திரும்பவும் உங்களோடு இருப்பதில் எனக்கு சந்தோஷம். குறிப்பாக, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை மையமாகக் கொண்ட, “மரணத்தின் மீது வெற்றி” என்பதைக் குறித்த ஆழமான, ஆச்சரியமான சத்தியங்களை உங்களோடு நான் தொடர்ந்து பகிர்ந்து கொண்டு வருகிறேன். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், நம் ஒவ்வொருவருக்கும் என்னவாக

இருக்கிறது என்பதைக் குறித்த மூன்று விஷயங்களை நேற்றைய செய்தியில் நான் உங்களுக்கு விளக்கிச் சொன்னேன். முதல் விஷயமாக, தேவன் அருளும் பாவமன்னிப்பு மற்றும் இரட்சிப்பிற்கான நிச்சயமான முத்திரையாக அது இருக்கிறது என்று பார்த்தோம். இரண்டாவதாக, அது நம்முடைய உயிர்த்தெழுதலுக்கான உத்தரவாதமாக இருக்கிறது என்று பார்த்தோம். மூன்றாவதாக, அது நம்முடைய கிறிஸ்தவ ஜீவியத்தின் இலக்காக இருக்கிறது என்று பார்த்தோம்.

இன்று நான் பழைய ஏற்பாட்டின் வேதவசனங்களுக்குத் திரும்பிச் செல்லப் போகிறேன். அந்த வசனங்களில் உயிர்த்தெழுதல் எவ்வளவு தெளிவாக முன் கூட்டியே கணித்துச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்கப் போகிறேன். இது உயிர்த்தெழுதலைக் குறித்த நம்முடைய புரிந்துகொள்ளுதலை அதிகரிக்கும். அது மட்டுமல்ல, வேதாகமத்தின் தீர்க்கதரிசனங்கள் எவ்வளவு துல்லியமானவை என்பதையும் நம்மை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் இது வெளிப்படுத்தும். இது ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் நம் முன் நிற்கும்.

1 கொரிந்தியர் 15:3-4 வசனங்களில், சுவிசேஷத்தின் மையக்கருவை பவுல் எழுதுகிறார். நாம் அதை வாசிக்கலாம்:

3 நான் அடைந்ததும், உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, 4 அடக்கம் பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.

இங்கு “வேதவாக்கியங்கள்” என்ற வார்த்தை, பழைய ஏற்பாடு என்று நாம் அழைக்கிற ஒன்றைக் குறிக்கிறது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். காரணம், பவுல் இதை எழுதிய காலகட்டத்தில், புதிய ஏற்பாடு என்பது இன்னும் முழுமையாக முடிக்கப்படாத, வேதவாக்கியமாக உறுதிப்படுத்தப்பட்டு, அறிவிக்கப்படாத ஒரு புத்தகமாகத்தான் இருந்தது. சுவிசேஷத்தில் மூன்று வரலாற்று உண்மைகள் அடங்கியிருக்கிறது என்று பவுல் சொல்கிறார்: 1) கிறிஸ்து நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார். 2) அவர் அடக்கம் பண்ணப்பட்டார். 3) மூன்றாம் நாளில் அவர் உயிரோடெழுப்பப்பட்டார். இந்த ஒவ்வொரு உண்மை நிகழ்வும், பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாய் இருந்தன என்று அவர் சொல்கிறார். வேதவாக்கியங்களின் அடிப்படையில் இவை நிகழ்ந்தன. அவர் வேதவாக்கியங்களின் அதிகாரத்தை, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை நேரில் பார்த்த சாட்சிகளின் முன் வைக்கிறார். பிறகு அவர் தொடர்ந்து மற்றவைகளைக் குறிப்பிட்டு எழுதுகிறார். இந்த இடத்தில், நம்மை நாமே ஒரு கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். இதை எழுதும்போது, பவுலின் மனதில் எந்த வேதவாக்கியங்கள் இருந்தன? இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை எந்தப் பழைய ஏற்பாட்டு வேதவசனங்கள் முன் கூட்டியே கணித்திருந்தன?

