திரும்பவும் உங்களோடு இருப்பதில் எனக்கு சந்தோஷம். பல வருடங்களாக ஒழுங்கும்கிரமுமாக வேதாகமத்தை ஆராய்ந்து வாசித்ததன் விளைவாக மற்றும் ஊழியத்தின் மூலமாக, தேவன் எனக்கு வெளிப்படுத்திய விலைமதிக்க முடியாத சத்தியங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டு வருகிறேன்.

“மரணத்தின் மீதான வெற்றி” என்ற தலைப்பில், சத்தியங்களை இன்றும் நான் தொடருகிறேன். இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களில் எவ்வளவு தெளிவாக முன் கூட்டியே கணித்துச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும், அவருடைய உயிர்த்தெழுதலின் விளைவாக நம்முடைய உயிர்த்தெழுதல் எவ்வாறு தொடரும் என்பதையும் குறித்து நேற்றைய செய்தியில் நான் எடுத்துக் காண்பித்தேன்.

அடுத்த உலகத்திலிருந்து இந்த உலகத்தைப் பிரிக்கிற திரையின் ஒரு ஓரத்தைக் கொஞ்சம் விலக்கி, மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதைக் குறித்த ஒரு முன்னோட்டக் காட்சியை இன்றைய செய்தியில் நான் உங்களுக்குக் காண்பிக்கப் போகிறேன்.

இன்றைய செய்தியில், இயேசு வந்ததற்கு முந்தைய காலகட்டத்தைக் குறித்து நான் பேசப் போகிறேன். இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல், முழு பிரபஞ்சத்திலும், அண்டசராசரத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தியது. இந்த முழு பிரபஞ்சத்தையும், அதாவது அண்டவெளி முழுவதையும் பாதிக்கக்கூடிய விளைவுகளை அது உண்டாக்கியது. இன்னும் குறிப்பாக, கண்களால் காண முடியாத உலகத்தில் அது நிரந்தரமான, மிகப் பெரிய அழுத்தமான, நிலையான மாற்றங்களை உண்டாக்கியிருக்கிறது. இந்த வாழ்க்கையில் நீதிமான்கள் மரித்த பிறகு, அவர்களுடைய ஆத்துமாக்கள் சென்றடைவதற்கென்று முன் குறிக்கப்பட்ட இடத்திலும் அது நிரந்தரமான மாற்றங்களை பெரிய அளவில் உண்டாக்கியிருக்கிறது.

இவ்வாழ்க்கையில் மனுஷனுடைய முடிவாகிய மரணத்தைக் குறித்தும், மரணத்திற்குப் பிறகு அவனுடைய நிலை எப்படியிருக்கும் என்பதையும் புரிந்து கொள்வதற்கு சிறந்த ஒரே வழி, மனுஷன் சிருஷ்டிக்கப்பட்ட விதத்தைப் பார்ப்பதேயாகும். ஆதியாகமம் 2:7-ல் அதைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. நாம் அதை வாசிப்போம்:

7 தேவனாகிய கர்த்தர் மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். மனுஷன் ஜீவாத்துமாவானான்.

மனுஷனுடைய ஒட்டுமொத்த ஆளுமையானது, இரண்டு வெவ்வேறு வித்தியாசமான மூல ஆதாரங்களிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். கண்களால் காணக்கூடிய, மனுஷனுடைய மாம்ச சரீரமானது, கீழேயிருந்து பூமியின் மண்ணினால் உருவாக்கப்பட்டது. ஆனால் கண்களால் காண முடியாத, மனுஷனுடைய ஆத்துமாவானது மேலேயிருந்து, தேவனால் உருவாக்கப்பட்டது. ஆக, இரண்டு வித்தியாசமான மூல ஆதாரங்களின் கூறுகளை ஒன்றாய் இணைத்து உருவாக்கப்பட்டவனாக மனுஷன் இருக்கிறான்: அவனுடைய மாம்ச சரீரம், கீழே பூமியிலுள்ள மண்ணினால் உருவாக்கப்பட்டது; அவனுடைய ஆவிக்குரிய பகுதி, மேலேயிருக்கும் தேவனிடமிருந்து உருவானது. இவ்வாழ்க்கையில் மனுஷனுடைய முடிவாகிய மரணத்தைக் குறித்து நாம் அறிந்து கொள்ளும்போது, இதை நாம் நம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.

