நமது அரசாங்கத்திற்காக ஜெபம்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 10
'நமது அரசாங்கத்திற்காக ஜெபித்தல்' என்ற செய்தியில் டெரெக் பிரின்ஸுடன் இணையுங்கள். தலைவர்களுக்காகப் பரிந்து பேசுவதில் கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் பொறுப்பை இதில் அவர் விளக்குகிறார். எலியா மற்றும் பேதுரு போன்றவர்களின் உதாரணங்கள் மூலம், பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு நம் ஜெபங்களை வழிநடத்தி, வார்த்தையோடு இணைக்கிறார் என்பதைக் கண்டறியுங்கள். 'ஜெபத்தினால் ஆளுகை செய்தல்' என்ற தொடரின் ஒரு பகுதியான இது, உலகில் மாற்றத்தைக் கொண்டுவர ஜெபத்தை வேதவசனங்களில் ஆழமாக வேரூன்றச் செய்கிறது.
Transcript
மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. ஜெபத்தின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளைக் குறித்து நாம் தொடர்ந்து ஒன்றாகப் பகிர்ந்து கொள்கிறோம். நேற்றைய என்னுடைய செய்தியில், மூன்று முக்கியமான, ஒன்றுக்கொன்று தொடர்புடைய சத்தியங்களைக் கொண்டு ஒரு அஸ்திபாரத்தைப் போட்டேன். முதலில், தேவன் நம்மை தம்முடைய ராஜ்யத்தின் ஆசாரியர்களாக ஏற்படுத்தியிருக்கிறார். எனவே இப்பொழுது நம்முடைய ஜெபங்களின் மூலம் தேவனுக்காக இவ்வுலகத்தை ஆளுகை செய்ய வேண்டியது நம் பொறுப்பாயிருக்கிறது. இரண்டாவதாக, நம்முடைய ஜெபங்கள் பலனுள்ளவையாக இருக்க வேண்டுமென்றால், அவை பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்பட வேண்டும். பரிசுத்த ஆவியானவரின் அதிகாரமும், வல்லமையும் அவற்றிற்கு இருக்க வேண்டும். மூன்றாவதாக, தேவனுடைய ஆவியானவரும், தேவனுடைய வார்த்தையும் எப்பொழுதும் ஒன்றாய் இசைந்து வேலை செய்கின்றனர். நம்முடைய ஜெபங்கள், தேவனுடைய வார்த்தைக்கு ஒத்திருக்கும்போது மட்டுமே, பரிசுத்த ஆவியானவரின் வல்லமை அவற்றின் மூலமாக வேலை செய்கிறது.
வேதாகமத்திலிருந்து இரண்டு எடுத்துக்காட்டுகளை நான் எடுத்துக் காண்பித்தேன். பழைய ஏற்பாட்டில், எலியா தன்னுடைய ஜெபங்களின் மூலம், மூன்றரை வருடங்களுக்கு, இஸ்ரவேல் தேசத்தின் மழைப் பொழிவைக் கட்டுப்படுத்தினான். புதிய ஏற்பாட்டில், சபையார் ஒன்றுகூடி, ஏகமனதாய் ஜெபித்தபோது, அதன் விளைவாக, முதலில், உச்சகட்ட பாதுகாப்பைக் கொண்ட சிறைச்சாலையிலிருந்து பேதுரு விடுவிக்கப்பட்டான். பிறகு துன்மார்க்கமான ஆட்சியாளன் ஏரோதுவின் ஆட்சிக்காலத்திற்கு அச்சுறுத்தலான, துரிதமான முடிவு உண்டானது. அவனுடைய கொடுங்கோல் ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இவ்விரண்டு ஜெபங்களிலும், யாருக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்டதோ, அவர்களுக்காக கிரியை செய்யும்படி தேவதூதர்கள் இறங்கி வந்ததையும் நாம் பார்க்கிறோம்.
