சாபத்திலிருந்து ஆசீர்வாதம்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 9
டெரெக் பிரின்ஸின் 'சாபத்திலிருந்து ஆசீர்வாதத்திற்கு' என்ற போதனையில், சிலுவையின் வழியாய் நிகழ்ந்த தெய்வீக மீட்பையும் ஆழமான பரிமாற்றத்தையும் கண்டறியுங்கள். ஆபிரகாமின் ஆசீர்வாதத்தை நமக்கு அளிக்க கிறிஸ்து எவ்வாறு சாபமானார் என்பதை அறிவது உங்கள் ஆன்மீக வாழ்வைப் பிரகாசமாக்கும். 'நமது சுதந்திரத்தைச் சுதந்தரித்தல்' தொடரின் ஒரு பகுதியான இப்பதிவு, மீட்பின் மேன்மையையும் சுவிசேஷ வாக்குத்தத்தங்களையும் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறது.
Transcript
உங்களுடன் மீண்டும் இருப்பது நல்லது, “நமது சுதந்தரத்தை உரிமைகோருதல்” என்ற இந்த வாரத்திற்கான நமது செழுமையான, அற்புதமான கருப்பொருளை நாம் ஒன்றாக இணைந்து படித்து வருகிறோம். நேற்றைய எனது பேச்சில், நான் இரண்டு பெரிய எதிரெதிர் ராஜ்யங்களை முன்வைத்தேன்: ஒளியின் ராஜ்யம் மற்றும் இருளின் ராஜ்யமாகிய சாத்தானின் ராஜ்யம்.
இன்று, கிறிஸ்துவின் மூலம் நாம் பெற்ற மீட்பின் தன்மையையும், நோக்கத்தையும் விளக்கப் போகிறேன். நமது முதல் வேதவசனம் கலாத்தியர் 3:13-14 ஆகும், அங்கு பவுல் இவ்வாறு கூறுகிறார்:
13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காக சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார் [மீட்டுக்கொண்டார் என்ற வார்த்தையை கவனியுங்கள்] 14 ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக் குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று.
உபாகமத்தில் உள்ள மோசேயின் நியாயபிரமாணத்தில் ஒரு வசனத்தை பவுல் குறிப்பிடுகிறார், அங்கு, மரத்திலோ அல்லது ஒரு மரத் துண்டிலோ (அது சிலுவையை உருவாக்கும் ஒரு மரத்துண்டு அடங்கும்) தொங்கவிடப்பட்டு இந்த வகையில் கொல்லப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று தேவன் கூறுகிறார். அத்தகைய ஒரு நபர் அந்த மரத்துண்டில் அனைவருக்கும் தெரியும்படி தொங்குகிறார் என்பது அவர் சாபத்திற்கு உள்ளானார் என்பதற்கான ஆதாரமாகும். எனவே, நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்து நம்மை மீட்பதற்காக, கிறிஸ்து நமக்கு ஒரு சாபமாக மாறினார், மேலும், அவர் சிலுவையில் தொங்கியபோது இது வெளிப்படையாக நிரூபிக்கப்பட்டது. கிறிஸ்து ஒரு சாபமாக மாற வேண்டியது அவசியம், ஏனென்றால் தேவனின் சாபம் எல்லா பாவங்களுக்கும், தேவனுக்கு எதிரான கீழ்ப்படியாமைக்கும் எதிராகப் பின்தொடர்கிறது.
சிலுவையில் நடந்ததன் ரகசியம் என்னவென்றால், அங்கே நியமிக்கப்பட்ட தெய்வீக பரிமாற்றம் இருந்தது; அது இயற்கையான கண்களால் பார்க்க முடியாத ஒன்றாகும், ஆனால் பரிசுத்த ஆவியின் மூலமாகவும், வேதத்தின் மூலமாகவும் தேவனின் வெளிப்பாட்டின் மூலமாகவும் மட்டுமே உணர முடியும். பரிமாற்றம் இதுதான்: கிறிஸ்து ஒரு சாபமாக ஆனார். நம்முடைய பாவம் மற்றும் கீழ்ப்படியாமையின் காரணமாக வந்த சாபத்தை அவர் எடுத்தார், அதற்குப் பதிலாக, அவருடைய கீழ்ப்படிதலால் கிடைத்த ஆசீர்வாதத்தை நாம் பெற்றுக்கொள்ளலாம். மிக எளிமையாகவும், சுருக்கமாகவும் சொல்கிறேன், அதை நீங்கள் புரிந்துகொள்வது முக்கியமானது. கிறிஸ்து ஒரு சாபமாக மாறினார். நம்முடைய கீழ்ப்படியாமையின் காரணமாக வந்த சாபத்தை அவர் எடுத்தார், இதையொட்டி, அவர் மீதுள்ள விசுவாசத்தின் மூலம், இயேசுவின் கீழ்ப்படிதலினால், நமக்காக அவர் சம்பாதித்த ஆசீர்வாதமாகிய தேவனுடைய ஆசீர்வாதத்தை நாம் பெற்றுக்கொள்ளலாம்.
