ஒழுங்கான ஆவிக்குரிய அரசாங்கம்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 9
சமாதானத்தையும் உண்மையான அதிகாரத்தையும் கண்டடையுங்கள்! தேவனுடைய அரசாங்கத்தின் நற்செய்தியான ராஜ்யத்தின் சுவிசேஷம், வேதவாக்கியங்களில் வாக்குறுதியளிக்கப்பட்டபடி எவ்வாறு சமாதானத்தைக் கொண்டுவருகிறது என்பதைக் கண்டறியுங்கள். டெரெக் பிரின்ஸின் 'மறுசீரமைப்பு' தொடரின் 9-வது பகுதியான 'சரியான ஆவிக்குரிய அரசாங்கம்' என்ற இந்தச் செய்தி, சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிவதற்கும் தேவனுடைய ஆட்சியின் கீழ் வாழ்வதற்கும் இடையிலான முக்கியத் தொடர்பை வெளிப்படுத்துகிறது.
Transcript
தேவனுடைய ஜனங்களுக்கான அவருடைய முடிவுகால நோக்கம் எவ்வாறு நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் ஒன்றாகத் தொடர்ந்து பார்க்கும்போது, மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. இந்த வாரம் நான் சபையின் புதுப்பித்தலை மையமாகக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறேன். அடுத்த வாரம் இஸ்ரவேலின் புதுப்பித்தலைக் குறித்து பேசப் போகிறேன்.
கிறிஸ்து தம்முடைய சரீரமாகிய சபையைக் கட்டியெழுப்பும்படி கொடுத்த ஐந்து முக்கியமான ஊழியங்கள் புதுப்பிக்கப்பட வேண்டியதைக் குறித்து நேற்று நான் பேசினேன். அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் என்ற இரண்டு பிரதானமான ஊழியங்களின் தேவையைக் குறித்தும் நான் குறிப்பாகப் பேசினேன். இவை இல்லாமல், ஐந்து சிலிண்டர்களில் இயங்கும்படி வடிவமைக்கப்பட்ட ஒரு கார், மூன்று சிலிண்டர்களில் மட்டும் இயங்கினால் எப்படியிருக்குமோ, அப்படித்தான் சபையும் இயங்குகிறது என்பதை நான் சுட்டிக் காண்பித்தேன். இன்றைக்கு நான் பேசப் போகிற காரியம், நேற்றைய செய்தியின் தொடர்ச்சியாக வருகிற ஒன்றுதான். இது சர்ச்சைக்குரிய ஒன்றாக இருப்பதால், இதைச் சொல்ல எனக்குத் தயக்கமாக இருக்கிறது. ஆனாலும் இதைக் குறித்து நான் பேசத்தான் போகிறேன். சபைக்குள் இருக்க வேண்டிய ஒழுங்கான ஆவிக்குரிய அரசாங்கம் மற்றும் அதிகாரம் திரும்பவும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதைக் குறித்துதான் நான் பேசப் போகிறேன்.
புதிய ஏற்பாட்டின் செய்திதான் சுவிசேஷச் செய்தியாக இருக்கிறது. ஆனால் இது குறிப்பாக, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்த சுவிசேஷச் செய்தியாக இருக்கிறது. சமீபகால வரலாற்றிலும், அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் ஜனநாயக அரசியல் சூழ்நிலைகளே காணப்படுவதால், “ராஜா” என்ற வார்த்தை அதற்குரிய சரியான அர்த்தத்தை நிறையவே இழந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் வேதாகமம், ராஜ்யத்தைக் குறித்துப் பேசும்போது, அது அரசாங்கத்தைக் குறித்துப் பேசுகிறது. ஆகையால் தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷம் என்பது, தேவனுடைய அரசாங்கத்தின் சுவிசேஷமாக இருக்கிறது. “சுவிசேஷம்” என்றால், “நற்செய்தி” என்று அர்த்தம். ஆகையால் புதிய ஏற்பாட்டின் செய்தியானது, தேவனுடைய அரசாங்கத்தைக் குறித்த ஒரு நல்ல செய்தியாக இருக்கிறது. நாம் தேவனுடைய நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், நாம் அவருடைய அரசாங்கத்தின் கீழ் வருகின்றோம் என்பதுதான் அந்த நல்ல செய்தி. இது ஒன்றன் பின் ஒன்றாக ஒரு ஒழுங்கின் வரிசையில் நடக்கின்றது. தேவனுடைய சுவிசேஷச் செய்திக்கு நாம் கீழ்ப்படியும்போது, அது நம்மை நிச்சயமாக தேவனுடைய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருகிறது. சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிந்து விட்டேன் என்று சொல்லி விட்டு, தேவனுடைய அரசாங்கத்தின் கீழ் வாழவில்லை என்றால், அது உண்மையில் முரண்பாடான ஒன்றாகத்தான் இருக்கும். வேதவசனத்தில், அரசாங்கத்திற்கும் சமாதானத்திற்கும் இடையே ஒரு நேரடித் தொடர்பு இருக்கிறது.