இதற்குள் செல்வதற்கு முன், ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்துவோடு தொடர்புடைய பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தை விளங்கிக் கொள்வதற்கான ஒரு கோட்பாட்டை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 1 பேதுரு 1:10-12 வசனங்களில் இந்தக் கோட்பாடு எழுதப்பட்டிருக்கிறது. நாம் அதை வாசிப்போம்:

10 உங்களுக்கு உண்டான கிருபையைக் குறித்து தீர்க்கதரிசனம் சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக் குறித்து கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனை பண்ணினார்கள். 11 தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின் வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்ன காலத்தைக் குறித்தார் என்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள் (பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளுக்குள் இருந்த கிறிஸ்துவின் ஆவியானவரைக் குறித்து இது பேசுகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்). 12 தங்கள் நிமித்தமல்ல, நமது நிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது. பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே உங்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக் கொண்டு, இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. இவைகளை உற்றுப் பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.

பேதுரு என்ன சொல்கிறார் என்பதை நாம் விழிப்போடு, கவனமாய் பார்த்து, அதைப் புரிந்து கொள்ள வேண்டும். பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள், தங்களைக் குறித்துப் பேசுகிறார்கள். தாவீது, ஒரு தெளிவான எடுத்துக்காட்டாய் இருக்கிறான். “இது அல்லது அது எனக்கு நடந்தது,” என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால் அவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்குப் பொருந்தவில்லை. அவர்கள் தங்களைக் குறித்தே பேசியிருந்தாலும், அவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்குப் பொருந்தவில்லை. மாறாக, அவர்களுடைய வார்த்தைகள், கிறிஸ்துவுக்கு மட்டுமே பொருந்தின. வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர்கள் தங்களுடைய ஆவியிலிருந்தோ அல்லது தங்களுடைய சொந்தப் புரிந்துகொள்ளுதலில் இருந்தோ பேசவில்லை. மாறாக, கிறிஸ்துவில் நிறைவேறப் போகிறவைகளைக் குறித்து, அவர்களுக்குள் இருந்த கிறிஸ்துவின் ஆவியானவரே இவற்றைப் பேசினார்.

இரண்டாவதாக, அவர்களுடைய செய்தி, அவர்களுடைய சொந்தத் தலைமுறைக்கானது அல்ல. மாறாக, அது புதிய ஏற்பாட்டு விசுவாசிகளுக்குரியது. ஆகையால் இந்தப் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களை வாசிக்கும்போது, இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். முதலில், தீர்க்கதரிசிகள் தங்களைக் குறித்துப் பேசவில்லை. கிறிஸ்துவைக் குறித்துப் பேசினார்கள். இரண்டாவதாக, அவர்களுடைய செய்தி, அவர்களுடைய சொந்தத் தலைமுறைக்கானது அல்ல. மாறாக, அது நமக்குரியது.

சங்கீதம் 16:8-11 வசனங்களில் இந்தக் கோட்பாட்டைப் பொருத்திப் பார்ப்போம். இது தாவீதின் சங்கீதமாகும்.

8 கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. 9 ஆகையால் என் இருதயம் பூரித்தது. என் மகிமை களிகூர்ந்தது. என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். 10 என் ஆத்துமாவை பாதாளத்தில் (ஷியோல் – உயிர் பிரிந்த ஆவிகள் பூமியின் கீழ் தங்குமிடம்) விடீர் (விட மாட்டீர்). உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர் (காண விட மாட்டீர்). 11 ஜீவ மார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர். உம்முடைய சமூகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.

