இன்று மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. இந்த வாரம் முழுவதும் நமது கருப்பொருள் விசுவாசமாகும். “விசுவாசம் எப்படி வருகிறது” என்ற மிக முக்கியமான விஷயத்தைப் பற்றி நேற்று உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். அதில் முக்கியமான வார்த்தை “கேட்பது” என்பதை விளக்கினேன். தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியினால், தம் வார்த்தையின் மூலம் நம்மிடம் பேசும்போது விசுவாசம் வருகிறது.

இன்றும், அடுத்த இரண்டு நாட்களுக்கும் என் பேச்சில், விசுவாசத்தில் செய்யவேண்டிய அவசியமான மூன்று பெரிய காரியங்களை, விசுவாசத்துடன் ஒன்றாகச் செல்ல வேண்டிய மூன்று விஷயங்களை நான் கையாளப் போகிறேன். இந்த மூன்று அவசியங்களையும் நான் பின்வருமாறு தொகுக்கிறேன்: முதலில், விசுவாசம் அறிக்கை செய்யப்பட வேண்டும்; இரண்டாவது, விசுவாசம் செயல்பட வேண்டும்; மூன்றாவது, விசுவாசம் சோதிக்கப்பட வேண்டும். இன்று நான் இந்த மூன்று கட்டாயங்களில் முதலாவதில் கவனம் செலுத்தப் போகிறேன்; விசுவாசத்தை அறிக்கைசெய்ய வேண்டும்.

முதலாவது, வேதத்தில் “அறிக்கை செய்தல்” என்ற வார்த்தை எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். “அறிக்கை செய்தல்” என்ற வார்த்தை இரண்டு முக்கிய அர்த்தங்களைக் கொண்டுள்ளது. முதலாவதாக, “தைரியமாகவும், வெளிப்படையாகவும் எதையாவது சொல்வது” என்ற அர்த்தமாகும்; ஆனால், இரண்டாவதாக, “அதே போல் சொல்வது” என்ற அர்த்தமாகும், மேலும், இது சம்பந்தமாக, அறிக்கை செய்வதுடன் தொடர்புடைய விஷயம் வேதமாகிய தேவனுடைய வார்த்தையாகும். எனவே, தேவன் தம்முடைய வார்த்தையில் சொன்னதையே நாம் வாயால் சொல்கிறோம் என்ற அர்த்தமாகும். அல்லது, நீங்கள் அதை இவ்வாறு சொல்லலாம்: நாம் நம் வாயின் வார்த்தைகளை தேவனுடைய வார்த்தையுடன் ஒத்துப்போகச் செய்கிறோம். தேவனுடைய வார்த்தை ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. அது நிரந்தரமானது. அது மாறாதது. அறிக்கைசெய்வது என்பது நம் வாயின் வார்த்தைகளை தேவனுடைய வார்த்தைக்கு ஏற்ப கொண்டுவருவதாகும். எனவே, அறிக்கை செய்தல் அந்த இரண்டு அர்த்தங்களை கொண்டுள்ளன, அவை ஒவ்வொன்றும் பொருத்தமானவை. முதலாவதாக, தைரியமாகவும், வெளிப்படையாகவும் எதையாவது சொல்வதாகும்; இரண்டாவதாக, நம் வாயின் வார்த்தைகள் தேவனுடைய எழுதப்பட்ட வார்த்தையான வேதத்துடன் ஒத்துப்போகச் செய்வது என்பதாகும்.

இப்போது, நாம் 2 கொரிந்தியர் 4:13இல் உள்ள ஒரு பகுதியைப் பார்ப்போம், அங்கு பவுல் நம்புவதற்கும் (அதாவது, விசுவாசம் வைத்திருப்பதற்கும்) பேசுவதற்கும் (நம்முடைய வாயால் ஏதாவது சொல்வது) உள்ள தொடர்பைப் பற்றி பேசுகிறார், அவர் இவ்வாறு கூறுகிறார்:

13 விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம்.

