குணமாக்கும் வரம்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: செப்டம்பர் 2026
Read Time: 10
நமது ஆன்மீகப் பயணத்தில், டெரெக் பிரின்ஸின் 'ஆவியின் வரங்கள்' தொடரின் 6-வது பகுதியான 'குணமாக்கும் வரங்கள்' குறித்துக் கற்போம். தேவனுடைய குணமாக்கும் வல்லமையின் வாய்க்கால்களாக விளங்கும் இந்த வரங்களின் முக்கியத்துவத்தை இதில் காண்போம். இயேசுவின் ஊழியத்தோடு இணைந்து, விசுவாசத்தின் மூலம் ஆரோக்கியத்தையும் முழுமையையும் மீட்டெடுக்கும் எல்லையற்ற வாய்ப்புகளைக் கண்டறிய எங்களோடு இணையுங்கள்.
Transcript
இந்த புதிய வாரத்தின் துவக்கத்தில் உங்களுடன் இருப்பது நல்லது. வாழ்க்கை எனக்கு கற்றுத்தந்த உண்மைகளை பகிர்ந்துகொள்கிறேன். அந்த உண்மைகள், என் வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அது உங்களுக்கும் அப்படியே செய்யும்.
எனக்கு எழுதியவர்களுக்கு நன்றி சொல்லி ஆரம்பிக்கிறேன். நான் இந்தப் பேச்சை முடிப்பதற்கு முன், நீங்கள் எழுதக்கூடிய அஞ்சல் முகவரியை நாங்கள் உங்களுக்குத் தருகிறோம். உங்கள் தனிப்பட்ட தேவைகள், உங்கள் பிரச்சனைகள், உங்கள் ஜெப விண்ணப்பங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள தயங்காதீர்கள்.
கடந்த வாரம் முழுவதும், இன்றியமையாத மற்றும் பரபரப்பான தலைப்பாகிய “பரிசுத்த ஆவியானவரின் வரங்கள்” பற்றி உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன். இந்த வாரமும் அதே தலைப்பில் நான் தொடரப்போகிறேன். கடந்த வார்த்தின் இறுதியில், வல்லமையின் முதல் வரமாகிய, விசுவாசத்தின் வரத்தைப் பற்றிப் பேசினேன்.
இன்று இந்த வல்லமையின் வரங்களில் அடுத்த வரமாகிய, குணமாக்கும் வரம் அல்லது குணமாக்குதல்களின் வரங்கள் குறித்து நான் கையாளப் போகிறேன். புதிய ஏற்பாட்டின் மூல கிரேக்கத்தில், இரண்டு பகுதிகளும் பன்மை சொற்களாகும்: குணமாக்குதல்களின் வரங்கள். இதை நாம் பல்வேறு வகைகளில் புரிந்து கொள்ளலாம். ஒரு வகையில், நீங்கள் பெறும் ஒவ்வொரு குணமாக்குதலும் ஒரு வரம் என்றும் பல்வேறு வகையான குணமாக்குதல்கள் உள்ளன என்றும் இதை அர்த்தப்படுத்தலாம். இருப்பினும், நான் அந்த சிந்தையுடன் அதிகம் செல்லமாட்டேன்; மூல மொழிபெயர்ப்பில் “குணமாக்குதல்களின் வரங்கள்” என்று இருப்பதைப் போலவே உங்களுடன் விட்டுவிடுகிறேன்.
இங்கு பேசப்படும் குணமாக்குதலின் தன்மை என்ன? சாராம்சத்தில், நோயுற்றவரின் உடலில் வரங்களை பயன்படுத்துபவர் மூலம் தேவனின் குணமாக்கும் வல்லமை செல்கிறது என்று நான் கூறுவேன். சுகமானது நேரடியாக நோயுடன் தொடர்புடையது. நோய் இல்லாத இடத்தில், குணப்படுத்த வேண்டிய அவசியமில்லை. எனவே, குணமாக்குதல் என்பது தேவனின் தெய்வீக, இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமையாகும், இது மனித விசுவாசி மூலம் நோய்வாய்ப்பட்டவரின் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. அந்த நோய்க்கு எதிராக வந்து, அதைக் கையாண்டு, ஆரோக்கியத்தால் அதை மாற்றுவதாகும்.