“ஜெபத்தின் மூலம் ஆளுகை செய்தல்” என்ற சத்தியத்தை, நம் நடைமுறை வாழ்வுக்கேற்ற விதத்தில் இன்று நான் பிரசங்கிக்கப் போகிறேன். நம்முடைய அரசாங்கத்திற்காக ஜெபிக்கும்படி நமக்கிருக்கும் கடமையைக் குறித்து நான் பேசப் போகிறேன். இந்தப் பொறுப்பைக் குறித்து பெருந்திரளான கிறிஸ்தவர்கள் இன்னும் உணராமலிருப்பது வருந்தத்தக்க உண்மைதான். புதிய ஏற்பாட்டில், இந்தப் பொறுப்பு நேரடியாக நம் மீது வைக்கப்பட்டிருக்கிறது. நாம் பார்க்கப் போகும் முதல் வேதப்பகுதி, 1 தீமோத்தேயு 2-ம் அதிகாரமாகும். 1-4 வசனங்களை நாம் வாசிப்போம். பவுல் என்ன சொல்கிறார் என்பதைக் கவனிப்போம்:
1 நான் பிரதானமாய் சொல்லுகிற புத்தி என்னவெனில், எல்லா மனுஷருக்காகவும், விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும், ஸ்தோத்திரங்களையும் (நன்றி சொல்லுதலையும்) பண்ண வேண்டும். 2 நாம் எல்லா பக்தியோடும், நல்லொழுக்கத்தோடும், கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்ய வேண்டும். 3 நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும், பிரியமுமாயிருக்கிறது. 4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
எனக்குத் தெரிந்தவரையில், வேதாகமத்தில், காரியங்களை சரியான வரிசையில் அமைத்துப் பேசுகிற பல வேதப்பகுதிகளில் இதுவும் ஒன்றாயிருக்கிறது. இது குறிப்பிட்ட வகையான சிந்தைகளையும், நம் மீது இருக்கும் பொறுப்புகளையும் படிப்படியாக வெளிப்படுத்துகிறது. அது என்ன சொல்கிறதோ, அதற்கான காரண காரியங்களை ஆழமாகவும், அழுத்தமாகவும் அது வெளிப்படுத்துகிறது. நான் இதை படிப்படியாக உங்களுக்கு விளக்கிக் காண்பிக்கிறேன். முதலில், சபையார் எல்லோரும் ஒன்றுகூடி வந்து, பிரதானமாய் செய்ய வேண்டிய ஊழியம், ஜெபமாகும். பவுல் இங்கு சொல்கிறார், “நான் பிரதானமாய் சொல்லுகிற புத்தி என்னவெனில், எல்லா மனுஷருக்காகவும், விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும், ஸ்தோத்திரங்களையும் (நன்றி சொல்லுதலையும்) பண்ண வேண்டும்.” இந்த நான்கு வார்த்தைகளையும் ஒரே வார்த்தையில் தொகுத்துச் சொல்வோம் என்றால், அதை “ஜெபம்” என்று சொல்லலாம். ஆக, சபையார் எல்லோரும் ஒன்றுகூடி வந்து, பிரதானமாய் செய்ய வேண்டிய ஊழியம், ஜெபமாகும்.
இது ஏசாயா 56:7-ம் வசனத்தோடு ஒத்துப் போகிறது. இதில் தேவன் சொல்கிறார், “என்னுடைய வீடு, சகல ஜனங்களுக்கும் ஜெப வீடு என்னப்படும்.” நாம் ஜெபிக்க வேண்டிய முதல் முக்கியமான காரியம், எல்லா மனுஷர்களுக்காகவும் ஜெபிப்பதுதான். அதாவது, தேவனுடைய அன்பும், இரக்கமும், சுவிசேஷ செய்தியும் எல்லா மனுஷர்களையும் சென்றடைவதுபோல, நம்முடைய ஜெபங்களும், அவ்வளவு பரந்து விரிந்ததாய் இருக்க வேண்டும்.
