தனிப்பட்ட சாட்சியின் முக்கியத்துவம்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 10
வெற்றிகரமான வாழ்விற்கான திறவுகோல்களைத் தேடுகிறீர்களா? விசுவாசத்தை உறுதிப்படுத்தி, வாழ்வின் திசையை மாற்றிய அனுபவங்களைக் கேட்க டெரெக் பிரின்ஸுடன் இணையுங்கள். 'எனது வாழ்க்கை புத்தகத்தின் பக்கங்கள்' என்ற தொடரில் அவர் தனது தனிப்பட்ட கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார். இந்த அறிமுகப் பகுதியில், சாட்சி பகிர்தலின் முக்கியத்துவத்தையும், உலகம் முழுவதும் இயேசுவின் சாட்சிகளாகத் திகழும் வல்லமையையும் அவர் விளக்குகிறார்.
Transcript
ஒரு புதிய வாரத்தின் தொடக்கத்தில் மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. பல வருட தனிப்பட்ட அனுபவம் மற்றும் கிறிஸ்தவ ஊழியத்தின் மூலம் தேவன் என் கையில் வைத்துள்ள வெற்றிகரமான வாழ்க்கைக்கான சில திறவுகோல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த வாரம் எனது போதனைக்கு நான் தேர்ந்தெடுத்த தலைப்பு, “என் வாழ்க்கைப் புத்தகத்திலிருந்து பக்கங்கள்” என்னுடைய விசுவாசத்தைக் கட்டியெழுப்பிய என் வாழ்க்கையின் விதியை வடிவமைத்த தேவனுடனான எனது நடைப்பயணத்தில் தனிப்பட்ட அனுபவங்களை உங்களுடன் ஒரு நெருக்கமான வழியில் பகிர்ந்து கொள்கிறேன்.
முதலில், எனக்கு கடிதம் எழுதியவர்களுக்கு நன்றி கூறுகிறேன். நான் இந்தப் பேச்சை முடிப்பதற்கு முன், நீங்கள் எழுதக்கூடிய அஞ்சல் முகவரியைத் தருகிறோம். உங்கள் தனிப்பட்ட தேவைகள், உங்கள் பிரச்சனைகள், உங்கள் ஜெப விண்ணப்பங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள தயங்காதீர்கள்.
இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் எனது வாழ்க்கையின் முக்கிய அம்சம் ஒரு இளைஞனாக எனது தனிப்பட்ட சத்தியத்தின் (உண்மையின்) தேடலாகும். இருப்பினும், இன்று எனது பேச்சு அறிமுகமாக இருக்கும். என்னுடைய சொந்த அனுபவங்களைச் சொல்வதற்கு முன், வேதத்தின் அடிப்படைக் கொள்கை ஒன்றை நிறுவ விரும்புகிறேன்: கிறிஸ்தவர்களாகிய நாம் நம்முடைய தனிப்பட்ட சாட்சியை நம்மைச் சுற்றியுள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.