இந்த வேதப்பகுதியைக் குறித்த சில முக்கியமான உண்மைகளை நாம் கவனிப்போம். முதலில், இது பேதுரு மற்றும் பவுலினால் புதிய ஏற்பாட்டில் மேற்கோள் காண்பித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டு முறையும், இது தாவீதை அல்ல, இயேசுவையே சுட்டிக் காண்பிக்கிறது. பேதுரு தன் செய்தியில் இதைக் குறிப்பிட்டுப் பேசுகிறான். இவ்வேதப்பகுதியை தாவீதோடு பொருத்திப் பார்க்க முடியாது; காரணம், தாவீது அடக்கம் பண்ணப்பட்டான்; கல்லறையில் அவனுடைய சரீரம் சிதைந்து, உருவழிந்து போயிருக்கிறது என்று பேதுரு சொன்னான். ஆனால், “உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காண விட மாட்டீர்,” என்று தாவீது பேசுகிறான். வேறு வார்த்தைகளில் சொன்னால், தாவீது இங்கே தன்னைக் குறித்துப் பேசுவதுபோலத் தெரிந்தாலும், அவனுடைய வார்த்தைகள் அவனைக் குறிக்கவில்லை, மாறாக, மெசியாவாகிய இயேசுவைக் குறிக்கிறது என்று பேதுரு சொல்கிறான்.

இயேசுவின் ஆத்துமா ஷியோல் எனும் பாதாளத்திற்கு இறங்கிச் சென்றது, ஆனால் அது அங்கேயே தங்கி விடவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். “நீர் என்னை பாதாளத்தில் விட்டு விட மாட்டீர்,” என்று அவர் சொன்னார். அதே நேரம், அவருடைய சரீரம் கல்லறையில் இருந்தது. “என் மாம்ச சரீரம் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்,” என்று அவர் சொன்னார். ஆனால் அது சிதைந்து அழிந்து போகவில்லை. “உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காண விட மாட்டீர்,” என்று சங்கீதக்காரன் சொன்னான். பிறகு முடிவு வசனமாகிய 11-ம் வசனத்தில், உயிர்த்தெழுதலைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் அதை வாசிப்போம்: ”ஜீவ பாதையை நீர் எனக்குத் தெரியப்படுத்தியிருக்கிறீர். உம்முடைய பிரசன்னத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.” இது என்ன சொல்கிறது? உயிர்த்தெழுதலின் மூலம், மெசியாவாகிய கிறிஸ்து, பிதாவாகிய தேவனுடைய பிரசன்னத்திற்குள் திரும்ப கொண்டு வரப்பட்டார் என்பதை இது சுட்டிக் காண்பிக்கிறது.

நாம் இதைத் திரும்பவும் சீக்கிரமாய் பார்த்து விடுவோம். இது புதிய ஏற்பாட்டில், பேதுரு மற்றும் பவுலினால் மேற்கோள் காட்டிச் சொல்லப்பட்டிருக்கிறது. இவர்கள் இருவருடைய மேற்கோள்களும் தாவீதைக் குறிக்கவில்லை, இயேசுவைத்தான் சுட்டிக் காண்பிக்கின்றன. இவை என்ன சொல்கின்றன? இயேசுவின் ஆத்துமா, ஷியோல் எனும் பாதாளத்திற்கு இறங்கும்; ஆனால் அங்கே தங்கியிருக்காது; அவருடைய சரீரம் கல்லறையில் இருந்தது. அது அழிவைக் காணவில்லை; உயிர்த்தெழுதலின் மூலம், அவர் திரும்பவும் பிதாவாகிய தேவனுடைய பிரசன்னத்திற்குள் எடுத்துக் கொள்ளப்பட்டார் என்பதைத்தான் இவை சொல்கின்றன. இதே கோட்பாடுகளை நாம் திரும்பவும் சங்கீதம் 71:20-21 வசனங்களில் பார்க்கின்றோம். நாம் அதை வாசிக்கலாம்:

20 அநேக இக்கட்டுகளையும் ஆபத்துக்களையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னை பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப் பண்ணுவீர். 21 என் மேன்மையைப் பெருகப் பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர்.