பவுல், பழைய ஏற்பாட்டிலிருந்து ஒரு சங்கீதத்தை மேற்கோள் காட்டுகிறார், நாம் அதைத் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை, ஆனால் அவர் சொல்வதன் மையக் கருத்து என்னவென்றால், “விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன்,” “விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம்.” விசுவாசம் பேசுவதற்கு வழிவகுக்க வேண்டும். அங்கு ஒரு தொடர்பு இருக்கிறது. உங்கள் இதயத்தில் நீங்கள் விசுவாசிக்கிறதை உங்கள் வாயின் மூலம் வெளிப்படுத்த வேண்டும். மத்தேயு 12:34 இல், இயேசு, வாய்க்கும் இதயத்திற்கும் இடையே பொதுவான தொடர்பை ஏற்படுத்துகிறார். அவர் ஒரு பொதுவான கொள்கையை நிறுவினார். அவர் சொல்கிறார்:

34 “…..இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.

நான் அதை இவ்வாறு வெளிப்படுத்துகிறேன்: இதயம் நிறைந்திருக்கும்போது, அது பேச்சில் வாய் வழியாக நிரம்பி வழிகிறது. வாய் என்பது இதயத்தின் நிரம்பி வழியும் அடைப்பான்(வால்வு) போன்றது. மேலும், வாயிலிருந்து பாய்வது இதயத்தில் உள்ளதைச் சொல்கிறது. உண்மையில், உங்கள் இதயத்தில் ஒரு விஷயம் இருந்து, உங்கள் வாயிலிருந்து வேறு ஏதோவொரு விஷயம் வெளியேற முடியாது. பாருங்கள், நம் இதயத்தில் சரியான விஷயம் இருக்க, நாம் சரியானதை நம் வாயால் சொல்ல வேண்டும்; அதற்கு நேர்மாறாக, சரியானதை நம் வாயால் சொல்லும்போது, அந்த விஷயத்தால் நம் இதயத்தை நிரப்புகிறோம். இது இரண்டு வழிகளிலும் வேலை செய்கிறது. வாயிலிருந்து இதயத்திற்கும், இதயத்திலிருந்து வாய்க்கும். இந்தக் கோட்பாடு பவுலால் மூன்று முறை கூறப்பட்டுள்ளது, அங்கு அவர் இரட்சிப்புக்கான அடிப்படைத் தேவையைப் பற்றி பேசுகிறார். ரோமர் 10:8-10இல், அவர் சொல்கிறார்:

8 இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே 9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். [இரட்சிக்கப்படுவதற்கு இதுவே பெரிய அடிப்படைத் தேவையாகும்.] 10 நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.