ஏசாயா 9:7-ல், மெசியாவாகிய இயேசுவைக் குறித்து, ஏசாயா தீர்க்கதரிசி தீர்க்கதரிசனமாகச் சொல்கிறான்:
“அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை.”
இங்கு முதலில், அரசாங்கம் வருகிறது, பிறகுதான் சமாதானம் வருகிறது. இதை நாம் கவனிக்க வேண்டும். அரசாங்கம் இல்லையென்றால், அங்கே சமாதானம் இருக்க முடியாது. சுவிசேஷத்தின் நற்செய்தி என்னவென்றால், தேவனுடைய அரசாங்கத்தின் மூலம், நாம் திரும்பவும் சமாதானத்திற்குள் வருகின்றோம். ஆகையால், தேவனுடைய அரசாங்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நாம் எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தை ஒரு எளிமையான வாக்கியமாக இவ்வாறு தொகுத்துச் சொல்லலாம் என்று நான் நினைக்கிறேன்: தேவன் தம் பிரதிநிதிகளை நியமித்து, அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து நிர்வகிக்கிறார். இப்பிரபஞ்சத்தில் எல்லாவற்றையும் தேவனே களத்தில் இறங்கி நேரடியாக நிர்வாகம் செய்வதில்லை. ஒன்றைச் செய்து முடிக்க வேண்டும் என்று தேவன் நினைக்கும்போது, அவர் உடனே பரலோகத்திலிருக்கும் தம்முடைய சிங்காசனத்திலிருந்து இறங்கி, ஒரு நபரிடம் வந்து, “இதைச் செய்” அல்லது “அதைச் செய்” என்றோ சொல்வதில்லை. தேவன் தம்முடைய அரசாங்கத்தை மிகவும் யதார்த்தமான ஒரு வழிமுறையில் நிர்வகிக்கின்றார். அவர் தமக்குக் கீழ் குறிப்பிட்ட நபர்களை நியமித்து, அவர்களுக்கு தம்முடைய அதிகாரத்தில் ஒரு பங்கைக் கொடுத்து, அவர்கள் மூலமாக அவர் நிர்வாகம் செய்கிறார்.
