அன்பின் கனி

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: செப்டம்பர் 2026
Read Time: 10
கிறிஸ்தவ வாழ்க்கையில் அன்பின் அடிப்படைப் பங்கை அறிந்துகொள்ளுங்கள். 'ஆவியின் கனி' தொடரின் இரண்டாம் பாகமான டெரெக் பிரின்ஸின் இந்தச் செய்தி, பரிசுத்த ஆவியின் முதல் கனியான அன்பு, கர்த்தருடைய கட்டளையாகவும், சீஷத்துவத்தின் அடையாளமாகவும், மற்றெல்லா கட்டளைகளையும் விட மேலானதாகவும் இருப்பதை விளக்குகிறது. இந்த ஆழமான போதனையின் மூலம் நற்செய்தியின் சத்தியத்தில் வளருங்கள்.
Transcript
மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. முழு வேதாகமத்திலும் மிக அழகான தலைப்புகளில் ஒன்றான “பரிசுத்த ஆவியின் கனி” குறித்து உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், இது கலாத்தியர் 5:22-23 இல் பட்டியலிடப்பட்டுள்ளது.
22 ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம். 23 சாந்தம், இச்சையடக்கம்; …..
நேற்றைய அறிமுகப் பேச்சில், வரங்களுக்கும் கனிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை விளக்கினேன். முக்கியமாக, ஒரே ஒரு சுருக்கமான பரிவர்த்தனையில் வரங்கள் வழங்கப்பட்டு பெறப்படுகின்றன என்று நான் சொன்னேன்; அவற்றை சம்பாதிக்க முடியாது அல்லது வேலை செய்து பெறமுடியாது. மறுபுறம், கனியானது படிப்படியான வளர்ச்சியின் மூலம் வருகிறது, மேலும், அது பயிரிடப்பட வேண்டும். அதற்கு கடின உழைப்பு தேவை. முக்கியமாக, வரங்கள் திறனைக் குறிக்கின்றன; கனி தன்மையைக் குறிக்கிறது.
இன்று, எனது பேச்சில், கனியின் முதல் வடிவமான அன்பைக் கையாளப் போகிறேன். முதலில், கிறிஸ்தவ நம்பிக்கையில் அன்பு முதன்மையானது என்று நான் சொல்ல வேண்டும். இது வேறு எதனுடனும் பகிர்ந்து கொள்ளாத ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
யோவான் 13: 34-35 இல், இயேசு என்ன சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள்:
34 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். 35 நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.
இயேசுவின் அந்த வார்த்தைகளில், நாம் பார்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. முதலில், அன்பு ஒரு கட்டளையாகும், அது ஒரு விருப்பத்தேர்வு அல்ல. நாம் ஒருவரையொருவர் நேசிக்காவிட்டால், நாம் கர்த்தருக்கு கீழ்ப்படியவில்லை.
இரண்டாவதாக, இது புதிய கட்டளையாகும். ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், இது முந்தைய அனைத்து கட்டளைகளையும் மாற்றி, அதை சுருக்கி உள்ளடக்கியது. மோசே இஸ்ரவேலுக்கு பத்துக் கட்டளைகளைக் கொடுத்தார் என்பதும், யூத மதத்தில் அவர்களுக்கு 613 கட்டளைகள் இருப்பது சுவாரஸ்யமானது. ஆனால் கர்த்தராகிய இயேசு ஒரே ஒரு புதிய கட்டளையைக் கொடுக்கிறார்: நாம் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும். மேலும், இதுவே சீஷத்துவத்தின் உண்மையான சோதனை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
பிரான்சிஸ் ஷேஃபர், “தேவாலயத்தை நியாயந்தீர்க்கும் உரிமையை கர்த்தர் உலகிற்கு கொடுத்திருக்கிறார்” என்ற இந்த அறிக்கையில் சுருக்கமாக கூறியுள்ளார். இவ்வுலக மக்கள், கிறிஸ்தவர்களாக நாம் ஒருவரையொருவர் நேசிப்பதில்லை என்று கருதினால், இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில், நாம் அவருடைய சீஷர்கள் அல்ல, என்று சொல்ல அவர்களுக்கு முழு உரிமை உண்டு.