மரணத்தில், மனுஷனுடைய இந்த இரண்டு வித்தியாசமான பகுதிகளும் திரும்பவும் பிரிக்கப்படுகின்றன. சரீரமானது, எங்கேயிருந்து உருவாக்கப்பட்டதோ, அந்த பூமியின் மண்ணிற்கே திரும்புகிறது, சிதைந்து, அழுகிப் போகின்றது. ஆத்துமா, கண்களால் பார்க்க முடியாத உலகத்திற்குள் கடந்து செல்கிறது. கண்களால் காண முடியாத இந்த உலகத்திற்கு வேதாகமத்தில் இரண்டு வார்த்தைகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. எபிரெய மொழியில், இது ஷியோல் எனும் பாதாளம் என்று அழைக்கப்படுகிறது. புதிய ஏற்பாட்டின் கிரேக்க மொழியில், இது பரதீசு (Hades) என்றழைக்கப்படுகிறது.

ஷியோல் (Sheol) எனும் பாதாளத்தில் இருந்த பழைய ஏற்பாட்டு ஆத்துமாக்களைக் குறித்த ஒரு படத்தை இப்பொழுது நாம் பார்ப்போம். இந்தப் படம், ஏசாயா 14:9-10 வசனங்களில் காணப்படுகிறது. பாபிலோனிய ராஜாவின் மீது வரும் தேவனுடைய நியாயத்தீர்ப்பைக் குறித்து இது முன் கூட்டியே கணித்துச் சொல்கிறது. பாபிலோனிய ராஜாவின் ஆத்துமா எவ்வாறு ஷியோல் எனும் பாதாளத்திற்குள் இறங்கும் என்பதைக் குறித்தும், அந்த ஆத்துமா அங்கே எவ்வாறு அங்கீகரிக்கப்படுகிறது என்பதைக் குறித்தும், அதாவது, அதற்கு முன்பு மரித்த ராஜாக்கள் மற்றும் மற்ற நபர்களால் அது எவ்வாறு மதிக்கப்படுகிறது என்பதைக் குறித்தும் இவ்வசனங்கள் நமக்குச் சொல்கின்றன. ஏசாயா என்ன சொல்கிறான் என்பதை நாம் கவனிப்போம்:

9 கீழே இருக்கிற பாதாளம் உன் நிமித்தம் அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உன் நிமித்தம் எழுப்பி, ஜாதிகளுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கப் பண்ணுகிறது. 10 அவர்களெல்லாரும் உன்னை நோக்கி, “நீயும் எங்களைப் போல பலட்சயமானாயோ? (பலவீனமானாயோ?) எங்களுக்குச் சமானமானாயோ?” என்று சொல்வார்கள்.

ஷியோல் எனும் பாதாளம் என்பது, மாம்ச சரீரத்திலிருந்து உயிர் பிரிந்த பிறகு அதன் ஆத்துமாக்கள் செல்கிற ஒரு இடமாயிருக்கிறது. ஆனால் ஷியோல் என்பது உயிர் பிரிந்த ஆத்துமாக்களின் கடைசி இடம் கிடையாது. அது தற்காலிகமான சிறையிருப்பின் ஒரு இடமாகும். அங்கே அந்த ஆத்துமாக்கள், கடைசி உயிர்த்தெழுதல் மற்றும் நியாயத்தீர்ப்புக்காக காத்திருக்கின்றன. ஆனால் நாம் அதைக் குறித்து பின் வரும் செய்திகளில் பார்ப்போம். இப்பொழுது நாம், ஏசாயா 14:9,10 வசனங்களில் எழுதப்பட்டிருக்கிற விவரங்களைப் பார்ப்போம். பாபிலோனிய ராஜாவின் ஆத்துமா பாதாளத்திற்குள் இறங்குகிறதைக் குறித்து இங்கு நாம் வாசிக்கிறோம். சில முக்கியமான குறிப்புகளை இங்கே நாம் எடுத்துக் கொள்வோம்.

