நற்குணம்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: செப்டம்பர் 2026
Read Time: 9
டெரெக் பிரின்ஸின் இந்த ஆழமான போட்காஸ்டில், பரிசுத்த ஆவியின் கனியான 'நற்குணம்' என்பதன் உண்மையான அர்த்தத்தைக் கண்டறியுங்கள். வேதாகமம் நற்குணத்தை எவ்வாறு வரையறுக்கிறது என்பதையும், உலக ரீதியான விளக்கங்களிலிருந்து அது எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். தேவனுடைய சுபாவத்தின் அடிப்படையிலான அதன் உயர்ந்த தரத்தைப் புரிந்துகொள்ளுங்கள். இது 'ஆவியின் கனி' தொடரின் 7-வது பகுதியாகும்.
Transcript
மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. முழு வேதாகமத்திலும் மிக அழகான தலைப்புகளில் ஒன்றாகிய பரிசுத்த ஆவியின் கனியைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நேற்றைய எனது பேச்சில், தயவின் கனியைப் பற்றி கையாண்டேன். சாராம்சத்தில், தயவு என்பது பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் சட்டங்களுடன், குறிப்பாக, நடத்தை மற்றும் உறவை நிர்வகிக்கும் சட்டங்களுடன் இணக்கமாக வாழ்வது என்று நான் விளக்கினேன். நாம் எதை அறுவடை செய்ய விரும்புகிறோமோ அதை விதைப்பதாகும், மற்றவர்கள் நம்மை நடத்த விரும்புவதைப் போல நாம் அவர்களை நடத்துவதாகும்.
இன்று நான் நற்குணத்தின் கனியைப் பற்றி பேசப் போகிறேன். முதலில், "நல்லது” என்ற வார்த்தையைப் பற்றி கொஞ்சம் பேச வேண்டும். இது ஆங்கிலத்தில் மிகவும் பொதுவான வார்த்தைகளில் ஒன்றாகும். ஆனால், நமது சமகால பேச்சுகளில், துரதிர்ஷ்டவசமாக, நாம் அந்த வார்த்தையைப் பெரிதும் குறைத்துவிட்டோம், மேலும், நாம் அதை மிக மலிவாகவும், மிக கவனக்குறைவாகவும் பயன்படுத்தியுள்ளோம். “நல்லது” என்ற வார்த்தையை, அந்த வார்த்தைக்கு உண்மையில் தகுதியற்ற மக்களுக்கும், விஷயங்களுக்கும் நாம் பயன்படுத்தியுள்ளோம்.
இப்போது, வேதாகமத்தில், “நல்லது” என்ற வார்த்தை சிறப்பை, குறிப்பாக, நடத்தைக்குரிய சிறப்பைக் குறிக்கிறது. அதன் கடுமையான பயன்பாட்டில், அது தேவனுக்கு மட்டுமே பொருந்தும். இது மாற்கு 10:17-18 இல், இயேசு கூறிய சிலவற்றால் வெளிப்படுகிறது.
17 பின்பு அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால் படியிட்டு: நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். 18 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே.
இது மிகவும் வலுவான கூற்றாகும். “தேவனைத் தவிர யாரும் நல்லவர்கள் இல்லை.” மற்றும், நிச்சயமாக, அந்த இளைஞன் இயேசுவை தெய்வமென்று உணரவில்லை என்றால், இயேசுவை நல்லவர் என்று அழைக்க அவனுக்கு உண்மையில் தகுதி இல்லை.