இப்போது, சிலுவையில் நடந்த இந்த பரிமாற்றம் ஏசாயா 53 இல் முழுமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தில், ஏசாயா தீர்க்கதரிசி ஒரு பெயர் சொல்லப்படாத ஊழியரைப் பற்றி பேசுகிறார், அங்கே பெயர் கொடுக்கப்படவில்லை. இருப்பினும், புதிய ஏற்பாட்டின் அனைத்து எழுத்தாளர்களும் இந்த பெயரிடப்படாத ஊழியரை மேசியாவாகிய இயேசு, நசரேயனாகிய இயேசு என்று ஏகமனதாக அடையாளம் காட்டுகிறார்கள். இந்த அதிகாரத்தின் மையமான வசனங்களான 4 & 6 ஆம் வசனங்களின் இந்த வெளிப்பாட்டிலே வசனங்களை நாம் வாசிக்கலாம்:
4 மெய்யாகவே, அவர் [அவர் தான் இயேசு] நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களை சுமந்தார் [இன்னும் சொல்லப்போனால், நம்முடைய வலி]; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.
ஏசாயா, “நம்முடைய” என்று சொல்வது குறிப்பிடத்தக்கது, அது முழு மனித இனத்தையும் விட முதன்மையாக யூத இனம் என்று கருதப்பட்டது, அவர் தேவனால் அடிக்கப்பட்டு, வாதிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டதாக கருதப்பட்டது.
பல ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரேலில் ஒரு யூத மனிதரிடம் பேசினது எனக்கு நினைவில் இருக்கிறது, அவரிடம் இயேசுதான் மேசியா என்று நம்புகிறேன் என்று சொன்னேன். குறைந்தபட்சம், அந்த நேரத்தில், அவரது கருத்து எனக்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவர் சொன்னார், “இயேசு ஒரு நீதிமான் என்று என்னால் நம்ப முடியவில்லை, ஏனென்றால், அவர் அப்படி இருந்திருந்தால், தேவன் அவருக்கு இப்படிப்பட்ட மரணத்தை அனுமதித்திருக்கமாட்டார். அது அவர்மீது வந்திருக்கும் தேவனின் தீர்ப்பாக இருக்க வேண்டும்.”
சரி, அதைத்தான் ஏசாயா கூறுகிறார், “அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டவரென்று எண்ணினோம்.” ஆனால், அடுத்த இரண்டு வசனங்களில் ஏசாயா, ஏன் இயேசு பாடுபட்டார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். அது அவருடைய பாவத்திற்காக அல்ல, நம்முடைய பாவத்திற்காக. ஏசாயா சொல்வது இதுதான்:
5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். 6 நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.
ஏசாயாவால் சித்தரிக்கப்பட்டது போல, பரிமாற்றத்திற்கு இரண்டு அம்சங்கள் உள்ளன. ஆவிக்குரிய அம்சமும், மாம்ச (சரீர) அம்சமும் உள்ளது. இயேசு நமக்காக ஆவிக்குரிய மற்றும் சரீரப்பிரகாரமான ஏற்பாடுகளை செய்தார். ஆவிக்குரிய ரீதியில், அவர் நம்முடைய மீறுதலுக்காக காயப்பட்டார், நம்முடைய அக்கிரமங்களுக்காக அவர் நொறுக்கப்பட்டார். மீறுதல்களும், அக்கிரமங்களும் ஆவிக்குரியவை. அவற்றை கீழ்ப்படியாத செய்கைகளும், கலகச்செய்கைகளும் என்று மொழிப்பெயர்க்கலாம். நம்முடைய கீழ்ப்படியாமை மற்றும் கலகச்செயல்களின் காரணமாக இயேசு தண்டனையை அனுபவித்தார், இதனால் நாம் தேவனுடன் ஒப்புரவாகி சமாதானத்தை பெறலாம். எனவே, அந்த மீறுதல்கள் மற்றும் அக்கிரமங்களின் விளைவு சமாதானமாகும். இது ஆவிக்குரியது.
