தத்துவத்தில் தேடல்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 9
டெரெக் பிரின்ஸ் தனது 'என் வாழ்க்கை ஏட்டின் பக்கங்கள்' தொடரின் 'தத்துவத்தில் ஒரு தேடல்' பகுதியில், தனது தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். அவரது வளர்ப்பும் கல்வியும் அவரை எவ்வாறு கிறிஸ்தவத்திலிருந்து தத்துவத்தை நோக்கி அழைத்துச் சென்றது என்பதைக் கண்டறியுங்கள். கல்வித்துறையில் அவர் மேற்கொண்ட பயணம், வாழ்வு மற்றும் விசுவாசம் குறித்த ஆழமான கேள்விகள், மற்றும் இறுதியில் அவர் நற்செய்தியின் நித்திய உண்மைகளுக்குத் திரும்பியதை இந்த நூல் விவரிக்கிறது.
Transcript
இன்று மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. இன்று, எனது தேடல் நான் அறிந்த கிறிஸ்தவத்திலிருந்து விலக்கி எப்படி தத்துவத்திற்கு அழைத்துச் சென்றது என்பதை நான் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
நான் என் வாழ்க்கையின் ஆரம்பத்திற்கு செல்கிறேன். நான் இந்தியாவில், பிரிட்டிஷ் பெற்றோருக்கு பிறந்தவன். எனது குடும்ப பின்னணி முழுவதும் இராணுவமாகும். பிரிட்டிஷ் ராணுவத்தில் அதிகாரியாக இல்லாத ஒரு ஆண் உறவினரை என் குடும்பத்தில் நான் சந்தித்ததில்லை. அதற்கு நான் மட்டும் விதிவிலக்கு.
நான் முதலாம் உலகப்போரின் போது இந்தியாவில் பிறந்தேன். போர் முடிவடைந்தவுடன், எனது உடல்நலம் மற்றும் எனது கல்வியின் நலனுக்காக எனது குடும்பத்தினர் என்னை பிரிட்டனுக்கு அனுப்பினார்கள், அடுத்த இருபது வருடங்கள் அல்லது அதற்கும் மேலாக என் வாழ்க்கையில் கல்வி முக்கிய காரணியாக இருந்தது.
ஒன்பது வயதில் நான் ஒரு விடுதிப் பள்ளிக்கு அனுப்பப்பட்டேன், ஒன்பது முதல் இருபத்தைந்து வயது வரை நான் ஒவ்வொரு வருடத்தின் பெரும்பகுதியை பல்வேறு வகையான விடுதிப் பள்ளிகள் அல்லது கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் கழித்தேன்.
பதின்மூன்று வயதில் பிரிட்டன் முழுவதும் அந்த வயது சிறுவர்களுக்கான போட்டித் தேர்வில் வெற்றிப் பெற்றேன். பிரிட்டனின் அறிவுசார் உயர் வர்க்கத்தின் மேல் நிலையினரும், நானும் ஈடன் கல்லூரியில் ஒரு அறிஞராக அனுமதிக்கப்பட்டேன், அது பிரிட்டனின் பழமையான, மிகப்பெரிய, மிகவும் விலையுயர்ந்த, மிகவும் பிரத்தியேகமான மற்றும் பெரும்பாலும் ஆண் குழந்தைகளுக்காக மிகவும் பகட்டுத்தனமான விடுதியைக் கொண்டுள்ள ஒரு பள்ளியாகும்.
பதினெட்டு வயதில் நான் மீண்டும் மற்றொரு தேர்வில் வெற்றி பெற்றேன், மேலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள கிங்க்ஸ் கல்லூரியில் எனக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. எனது முக்கிய கல்வியானது கிளாசிக்ஸில் (பாரம்பரியக் கல்வியில்) இருந்தது.
