இன்று மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. நேற்று, தேவனுடைய வார்த்தையே மன ஒளியூட்டலின் ஆதாரம் என்பதைப் பற்றி பேசினேன். ஒரு ஒளிக் கதிரைப் போல, அது நம் மனங்களில் நுழைந்து, தேவனிடமிருந்து நாம் விலகியதால் ஏற்பட்ட இருளை எப்படி அகற்றுகிறது என்பதையும்; ஒரு இயல்பான தளத்தில் வெளிச்சத்துக்கு மாற்றாக ஏதும் இல்லாதது போல, ஆவிக்குரிய தளத்திலும் தேவனுடைய வார்த்தைக்கு மாற்றாக ஏதும் இல்லை என்பதையும் நான் விவரித்தேன்.

இன்று, தேவன், அவரது வார்த்தையின் மூலம் நமக்காக ஏற்படுத்திய இன்னொரு மிக முக்கியமான ஒன்றைக் குறித்து நான் பேசப் போகிறேன். அதுதான், பாவம் மற்றும் சாத்தானுக்கு எதிரான வெற்றி ஆகும்.

முதலில், நான் பாவத்திற்கு எதிரான வெற்றியைக் குறித்து பேசப் போகிறேன். சங்கீதம் 119: 9 மற்றும் 11 இல், தூய்மை மற்றும் வெற்றியின் வாழ்க்கைப் பற்றிய முழு கேள்வியின் மையத்திற்கு சரியாக சங்கீதக்காரன் நம்மை அழைத்துச் செல்கிறார். அவர் 9 ஆம் வசனத்தில் ஒரு கேள்வியைக் கேட்கிறார்;

9 வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? [அவர் பதில் சொல்கிறார்:] உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால்தானே.

இதுவே நமது சமகால கலாச்சாரத்தில் இலட்சக்கணக்கான இளைஞரின் உண்மையான கேள்வியாக இருக்கிறது. தூய்மையான வாழ்க்கையை நடத்த ஒரு வழி இருக்கிறதா அல்லது நாங்கள் ஒழுக்கக்கேட்டிலும், பிற விதமான அசுத்தங்களிலும் ஈடுபடுவது சாதாரணமா, தவிக்க முடியாத ஒன்றா? அசுத்தத்திற்கு மாற்று இல்லை என்று நம் சமகாலத்து சமூகத்தில் உள்ள பல குரல்கள் சொல்கிறது. அது சாதாரணமானது தான். மனிதர்கள் அப்படித்தான் வாழ்கிறார்கள், அவர்களுக்கு வேறு வழியில்லை. ஆனால் சங்கீதக்காரன் இங்கே சொல்கிறார், “ஆம், இங்கு ஒரு மாற்று இருக்கிறது. ஒரு இளைஞன் தன் வழியை தூய்மையாக வைத்துக்கொள்ள முடியும். [நிச்சயமாக, ஒரு இளம் பெண் கூட, அதில் உட்படும், எப்படி?] உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தான்.” வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், தேவனுடைய வார்த்தையில் நமக்காக வகுக்கப்பட்ட கொள்கைகளை நாம் பின்பற்றினால், தேவபக்தியற்ற பாவம் நிறைந்த உலகத்தின் மத்தியில் கூட, தூய்மையான வாழ்க்கையை நாம் வாழ முடியும். அது ஒரு நல்ல செய்தி? அதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். தூய்மையான வாழ்க்கையை நடத்துவது சாத்தியமானது. நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் இது வெறும் கோட்பாடு அல்ல, ஆனால் தேவனுடைய மகிமைக்காக, தேவனுடைய கிருபையால் எனது சொந்த அனுபவத்தில் நான் அதை நிரூபித்துள்ளேன் என்று என்னால் சாட்சி சொல்ல முடியும். பின்னர் 11 ஆம் வசனத்தில், சங்கீதக்காரன் கர்த்தரிடத்தில் தொடர்ந்து சொல்கிறார்:

11 நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.

