இந்த வாரம், மிகவும் முக்கியமான, நம் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒரு சத்தியத்தை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்: “உங்களுடைய வாழ்க்கையைக் குறித்த தேவனுடைய திட்டத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?” உங்களுடைய வாழ்க்கையைக் குறித்து தேவன் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார் என்பதை நீங்கள் இதுவரை அறியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்பொழுது ஒன்றை அறிந்து கொள்ளுங்கள். தேவன் உங்களுடைய வாழ்க்கையைக் குறித்து ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். அது உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் உள்ளடக்கியிருக்கிறது. உங்களுடைய தேவைகள் எல்லாவற்றையும் சந்திப்பதற்கான திட்டம் அதில் இருக்கிறது. ஒரு நபராய், உங்களுடைய ஆற்றல் முழுவதையும் பிரயோஜனமான விதத்தில் பூரணமாய் பயன்படுத்துவதற்கான திட்டமும் அதில் இருக்கிறது. தேவனே அந்த திட்டத்தை வைத்திருக்கிறார்.

மறுபக்கத்தில் பார்க்கும்போது, உங்களுடைய வாழ்க்கை தேவனுக்குச் சொந்தமானது; நீங்கள் செய்து முடிக்கும்படி தேவன் ஒரு வேலையை வைத்திருக்கிறார் என்பதைக் குறித்த ஒரு உள்ளுணர்வு உங்களுக்குள் இருக்கிறது. ஆனால் அந்த வேலை என்ன என்பதை எவ்வாறு கண்டுபிடிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியவில்லை. அதன் விளைவாக, உங்களால் உங்களுடைய வாழ்க்கையின் நோக்கத்தை தெளிவாக வரையறுக்க முடியவில்லை; நீங்கள் விரக்தியடைந்தவர்களாய், ஒரு நிறைவை உணர முடியாதவர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த வாரத்தில் நான் கொடுக்கின்ற செய்திகள் உங்களுக்கு உதவி செய்யும் என்று நான் விசுவாசிக்கிறேன். உங்களுடைய வாழ்க்கையைக் குறித்த தேவனுடைய திட்டத்தைக் கண்டறியும்படி நீங்கள் எடுக்க வேண்டிய யதார்த்த நடைமுறை அடிகளை என்னால் உங்களுக்குக் காண்பிக்க முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன். தேவனுடைய திட்டத்தைக் கண்டறிந்து, அதில் வாழும்போது, இதுவரை நீங்கள் அறிந்திராத நிறைவையும், திருப்தியையும் நீங்கள் உணருவீர்கள்.

ஆரம்ப வசனமாக, நான் எபேசியர் 2:10-ம் வசனத்திற்குச் செல்லப் போகிறேன். கிறிஸ்துவுக்குள் தேவனோடு நாம் ஒன்றாய் இணைந்ததன் மூலம், தேவன் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை இவ்வசனம் பேசுகிறது. பவுல் இங்கு சொல்கிறார்:

“ஏனெனில் நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம் (வேலைப்பாடா யிருக்கிறோம்). அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்.”

இவ்வசனம் ஆரம்பிக்கும் விதமே ஆச்சரியமாய், அற்புதமாய், அதிசயமாய் இருக்கிறது. “நாம் தேவனுடைய செய்கையாய், வேலைப்பாடாய் இருக்கிறோம்.” தேவனுடைய வேலைப்பாடு. ‘போயிமா (Poiema) என்ற கிரேக்க வார்த்தை இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதிலிருந்துதான் ஆங்கிலத்தில் கவிதை, பாடல் என்ற அர்த்தத்தில் வரக்கூடிய போயம் (Poem) என்ற வார்த்தை வந்திருக்கிறது. இது ஆக்கச் சிந்தையோடும், படைப்புத் திறனோடும், உருவாக்கப்பட்ட தலைசிறந்த ஒரு வேலைப்பாட்டைக் குறிக்கிறது. ஒரு சிறந்த கலைஞன் அல்லது கவிஞன் அல்லது நாடக ஆசிரியன் அல்லது சிற்பி உருவாக்கிய ஆகச் சிறந்த வேலைப்பாட்டை இது குறிக்கிறது. மற்ற எல்லாவற்றையும் விஞ்சி, மிஞ்சி நிற்கிற ஒரு படைப்பை இது குறிக்கிறது. கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மை அப்படித்தான் உருவாக்கியிருக்கிறார். முதலில் இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நீங்கள் உங்களுடைய விசுவாசத்தை இயேசுகிறிஸ்துவின் மூலம் தேவன் மீது வைக்கும்போது, உங்களிலிருந்து தேவன் ஒரு தலைசிறந்த படைப்பை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறார். பிறகு அவர் உங்களைப் பயன்படுத்தி, ஒரு விசேஷமான, தனித்தன்மை வாய்ந்த ஒரு வேலையைச் செய்து முடிக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்.