இப்பொழுது இருக்கிற எல்லா அதிகாரங்களும் தேவனால் நியமிக்கப்பட்டிருக்கின்றன என்று பவுல், ரோமர் 13-ம் அதிகாரத்தில் எழுதியிருக்கிறார். ஆகையால், தேவனால் நியமிக்கப்பட்ட அதிகாரங்களை நாம் எதிர்க்கிறோம் என்றால், நாம் தேவனையே எதிர்த்து நிற்கிறோம் என்று அர்த்தம். வேகக் கட்டுப்பாட்டைக் கண்காணிக்கும் ஒரு போக்குவரத்துப் போலீஸ்காரரையும் தேவன்தான் நியமித்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளுமளவிற்கு நான் எளிமையான சிந்தையுள்ளவன். ஒரு நபர் வேகக்கட்டுப்பாடுகளை மீறி, போக்குவரத்துப் போலீஸ்காரரை அலட்சியம் செய்து அவமதிக்கும்போது, அவர் உண்மையில் தேவனுடைய அதிகாரத்தை அலட்சியம் செய்து அவமதிக்கிறார் என்றுதான் நான் விசுவாசிக்கிறேன். வேதவசனம் அதைத் தெளிவுபடுத்துகிறது என்று நான் விசுவாசிக்கிறேன். உலகப்பிரகாரமான அதிகாரத்தைக் குறித்து மட்டும் நான் பேச விரும்பவில்லை. சபையில் காணப்பட வேண்டிய ஆவிக்குரிய அதிகாரத்தைக் குறித்து நான் பேச விரும்புகிறேன். நியமிக்கப்படுகிற அதிகாரங்களைக் குறித்த இந்தக் கோட்பாடு, சபைக்குள்ளும் பொருந்துகிறது. இதற்கான அடிப்படை, எபேசியர் 1:23-ல் சொல்லப்பட்டிருக்கிறது. தேவன் கிறிஸ்துவை சபையில் எல்லாவற்றிற்கும் மேலான தலையாக நியமித்திருக்கிறார் என்று இவ்வசனம் நமக்குச் சொல்கிறது. கிறிஸ்துதான் சபையின் மீது தேவனால் நியமிக்கப்பட்ட உச்சகட்ட அதிகாரமாயிருக்கிறார்.
இப்பொழுது அதிகாரம் தலையிலிருந்து இறங்கி, சரீரத்திற்குள் கடந்து வருகின்றது. இங்கு இன்னொரு முக்கியமான கோட்பாடு இருக்கிறது: அதிகாரம் என்பது எப்பொழுதுமே கீழ் நோக்கி இறங்கி வருகின்றது. ஒன்றை நான் உங்களுக்குச் சொல்கிறேன். இது உங்களுக்கு இடறலாய் இருக்காது என்று நம்புகிறேன். சபை என்பது ஒருபோதும் ஒரு மக்களாட்சி அமைப்பாக இருந்ததில்லை. இனி ஒருபோதும் அது அப்படி இருக்கப் போவதுமில்லை. அது தேவன் ஆட்சி செய்கிற ஒரு அமைப்பாகும். சபையில் தேவனே கிறிஸ்துவின் மூலம் ஆளுகை செய்கிறார், நிர்வகிக்கிறார். கிறிஸ்துவால் நியமிக்கப்பட்டு, அவருடைய அதிகாரத்தில் ஒரு பங்கை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டவர்களும் நிர்வாகம் செய்கிறார்கள்.
கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை நிர்வகிக்கும்படி, முதல் படியாக, அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள் மற்றும் போதகர்கள் என்ற ஐந்து முக்கியமான ஊழியங்களை கிறிஸ்து கொடுத்திருக்கிறார். இதைக் குறித்து நேற்று நான் விளக்கிச் சொன்னேன். ஆகையால் இந்தப் பொறுப்பின் சங்கிலியில், இந்த ஊழியர்கள், ஒன்று, சரீரமாகிய சபையை இவர்களே நிர்வகிக்க வேண்டும் அல்லது இதைச் செய்யும்படி மற்றவர்களை எழுப்பி, பயிற்றுவிக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். இது தேவனுடைய நிபந்தனையாகும். தேவனிடமிருந்து வருகிற அதிகாரம் கிறிஸ்துவின் மூலமாய், பிறகு அவர் கொடுத்திருக்கிற ஊழியங்கள் மூலமாய், பிறகு அந்த ஊழியங்களால் நியமிக்கப்பட்ட நபர்கள் மூலமாய் எப்பொழுதும் கீழ் நோக்கிச் செல்கிறது.
