விதைப்பு மற்றும் அறுப்பின் மூலம் செழிப்பு

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 9
டெரெக் பிரின்ஸின் இந்த போட்காஸ்ட் மூலம் 'விதைப்பதும் அறுப்பதும்' என்ற கொள்கைகளின் வழியே வேதாகம செழிப்பைக் கண்டறியுங்கள். 'தேவனுடைய வாக்குத்தத்தங்களின் தேசத்தில் நடத்தல்' என்ற தொடரின் ஒரு பகுதியான இது, தாராள மனப்பான்மை எவ்வாறு வேத சத்தியங்களுடன் ஒத்துப்போகிறது என்பதை விளக்குகிறது. இது தசமபாகத்தைக் காட்டிலும் மேலான ஆழமான உண்மைகளை வெளிப்படுத்துகிறது. இறையரசின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, தாராள குணமுள்ள இருதயங்களுக்கு வாக்குப்பண்ணப்பட்ட ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்.
Transcript
தேவனுடைய வாக்குத்தத்தங்களின் தேசத்தில் இந்த வாரம் நடத்தப்பட்ட சுற்றுப்பயணத்தை நாம் தொடர்வதில் மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது.
நேற்று நான் செழிப்புக்கான சில வாக்குத்தத்தங்களைப் பார்த்தேன், அதில் முதன்மை நிபந்தனை என்னவென்றால், நம்முடைய முழு தசமபாகத்தையும் தேவனின் களஞ்சியத்தில் (பண்டசாலையில்) கொண்டு வரவேண்டும். நமது வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை முதலில் தேவனுக்காக ஒதுக்கிவைப்பதே தசமபாகம் என்று வரையறுத்தேன்.
தேவன் நமக்கு செழிப்பை வாக்களிக்கும் மற்றொரு வேதக் கொள்கையை இன்று நான் பார்க்கப் போகிறேன். நேற்று நாம் பார்த்த தசமபாக வாக்குத்தத்தத்தை விட, இன்று நாம் பார்க்கப்போகும் கொள்கை, இந்த செழிப்பின் பகுதிக்கு நம்மை மேலும் அழைத்துச் செல்லும் என்று நான் நம்புகிறேன்.
நான் இப்போது 2 கொரிந்தியர் 9 ஆம் அதிகாரத்திலிருந்து சில வசனங்களைப் படிக்கப் போகிறேன். 2 கொரிந்தியர் 8 மற்றும் 9 ஆகிய இரண்டு அதிகாரங்களும் தேவனுக்கு நாம் பணத்தைக் கொடுப்பதைக் குறிக்கின்றன என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும். பணத் தேவையில் இருந்த சில விசுவாசிகளுக்குப் பல தேவாலயங்களிலிருந்து பவுல் காணிக்கையை எடுத்தார் என்பதே அதன் பின்னணியாகும். காணிக்கையை தரும்படி வாக்குக்கொடுத்த தேவாலயங்களில் ஒன்று கொரிந்துவில் உள்ள இந்த தேவாலயமாகும், அதற்கு பவுல் எழுதுகிறார், அவர் அதை எவ்வாறு ஏற்பாடு செய்ய விரும்புகிறார் என்பதை விளக்க அவர் இப்போது எழுதுகிறார், மேலும் அவர் முக்கியமான சில நோக்கங்களையும், தேவனுக்கு நாம் கொடுப்பதை நிர்வகிக்க வேண்டிய கொள்கைகளையும் தருகிறார். எனவே, இன்று நமக்கு அதே நோக்கங்களும், அதே கொள்கைகளும் செல்லுபடியாகும் என்பதால் இது நமக்கும் முக்கியமானது. 2 கொரிந்தியர் 9:5-9 ஐ வாசிக்கிறேன்:
5 ஆகையால், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிற உங்கள் தானதர்மமானது லோபத்தனமாய்க் கொடுக்கப்பட்டதாயிராமல், உதாரத்துவமாய்க் கொடுக்கப்பட்டதாயிருக்கும்படியாக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரரை ஏவி, உங்களிடத்தில் முன்னதாக அனுப்புவது எனக்கு அவசியம் என்று காணப்பட்டது. [பாருங்கள், நோக்கங்கள் மிகவும் முக்கியம். பவுல் தொடர்கிறார்:] 6 பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.
இப்போது, பவுல் “விதைப்பு” மற்றும் “அறுப்பு” என்ற சொற்றொடர்களைப் பயன்படுத்தும்போது, அவர் விவசாயத்திற்குரிய சொற்களிலிருந்து கடன் வாங்கி, பணத்திற்குப் பயன்படுத்துகிறார். “விதைப்பது” கொடுப்பதாகும், “அறுப்பது” பெறுவதாகும், மீண்டும் இது பணத்தின் அடிப்படையில் இருக்கிறது. இதை மனதில் கொள்ளுங்கள், இது முக்கியமானது. பவுல் மற்றொரு கொள்கையுடன் செல்கிறார், அது நோக்கத்துடன் தொடர்புடைய மற்றொரு விஷயம்.