நான் ஒன்பது வயதில் லத்தீன் மொழியையும், பத்து வயதில் கிரேக்கத்தையும் கற்க ஆரம்பித்தது எனக்கு நினைவிருக்கிறது. பதின்மூன்று வயதில் நான் லத்தீன் மற்றும் கிரேக்கம் ஆகிய இரு மொழிகளிலும் வசனம் எழுத முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனது மதப்பின்னணி ஆங்கிலேய அரசு தேவாலயமான, ஆங்கிலிக்கன் தேவாலயத்தில் இருந்தது. எனக்கு வேறு எந்த தேவாலயமும் தெரியாது. நான் பள்ளியில் இருந்த எல்லா வருடங்களிலும், வாரத்திற்கு ஒரு முறையும், ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு முறையும் – அதாவது வாரத்திற்கு எட்டு முறை தேவாலயத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தேவாலயத்தில் இருந்தவர்களைச் சுற்றிப்பார்த்தபோது, படிப்படியாக நான் ஏமாற்றமடைந்தேன். நான் பதின்ம வயதை அடைந்தபோது, குற்றம் கண்டுபிடிக்கிற, எதிர்ப்பு, அதிகாரம் மற்றும் பழைய தலைமுறையினர் மீதான அவநம்பிக்கை போன்ற வழக்கமான பதின்ம வயது எதிர்வினை எனக்கு இருந்தது. ஆங்கிலிக்கன் தேவாலயத்தில் நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் ஒரு காரியம் என்னவென்றால், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையும் நாங்கள் ஒரு குறிப்பிட்ட ஜெபத்தை ஒன்றாக இணைந்து செய்ய வேண்டும், இந்த ஜெபத்தில், “மோசமான குற்றவாளிகளை மன்னியுங்கள்” என்று சொல்ல வேண்டியிருந்தது. எனக்கு பதின்மூன்று அல்லது பதினான்கு வயது இருக்கும்போது, “மோசமான குற்றவாளிகளை மன்னியுங்கள்” என்று சொல்லும் அந்த நபர்களை நான் சுற்றிப் பார்ப்பேன், மேலும், “அவர்கள் நிச்சயமாகவே மோசமானவர்கள்” என்று எனக்குள்ளே சொல்லிக்கொள்வேன். பின்னர், நான் எனக்குள்ளே நினைத்தேன், “….நானும் ஒரு குற்றவாளி.” அதில் என் மனதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நான் செய்யக்கூடாத எல்லா விஷயங்களையும் நான் செய்கிறேன் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் பின்னர் இந்த முடிவுக்கு வந்தேன்: நான் மதம் இல்லாமல், குற்றவாளியாக இருக்க முடியும், ஆனால் நான் கிட்டத்தட்ட பரிதாபமாக (மோசமாக) இல்லை. அதுதான் என் ரகசிய தீர்மானமாக இருந்தது.
இப்போது, நான் ஈடனில் இருந்தவரை, எனக்கு வேறு வழியில்லை, ஒவ்வொரு வாரமும் ஒரு முறையும், ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் இரண்டு முறையும் நான் தேவாலயத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. என் மனதில் நான் இந்த முடிவுக்கு வந்தேன்: கிறிஸ்தவம் என்பது இரு பாலினத்திலுள்ள வயதானவர்களுக்கும், பெண்களுக்குமான ஒரு பாதிப்பில்லாத தொழில்!
நான் கிறிஸ்தவத்தை விவரித்த மற்றொரு வழி: பலவீனமான எண்ணம் கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கையின் தடுமாற்றத்திற்கு பயன்படுத்தும் ஒரு ஊன்றுகோல் ஆகும். ஆனால் நான் பலவீனமான மனம் கொண்டவன் அல்ல, எனக்கு ஊன்றுகோல் தேவையில்லை, என்னால் முடிந்தவரை அதைத் தூக்கி எறிந்துவிடுவேன்.
சரி, நான் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குச் சென்றபோது, தேவாலயத்திற்குச் செல்வது இனி கட்டாயலில்லை, மேலும், நான் கிறிஸ்துவின் அந்த ஊன்றுகோலை எடுத்து, என்னால் எறிய முடிந்தவரை அதை என்னிடமிருந்து தூக்கி எறிந்தேன். ஆனால் எப்பொழுதும் எனக்குள்ளே எங்கோ வாழ்க்கைக்கான ஒரு அர்த்தமும், நோக்கமும் இருக்க வேண்டும் என்ற ஒரு நளின உணர்வு இருந்தது. நான் எங்கே பார்க்க முடியும்? கிறிஸ்தவத்தில், நான் அறிந்தபடி, பதிலை வழங்கத் தவறிவிட்டது. அது எங்காவது இருக்க வேண்டும். எங்கே பார்ப்பது?