சரீரப் பிரகாரமாக, இயேசு நம்முடைய பெலவீனங்களை எடுத்துகொண்டு நம்முடைய வலிகளை சுமந்துகொண்டார், அதன் விளைவாக நாம் குணமடைகிறோம், அல்லது, இன்னும் சொல்லப்போனால், சுகம் நமக்காக பெறப்பட்டது. இது சரீரப் பிரகாரமானது.
எனவே, ஆவிக்குரியதிலும், சரீரத்திலும் முழுமையான பரிமாற்றம் இருந்ததைக் காண்கிறோம். இயேசுவால் வந்த நன்மையை நாம் பெறுவதற்காக நம்மால் வந்த தீமையை அவர் எடுத்துக்கொண்டார். இப்போது, மனித இனத்தின் அடிப்படை பிரச்சனையை ஏசாயா, 6 ஆவது வசனத்தில் கூறியுள்ளார், “அவனவன் தன் தன் வழியிலே போனோம்” இது மனித குலத்தின் உலகளாவிய குற்றமாகும். நாம் அனைவரும் குறிப்பிட்ட அனைத்து பாவங்களையும் செய்ததில்லை. எல்லாரும், கொலையோ அல்லது விபச்சாரமோ அல்லது அதுபோன்ற பிற பாவங்களையோ செய்ததில்லை. ஆனால் ஒரு பிரச்சனை இருக்கிறது, அதில் நாம் அனைவரும் குற்றவாளிகள், நாம் ஒவ்வொருவரும் அவரவர் வழியிலே போனோம். அதுதான் பிடிவாதம், கீழ்ப்படியாமை மற்றும் கலகம் ஆகும். இதுதான் மனித இனத்தின் அடிப்படை பிரச்சனை. இயேசு சிலுவையிலே நமக்காக, இந்த பிரச்சனையைதான் மரணத்தின் மூலம் கையாண்டார். “கர்த்தர் நம் அனைவரின் கலகத்தையும் அவர் ஏற்றுக்கொள்ளும்படிச் செய்தார்.” அன்று இயேசு சிலுவையில் தொங்கியபோது, கலகமும் அதன் தீய விளைவுகளும் அவரை சந்தித்தன. மனித இனத்தின் வரலாறு முழுவதிலும், தேவனுக்கு எதிரான பாவமும் கீழ்ப்படியாமையும் எப்போதும் ஒரு சாபத்தைக் கொண்டு வந்துள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மனித வரலாற்றில் முதல் உதாரணம், ஆதியாகமம் 3 ஆம் அதிகாரத்தில் காணப்படுகிறது, இது சர்ப்பத்தால் (அந்த சர்ப்பத்தின் வேடத்தில் வந்த சாத்தான் ஆவான்) ஆதாம் ஏவாளின் சோதனையையும், அதனை தொடர்ந்து அவர்கள் கீழ்ப்படியாமையையும் பதிவு செய்கிறது. இந்தக் கீழ்ப்படியாமை வெளிப்பட்டு, தேவன் அதற்குத் தீர்ப்பு வழங்கியபோது, தேவன் சொன்னது இதுதான், மேலும், “சாபம்” என்ற வார்த்தை மீண்டுமாக வருவதைக் கவனியுங்கள். ஆதியாகமம் 3: 14, 16, 17:
14 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; 16 அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார். 17 பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.
எனவே, பாவம் மனித இனத்தில் நுழைந்தவுடனே, அதைத் தொடர்ந்து சாபம் வந்ததைக் காண்கிறோம். சாபம் சர்ப்பத்தின் மீதும், நிலத்தின் மீதும் இறங்கியது, மேலும் இதன் விளைவாக, ஆதாம் ஏவாளுக்கு கடின உழைப்பும், வேதனையும் வந்தது. இவையனைத்தும் மனிதனின் பாவத்தினால் அவன் மேல் கொண்டுவரப்பட்ட சாபத்தின் பலன்களாகும்.