நிறைய கிறிஸ்தவர்கள், தங்களுடைய சுய நலத்தை மையமாகக் கொண்ட ஜெபங்களைத்தான் ஏறெடுக்கிறார்கள் என்று நேற்றைய செய்தியில் நான் சுட்டிக் காண்பித்தேன். சபை உறுப்பினர் ஒருவருடைய ஜெபத்தை எடுத்துக்காட்டாக நான் உங்களிடம் எடுத்துக் காண்பித்தேன்: “தேவனே, என்னை ஆசீர்வதியும். என் மனைவியை ஆசீர்வதியும். என் மகன் ஜானையும், அவன் மனைவியையும் ஆசீர்வதியும்.” நாம் எல்லா மனுஷர்களுக்காகவும் ஜெபிக்க வேண்டும் என்று பவுல் சொல்கிற சத்தியத்தோடு, இந்த ஜெபம் ஒத்துப் போகவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
பவுல் எழுதிய பிரகாரம், நாம் ஜெபிக்க வேண்டியவர்களில், முதலாவதாக வருகிற முக்கியமான நபர்கள், “ராஜாக்களும், அதிகாரத்தில் இருப்பவர்களும்தான்.” உண்மையில், நாம் வாழும் அட்லாண்டிக்கின் இந்த மேற்குப் பகுதியில், நிறைய ராஜாக்கள் இல்லை. ஆகையால் நாம் “ராஜாக்கள்” என்ற வார்த்தையை விட்டு விடுவோம். அதிகாரத்தில் இருப்பவர்கள் என்ற வார்த்தையை மட்டும் எடுத்துக் கொள்வோம். அதாவது அரசாங்கத்தின் ஆட்சியாளர்களை நாம் கருத்தில் எடுத்துக் கொள்வோம். கிறிஸ்தவர்களாகிய நாம் சபையில் ஒன்று கூடி வந்து, பிரதானமாக ஜெபிக்க வேண்டிய முதல் முக்கியமான காரியம், நம்முடைய அரசாங்கமாகும். அதாவது நம் மீது அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும்.
ஆனால் பெரும்பாலான சபைகளில், அவர்கள் இதைக் குறித்து ஒருபோதும் சிந்தித்ததில்லை என்பதைத்தான் நான் பார்த்திருக்கிறேன். ஒரு மாதத்திற்கு ஒருமுறை கூட அவர்கள் இதை நினைத்துப் பார்த்ததில்லை. ஆனாலும் பவுல் இதைத்தான் முதலில் சொல்லியிருக்கிறார். அரசாங்கத்திற்காக, அரசாங்கத்தின் மூலம் தேவன் என்ன செய்ய வேண்டும் என்று நாம் தேவனிடம் ஜெபிக்க வேண்டும்? “நாம் எல்லா பயபக்தியோடும், நல்லொழுக்கத்தோடும், கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு, அவ்வாறு ஜெபிக்க வேண்டும்,” என்று பவுல் சொல்கிறார். ஒரு எளிமையான கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்வோம். நம்முடைய அரசாங்கம், நாம் வாழ்கின்ற வாழ்க்கையைப் பாதிக்கின்றதா? உண்மையைச் சொன்னால், அது பல விதங்களில் நம்முடைய வாழ்க்கையை தொடர்ந்து பாதித்துக் கொண்டே இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஆக, நாம் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ விரும்பினால், நாம் நம்முடைய அரசாங்கத்திற்காக ஜெபிக்க வேண்டும். இதில் நம்முடைய தனிப்பட்ட விருப்பமும், காரணமும் சார்ந்திருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று நாம் ஜெபிக்கப் போகிறோம்? தேவபக்தியுடன், நேர்மையான, நீதியான ஒரு வாழ்க்கையை, கலகமில்லாமல் அமைதலுடன் வாழத்தக்க ஒரு சூழ்நிலையை நம் அரசாங்கம் நமக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று நாம் ஜெபிக்க வேண்டும். இதுதான் பிரதானமாக ஒரு அரசாங்கத்தின் செயல்பாடு என்று இங்கு தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படித்தான் நான் விசுவாசிக்கிறேன். அதாவது, ஒரு அரசாங்கம் தன்னுடைய இந்த வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்றுதான் மெய்யாகவே நாம் ஜெபிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அல்லது இன்னும் எளிமையாகச் சொன்னால், ஒரு நல்ல அரசாங்கத்திற்காக நாம் ஜெபிக்க வேண்டும்.
அடுத்த வசனத்தில், பவுல் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறார், “நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும், பிரியமுமாயிருக்கிறது.” இங்கு “அது” என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது? முந்திய வசனத்தில், நாம் அலசி ஆராய்ந்து பார்த்த விஷயத்தைத்தான் இது குறிக்கிறது. அது ஒரு நல்ல அரசாங்கத்திற்காக நாம் ஜெபிக்க வேண்டும் என்பதைத்தான் இது குறிக்கிறது. ஆக, பவுல் இங்கு மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். அதாவது நல்ல அரசாங்கம் என்பது நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய பார்வையில், நன்மையும் பிரியமானதுமாயிருக்கிறது என்று பவுல் இங்கு எழுதியிருக்கிறார்.