எனவே மீண்டும், மிக முக்கியமான ஒரு இரகசியம் அல்லது கொள்கை இருக்கிறது. எப்படி நீங்கள் பாவத்திலிருந்து விலகியிருக்க முடியும்? பதில் என்னவென்றால் தேவனுடைய வார்த்தையை உங்கள் இதயத்தில் பொக்கிஷமாக வைப்பதன் மூலம், அதை சரியாக எடுத்து சென்று உங்கள் வாழ்க்கையின் மையப் பகுதியில் வைத்து, உங்கள் வாழ்நாள் முழுவதும் அவருடைய வார்த்தையால் ஒழுங்குபடுத்துவதன் மூலமாகும். பாவத்துக்கும் தேவனுடைய வார்த்தைக்கும் இடையில் இருக்கும் தொடர்பை குறித்து ஒருவர் இப்படி சொன்னார், “ஒன்று தேவனுடைய வார்த்தை உங்களை பாவத்திலிருந்து விலக்கும் அல்லது பாவம் உங்களை தேவனுடைய வார்த்தையிலிருந்து விலக்கும்.” அது மிகவும் தெளிவாக மாற்றுவகைகளை கூறுகிறது. நீங்கள் நேர்மறையான மாற்றைத் தேர்ந்தெடுத்தால், அப்போது தேவனுடைய வார்த்தையானது உங்களை பாவத்திலிருந்து விலகியிருக்கச் செய்யும்.

சங்கீதம் 17: 4 இல், சங்கீதக்காரன் இந்த சாட்சியைக் கொடுக்கிறார். அவர் சொல்கிறார்:

4 மனுஷரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே துஷ்டனுடைய பாதைகளுக்கு விலக்கமாய் என்னைக் காத்துக் கொள்ளுகிறேன்.

துஷ்டனுடைய வழிகள் அனைத்தும் தீமையான பாவச்செயல்களும், பழக்கவழக்கங்களும் ஆகும், அந்த வாழ்க்கை முறைகள் இறுதியில் அழிவைக் கொண்டுவரும்; ஒழுக்கம் சார்ந்த அழிவு, மன அழிவு, சரீர அழிவு ஆகியவற்றைக் கொண்டுவரும். ஆனால், தேவனுடைய வார்த்தையை கடைப்பிடிப்பதன் மூலம் அந்த அழிவின் பாதைகளுக்கு நம்மைக் காத்துக்கொள்ளும். அந்த அழிவின் பாதைகளில் தேவனுடைய வார்த்தைகளில் உள்ள இரண்டு எளிய கொள்கைகளை நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். முதாலாவது கொள்கை 1 கொரிந்தியர் 10:31 இல் கூறப்பட்டுள்ளது.

31 ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.

இது மிகவும் எளிமையான அன்றாட விஷயங்களான சாப்பிடுவது, குடிப்பது போன்றவைகளுக்குப் பொருந்தும், ஆனால் அது சொல்கிறது, “எல்லாவற்றையும் [எதைச் செய்தாலும்] தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.” அதன் பின்னர் கொலோசெயர் 3:17 இல், அது சொல்கிறது:

17 வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.

அங்கே அந்தக் கொள்கை என்னவெனால்: நீங்கள் எதைச் செய்தாலும், அதை இயேசுவின் நாமத்தினாலே செய்து, தேவனை ஸ்தோத்திரியுங்கள்.

