனை நோக்கி இரவும் பகலும் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதற்கென்று தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். தேவன் அவளுக்காக என்ன செய்வேன் என்று வாக்குப் பண்ணியிருக்கிறாரோ, அதை அவளுக்காகச் செய்யும்படி தேவன் தலையிடும்வரை அவர்கள் ஜெபித்துக் கொண்டிருப்பார்கள்.
திரும்பவும், சில எளிமையான குறிப்புகளை நான் சொல்ல விரும்புகிறேன். முதலில், பரிந்து மன்றாடி ஜெபிப்பதைக் காட்டிலும் உயரிய ரக பணி வேறு எதுவும் இல்லை என்பதைச் சொல்லி விடுகிறேன். நாம் தேவனுடைய ராஜ்யத்தின் ஆசாரியர்களாய் இருக்கிறோம். ஆசாரியர்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான ஊழியங்களில் ஒன்று, பரிந்து மன்றாடுவதாகும். நாம் இந்த ஊழியத்தை நிறைவேற்றும்போது, நாம் ராஜாவைப்போல ஆளுகை செய்கிறோம்.
இரண்டாவதாக, இது இரவும் பகலும் ஜெபிக்க வேண்டிய ஒன்றாயிருக்கிறது. “பகல் முழுவதும், இரவு முழுவதும்,” என்று தேவன் இங்கு சொல்கிறார். இது லூக்கா 18:7-ல் இயேசு சொன்ன வார்த்தைகளோடு ஒத்துப் போகிறது:
“அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமை யுள்ளவராயிருந்து, அவர்களுக்கு நியாயம் செய்யாமலிருப்பாரோ?”
இரவும் பகலும் ஜெபிப்பதன் மூலமாக மட்டுமே சில குறிக்கோள்களை அடைய முடியும். எருசலேமின் சமாதானம், அவற்றில் ஒன்றாயிருக்கிறது.
“கர்த்தரைப் பிரஸ்தாபம் பண்ணுகிறவர்களே” என்று ஏசாயா 62:6-ல் வருகிறது. இதற்கு அர்த்தம், “கர்த்தருக்கு நினைப்பூட்டுகிறவர்களே” என்பதாகும். இது புதுப்பிக்கிற வேலையைச் செய்யும்படி தேவனுடைய தீர்க்கதரிசன காலண்டரில் ஒரு குறிப்பிட்ட நேரம் முன்குறிக்கப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்கிற மற்ற கணிப்புகளை நாம் தேவனுக்கு நினைப்பூட்ட வேண்டும் என்று சொல்கிறது. குறிப்பாக, சங்கீதம் 102:13-ல் சங்கீதக்காரன் இவ்வாறு சொல்கிறான்:
13 தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர். அதற்கு தயை செய்யும் காலமும், அதற்காக குறித்த நேரமும் வந்தது.
ஆகையால்தான் “கர்த்தருக்கு நினைப்பூட்டும்படி” நாம் அழைக்கப் பட்டிருக்கிறோம். அவருடைய தீர்க்கதரிசனக் காலண்டரைச் சுட்டிக் காண்பித்து, “கர்த்தாவே, நேரம் வந்து விட்டது,” என்று அவரிடம் சொல்லும்படி நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய ஜெபங்களுக்கு பதில் கொடுக்கும்படி தேவன் கிரியை செய்வதை நாம் பார்க்கும்வரை, நாம் அவருக்கு தொடர்ந்து ஜெபத்தின் மூலமாய் நினைப்பூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
கடைசியாக, இதன் மூலமாய் நமக்கு என்ன நன்மைகள் உண்டாகும் என்பதைக் குறித்த ஒரு படத்தை ஏசாயா 66-ம் அதிகாரத்திலிருந்து நான் உங்களுக்கு வாசிக்கின்றேன்:
10 எருசலேமை நேசிக்கிற நீங்களெல்லாரும் அவளோடே கூட சந்தோஷப்பட்டு, அவளைக் குறித்து களிகூருங்கள். அவள் நிமித்தம் துக்கித்திருந்த நீங்களெல்லாரும் அவளோடே கூட மிகவும் மகிழுங்கள் (உற்சாகத்தின் உச்சிக்கே செல்லுங்கள்). 11 நீங்கள் அவளுடைய ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு திருப்தியாகி, நீங்கள் சூப்பிக் குடித்து, அவளுடைய மகிமையின் பிரகாசத்தினால் மனமகிழ்ச்சியாகுங்கள். 12 கர்த்தர் சொல்கிறது என்னவென்றால்: இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப் போலவும், ஜாதிகளின் (தேசங்களின்) மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப் போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன். அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள். இடுப்பில் வைத்து சுமக்கப்படுவீர்கள். முழங்காலில் வைத்து தாலாட்டப்படுவீர்கள். 13 ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல், நான் உங்களைத் தேற்றுவேன். நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.
எருசலேமைக் குறித்து அக்கறையாய் ஜெபிக்கிற எல்லோருக்கும் தேவனிடமிருந்து வருகிற ஒரு செய்தியாய் இது இருக்கிறது.
சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. அடுத்த வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை இதே நேரத்தில் மீண்டும் உங்களுடன் இருப்பேன். அடுத்த வாரம் ஒரு புதியதும், உற்சாகமூட்டுகிறதுமான தலைப்பைப் பற்றி பேசப் போகிறேன்.
குறியீடு: RP-R013-105-TAM