நல்ல அரசாங்கத்தை தேவன் விரும்புகிறார், ஏற்றுக் கொள்கிறார் என்பதை எத்தனை கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. பெரும்பாலானோர் இதைப் புரிந்து கொண்டிருக்கவில்லை என்பதை நினைக்கும்போது, எனக்கு அது ஆச்சரியமாக இருக்கிறது. நல்ல அரசாங்கம் என்பது தேவனுடைய சித்தமாயிருக்கிறது. இப்பொழுது அடுத்த வசனம், தேவன் ஏன் ஒரு நல்ல அரசாங்கத்தை விரும்புகிறார், ஏன் அது அவருடைய சித்தமாயிருக்கிறது என்பதற்கான ஒரு முக்கியமான அடிப்படைக் காரணத்தை நமக்குச் சொல்கிறது. அது சொல்கிறது, “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.” தேவனுடைய இரக்கமும், அன்பும் எல்லா மனுஷர்கள் மேலும் பரந்து விரிந்த அளவில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஏற்கனவே நான் சுட்டிக் காண்பித்தேன். எல்லா மனுஷர்களும் இரட்சிக்கப்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆனால் சத்தியத்தை அறிகிற அறிவை அடையாமல், அவர்களால் இரட்சிக்கப்பட முடியாது. சுவிசேஷமாகிய சத்தியம் அவர்களுக்கு அறிவிக்கப்படா விட்டால், பிரசங்கிக்கப்படா விட்டால், அவர்களால் அந்த சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் முடியாது.
ஆக, மிகவும் எளிமையான, நியாயமான இந்த ஒரு காரணத்திற்காகத்தான், எங்கும் எல்லா மனுஷர்களுக்கும் சுவிசேஷமாகிய சத்தியம் அறிவிக்கப்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அப்படியென்றால், நாம் செய்ய வேண்டியது, இன்னும் ஒரு கேள்வியை நம்மை நாமே கேட்டுக் கொள்வதாகும். சுவிசேஷம் அறிவிக்கப்படுவதை எது எளிதாக்கும்? நல்ல அரசாங்கமா அல்லது தீய அரசாங்கமா? இதற்கான பதில் மிகவும் வெளிப்படையானது என்று நான் நினைக்கிறேன். அதிக விளக்கம் இதற்குத் தேவையில்லை. பொல்லாத, தீய அரசாங்கம், சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுவதற்கு தடையாயிருக்கும். மாறாக, நல்ல அரசாங்கம், சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுவதற்கு பல வித்தியாசமான விதங்களில் வசதியையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும். ஆக, நல்ல அரசாங்கம் என்பது தேவனால் வெளிப்படுத்தப்பட்ட சித்தமாயிருக்கிறது.
இந்தச் செய்தியில், இதுவரை நான் சொல்லிக் கொண்டிருந்த விஷயங்களை அப்படியே தொகுத்துச் சொல்ல விரும்புகிறேன். அதற்காக, “ஜெபம் மற்றும் உபவாசத்தின் மூலம் வரலாற்றை மாற்றியமைப்பது, அதாவது, Shaping History through Prayer and Fasting” என்ற தலைப்பில், நான் எழுதிய புத்தகத்திலிருந்து ஒரு சிறிய பகுதியை உங்களுக்கு வாசித்துக் காண்பிக்கப் போகிறேன். அந்தப் புத்தகத்தின் 42-ம் பக்கத்திலிருந்து நான் அதை வாசிக்கிறேன்:
1 தீமோத்தேயு 2:1-4 வசனங்களில் எழுதப்பட்டிருக்கிற போதனையை எளிமையாக வரிசைப்படுத்தி இப்பொழுது உங்கள் முன் வைக்கிறேன்.
