“நமது சுதந்தரத்தை உரிமை கோருதல்” என்ற இந்த வாரத்திற்கான செழுமையான உற்சாகமான கருப்பொருளை நாம் தொடர்ந்து படித்து வருவதில் மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது.

நேற்று ஆவிக்குரிய பகுதியைப் பார்த்தோம். இன்று நாம் சரீரப் பகுதியை பார்க்கப் போகிறோம். இயேசு நமக்காக வாங்கிய சரீர நன்மைகள் என்ன?

கீழ்ப்படிதலுக்கான ஆசீர்வாதங்கள் மற்றும் கீழ்ப்படியாமைக்கான சாபங்கள் இரண்டையும் பட்டியலிடும் அந்த மாபெரும் அதிகாரமான உபாகமம் 28 க்கு மீண்டும் செல்வோம். ஆசீர்வாதங்கள் மற்றும் சாபங்களுக்கான அடிப்படை காரணங்களை நாம் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும் என்று சொல்லி ஆரம்பிக்கிறேன். தேவனின் சத்தத்தைக் கேட்பது ஆசீர்வாதங்களைக் கொண்டு வருகிறது, தேவனின் சத்தத்தைக் கேளாதது சாபங்களைக் கொண்டு வருகிறது. இதுவே வேதம் முழுவதும் இயங்கி வரும் கொள்கை ஆகும். தேவனின் சத்தத்துக்கு செவிசாய்த்து, அவர் சொல்வதைச் செய்கிறோமா என்பதில்தான் நமது முழு விதியும் இறுதியில் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், அவருடைய சத்தத்துக்கு செவிசாய்க்காவிட்டால், அவர் சொல்வதை நம்மால் செய்ய முடியாது. நாம் கர்த்தருடன் அந்த உயிருள்ள, தனிப்பட்ட தொடர் உறவைக் கொண்டிருக்க வேண்டும், அது அவருடைய சத்தத்தைக் கேட்க நமக்கு உதவுகிறது. யோவான் 10:27 இல், இயேசு சொன்னது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.” எல்லா காலங்களிலும் உண்மையான விசுவாசிகளின் அடையாளம் இதுதான், அவர்கள் இயேசுவின் சத்தத்தைக் கேட்கிறார்கள், அவர்கள் அவரைப் பின்பற்றுகிறார்கள். செவிகொடுத்தல் ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும், செவிகொடாதிருத்தல் சாபங்களைக் கொண்டுவரும்.

இப்போது நாம் உபாகமம் 28இல், தேவனின் சத்தத்துக்கு செவிகொடாமலும், கீழ்ப்படியாமலும் இருக்கும்போது விளையும் சாபங்கள் அனைத்தையும் பார்க்கப் போகிறோம். உண்மையில் அவைகள் நிறைய உள்ளன. நான் அவற்றை சுருக்கமாக தொகுத்து சொல்கிறேன். நான் இப்போது பட்டியலிடப்போகிற அனைத்தும் தேவனின் மீட்கப்பட்ட மக்களுக்கு சொந்தமல்லாத சாபங்களாகக் கூறப்பட்டவை என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்வது அவசியம்.

வசனம் 21, கர்த்தர் சொல்கிறார், “கர்த்தர் உன்னை நிர்மூலமாக்குமட்டும் கொள்ளைநோய் உன்னைப் பிடித்துக்கொள்ளப் பண்ணுவார்.” கொள்ளைநோய் ஒரு சாபமாகும்.

வசனம் 22, “கர்த்தர் உன்னை ஈளையினாலும், காய்ச்சலினாலும், உஷ்ணத்தினாலும், எரிபந்தத்தினாலும்….. வாதிப்பார்.” எனவே, மெலிவுண்டாக்குதல், காய்ச்சல், எரிபந்தம் ஆகியவை சாபங்களாகும்.

வசனம் 27 பின்வருவனவற்றை பட்டியலிடுகின்றன: எரிபந்தமான பருக்கள், மூலவியாதி, சொறி மற்றும் சிரங்கு. இவை அனைத்தும் சாபங்கள். அவைகள் தேவனின் மீட்கப்பட்ட மக்களுக்கு சொந்தமானவைகளாக இருக்கக்கூடாது.