இப்போது, இயேசுவின் ஊழியத்திலிருந்து சில உதாரணங்களை எடுத்துக்கொள்வோம். சுவிசேஷங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் ஊழியத்தைப் பற்றி நாம் பகுப்பாய்வு செய்தால், இயேசு தம் பொதுவான ஊழியத்தில், குறைந்தது மூன்றில் ஒரு பகுதியை அநேகமாக, நோயாளிகளைக் குணமாக்குவதற்கும், பேய்களைத் துரத்துவதற்கும் செலவிட்டார் என்று நான் நினைக்கிறேன். இப்போது, தேவனுடைய சித்தம் எப்போதும் நிறுத்தப்பட்டது என்று நான் நம்பவில்லை. இன்றும் சுவிசேஷ ஊழியம் செய்பவர்களுக்கு, அதுவே தேவனுடைய சித்தம் என்று நான் நம்புகிறேன்.
லூக்கா 4: 40 இல் பாக்கும்போது, இயேசுவின் ஊழியத்தைப் பற்றிய இந்த விளக்கத்தை நாம் அங்கே காண்கிறோம்.
40 சூரியன் அஸ்தமித்தபோது, ஜனங்களெல்லாரும் தங்களுக்குள்ளே பலபல வியாதிகளால் வருத்தப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கைகளை வைத்து, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
குணமாகும்படி வந்த ஒரு நோயாளியையும் இயேசு ஒருபோதும் திருப்பி அனுப்பியதில்லை என்பது குறிப்பிடத்தக்க உண்மை. எந்த நற்செய்தியிலும் அதற்கான பதிவு இல்லை. “உங்கள் நோய் மிகவும் கடுமையானது” அல்லது “உங்களை குணப்படுத்துவது தேவனின் விருப்பம் அல்ல” என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை. இங்கே விவரிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வில், நோய்வாய்ப்பட்ட அனைவரின் மீதும் இயேசு தம் கையை வைத்தார். தேவனின் வல்லமை இயேசுவின் கைகளிலிருந்து இந்த நோயுற்றவர்களின் உடல்களுக்குள் பாய்ந்து, நோயை விரட்டி, அதை ஆரோக்கியமாக மாற்றியது. எனவே, இயேசுவிடமிருந்து ஒரு குணப்படுத்தும் வல்லமை வெளிப்பட்டது.
மாற்கு 5: 24-34 இல், உள்ள ஒரு சம்பவத்தில் இது இன்னும் முழுமையாகக் கையாளப்படுகிறது. இரத்தப்போக்கு அல்லது உதிரப் பிரச்சனை இருந்த பெண்ணின் குண்மாகுதல்:
24. திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்று, அவரை நெருக்கினார்கள். 25. அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ, 26. அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது, 27. இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி, 28. ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். 29. உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள். 30. உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார். 31. அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள். 32. இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார். 33. தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள். 34. அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. நீ சமாதானத்தோடே போய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.
அங்கு நாம் சில விஷயங்களை பார்க்க வேண்டியது இருக்கிறது. முதலாவது, நான் முன்னமே சொன்னது போல, சில நேரங்களில் இயற்கைக்கு அப்பாற்பட்ட குணமாக்கும் வல்லமை இயேசுவின் உடலில் இருந்து வெளிப்பட்டது. ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், இந்த வல்லமை அனைவரும் பெறக்கூடிய ஒன்று, அவர் ஒரு கூட்டத்தால் சூழப்பட்டார், ஆனால் அனைவருக்கும் அந்த வல்லமை கிடைக்கவில்லை. ஒரு பெண் செய்தார். ஏன்? ஏனென்றால், அவளுடைய தனிப்பட்ட விசுவாசம் வல்லமையை வெளியிட்டது. மற்ற அனைவரும் இயேசுவை சூழ்ந்தனர், ஆனால் அவள் அவரைத் தொட்டாள். அவளுடைய விசுவாசம் அந்த குணமாக்கும் நன்மையை வெளியிட்டது.
இரண்டாவதாக, அவளுடைய சொந்த உடலில் ஒரு வெளிப்படையான மாற்றம் இருந்தது. அவள் மாற்றத்தை உணர்ந்தாள். உதிரப்போக்கு நின்றுவிட்டது அவளுக்குத் தெரியும். எனவே, தேவனின் குணமாக்கும் வல்லமை எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. பின்னர் நாம் லூக்கா 5:17 இல் மீண்டும் பார்க்கிறோம், அது கூறுகிறது:
17. பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக் கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள சகல கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று.
தேவனின் இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட வல்லமை உண்மையில் ஒரு இடத்தில் ஊடுருவ முடியும் என்பதை நாம் இங்கே காண்கிறோம். ஒரு குறிப்பிட்ட இடம் முழுவதையும் இந்த இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட வல்லமை நிரப்பப்படலாம் அல்லது செறிவூட்டப்படலாம். இதன் விளைவாக, ஒரு முடமானவர் கொண்டுவரப்பட்டு குணமடைந்தார்.