திரும்பவும், இங்கே அதே கோட்பாடுதான் சொல்லப்பட்டிருக்கிறது. இதை எழுதிய சங்கீதக்காரனுடைய வாழ்க்கையில் இது நிறைவேற்றப்படவில்லை. பூமியின் ஆழங்களிலிருந்து, அதன் பாதாளங்களிலிருந்து அவன் மேலே ஏறி வரப்பண்ணப் படவில்லை. அவன் அடக்கம் பண்ணப்பட்ட நிலையில்தான் இருக்கிறான். ஆனால் இது அப்படியே இயேசுவின் அனுபவத்தில் முழுமையாக நிறைவேறியது. படிப்படியாக நிகழ்ந்த நான்கு காரியங்களை நாம் இங்கே பார்ப்போம். முதலில், இயேசு தேவனுக்குக் கீழ்ப்படிந்ததன் மூலம், தன் மேல் வந்த எல்லா வலி, வேதனைகளையும், மகா ரணமான உபத்திரவங்களையும் நீடிய பொறுமையுடன் தாங்கிக் கொண்டார். இரண்டாவதாக, சிலுவையில் நிகழ்ந்த அவருடைய மரணத்திற்குப் பிறகு, அவர் திரும்பவும் ஜீவனை உடையவராய் உயிர்ப்பிக்கப்பட்டார். மூன்றாவதாக, பூமியின் ஆழங்களிலிருந்தும், கல்லறையிலிருந்தும், ஷியோல் எனும் பாதாளத்திலிருந்தும் அவர் மேலே ஏறி வரப் பண்ணப்பட்டார். நான்காவதாக, தேவனுடைய வலதுபக்கத்தில், கனம் பொருந்திய அவருக்குரிய இடத்தில் அவர் திரும்பவும் அமர வைக்கப்பட்டார்.

நான் இதை திரும்பவும் தொகுத்துச் சொல்கிறேன்:

இயேசு நீடிய பொறுமையோடு மகா ரணமான வலி வேதனைகளைத் தாங்கிக் கொண்டார். ஆனால் அவர் திரும்பவும் உயிர்ப்பிக்கப்பட்டார். அவர் பூமியின் ஆழங்களிலிருந்து மேலே ஏறி வரப் பண்ணப்பட்டார். தேவனுடைய வலதுபாரிசத்திலிருக்கும் கனம் பொருந்திய அவருக்குரிய இடத்தில் அவர் திரும்பவும் அமர வைக்கப்பட்டார். பழைய ஏற்பாட்டில், ஒரு இடத்திலும் உயிர்த்தெழுதலைக் குறித்து முன் கூட்டியே கணித்துச் சொல்லப்படவில்லை என்று சிலர் உங்களிடம் சொல்லலாம். அது தவறு என்றுதான் நான் சொல்வேன். தேவன் ஒரு மனுஷனை திரும்பவும் உயிர்ப்பிப்பார், பூமியின் ஆழங்களிலிருந்து மேலே ஏறி வரப்பண்ணுவார் என்ற வார்த்தைகளைக் காட்டிலும், உயிர்த்தெழுதலைக் குறித்து அதிகத் தெளிவாகக் கணித்துச் சொல்லக்கூடிய வார்த்தைகள் வேறு எதுவும் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். உயிர்த்தெழுதலின் நிறைவேறுதலைக் குறித்துப் பேசுகிற வார்த்தைகளாகத்தான் இவை எனக்குத் தெரிகின்றன.

இப்பொழுது நாம் ஓசியா 6-ம் அதிகாரத்திற்குச் செல்வோம். 1-3 வசனங்களை வாசிப்போம்.

1 கர்த்தரிடத்தில் திரும்புவோம், வாருங்கள். நம்மைப் பீறினார். அவரே நம்மைக் குணமாக்குவார். நம்மை அடித்தார். அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார். 2 இரண்டு நாளுக்குப் பின்பு, அவர் நம்மை உயிர்பிப்பார். மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார். அப்பொழுது நாம் அவருடைய சமூகத்தில் பிழைத்திருப்போம். 3 அப்பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அடையும்படி தொடர்ந்து போவோம். அவருடைய புறப்படுதல் அருணோதயம்போல ஆயத்த மாயிருக்கிறது. அவர் மழையைப்போலவும், பூமியின் மேல் பெய்யும் முன் மாரி, பின் மாரியைப் போலவும் நம்மிடத்தில் வருவார்.