கிறிஸ்து தம் சரீரமாகிய சபையில் கிரியை செய்யும்படி கொடுத்திருக்கிற ஊழியங்களைக் குறித்த நம்முடைய மனப்பான்மை, தனிப்பட்ட விதத்தில் நமக்கு மிகவும் அதிகமான முக்கியத்துவம் உடைய ஒரு விஷயமாயிருக்கிறது. இது மூன்றாவது கோட்பாட்டை உள்ளே கொண்டு வருகிறது. நியமிக்கப்பட்ட அதிகாரத்திற்கு நாம் எவ்வளவு கனமும், மதிப்பும் கொடுக்கிறோமோ, அதே கனத்தையும், மதிப்பையும்தான் அந்த அதிகாரத்தை நியமித்தவருக்கும் நாம் கொடுக்கின்றோம். இதில் இரு வேறு மனப்பான்மைகள் நமக்குள் இருக்க முடியாது. யோவான் 13:20-ல் இயேசு இவ்வாறு சொல்கிறார்:
20 “நான் அனுப்புகிறவனை ஏற்றுக் கொள்கிறவன் என்னை ஏற்றுக் கொள்கிறான். என்னை ஏற்றுக் கொள்கிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக் கொள்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.”
இங்கே, அதிகாரத்திற்கான கீழ்ப்படிதல், விசுவாசியிடமிருந்து இயேசுவினிடத்திற்கும், பிறகு, இயேசுவிடமிருந்து பிதாவாகிய தேவனிடத்திற்கும் மேல் நோக்கிச் செல்வதை நீங்கள் பார்க்க முடியும். அதிகாரம் கீழ் நோக்கிச் செல்கிறது. ஆனால் அதற்கான நம்முடைய கீழ்ப்படிதல் மேல் நோக்கிச் செல்கிறது. தேவனால் நியமிக்கப்பட்ட தலைவர்களின் அதிகாரத்திற்கு நாம் எவ்வளவாய் கட்டுப்பட்டிருக்கிறோமோ, அவ்வளவாகத்தான் நாம் தேவனிடமும் கட்டுப்பட்டிருக்கிறோம். இதை நான் இன்னொரு முறை சொல்கிறேன். தேவனால் நியமிக்கப்பட்ட தலைவர்களின் அதிகாரத்திற்கு நாம் எவ்வளவாய் கீழ்ப்படிகிறோமோ, அவ்வளவாகத்தான் நாம் தேவனிடமும் கீழ்ப்படிகிறோம்.
இன்று சபையில் காணப்படுகிற அதிகாரப் பிரச்சனை, தீர்க்கப்படாத ஒரு பிரச்சனையாக இருக்கிறது. சபை வரலாற்றில், உண்மையாகவே எங்கே பிரச்சனையும், பிளவும் உண்டானதோ, அந்த இடத்திற்கு இப்பொழுது நான் திரும்பிச் செல்ல விரும்புகிறேன். நான் சபைச் சீர்திருத்தக் காலத்திற்குச் (Reformation) செல்ல விரும்புகிறேன். சபைச் சீர்திருத்தத்தில் (Reformation) நிறைய நல்ல காரியங்கள் செய்யப்பட்டன. பல ஆச்சரியமான சத்தியங்கள் வெளிப்படுத்தப்பட்டன. அது பல நல்ல அருமையான தேவமனுஷர்களை உருவாக்கியிருக்கிறது. ஆனால் சபைச் சீர்திருத்தம், இரண்டு ஒன்றுகொன்று நேரெதிரான தவறுகளைச் செய்து விட்டது என்றுதான் நான் விசுவாசிக்கிறேன். ஒரு விதத்தில் பார்த்தால், சபைச் சீர்திருத்தத்தில்தான் தேவனுடைய ஜனங்கள் இரண்டாகப் பிளவுபட்டனர். பிளவின் இரண்டு பக்கத்திலும் தவறு இருந்தது.