முதலாவது குறிப்பு: பூமியில் அப்பொழுது நிகழ்ந்து கொண்டிருந்த சம்பவங்களைக் குறித்து அந்தப் பிரிந்து போன ஆத்துமாக்கள் அறிந்திருந்தனவா என்று எதுவும் இங்கே சொல்லப்படவில்லை.

இரண்டாவது குறிப்பு: ஆனால் பூமியில் முன்பு அவர்கள் வாழ்ந்தபோது நிகழ்ந்தவைகளெல்லாம் அந்த ஆத்துமாக்களின் நினைவில் இருந்தன என்பது இங்கே மிகவும் குறிப்பாக, நிச்சயமாகச் சுட்டிக் காண்பிக்கப்பட்டிருக்கிறது.

மூன்றாவது குறிப்பு: அங்கே அந்த ஆத்துமாக்களின் ஆளுமையோ, சுபாவமோ மாறவே இல்லை.

நான்காவது குறிப்பு: அங்கே ஒருவருடைய ஆத்துமா, இன்னொருவருடைய ஆத்துமாவை அறிந்து வைத்திருந்தது.

ஐந்தாவது குறிப்பு, அங்கே அந்த ஆத்துமாக்கள் ஒன்றோடொன்று பேசிக் கொண்டன, உரையாடின.

ஆறாவது குறிப்பு, ஷியோல் எனும் பாதாளத்தில், அந்த ஆத்துமாக்களின் அப்பொழுதைய நிலை என்ன என்பதை அவை நன்கு அறிந்து வைத்திருந்தன.

ஏழாவது குறிப்பு: பிரிந்து போன ஆத்துமாக்கள் பூமியில் வாழ்ந்தபோது என்ன நிலையில் இருந்ததோ, அதற்கும், ஷியோல் பாதாளத்தில் அவற்றின் நிலைக்கும் இடையே ஒரு தொடர்பு இருந்தது. அதாவது பூமியில் வாழ்ந்தபோது ராஜாக்களாய் இருந்தவர்கள், ஷியோல் பாதாளத்திலும் ராஜாக்களாகவே அங்கீகரிக்கப்பட்டனர்.

இப்பொழுது நாம் எசேக்கியேல் 32-ம் அதிகாரத்திற்குச் செல்வோம். 18-32 வசனங்களில், எகிப்தின் ராஜா பாரவோன் மீது, யுத்தத்தில் கொல்லப்பட்ட புற ஜாதி ராஜாக்கள் மற்றும் அவர்களுடைய ராணுவங்களின் மீது விழுந்த தேவனுடைய நியாயத்தீர்ப்பைக் குறித்த இதே போன்றதொரு, ஆனால் மிக மிகப் பெரிய ஒரு படத்தை நாம் பார்க்கின்றோம். இது ஒரு நீளமான வேதப்பகுதி. முழுவதையும் இப்பொழுது நம்மால் வாசிக்க முடியாது. ஆனால் ஏசாயா 14:9-10 வசனங்களில் உள்ள அனைத்து குறிப்புகளையும் இது அப்படியே பிரதிபலிக்கிறது.

அந்தக் குறிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறபடியால், நான் அவற்றை திரும்பவும் பட்டியலிடுகிறேன். ஏழு குறிப்புகளை நான் சுட்டிக் காண்பித்துச் சொல்லியிருந்தேன்.