மூன்றாம் நாளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தைக் கவனியுங்கள். இயேசு மூன்றாம் நாளில் உயிர்த்தெழச் செய்யப்படுவார் என்று முன் கூட்டியே கணித்துச் சொல்லப்பட்ட உண்மைக்கு புதிய ஏற்பாட்டு வசனங்கள் மிகுதியான முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றன. பழைய ஏற்பாட்டின் எந்த வேதப்பகுதி அதை முன் கூட்டியே கணித்திருக்கிறது? அதற்குப் பதில், இப்பொழுது நாம் வாசித்த ஓசியா வேதப்பகுதிதான்.

ஓசியாவின் முழு அர்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், நாம் ஒரு கோட்பாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு விதத்தில் அடையாளம் காணும் கோட்பாடுதான் அது.

முதலில், இயேசு தம்மை நம்மோடு அடையாளப்படுத்திக் கொண்டார். அவர் மனுஷனானார். அவர் பாவி மனுஷனின் பதிலாளாக மாறினார். அவர் பாவி மனுஷனின் இடத்தை எடுத்துக் கொண்டார். ஆனால் நம்முடைய இரட்சிப்பு, விசுவாசத்தின் மூலம், நம்மையே இயேசுவோடு அடையாளப்படுத்திக் கொள்வதால் உண்டாகிறது. அதாவது அவர் கடந்த சென்ற அனுபவங்களில் அவரோடு நாமும் பங்கு பெறுகின்றோம். பவுல் இதை எபேசியர் 2:4-7 வசனங்களில் எழுதுகிறார்:

4 தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, 5 அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மை கிறிஸ்துவுடனே கூட உயிர்ப்பித்தார். கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். 6 கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச் செய்வதற்காக, 7 கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடே கூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடே கூட உட்காரவும் செய்தார்.

இயேசுவோடு நம்மை அடையாளப்படுத்திக் கொண்டதன் மூலம், நம்மோடு அவர் ஏற்படுத்திக் கொண்ட அடையாளத்தைப் பின்பற்றுவதன் மூலம், நாம் மூன்று அனுபவங்களில் பங்கு பெறுகின்றோம் என்பதைக் கவனியுங்கள். நாம் உயிர்ப்பிக்கப் பட்டோம், நாம் உயிரோடு எழுப்பப்பட்டோம், நாம் உன்னதங்களில் அவரோடு கூட உட்கார வைக்கப்பட்டோம். நாம் அவருடைய உயிர்த்தெழுதலில் பங்கு பெறுகின்றோம். அவருடைய உயிர்த்தெழுதல், நம்முடைய உயிர்த்தெழுதலாய் இருக்கிறது.

இப்பொழுது நாம் ஓசியா 6:3-ம் வசனத்தை திரும்ப வாசிப்போம். அது என்ன சொல்கிறது என்று நாம் கவனிப்போம்:

3 அப்பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அடையும்படி தொடர்ந்து போவோம். அவருடைய புறப்படுதல் அருணோதயம்போல ஆயத்த மாயிருக்கிறது. அவர் மழையைப்போலவும், பூமியின் மேல் பெய்யும் முன் மாரி, பின் மாரியைப் போலவும் நம்மிடத்தில் வருவார்.