இப்பொழுது நாம் அந்தத் தவறுகளைக் குறித்துப் பார்ப்போம். உண்மையில் நான் சொல்கின்ற காரியம், மிகவும் எளிமையானவை. ஆனாலும் இதில் ஒரு வல்லமையான சத்தியம் இருக்கிறது என்றுதான் நான் விசுவாசிக்கிறேன். முதலில், இந்தப் பிளவில் உண்டான ஒரு பிரிவாகிய கத்தோலிக்கப் பிரிவைப் பார்ப்போம். இதில் அளவுக்கு அதிகமான அதிகார மையங்கள் இருக்கின்றன. சபை ஒரு நிறுவனம் போல நடத்தப்படுகிறது. சபையின் நிறுவனக் கட்டமைப்புக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்தப் பிரிவில் இதுதான் தவறு என்று நான் விசுவாசிக்கிறேன். இதன் விளைவாக, தனி நபர்கள், தேவனோடு இருக்க வேண்டிய தனிப்பட்ட உறவை இழக்கிறார்கள். இவர்கள் ஒரு பொதுவான உறவைச் சார்ந்திருக்கிறார்கள். இதினால் இவர்களுக்கு தனிப்பட்ட விதத்தில் எந்தப் பலனும் உண்டாகாது. அது மட்டுமல்ல, இவர்கள் தனிநபர்களாய், தனிப்பட்ட விதத்தில் தங்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்புணர்வும் இல்லாமலிருக்கிறார்கள். இவர்களாக முன் வந்து, எந்த முயற்சியையும் எடுப்பதில்லை.
இப்பொழுது சபைச் சீர்திருத்தப் பகுதியில் (Reformation) இருக்கும் தவறைப் பார்ப்போம். இதில் அளவுக்கு அதிகமான தனிநபர் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தனி நபர் தனக்குத் தானே ஒரு சட்டமாக இருக்கிறார். நிஜத்தில், தேவனால் நியமிக்கப்பட்ட தலைவர்களிடத்திலும், தன் சக விசுவாசிகளிடத்திலும் உண்மையாகவே எவ்விதப் பொறுப்பும் இல்லாத, ஒரு முரட்டாட்டக்காரராய் இவர் இருக்கிறார். ஒவ்வொரு விசுவாசியும் ஒரே சரீரத்தின் ஒரு அங்கம் என்ற வேதவசனப் படத்தை இப்படிப்பட்ட நபர் ஏற்றுக் கொள்வதில்லை.
இந்த இரு பிரிவினருக்கிடையே பாரம்பரியமாய் இருக்கின்ற சர்ச்சையும் விவாதமும் இதுதான்: ஒரு பிரிவினர், இன்னொரு பிரிவினரின் தவறுகளைத்தான் பார்க்கின்றனர், தங்களுடைய தவறுகளைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். சபையின் சீர்திருத்தத்திலிருந்து ஆரம்பித்த இந்த சர்ச்சையின் வரலாற்றில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். சீர்திருத்தப் பிரிவினர், கத்தோலிக்கர்களின் தவறுகளைச் சுட்டிக் காண்பிக்கின்றனர். கத்தோலிக்கர்கள், சீர்திருத்தப் பிரிவினரின் தவறுகளைச் சுட்டிக் காண்பிக்கின்றனர். உண்மையில் இரண்டு பக்கங்களிலும், சுட்டிக் காண்பிப்பதற்கு நிறைய தவறுகள் இருக்கின்றன. ஆனால் ஒருவர் மற்றவருடைய தவறுகளைச் சுட்டிக் காண்பித்துக் கொண்டே இருப்பதால், எந்தப் பிரயோஜனமும் இருக்கப் போவதில்லை.
என்னுடைய நண்பரும், கத்தோலிக்க குருவுமான பிரான்சிஸ் மெக்னட் என்பவரின் ஆலோசனை எனக்குப் பிடிக்கும். நாம் வழக்கமாய் பின்பற்றுகிற வழிமுறையை அப்படியே மாற்ற வேண்டும் என்று அவர் ஆலோசனை கொடுத்தார். அதாவது, ஒரு பிரிவினர், எதிர்ப் பிரிவினருடைய நல்ல விஷயங்களைச் சுட்டிக் காண்பிக்க வேண்டும். அதே நேரத்தில், தங்களுடைய தவறுகளை அவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். இது நிச்சயம் மிகப் பெரிய வளர்ச்சியை உண்டாக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன்.