முதலாவது குறிப்பு: பூமியில் அப்பொழுது நிகழ்ந்து கொண்டிருந்த சம்பவங்களைக் குறித்து அந்தப் பிரிந்து போன ஆத்துமாக்கள் அறிந்திருந்தனவா என்று எதுவும் இங்கே சொல்லப்படவில்லை.

இரண்டாவது குறிப்பு: ஆனால் பூமியில் முன்பு அவர்கள் வாழ்ந்தபோது நிகழ்ந்தவைகளெல்லாம் அந்த ஆத்துமாக்களின் நினைவில் அப்படியே இருந்தன.

மூன்றாவது குறிப்பு: அங்கே அந்த ஆத்துமாக்களின் ஆளுமையோ, சுபாவமோ மாறவே இல்லை.

நான்காவது குறிப்பு: அங்கே ஒருவருடைய ஆத்துமா, இன்னொருவருடைய ஆத்துமாவைக் குறித்து அறிந்து வைத்திருந்தது.

ஐந்தாவது குறிப்பு, அங்கே அந்த ஆத்துமாக்கள் ஒன்றோடொன்று பேசிக் கொண்டன, உரையாடின.

ஆறாவது குறிப்பு, ஷியோல் எனும் பாதாளத்தில், அந்த ஆத்துமாக்களின் அப்பொழுதைய நிலை என்ன என்பதை அவை நன்கு அறிந்து வைத்திருந்தன.

ஏழாவது குறிப்பு: பிரிந்து போன ஆத்துமாக்கள் பூமியில் வாழ்ந்தபோது என்ன நிலையில் இருந்ததோ, அதற்கும், ஷியோல் பாதாளத்தில் அவற்றின் நிலைக்கும் இடையே ஒரு தொடர்பு இருந்தது. அதாவது பூமியில் வாழ்ந்தபோது ராஜாக்களாய் இருந்தவர்கள், ஷியோல் பாதாளத்திலும் ராஜாக்களாகவே அங்கீகரிக்கப்பட்டனர்.

இவ்வாழ்க்கையை விட்டு பிரிந்து செல்கிற ஆத்துமாக்களுக்கு என்ன நடக்கிறது என்பதைக் குறித்த ஒரு படத்தை இயேசுவே புதிய ஏற்பாட்டில் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

இது ஐசுவரியவான் ஒருவனுடைய வீட்டுக் கதவருகே கிடந்த லாசரு என்ற தரித்திரனைக் குறித்த ஒன்றாகும். அவன் ஐசுவரியவானுடைய மேஜையிலிருந்து விழும் உணவுத் துண்டுகளைப் பொறுக்கித் தின்பதற்கு ஆசையாயிருந்தான். அவர்கள் இருவரும் மரித்த அந்தத் தருணத்திலிருந்து நாம் ஆரம்பிப்போம். லூக்கா 16:22-26 வசனங்களை நாம் வாசிப்போம்:

22 பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டு போய் விடப்பட்டான். ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான். 23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும், அவன் மடியிலே லாசருவையும் கண்டான். 24 அப்பொழுது அவன், “தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப் பண்ணும்படி, அவனை அனுப்ப வேண்டும். இந்த அக்கினி ஜூவாலையில் வேதனைப்படுகிறேனே,” என்று கூப்பிட்டான். 25 அதற்கு ஆபிரகாம், “மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்கும் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய். லாசருவும் அப்படியே தீமைகளை அனுபவித்தான். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான். நீயோ வேதனைப்படுகிறாய். 26 அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்து போகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்கு கடந்து வரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும் பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது,” என்றான்.

இந்த வார்த்தைகளெல்லாம் இயேசுதாமே சொன்ன வார்த்தைகள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மற்ற எல்லா அதிகாரங்களைக் காட்டிலும், இந்த வார்த்தைகளை அதிகமாய், நிச்சயமாய் நம்பலாம். அது மட்டுமல்ல, இது ஒரு உவமை என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்கு முந்திய காலகட்டத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவமாய் இருக்கிறது.

