இன்று மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது, பரிசுத்த ஆவியின் விலைமதிப்பற்ற, அற்புதமான வரங்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எனது கடைசி இரண்டு உரைகளில், நான் வல்லமையின் வரங்களைக் கையாண்டேன். நான் இதுவரை கையாண்ட இரண்டு வல்லமையின் வரங்கள், விசுவாசத்தின் வரம் மற்றும் குணமாக்குதலின் வரங்கள் ஆகும். இன்று நான் வல்லமையின் மூன்றாவது வரமாகிய அற்புதங்களை செய்யும் அல்லது செய்து முடிக்கும் சக்தியைப் பற்றி பேசப் போகிறேன்.

குணமாக்குதல்களும், அற்புதங்களும் நெருங்கிய தொடர்புடையவை; இருப்பினும், அவை வேறுபட்டவையாகும். குணமாக்குதல்களுக்கும், அற்புதங்களுக்கும் இடையிலான சில வேறுபாடுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் தொடங்குவது நல்லது. குணமாக்குதல் படிப்படியாக செயல்படலாம். உதாரணமாக, நீங்கள் எம்ஃபிஸிமா (சீழ்க்கட்டி) போன்ற நோயிலிருந்து குணமடையலாம்; இது சில மணிநேரங்கள் அல்லது நாட்கள் அல்லது வாரங்கள் எடுக்கலாம். பெரும்பாலும், குணமாக்குதல் கண்ணுக்கு தெரியாதவை. அவை உடலின் பகுதிகளில் பாக்க முடியாதபடி நடைபெறுகின்றன. மறுபுறம், அற்புதங்கள் சாதாரணமாக தெரியும். அவை ஏற்படுத்தும் விளைவை பொதுவாக ஏதோ ஒரு வகையில் காணலாம். வழக்கமாக - அவை அவசியமற்றது அல்ல - அவை உடனடியானவை. எனவே, இந்த இரண்டு விஷயங்களை மட்டும் கருத்தில்கொள்வோம். குணமாக்குதல் படிப்படியாக செயல்படலாம் மற்றும் பெரும்பாலும் கண்ணுக்கு தெரியாதவை. அற்புதங்கள், பொதுவாக காணக்கூடியவை மற்றும் வழக்கமாக உடனடியாக நிகழக்கூடியவை.

இருப்பினும், ஆவியின் வரங்கள் வானவில்லின் வண்ணங்களைப் போன்றது. அவை தனித்தனி நிறங்கள் கொண்டவை, ஆனால் அவை ஒன்றோடொன்று நிழலிடுகின்றன. எனவே, குணமாக்குதல்கள், அற்புதங்களுக்குள்ளாக நிழலிடுகின்றது, அற்புதங்கள் குணமாக்குதல்களுக்கு உள்ளாக நிழலிடுகின்றது, மேலும், அவை இரண்டும், ஏதோ ஒருவகையில் விசுவாசத்துடன் தொடர்புடையவையாக இருக்கின்றன.

ஒரு அற்புதம் தேவைப்படும் உடல் நிலைகளின் உதாரணங்களை நான் உங்களுக்கு தருகிறேன். உதாரணமாக, ஒரு நபர் அறுவை சிகிச்சை மூலம் காதின் இடைப்பட்ட பகுதி அகற்றப்பட்டிருந்தால். இல்லாத காதின் இடைப்பட்ட ஒரு பகுதியை குணமாக்க வழியில்லை. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பு, எனது ஊழியத்தில் ஒரு மனிதனுக்காக ஜெபித்தது எனக்கு நினைவிருக்கிறது – அவர் என்னிடம் சொன்னதெல்லாம், “என்னுடைய காது.” எனவே, நான் ஜெபம் செய்தேன். பிறகு, அவரை சந்தித்தேன். “உங்கள் காது எப்படி இருக்கிறது?” என்று கேட்டேன். அவர், “அது நன்றாக இருக்கிறது” என்றார். நான், “சொல்லுங்கள், அதில் என்ன பிரச்சனை இருந்தது?” என்றேன். அவர், “அறுவை சிகிச்சை மூலம் காதின் இடைப்பட்ட பகுதி அகற்றப்பட்டது,” என்று சொன்னார். அவர் சொன்னார், “நான் மீண்டும் மருத்துவரிடம் பரிசோதிக்கச் சென்றேன், அவர் எனது பிரச்சனையை அறியாதவர், அவர், எனக்கு முற்றிலும் இயல்பான ஆரோக்கியமான காது இருப்பதாக என்னிடம் கூறினார்.” திரும்பிப் பார்க்கும்போது, நான் ஜெபிக்கும் நேரத்தில் என்ன ஜெபிக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை என்பதில் நான் மகிழ்ச்சியடைந்தேன், ஏனென்றால், தேவன் என்ன செய்வார் என்று நான் கேள்வி கேட்கவில்லை, தேவனின் வல்லமையை மட்டும் விடுவித்தேன்.

