ஜீவனை கொடுப்பவர் மற்றும் ஜீவனை எடுப்பவன்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 9
மரண பயமா? மரணத்தின் மீதான நற்செய்தியின் நிரூபிக்கப்பட்ட வெற்றியை அறிந்துகொள்ளுங்கள். அதன் ஆவிக்குரிய, சரீர மற்றும் நித்திய அம்சங்களை இது விளக்குகிறது. 'மரணத்தின் மேல் வெற்றி' பகுதி 2, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் உள்ள தீர்வை வெளிப்படுத்துகிறது.
Transcript
இன்று திரும்பவும் உங்களோடு இருப்பதில், எனக்கு சந்தோஷம். மனுஷர்கள் எல்லோரும் எதிர்கொள்கின்ற ஒரு பொதுவான பிரச்சனைக்கான தீர்வைக் குறித்து நாம் பேச ஆரம்பித்தோம். இன்று நாம் தொடருவோம். இந்த மரணத்தின் பிரச்சனையைத்தான் இன்றைக்கு பலரும் எதிர்கொள்ளத் தவறுகிறார்கள். அவர்கள் அதை உணருவதற்குள், மரணம் வந்து நின்று விடுகிறது.
நேற்றைய செய்தியின் ஆரம்பத்தில் நான் சொன்னதை, திரும்பவும் இங்கே சொல்லி உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். மரணம் என்ற வார்த்தையே, உங்களை வேறொரு நிகழ்ச்சிக்கு மாற்ற வைக்கிறது என்றால், நீங்கள்தான் இந்த நிகழ்ச்சியை நிச்சயமாய் கேட்க வேண்டும், நான் சொல்கிற காரியங்களுக்கு கவனமாய் செவிகொடுக்க வேண்டும்.
நேற்றைய செய்தியில், நான் ஒரு காரியத்தைச் சுட்டிக் காண்பித்தேன். மற்ற மதங்கள் மற்றும் தத்துவங்களிலிருந்து கிறிஸ்தவ விசுவாசத்தை தனியே பிரிக்கின்ற ஒரு காரியம், கிறிஸ்தவ மார்க்கத்தில், மரணத்திற்கு ஒரு நிச்சயமான, நிரூபிக்கப்பட்ட தீர்வு உண்டு என்பதுதான். மருத்துவ வார்த்தைகளில் சொன்னால், கிறிஸ்தவம், மரணம் என்ற வியாதிக்கான காரணத்தைச் சொல்கிறது. அது மரணம் என்ற வியாதியின் தாக்கத்தைக் குறித்தும் பேசுகிறது. அது மரணத்திற்கான மருந்தையும் கொடுக்கிறது. மரணத்தின் கொடுக்கு, பாவம் என்று அதற்கான காரணத்தை அது கண்டறிந்து சொல்கிறது. இது வியாதியைக் குறித்த சோதனை அறிக்கையாகும். பாவம், மரணத்தின் மூலமாக வந்தது. அடுத்ததாக, மரணமானது மூன்று தொடர்ச்சியான கட்டங்களில் நிகழ்கின்றது என இந்த வியாதியைக் குறித்த பாதிப்பின் அறிக்கை சொல்கிறது. முதலில், ஆவிக்குரிய மரணம். இது தேவனிடமிருந்து துண்டிக்கப்பட்ட நிலையாகும். இரண்டாவது, சரீர மரணம். ஆத்துமா, சரீரத்திலிருந்து பிரிக்கப்படுகிறது. மூன்றாவது, இரண்டாம் மரணமாகும். இது கடைசி மரணமாகும். இது நித்திய மரணமாகும். இதில் தேவனுடைய பிரசன்னத்திலிருந்து நித்திய நித்தியமாக பிரிக்கப்படுகிற நிலை உண்டாகிறது. இதை மாற்றவோ, திருப்பவோ முடியாது. இதில் எந்த நினைவும் இல்லாமல், உணர்வற்றுப் போகிற நிலையும் உண்டாகாது.