எனவே, நற்குணம் என்பது உண்மையில், மிக உயர்ந்த தரத்தை அடிப்படையாகக் கொண்டது. இது தேவனின் தரத்தை அடிப்படையாகக் கொண்டது, தேவன் யார், தேவன் என்ன செய்கிறார் என்பதற்கான தரநிலையாகும். அதுதான் உண்மையான நற்குணம், நடத்தைக்குரிய சிறப்பு, முழுமையான நேர்மை, சரியான செம்மை, சரியான நீதி. அது தொடர்பான எந்த அர்த்தத்திலும், நாம் நன்றாக இருக்க வேண்டுமானால், அதைச் செய்ய ஒரே ஒரு வழி இருக்கிறது. நாம் செய்யக்கூடிய ஒரே விஷயம், தேவனின் வாழ்க்கை மற்றும் அவரது இயல்பின் பாத்திரங்களாக மாறுவதுதான். அப்போதுதான் தேவனின் நற்குணம் நம்மில் வெளிப்படுகிறது. நாம் அதை செய்யும்போது, இந்த உலகில், தேவன் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதைக் காட்டுகிறோம். இந்த அர்த்தத்தில், நல்லவராக இருப்பது என்பது தேவன் வாழ்கிறார் என்பதற்கு சாட்சியமளிக்கும் வாழ்க்கையை வாழ்வதாகும். இதை கார்டினல் சுஹார்ட் என்பவர் சில வார்த்தைகளில் அழகாக தொகுத்துள்ளதில் நான் வாசித்தேன். அவர் இதை சொல்கிறார்:
சாட்சியாக இருப்பது என்பது பிரச்சாரத்தில் ஈடுபடுவதிலோ, அல்லது மக்களைத் தூண்டுவதிலோ அல்ல, மாறாக, வாழும் மர்மமாக இருப்பதாகும். தேவன் இல்லை என்றால், ஒருவரது வாழ்க்கை அர்த்தமில்லாத வகையில் இருக்கும் என்பதே அர்த்தம்.
நீங்கள் பார்க்கலாம், நல்லவராக இருப்பதற்கு ஒரு வாழும் மர்மமாக இருக்க வேண்டும். ஆனால், மறுபுறம், அவர்களால் மறுக்க முடியாத ஒன்று, நற்குணத்தின் வாழ்க்கையான தேவனின் நற்குணமானது, அவருடைய விசுவாசிகளில் ஒருவரால் வாழ்ந்து, தேவன் இருக்கிறார் என்பதை வைத்து உலகத்தை எதிர்கொள்வதாகும்.
பிரிட்டிஷ் கடற்படையில் சில ஆண்டுகள் பணியாற்றிய ஒருவரின் சாட்சியத்தை ஒருமுறை கேட்டது எனக்கு நினைவில் இருக்கிறது. அவர் ஒரு உறுதியான நாத்திகராக கடற்படைக்குச் சென்றார். அவர் கடவுளை நம்பவில்லை, எல்லா வகையான மதங்களையும் அவமதிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யமாட்டார், அவர் ஒருபோதும் மதத்தில் ஈடுபட விரும்பவில்லை. ஆனால், சில மாதங்களுக்கு, அவர் ஒரு சிறிய கப்பலில் இருந்தார், அந்த மாலுமிக் குழுவில் சில ஆண்கள் மட்டுமே இருந்தனர், அக்குழுவில் இருந்த மற்ற் ஆண்களில் ஒருவர் உறுதியான கிறிஸ்தவராக இருந்தார், அவர் தினமும் அவரை சந்தித்து, உணவை பகிர்ந்து கொண்டார், அவரிடமிருந்து அவர் தப்ப முடியவில்லை. இந்த உறுதியான கிறிஸ்தவர், அவருக்குப் பிரசங்கிக்கவில்லை, அவருக்கு வேதத்தை மேற்கோள் காட்டவில்லை, ஆனால் அவர் கண்களுக்கு முன்பாக நாள்தோறும், வாரந்தோறும், மாதந்தோறும், ஒரு நற்குணத்தின் வாழ்க்கையை வாழ்ந்தார். இந்த நாத்திகர் இந்த சக குழு உறுப்பினரிடம் அவரால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றைக் கண்டார். அவர் பார்த்திராத ஒரு வகையான வாழ்க்கை அது. அவரது இறுதிக் கருத்து இதுதான்: “நான் ஒரு பைபிளை திறந்திருக்கவில்லை, ஆனால் இந்த மனிதனின் வாழ்க்கையை என்னால் படிக்காமல் இருக்க முடியவில்லை. இறுதியில், ஒரு கடவுள் இருக்க வேண்டும் என்று அவருடைய வாழ்க்கை எனக்கு உணர்த்தியது.”
அதனால் அந்த மனிதன் பிரிட்டிஷ் கடற்படையிலிருந்து, இயேசு கிறிஸ்துவின் உறுதியான விசுவாசியாக வெளியே வந்தார். அவரை நம்ப வைத்த பைபிள் எது? வெள்ளைத் தாளில் கருப்புக் குறிகளால் அச்சிடப்பட்ட பைபிள் அல்ல, சதையும் இரத்தமும் கொண்ட பைபிள் ஆகும். தன் விசுவாசத்தில் வாழ்ந்த ஒரு மனிதன், அதிக மதவெறி இல்லாமல், அதிக பிரசங்கம் இல்லாமல் – நல்லவராக மட்டுமே வாழ்ந்து காண்பித்தார்.
