ஆவிக்குரிய ஊட்டச்சத்து

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: செப்டம்பர் 2026
Read Time: 10
உங்கள் ஆன்மீக வாழ்வு போஷாக்கு இன்றி வாடுகிறதா? டெரெக் பிரின்ஸின் 'தேவனுடைய வார்த்தை உங்களுக்கு என்ன செய்யும்' தொடரின் 4-ஆம் பகுதியான 'ஆன்மீக போஷாக்கு' மூலம், தேவனுடைய வார்த்தை எவ்வாறு ஒரு விதையாகவும் உணவாகவும் இருந்து, மறுபிறப்பினால் உங்களுக்குள் உருவான புதிய வாழ்வை வளர்க்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் ஆன்மீக வளர்ச்சியில் வேதவசனத்தின் இன்றியமையாத பங்கை இந்தப் போட்காஸ்ட் வெளிப்படுத்துகிறது.
Transcript
"தேவனுடைய வார்த்தை உங்களுக்கு என்ன செய்யும்" என்ற அற்புதமான இரகசியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும்படி இன்று மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது, தேவன் கோரும் விதத்தில் நீங்கள் தேவனுடைய வார்த்தைக்கு உங்கள் இதயத்தைத் திறந்து அதைப் பெறுவீர்கள் என்றால், அது உங்களுக்கு நிச்சயம் புலப்படும்.
எந்த ஒரு மனிதனும் அனுபவிக்க முடியாத மிகப் பெரிய அற்புதத்தை-புதிய பிறப்பை-தேவனுடைய வார்த்தை உங்களில் எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை நேற்று உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். தேவனுடைய வார்த்தை எப்படி ஒரு விதையைப் போன்றது என்பதை விளக்கினேன். நாம் இந்த அழியாத விதையை விசுவாசத்தால் நம் இதயங்களுக்குள் பெறும்போது, பரிசுத்த ஆவியானவர் அந்த விதையிலிருந்து முற்றிலும் புதிய வகையான ஜீவனைக் கொண்டு வருகிறார், அது விதையின் தன்மையையுடைய ஒரு ஜீவன்—அழியாத, நித்திய, தெய்வீக— சொல்லப்போனால் உண்மையில், அது தேவனுடைய உயிருள்ள வார்த்தையாகிய இயேசுவின் வாழ்க்கை மற்றும் இயல்பு.
தேவனுடைய வார்த்தை நம்மில் உருவாக்கும் அடுத்த முக்கிய விளைவைக் கருத்தில் கொள்ள இது இயற்கையாகவே நம்மை வழிநடத்துகிறது. புதிய பிறப்பின் மூலம் நமக்குள் வந்திருக்கும் புதிய வாழ்க்கையை நிலைநிறுத்தவும், பலப்படுத்தவும், தகுந்த ஆவிக்குரிய ஊட்டச்சத்தை நமக்கு தேவை.
ஒரு உயிரினம் உலகில் எங்கு பிறந்தாலும், அதன் முதல் மற்றும் மிக அவசரத் தேவை சரியான ஊட்டச்சத்து ஆகும். ஒரு மனித குழந்தையின் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த குழந்தை உலகிற்கு அழகாக, எல்லா வகையிலும் சரியான, ஆரோக்கியமான குழந்தையாக வரலாம். ஆனால், அது சரியான ஊட்டச்சத்தை விரைவாகப் பெறவில்லை என்றால், அது வளராமல் இருப்பது மட்டுமல்ல, அது உண்மையில் இறந்துவிடும். மேலும், குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்து அதன் வளர்ச்சியின் நிலைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இது ஒரு வகையான ஊட்டச்சத்தில் தொடங்கி மற்றொரு வகைக்கு செல்கிறது. இறுதியாக திட உணவுகள் வரை.
தேவனுடைய வார்த்தையும் அப்படித்தான். புதிய பிறப்பின் மூலம் நமக்குள் வரும் புதிய வாழ்க்கையை நிலைநிறுத்தவும் பலப்படுத்தவும் தேவன் அளித்த போஷாக்கு அது.
அந்த வகையில் தேவனுடைய வார்த்தை எவ்வளவு அற்புதமானது என்று சிந்தியுங்கள். புதிய பிறப்பை உருவாக்கும் விதை மட்டுமல்ல, புதிய பிறப்பின் மூலம் வரும் உயிருக்கு ஊட்டமளிக்கும் உணவும் கூட. மேலும் தேவன் தம்முடைய வார்த்தையின் மூலம் வழங்கிய உணவு, மனிதக் குழந்தைக்குத் தேவையான சரீர உணவைப் போன்றது. இது நமது ஆவிக்குரிய வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஏற்றதாக இருக்கிறது.