இந்தச் சிந்தனை எப்பொழுதுமே என்னை ஆசீர்வதித்திருக்கிறது. இந்தப் பூமியில் நம்மைச் சுற்றியிருக்கிற எல்லா மகிமையான, அழகான காரியங்களையும் உருவாக்கிய, வானத்து நட்சத்திரங்களையும், கடல்களையும், மலைகளையும் சிருஷ்டித்த, இப்பிரபஞ்சத்தையே உருவாக்கிய மகா பெரிய தேவன், இவை எல்லாவற்றைக் காட்டிலும் தன்னுடைய தலைசிறந்த படைப்பாக ஒன்றை உருவாக்க விரும்பினார். அதற்கான தம்முடைய மூலப்பொருளைத் தேடும்படி, மலைபோல குவித்து வைக்கப்பட்ட, பிரயோஜனமற்றவைகளின் குவியலைத் தேடி அவர் சென்றார். அங்குதான் என்னைப் போன்றோரை அவர் கண்டுபிடித்தார். இதை சிந்தித்துப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

கர்த்தர் என்னைக் கண்டுபிடித்தபோது, நான் எங்கே இருந்தேன் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை. நானும் அங்கே அந்தப் பிரயோஜனமற்றவைகளின் குப்பைக் குவியலில்தான் இருந்தேன். ஆனால் தேவன் தம்முடைய ஆச்சரியமான கிருபை மற்றும் இரக்கத்தினால், கீழே குனிந்து, ஒன்றுக்கும் லாயக்கில்லாத ஒரு பொருளாகிய என்னை எடுத்தார். என்னுடைய இரட்சிக்கப்படாத, இன்னும் புதுப்பிக்கப்படாத அந்த நிலையில் அவர் என்னைப் பார்த்துச் சொன்னார், “உனக்குள் இருந்து தலைசிறந்த ஒரு படைப்பை நான் உருவாக்கப் போகிறேன்.” இது உண்மைதான். இது எனக்குரியது மட்டுமல்ல, நம் எல்லோருக்கும் உரியதாய் இருக்கிறது. இங்கு நான் மட்டுமே விசேஷமானவன் அல்ல. ஆனாலும் ஒரு விதத்தில், நான் விசேஷமானவன். காரணம், இயேசுகிறிஸ்துவின் மூலம் தேவனிடம் வருகிற எல்லோருமே விசேஷமானவர்கள்தான். தேவனுடைய எல்லாப் பிள்ளைகளுமே அவருடைய பார்வையில் விசேஷமானவர்கள்தான்.

ஆனால் இந்த வசனத்தில் நாம் பற்றிப் பிடித்துக் கொள்ள முக்கியமான வார்த்தை, “சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம்” என்பதுதான். கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம். தேவன் விரும்புகிற பிரகாரமாகவே நாம் மாற வேண்டுமென்றால், அது தேவனுடைய சிருஷ்டிப்பிப்ன் கிரியையிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். நாம் எங்கேயிருந்தோமோ அந்த இடத்திலிருந்து, தேவன் விரும்புகிற விதமாய் நாம் மாறுவதற்கு ஏற்ற விதத்தில், தேவனே நம்மை திரும்பவும் உருவாக்கும்படி நாம் இடம் கொடுக்க வேண்டும். 51-ம் சங்கீதத்தில், தாவீதின் ஜெபம் எழுதப்பட்டிருக்கிறது. அவன் செய்த மிகவும் பயங்கரமான ஒரு பாவத்தின் விளைவை அவனே நேருக்கு நேராய் எதிர்கொண்டபோது, அவன் அவ்வாறு ஜெபிக்கிறான். 9,10 வசனங்களில் அவன் இதைச் சொல்கிறான்:

9 என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும். 10 தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும். நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.

தாவீதின் இருதயத்தினுடைய கதறலைக் கவனித்துப் பாருங்கள். “ஓ தேவனே, எனக்குள் சுத்தமான இருதயத்தைச் சிருஷ்டியும்,” என்பதுதான் அந்தக் கதறல். மனுஷனுடைய இருதயத்திலும், வாழ்க்கையிலும் உண்டாகிற பாவத்தின் விளைவுகளை சரி செய்வதற்கு, தேவனுடைய சிருஷ்டிப்பின் கிரியை அவசியமாகிறது. ஒரு பாவி தேவனிடம் வரும்போது, தேவன் அவனை சிர்திருத்தி, ஒழுங்கு செய்வதில்லை. தேவன் தம்முடைய வல்லமையினால் அவனை புதிய சிருஷ்டியாக உருவாக்குகிறார்.