7 அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
கிரேக்கம், “பெருங்களிப்புடன் கொடுப்பவர்” என்று கூறுகிறது. கொடுப்பதில் இன்று நம்மில் எத்தனை பேர் “பெருங்களிப்புடன்” இருக்கிறோம் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது? மூன்றாம் உலகத்தின் மிகவும் ஏழ்மையான, பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட தேசத்தில் உள்ள மக்கள் தங்கள் தசமபாகத்திற்கு மேலாக தேவனுக்கு பெருங்களிப்புடன் கொடுப்பதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் அப்படி செய்தபோது, தேவன் அவர்களை எப்படி ஆசீர்வதித்தார் என்பதை நான் பார்த்திருக்கிறேன். பவுலின் வார்த்தைகளுக்கு திரும்புவோம், வசனம் 8:
8 மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.
என்ன வளமான வசனம் அது! பெருகுதல், சம்பூரணம் என்னும் இரண்டு வார்த்தைகள் உள்ளன; எல்லாவற்றிலும், சகலவித என்னும் மூன்று வார்த்தைகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக, இது நம் வாழ்வின் எந்தப் பகுதியிலும் போதாமை அல்லது பற்றாக்குறைக்கு இடமளிக்காது, அது தேவனின் கிருபையைப் பற்றி பவுல் எழுதுகிறார். உண்மையில், கொடுப்பது பற்றிய இந்த அதிகாரத்தில் உள்ள முக்கிய வார்த்தை “கிருபை” ஆகும். கொடுப்பது ஒரு கிருபையாகும். இது கிறிஸ்தவர்களின் கிருபைகளில் ஒன்றாகும். அதுவும் தேவனின் கிருபையால் விளைகிறது. பழைய ஏற்பாட்டிலிருந்து பவுல் ஒரு சங்கீதத்தை மேற்கோள் காட்டுகிறார், அதுதான் சங்கீதம் 112 ஆகும், அந்த சங்கீதத்தை சிறிது நேரம் கழித்து பார்ப்போம்.
9 வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான் [அவன்தான் நீதிமான்], அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும்.
ஏழைகளுக்குக் கொடுப்பதற்கும், நீதியை நிலைநிறுத்துவதற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதைக் கவனியுங்கள். மீண்டும், அங்கு பயன்படுத்தப்படும் “இறைத்தல்” என்ற வார்த்தை, ஒரு மனிதன் தனது வயலில் விதை விதைப்பதைக் குறிக்கிறது. இது சம்பந்தமாக, தேவனின் முன்குறிக்கப்பட்ட நோக்கத்தின் மூலம் ஒரு தெய்வீக பரிமாற்றம் நடந்தது என்பதை நாம் பார்க்க வேண்டும், மேலும், சிலுவையில், தேவனின் கிருபையின் மூலம் இதுவே அடிப்படையாகும். சிலுவையில், மனிதனின் கீழ்ப்படியாமையின் மூலம் மனித இனத்தின் மீது வந்த வறுமையின் சாபத்தை இயேசு சுமந்தார், இதையொட்டி, அவருடைய செல்வத்தில் நாமும் பங்கு பெறுவோம். இது 2 கொரிந்தியரில் உள்ள முந்தைய அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது, 2 கொரிந்தியர் 8:9:
9 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே [அவர் சிலுவையில் நிர்வாணமாக தொங்கினார்] ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே.
பாருங்கள், இதுதான் பரிமாற்றம். தேவனின் அனைத்து ஏற்பாடுகளுக்கும் அடிப்படையானது, இயேசு வறுமையின் சாபத்தை ஏற்றுக்கொண்டார், அவருடைய ஆசீர்வாதத்தையும் அவருடைய பெருக்கத்தையும் விசுவாசத்தின் மூலம் நாம் பெறுவோம். அதுதான் கிருபை, மேலும், அந்த கிருபை நம் வாழ்வில் வெளிப்படுகிறது, தேவன் அதை நமக்கு பெருகச் செய்கிறார், இதனால், எல்லாவற்றிலும் எப்பொழுதும் நமக்குத் தேவையான அனைத்தையும் வைத்திருக்கிறார், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறோம்.