மீண்டும், ஒரு நபருக்கு குறுகிய கால் அல்லது ஒரு குறுகிய கை இருக்கலாம் – மற்றவரை விட இரண்டு அங்குலங்கள் கூட குறைவாக இருக்கலாம். சரி, ஒரு குறுகிய கால் அல்லது ஒரு குறுகிய கையை குணமாக்க வழியில்லை. அது ஒரு வியாதி அல்ல. ஆயினும் கூட, தேவனின் மகிமைக்கு என்னால் சாட்சியமளிக்க முடியும், நூற்றுக்கணக்கான மக்களை நான் பார்த்திருக்கிறேன், அற்புதங்களை செய்யும் சக்தியின் மூலமாக, அவர்களின் கால்கள் மற்றும் கைகள் உடல் ரீதியாக நீட்டிக்கப்பட்டதை காணமுடிந்தது.

அல்லது, மற்றொரு உதாரணம்: ஒரு நபருக்கு உடைந்த எலும்பு இருக்கலாம், அது வளைந்த நிலையில் இருக்கலாம், அது நிரந்தரமாக வளைந்திருக்கலாம். உடைந்த எலும்பை குணமாக்க முடியாது ஆனால் ஒரு அற்புதத்தால் அந்த உடைந்த எலும்பை நேராக்க முடியும். மீண்டுமாக, அது பல சந்தர்ப்பங்களில் நடப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

அற்புதங்கள் செய்யும் சக்தியைக் குறித்த ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தேவனின் அற்புதம் செய்யும் சக்தியை வெளியிடுவதற்கு, பெரும்பாலும், ஒரு குறிப்பிட்ட, ஈர்க்கப்பட்ட செயலை அது எடுக்கும். கிரியைகள் இல்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது என்ற ஒரு கொள்கை உள்ளது. விடுவிக்கப்படுவதற்கு ஏதேனும் பொருத்தமான அல்லது தொடர்புடைய செயல் மூலம் விசுவாசம் வெளிப்படுத்தப்பட வேண்டும். இயேசுவின் ஊழியத்திலிருந்து ஒரு உதாரணத்தை தருகிறேன். யோவான் 9:1-3 & 6-7 இல், அது சொல்கிறது:

1 அவர் அப்புறம் போகையில் பிறவிக் குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். 2 அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். 3 இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான். 6 இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி: 7 நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவி, பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான்.

இப்போது, அது ஒரு அற்புதமாகும். அது ஒரு குணமாக்குதல் மட்டுமல்ல. பார்க்கவே முடியாதவர் அந்த மனிதன். அவரது நோய் – அவரது கண்கள் நோய்வாய்ப்படவில்லை – அவை முற்றிலுமாக இல்லை. அவை வெறும் காலி குழிகளாக இருந்திருக்கலாம். இயேசு ஒரு அசாதாரண செயலைச் செய்தார். அவர் தரையில் அமர்ந்து, சேறுண்டாக்கி, அந்த மனிதனின் கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் சேற்றைத் தடவி, ஒரு குறிப்பிட்ட குளத்துக்கு சென்று கழுவச் சொன்னார். விசுவாசத்திலும், கீழ்ப்படிதலிலும் மனிதன் கழுவி, கீழ்ப்படிதலின் அந்தச் செயலின் பலனாக, அவனுடைய கண்களில் இருந்த சேற்றின் மூலமாக, தேவனின் அற்புதம் செய்யும் வல்லமை வெளிப்பட்டு, அவனுடைய பார்வை அவனுக்கு வந்தது.

“சரி, ஏன் இயேசு மிகவும் அசாதாரணமான ஒன்றை செய்தார்?” என்று நீங்களே கேட்டுக்கொள்ளலாம். நான் எல்லாவற்றையும் விளக்க முற்பட முடியாது, ஆனால் அதில் என்னைக் கவர்ந்த விஷயம் என்னவென்றால், களிமண் தான் படைப்பின் உண்மையான பொருளாகும். தேவன் முதலில் மனிதனின் உடலைப் படைத்தபோது, அதை களிமண்ணால் உருவாக்கினார். பின்னர், தேவனிடமிருந்து ஜீவ ஆவி அந்த களிமண்ணுக்குள் ஊதப்பட்டு, அதை உயிருள்ள மனிதனாக மாற்றினார். இயேசு அந்த அற்புதத்தை நிகழ்த்தியபோது, அவருடைய நாளில், படைப்பாளர் இன்னும் உங்களுடனே இருக்கிறார் என்ற அறிவிப்பை மக்களுக்கு செய்தார் என்று நான் நினைக்கிறேன். அவர் படைப்பின் மூலப் பொருளை எடுத்து, அதை மனிதனின் கண்களில் வைத்தார், மேலும், அந்த மனிதன் விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவற்றின் மூலம், பரிசுத்த ஆவியின் வல்லமையை விடுவித்தபோது, அந்த களிமண்ணால் பரிசுத்த ஆவியானவர் இரண்டு நேர்த்தியான கண்களை உருவாக்கினார்.