உங்கள் வாழ்க்கையை வழிநடத்தும், தேவனுடைய வார்த்தையின் அந்த மூன்று கொள்கைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டால், துஷ்டனுடைய பாதைகளுக்கு நீங்கள் விலக்கமாய் காத்துகொள்ளப்படுவீர்கள். தேவனுடைய மகிமைக்கு நீங்கள் செய்ய முடிந்ததை மட்டும் செய்யுங்கள். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே நீங்கள் செய்ய முடிந்ததை மட்டும் செய்யுங்கள், மேலும், நீங்கள் செய்யும் போது, தேவனை ஸ்தோத்திரம் செலுத்தி நீங்கள் செய்ய முடிந்ததை மட்டும் செய்யுங்கள். அது உங்கள் வாழ்க்கையின் தீமையான, பாவமான மற்றும் அழிவான பழக்கங்கள், நடைமுறைகள் மற்றும் இணைப்புகள் போன்றவற்றிலிருந்து முழுமையாக அகற்றப்படுவதை நீங்கள் மிக விரைவில் காண்பீர்கள். தேவனுக்கு நமது உடலின் இடத்தைக் குறித்து ஒரு சிறப்பான வார்த்தை இருக்கிறது.

தேவனும் வேதமும் நமது உடலை உயர்வாக மதிக்கிறார்கள். இது ஒன்றும் அழுக்கானது அல்ல, இது வெறும் சிற்றின்ப திருப்திக்கானது அல்ல, ஆனால் விசுவாசிகளுக்கு இது ஒரு ஆலயமாக, மிகவும் புனிதமாக, பரிசுத்த ஆவியானவர் வசிக்கும் இடமாக இருக்கிறது. 1 கொரிந்தியர் 6: 19-20 இல், பவுல் கூறுகிறார்:

19 உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? 20 கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.

விலை, நிச்சயமாக, இயேசுவின் இரத்தமாகும். நம்மை பாவத்திலிருந்து மீட்பதற்காக, சிலுவையிலே இயேசு தம்முடைய இரத்தத்தை சிந்தினார். அவர் வெறுமனே நம் ஆவியை அல்லது நம் ஆத்துமாவை மீட்கவில்லை ஆனால் அவர் நம் உடலை மீட்டுக்கொண்டார், அது பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாக இருப்பதற்காக, மேலும், நமது உடல்களை பரிசுத்த ஆவியானவரின் புனித ஆலயங்களாக கருதி அதை கையாள்வதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். அந்த வெளிச்சத்தில் உங்கள் உடலைப் பார்த்து, அப்படி நடத்தினால், இன்றைக்கு திரளான மக்களை அழித்துக்கொண்டிருக்கும் அந்த தீமைகளிலிருந்து உங்களை அது பாதுகாக்கும். போதைப் பொருள், நிகோடின், அதிகப்படியான மது மற்றும் பெருந்தீனி போன்ற தீமைகள். இவை அனைத்தும் இறுதியில் நம் உடலை அசுத்தப்படுத்தி அழித்துவிடும்.

நான் பாவத்தின் மீதான வெற்றியைக் குறித்து பேசினேன், இப்போது சாத்தானுக்கு எதிரான வெற்றியைக் குறித்து கையாளப்போகிறேன். நினைவில் கொள்ளுங்கள், நாம் பாவத்தை எதிர்த்து போராடுவது மட்டுமல்லாமல், நமக்கு மிகவும் தனிப்பட்ட எதிரியான பிசாசு இருக்கிறான். மிகவும் புத்திசாலியான, தீமையான, தீங்கிழைக்கும் ஆனால் நமக்கு அழிவைத் தேடும் சக்திவாய்ந்த ஒருவன். அவனை நாம் எப்படி கையாள்வது? எபேசியர் 6: 17 இல், பவுல் இதை சொல்கிறார்:

17 தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

பிசாசை கையாள ஒரு ஆயுதம் இருக்கிறது. ஆவியின் பட்டயம். அந்த பட்டயத்தை நாம் எடுத்து, அதை விசுவாசத்தில் பயன்படுத்த துவங்கும்போது, அதை எப்படி கையாள்வது என்பதை பரிசுத்த ஆவியானவர் நமக்கு காட்டுகிறார். பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவியாக வந்து, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஞானத்தையும், இயற்கைக்கு அப்பாற்பட்ட அதிகாரத்தையும் நமக்கு தருகிறார். இருப்பினும், பவுல் என்ன சொல்கிறார் என்பதை சரியாகப் புரிந்துகொள்வது முக்கியம். அந்த வசனத்தில், “தேவ வசனம்” என்று அவர் சொல்லும்போது, ரேமா என்னும் கிரேக்க சொல்லைப் பயன்படுத்துகிறார், அது குறிப்பாக உரைக்கப்பட்ட (பேசப்பட்ட) வார்த்தை என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், நீங்கள் விசுவாசத்தில் பேசும்போது ஆவியின் பட்டயம் என்பது தேவனுடைய வார்த்தையாகும். உங்கள் நைட் ஸ்டாண்டில் உள்ள வேதாகமமோ அல்லது உங்கள் புத்தக அலமாரியில் உள்ள வேதாகமமோ பிசாசை பயமுறுத்துவது அல்ல. அது அவனை கொஞ்சம் கூட பயமுறுத்தாது. ஆனால், வேதத்தை உங்கள் வாயிலே எடுத்து, தனிப்பட்ட முறையில், விசுவாத்தில் நீங்களே மேற்கோள் காட்டி அதை அறிக்கையிட்டு பிசாசுக்கு அதை செலுத்தும்போது, அது ஆவியின் பட்டயமாக மாறுகிறது.

இதற்கு சரியான உதாரணம் என்னவென்றால் இயேசு வனாந்திரத்தில் சாத்தானை எதிர்கொண்ட செயலாகும். உங்களுக்கு நினைவிருக்கலாம், சாத்தான் மூன்று தொடர் சோதனைகளுடன் அவரிடம் வந்தான். அவற்றை நாம் ஆராய தேவையில்லை. ஆனால் பிசாசை விரட்டுவதற்கு இயேசு ஒரே ஒரு ஆயுதத்தை மட்டுமே பயன்படுத்தினார் என்பதைப் பார்ப்பது முக்கியம் - அதுதான் ஆவியின் பட்டயம், தேவனின் உரைக்கப்பட்ட (பேசப்பட்ட) வார்த்தை. மூன்று முறை அவர் வேதத்தை எடுத்து சாத்தானிடம் மேற்கோள் காட்டினார். எழுதியிருக்கிறதே…….. எழுதியிருக்கிறதே........ எழுதியிருக்கிறதே. இயேசு தேவனுடைய குமாரனாயிருக்கிறார் என்ற அந்த உண்மையை அவர் சார்ந்திருக்கவில்லை, அவர் தனது சொந்த ஞானத்தை சார்ந்திருக்கவில்லை, அவர் தனது யூத பின்னணியை அல்லது ஜெப ஆலயத்தில் பெற்ற பயிற்சியையும் சார்ந்திருக்கவில்லை, அனால் அவர் தேவனுடைய வார்த்தையை மட்டும் சார்ந்திருந்தார்.

நான் உங்களுக்கு வெளிப்படையாக சொல்ல விரும்புவது என்னவென்றால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட சபையை அல்லது குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர் என்று பிசாசிடம் சொல்லலாம், அது அவனை பயமுறுத்த போவதில்லை. கோட்பாடு அல்லது இறையியல் அடிப்படையில் நீங்கள் அவனுடன் வாதிக்கலாம், அது அவனை கையாளாது. பிசாசுடன் திறம்பட கையாளும் ஒரே விஷயம் என்னவென்றால், நீங்கள் தேவனுடைய எழுதப்பட்ட வார்த்தையை எடுத்து, அதை வாயிலே வைத்து, விசுவாசத்துடன் பிசாசிடம் அதை செலுத்தி, சொல்லுங்கள், “சாத்தானே, நீ என்னை தாக்க முடியாது, உன்னால் என்னை வைத்துக்கொள்ள முடியாது, நான் உன்னிடம் தேவனுடைய வார்த்தையை மேற்கோள் காட்டுகிறேன், எழுதியிருக்கிறதே…….. எழுதியிருக்கிறதே…….. எழுதியிருக்கிறதே,” பின்னர், தேவனுடைய வார்த்தையின் கூர்மையான இரு முனைகள் கொண்ட பட்டயத்திற்கு பிசாசு பயப்படுவதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் உண்மையில் அதை வைத்து தள்ளும் போது, அவன் பின்வாங்கி உங்களை தனியேவிட்டு ஓடிப் போவான், ஏனென்றால் அவன் உங்களை பயமுறுத்தி தொந்தரவு செய்ததை விட அதிகமாக நீங்கள் அவனை பயமுறுத்தி தொந்தரவு செய்கிறீர்கள்.