மரணம் என்ற இந்த வியாதிக்கான காரணத்தையும், இது உண்டாக்கப் போகிற மோசமான விளைவுகளையும் நாம் புரிந்து ஏற்றுக் கொண்ட பிறகுதான், இதற்கான மருந்தாகிய தீர்வை நாம் பயன்படுத்த முடியும். அந்தத் தீர்வைக் குறித்துதான் நான் இப்பொழுது பேசப் போகிறேன்.
வாழ்க்கையிலும், மரணத்திலும் கிரியை செய்கிற ஆவிக்குரிய உலகம் மற்றும் ஆவிக்குரிய சக்திகளைக் குறித்து, நான் முழுமையாய் விளக்கிக் காண்பிக்க விரும்புகிறேன். ஆவிக்குரிய உலகம் ஒன்று இருக்கிறது என்பதை பலர் புரிந்து கொள்வதே இல்லை. இந்த உலகத்தில் எலலாமே இங்கேயே ஆரம்பித்து, இங்கேயே முடிந்து விடுகின்றது என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதற்கு அப்பாற்ப்பட்டு ஒன்றுமில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் வேறு பலர், ஆவிக்குரிய உலகம் இருப்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் அதை புரிந்து கொள்வதற்குக் கடினமான, தெளிவற்ற, ஒரு குறிப்பிட்ட உருவமற்ற ஒரு விஷயமாக நினைக்கிறார்கள். ஆனால் வேதாகமச் சத்தியம் என்னவென்றால், நாம் வெளியே பார்க்கின்ற இந்த உலகம் எவ்வளவு உண்மையானதோ, நிஜமானதோ, அவ்வளவு உண்மையாய், நிஜமானதாய் ஆவிக்குரிய உலகம் இருக்கிறது. நம் கண்களுக்குத் தெரிகின்ற இந்த உலகத்தில் நாம் பார்ப்பதைப் போலவே, ஆவிக்குரிய உலகத்திலும் எண்ணிக்கையிலடங்கா ஆட்களும், பொருட்களும் இன்னும் பல்வேறு காரியங்களும் இருக்கின்றனர். இவ்விரண்டு உலகங்களுக்கும் இடையே உள்ள மிக முக்கியமான வித்தியாசம் இதுதான்: நாம் வெளியே பார்க்கின்ற உலகம், தற்காலிகமானது, நிலையற்றது. ஆனால் ஆவிக்குரிய உலகமோ, நிலையானது, நித்தியமானது, மாறாதது. பவுல் இதை 2 கொரிந்தியர் 4:17-18-ல் சொல்கிறார்:
17 மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கி யிருக்கிற நமக்கு............ 18 ஏனெனில் காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள். காணப்படாதவை களோ நித்தியமானவைகள்.
ஆக, காணப்படாத உலகம்தான் நித்தியமானது. இந்த காணப்படாத உலகத்தைக் குறித்து வேதாகமம் நமக்கு என்ன காண்பிக்கிறது என்பதை இப்பொழுது நாம் பார்ப்போம். ஜீவன் மற்றும் மரணம் எங்கேயிருந்து ஆரம்பிக்கிறது என்று அதன் சுவடுகளை நாம் பின்பற்றிச் செல்வோம் என்றால், நாம் இரண்டு நபர்களை நேருக்கு நேராய் சந்திப்போம். அந்த இரண்டு நபர்களில், ஒருவருக்கு ஜீவனைக் கொடுக்கிறவர் என்றும், இன்னொருவனுக்கு, ஜீவனைப் பறிக்கிறவன் என்றும் நான் பெயரிட்டிருக்கிறேன். இது மிகவும் தெளிவாக, யோவான் 10:10-ம் வசனத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இயேசு அங்கே சொல்கிறார்:
10 “திருடன் திருடவும், கொல்லவும், அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.”