இந்த இடத்தில், நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நான் ஒரு கத்தோலிக்கன் கிடையாது. சபைச் சீர்திருத்தப் பிரிவைச் சேர்ந்தவன் (புரோட்டஸ்டண்ட்) என்ற அடையாளமும் எனக்கு வேண்டாம். நான் தொடர்ந்து எதையாவது எதிர்த்து, சீர்திருத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை. நான் பிரிட்டனில் ஏஞ்சலிக்கன் சபையின் ஒரு அங்கமாகத்தான் வளர்க்கப்பட்டேன். ஆனாலும் என்னுடைய 25-வது வயது வரை, நான் தேவனை தனிப்பட்ட விதத்தில் அறிந்து கொள்ளவில்லை. என்னுடைய பின்னணியும், மற்ற தொடர்புகளும் புரோட்டஸ்டண்ட் பிரிவைத்தான் சார்ந்திருந்தது. நான் ஒருபோதும் ரோமக் கத்தோலிக்கனாக மாற வேண்டும் என்று நினைத்ததில்லை. அதே நேரத்தில் நான் ஒரு புரோட்டஸ்டண்ட் என்று அழைக்கப்படுவதிலும் எனக்கு மகிழ்ச்சியில்லை. இந்த இரண்டு பிரிவினரும் மனந்திரும்ப வேண்டும் என்றுதான் நான் விசுவாசிக்கிறேன். எதிர்ப் பிரிவினரின் தவறுகளைச் சுட்டிக் காண்பிப்பதை இவர்கள் நிறுத்த வேண்டும். புரோட்டஸ்டண்ட் பின்னணியைச் சார்ந்தவர்களாகிய நாம் ஒன்றைச் செய்ய வேண்டும். வேதவசனத்திற்கு முரண்பாடான தனி நபர் முக்கியத்துவத்தை நாம் மறுக்க வேண்டும். நாம் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கு நம்மையே அர்ப்பணிக்க வேண்டும். சபைக்குள் இருக்கும் ஒழுங்கான, வேதவசன அடிப்படையில் அமைந்த அதிகாரத்தின் கீழ் நாம் வர வேண்டும்.
எபிரெயர் 13:17-ம் வசனத்தை நான் வாசிக்கிறேன். இந்த வசனத்தின் அடிப்படையில், நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட நிலையை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவ்வசனம் இவ்வாறு சொல்கிறது:
17 உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்.
ஒவ்வொரு விசுவாசியும் தன்னுடைய தலைவர்கள் யார், தான் யாருக்குக் கீழ்ப்படியும்படி எதிர்பார்க்கப்படுகிறார் என்று புதிய ஏற்பாட்டில் எழுதப்பட்டிருக்கிறது. இதை நாம் கவனிக்க வேண்டும். இப்பொழுது நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கிறேன். உங்களுடைய தலைவர்கள் யார் என்பதை கண்டறிந்து விட்டீர்களா? அவர்களுக்கு உங்களைத் தெரியுமா? நீங்கள் அவர்களை அறிந்திருக்கிறீர்களா? ஆம் என்றால், நீங்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிகிறீர்களா? நீங்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டு, உடன்பட்டு நடக்கிறீர்களா? இந்தக் கேள்விகளுக்கு உங்களுடைய பதில் “இல்லை” என்றால், நான் உங்களுக்கு ஒன்றை மென்மையாக, அதே நேரத்தில் உறுதியாகச் சொல்கிறேன். நீங்கள் சபையின் அதிகாரத்திற்கு விரோதமாக முரட்டாட்டம் செய்கிறீர்கள். சபைக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற அதிகாரத்தின் நோக்கத்தை நீங்கள் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை சபையின் புதுப்பித்தலுக்குத் தேவையான நான்காவது முக்கிய அம்சமான ஒற்றுமையின் புதுப்பித்தலைக் குறித்து பேசப் போகிறேன். அதிகாரத்தின் புதுப்பித்தல் ஏன் ஒற்றுமையின் புதுப்பித்தலுக்கான அத்தியாவசியமான ஒரு படிக்கல்லாக இருக்கிறது என்பதையும் விளக்குவேன்.
குறியீடு: RP-R012-104-TAM