லூக்கா 17 இல், எப்படி ஒரு அற்புதத்தை மிகவும் எளிமையான விசுவாசத்தின் மூலம் விடுவிக்க முடியும் என்ற மற்றொரு உதாரணத்தைப் பார்ப்போம். இயேசுவானவரைக் குறித்து அது சொல்கிறது:

12 அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று: 13 இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள். 14 அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள்.

நீங்கள் காணலாம், இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து செல்லும் செயல், தேவனின் இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட வல்லமையை - அற்புதத்தை செய்யும் சக்தியை வெளியிட்டது - அவர்களின் உடலில் உள்ள தொழுநோயின் அனைத்து தடயங்களையும் அகற்றியது. ஆனால், அவர்கள் வெறும் சுகத்தை மட்டும் பெறவில்லை, ஆனால் அவர்களின் சதை உண்மையில் மீட்டெடுக்கப்பட்டது; அதாவது, நான் சொல்வது போல், குணமாக்குதலை விட அதிகம், இது ஒரு அற்புதமாகும். ஆனால், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்ட இயேசு, அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட செயலை நிறைவேற்றக் கொடுத்தார், தேவனின் பிரதிநிதியாக இருந்த அவருக்கு விசுவாசத்திலும், கீழ்ப்படிதலிலும் அவர்கள் இருந்தபோது, அவர்கள் கீழ்ப்படிதலின் அந்தச் செயலை செய்த பிறகு, தேவனின் அற்புதம் செய்யும் சக்தியானது அவர்களின் உடலில் வெளியிடப்பட்டது.

இப்போது, நான் அப்போஸ்தலர்களின் ஆரம்பகால ஊழியத்தில் ஒரு அற்புதத்தைப் பற்றி பேசப் போகிறேன். அப்போஸ்தலர் 3: 1-8 இல், அது சொல்கிறது:

1 ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். 2 அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அவனை அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள். 3 தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான். 4 பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள். 5 அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான். 6 அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி; 7 வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன்கொண்டது. 8 அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.

சரி, அது ஒரு குணமாக்குதல் மட்டுமல்ல, அது ஒரு அற்புதமாகும். அந்த மனிதனின் எலும்புகள் ஒருபோதும் நன்றாக இருந்ததில்லை என்பது தெளிவாகிறது. அது ஒரு நோய் அல்ல. அநேகமாக, அவர் கணுக்கால் எலும்புகள் வளைந்த நிலையில் பிறந்திருக்கலாம், ஒருவேளை அவர் தனது கால்களை கீழே சுருட்டிக்கொண்டு அமர்ந்திருப்பார், சில சமயங்களில் பிச்சைக்காரர்கள், இன்றும் அப்படி செய்வதைப் பார்க்கிறோம்.

பேதுருவும், யோவானும் அவனிடம் நடந்து சென்றார்கள், அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் தூண்டப்பட்டார்கள். இந்த ஊழியத்தில், பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலுக்கு நாம் பதிலளிக்க கற்றுக்கொள்வது மிக முக்கியமானது. அந்த மனிதர் அவர்களிடம் கையை நீட்டி பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்தார். பேதுரு, “உனக்குக் கொடுக்க என்னிடம் பணம் இல்லை, ஆனால் என்னிடம் இருப்பதையே உனக்குத் தருகிறேன்” என்றார்.

கிறிஸ்தவர்களாகவும், இயேசுவின் ஊழியர்களாகவும், ஏதாகிலும் நாம் வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறோம் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மனித தேவையை கடந்து, நாம் தலையை அசைத்து, “இது மிகவும் மோசமானது, ஆனால் நான் இதைப் பற்றி எதுவும் செய்ய முடியாது என்று நான் பயப்படுகிறேன்,” என்று நாம் சொல்வதை எதிர்பார்க்கவில்லை. விசுவாசத்தில், பேதுரு, “என்னிடம் ஏதோ இருக்கிறது,” என்று சொன்னார். பின்னர், அவர் மிகவும் தீர்க்கமானதைச் செய்தார். அவர் கையை நீட்டி, பணத்தைப் பெறுவதற்காக நீட்டியவரின் கையைப் பிடித்தார்; அவனைத் தூக்கினார்; அவனை தூக்கிவிடும் அந்த செயல், மனிதனின் பாதங்களிலும், கால்களிலும் தேவனின் அற்புதம் செய்யும் சக்தியை வெளியிட்டது; அவன் குதித்து, நிமிர்ந்து நின்று, பின்னர் நடந்து, குதிக்க தொடங்கினான்.