மூன்று முக்கியமான குறிப்புகள்:

முதலில், ஓசியாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறுதலைக் குறித்த இந்த வெளிப்பாடு, கர்த்தரை அறிந்து கொள்ள வேண்டும் என்று வாஞ்சையாய் அவரைப் பின்தொடருகிறவர்களுக்கு மட்டுமே உண்டாகும். வேதவசனங்களை அங்கொன்றும், இங்கொன்றுமாக அறிந்து வைத்திருப்பவர்களுக்கு, அவற்றை மேலோட்டமாக வாசிப்பவர்களுக்கு இது உண்டாகாது. மாறாக, திறந்த இருதயத்தோடும், மனதோடும் வேதவசனங்களை வாசிப்பவர்களுக்கும், தேவன் வெளிப்படுத்த விரும்புகிற சத்தியத்தை நாடித் தேடுகிறவர்களுக்கும் மட்டுமே இது உண்டாகும்.

இரண்டாவதாக, சூரிய உதயம் போல அவர் புறப்படுவார் என்று தீர்க்கதரிசனமாக இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. சூரிய உதயம் என்பது, இருளான இரவைத் தொடர்ந்து வருகிறது. ஆக, இயேசுவின் உயிர்த்தெழுதலோடு ஒப்பிட்டுச் சொல்லப்பட்ட சூரிய உதயம், நீண்ட – இருளான பாவ இரவிற்குப் பின் வருகின்றது. பிறகு இது தொடர்ந்து இவ்வாறு சொல்கிறது:

“அவர் மழையைப்போல..................நம்மிடத்தில் வருவார்.”

வேதவசனத்தில், அதுவும் குறிப்பாக ஓசியா புத்தகத்தில், மழை என்ற வார்த்தை, பரிசுத்த ஆவியானவருக்கு அடையாளமாக இருக்கிறது. ஆக, இந்தத் தீர்க்கதரிசனம், இயேசுவின் உயிர்த்தெழுதலை மட்டும் கணித்துச் சொல்லவில்லை, பெந்தேகோஸ்தே நாளில் வரப் போகிற பரிசுத்த ஆவியானவரின் வருகையைக் குறித்தும் கணித்துச் சொல்கிறது. இருளின் பின் வருகிற சூரிய உதயம் போல, இயேசு உயிர்த்தெழச் செய்யப்படுகிறார். ஐம்பது நாட்களுக்குப் பிறகு, காத்திருந்த சீஷர்கள் மேல் மழையைப்போல பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்தார். ஆக, பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம், சம்பவங்களை முன் கூட்டியே கணித்துச் சொல்வதோடு நின்று விடுவதில்லை. அவற்றின் ஆவிக்குரிய முக்கியத்துவத்தையும் அது வெளிப்படுத்துகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், இயேசு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார் என்று கணித்துச் சொல்வதோடு அது நின்று விடவில்லை. நாம் இயேசுவோடு அவருடைய உயிர்த்தெழுதலில் அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறோம் என்பதையும் கூட அது சுட்டிக் காண்பிக்கிறது. உண்மையில், இயேசுவோடு இவ்விதத்தில் நாம் அடையாளப்படுத்தப்பட்டிருப்பது, புதிய ஏற்பாட்டில் இன்னும் அதிகமாய், முழுமையாய் வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஆனாலும் இது பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தில் ஒரு கருவின் வடிவத்தில் ஏற்கனவே இருந்தது.

உயிர்த்தெழுதலைக் குறித்த பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களில் இன்னும் நிறைய எடுத்துக்காட்டுகளை, “மரித்தோரின் உயிர்த்தெழுதல் என்ற அர்த்தத்தில் வரும் “The Resurrection of the Dead” என்ற என்னுடைய புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். ஆனால் அவை எல்லாவற்றையும் இன்று இங்கே சொல்வதற்கு எனக்கு நேரமில்லை. ஆகையால் நான் இந்தச் செய்தியை முடித்தாக வேண்டும். ஆனால் நாளை இதே நேரம் நான் உங்களை திரும்பவும் சந்திப்பேன். மனுஷனுடைய கற்பனையை எப்பொழுதுமே தன் வயப்படுத்தி இழுக்கின்ற ஒரு விஷயத்தைக் குறித்துதான் நாளைக்கு நான் பேசப் போகிறேன். நாளைய செய்தியின் தலைப்பு: “மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும்?”

லைக்
பகிரவும்