இன்று நாம் இணைந்து பார்க்கும் முதல் வேதப்பகுதி அப்போஸ்தலர் 1:8 ஆகும். இயேசு மீண்டும் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பு தம் சீஷர்களிடம் பேசிய கடைசி வார்த்தைகள் இவைதான்: இயேசு அவர்களோடு ஒலிவ மலையில் நின்றுகொண்டிருந்தபோது அவர்களோடு பேசினார். ஒரு மனிதன் தன்னுடன் மிகவும் நெருக்கமாக பழகியவர்களிடத்தில் பேசும் கடைசி வார்த்தைகளில் ஒரு சிறப்பு முக்கியத்துவம் இருப்பதாக நான் எப்போதும் உணர்கிறேன், அவர் அவர்களை மீண்டும் அதே வகையில் சந்திக்கப் போவதில்லை என்பதை அறிந்து, அவர் பேசிய இறுதி வார்த்தைகள் இவைதான். எனவே அப்போஸ்தலர் 1:8இல் உள்ள இயேசுவின் இந்த இறுதி வார்த்தைகளுக்கு நான் எப்போதும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளேன். அவர் இவ்வாறு கூறுகிறார்:
பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
பூமியில் இயேசுவின் உதடுகளிலிருந்து கடைசியாக விழுந்த வார்த்தைகள் இந்த வார்த்தைகள், “பூமியின் கடைசிபரியந்தமும்,” என்பது குறிப்பிடத்தக்கதாக நான் நம்புகிறேன். இயேசு இந்த அவரது சாட்சியையும், அவரது சுவிசேஷத்தையும் பூமியில் வாழும் எல்லா நாடுகளுக்கும், ஒவ்வொரு மக்களுக்கும், ஒவ்வொரு ஜாதிக்கும், ஒவ்வொரு பாஷை பேசுபவர்களுக்கும், எல்லா இனங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று மனதில் வைத்திருந்தார் என நான் நம்புகிறேன். அவர் தனது சீஷர்களை விட்டு செல்லும்போது, அவரது மனம் அங்கேதான் இருந்தது, மேலும் இந்த பணியை நிறைவேற்றக்கூடிய மிக எளிய செயல்முறையை அவர் கொடுத்தார். இதில் இரண்டு நிலைகள் மட்டுமே உள்ளது. முதலில், ஒவ்வொரு விசுவாசியும் பரிசுத்த ஆவியானவரால் தனிப்பட்ட முறையில் பலப்படுத்தப்பட வேண்டும். இது மிகவும் நடைமுறையானது. கிறிஸ்தவர்களாக நாம் எடுத்துச் செல்லவேண்டிய செய்தி ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட செய்தியாகும். இது இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளை மையமாகக் கொண்டுள்ளது – இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் – நாம் யாரிடம் பேசுகிறோமோ அவர்களுக்கு அதை உண்மையாகவும் தெளிவாகவும் பேசுவதற்கு ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமை தேவைப்படுகிறது. தேவன் நியமித்து நமக்கு கிடைக்கச் செய்த இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமை பரிசுத்த ஆவியின் வல்லமையாகும். எனவே, ஒவ்வொரு விசுவாசியும் பரிசுத்த ஆவியானவரால் தனித்தனியாக அதிகாரம் பெறுவதே இயேசுவின் திட்டத்தின் முதல் படியாகும்.
பின்னர், இரண்டாவது படி, ஒவ்வொரு விசுவாசியும் தேவன் தனக்கு என்ன செய்தார் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதாகும். இந்த செயல்முறை அந்த வழியில் மேற்கொள்ளப்படுகிறது. கேட்டு விசுவாசிக்கும் ஒவ்வொரு விசுவாசியும் பரிசுத்த ஆவியானவரால் பலப்படுத்தப்படுகிறார், இதையொட்டி, மற்றவர்களுக்கு சொல்வார்கள், மேலும், அந்த மற்றவர்கள், அவர்கள் நம்புவது போல், பரிசுத்த ஆவியானவரால் பலப்படுத்தப்படுகிறார்கள், அவர்கள் மற்றவர்களுக்கு சொல்லிக் கொண்டே போவார்கள். இதில் நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால், இயேசுவின் இந்த சாட்சியை, இந்த நற்செய்தியை, பூமியின் கடைசிபரியந்தம் வரைக்கும் கொண்டு செல்ல முடியும்.