நிச்சயமாக, ஒரு குழந்தையின் முதல் தேவை நிலை பால். இந்த தேவனுடைய வார்த்தை அதனை வழங்குகிறது. நேற்று, புதிய பிறப்பைப் பற்றி பேசுகையில், நான் 1 பேதுரு 1:23 ஐ மேற்கோள் காட்டினேன், அங்கு பேதுரு கூறுகிறார்:
"அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே."
அடுத்த அதிகாரத்தின் தொடக்கத்தில் 1 பேதுரு 2:1-3 வசனங்கள், இந்தப் புதிய வாழ்க்கைக்கு தேவையான ஊட்டச்சத்து குறித்த கேள்வியை பேதுரு கையாள்கிறார். அவர் சொல்வது இதுதான்:
"1 இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால், 2 சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு, 3 நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்."
தேவன் நம்மிடம் வருவதைப் பற்றி பேதுரு "ருசி" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், நாம் எதையாவது சுவைக்கும்போது, அதை நமக்குள் எடுத்துக்கொள்கிறோம், அது நம்மில் ஒரு பகுதியாக மாறிவிடும். நாம் அதை பார்க்கும்போது அல்லது நாம் அதை தொடும்போது அல்லது நாம் அதை கேட்கும்போதுகூட அது நம்மில் ஒரு பகுதியாக மாறாது. ஆனால் நாம் எதையாவது சுவைக்கும்போது, அது நம்மில் ஒரு பகுதியாக மாறும். அப்படித்தான், தேவன் நம் வாழ்வில் வர விரும்புகிறார். அவர் வெளிப்புறமாக, வெளியில் மட்டுமே இருக்க விரும்பவில்லை. அவர் நமக்குள் நேரடியாக வந்து, நம்மில் ஒரு பகுதியாக மாற விரும்புகிறார். இதை அவர் தம் வார்த்தையின் மூலம் செய்கிறார்.
எனவே, நமது ஆவிக்குரிய வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்திற்கு, நாம் வளர உதவும் தூய்மையான பால், தேவனுடைய வார்த்தையில் உள்ளது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். இருப்பினும், பேதுரு நமக்குக் கொடுக்கும் எச்சரிக்கையையும் நாம் மனதில் கொள்ள வேண்டும், ஏனென்றால், பால் மிகவும் எளிதில் தயிர் ஆகிறது. பால் பாட்டிலில் அல்லது வயிற்றில் உள்ள தவறான விஷயங்கள் பாலை தயிராக்கி விட்டால், அது நமக்கு நன்மை செய்யாது. மேலும், தேவனுடைய வார்த்தையாகிய பாலானது, நமக்கு உண்மையான விளைவையோ நன்மையையோ ஏற்படுத்தாதபடிக்கு அதனை தயிராக்கிவிடக்கூடிய சில விஷயங்களைக் குறித்து பேதுரு நம்மை எச்சரிக்கிறார். துர்க்குணம், கபடம், வஞ்சகம், பொறாமை மற்றும் புறங்கூறுதல் ஆகிய ஐந்து விஷயங்களை நாம் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். எனவே, நீங்கள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கச் செய்யும் பாலுக்கான தேவனுடைய வார்த்தைக்கு நீங்கள் திரும்பும்போது, பாலைத் தயிராக்கும் விஷயங்களை உங்கள் இதயத்தில் வைத்திருக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். துர்க்குணம், கபடம், வஞ்சகம், பொறாமை மற்றும் புறங்கூறுதல் ஆகியவற்றை ஒதுக்கி வைக்கவும்.
பின்னர் பாலில் இருந்து, நிச்சயமாக, நாம் ரொட்டி அல்லது தானியங்களுக்கு செல்கிறோம். தேவனுடைய வார்த்தையும் அதை வழங்குகிறது. மத்தேயு 4:4 இல் இயேசு சொன்னார்:
"...மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்."
எனவே சரீரத்திற்கு ரொட்டி இருக்கிறது போல, ஆவிக்குரிய ரீதியில் தேவனுடைய வார்த்தை உள்ளது. மேலும் நாம் தேவனுடைய வார்த்தையின் அப்பத்தை சார்ந்துகொள்ள வேண்டும்.
கிரேக்கத்தில் அது "தேவனுடைய வாயிலிருந்து புறப்படக்கூடிய ஒவ்வொரு வார்த்தையும் " என்று கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது தேவனுடன் உள்ள தொடர்ச்சியான உறவைக் குறிக்கிறது, அங்கு நாம் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம், அவருடைய வாயிலிருந்து வார்த்தை வெளிவரும்போது, அதைப் பெறுகிறோம். அது "ஒவ்வொரு வார்த்தையும்" என்று கூறுகிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அதில் அனைத்து வேதங்களும் அடங்கும். நாம் அங்கும் இங்கும் வேதத்தின் சிறு சிறு குறிப்புகளை மட்டும் வைத்து வாழக்கூடாது, மாறாக முழு வேதத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
2 தீமோத்தேயு 3:16-17 கூறுகிறது:
"16 வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; ... 17 அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது."