2 கொரிந்தியர் 5:17-20 வசனங்களில் பவுல் என்ன சொல்கிறார் என்பதை நாம் கவனிப்போம்:

17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டி யாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்து போயின. எல்லாம் புதிதாயின. 18 இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது. அவர் இயேசுகிறிஸ்துவைக் கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். 19 அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார். 20 ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக் கொண்டு புத்தி சொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக் கொள்ளுகிறோம்.

என்ன ஒரு மகிமையான வாக்கியம்! “ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால், அவன் புது சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் எல்லாம் ஒழிந்து போயின. எல்லாம் புதிதாயின.” நீங்களும் நானும் எத்தனையோ தடவைகள் இந்த வார்த்தைகளைச் சொல்லியிருப்போம்: “கடந்த காலத்தில், நான் என் வாழ்க்கையை குளறுபடியாக்கி விட்டேன். நான் பேசின, செய்த நிறைய மோசமான காரியங்களைக் குறித்து நான் மனம் வருந்துகிறேன். எல்லாவற்றையும் திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” இதை நாம் எவ்வளவோ முறை சொல்லியிருப்போம். இப்பொழுது சுவிசேஷத்தின் நற்செய்தி என்னவென்றால், நீங்கள் திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியும் என்பதுதான். நீங்கள் மனந்திரும்பி தேவனிடம் வந்து, இயேசுகிறிஸ்துவின் மூலம் உங்களுடைய விசுவாசத்தை அவர் மீது வைப்பீர்கள் என்றால், அவர் உங்களை ஒரு புதிய சிருஷ்டியாக உருவாக்குவார். அப்பொழுது, “பழையவைகள் எல்லாம் ஒழிந்து போயின. எல்லாம் புதிதாயின,” என்று உங்களால் சொல்ல முடியும். நீங்கள் ஏற்கனவே மனந்திரும்பி, இயேசுகிறிஸ்துவின் மூலம் தேவனிடம் வந்திருக்கிறீர்கள் என்றால், பிறகு இப்பொழுது நீங்கள் என்ன நிலையில் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்து, புரிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது நீங்கள் ஒரு புதுச்சிருஷ்டியாய் இருக்கிறீர்கள். தேவன் உங்களை ஒரு தலைசிறந்த படைப்பாக உருவாக்கியிருக்கிறார்.

2 கொரிந்தியர் 5-ம் அதிகாரத்தில் இப்பொழுது நாம் பார்த்த வசனங்களில், புது சிருஷ்டிப்பின் கிரியையைக் குறித்து பவுல் விளக்கியிருக்கிறார். இதை நாம் இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம். இதில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று காரியங்கள் ஒரு ஒழுங்கு வரிசையில் நடக்கின்றன. முதலில், பாவப் பிரச்சனை தீர்க்கப்பட்டாக வேண்டும். பாவம், தேவனுக்கும் மனுஷனுக்கும் இடையில் ஒரு பெரிய தடையாக இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையில், பாவப் பிரச்சனை தீர்க்கப்படாதவரை, நாம் தேவனிடத்தில் செல்வதற்கு வழியே இல்லை. அது மட்டுமல்ல, இப்பொழுது நாம் பேசிக் கொண்டிருக்கிற இந்தச் சிருஷ்டிப்பின் கிரியையை நமக்குள் செய்து, நம்மை மாற்றும்படி நம்மிடம் வருவதற்கான வழி தேவனுக்கும் இருக்காது. ஆகையால் பாவப்பிரச்சனையைத் தீர்க்கும்படி முதலில் நாம் தேவனுக்கு இடம் கொடுக்க வேண்டும். நம்முடைய தனிப்பட்ட முரட்டாட்டத்தையும், சுய சித்தத்தையும், முரட்டுப்பிடிவாதத்தையும், கடினமான இருதயத்தையும் விட்டு நாம் விலக வேண்டும். இயேசுகிறிஸ்துவின் மூலமாகத்தான் நாம் தேவனிடம் வர வேண்டும். நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை கிறிஸ்து சிலுவையில் ஏற்றுக் கொண்டார் என்பதை விசுவாசித்தவர்களாய் நாம் வர வேண்டும். நம்முடைய பாவத்திற்கான நியாயத்தீர்ப்பை தேவன் இயேசுவின் மீது வைத்தார் என்பதையும் நாம் விசுவாசிக்க வேண்டும். நாம் கிறிஸ்துவின் மூலம், இரக்கத்தையும் மன்னிப்பையும் நாடி தேவனிடம் வரும்போது, நாம் தேவனோடு ஒப்புரவாக்கப்படுகிறோம். இவ்விதமாய் பாவம் அகற்றப்படுகிறது. நாம் தேவனிடம் செல்ல முடியும். தேவனும் நமக்குள் கிரியை செய்ய முடியும்.