இப்போது, தேவனுக்கு எதிரான கீழ்ப்படியாமை எப்போதும் ஒரு சாபத்தைக் கொண்டுவரும் என்ற இந்தக் கொள்கையானது, உபாகமம் 28 இல் உள்ள மோசேயின் சட்டத்தில் இன்னும் முழுமையாக கிரியை செய்யப்பட்டுள்ளது. உபாகமத்தின் 28 வது அதிகாரம் இரண்டு எதிரெதிர் விஷயங்களை முன்வைக்கிறது. முதலாவது, நாம் தேவனுக்கு முன்பாக தாழ்மையாகவும், கீழ்ப்படிதலுடன் நடந்தால் நமக்கு வரும் ஆசீர்வாதம். இரண்டாவதாக, நாம் பிடிவாதமாகவும், பெருமையுடனும், தேவனுக்கு முன்பாக கீழ்ப்படியாமலும் நடந்தால் நம்மீது வரும் சாபங்கள். இந்த இரண்டு மாற்றுகளும் இங்கு உபாகமம் 28வது அதிகாரத்தில் மிகத் தெளிவாக நமக்கு முன்வைக்கப்பட்டுள்ளன. அதிகாரத்தின் முதல் இரண்டு வசனங்களில் மோசே இவ்வாறு கூறுகிறார்:
1 இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். 2 நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிக்கொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.
நாம் கீழ்ப்படிதலுடன் நடக்கும்போது, தேவனின் ஆசீர்வாதங்களைப் பின்தொடர வேண்டிய அவசியமில்லை என்பதைக் கவனியுங்கள். மறுபுறம், தேவனின் ஆசீர்வாதங்கள் நம்மை முந்துகின்றன. ஆசீர்வாதம் இயற்கையாகவே தேவனுக்குக் கீழ்ப்படிவதால் விளைகிறது. அந்த சட்டத்தின்படி, தேவன் பிரபஞ்சத்தை ஒழுங்குபடுத்தியுள்ளார். பின்னர், வசனம் 15 இல், மோசே சித்திரத்தின் எதிர்பக்கத்தை முன்வைக்கிறார், அதுதான் கீழ்ப்படியாமையின் விளைவுகள்:
15 இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதே போவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்.
சாபங்களின் மிக நீண்ட விரிவான பட்டியல் உள்ளது. இந்த அதிகாரத்தை படிக்கும்போது, ஆசீர்வாதங்கள் மற்றும் சாபங்கள் ஆகிய இரண்டும் ஆவி, சரீரம் மற்றும் பொருள் ஆகிய மூன்று முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது. அதுபோலவே, இயேசு கிறிஸ்துவின் மூலம் மீட்பின் முழுச் செயல்பாடும் ஆவி, சரீரம் மற்றும் பொருள் ஆகிய இந்த மூன்று முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது.
மீட்பின் அழகான சித்தரமும், அதன் முடிவுகளும் 3 யோவான் வசனம் 2 இல் உள்ளன, அதனோடு இன்று நான் முடிக்கப் போகிறேன். யோவான் தனது நண்பரான காயுவுக்கு எழுதுகிறார்:
2 பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.
யோவானின் முழுமையான பிரார்த்தனையைக் கவனியுங்கள், அவருடைய நண்பர், அவருடைய ஆத்துமா செழிப்பதுப் போல பொருளாதாரத்திலும், நிதியிலும் செழிக்க வேண்டும், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். அவைதான் ஆவி, சரீரம் மற்றும் பொருள் ஆகிய மூன்று பகுதிகளாகும்.
சரி, இன்றைக்கு நம் நேரம் முடிந்துவிட்டது, ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். இந்த வாரத்தில் ஆவி, சரீரம் மற்றும் பொருள் ஆகிய மூன்று பகுதிகளிலும் மீட்பின் செயல்பாடுகளை இன்னும் முழுமையாக விளக்குகிறேன். நாளை நான் குறிப்பாக “மீட்பின் ஆவிக்குரிய நன்மைகளைப்” பற்றி பேசுவேன்.
குறியீடு: RP-R022-102-TAM