எனவே நீங்கள் வளர விரும்பினால், உங்கள் முழு பைபிளையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். நான்கு சுவிசேஷங்கள் அல்லது சங்கீதங்களில் உள்ள ஒன்று அல்லது இரண்டு பகுதிகள் மட்டுமல்ல. சகரியா மற்றும் எசேக்கியேல் மற்றும் மல்கியா போன்ற சிறந்த புத்தகங்களையும் நீங்கள் அறிய வேண்டும். அவை எங்கிருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்து, அவைகள் என்ன சொல்கின்றன என்பதைக் கண்டறியவும். நீங்கள் இருக்க வேண்டிய கிறிஸ்தவர்களாக உங்களைப் போஷிக்கவும் உங்களைப் பலப்படுத்தவும் கூடிய ஒன்று, அவற்றில் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பால் மற்றும் அப்பம் ஆகிய இரண்டையும் வழங்கும் தேவனுடைய வார்த்தையைப் பற்றி நான் உங்களிடம் பேசினேன். ஆனால், நிச்சயமாக, இது ஒரு முழுமையான உணவு அல்ல. மொத்த உணவைப் பற்றி - திட உணவைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது என்பதை இப்போது நான் தொடர விரும்புகிறேன். இதை எபிரேயர் 5:12-14 இல் காண்கிறோம்.
"12 காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு, தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள். 13 பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். 14 பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்."
எபிரேய எழுத்தாளர் கூறுகின்ற இந்தக் கிறிஸ்தவர்களைப் போல ஒருவர் இருக்க முடியும் என்பதைக் கவனித்து பாருங்கள். அதற்கு அவர், “இப்போது நீங்கள் வளர்ந்திருக்க வேண்டும். நீங்கள் திட உணவைக் கையாளக்கூடியவராக இருக்க வேண்டும். ஆனால் உண்மை என்னவென்றால், நீங்கள் இன்னும் குழந்தைகளைப் போலவே வாழ்கிறீர்கள். நீங்கள் அங்கும் இங்கும் சில சிறிய வசனங்களை மட்டுமே எடுக்கிறீர்கள். நீங்கள் உண்மையில் முதிர்ச்சியடையவில்லை." மேலும், இதைப் பற்றி பேசுகையில், முதிர்ச்சியடைவதற்கான தகுதிகளை அவர் விவரிக்கிறார். "திட உணவு என்பது முதிர்ந்தவர்களுக்கானது, அவர்கள் பயிற்சியின் காரணமாக நன்மை மற்றும் தீமைகளை அறிய தங்கள் புலன்களைப் பயிற்றுவிக்கிறார்கள்" என்று அவர் கூறுகிறார். வளருவதற்கு பயிற்சி தேவை. உங்கள் ஆவிக்குரிய உணர்வுகளை நீங்கள் பயிற்றுவிக்க வேண்டும். நீங்கள் உணர்திறன் உள்ளவர்கள் ஆக வேண்டும். நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.
சில கிறிஸ்தவர்கள் சத்தமாக கத்தும் பிரசங்கியாளர்களுக்கு "ஆமென்" என்று சொல்வார்கள். சிலர் இதனை ஆவிக்குரிய காரியம் என்று கருதுகின்றனர். ஆனால் பிரசங்கியார் சொல்வதை நான் ஏற்றுக்கொண்டால் ஒழிய, அல்லது தேவனுடைய வார்த்தையுடன் அது ஒத்துப்போகும் வரை, நான் "ஆமென்" என்று சொல்ல மாட்டேன். எப்படியென்றால், என் புலன்களைப் பயிற்றுவிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கின்றேன். நான் பயிற்சி செய்திருக்கின்றேன். நான் பல ஆண்டுகளாக தேவனுடைய வார்த்தையில் வாழ்ந்து வருகிறேன். அதனால், நான் அவ்வளவு எளிதில் ஏமாந்து விடுவதில்லை. தேவனுடைய கிருபையால், நான் பாலில் அல்லது ரொட்டியில் கூட வாழவில்லை என்று என்னால் தைரியமாக சொல்ல முடியும். தேவனுடைய வார்த்தையின் திட உணவை என்னால் கையாள முடிகிறது. நான் விசேஷமான ஒருவனாக இருப்பதால் அல்ல, ஆனால் தேவனுடைய தேவைகளை நான் பூர்த்தி செய்ததால் சொல்கிறேன். நான் பயிற்சி செய்தேன். நான் என் புலன்களைப் பயிற்றுவித்தேன். நான் வேதத்தில் வாழ்ந்து, வேதத்தில் நடந்தேன், அதைப் படித்து, ஜெபித்து, மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். அது என்னுள் திட உணவாகிவிட்டது.