ஆக, இங்கே நாம் இரண்டு நபர்களைப் பார்க்கிறோம். ஒருவர், இயேசு. இன்னொருவன் திருடன். இரண்டு பேருமே தனித்தனி நபர்கள். சாத்தான்தான் அந்தத் திருடன். சாத்தான் மெய்யாகவே இருக்கிறான் என்ற உண்மையைப் புரிந்து கொள்ள, இன்றைக்கு அநேகர் தவறி விடுகிறார்கள். ஒரு புத்தகத்தில் நான் வாசித்த ஒரு குறிப்பிட்ட வாக்கியம் என்னைப் பற்றிப் பிடித்தது. “தீமை என்பது ஏதோ ஒன்று அல்ல. அது ஒரு நபர்,” என்ற வாக்கியம்தான் அது. இதை நாம் புரிந்து கொள்ளும்போது, நம் கண்கள் திறக்கப்பட ஆரம்பிக்கின்றன. ஆக, பிசாசு அல்லது சாத்தான்தான் இந்தத் திருடன். இயேசு அவனைக் குறித்து நம்மிடம் என்ன சொல்கிறார் என்பதை நாம் கவனிப்போம். யோவான் 8:44-ம் வசனத்தை வாசியுங்கள். நம்முடைய எதிரியாகிய பிசாசின் சுபாவத்தைக் குறித்துப் பேசும்போது, இயேசு இங்கே எந்த ஒளிவுமறைவுமில்லாமல், நேரடியாக, வெளிப்படையாக சத்தியத்தைப் பேசுகிறார். அவர் தம்முடைய நாட்களில் வாழ்ந்த மதவாதிகளிடம் இவ்வாறு சொல்கிறார்:
44 “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள். உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள். அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான். சத்தியம் அவனிடத்தில் இல்லாதபடியால், அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை. அவன் பொய்யனும், பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால், அவன் பொய் பேசும்போது, தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
ஆக, சாத்தான் ஒரு பொய்யன்; அவன் ஒரு மனுஷ கொலைபாதகன் என்று இயேசு இங்கே நமக்கு சொல்கிறார். இதை யோவான் 10:10-ம் வசனத்துடன் சேர்த்துப் பாருங்கள். சாத்தான் ஒரு திருடன், பொய்யன், மனுஷ கொலைபாதகன் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். அவனைக் குறித்து நல்லவிதமாக, வேதாகமத்தில் ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை.
நன்கு அறியப்பட்ட ஒரு சுவிசேஷகர், தேவனுக்கும் பிசாசுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை ஒரு எளிமையான வாக்கியத்தின் மூலம் ஒருமுறை இவ்வாறு தொகுத்துச் சொன்னார்: “தேவனிடத்தில் ஒரு தீமையும் இல்லை. பிசாசினிடத்தில் ஒரு நன்மையும் இல்லை.” நாம் இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதைப் பார்க்க முடியாதபடி, வேறு ஏதோ ஒரு தத்துவத்தினாலோ அல்லது உணர்வுப்பூர்வமான கருத்துக்களினாலோ அல்லது மனிதக் கோட்பாடுகளினாலோ நாம் குருடாக்கப்பட்டு விடக்கூடாது. நாம் இந்த இரண்டு நபர்களைக் குறித்து இங்கு பேசுகிறோம்: ஒருவர், ஜீவனைக் கொடுக்கிற இயேசு; இன்னொருவன், ஜீவனைப் பறிக்கிற பிசாசு.
நாம் திரும்பவும் யோவான் 10:10-ம் வசனத்திற்குச் செல்வோம். இயேசு இங்கே இவ்வாறு சொல்கிறார்:
10 “திருடன் திருடவும், கொல்லவும், அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்................
இதை நாம் எப்பொழுதும் நம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் நன்மையைச் செய்யும்படி பிசாசு ஒருபோதும் வருவதில்லை. அவனுக்கு மூன்று நோக்கங்கள் உண்டு. அவை ஒவ்வொன்றும் முந்தியதைக் காட்டிலும் மகா மோசமானது. அவனுடைய முதல் நோக்கம், திருடுவதாகும். அவனுடைய இரண்டாவது நோக்கம், கொல்லுவதாகும். அவனுடைய மூன்றாவது நோக்கம், அழிப்பதாகும். இந்த மூன்று வார்த்தைகளின் அர்த்தத்தை நாம் ஒரு கணம் இங்கே பார்ப்போம்.