சரி, தத்துவத்தில் பதில் இருக்கிறது என்று முடிவு செய்தேன், அதனால் நான் தத்துவத்தின் மாணவனானேன். நான் மிகவும் படித்த தத்துவம் பிளாட்டோவின் தத்துவமாகும், அவர் சந்தேகத்திற்கு இடமின்றி மனித வரலாற்றின் தலைசிறந்த அறிவாளிகளில் ஒருவர். பிளாட்டோவை மூல கிரேக்க மொழியில் படிக்க முடிந்தது, அந்த மொழியில் அவர் எழுதிய ஒவ்வொரு வார்த்தையையும் நான் படித்திருக்கிறேன் – அது பல பல வார்த்தைகள் ஆகும். பண்டைய தத்துவம் பற்றிய எனது ஆய்வை நவீன தத்துவத்தின் பல்வேறு வடிவங்களுடன் இணைத்தேன்.
அந்த நாட்களில் நாகரீகமாக இருந்த தத்துவத்தின் வடிவம் லாஜிக்கல் பாசிட்டிவிசம் (தருக்கப் புலனறிவாதம்) என்று அறியப்பட்டது. இது உண்மையில் வார்த்தைகளின் சரியான பொருளைக் கண்டுபிடிப்பதை மையமாகக் கொண்டது, மேலும், அதன் ஆய்வறிக்கை என்னவென்றால், வார்த்தைகளின் அர்த்தம் என்ன என்பதை நீங்கள் உண்மையிலேயே புரிந்துகொண்டால், நீங்கள் ஒரு தத்துவஞானியாக இருப்பதைப் பற்றி கவலைப்படமாட்டீர்கள். இது ஒரு வித்தியாசமான கலப்பு விதமான தொழிலாகும். கேம்பிரிட்ஜில் உள்ள தத்துவ வகுப்பில், பேராசிரியர் விரிவுரை ஆற்றிய மேஜை உண்மையில் இருந்ததா என்பதை அறிந்துகொள்வோமா என்று விவாதித்து நாங்கள் ஒரு முழு காலத்தையும் கழித்தது எனக்கு நினைவில் இருக்கிறது, உண்மையில், எனக்கு நினைவிருக்கும் வரையில், நாங்கள் அந்த சிக்கலை ஒருபோதும் தீர்க்கவில்லை.
எனவே, தத்துவமும் ஒரு விதத்தில் சற்றே குழப்பமாகவே இருந்தது. நான் அறிவார்ந்த திறமை பெற்றவன் – நான் எப்போதும் வீட்டில் வார்த்தைகளின் உலகத்திலே இருந்தேன் – ஆனால், ஒரு காரை எப்படி செல்ல வைப்பது போன்ற நடைமுறை விஷயங்களுக்கு வரும்போது, அது போன்ற விஷயங்களில் நான் கவலைப்படுவதில்லை. காரை கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்த நபர்களை நண்பர்களாக நான் வைத்துக்கொண்டேன். ஆனால், சுருக்கங்கள், வரையறைகள், கோட்பாடுகள் மற்றும் அதுபோன்ற விஷயங்களுக்கு வரும்போது, நானே அந்த துறையில் வல்லுநராக இருந்தேன். அதனால் நான் மிகவும் வெற்றியடைந்தேன். எனது குறிப்பிட்ட துறையில் பல்கலைக்கழகத்தில் நான் எப்போதும் வெற்றிகரமான மாணவனாக இருந்தேன். இரண்டு ஆண்டுகளாக நான் தத்துவத்தில் மூத்த பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் பட்டத்தை பெற்றேன், இது ஒரு சிலர் மட்டுமே அனுபவிக்கக்கூடிய ஒரு தனிமதிப்பாகும். இதை நான் பெருமைக்காகக் கூறவில்லை, ஆனால் எனது விரக்திக்குக் காரணம் அறிவுப் பற்றாக்குறையல்ல என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
எப்படியோ, தத்துவம் உண்மையில் தெளிவான அல்லது நேர்மறையான பதிலைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் கண்டறிந்து, நமது சமகால சமுதாயத்தில் மிகவும் நாகரீகமாக இருக்கும் ஓரியண்டல் வழிபாட்டு முறைகள் மற்றும் அமைப்புகளுக்கு நான் திரும்பினேன். நான் அநேகமாக இவர்களில் பலரை விட ஒரு தலைமுறைக்கு முன்னால் இருந்தேன், ஆனால் நான் அதை உணரவில்லை. நான் யோகா, தியோசோபி மற்றும் வூடுவுக்கு (பில்லி சூனியத்துக்கு) கூட திரும்பினேன். நான் திரும்பிப் பார்க்கும்போது, என் எளிமையைப் பார்த்து நான் புன்னகைப்பேன் அல்லது சிரிப்பேன். நான் சிறிது காலம், என்னால் முடிந்தவரை, பயிற்சி செய்யும் யோகியானேன். நான் தியானம் மற்றும் பொசிசனல் (தோரணை) யோகாவை பயிற்சி செய்தேன். ஆனால், மீண்டும் ஏமாற்றத்தில் முடிவடைந்தேன். எனக்கு ஒரு குறிப்பிட்ட வகையான இயற்கைக்கு அப்பாற்பட்ட அனுபவம் இருந்தது, ஆனால் அது எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. உண்மையில், அதைத் தொடர்ந்து ஒருவித மனச்சோர்வு என்னைச் சுற்றி குடியேறியதாகத் தோன்றியது.