இப்போது ஒரு மாற்று விஷயம் உள்ளது. ஐயோ, இது மிகவும் சோகமான மாற்று. சில சமயங்களில் உலகில் பிறந்த ஒரு குழந்தையைப் பார்த்து, “எவ்வளவு அழகாக இருக்கிறது" என்று நாம் சொல்வதுண்டு. குழந்தைத்தனமான அதன் செயல்களை நாம் விரும்புகிறோம். அது நன்றாக பேச வேண்டும் அல்லது புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வேண்டும் அல்லது வாழ்க்கையின் பிரச்சினைகளைக் கையாள வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதில்லை. ஆயினும்கூட, அது ஒரு சிறிய குழந்தை என்பதால், அது அழகாக இருக்கிறது. ஆனால் அந்த சிறு குழந்தை வருடா வருடம் அந்த நிலையில் தொடர்கிறது என்று வைத்துக்கொள்வோம். முதலில் அந்த சிறு குழந்தை வந்தபோது அழகாகவும் விரும்பத்தக்கதாகவும் இருந்தது, அப்படியே தொடர்ந்தால் சோகமாகிவிடும். அதை பின்தங்கிய வளர்ச்சி என்கிறோம்.
பரிதாபகரமாக, பல கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் நாம், பின்தங்கிய வளர்ச்சியின் சிக்கலைக் கொண்டுள்ளோம் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்கள் பல ஆண்டுகளாக கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் இன்னும் பாலில் வாழ்கிறார்கள். அவர்கள் இன்னும் குழந்தைகள். அவர்கள் நன்மை தீமைகளை பகுத்தறிய இயலாது இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் புலன்களைப் பயிற்றுவிக்கவில்லை. மேலும் அவர்கள் நம்மை வஞ்சிக்கக்கூடிய எளிதான இரைகளாகும். மேலும், இறையியல் மொழியைப் பயன்படுத்துபவர்கள் மேடையில் இருந்து கூச்சலிடுவார்கள், ஆனால் உண்மையில் வேதவாக்கியங்களின்படி வசனம் என்ன சொல்கின்றது என்று அவர்கள் கூறுவதில்லை.
அத்தகைய குழந்தையின் காட்சியை நீங்கள் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் - அது எவ்வளவு சோகமானது என்று பாருங்கள். எபேசியர் 4:14 இல், பவுல், தேவனுடைய வார்த்தை மற்றும் தேவனுடைய ஊழியர்களின் ஒழுக்கத்தின் கீழ் வர வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும், கிறிஸ்துவின் சரீரத்தில் செயல்பாட்டு அங்கமாக மாற வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் பேசுகிறார். இந்த நிலைமைக்கு நாம் வந்துவிட்டால், காற்றின் அலைகளால் முன்னும் பின்னுமாகத் தூக்கி எறியப்பட்ட, கற்பித்தலின் ஒவ்வொரு காற்றாலும், மனிதர்களின் தந்திரத்தாலும், அவர்களின் வஞ்சக சூழ்ச்சியாலும் அங்கும் இங்கும் வீசப்பட்ட குழந்தைகளாக நாம் இருக்க மாட்டோம் என்று அவர் கூறுகிறார்.
எனவே, நீங்கள் ஒரு குழந்தையாக இருக்க விரும்பவில்லை என்றால், அங்கும் இங்கும் தள்ளப்பட்டு, எப்போதும் வஞ்சகத்திற்கு திறந்திருக்க வேண்டாமென்றால், ஒருபோதும் ஸ்திரத்தன்மையையோ முதிர்ச்சியையோ அடையாமல் போக வேண்டாம் என்றால், நீங்கள் தேவனுடைய வார்த்தைகளின் உணவில் வாழ வேண்டும். பாலில் தொடங்கி அப்பத்திற்குச் செல்லுங்கள், அப்படியே தொடர்ந்து திட உணவு வரை செல்லுங்கள்.
இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் உங்களிடம் மீண்டும் வருவேன். "தேவனுடைய வார்த்தை உங்களுக்கு என்ன செய்யும்" என்ற இந்த கருப்பொருளில் நான் தொடர்ந்து பேசப்போகிறேன். தேவனுடைய வார்த்தையின் மிக முக்கியமான விளைவுகளில் ஒன்றை நான் சொல்லிவிட்டு, அதன் மூலம் நீங்கள் எப்படி உடல் நலம் பெறலாம் என்பதை விளக்கவுள்ளேன்.
குறியீடு: RP-R005-104-TAM