திருடும் நோக்கத்தில், சாத்தான் நம்முடைய வாழ்க்கைக்குள் நுழைகின்றான். தேவனிடமிருந்து நமக்கு உரிமையாய் கிடைத்திருக்கிற ஒவ்வொன்றையும், நாம் அனுபவிக்கும்படி தேவன் நமக்குத் தந்திருக்கிற ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் நம்மிடமிருந்து திருடும்படி சாத்தான் வருகின்றான். அந்த ஆசீர்வாதங்களில் சிலவற்றைப் பட்டியலிடுவோம். கள்ளங்கபடமற்ற நல்ல மனச்சாட்சி எனும் ஆசீர்வாதம்; இருதயத்திலும், மனதிலும் சமாதானம் எனும் ஆசீர்வாதம், குடும்ப உறவுகளுக்கிடையே இணக்கம், சமாதானம் எனும் ஆசீர்வாதம்; நல்ல ஆரோக்கியம், செழிப்பு, நம் தேவைகள் சந்திக்கப்படுதல் என்ற ஆசீர்வாதங்கள். இந்த ஆசீர்வாதங்களைத் திருடும் நோக்கத்தில் பிசாசு வருகின்றான். அடுத்ததாக, அவன் நம்மைக் கொல்லும்படி வருகின்றான் என்று இயேசு சொல்கிறார்.
கொல்லுவதென்றால், ஒரு நபருடைய உயிரைப் பறிப்பதாகும். பிசாசு, ஒரு மனுஷ கொலைபாதகன் என்று இயேசு சொன்னார். இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவன் நம் சரீரத்தின் உயிரைப் பறிக்கும்படி வருகின்றான். அவன் அதை பாவத்தின் மூலமாக, வியாதிகளின் மூலமாக, அவன் நமக்கு விரோதமாகக் கொண்டு வருகிற எல்லா வகையான அழுத்தங்களின் மூலமாகச் செய்கிறான். இயேசு சொன்ன இந்த வாக்கியத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்றால், ஒரு அதிர்ச்சியான, பயங்கரமான உண்மையை நாம் நேருக்கு நேராய் எதிர்கொள்வோம். மனித வரலாற்றில் மரித்துப்போன ஒவ்வொருவரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மைதான் அது. ஒவ்வொருவருமே கொல்லப்பட்டிருக்கிறார்கள். பிசாசுதான் அந்தக் கொலைபாதகன். மரித்துப்போன ஒவ்வொருவருடைய மரணத்தின் பின்னணியிலும் அவன்தான் காரணகர்த்தாவாக இருக்கிறான். ஆனால் இதோடு முடியவில்லை.
பிசாசின் மூன்றாவது நோக்கம், அழிப்பதாகும். “ஒருவரைக் கொன்ற பிறகு, அவனால் வேறு என்ன செய்ய முடியும்?” என்று நீங்கள் கேட்கலாம். கொல்வதென்றால், சரீரப்பிரகாரமாக உயிரைப் பறிப்பதாகும். ஆனால் அழித்தல் என்பது நித்தியத்திற்கு அழிக்கிற ஒரு செயலாயிருக்கிறது.