இயேசுவின் இந்த விவரிப்பு பழைய ஏற்பாட்டில் காணப்படும் பல அம்சங்களை மீண்டும் எடுத்துக் காண்பிக்கிறது.

முதலில் ஒன்றை நாம் கவனிக்கிறோம். சரீரம் பூமிக்குத் திரும்பியது. ஆனால் ஆத்துமா கண்களால் பார்க்கமுடியாத உலகத்திற்குள் கடந்து சென்றது. இந்த இடம் புதிய ஏற்பாட்டில், ஹேட்ஸ் (Hades) என்றழைக்கப்படுகிறது. கண்களால் பார்க்க முடியாத இந்த உலகத்தில், பின்வரும் காரியங்கள் இருக்கின்றன. இவையனைத்தும் அப்படியே பழைய ஏற்பாட்டிலிருந்து கொண்டு வரப்படுகின்றன. முதலில், பூமியில் வாழ்ந்த அவர்களுடைய முந்தைய நினைவுகூருதல் அங்கே நடக்கிறது. “நீ பூமியில் வாழ்ந்தபோது, சுகபோகமாய் வாழ்ந்தாய், எல்லா சௌகரியங்களையும் அனுபவித்தாய் என்பதை நினைவில் வைத்துக் கொள்,” என்று ஆபிரகாம் ஐசுவரியவானைப் பார்த்துச் சொன்னான். இது சுவாரசியமான ஒன்றாக இருக்கிறது. ஆக, பூமியில் வாழ்ந்த வாழ்க்கையைக் குறித்த நினைவுகூருதல் அங்கே நடக்கிறது. இது தெளிவாக இங்கே தெரிகிறது.

இரண்டாவதாக, அவர்களுடைய ஆளுமையில் எந்த மாற்றமுமில்லை. லாசரு அப்பொழுதும் லாசராகத்தான் இருந்தான். ஆபிரகாம் அப்பொழுதும் ஆபிரகாமாகத்தான் இருந்தான். ஐசுவரியவானிடம் அப்பொழுது ஐசுவரியங்கள் இல்லை என்றாலும், அவன் அப்பொழுதும் ஐசுவரியவானாகத்தான் இருந்தான். அடுத்ததாக, அவர்கள் ஒருவர் மற்றவரை அடையாளம் கண்டு கொண்டனர். ஐசுவரியவான், ஆபிரகாமையும், லாசருவையும் அடையாளம் கண்டு கொண்டான். அப்பொழுது அவர்களுடைய நிலைமை என்ன என்பதைக் குறித்த உணர்வு அவர்களிடம் இருந்தது. அதிலும் குறிப்பாக, மகா வேதனைக்குள்ளாகிற ஒரு இடத்தில் இருக்கிறோம் என்பதை ஐசுவரியவான் நன்கு உணர்ந்திருந்தான். அந்த மகா வலி, வேதனையை அவர் உணர்ந்தான். ஆனால் இந்த வேதப்பகுதியில், இயேசு கூடுதலாக இன்னொரு விஷயத்தையும் சேர்த்துச் சொல்கிறார். அது என்னவென்றால், நீதிமான்களுக்கும், அநீதிமான்களுக்கும் இடையே நிரந்தரமான ஒரு பிரிவு (பிளவு) அங்கே இருந்தது. உயிர் பிரிந்த ஆத்துமாக்களுக்கென்று நியமிக்கப்பட்ட இந்த இடத்தில், அந்த இரு பிரிவினரும் இருந்தாலும், அந்த இடத்தில் அவர்கள் இரு வேறு வித்தியாசமான பிரிவுகளில் இருந்தனர். அவர்களுக்கு நிகழ்ந்த காரியங்களில் பெரிய வித்தியாசம் இருந்தது. துன்மார்க்கமான ஐசுவரியவான், அக்கினிப் பிளம்பில் மகா வேதனைக்குள்ளானான். ஆனால் தரித்திரத்தில் வாழ்ந்த நீதிமானோ, இளைப்பாறினான். அவன் இளைப்பாறின இடம், ஆபிரகாமின் மடி என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது ஆபிரகாமின் விசுவாச அடிகளைப் பின்பற்றி வாழ்ந்தவர்களுக்குரிய இடம் என்பதைச் சுட்டிக் காண்பிக்கும்படி இங்கு ஆபிரகாம் குறிப்பிடப்பட்டிருக்கிறான்.