எனது பெரிய பிரச்சனை என்னவென்றால், நான் பல வழிகளில் ஒரு இலட்சியவாதியாக இருந்தேன். நான் பிளாட்டோவைப் படித்த போது, இலட்சிய நகரம், இலட்சிய அரசு, இலட்சிய சட்டங்கள், இலட்சிய அரசாங்கம் பற்றிய அவரது இலட்சிய படத்தைப் பார்க்க முடிந்தது. அது என்னை மிகவும் கவர்ந்தது. ஆனால் எப்பொழுதும் நான் ஒரு மோதலுடன் பூமிக்கு திரும்பி வந்துவிடுவேன். நான் அந்த இலட்சியத்தில் இருக்கவில்லை. நான் உண்மையாக இருப்பதுடன் எதிர்கொள்வேன். மற்றவர்களிடத்தில் மட்டுமல்ல, எல்லாவற்றையும் விட மோசமானது, என்னிலும் இருந்தது. மற்றவர்களிடமும், என்னிலும் உள்ள வாஸ்த்தவமானது, இலட்சியத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தது, அது மிகவும் விரக்தியாக இருந்தது. இலட்சியம் மற்றும் உண்மை ஆகிய இரண்டு விஷயங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க எனக்கு வழி தெரியவில்லை.
இவை அனைத்தின் விளைவாக எனக்கு நாள்பட்ட அஜீரணம் ஏற்பட்டது. அனைத்து வகையான எக்ஸ்ரே மற்றும் பிற சோதனைகள் மூலம் பிரிட்டனில் உள்ள சிறந்த மருத்துவமனை ஒன்றில் நான் கவனமாக பரிசோதிக்கப்பட்டேன், ஆனால் என் அஜீரணத்திற்கு மருத்துவ ரீதியாக கண்டறியக்கூடிய காரணம் எதுவும் இல்லை, அதனால் எந்த சிகிச்சையும் இல்லை. இலட்சியத்தைப் பற்றி நான் சிந்தித்தபோதும், உண்மையான நிலை இலட்சியத்திலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைப் பார்த்தபோதும் நான் அனுபவித்த இந்த விரக்திக்கான ஒரு உணர்ச்சிகரமான எதிர்வினையாகத்தான் ஏற்பட்டது என்று நான் நம்புகிறேன்.