1. விசுவாசிகள் அடிக்கடி ஒன்றுகூடி பிரதானமாக செய்ய வேண்டிய ஊழியம், ஜெபமாகும். 2. ஜெபத்தின் முதல், முக்கியமான குறிப்பு, அரசாங்கமாகும். 3. ஒரு நல்ல அரசாங்கத்திற்காக நாம் ஜெபிக்க வேண்டும். 4. எல்லா மனுஷருக்கும் சுவிசேஷமாகிய சத்தியம் பிரசங்கிக்கப்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். 5. நல்ல அரசாங்கம், சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுவதற்கு ஏதுவான சூழ்நிலைகளை அமைத்துக் கொடுக்கும். ஆனால் பொல்லாத, தீய அரசாங்கமோ அதற்குத் தடையாய் இருக்கும். 6. ஆகையால் நல்ல அரசாங்கம், தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
இந்தக் கடைசி குறிப்பை நான் திரும்பவும் வாசிக்கிறேன். இது வேதவசனங்கள் முழுவதிலும் காணப்படுகிற மிகவும் முக்கியமான குறிப்புகளில் ஒன்றாக இருக்கிறது. இது நம் வாழ்க்கை முழுவதையும் பாதிக்கிறது. “நல்ல அரசாங்கம், தேவனுடைய சித்தமாக இருக்கிறது,” என்பதுதான் அது.
இப்பொழுது இதோடு தொடர்புடைய இன்னொரு வேதப்பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். 1 யோவான் 5-ம் அதிகாரத்திற்குச் செல்வோம். 14-15 வசனங்களை வாசிப்போம். நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலைப் பெறுவதற்கான ஒரு எளிமையான, அடிப்படை நிபந்தனையை யோவான் நமக்குச் சொல்கிறார். அதை நாம் கவனிப்போம்:
14 நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவி கொடுக்கிறார் என்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். 15 நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்கு செவிகொடுக்கிறார் என்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக் கொண்டோம் என்றும் அறிந்திருக்கிறோம்.
நான் இதன் முக்கியமான பகுதியை மட்டும் திரும்பவும் வாசிக்கிறேன். “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவி கொடுக்கிறார். நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்கு செவிகொடுக்கிறார் என்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக் கொண்டோம் என்றும் அறிந்திருக்கிறோம்.” பாருங்கள், நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி ஜெபிக்கிறீர்கள் என்பதை அறிந்திருப்பதுதான், வெற்றிகரமான ஜெபத்திற்கு அடிப்படையாக இருக்கிறது. தேவனுடைய சித்தம், பிரதானமாக, வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
தேவனுடைய சித்தத்தின்படி ஜெபிக்க வேண்டும்; அப்பொழுது தேவன் நமக்குச் செவிகொடுக்கிறார் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்; நாம் எதற்காக ஜெபித்தோமோ அதையே பெற்றுக் கொண்டோம் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். இந்தக் கோட்பாட்டை, நம்முடைய அரசாங்கத்திற்காக ஜெபிக்க வேண்டும் என்று இப்பொழுது நாம் கற்றுக் கொண்டிருக்கிற இந்த விஷயத்திற்கு பயன்படுத்துவோம். நான் இதை இவ்வாறு தொகுத்துச் சொல்கிறேன்: நாம் தேவனுடைய சித்தத்தின்படி ஜெபித்தால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார். அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம் என்றால், நாம் எதற்காக ஜெபித்திருக்கிறோமோ, அதையே பெற்றுக் கொண்டோம் என்றும் அறிந்திருக்கிறோம். நல்ல அரசாங்கம், தேவனுடைய சித்தமாயிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். ஆகையால், நல்ல அரசாங்கத்திற்காக நாம் ஜெபிக்கிறோம் என்றால், தேவன் நமக்குச் செவிகொடுக்கிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். தேவன் நமக்குச் செவிகொடுக்கிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம் என்றால், நாம் ஜெபித்த நல்ல அரசாங்கத்தையே நாம் பெற்றுக் கொண்டோம் என்றும் நாம் அறிந்திருக்கிறோம். இங்கு நாம் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம்? நல்ல அரசாங்கத்திற்காக ஜெபிக்க வேண்டும் என்பதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். எனவே நிச்சயமாய், நாம் அதையே பெற்றுக் கொள்வோம்.