ரோமர் 13: 8 -10 இல், அன்பைப் பற்றி பவுல் என்ன சொல்கிறார் என்பதையும் பார்க்கலாம்.
8 ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான். 9 எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது. 10 அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.
கடைசி பொதுவான அறிக்கையைக் கவனியுங்கள். “அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.”
கலாத்தியர்5: 6 இல், இரண்டு கூற்றுகள் இருக்கிறது:
6 கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்.
கிறிஸ்தவ வாழ்க்கையில் உண்மையில் முக்கியமான ஒரே விஷயமாக, பவுல் கூறுவது என்னவென்றால் விசுவாசம் தன்னை அன்பின் மூலமாக வெளிப்படுத்துகிறது. வெளிப்புற ஒழுங்குகளும், சடங்குகளும் இரண்டாம் முக்கியத்துவம் வாய்ந்தவை. நமது முழு விசுவாசத்தின் மையம் அன்பின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.
பின்னர், கலாத்தியர் 5:14 இல், பவுல் தொடர்ந்து சொல்கிறார்:
14 உன்னிடத்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற இந்த ஒரே வார்த்தையிலே [என்ன வார்த்தை?] நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.
அந்த வார்த்தை, நிச்சயமாக, அன்பு தான்.
குறிப்பாக, கிறிஸ்தவ ஊழியத்தில் இருப்பவர்களுக்கு, ஆசிரியர்களாகவோ அல்லது போதகர்களாகவோ அல்லது அது எதுவாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவ வாழ்வின் மற்ற எல்லா அம்சங்களிலும் அன்பின் இந்த முக்கியத்துவத்திற்கு நாம் கவனம் செலுத்துவது அவசியம்; ஏனென்றால் அது நமது ஊழியத்தில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.
1 தீமோத்தேயு 1: 5 & 6 இல், பவுல் இதை சொல்கிறார்:
5 கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே. 6 இவைகளைச் சிலர் நோக்காமல் வீண் பேச்சுக்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள்.
பவுல் என்ன சொல்லுகிறார்? அனைத்து கிறிஸ்தவ ஊழியத்தின் ஒரே முறையான, இறுதியான இலக்கு அன்பை உருவாக்குவதாகும். அன்பை உற்பத்தி செய்யாத எந்த ஊழியமும் தேவனின் நோக்கத்தை விட்டு விலகி, பயனற்ற விவாதத்திற்கும், வெற்று வார்த்தைகளுக்கும் மற்றும் நேரத்தை வீணடிப்பதிலும் முடிவடைகிறது. அந்த தரத்தின்படி, நம்முடைய சொந்த ஊழியத்தைச் சோதிக்க வேண்டும். ஒருவரையொருவர் நேசிக்கும் மனிதர்களை உருவாக்குகிறோமா?
சில இடங்களில், மக்களை தேவாலயத்திற்கு வரவைப்பதும், பீடங்களில் அமர்ந்து பாடல்களைப் பாடவைப்பதும், தசமபாகம் கொடுக்க வைப்பதும் கடினமல்ல; ஆனால் அந்த மக்கள் ஒருவரையொருவர் நேசிக்கவில்லை என்றால், அந்த மத முயற்சிகள் அனைத்தும் உண்மையில் வீணாகிவிடும். இந்த தரநிலையின்படி எனது சொந்த ஊழியத்தை நான் அடிக்கடி ஆய்வு செய்திருக்கிறேன், சில சமயங்களில் நான் உற்பத்தி செய்ய வேண்டியதை நான் உற்பத்தி செய்யவில்லை என்பதை நானே ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் ஒருவரிலொருவர் உண்மையில் அன்பாக இருக்கும் மனிதர்களை உருவாக்குவதே இன்று எனது உறுதியாகும்.