அடுத்த கட்டம், தேவனுடைய சிருஷ்டிப்பின் கிரியையாகும். தேவன் நம்மை நமக்குள் புதிதாய் சிருஷ்டிக்கிறார். எல்லா மனுஷருக்குள்ளும் ஞானியாய் விளங்கின சாலமோன் சொன்னான், “உன் இருதயத்தை எல்லாக் காவலோடும் காத்துக் கொள். அதிலிருந்து ஜீவ ஊற்று புறப்படும்.” வேறு வார்த்தைகளில் சொன்னால், உங்களுடைய வாழ்க்கையில் நடக்கப் போகிற ஒவ்வொன்றும் உங்களுடைய இருதயத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்று சொல்ல வேண்டும். அந்த இருதயத்திலிருந்துதான் தேவன் புது சிருஷ்டிப்பை ஆரம்பிக்கிறார். அவர் புதியதை உருவாக்குகிறார். கிறிஸ்துவின் ஒளி உங்களுடைய இருதயத்தில் பிரகாசிக்கிறது. கடந்த காலத்தின் எல்லா இருளும் வெளியேற்றப்படுகின்றன. குற்ற உணர்வு, பயம், தனிமையுணர்வு, மன்னியாத கசப்புணர்வு இவையெல்லாம் அந்த மகிமையான ஒளியினால் வெளியேற்றப்படுகின்றன. தேவன் உங்களுடைய இருதயத்தில் ஆரம்பித்து, உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிரியை செய்கிறான். நீங்கள் பல விஷயங்களில் மாறிக் கொண்டிருப்பதை உணர ஆரம்பிக்கிறீர்கள். உங்களில் நிகழ்கின்ற மாற்றத்தை மற்றவர்களும் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். இது தேவனுடைய சிருஷ்டிப்பின் கிரியையாக இருக்கிறது. ஆனால் இது உங்களுக்குள்ளே இருந்து ஆரம்பிக்கிறது. தேவனுடைய இந்தச் சிருஷ்டிப்பின் கிரியை தொடரும்போது, மூன்றாவது கட்டத்தில், தேவன் நம்மிடம் ஒன்றை ஒப்புவிக்கின்றார். அது ஒப்புரவாக்குகிற ஊழியமாக இருக்கிறது. நான் அதை இவ்வாறு சொல்கிறேன்: நாம் ஒப்புரவாக்கப்பட்டவர்கள்; மற்றவர்களை ஒப்புரவாக்குகிறவர்களாயும் இருக்கிறோம்.

நாம் கிறிஸ்துவின் ஸ்தானாபதிகளாய் இருக்கிறோம் என்று பவுல் சொல்கிறார். இது நம்மை உற்சாகப்படுத்தும் வாக்கியமாக இருக்கிறது. ஒரு ஸ்தானாபதி என்பவர் யார் என்று எப்பொழுதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு அரசாங்கத்தின் பிரதிநிதியாக, வேறொரு அரசாங்கத்தின் ஆட்சிப் பகுதியில் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டவர்தான் இந்த ஸ்தானாபதி. இனி அவர் ஒரு தனிப்பட்ட நபர் அல்ல. அவருடைய ஸ்தானத்தின் நிமித்தம், அவர் ஒரு முக்கியமான நபராகி விடுகிறார். அவர் தன்னுடைய அரசாங்கத்திலிருந்து பெற்றுக் கொண்ட வழிகாட்டுதல்கள் படி செயல்படும் வரைக்கும், அவர் மிகவும் அதிகமான அதிகாரமும், வல்லமையும் உடையவராய் செயல்படுவார். ஸ்தானாபதியாய் இருப்பவர் அவமதிக்கப்படும்போது, அது அவர் எந்த அரசாங்கத்திற்குப் பிரதிநிதியாய் இருக்கிறாரோ, அதற்கே ஏற்பட்ட அவமானமாக எண்ணப்படுகிறது. அவர் பேசும்போது, அவர் ஒரு தனி நபராக மட்டும் பேசுவதில்லை. அவர் தன்னுடைய அரசாங்கத்தின் அதிகாரத்தை தன் பின்னணியில் கொண்டவராக அவர் பேசுகிறார். நாமும் இவ்வுலகத்தில் அப்படித்தான் வாழ வேண்டும் என்று தேவன் நினைத்திருக்கிறார். நாம் கிறிஸ்துவின் ஸ்தானாபதிகளாய் இருக்கிறோம். நாம் இந்தப் பூமியில் பரலோக அரசாங்கத்தினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிரதிநிதிகளாய் இருக்கிறோம். நம்முடைய பரலோக அரசாங்கத்தின் கட்டளைகளை ஏற்று, நாம் செயல்படும்போது, பரலோகத்தின் எல்லா அதிகாரமும் நமக்குப் பின்னால் இருக்கிறது. நாம் தவறாக நடத்தப்பட்டால் அல்லது அவமதிக்கப்பட்டால், அதை பரலோக அரசாங்கத்திற்கு நேர்ந்த அவமானமாக, அவமதிப்பாக பரலோகம் எடுத்துக் கொள்ளும்.