சாட்சிக் கொடுப்பதற்கும், பிரசங்கிப்பதற்கும் இடையே மிக முக்கியமான வேறுபாட்டை நாம் காண வேண்டும். பிரசங்கம் என்பது வேதத்தின் உண்மையைப் பறைசாற்றுவதாகும், மேலும், இது ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், தேவன் குறிப்பாக அவருடைய சில ஊழியர்களுக்குக் கொடுக்கும் ஒரு ஊழியம் என்று நான் நம்புகிறேன். ஆனால், சாட்சிக் கொடுப்பது என்பது வேறு. சாட்சி என்பது நமது சொந்த அனுபவங்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் பேசுவதாகும். தேவன் நம் வாழ்வில் செய்ததை மற்றவர்களுக்குச் சொல்வதாகும். எல்லா கிறிஸ்தவர்களும் பிரசங்கிக்க அழைக்கப்படவில்லை என்றாலும், எல்லா உண்மையான கிறிஸ்தவர்களும் சாட்சிகளாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
பின்னர், “நீங்கள் சாட்சி கொடுப்பீர்கள்” என்று இயேசு சொல்லவில்லை என்பதைக் கவனியுங்கள், “நீங்கள் சாட்சிகளாக இருப்பீர்கள்” என்று அவர் கூறுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் பேசும் வார்த்தைகளால் மட்டுமல்ல, ஆனால், நாம் வாழும் வாழ்க்கையே இயேசுவுக்கு சாட்சியாகவும், அவர் நம் வாழ்வில் என்ன செய்திருக்கிறார் என்பதற்கு சாட்சியாகவும் இருக்க வேண்டும். உண்மையில் சில நேரங்களில் மக்கள் அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழவில்லை என்றால், அதைப் பற்றி அதிகம் பேசாமலிருப்பது நல்லது. வீட்டில், பணியிடத்தில், பள்ளியில் அல்லது பல்கலைக்கழகத்தில் நாம் ஒவ்வொருவரும் எங்கிருந்தாலும் சாட்சியாக இருக்க வேண்டும் என்பதே இயேசுவின் திட்டமாகும். நாம் எங்கிருந்தாலும், நம்முடைய வாழ்க்கையில் இயேசு செய்ததைப் பிரதிபலிக்கும் விதத்தில் பேசவும் வாழவும் நாம் அவருடைய சாட்சிகளாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
மூன்று நூற்றாண்டுகளுக்குள் கிறிஸ்தவ நம்பிக்கை ரோமானியப் பேரரசைக் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்க உண்மையாகும். ரோமானியப் பேரரசு சந்தேகத்திற்கு இடமின்றி மனித வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த பெருமைமிக்க நீண்ட காலம் வாழ்ந்த பேரரசுகளில் ஒன்றாகும். அது அதன் நாட்களில் அதிகாரம் மற்றும் வல்லமையின் உருவகமாக கருதப்பட்டது. இருப்பினும், இயேசு ஒலிவ மலையில் அந்தச் சிறிய மனிதர்களிடம் அந்த வார்த்தைகளைச் சொன்ன காலத்திலிருந்து மூன்று நூற்றாண்டுகளுக்கும் குறைவான காலத்திற்குள், ரோமானிய பேரரசரே ரோமானிய ஆளுநரால் ரோமானிய சிலுவையில் அறையப்பட்ட ஒரு யூத தச்சரின் மகனின் பெயரான இயேசுவின் நாமத்தை வணங்கினார். இது போன்ற ஒரு விஷயம் நடக்கலாம் என்று கிட்டத்தட்ட நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது, இன்னும் கிறிஸ்தவம் ரோமானியப் பேரரசைக் கைப்பற்றியது. எப்படி? புரட்சியால் அல்ல, போரினால் அல்ல, அணிவகுப்பு நடத்தப்பட்டோ அல்லது போராட்டங்கள் நடத்தப்பட்டோ அல்ல; ஆனால் ஆவிக்குரிய ஆயுதங்களாலே.
மேலும், அந்த ஆவிக்குரிய ஆயுதங்கள் அனைத்திலும் மிகவும் உலகளாவிய மற்றும் மிகவும் பயனுள்ளது என்னவென்றால், ஆரம்பகால கிறிஸ்தவர்களின் சாட்சியாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். பாருங்கள், அவர்கள் பல்வேறு பின்னணிகள், வெவ்வேறு இனங்கள், வெவ்வேறு மதங்கள், வெவ்வேறு சமூக நிலைகளிலிருந்து வந்தவர்கள் ஆவார்கள், ஆனால் அவர்களுக்கு ஒரே ஒரு பொதுவான விஷயம் இருந்தது: அவர்கள் இயேசுவை சந்தித்தார்கள், அவர் அவர்களின் வாழ்க்கையை மாற்றிவிட்டார், மேலும், முழு பண்டைய உலகமும் இந்த சாட்சியின் தாக்கத்திற்கு எதிராக நிற்கு முடியவில்லை.