அவன் ஒரு மனுஷ கொலைபாதகன், ஒரு திருடன், ஒரு பொய்யன். அவன் ஒரு திருடன், ஒரு பொய்யன் என்று சொல்லும்போது, அது நமக்கு ஒன்றைக் குறித்து எச்சரிக்கிறது: அவன் நம்மை வஞ்சிக்கிறான் என்பதுதான் அது. அவன் நம்மிடம் வரும்போது, அவன் யார் என்பதை அவன் நம்மிடம் சொல்வதில்லை. அவன் வந்ததற்கான நோக்கத்தையும் நம்மிடம் அவன் தெரிவிப்பதில்லை. அவன் நம்மை வஞ்சிக்கிறான், ஏமாற்றுகிறான். ஒரு திருடன் உங்களுடைய வீட்டிற்கு வந்து, உங்களுடைய வீட்டின் கதவைத் தட்டி, நீங்கள் கதவைத் திறக்கும்போது, “நான் ஒரு திருடன். உங்களுடைய உடைமைகளை திருடும்படி நான் வந்திருக்கிறேன்,” என்று உங்களிடம் சொல்ல மாட்டான். அவன் இருட்டான நேரத்தில் வருவான். நீங்கள் அவனைப் பார்க்க முடியாத, நீங்கள் அவனை எதிர்பார்க்காத ஒரு நேரத்தில் அவன் வருவான். அவன் ஒரு வித்தியாசமான திருடனாகக் கூட இருப்பான். இப்படிப்பட்டவனை நாம் “மோசடிக்காரன்” என்று அழைக்கிறோம். இவன் வருவான், தன்னுடைய நோக்கத்தை வெளிப்படையாகச் சொல்ல மாட்டான், உண்மையை மறைப்பான். விலை உயர்ந்த ஒன்றை உங்களுக்குக் கொடுப்பதுபோல பொய் சொல்வான். ஆனால் எதையும் உங்களுக்குக் கொடுப்பது, அவனுடைய நோக்கமல்ல. உங்களிடமிருப்பதை பறிப்பதே அவனுடைய வருகையின் ஒரே நோக்கமாகும்.
ஆனால் பாருங்கள், தேவன் வெளிச்சத்தில்தான் கிரியை செய்கிறார். தேவன் வெளிச்சமாயிருக்கிறார். நாம் தேவனோடு ஐக்கியம் கொண்டிருக்கும்போது, நாம் யாருடன் ஐக்கியம் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம். தேவன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதும் நமக்குத் தெரியும். நாம் தட்டுத் தடுமாற மாட்டோம். என்ன ஆகுமோ, ஏதாகுமோ என்று நடுங்கி பயந்து கொண்டிருக்க மாட்டோம். நாம் நிச்சயமற்ற நிலையில் இருக்க மாட்டோம். நாம் பாதுகாப்பற்ற உணர்வில் வாழ மாட்டோம். ஆனால் சாத்தான், பிசாசு, இருளில்தன கிரியை செய்கிறான். அவர் கிரியை செய்கிற நேரங்களில், நாம் அவனைப் பார்க்க முடியாது. நம்மால் அவனைக் கண்டறிய முடியாது, அடையாளம் காண முடியாது. அவன் யார், அவன் ஏன் இங்கே இருக்கிறான், அவன் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது நமக்குத் தெரியாது. காரணம், அவன் இருளில் வேலை செய்கிறான். ஆனால் பாருங்கள், தேவன் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும்போது, நாம் அவரை அறிந்து கொள்கிறோம், அடையாளம் காண்கிறோம், அவரைப் பார்க்கிறோம். மாறாக, சாத்தான் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும்போது, நம்மால் அவனை அறிந்து கொள்ள முடியாது, அடையாளம் காண முடியாது. காரணம், அவன் ஒரு ஏமாற்றுக்காரன், நயவஞ்சகன், பொய்யன்.
ஆப்பிரிக்காவில், ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கும் ஒரு கல்லூரியின் முதல்வராக நான் இருந்தபோது, நிகழ்ந்த சம்பவம் இப்பொழுது என் நினைவுக்கு வருகிறது. எனக்குக் கீழ் இருந்த ஆப்பிரிக்க ஆசிரியர்களில் ஒருவருக்கு, பிசாசைக் குறித்த இந்த நிஜத்தை ஏற்றுக் கொள்வதில் நிறைய பிரச்சனைகள் இருந்தன. அவர் ஒரு சிறு கூட்ட வாத்துக்களை தன் வீட்டின் பின் பகுதியில் வளர்த்து வந்தார். அவர் தன் வாத்துக்களைக் குறித்து ரொம்பவும் பெருமைப்படுவார். ஒரு நாள் அவர் மிகவும் சோகமாக, மனச்சோர்வுற்றவராய் என்னிடம் வந்தான். யாரோ ஒருவன் இரவில் வந்து, அவருடைய எல்லா வாத்துக்களையும் திருடிச் சென்று விட்டான். அப்பொழுது நான் அவரிடம் கேட்டேன், “மிஸ்டர். ஒடாவா, அவன் உங்களுடைய வீட்டின் கதவை தட்டி, உங்களுடைய வாத்துக்களையெல்லாம் திருடுவதற்காக வந்திருக்கிறேன் என்று உங்களிடம் சொன்னானா?”