இன்னொரு முக்கியமான விஷயமும் இயேசு பேசின இந்த வேதப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. தேவனடைய தூதர்கள், லாசருவின் ஆத்துமாவை பொறுப்பேற்றுக் கொண்டனர் என்பதுதான் அது. தேவதூதர்கள் அவனுடைய இளைப்பாறுதலின் இடத்திற்கு அவனைச் சுமந்து சென்றனர். இதற்கு அப்படியே நேரெதிரான விஷயம், துன்மார்க்கரின் அனுபவத்தில் நடக்கிறது. சாத்தானுடைய தூதர்கள், துன்மார்க்கரின் ஆத்துமாக்களை பொறுப்பேற்றுக் கொள்கின்றனர். வெளிப்படுத்தின விசேஷம் 6:8, யோவன் அதை வெளிப்படுத்துகிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்:

8 நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன். அதின் மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர். பாதாளம் அவன் பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலை செய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.

இங்கு ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இவ்வசனத்தில், மரணம் மற்றும் பாதாளம் என்பவைகள் நபர்களாகச் சுட்டிக் காண்பித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. உண்மையில், இவை சாத்தானின் தூதர்களாக இருக்கின்றன. மரணத்தின் வல்லமை, மனுஷருடைய சரீரங்களின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. பாதாளத்தின் வல்லமை, மனுஷருடைய ஆத்துமாக்களின் மீது ஆதிக்கம் செய்கிறது. மரணம், மனுஷரை மரிக்கச் செய்கிறது. பாதாளம் அவனைப் பின் தொடர்ந்து செல்கிறது. உயிர் பிரிந்த துன்மார்க்கரின் ஆத்துமாக்களின் மீது அது ஆதிக்கம் செலுத்துகிறது. அவர்களுக்கென்று நியமிக்கப்பட்ட சிறையிருப்பிற்குள்ளும், மகா வேதனையான இடத்திற்குள்ளும் அது அவர்களைச் சுமந்து செல்கிறது. ஆக, பழைய மற்றும் புதிய ஏற்பாட்டிலிருந்து நாம் வாசித்த இந்த வேதப்பகுதிகளிலிருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்கிறோம். ஒன்றுக்கொன்று முரண்படாத, ஒரே மாதிரியான படத்தைத்தான் நாம் பார்க்கிறோம். உயிர் பிரிந்த ஆத்துமாக்கள் சென்றடைகின்ற இடத்தைக் குறித்து பல தெளிவான விவரங்களை இங்கே நாம் பார்க்க முடிகிறது. அதாவது, இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் முந்திய காலகட்டத்தில் என்ன நிகழ்ந்தது என்று நாம் இங்கே பார்க்கிறோம்.

இன்றைக்கு நம் நேரம் முடிந்து விட்டது. ஆனால் நாளை திரும்பவும் இதே நேரம் உங்களை நான் சந்திப்பேன்.

இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் விளைவாக, கண்களால் பார்க்க முடியாத உலகத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்தது என்பதைக் குறித்து நாளைய செய்தியில் நான் விளக்கிச் சொல்வேன். இப்பொழுது நீதிமான்களின் உயிர் பிரிந்தால், அவர்களுடைய ஆத்துமாக்கள் எங்கே செல்லும் என்பதைக் குறித்து, அவர்களுக்காக காத்திருக்கிற அவ்விடத்தைக் குறித்து நாளை நாம் பார்ப்போம்

லைக்
பகிரவும்