வசனம் 28 குருட்டாட்டத்தை பட்டியலிடுகின்றது.

வசனம் 35 உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும், முழங்கால்களிலும், தொடைகளிலும் கொடிய எரிபந்தப் பருக்கள் பற்றி பேசுகிறது.

வசனம் 59 மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, கீழ்ப்படியாமையால் ஏற்படும் அனைத்து உடல் ரீதியான பேரழிவுகளின் வெளிப்படையான அறிக்கையாயிருக்கிறது. அது சொல்கிறது, “கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய ரோகங்களாலும் உன்னையும் உன் சந்ததியையும் அதிசயமாய் வாதித்து..” அந்த வசனத்தை மீண்டும் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, கிறிஸ்தவர்களாகிய நம்மில் பலர் ஆசீர்வாதங்களை அனுபவிக்க வேண்டியதற்கு பதிலாக சாபங்களை சகித்துக் கொண்டிருக்கிறோம். இரண்டு முக்கிய காரணங்களுக்காக நாம் சாபங்களை சகித்துக் கொண்டிருக்கிறோம், ஒன்று அவை சாபங்கள் என்று தெரியாமல் இருக்கிறதினாலோ அல்லது ஆசீர்வாதங்களை நாம் பெற்றுக்கொள்வதற்காக இயேசு சாபங்களிலிருந்து நம்மை விடுவித்தார் என்பதை நாம் உணராமல் இருக்கிறதினாலோ. எனவே, 59 ஆவது வசனத்தை மீண்டும் கேட்டு, நீங்கள் சாபங்களில் வாழ்கிறீர்களா அல்லது ஆசீர்வாதங்களில் வாழ்கிறீர்களா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். “கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய ரோகங்களாலும் உன்னையும் உன் சந்ததியையும் (அவை தலைமுறை தலைமுறையாய் செல்கின்றன என்பதைக் கவனியுங்கள்) அதிசயமாய் வாதித்து.”

பின்னர் வசனம் 60 இல், அது எகிப்தில் உள்ள அனைத்து நோய்களையும் பற்றி பேசுகிறது. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ராணுவத்தில் ஒரு ராணுவ வீரனாக எகிப்தில் இரண்டு வருடங்களைக் கழித்தேன். எகிப்தில் நோய்கள் எண்ணற்றவையாக இருந்தது என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். எகிப்தில் காணப்படாத பல நோய்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் அப்படி இருந்திருக்குமானால், அவைகள் அந்த சாபங்களில் சொல்லப்பட்டிருக்கும், ஏனென்றால், அடுத்த வசனம் (61) சொல்கிறது, “இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிராத எல்லாப் பிணிகளையும் வாதையையும” எனவே, தர்க்கரீதியாக, ஒவ்வொரு வகையான நோயும், ஒவ்வொரு வகையான வாதையும் ஒரு சாபமாகும். எப்படியோ அதன் இறுதி காரணம் தேவனுக்கு எதிரான கீழ்ப்படியாமையாகும்.

ஏசாயா தீர்க்கதரிசி கீழ்ப்படியாமை மற்றும் கலகத்தின் விளைவுகளைப் பற்றிய மிக மிக தெளிவான சித்திரத்தை நமக்குத் தருகிறார். அவர் இஸ்ரவேல் தேசத்திடம் பேசுகிறார், முற்றிலும் நோய்வாய்ப்பட்ட உடலுடன் இருக்கும் அவர்களது நிலைமையை, கீழ்ப்படியாமையின் விளைவுக்கு ஒப்பிடுகிறார். ஏசாயா 1: 5-6 இல், அவர் சொல்வது இதுதான்:

5 இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகம் அதிகமாய் விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது. 6 உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை; அது காயமும், வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது.