ஒவ்வொரு முறையும் நான் அந்தச் சாட்சியைக் கேட்கும் போதும், ஒவ்வொரு முறையும் நான் அதை தியானிக்கும்போதும், உண்மையில் என் கடமையின் உணர்வோடு அது என்னை எதிர்கொள்கிறது. நான் எனக்குள் சொல்லிக் கொள்வதுண்டு, “நினைவில் கொள், உன் வாழ்க்கை யாராவது ஒருவர் படிக்கும் ஒரே பைபிளாக இருக்கலாம்.” அநேகமாக, ஒரு கிறிஸ்தவராக உங்கள் வாழ்க்கையில், நீங்கள் அந்த நாத்திகரைப் போன்ற ஒரு நபரை சந்திக்கப் போகிறீர்கள். தேவாலயத்திற்கு செல்லாத, பைபிளைப் படிக்காத, கடவுளை நம்பாத ஒருவர். அப்படிப்பட்டவரை தேவன் எப்படி சந்திக்க முடியும்? ஒருவேளை உங்கள் வாழ்க்கை யாராவது படிக்கும் ஒரே பைபிளாக இருக்கலாம். அவர்கள் இன்று படிக்க நேர்ந்தால், உங்கள் வாழ்க்கையின் பக்கங்களில் எதைப் படிப்பார்கள்?
நற்குணம் என்பது உண்மையில் உங்கள் வாழ்க்கையை தேவனின் நற்குணத்தின் பாத்திரமாக மாற்றுவதாகும் என்று நான் சொன்னேன். பின்னர், நீங்கள் என்னிடம் கேட்கலாம், “சரி, இதை எப்படி அடைய முடியும்?” எனது பதில் என்னவென்றால்: தேவனுக்கு இணங்கி, நம் மூலம் அவருடைய வாழ்க்கையை வாழ அனுமதிப்பதன் மூலமாகும். திறவுகோல் “இணங்குதல்” என்ற வார்த்தையில் இருப்பதாக நான் நம்புகிறேன். கலாத்தியர் 2:20 இல் பவுல் தனது சொந்த கிறிஸ்தவ அனுபவத்தைப் பற்றி என்ன கூறுகிறார் என்பதை நீங்கள் கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்:
20 கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
எனவே பவுல் கூறுகிறார், “நான் எப்படி கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வது? சரி, என்னுடைய சொந்த பலத்திலும் திறமையிலும் அதைச் செய்ய விட்டுவிட்டால், என்னால் அதைச் செய்ய முடியாது. ஆனால், என் ரகசியம் என்னவென்றால், ‘நானே’ என்பதற்கு முடிவுக்கு வந்துவிட்டேன். நான் சிலுவையில் இயேசுவைப் பார்க்கிறேன், உண்மையில் நான்தான் இறந்தேன் என்பதை உணர்ந்தேன். இப்போது நான் இறந்துவிட்டேன், ஆனால் என்னுள் ஒரு புதிய நபர் வாழ்கிறார், அதுதான் உயிர்த்தெழுந்த கிறிஸ்து. ஆகவே, நான் இப்போது வாழும் இந்த மரண உடலில், இங்கே இந்த நேரத்தில், இந்த இடத்தில் – சமையலறையில், அலுவலகத்தில், தொழிற்சாலையில், நெடுஞ்சாலையில் – நான் இப்போது வாழும் வாழ்க்கை, என்னை நேசித்து எனக்காகத் தம்மையே ஒப்படைத்த தேவகுமாரன் மீது விசுவாசம் வைத்து வாழ்கிறேன்.”
பின்னர், மீண்டும் பிலிப்பியர் 1:21 இல் பவுல் கூறுகிறார்:
21 கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.
எனவே, பவுலின் வாழ்க்கை அவருடையது அல்ல, கிறிஸ்துவின் வாழ்க்கை அவர் மூலம் வாழப்பட்டது. அவர் ‘தனது’ என்பதற்கு முடிவுக்கு வந்திருந்தார், அவர் அதை இயேசுவிடம் ஒப்படைத்தார்.