இப்பொழுது நாம், இன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளில் காணப்படும் சூழ்நிலைக்கு இதைப் பயன்படுத்திப் பார்ப்போம். நம்முடைய அரசாங்கம் எவ்வளவு நல்ல அரசாங்கமாக இருக்கிறது, எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறது, பிரயோஜனமான விதத்தில் இயங்குகிறது என்பதையெல்லாம் நாம் ஒவ்வொருவரும்தான் தீர்மானிக்க வேண்டும். நமக்கு ஒரு நல்ல அரசாங்கம் இல்லையென்றால், அதற்கு என்ன காரணம்? வேதாகமம் போதிக்கிற விதத்தில் பார்க்கும்போது, அதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்கின்றன. முதல் காரணம், நாம் ஜெபிக்க வேண்டிய விதத்தில் ஜெபிக்கவில்லை. அமெரிக்க ஐக்கிய நாடுகளில், கிறிஸ்தவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கிறவர்களில் பாதி எண்ணிக்கைக்கும் மேலானவர்களுக்கு இது பொருந்தும் என்றுதான் நான் நினைக்கிறேன். அவர்கள் ஒருபோதும் தங்களுடைய அரசாங்கத்திற்காக உண்மையான அக்கறையோடு, வேதாகமத்தின் அடிப்படையில் ஜெபிப்பதில்லை. தங்களிடம் எதுவுமில்லை என்பதுபோல அவர்கள் நடந்து கொள்வார்கள். அரசாங்கத்தைக் குற்றம் சொல்வார்கள். ஆனால் அதற்காக ஜெபிக்க மாட்டார்கள்.
அரசாங்கத்தைக் குற்றம் சொல்வதற்கு வேதவசனத்தில் எந்த அதிகாரமும், முகாந்திரமும் கொடுக்கப்படவில்லை என்பதை நான் சுட்டிக் காண்பிக்க விரும்புகிறேன். ஆனால் அரசாங்கத்திற்காக ஜெபிக்க வேண்டியதில் நமக்கிருக்கும் கடமையைக் குறித்து வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தைக் குற்றஞ்சொல்கிற நபர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால், நான் ஒரு ஆலோசனையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அதிக நேரத்தை ஜெபத்திலும், குறைவான நேரத்தை குற்றம் சொல்வதிலும் செலவழிப்பீர்கள் என்றால், நீங்கள் குற்றஞ்சொல்வதற்கு அங்கு குறைவான விஷயங்கள்தான் இருக்கும்.
சரி, இதற்கு முதல் காரணம், பொதுவாகக் காணப்படுகிற ஒன்றுதான். நாம் ஜெபிக்கவில்லை என்பதுதான் அது. ஆனால் இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. நாம் ஜெபித்திருக்கிறோம். ஆனால் நல்ல அரசாங்கம், தேவனுடைய சித்தம் என்பதை அறியாமல் நாம் ஜெபித்திருக்கிறோம் என்பதுதான் இரண்டாவது காரணமாகும். காரணம், தேவனுடைய சித்தம் எது என்பதை அறிந்தவர்களாய் நாம் ஜெபிக்கும்போது மட்டுமே, நாம் ஜெபித்த அந்த நல்ல அரசாங்கத்தையே பெற்றுக் கொண்டோம் என்று நம்மால் சொல்ல முடியும்.
நிறைய விஷயங்கள் நம்முடைய ஜெபத்தைத்தான் சார்ந்திருக்கின்றன என்பதை விசுவாசிப்பதற்கு கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஏன் கடினமாக இருக்கிறது? அரசாங்கம், நம்முடைய கட்டுப்பாட்டிற்கு வெளியே இருக்கிறது என்ற மனப்பான்மையை உடையவர்களாய் நாம் வாழ்கின்றோம். இதுதான் காரணம். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று நாம் நினைக்கிறோம். நமக்கிருக்கும் பொறுப்பை நாம் உதறித் தள்ளி விடுகிறோம். நாம் முறுமுறுக்கிறோம், குற்றம் கண்டுபிடிக்கிறோம், கடுமையாய் விமர்சிக்கிறோம். ஆனால் நாம் ஜெபிப்பதில்லை. தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் ஜெபிப்பதால் உண்டாகக்கூடிய எல்லையற்ற சாத்தியங்களை நாம் புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான், நாம் ஜெபிக்காமலிருப்பதற்கு உண்மையான காரணமாயிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன்.
சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து நேரடியாக உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். ஜெபத்தினால் வரலாறே மாற்றப்பட்டதை நான் தனிப்பட்ட விதத்தில் பார்த்த சில எடுத்துக்காட்டுகளை உங்களுக்குக் கொடுப்பேன்.
குறியீடு: RP-R020-102-TAM