சாத்தானை மேற்கொள்வது பற்றி இன்னொரு அழகான வசனம் வெளிப்படுத்தல் 12:11 இல் உள்ளது. அது சொல்கிறது:

11 ….அவனை [அவனை என்பது சாத்தானை. நீங்கள் கவனிக்கலாம், நாம் சாத்தானுடன் நேரடி மோதலில் இருப்போம்.] ஜெயித்தார்கள் [அதாவது, தேவனை நம்பும் மக்கள்]. அவர்கள் [விசுவாசிகள்] அவனை ஜெயித்தார்கள் [சாத்தானை, எப்படி?] ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும், மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல்.

சாத்தானுக்கு எதிராக வெற்றியைத் தரும் மூன்று விஷயங்கள் உள்ளன. இயேசுவின் இரத்தம் [ஆட்டுக்குட்டியானவரின் இரத்தம்], தேவனுடைய வசனம் மற்றும் நமது சாட்சி. இயேசுவின் இரத்தம் பெரிய அடையாமாகும், மேலும், இயேசு நமக்காக, சிலுவையில் நம்முடைய இடத்தில் மரித்து, நம்மை மீட்க இரத்தம் சிந்தினபோது, அவர் நிறைவேற்றி முடித்த அனைத்திற்கும் அந்த இரத்தம் முத்திரையாக இருக்கிறது. இயேசு நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதையும், சிலுவையின் மூலம் நமக்கு என்ன உரிமைகள் இருக்கிறதென்பதையும் அறிய தேவனுடைய வார்த்தை நமக்கு உதவுகிறது; எனவே, இரத்தமும், வார்த்தையும் ஒன்றாக வேலை செய்கின்றன. நம்மைப் பற்றி நாமே விசுவாசத்தில் உறுதிபடுத்திக் கொள்ளும்போது, தேவனுடைய வார்த்தை என்ன சொல்லுகிறதோ அதை இயேசுவின் இரத்தம் நமக்காக செய்கிறது. எனவே, இரத்தம், வார்த்தை மற்றும் நம் தனிப்பட்ட சாட்சி இவைகள் தான். பின்னர், அவர்கள் மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் தங்கள் உயிரையும் பார்க்கவில்லை என்று கூறுகிறது. வாழ்ந்தாலும், மரித்தாலும் கர்த்தரை சேவிக்க உறுதியாயிருக்கும் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். உறுதியற்ற விசுவாசிகள் பிசாசைக் கையாள முடியாது, அவன் அவர்களுக்கு பயப்படுவதில்லை, ஆனால் இரத்தத்தினாலும், வார்த்தையினாலும், தங்கள் சாட்சியினாலும் அவனை சந்திக்கும் உண்மையான கிறிஸ்தவர்களாகிய உறுதியுள்ள விசுவாசிகளுக்கு அவன் பயப்படுவான்.

இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் நான் மீண்டும் உங்களுடன் வருவேன். “தேவனுடைய வார்த்தை உங்களுக்கு என்ன செய்யும்” என்னும் இந்த தலைப்பில் தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நாளை, தேவனுடைய வார்த்தை எவ்வாறு உள்ளார்ந்த சுத்திகரிப்பு மற்றும் பரிசுத்தமாக்குதலின் கருவியாக செயல்படுகிறது என்பதை நான் விளக்குகிறேன்.

லைக்
பகிரவும்