தமஸ்கு செல்லும் வழியில், தர்சு பட்டணத்தைச் சேர்ந்த சவுலிடம் இயேசு என்ன சொன்னார் என்பது உங்கள் நினைவிலிருக்கிறதா? அவர் சொன்னார், “சவுலே, சவுலே, நீ ஏன் என்னை துன்பப்படுத்துகிறாய்?” சவுல் அந்தக் கிறிஸ்தவர்களைத் தாக்கியபோது, அவன் இயேசுவைத்தான் தாக்கிக் கொண்டிருந்தான் என்பதை உணரவில்லை. கிறிஸ்தவர்களுக்கு எதிராக சவுல் என்ன செய்தானோ, அது இயேசுவுக்கு எதிராகச் செய்யப்பட்ட ஒன்றாகவே பார்க்கப்பட்டது. காரணம், கிறிஸ்தவர்கள், இயேசுவின் பிரதிநிதிகள். நீங்களும் நானும், இன்று இந்தப் பொல்லாத, தீமையான, சீர்கெட்ட உலகத்தில் தேவனுடைய பிரதிநிதிகளாய் இருக்கிறோம். நாம் பரலோக அரசாங்கத்தின் பிரதிநிதிகளாய் இருக்கிறோம்.

இன்னும் ஒரு வசனத்தைப் பார்ப்போம். மத்தேயு 4:19-ஐ வாசிப்போம். இயசு முதல் சீஷர்களை அழைத்து, அவர் அவர்களிடம் இவ்வாறு சொன்னார்:

“என் பின்னே வாருங்கள். உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்.”

இதுதான் புதுச்சிருஷ்டிப்புக்குப் பிறகு வருகின்றது. முதலில், நாம் கிறிஸ்துவின் மூலம் நம் வாழ்க்கையை தேவனிடம் அர்ப்பணிக்கின்றோம். நாம் நம்மையே அவரிடம் ஒப்புக்கொடுக்கின்றோம். நாம் நம்மையே அவரிடம் இணங்கச் செய்கின்றோம். பிறகு இயேசு சொல்கிறார், “இப்பொழுது என்னைப் பின்பற்று. நான் உன்னைக் குறித்து ஒரு புதிய திட்டத்தை வைத்திருக்கிறேன். நீ முன் ஒருபோதும் உன்னைக் குறித்து சிந்தித்துப் பார்த்திராத ஒரு திட்டத்தைத்தான் நான் உனக்காக வைத்திருக்கிறேன். தாழ்மையாய் தங்களை ஒப்புக்கொடுத்த அந்த மீனவர்களிடம், அந்த முதல் சீஷர்களிடம் கலிலேயா கடற்கரையில் இயேசு இவ்வாறு சொன்னார், “நான் உங்களாய் வித்தியாசமானவர்களாய் மாற்றுவேன். இனி நீங்கள் சாதாரண மீனவர்கள் அல்ல, நான் உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்.” இது ஒப்புரவாக்குதலின் ஊழியத்தைக் குறித்து இன்னொரு விதத்தில் சொல்வதாகும். இது இயேசுகிறிஸ்துவின் மூலம் மனுஷர்களை தேவனிடம் கொண்டு வருவதாகும்.

இங்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்: இப்பொழுது நாம் யார், என்னவாய் இருக்கிறோம் என்பது இங்கு விஷயமல்ல.

இயேசு நம்மை எவ்வாறு உருவாக்குவார் என்பதுதான் விஷயமே.

லைக்
பகிரவும்