சரி, புதிய ஏற்பாட்டில் நாம் புரிந்துகொண்டபடி அன்பின் தன்மை என்ன? புதிய ஏற்பாடு காலத்திலுள்ள புதிய ஏற்பாட்டு கிரேக்க மொழியில், நான்கு முக்கிய வார்த்தைகள் உள்ளன, இவை அனைத்தும் ஒருவித அன்பைக் குறிக்கின்றன என்பதை சுருக்கமாகச் சொல்கிறேன். முதலாவது, ஈரோஸ், இது உங்களுக்குத் தெரிந்தபடியே, பாலியல் அன்பு அல்லது பாலியல் ஆசையைக் குறிக்கிறது. இரண்டாவது வார்த்தை, ஸ்டோர்ஜ், இது சிறந்த முறையில் மொழிபெயர்க்கப்பட்டால், “பாசம்,” குறிப்பாக குடும்ப பாசம் என்று சொல்லலாம். மூன்றாவது, பிலியா எனப்படும், இது நட்பு ஆகும். நான்காவது, அகாபே, இது தூய்மையான மற்றும் நீடித்த அன்பைக் குறிக்கிறது, இது முதன்மையாக தேவன் தாமே வெளிப்படுத்தியது; புதிய ஏற்பாட்டில் தேவனின் அன்பைத் தவிர வேறு அன்பைக் குறிக்க சில இடங்களில் பயன்படுத்தினாலும், பொதுவாக, அகாபே என்பது தேவனிடமிருந்து தோன்றிய அன்பைக் குறிக்கிறது.
சரி, அன்பு எப்படி வருகிறது? எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது? அனைத்து கனியும் பயிரிடப்பட வேண்டும் என்று நான் சொன்னேன். நாம் எப்படி அன்பை வளர்ப்பது? புதிய ஏற்பாடு கையாளும் அன்பின் வகையான – அகாபே அன்பு – அந்த அன்பை வளர்ப்பது பற்றிய நான்கு எளிய கொள்கைகளை நான் உங்களுக்கு பரிந்துரைக்க விரும்புகிறேன்.
முதலாவதாக, இந்த வகையான அன்பு தேவனுடைய வார்த்தையின் விதையிலிருந்து பிறந்து, ஒரு விசுவாசியின் இதயத்தில் பெறப்படுகிறது. 1 பேதுரு 1:22-23 இல் உள்ள பேதுருவின் வார்த்தைகளால் இது வெளிப்படுகிறது:
22 ஆகையால், நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்; 23 அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.
பேதுரு சொல்வதன் மையப் பகுதியைக் கவனியுங்கள்: “சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள், தேவவசனமாகிய வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது தேவனுடைய வார்த்தையின் வித்திலிருந்து மீண்டும் பிறக்கிறது, இது இந்த வகையான அன்புடன் நாம் நேசிப்பதை சாத்தியமாக்குகிறது. ஆரம்பத்தில், இது தேவனுடைய வார்த்தையின் விதையின் விளைபொருளாகும்.
மீண்டும், 1 யோவான் 4:7 & 8 இல், யோவான் இதை சொல்கிறார்:
7 பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். 8 அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.
தேவனிடமிருந்து பிறப்பதன் மூலம் மட்டுமே வரக்கூடிய ஒரு வகையான அன்பு இருக்கிறதை நீங்கள் காணலாம். தேவனிடமிருந்து பிறந்த ஒவ்வொருவரும் அத்தகைய அன்பை வெளிப்படுத்த வேண்டும், அத்தகைய அன்பை வெளிப்படுத்தாத ஒரு நபர் தேவனிடமிருந்து பிறந்ததாகக் கூறுவதற்கு உண்மையில் எந்த வேத அடிப்படையும் இல்லை.
இரண்டாவது கோட்பாடு, அந்த அன்பு பரிசுத்த ஆவியால் ஊற்றப்படுகிறது. ரோமர் 5:5 இதை கூறுகிறது: “நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால்…” மறுபடியும் பிறந்த விசுவாசியின் இருதயம் தேவனின் அன்பிற்கு பாத்திரமாகிறது. மறுபடியும் பிறக்காத ஒருவரிடம் தேவனின் அன்பை வைத்துகொள்வதற்கு ஏற்ற பாத்திரம் இல்லை. ஆனால் நாம் மறுபடியும் பிறக்கும்போது, நம் இதயங்கள் தேவனின் அன்பிற்கான பாத்திரங்களாக மாறும், பின்னர் பரிசுத்த ஆவியானவர் தேவனின் அன்பை நம் இதயங்களில் ஊற்ற முடியும். எனவே, அதுதான் பரிசுத்த ஆவியின் பங்களிப்பாகும்.