கூட்டங்களில், தேவனின் குணமாக்கும் வல்லமை உண்மையில் அந்த இடத்தை ஊடுருவிய சூழலில் நான் அங்கே இருந்தேன் என்பதை நான் சாட்சியமளிக்க விரும்புகிறேன். சில சமயங்களில் கூட்டத்தில் இருந்த அனைத்து நோயாளிகளும் குணமடைந்திருக்கிறார்கள்.
மற்றொரு உதாரணம் பேதுருவின் ஊழியத்தில் அப்போஸ்தலர் 5:15 & 16 இல் கொடுக்கப்பட்டுள்ளது. அது கூறுகிறது:
15. பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களின் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். 16. சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும், அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள்.
மீண்டும், இந்த இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட குணமாக்கும் வல்லமை இயேசுவின் மூலமாக முதன்முதலில் வருகின்ற உண்மையை நாம் காணலாம். இரண்டாவதாக, அவருடன் நேரடியாக தொடர்புடையவர்களுக்கும், விசுவாசத்தில் அவருக்கு ஊழியம் செய்பவர்களுக்கும் வருகிறது. இந்த விஷயத்தில், ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், தேவனின் குணமாக்கும் வல்லமை உண்மையில் பேதுருவின் நிழலின் மூலம் கொண்டுசெல்லப்பட்டன.
இப்போது, பவுலின் ஊழியத்தில் இந்த குணமாக்கும் வல்லமையின் உதாரணத்தையும் உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன். அப்போஸ்தலர் 28: 8 & 9 இல், பவுலும், அவரது குழுவினரும் மெலித்தா தீவில் தரையிறங்கிய பிறகு என்ன நடந்தது என்பதைப் பற்றி பேசுகையில், இதைப் படிக்கிறோம்:
8. புபிலியுவினுடைய தகப்பன் ஜுரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டுக் கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம்பண்ணி, அவன் மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினான். 9. இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரரும் வந்து, குணமாக்கப்பட்டார்கள்.
வேதத்தின் மிகத் தெளிவான வாக்கியத்தை நாம் கவனிக்கலாம். பவுல் இந்த மனிதன் மீது கைகளை வைத்து அவனைக் குணமாக்கினான் என்று கூறுகிறது. பவுல் அவனை குணமாக்கினான். இப்போது, குணமாக்கும் வல்லமை, உண்மையில் தேவனிடத்திலிருந்து வருகிறது என்பதை நாம் அறிவோம். ஆயினும்கூட, தேவன் அதை தம்முடைய ஊழியக்காரரிடத்தில் அதை ஒப்படைத்திருக்கிறார், மேலும், அந்த நேரத்தில் குணமாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உதாரணமாக, இயேசு முதன்முதலில், தம்முடைய சீஷர்களை அனுப்பியபோது, “நீங்கள் எந்த ஊருக்குள் பிரவேசித்தாலும், நோயுற்றவர்களைக் குணமாக்குங்கள்” என்றார். “நோயுற்றவர்களைக் குணமாக்க என்னிடம் ஜெபம் செய்யுங்கள்,” என்று அவர் சொல்லவில்லை. “தேவனிடம் ஜெபம் செய்யுங்கள்,” என்று அவர் சொல்லவில்லை. “நீங்கள் நோயுற்றவர்களைக் குணமாக்குங்கள்” என்று சொன்னார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஊழியர்களாய் இருப்பவர்களாகிய நாம் இந்தக் கடமையை எதிர்கொள்ள வேண்டும் என்று நான் நம்புகிறேன். சில சமயங்களிலும், அவர் தேர்ந்தெடுக்கும் இடங்களிலும், நோயுற்றவர்கள் குணமாக, அவருடைய குணமாக்கும் வல்லமையை பயன்படுத்தும் ஊழியத்தை நாம் செய்ய வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார்.