இதை எபேசியர் 3:10இல், தேவாலயத்திற்கான தேவனுடைய நோக்கத்தைப் பற்றிய காரியத்தில் வாசிக்கிறோம்.
உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும் பொருட்டாக…
தேவாலயத்தின் மூலம் தேவன் தனது ஞானத்தை பிரபஞ்சத்திற்கு நிரூபிக்கப் போகிறார், அது ஒரு பன்முக ஞானமாகும், பல பக்கங்களைக் கொண்ட ஞானமாகும்.
தேவனுடைய ஞானம் ஒரு வைரத்தைப் போன்றது, பல முகப்புகளுடன் வெட்டப்பட்டது, மேலும் ஒவ்வொரு விசுவாசியும் ஒரு முகப்பு ஆவார். உலகத்துக்கு வெளிப்படுத்த தேவனுடைய ஞானத்தின் சில தனித்துவமான அம்சம் அவரிடம் உள்ளது, மேலும், அவர் அதை தனது சாட்சியின் மூலம் வெளிப்படுத்துகிறார்.
தனிப்பட்ட சாட்சியத்தின் முக்கியத்துவம் தொடர்பாக, அப்போஸ்தலர்களின் முதன்மைப் பொறுப்பையும், அப்போஸ்தலர்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டதற்கான முதன்மைக் காரணத்தையும் நான் உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். யூதாசின் துரோகத்துக்கு பிறகு, அவரது தற்கொலைக்குப் பிறகு, அவருக்குப் பதிலாக வேறொருவரை அப்போஸ்தலராக நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பேதுரு கூடி இருந்த விசுவாசிகளிடம் பேசினார், அது ஏன் அவசியம் என்றும் யூதாசின் இடத்தை எடுக்க, எத்தகைய மனிதரை அப்போஸ்தலராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கூறினார். அப்போஸ்தலர் 1:21-22இல் பேதுரு கூறியது இதுதான்:
ஆதலால், யோவான் ஞானஸ்நானங்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள் வரைக்கும், அவர் நம்மிடத்தில் சஞ்சரித்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனேகூட இருந்த மனுஷர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்றான்.
இரண்டு முக்கிய வார்த்தைகள்: சாட்சி மற்றும் உயிர்த்தெழுதல் ஆகும். ஒரு அப்போஸ்தலரின் முதன்மை செயல்பாடு ஒரு பிரசங்கியாராகவோ அல்லது போதகராகவோ இருக்கக்கூடாது, அது இரண்டாம் நிலையாகும். ஒரு அப்போஸ்தலரின் முதன்மை செயல்பாடு, தான் இயேசுவைப் பற்றிக் கேட்டதற்கும் பார்த்ததற்கும் சாட்சியாக இருக்க வேண்டும், அந்த ஆதி அப்போஸ்தலர்களுக்கு, அவர்கள் யோவானின் ஞானஸ்நானம் முதல் இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் காலம் வரை இயேசுவின் வாழ்க்கை மற்றும் ஊழியத்தின் சாட்சிகளாக இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் சாட்சிக் கொடுக்க வேண்டிய ஒரு குறிப்பிட்ட விஷயம் இருந்தது, எல்லாவற்றிலும் மிக முக்கியமான விஷயம்: அவருடைய உயிர்த்தெழுதல் ஆகும். எனவே, அவர்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலின் மற்ற அப்போஸ்தலர்களுடன் சாட்சிகளாக இருக்க வேண்டியிருந்தது.