இது கீழ்ப்படியாமையின் விளைவுகளின் தெளிவான உருவக காட்சி. ஆனால், ஒரு நாள் நான் இதை படித்துக்கொண்டிருந்தபோது, பரிசுத்த ஆவியானவர் எனக்கு அற்புதமான, அழகான ஒன்றைக் காட்டினார். நான் ஏற்கனவே உணர்ந்த காரியம் என்னவென்றால், இயேசு நமக்கு மாற்றாக இருந்ததால், எல்லா சாபங்களையும் தம்மீது ஏற்றுக்கொண்டார். அவர் நமக்காக சாபமாக மாற்றப்பட்டு, சாபத்திலிருந்து நம்மை மீட்டார், ஆனால் நான் ஏசாயா 1:5-6 இல் உள்ள அந்த பகுதியை படித்துக் கொண்டிருந்தபோது, இஸ்ரவேலின் கீழ்ப்படியாமையின் விளைவாக இருக்கும் உருவக காட்சியாக மட்டும் அல்லாமல், இயேசு சிலுவையில் தொங்கியது போன்ற ஒரு நேரடி காட்சியாக நான் கண்டேன். அதை மீண்டும் கேளுங்கள். “நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்?...” அவர் ரோமானிய சவுக்கால், அதன் பயமுறுத்தும் ஒன்பது கூர்மையான வார்களால் தாக்கப்பட்டார், ஒவ்வொன்றும் எலும்பு அல்லது உலோகத்தால் பதிக்கப்பட்டன. “தலையெல்லாம் வியாதியும்..” அவரது தலையில் முட்கள் அழுத்தப்பட்டதை நினைவில் கொள்ளுங்கள். “இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது.” இயேசு உடைந்த இதயத்தோடு மரித்தார் என்று நான் நம்புகிறேன். “உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை; அது காயமும், வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது.” இயேசு சிலுவையில் தொங்கியதைப் பற்றிய சரியான விளக்கம் இதுதான் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? அவர் ஏன் அந்த நிலையில் இருந்தார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? ஏனென்றால், அவர் நம்மை சாபத்திலிருந்து மீட்டு, நமக்காக சாபமானார். தேவனுக்கு எதிராக நமது கீழ்ப்படியாமையின் விளைவாக உருவான அனைத்து சரீர சாபங்களும், இயேசு சிலுவையில் தொங்கியபோது அவர்மீது வந்தன.

இப்போது, நமக்காக இயேசுவால் வாங்கப்பட்ட சரீர ஆசீர்வாதங்களைப் பார்ப்போம். நாம் மீண்டும் ஏசாயா 53: 4-5 க்கு திரும்புவோம்:

4 மெய்யாகவே, அவர் [அவர்தான் இயேசு] நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் [வலிகளை] சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். 5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் [அவர்தான் இயேசு] காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

கவனியுங்கள், கீழ்ப்படியாமையின் உடல்ரீதியான விளைவுகளை அவர் எடுத்துக்கொண்டார், அதனால் நாம் குணமாகிறோம். வசனம் 5 இன் முடிவில் உள்ள அந்த பகுதி, “அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்,” இன்னும் சொல்லர்த்தமாக எபிரேய மொழியில் அது கூறுகிறது, “அவருடைய தழும்புகளால் அது நமக்காக குணமானது.” “அவருடைய தழும்புகளால் நமக்கு குணம் கிடைத்தது” என்று நாம் ஒருவேளை சொல்லலாம் என்று நினைக்கிறேன். இயேசு தம்முடைய சரீரத்தில் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் மூலம் சுகப்படுத்துதல் நமது சுதந்தரம் ஆக்கப்பட்டது.

இப்போது, இந்த பகுதி புதிய ஏற்பாட்டில் மத்தேயு தனது நற்செய்தி நூலில், அதிகாரம் 8:16-17ல் மேற்கோள் காட்டுகிறார், நோயுற்றவர்களைக் குணப்படுத்துவதற்கும், தீய ஆவிகளை வெளியேற்றுவதற்கும் இயேசுவின் ஊழியத்தை விவரிக்கிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

16 அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார். 17 அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