இப்போது, இது தொடர்பாக, எனது சொந்த அனுபவங்களை கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன். மினியாபோலிஸ் என்ற நகரில் 1963 இல் நடந்த ஒரு சம்பவத்தை நான் கூற விரும்புகிறேன். அந்த நேரத்தில் நான் ஒரு சபையில் இணைப் போதகராக இருந்தேன். என் முதல் மனைவி, லிடியாவும், நானும் வழக்கம் போல் எங்கள் படுக்கையறையில் காலையில் ஒன்றாக ஜெபம் செய்துகொண்டிருந்தோம், சில நேரத்தில், மிகவும் அசாதாரணமான முறையில் எங்கள் அறைக்குள் தேவனின் பிரசன்னத்தை நாங்கள் உணர்ந்துக்கொள்வோம். நாங்கள் இருவரும் எங்கள் கைகளை உயர்த்தி கர்த்தரைத் துதிப்போம். சிறிது நேரம் கழித்து, லிடியா என்னிடம் திரும்பி, “டெரிக், கர்த்தர் என் கைகளில் குணமாக்கும் வரத்தை வைத்தார் – அந்த இடத்தில்!” என்று சொன்னாள். அவள் தன் இடது கையின் உள்ளங்கையில், தன் விரலை அதிலே வைத்து எனக்குக் காண்பித்தாள். “நீ எனக்கு சொல்ல வேண்டியத்தில்லை. எனக்கு அது ஏற்கனவே தெரியும்.” என்று நான் சொன்னேன். எனக்கு எப்படித் தெரியும், உனக்கு என்னால் சொல்ல முடியவில்லை, ஆனால் எனக்கு தெரியும். சரி, அன்று காலை வாரந்தோறும் நடைபெறும் சபையின் ஜெபக்கூட்டமாயிருந்ததால், நாங்கள் ஜெபக் கூட்டத்திற்கு சென்று சுமார் இரண்டு மணி நேரம் ஜெபத்தில் செலவழித்தோம், அதன் பிறகு, அதன் இறுதியில், சபையில் இருந்த ஒரு கூச்ச சுபாவமுள்ள சகோதரி என் மனைவியிடம் வந்து, “ஓ, நான் மிகவும் மோசமாக உணர்கிறேன். எனக்காக ஜெபிப்பீர்களா?” என்று சொன்னாள். தேவன் என்ன செய்தார் என்று யோசிக்காமல் அல்லது சிந்திக்காமல், லிடியா தனது இடது கையை நீட்டி, அந்தப் பெண்ணின் தலையில் வைத்தாள், அந்தப் பெண் மறைந்துப்போனாள். அதாவது, அவள் விழவில்லை, அவள் அங்கே இல்லை; அங்கே அவள் தரையோடு படுத்துக் கிடந்தாள். அவள் சுமார் 5 நிமிடங்கள் அப்படியே இருந்தாள், அவள் பிறகு எழுந்தாள், அவள் மிகவும் வெட்கமாகவும், வருந்துகிற நிலையிலும் இருந்தாள். “அப்படி நடந்ததற்காக என்னை மன்னிக்கவும், ஆனால் உங்கள் கைகளில் அத்தகைய வல்லமை இருந்தது, என்னால் எழுந்து நிற்க முடியவில்லை.” என்று சொன்னாள். இப்படித்தான், லிடியா, குணமாக்கும் வல்லமையின் பயிற்சியில் தொடங்கப்பட்டாள். அடுத்த 12 வருடங்களும், அவளுடைய வாழ்க்கையின் மீதமுள்ள 12 வருடங்களும், அவள் மூலமாக அடிக்கடி அந்த வரம் செயல்பட்டு பற்பல மக்கள் உடனடியாக குணமடைந்தார்கள்.
அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவள் எனக்கு விளக்கினாள். அதற்கு முன்னே, மக்கள் குணமடைய வேண்டும் என்று அவள் அடிக்கடி விசுவாசத்துடன் ஜெபித்தாள், அவர்கள் குணமடைந்தார்கள், ஆனால் அவள் என்னிடம் சொன்னாள், “டெரிக், அந்த வரம் செயல்படுகிறபோது, அது வித்தியாசமாக இருக்கிறது.” “நான் விசுவாசத்தை செயல்படுத்த முயற்சிக்கவில்லை,” என்று சொன்னாள். “நான் என் ஆவியில் அமைதியாக இருப்பேன், அந்த நபரின் சார்பாக நான் தேவனை தொடர்புகொள்வேன், பின்னர், ஒரு குறிப்பிட்ட தருணத்தில், வரம் என் மூலம் வருகிறது, மேலும், அந்த நபர் அந்த வரத்தை பெற்றுக் கொண்டால், அந்த நேரத்தில் அவர்கள் குணமடைவார்கள் என்பதை நான் அறிவேன்,” என்று சொன்னாள். நிச்சயமாக, ஜெபம் செய்யப்படும் நபருக்கு தனிப்பட்ட விசுவாசத்தின் ஒரு பகுதி இன்னும் தேவைப்படுகிறது. தேவன் வரத்தைக் கொடுக்கிறார், ஆனால், ஜெபிக்கப்படும் நபர் இன்னும் குணமாக்கும் வரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது, ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை நான் வல்லமையின் மூன்றாவது வரமாகிய: “அற்புதங்களை செய்யும் அல்லது செய்து முடிக்கும் சக்தி” குறித்துப் பேசுவேன். மற்ற விஷயங்களுடன், குணமாக்குதலுக்கும், அற்புதங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நான் விளக்குகிறேன்.
குறியீடு: RP-R008-101-TAM