நீங்கள் பார்க்கலாம், உயிர்த்தெழுதல் என்பது கிறிஸ்தவ நம்பிக்கையின் மைய உண்மையாகும். உலகம் முழுவதும் கேள்விப்பட வேண்டிய நற்செய்தியாகும்.
நான் குறிப்பாக விரும்பும் ஒரு பாடலின் வார்த்தைகள் எனக்கு நினைவிற்கு வருகின்றன, அது இந்த வார்த்தைகளுடன் முடியும்: “அவர் எழுந்தார், அவர் எழுந்தார்; என்று முழு உலகமும் அறியும் வரை வாழ்க்கை புத்தகம் மூடப்படாமல் இருக்கட்டும்.“ அதுதான் என்னுடைய ஜெபம் ஆகும், மனித வரலாற்றின் இந்த ஒரு முக்கிய உண்மையை பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் கேட்கும் வரை வாழ்க்கை புத்தகம் மூடப்படாது, விரக்தியும் தனிமையும் முழு நம்பிக்கையின்மையும் இருக்கும் இந்த வாழ்க்கையை மாற்றும் உண்மை, நம்பிக்கையையும், அமைதியையும் தரக்கூடிய இந்த உண்மை: மரணம் வெல்லப்பட்டது, இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதுதான் அந்த உண்மை.
அப்போஸ்தலனாகிய பவுல், தமஸ்கு நகரத்தில் தர்சு பட்டணத்து சவுலாக இருந்தபோது, அப்போஸ்தலன் பவுலிடம் அனனியா பேசிய விதத்தைப் பார்ப்போம், தர்சு பட்டணத்து சவுலுக்கு பார்வை கிடைக்குமாறு வேண்டிக் கொள்ள தேவன் அவரை அனுப்பினார். இது பவுலின் சொந்த சாட்சியாகும், அப்போஸ்தலர் 22:14-15இல் அனனியா சொன்னது:
அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும், நீதிபரரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார். நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய்.
மீண்டும், பவுலின் வாழ்க்கையில் முதன்மையான அழைப்பைக் கவனியுங்கள். அது ஒரு போதகராக இருப்பதற்கு அல்ல; முதன்மையாக அது அவர் பார்த்த மற்றும் கேட்டவைகளுக்கு எல்லா மனிதர்களுக்கும் சாட்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும். அதுதான் ஒரு சாட்சியாகும். தான் பார்த்ததையும் கேட்டதையும் நேரடியாகப் பேசுகிறார்.
அகிரிப்பா ராஜாவுக்கு முன்பாக பவுல் தன்னைப் பற்றி வாதிட்டபோது, பவுலின் வார்த்தைகளை அப்போஸ்தலர் புத்தகத்தின் பிற்பகுதியில் படிக்கலாம். அப்போஸ்தலர் 26:22- 23இல்:
ஆனாலும் தேவ அநுக்கிரகம் பெற்று, நான் இந்நாள்வரைக்கும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சிகூறி வருகிறேன். தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுய ஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான்.
பாருங்கள், பவுல் சிறியோர் மற்றும் பெரியோர், மிக உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் என்று அனைவருக்கும் சாட்சியளித்தார். அவரது சாட்சி இரண்டு ஆதாரங்களை நோக்கி செலுத்தப்பட்டது: முதலில், மோசே மற்றும் தீர்க்கதரிசிகள் (அதுதான் வேதவசனம்); இரண்டாவதாக, இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல். நமது சாட்சியும் அப்படியே இருக்க வேண்டும்.
இன்று நான் இந்த செய்தியை முடிக்கும் முன், மனித வரலாறு மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் மிக முக்கியமான உண்மையை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்: இயேசு உயிரோடு இருக்கிறார்.
இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது, ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை எனது “சத்தியத்திற்கான தேடல்” என்பதில் எனது தனிப்பட்ட அனுபவங்களில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்குகிறேன்.
குறியீடு: RP-R030-101-TAM