அந்த அற்புதத்தில் இரண்டு பகுதிகளை நாம் கவனிக்கலாம்: முதலில், விசுவாசத்தின் கட்டளை இருந்தது. விசுவாசத்தின் வரம்தான் மற்ற இரண்டு வரங்களை வெளியிடுகிறது என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன். இது ஒரு வகையான செயலூக்கி ஆகும், இது குணமாக்கும் வரத்தையோ, அல்லது அற்புதம் செய்யும் வரத்தையோ கொண்டு வர முடியும். இந்த விஷயத்தில், பேதுருவின் விசுவாசக் கட்டளை ஒரு செயலால் பின்பற்றப்பட்டது, மேலும் இந்த செயல் தேவனின் அற்புதம் செய்யும் சக்தியை வெளியிட்டது. அந்த மனிதன் என்றென்றும் அங்கேயே உட்கார்ந்திருக்கலாம், ஆனால் விசுவாசத்துடன் எதுவும் செய்யப்படவில்லை என்றால், எந்த அற்புதமும் இருந்திருக்காது.

இப்போது, நான் தனிப்பட்ட அனுபவத்தில் கற்றுக்கொண்ட ஒன்றை சொல்ல விரும்புகிறேன். தேவனின் அற்புதம் செய்யும் சக்தியை வெளியிட ஒரு குறிப்பிட்ட செயல் தேவை என்பதை நான் பலமுறை கற்றுக்கொண்டேன்.

நான் தெற்கு புளோரிடாவில் ஒருமுறை ஜெபம் செய்த ஒரு பெண்ணை நினைத்துப் பார்க்கிறேன், அவருக்கு மூட்டுவலி (ஆர்த்ரிட்டிஸ்) இருந்தது. அவள் ஐந்து மாதங்களாக படுக்கையில் இருந்தாள். அவள் சக்கர நாற்காலியில் தேவாலயத்திற்கு அழைத்து வரப்பட்டு, முன்னால் கொண்டு வரப்பட்டு அமர்ந்தாள். எனது செய்தியின் முடிவில், நான் வியாதிப்பட்டவர்களுக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். அவளை அழைத்து வந்தவர்கள், இந்த பெண்ணுக்காக ஜெபம் செய்யும்படி என்னிடம் கேட்டார்கள், நான் அவள் முன் மண்டியிட்டு, அவள் கால்களைப் பிடித்தேன், தேவனின் அற்புதம் செய்யும் சக்தியை என் கைகள் மூலம் அவள் உடலில் விடுவிப்பேன் என்ற விசுவாசம் இருந்தது, ஆனால், அவள் அங்கேயே அமர்ந்திருந்தாள். அவள் குணமாகிவிட்டாள் என்று நான் நம்பினேன், ஆனால் அவள் முற்றிலும் செயலற்றவளாய் இருந்தாள். பின்னர், கொஞ்சம் பதற்றம் அடையும் ஒரு காரியத்தைச் செய்தேன். நான், “எழுந்து நடக்க ஆரம்பியுங்கள்!” என்றேன். நான் அவளுக்கு என் கையைக் கொடுத்து அவளை நாற்காலியில் இருந்து வெளியே இழுத்தேன், உண்மையில், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று நான் ஆச்சரியப்பட்டேன். அவள் ஒரு கணம் நம்பிக்கையற்றவளாக என்னைப் பார்த்தாள், பிறகு, மிகவும் தயக்கத்துடன், அவள் ஒரு அடி எடுக்க ஆரம்பித்தாள்; அவளால் அதை செய்ய முடியும் என்று கண்டேன்; அடுத்த அடி எடுத்தாள்; நடக்க ஆரம்பித்தாள், 30 வினாடிகளுக்குள், அவள் தேவாலய கட்டிடத்தை சுற்றி ஓடினாள். ஆனால், நான் திரும்பிப் பார்க்கும் போது உணர்ந்தேன், நான் அவளுக்கு அந்த தூண்டுதலை ஒருபோதும் கொடுக்கவில்லை என்றால், நான் அவளை ஏதாவது செய்ய வைக்கவில்லை என்றால், தேவனின் அற்புதம் செய்யும் சக்தி அந்த பெண்ணுக்குள் ஒருபோதும் வெளியிடப்பட்டிருக்காது. எனவே, நினைவில் கொள்ளுங்கள், பல முறை, தேவனின் அற்புதம் செய்யும் சக்தியை வெளியிட ஒரு செயலை செய்ய வேண்டும்.

சரி, இன்றைக்கு நம் நேரம் முடிந்துவிட்டது. ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை, நான் குரல் வரங்களில் முதலாவது வரமான “தீர்க்கதரிசன வரம்” குறித்து பேசப் போகிறேன்.

லைக்
பகிரவும்