இந்த அழுத்தத்திலிருந்தும், இந்த அஜீரணக் கோளாறுகளிலிருந்தும் என்னால் கண்டுபிடிக்க முடிந்த ஒரே விதமான நிவாரணம் விஸ்கிக்கு மாறுவதுதான். என் பெற்றோரின் வீட்டில் விஸ்கி எப்போதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மதுபானமாக இருந்தது. விஸ்கியைப் பற்றிய எனது அணுகுமுறையை குறித்து யாரும் எந்த குறையையும் உணரவில்லை. எனக்கு நினைவிருக்கிறது, நான் பதினாறு வயது சிறுவனாக, யாரும் பார்க்காதபோது, நான் ரகசியமாக ஒரு சிறிது விஸ்கியை எடுத்து, அதை ஒரு கிளாசில் வைத்து, அதில் கொஞ்சம் சோடாவைத் சேர்த்து, அதைக் குடித்துவிட்டு, சுமார் இரண்டு அங்குல உயரத்தை உடனே அடைந்ததைப் போல் உணர்ந்தேன். ஆனால், நான் என் இருபதுகளை எட்டியபோது, சில வருடங்களுக்கு முன்பு ஒரு கண்ணாடியில் அந்த சிறிய தெறிப்பு செய்ததையே எனக்கு செய்ய இப்போது ஒரு பாட்டில் விஸ்கி தேவைப்பட்டது.
எனவே, இலட்சியத்திற்கும், உண்மைக்கு இடையில் இந்த பதற்றத்தை என்னால் தாங்க முடியாதபோது, நான் ஒரு பாட்டில் விஸ்கியை எடுத்துக்கொள்வேன், எனது நண்பனும், நானும் கிளாசிக்கல் இசையைக் கேட்டு அந்த விஸ்கியைக் குடிப்போம். நாங்கள் ஒரு பாட்டிலை முடித்ததும், இரண்டாவது பாட்டிலுக்கு செல்லுவோம். எனக்கு ஒரு குறிப்பிட்ட நண்பர் இருந்தார், அவர் இசை துறையில் மிகவும் நிபுணத்துவம் வாய்ந்தவர். அந்த நாட்களில் ஹை-ஃபைக்கள் இல்லாததால், சிறந்த இசை ஒலிகளைக் பெறுவதற்காக, கிராமஃபோனில் வளைந்த ஒன்பது அடி கொம்பு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே, இந்த கொம்பை எங்கள் தலைக்குமேல் நீட்டிக் கொண்டு அமர்ந்திருப்போம், இந்த அற்புதமான இசையைக் கேட்டு, விஸ்கியைக் குடித்துவிட்டு, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு, வாழ்க்கைக்கான தீர்வு நம்மிடம் இருக்கிறதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருப்போம்.
திரும்பிப் பார்க்கும்போது, என் வாழ்க்கையில் இந்தக் காலக்கட்டத்தைப் பற்றி என்னால் இப்படியாக சொல்ல முடியும்: நான் கல்வியில் வெற்றி பெற்றேன். கேம்பிரிட்ஜின் கிங்க்ஸ் கல்லூரியில் ஃபெல்லோஷிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களில் நானும் ஒருவன். அந்த வார்த்தைகள் அமெரிக்காவில் அதிகம் அர்த்தம் கொண்டதாக இல்லை, ஆனால் பிரிட்டனில் அது மிக உயர்ந்த கல்வி சிறப்பு மதிப்புடையதாகும். நான் அங்கேயே தங்கியிருந்து பணிசெய்யும் பேராசிரியராகவும், எனது கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்தேன். எனவே, நான் வெற்றியை அடைந்தேன், எனக்கு ஒரு குறிப்பிட்ட நற்பெயர் இருந்தது, பிளாட்டோவின் வரையறை முறை மற்றும் அதன் பரிமாணம் பற்றிய ஆய்வுக் கட்டுரையை எழுதியிருந்தேன், என்னிடம் நிறைய நீண்ட சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் இருந்தன, நான் நிறைய வித்தியாசமான விஷயங்களை முயற்சித்தேன், ஆனால், நான் திரும்பிப் பார்க்கும்போது, நான் தனிப்பட்ட முறையில், அதைச் சொல்ல வேண்டும், நான் குழப்பமாகவும், விரக்தியாகவும், ஏமாற்றமாகவும் இருந்தேன், பதிலை எங்கே கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை.
சரி, இன்றைக்கு நம் நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் உங்களுடன் மீண்டும் வருவேன். சத்தியத்திற்கான எனது தேடலில், எனது தனிப்பட்ட அனுபவங்களை உங்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்வேன். என் வாழ்க்கையில் ஏற்பட்ட இரண்டாம் உலகப்போரின் வியத்தகு தாக்கத்தைக் குறித்து நான் நாளை உங்களுக்குச் சொல்கிறேன்.
குறியீடு: RP-R030-102-TAM