முன்மாதிரியான நற்குணத்துடன் வாழ்ந்த, பல வருடங்களுக்கு முன், ஒரு வயதான பெண்மணியின் சாட்சியம் எனக்கு நினைவிற்கு வருகிறது. அவள் அதிகம் பிரசங்கம் செய்யவில்லை, அவள் வாழ்ந்து காட்டினாள். ஒருநாள் யாரோ அவளிடம் இப்படியாக கேட்டார், “சகோதரி, அப்படியென்றால், நீங்கள் சோதிக்கப்படும்போது என்ன செய்வீர்கள்?” அதற்கு அவள்
சிறப்பான பதிலளித்தார், “பிசாசு கதவைத் தட்டும்போது, நான் இயேசுவை பதிலளிக்க அனுமதிப்பேன்,” என்றாள்.
அதுதான் இயேசுவிடம் ஒப்படைப்பதாகும். இது உங்கள் சொந்த பலத்தில் பிசாசை சந்திக்க முயற்சிப்பதில்லை, உங்கள் சொந்த திறமை அல்லது நீதியில் சோதனையை எதிர்கொள்ள முயற்சிப்பதில்லை. இது உங்கள் மூலம் தேவன் தனது வாழ்க்கையை வாழ அனுமதிப்பதாகும்.
ரோமர் 6: 11-14 இல் பவுல் சொல்வதை மீண்டும் கேளுங்கள்:
11 அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். 12 ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. 13 நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். 14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
இது ஒரு புகழ்பெற்ற அறிக்கையாகும். “பாவம் உங்கள் மீது ஆளுகை செய்யாது.” அது எப்படி நிறைவேற்றப்படுகிறது? சரி, முதலில் இது சட்டத்தின் செயல்களால் நிறைவேற்றப்படவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கிறிஸ்து மரித்தபோது, நியாயப்பிரமாணத்தின் கீழ் இருந்த பாவங்களுக்காக மரித்தார். நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீதிமான்களாக்கப்படும் கடமையிலிருந்து அவர் நம்மை விடுவித்தார். அவர் நம்மை ஒரு புதிய வகையான நீதிக்குள் கொண்டு வந்தார். குறைந்த தரத்தில் அல்ல, ஆனால் வேறு வழிகளில் செயல்படுகிறது: தேவனின் கிருபையின் நீதி. மேலும், இந்த நீதி தேவனுக்கு அடிபணிவதன் மூலம் அடையப்படுகிறது.
இன்னும் ஒன்றை நான் சொல்ல வேண்டும்: இந்த வகையான நற்குணம் தீமையுடன் சமரசம் செய்யாது. இது எல்லா வகையான அழுத்தங்களுக்கு இணங்கும் பால் – மற்றும் – தண்ணீர் கிறிஸ்தவம் அல்ல. மாறாக, நன்மைக்கும் தீமைக்கும் இடையில் எந்த சமரசமும் இல்லை. சங்கீதம் 45:7 இல், சங்கீதக்காரன் கூறுகிறார், இவை கர்த்தராகிய இயேசுவை சித்தரிக்கும் தீர்க்கதரிசன வார்த்தைகள்:
7 நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.
கவனியுங்கள், நீதியை விரும்புவதற்கு நாம் துன்மார்க்கத்தை வெறுக்க வேண்டும். இதில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது. சங்கீதம் 97:10 இல், சங்கீதக்காரன் கூறுகிறார்:
10 கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்.
இறுதியில், தீமையை வெல்லும் வலிமையான ஒரே சக்தி நன்மைதான். தீமையை எதிர்கொள்வதற்கும் அதை வெல்வதற்கும் நன்மையைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், நன்மை தீமையை வெல்லும் அளவிற்கு வலிமையானது. ரோமர் 12:21 இல், பவுல் சொல்வது இதுதான்:
21 நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.
நினைவில் கொள்ளுங்கள், நற்குணம் என்பது உங்களில் வாழும் தேவனின் வாழ்க்கையாகும். மேலும், தேவனின் வாழ்க்கை எல்லா தீய சக்திகளையும் விட பெரியது மற்றும் வலிமையானது. நற்குணம் என்பது தேவனுக்கு இணங்கி, உங்களாலும், உங்கள் மூலமாகவும் அவருடைய வாழ்க்கையை வெளிப்படுத்த அனுமதிப்பதாகும்.
சரி, இன்றைக்கு நம் நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் உங்களுடன் மீண்டும் வருவேன். நாளை ஆவியின் கனியின் அடுத்த வடிவமான விசுவாசத்தின் கனியைப் பற்றி பேசுகிறேன்.
குறியீடு: RP-R010-102-TAM