அவர் சொன்னார், “இல்லை, இல்லை. அவன் இருட்டில் வந்தான். நான் அவனைப் பார்க்கவில்லை.”
நான் சொன்னேன், “மிஸ்டர். ஒடாவா, பிசாசைக் குறித்த நிஜத்தை நீங்கள் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற உங்களுடைய பிரச்சனையைத்தான் இது காண்பிக்கிறது. அவன் வெளிச்சத்தில் வந்து, உங்களுடைய வீட்டின் கதவைத் தட்டி, ‘நான் பிசாசு. நான் திருடுவதற்காக வந்திருக்கிறேன்,’ என்று சொல்லமாட்டான். மாறாக, உங்களுடைய வாத்துக்களைத் திருடின திருடனைப்போலத் தான் அவன் நடந்து கொள்வான். அவன் இரவு நேரத்தில் வருவான். அவன் யார், எப்பொழுது அவன் வருவான் என்பதையெல்லாம் அவன் உங்களிடம் சொல்ல மாட்டான். நீங்கள் அவனைப் பார்க்க முடியாது, நீங்கள் அடையாளம் காண முடியாது, அவன் என்ன செய்கிறான் என்பதையும் உங்களால் பார்க்க முடியாது. திருடன் அப்படித்தான் வேலை செய்கிறான்.”
“பிசாசு ஒரு திருடன், பொய்யன், மனுஷ கொலைபாதகன்,” என்று இயேசு சொன்ன வார்த்தைகளை நினைவுகூருங்கள். அவன் ஒருபோதும் நன்மை செய்வதற்காக வருவதில்லை. அவனுக்கு மூன்று நோக்கங்கள் உண்டு. நாம் சந்தோஷமாய் அனுபவிக்கும்படி தேவன் தந்திருக்கிற ஆசீர்வாதங்களையெல்லாம் திருட வேண்டும். இரண்டாவதாக, கொல்ல வேண்டும். அதாவது, நம்முடைய சரீர உயிரைப் பறிக்க வேண்டும். மூன்றாவதாக, அழிக்க வேண்டும். அதாவது, என்றென்றைக்குமாய் நம்மை வேதனைப்படுத்தி, நம்மை நித்திய அழிவைக் காணச் செய்ய வேண்டும்.
இயேசுவுக்காக, நாம் தேவனுக்கு நன்றி சொல்வோம். அவர் உண்மையுள்ளவராய் இருந்து, இந்தச் சத்தியத்தை நமக்குச் சொல்லியிருக்கிறார். இயேசுவே இதற்குத் தீர்வாகவும் இருக்கிறார். அதற்காகவும் நாம் தேவனுக்கு நன்றி சொல்வோம்.
கிறிஸ்துவுக்குள் நமக்கு உண்டாயிருக்கிற இந்தத் தீர்வைக் குறித்து நான் நாளைக்கு உங்களிடம் பேச ஆரம்பிக்கப் போகிறேன். இயேசுவின் சுபாவம், அவருடைய நோக்கம், நமக்காக அவர் என்ன செய்திருக்கிறார் என்பதைக் குறித்து நான் பேசப் போகிறேன். நம்மை மீட்கும் உரிமையுள்ள சுதந்தரவாளியாக இயேசு இருக்கிறார் என்பதைக் குறித்து நான் பேசுவேன். அவரைக் குறித்து மிகவும் தெளிவான, அழகான இப்படியொரு படம் பழைய ஏற்பாட்டில் இருக்கிறது. நாம் இதைப் பார்ப்போம்.
குறியீடு: RP-R015-102-TAM