மூன்று முறை பவுல் வாயையும், இதயத்தையும் இணைக்கிறார். வசனம் 8இல், அவர் சொல்கிறார், “இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது”, மேலும், அவர் “இதயத்திற்கு” முன்பாக “வாயை” வைக்கிறார். வசனம் 9இல், அவர் சொல்கிறார், “கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.” மீண்டும் “இதயத்திற்கு” முன் “வாய்” வருகிறது. ஆனால், அவர் மூன்றாவது முறையாக வரிசையை மாற்றுகிறார், வசனம் 10: “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.” எனவே, வாய்க்கும் இதயத்துக்கும் இடையே வேதாகமத்தின் மூலம் இணைப்பு இருப்பதைக் காண்கிறோம். இதயம் வாய் மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது, ஆனால் நாம் வாயால் சொல்வது நம் இதயத்தில் உள்ளதைப் பாதிக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் எபிரேய மொழியைப் படித்துக் கொண்டிருந்தபோது இது எனக்கு தெளிவாகக் கொண்டுவரப்பட்டது, மேலும், ஆங்கிலத்துல் உள்ள “இதயத்தால் கற்றுக்கொள்வது” என்ற வார்த்தை எபிரேய மொழியில் “வாயால் கற்றுக்கொள்வது” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்தேன். நான் அதை நினைத்துப் பார்த்து, அது எவ்வளவு உண்மையானது என்பதை கண்டேன். ஒவ்வொன்றும் மொத்த செயல்முறையின் ஒரு அம்சத்தைக் கூறுகின்றன. எப்படி இதயத்தால் எதையாவது கற்றுக்கொள்வது? இன்று பல பள்ளிகளில் மனப்பாடம் செய்வது மிகக் குறைவு என்று நான் நினைக்கிறேன். அது துரதிர்ஷ்டவசமானது ஏனென்றால், நாம் எதையோ தவறவிடுகிறோம் என்று நினைக்கிறேன். ஆனால், நீங்கள் எதையாவது இதயத்தால் கற்றுக்கொள்ளும் விதம் என்னவென்றால், அதை உங்கள் வாயால் திரும்பத் திரும்பச் சொல்வதேயாகும். உதாரணமாக, முன்பு உள்ள காலத்தில் நான் பள்ளியில் இருந்தபோது, எங்கள் பெருக்கல் அட்டவணைகளைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. மேலும், “ஏழு எட்டு ஐம்பத்தாறு, ஏழு ஒன்பது அறுபத்து மூன்று, ஏழு பத்து எழுபது” என்று சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. மேலும், அதை மீண்டும் மீண்டும் சொல்வோம். “ஏழு எட்டு ஐம்பத்தாறு, ஏழு ஒன்பது அறுபத்து மூன்று, ஏழு பத்து எழுபது” – அது என் இதயத்தில் பதியும் வரை மீண்டும் மீண்டும் சொல்வேன். மேலும், அது அன்றிலிருந்து இன்றுவரை நினைவில் உள்ளது. நான் எந்த வகையான நெருக்கடியில் இருந்தாலும், அது முக்கியமல்ல, நடு இரவில் இடியுடன் கூடிய மழையில் என்னை எழுப்பி, நீங்கள் என்னிடம் “ஏழு எட்டும் எத்தனை?” என்று கேட்டால், நான் “ஐம்பத்தாறு” என்று சொல்வேன். நான் நின்று யோசிக்க வேண்டியதில்லை, அது என் இதயத்தில் இருக்கிறது. வாயால் சொல்லி அங்கேயே பெற்றுக்கொண்டேன்.

இது ஒரு கருத்து மட்டுமே, துரதிர்ஷ்டவசமாக, இன்று மக்கள் கால்குலேட்டர்களையும், கணினிகளையும் நம்பியிருக்கிறார்கள், அவர்களின் பெருக்கல் அட்டவணைகள் அவர்களுக்குத் தெரியாது, இது உண்மையில் ஒரு துரதிர்ஷ்டம்.