இப்போது, அங்கு கொள்கை வருகிறது, குறிப்பாக, பவுல் குறிப்பிடும் விவசாயம், விதைப்பு மற்றும் அறுப்பின் பெருக்கம் இறைத்தல் மூலம் வருகிறது. நாம் எந்த அளவில் விதைக்கிறோம், எந்த அளவில் இறைக்கிறோம், என்பதுதான் நாம் அறுவடை செய்யும் அளவைத் தீர்மானிக்கும். நீங்கள் ஒரு விவசாயி வைத்திருக்கிற அற்புதமான விதைகளை கொண்டு மிகவும் மகிழ்ச்சியுடன் அவர் இருக்கிறதை கண்டு இருக்கிறீர்களா?, மேலும், அவர் சொல்கிறார், “இந்த விதை மிகவும் நல்லது, நான் அதைப் பிடித்துக் கொள்ளப்போகிறேன். நான் அதில் எதையும் தூக்கி எறியப் போவதில்லை.” அந்த விதையிலிருந்து அவர் எவ்வளவு திரும்பப் பெறுவார்? ஒன்றுமில்லை. இது இயற்கையின் முரண்பாடுகளில் ஒன்று, தெய்வீக முரண்பாடு ஆகும். அந்த இறைக்கும் செய்கை பெருக்கத்திற்கு வழிவகுக்கிறது, ஆனால் பிடித்து வைப்பது வறுமைக்கு வழிவகுக்கிறது. வேதத்தில் உள்ள அனைத்தும் இதை நமக்குச் சொல்கிறது: கஞ்சத்தனம் இறுதியில் வறுமைக்கு வழிவகுக்கிறது. நாம் அதிகரிக்க (பெருக) வேண்டுமென்றால், நாம் இறைக்க வேண்டும்.
2 கொரிந்தியர் 9 இல் பவுல் மேற்கோள் காட்டிய பழைய ஏற்பாட்டில் உள்ள சங்கீதத்தை இப்போது நாம் பார்க்கப் போகிறோம். சங்கீதம் 112:1-3, 5, 8 & 9 ஆகிய வசனங்களைப் படிக்கப் போகிறோம். இந்த சங்கீதம், தேவனுடைய வார்த்தையின் அடித்தளத்தின் மீதும், கர்த்தருக்குப் பயப்படும் பயத்தின் மீதும் உறுதியாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு சிறந்த நீதியுள்ள மனிதனை சித்தரிக்கிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
1 அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். 2 அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். [இது தலைமுறை தலைமுறையாக தொடரும் ஆசீர்வாதத்தின் வாக்குத்தத்தமாகும். வசனம் 3:] 3 ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும், அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும். [அவருடைய வீட்டில் உள்ள ஐசுவரியத்துக்கும், செல்வத்திற்கும், மற்றும் நீதிக்கும் உள்ள நேரடி தொடர்பைக் கவனியுங்கள். வசனம் 5:] 5 இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான். [அது மீண்டும் அதே கொள்கை: பெருக்கம் இறைத்தல் மூலம் வருகிறது. வசனம் 8, அத்தகைய மனிதன்:] 8 அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான். [வசனம் 9, இது 2 கொரிந்தியர் 9இல் பவுல் மேற்கோள் காட்டிய வசனம்:] 9 வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.
மீண்டும், இறைத்தல் என்பது நீதியின் அடையாளமாக இருப்பதைக் காண்கிறோம், அது தாராளமாக கொடுக்கிறதும், வைத்திருக்காததும் ஆகும், மேலும், அது நமது நீதியை நிலைநிறுத்துகிறது, நாம் அறுவடை செய்வோம் என்பதை உறுதிப்படுத்துகிறது. எனவே, நாம் இதைச் சொல்லலாம்: கடன் கொடுப்பதும், தாராளமாகக் கொடுப்பதும், நீதியுடனும், பாதுகாப்புடனும், செழிப்புடனும் இணைந்துள்ளது. இது தேவனின் நோக்கங்களாகும், அவற்றை ஒருபோதும் பிரிக்க முடியாது.
மீண்டும், நீதிமொழிகள் 11:24 இல் இறைத்தல் மற்றும் வைத்துக்கொள்ளுதல் போன்ற அதே முரண்படும் செய்தி உள்ளது:
24 வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம் பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு.
தேவனுக்கும், ஏழைகளுக்கும் நாம் கொடுக்க வேண்டியதைத் தடுப்பது வறுமையைத் தரும். ஆனால், உதாரத்துவமாகக் கொடுப்பது, தேவனுடைய வார்த்தையின் கொள்கையின்படி, விசுவாசத்தில் இறைப்பது, தேவனுக்குக் கொடுப்பது மற்றும் தேவைப்படுபவர்களுக்கு கொடுப்பது ஆகியவை நமக்கு மேலும் பலனளிக்கும். நினைவில் கொள்ளுங்கள், இவை அனைத்தும் நாம் விசுவாசத்துடன் செய்ய வேண்டும், ஏனென்றால், விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம். அதனால்தான், நாம் பெறுவதற்கு முன் கொடுக்கிறோம், அறுப்புக்கு முன் இறைக்கிறோம். அது எப்போதும் விசுவாசத்தின் கொள்கையாகும்.