மூன்றாவதாக, இந்த வகையான அன்பை வளர்ப்பதற்கு நமது விருப்பத்தின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. உணர்ச்சிகளையோ அல்லது உடல் ரீதியாகவோ அன்பு கூர இன்று நாம் மிகவும் பழகிவிட்டோம், சிலர், உணர்ச்சிகளை மையப்படுத்தாத வேறு வகையான அன்பு இருப்பதை அடையாளம் காண்பதில்லை; அது சரீர பிரகாரமானதை மையமாக கொண்டிருக்கவில்லை; ஆனால் அது விருப்பத்தை மையமாக கொண்டது. அகாபே அன்பு விருப்பத்தை மையமாக கொண்டது. இது முதன்மையாக நமது விருப்பத்தின் தீர்மானத்தை பொறுத்து வருகிறது. இது நமது உணர்ச்சிகளையோ அல்லது உடல் உணர்வுகளையோ சார்ந்தது அல்ல.
நான்காவதாக, இந்த வகையான அன்பு நம் உயிரைக் கொடுப்பதன் மூலம் செயலில் வெளிப்படுத்தப்படுகிறது. யோவான் 15: 12 &13 இல் இயேசு கூறுகிறார்:
12 நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. 13 ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.
இது ஒரு கட்டளை என்று இயேசு கூறுகிறார். நீங்கள் ஒருவரையொருவர் நேசிப்பது விருப்பத்தேர்வு அல்ல என்பதை நான் சுட்டிக்காட்டினேன். எப்படி? “நான் உங்களில் அன்பாயிருந்தது போல” நம்மீது இயேசுவின் அன்பு எவ்வாறு வெளிப்பட்டது? நமக்காக அவருடைய உயிரைக் கொடுத்ததன் மூலமாக. நாம் ஒருவரிலொருவர் அன்பாயிருந்தால், ஒருவருக்காக ஒருவர் நம் உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளோம். இது மீண்டும் 1 யோவான் 3:16 இல் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது, “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.” நீங்கள் காணலாம், அது அகாபே அன்பின் சாராம்சம் ஆகும். அது நம் உயிரைக் கொடுக்கிறது. உடல் மரணமாக, இரத்த சாட்சியாக இருக்க வேண்டிய அவசியமில்லை, மாறாக, நம்மையும், நம்மிடம் இருப்பதையும், நமது திறமைகளையும், தாலந்துகளையும் கிறிஸ்துவுக்குள் இருக்கும் சகோதரர்களுக்குக் கிடைக்க செய்வதன் மூலம் வெளிப்படுத்த வேண்டும். அதுதான் நம் சகோதரர்களுக்காக நம் உயிரைக் கொடுக்கும் – அகாபே அன்பின் வெளிப்பாடாகும்.
சரி, அன்பை எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றிய அந்த நான்கு கொள்கைகளை மீண்டும் சொல்கிறேன். முதலாவதாக, இது தேவனின் வார்த்தையிலிருந்து மறுபடியும் பிறந்ததன் விளைவாகும். மறுபடியும் பிறக்காத ஒருவரால் அத்தகைய அன்பை உருவாக்க முடியாது.
இரண்டாவதாக, மறுபடியும் பிறந்த இதயம், பரிசுத்த ஆவியானவர் தேவனின் அன்பை நிரப்புவதற்கான பாத்திரமாகிறது.
மூன்றாவதாக, இந்த வகையான அன்பு, உணர்ச்சிகளிலோ அல்லது சரீர பிரகாரமாகவோ அல்லாமல் விருப்பத்தை மையமாகக் கொண்டுள்ளது.
நான்காவதாக, இந்த வகையான அன்பை இயேசுவே நமக்கு வெளிப்படுத்திய விதத்தில், வெளிப்படுத்தப்படுகிறது. இது நம் உயிரைக் கொடுப்பதன் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. நம் சக விசுவாசிகளுக்காக நம் உயிரைக் கொடுக்கத் தயாராக இல்லை என்றால், இப்படிப்பட்ட அன்பு நம்மிடம் இருப்பதாகக் கூற நமக்கு உரிமையில்லை.
சரி, இன்றைக்கு நம் நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். ஆவியின் கனியின் இரண்டாவது வடிவமான “சந்தோஷத்தின் கனி” பற்றி நான் அப்போது பேசுவேன்.
குறியீடு: RP-R009-102-TAM