எப்படியிருந்தாலும், கொள்கை என்னவென்றால், உங்கள் இதயத்தில் எதையாவது பெற விரும்பினால், அதை உங்கள் வாயால் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள். மேலும், நேர்மாறாக, உங்கள் இதயத்தில் உள்ளவை, உங்கள் வாயிலிருந்து இயல்பாக வெளிவரும். வாய்க்கும், இதயத்துக்கும் உள்ள தொடர்பை ஏற்படுத்தியுள்ளோம். இப்போது, நாம் பவுலின் வார்த்தையைப் பார்க்க வேண்டும், “இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.” கவனியுங்கள், இரட்சிப்பிற்குள் நுழைவது என்பது அறிக்கைப் பண்ணும் செயல்முறையாகும். இரட்சிப்பு என்பது இயேசுவின் சிலுவையின் மரணத்தின் மூலம் நமக்காக பெறப்பட்ட அனைத்திற்கும் வேதத்தில் உள்ள அனைத்தையும் உள்ளடக்கிய வார்த்தையாகும். இது அனைத்து நன்மைகளாகிய ஆவிக்குரிய, பொருள் சார்ந்த, உலக சம்பந்தமான, நித்தியமான அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வார்த்தையாகும்; அவை அனைத்தும் இரட்சிப்பு என்ற ஒரே வார்த்தையில் சேர்க்கப்பட்டுள்ளன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இரட்சிப்பின் எந்தப் பகுதியும் நமக்குத் தேவை, அது பாவ மன்னிப்பு அல்லது நம் உடலைக் குணப்படுத்துவது, அல்லது நிதி வழங்குவது போன்ற எந்த பகுதியையும் குறிக்கிறது, தேவனுடைய வார்த்தை அதைப் பற்றி என்ன சொல்லுகிறது என்பதை நாம் அறிக்கை பண்ணுகிறோம். நாம் அதை அறிக்கைசெய்கிறோம், நாம் அதை உணர்ந்ததாலோ அல்லது நம் சூழ்நிலைகள் உண்மையாக இருப்பதைப் போல தோற்றமளிப்பதாலோ அல்ல, ஆனால், வேதம் தேவனுடைய வார்த்தை என்று நாம் நம்புவதால், அது எப்படியும் உண்மையானது. எனவே, நாம் நம்மை நாமே ஒழுங்குப்படுத்திக் கொள்கிறோம், நம் வாயை ஒழுங்குப்படுத்துகிறோம், அந்த குறிப்பிட்ட தேவை அல்லது குறிப்பிட்ட சூழ்நிலையைப் பற்றி தேவனுடைய வார்த்தை என்ன சொல்கிறது என்பதை நம் வாயால் சொல்ல வைக்கிறோம். மேலும், இது எளிதானது என்று நீங்கள் நினைத்தால் நான் உடனடியாக உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், அதை முயற்சி செய்யுங்கள், உங்கள் வாயின் வார்த்தையை தேவனுடைய வார்த்தைக்கு ஏற்ப கொண்டு வருவது சுய ஒழுக்கத்தின் ஒரு செயல்முறை என்பதை நீங்கள் காணலாம், மேலும், இது வேறு எதுவும் செய்யாத பண்பை உருவாக்குகிறது.

சூழ்நிலைகளுக்கு இரண்டு உதாரணங்களை மட்டும் தருகிறேன், தேவனுடைய வார்த்தையை அறிக்கைசெய்வதன் மூலம் அவற்றை எப்படி சந்திப்பது என்பதையும், தேவன் நமக்காக ஆயத்தம் செய்துள்ள நன்மைகளில் நம்மை அறிக்கை செய்வதையும் பற்றி சொல்கிறேன். நாம் குற்ற உணர்ச்சியால் தாக்கப்படுகிறோம் என்று வைத்துக்கொள்வோம், இதுபோல பல கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். அவ்வப்போது, அவர்கள் குற்ற உணர்வோடு, தகுதியற்றவர்களாக உணர்கிறார்கள். அவர்கள் செய்த எல்லா பாவங்களையும் தேவன் மன்னித்திருக்க முடியுமா என்று அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள், மேலும், நிச்சயமாக, பிசாசானவன் சகோதரர்கள் மீது குற்றம் சாட்டுபவனாக இருக்கிறான், அதனால், அவன் சரியாக அவனது வேலையை செய்கிறான், ஒன்றன் பின் ஒன்றாக குற்றத்தை சுமத்துகிறான். “இரட்சிப்பு வரும்வரை” நாம் எப்படி அறிக்கைசெய்வது? சரி, பலவற்றில், ஒரு எளிய உதாரணம் இங்கே. ரோமர் 8:1 கூறுகிறது:

1 ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.