தேவனுடைய ராஜ்யத்தில் பணத்தைக் கையாள்வதில் விவசாயத்தின் அடிப்படைக் கொள்கைகளை பவுல் பயன்படுத்துகிறார். இது நடைமுறைக்குரியது என்பதை நாம் பார்க்க வேண்டும். சிறந்த பயிர்களை பெறுவதற்கு ஒரு விவசாயி தனது நிலத்தைக் கையாளும்போது, அவர் கடைபிடிக்க வேண்டிய மூன்று எளிய கொள்கைகள் உள்ளன என்று நான் பரிந்துரைக்கிறேன்.
அவர் முதலில் நல்ல மண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இரண்டாவதாக, அவர் மண்ணை சரியான முறையில் தயார்படுத்த வேண்டும்.
மூன்றாவதாக, அவர் தனது முழு கடினசெயலையும் நன்கு நிர்வகிக்க வேண்டும்.
ஒரு விவசாயி உள்ளூர் நகரத்தின் பிரதான தெருவில் தனது விதைகளை வலது மற்று இடது புற கால்வாய்களில் சிதறடித்துச் சென்றால், அவர் எதையும் அறுவடை செய்ய மாட்டார். எனவே, நாம் இறைக்கும் இடம் நிறைய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு முதலீடு ஆகும். நல்ல மண், நல்ல தயாரிப்பு, நல்ல மேலாண்மை தேவை.
தேவனுடைய ராஜ்யத்தில் நாம் முதலீடு செய்வதிலும் இதுவே உண்மை என்று நான் நம்புகிறேன். புத்திசாலித்தனமாக விதைத்தால் அறுவடை செய்வோம். நாம் தூண்டுதலின் பேரில் கொடுக்கக்கூடாது, உணர்ச்சிவசப்பட்ட தூண்டுதலால் கொடுக்கக்கூடாது, ஆனால், சரியான வேதக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட அந்த ஊழியங்களையும், தேவனின் அந்த நிறுவனங்களையும் நாம் உண்மையாகத் தேட வேண்டும், நல்ல மண்ணில் வேலை செய்யும் இடத்தில், தங்களின் அதிகபட்ச வருமானத்தை கொடுக்கும் சரியான தயாரிப்பு உள்ள இடத்தில் மற்றும் நிர்வாகம் நன்றாகவும் நெறிமுறையாகவும் நேர்மையாகவும் இருக்கும் இடங்களில் கொடுக்க வேண்டும். தேவனுடைய பிள்ளைகள் பலர் விதைப்பதன் ஆசீர்வாதங்களை இழக்க நேரிடுகிறார்கள் என்று நான் பயப்படுகிறேன், ஏனென்றால், அவர்கள் அறுவடை செய்வதற்கு முன்பு விதைக்க வேண்டும் என்பதையும், அதிகரிக்கும் அளவுக்கு இறைக்க வேண்டும் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை, இல்லையென்றால், அவர்கள் நல்ல வருமானம் கிடைக்கும் இடத்தில் விதைக்காததால் ஆகும். அவர்கள் தகுதியற்ற ஊழியங்களில் அல்லது வேதப்பூர்வமற்ற செயல்பாடுகள் அல்லது நிர்வாகம் சரியில்லாத இடங்களில் முதலீடு செய்கிறார்கள், அவர்களுக்குத் தேவையான வருமானம் கிடைக்காது.
இன்றைய எனது செய்தியின் முடிவிற்கு வருவதால், இந்த மூன்று கேள்விகளை சரிப்பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் கொடுப்பதைக் கருத்தில் கொள்ளும்போது, நீங்கள் தேவனின் நோக்கங்களுடன் செயல்படுகிறீர்களா? நீங்கள் அடிப்படைக் கொள்கைகளை பின்பற்றுகிறீர்களா? மேலும், உங்கள் நோக்கங்கள் சரியானதா? அந்தக் கேள்விகளுக்கான பதில் “ஆம்” எனில், உங்களுக்கான முடிவு, செழிப்பு மற்றும் பெருக்கமாகும் என்று நான் நம்புகிறேன்.
இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது, ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை நான் தேவனின் வாக்குத்தத்தங்களின் மற்றொரு பகுதிக்கு செல்கிறேன், அது குணமாக்குதலின் பகுதியாகும். முழு ஆரோக்கியத்திற்கான தேவனின் அடிப்படை ஏற்பாடுகளை நான் விளக்குகிறேன்.
குறியீடு: RP-R026-103-TAM