ஏசாயா 53 இல் குறிப்பிடப்பட்டுள்ள நபர் யார் என்பதில் மத்தேயுவுக்கு எந்த சந்தேகமும் இல்லை, ஏனென்றால் அவர் அதை இயேசுவுக்கு பயன்படுத்துகிறார். யூதராகவும், எபிரேய மொழியைப் புரிந்து கொண்டவராகவும் இருந்த மத்தேயு, ஏசாயா 53இல் உள்ள அந்த வசனங்களின் பயன்பாடு உடல் சார்ந்தது என்பதில் சந்தேகமில்லை என்பதையும் கவனியுங்கள். ஏசாயாவில் கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல் நோயுற்றவர்களின் உடல் ரீதியான சுகமாகும். நோய்வாய்ப்பட்ட அனைவரையும் இயேசு ஏன் குணப்படுத்த முடிந்தது? ஏனென்றால், தேவனுடைய நித்திய நோக்கங்களில், அவர் நம்முடைய பெலவீனங்களையும், நம்முடைய நோய்களையும் சுமக்க வேண்டியிருந்தது. சிலுவை, ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், நித்தியமானது, அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், தேவனின் பார்வையில் அது ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. உலகத் தோற்றத்திலிருந்து கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியாக இயேசு இருந்தார். ஆகவே, தேவன் இயேசுவின் ஊழியத்தை அடையாளம் கண்டு, அவருடைய தியாகத்தை அடையாளம் கண்டு, நோயுற்றவர்களைக் குணப்படுத்துவதில் ஆசீர்வாதத்தின் முத்திரையைக் கொடுத்தார்.

யோவான் 7:23 இல், இயேசு சொல்வதைக் கவனியுங்கள், ஓய்வுநாளில் ஒரு மனிதனைக் குணப்படுத்தியதற்காக தம்மை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்தார். அவர் சொல்கிறார்:

23 மோசேயின் நியாயப்பிரமாணம் மீறப்படாதபடிக்கு ஓய்வுநாளில் மனுஷன் விருத்தசேதனம் பெறலாமென்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனுஷனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா?

கவனியுங்கள், இயேசு மனிதனை முழுவதுமாய் சுகமாக்குகின்றார். மனிதனின் ஒவ்வொரு பகுதியும், மனித ஆளுமையும் இயேசுவின் மூலம் குணமடைய முடியும்.

மீண்டுமாக, அப்போஸ்தலர் 3:16 இல் அலங்கார வாசலில் முடவனைக் குணப்படுத்திய பிறகு பேதுரு கூறியதை கவனியுங்கள். அவர் குணமாக்குதலை விவரிப்பது இப்படிதான்:

16 அவருடைய நாமத்தைப் பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது.

கவனியுங்கள், விளைவு சர்வாங்க சுகமாகும். இயேசு சொன்னார், “மனுஷனை முழுவதும் சுகமாக்கினதினாலே…” அதுவே இயேசு நமக்கு வழங்கிய மீட்பின் சரீரப்பிரகாரமான வெளிப்பாடாகும். மருத்துவர்கள், மனநல நிபுணர்கள், மற்றும் பலரின் பணிக்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், ஆனால் பிரபஞ்சத்தில் ஒரே ஒரு நபர் மட்டும் இதைச் சொல்ல முடியும், “நான் மனுஷனை முழுவதும் சுகமாக்குவேன்! ஆவி, மனது, உணர்ச்சி, சரீரம் போன்ற அவனுடைய அனைத்து பிரச்சனைகளையும் என்னால் கையாள முடியும்.” அவர்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

எபிரெயர் 13:8 இல் உள்ள ஒரு அழகான வசனத்துடன் முடிக்கிறேன்.

8 இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.

எனவே, இயேசுவின் மீட்பின் அடிப்படையில் நாம் விசுவாசத்தால் அவரைத் தொடர்பு கொள்ளும்போது, புதிய ஏற்பாட்டில் நிகழ்ந்ததும் பதிவுசெய்யப்பட்டதுமான அதே விளைவுகள் இன்று இயேசுவின் விசுவாசத்தின் மூலம் உங்களுக்கும் எனக்கும் கிடைக்கின்றன.

இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் உங்களுடன் மீண்டும் வருவேன். நாளை கிறிஸ்துவின் மூலம் நமது மீட்பின் மூன்றாவது முக்கிய பகுதியாகிய அவருடைய மரணத்தின் மூலம் நமக்குக் கிடைத்த பொருள்சார்ந்த நன்மைகளைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.

லைக்
பகிரவும்