இப்போது, இது பொதுவான வார்த்தைகளாகும், இதை நாம் குறிப்பாக மாற்ற வேண்டும். எனவே, நான் அதை இந்த வழியில் குறிப்பிடுகிறேன். நான் சொல்கிறேன், “நான் கிறிஸ்து இயேசுவில் இருக்கிறேன். நான் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன், அதனால் எனக்கு எந்தவித ஆக்கினைத்தீர்ப்புமில்லை. நான் கண்டனத்திற்கு உள்ளாகவில்லை, பிசாசு என் மீது வைக்க முயற்சிக்கும் கண்டனத்தை நான் ஏற்க மாட்டேன்.“ எனவே, நான் அந்த இரட்சிப்பின் பகுதியில் அறிக்கைசெய்கிறேன். அல்லது, நான் நோயால் தாக்கப்பட்டேன் என்று வைத்துக்கொள்வோம். எனக்கு எல்லா வலிகளும், அறிகுறிகளும் வருகின்றன, என்னைச் சுற்றியிருக்கும் அனைவருக்கும் ஏதோ ஒன்று வந்துகொண்டிருக்கிறது, மேலும், நான் அதைப் பிடித்துக்கொள்ளப் போகிறேனா என்று எல்லாரும் காத்திருக்கிறார்கள். என்னுடைய பதில் என்ன? உடல் ரீதியாக குணப்படுத்தும் பகுதியில் நான் எவ்வாறு “இரட்சிப்பு வரும்வரை அறிக்கைசெய்வது”? சரி, மத்தேயு 8:17இல், மத்தேயு ஏசாயாவை மேற்கோள் காட்டி இயேசுவைப் பற்றி கூறுகிறார்:

17 அவர் [இயேசு] தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்.

இது ஒரு பொதுவான வாக்கியம். அதை எப்படி நான் குறிப்பாகச் சொல்வேன்? “இயேசு தாமே என்னுடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, என்னுடைய நோய்களைச் சுமந்தார்,” என்று சொல்வேன். மீண்டும், 1 பேதுரு 2:24இல், பேதுரு இயேசுவைப் பற்றி கூறுகிறார்:

24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

அதை எப்படி நான் குறிப்பிட்டதாகவும், தனிப்பட்டதாகவும் மாற்றுவது? நான் சொல்வேன், “நான் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, இயேசுதாமே தமது சரீரத்திலே என்னுடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானேன்.” பாருங்கள், அறிக்கை செய்தல் அதை குறிப்பிட்டதாகவும், தனிப்பட்டதாகவும் ஆக்குகிறது. தேவன் உங்களுக்கு வழங்கிய நன்மைகளை நீங்கள் அறிக்கை செய்கிறீர்கள். இது மனதைப் பற்றிய காரியமல்ல. நான் அதை வலியுறுத்துகிறேன், நான் உங்களுக்கு இரண்டு எளிய, சுருக்கமான காரணங்களைத் தருகிறேன். முதலாவதாக, நாம் அறிக்கை செய்வதற்கு வரம்புகள் தேவனுடைய வார்த்தையால் அமைக்கப்படுகின்றன. இரண்டாவதாக, நாம் சொல்வதை நிறைவேற்றுவதையே சார்ந்திருக்கிறோம், நம் சொந்த திறனின் மீதல்ல, அல்லது நம் சொந்த விசுவாசத்தின் மீது கூட அல்ல, ஆனால் தேவனுடைய உண்மைத்தன்மையின் மீது சார்ந்திருக்கிறோம். எனவே, இந்த இரண்டு வழிகளில், “மனதின் கட்டுப்பாடு” என்று அழைக்கப்படும் எதிலிருந்தும் அதை வேறுபடுத்துகிறது.

சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது, ஆனால் நாளை இந்த நேரத்தில் உங்களுடன் மீண்டும் வருவேன். நாளை, “விசுவாசத்தை செயல்படுத்த வேண்டும்,” என்ற விசுவாசத்தின் இரண்டாவது பெரிய அவசியத்தைக் கையாள்வேன்.

லைக்
பகிரவும்