விசுவாசிகளின் நியாயத்தீர்ப்பு

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 10
'மரணத்தின் மேல் வெற்றி' தொடரின் 12-ஆம் பாகத்தில், 'விசுவாசிகளின் நியாயத்தீர்ப்பு' குறித்த ஆழமான உண்மைகளை டெரெக் பிரின்ஸ் அவர்களுடன் இணைந்து ஆராயுங்கள். உயிர்த்தெழுதல் மற்றும் தேவனுடைய குடும்பத்தில் தொடங்கும் நியாயத்தீர்ப்பு பற்றிய வேத சத்தியங்களை இதில் காணலாம். உயிர்த்தெழுதல் நியாயத்தீர்ப்பில் விசுவாசிகள் தங்கள் கிரியைகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்ற தேவனுடைய தெய்வீகத் திட்டத்தை அறிந்து, விசுவாசத்தில் ஊக்கமும் தெளிவும் அடையுங்கள்.
Transcript
திரும்பவும் உங்களோடு இருப்பது நன்றாக இருக்கிறது. “மரணத்தின் மீது வெற்றி” என்ற தலைப்பில், அர்த்தச் செறிவு நிறைந்த, ஆழமான, அருமையான ஒரு போதனையை நாம் எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து கற்றுக் கொண்டு வருகின்றோம்.
என்னுடைய நேற்றைய செய்தியில், கிறிஸ்துவினுடைய இரண்டாம் வருகையின் போது, விசுவாசிகள் எப்படிப்பட்ட சரீரத்தோடு உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதைக் குறித்து விளக்கிச் சொன்னேன். அப்பொழுது ஐந்து முக்கியமான மாற்றங்கள் நிகழும் என்பதைக் குறித்து வேதாகமம் பேசுகிறது. அதை நாம் நேற்று பார்த்தோம்:
1. அழியக்கூடியது, அழியாததாய் மாறும்
2. சாவுக்கேதுவானது, சாவாமை உடையதாய் மாறும்
3. கனயீனமானது, மகிமையை உடையதாய் மாறும்
4. பெலவீனமானது, வல்லமையை உடையதாய் மாறும்
5. ஜென்ம சுபாவமுள்ள சரீரம், ஆவிக்குரிய சரீரமாய் மாறும்.
இதையெல்லாம் தொகுத்துச் சொல்லும்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுந்த சரீரத்திற்கு ஒப்பான ஒரு சரீரமாகவே, உயிர்ப்பிக்கப்படப் போகிற நம்முடைய சரீரமும் இருக்கும் என்று நான் சொன்னேன்.
விசுவாசிகளின் உயிர்த்தெழுதலை அடுத்து நடக்கப் போகிற ஒரு முக்கியமான நிகழ்வைக் குறித்து இன்றைய செய்தியில் நான் பேசப் போகிறேன். விசுவாசிகளின் மீது வரப் போகும் நியாயத்தீர்ப்புதான் அது. இந்த வார்த்தையே உங்களை ஆச்சரியப்படுத்தலாம், அதிர்ச்சிக்குள்ளாக்கலாம். “அப்படியா? விசுவாசிகளின் மீது மெய்யாகவே நியாயத்தீர்ப்பு வரப் போகிறதா?” என்று நீங்கள் கேட்கலாம். ஆம், நிச்சயமாகவே அது நடக்கத்தான் போகிறது! வேதவசனங்கள் அதைக் குறித்து தெளிவாகப் பேசுகின்றன. இப்பொழுது நாம் 1 பேதுரு 4:17-18 வசனங்களை வாசிப்போம்:
17 நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவங்கும் காலமாயிருக்கிறது. முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்கு கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னவாயிருக்கும்? 18 நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?
நியாயத்தீர்ப்பு தேவனுடைய குடும்பத்தாரிடமிருந்து ஆரம்பிக்கிறது என்பதை இந்த வார்த்தைகள் மிகவும் தெளிவாக எடுத்துரைக்கின்றன. “முந்தி கிறிஸ்தவர்களாகிய நம்மிடத்திலே அது துவங்கும்,” என்று பேதுரு எழுதியிருக்கிறார். “கிறிஸ்தவர்கள் ஏன் முதலில் உயிர்ப்பிக்கப்பட்ட பிறகு, நியாயத்தீர்ப்பை எதிர்கொள்ள வேண்டும்?” என்று நீங்கள் கேட்கலாம். இக்கேள்விக்கு பதில் இதுதான்: உயிர்த்தெழுதலின் நியாயத்தீர்ப்பில், நாம் நம் சரீரத்தைக் கொண்டு செய்திருக்கிற காரியங்களைக் குறித்து தேவனுக்கு முன்பாக கணக்கு ஒப்புவிக்கப் போகிறோம். இது தேவனுடைய திட்டங்களின்படி நடக்கப் போகிறது. நம் சரீரத்தைக் கொண்டு, நாம் செய்த காரியங்களைக் குறித்து நாம் கணக்கு ஒப்புவிக்கப் போகிறபடியால், நாம் நம் சரீரத்தோடு அங்கே தோன்றப் போகிறோம். இது பல வேதவசனங்களில் மிகவும் தெளிவாகச் சுட்டிக் காண்பிக்கப்பட்டிருக்கிறது. விசுவாசிகளின் மீது நியாயத்தீர்ப்பு நடக்கப் போகிற இடம், புதிய ஏற்பாட்டில், நியாய ஆசனம் அல்லது கிறிஸ்துவின் பேமா (Bema of Christ) என்று அழைக்கப்படுகிறது. பேமா (Bema) என்ற வார்த்தை, ஒரு கிரேக்க வார்த்தையாகும். இவ்வார்த்தை, அந்த நேரத்தில், அந்தக் கலாச்சாரத்தில் பொதுவாக பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தையாகும். ஒரு வழக்கை விசாரிக்கும்படி, ரோம நீதிபதியோ அல்லது ஆட்சியாளரோ அமருவதற்காக வைக்கப்படுகிற இருக்கையாக அது இருக்கிறது. எடுத்துக்காட்டிற்கு, பொந்தியு பிலாத்துவிற்கு முன்பாக இயேசு நின்றபோது, “அவன் தன் நியாயாசனத்தில் அதாவது தன் பேமா (Bema) மீது உட்கார்ந்தான்,” என்று வசனம் சொல்கிறது. இப்பொழுது நாம், ரோமர் 14:10-12 வசனங்களை வாசிப்போம்:
10 இப்படியிருக்க, நீ உன் சகோதரனை குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு (இது பேமா Bema- வைக் குறிக்கிறது) முன்பாக நிற்போமே. 11 அந்தப்படி, “முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும். நாவு யாவும் தேவனை அறிக்கை பண்ணும் என்று என் ஜீவனைக் கொண்டு உரைக்கிறேன்,” என்பதாய் கர்த்தர் சொல்கிறார் என்று எழுதியிருக்கிறது. 12 ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக் குறித்து தேவனுக்குக் கணக்கு ஒப்புவிப்பான்.
நியாயாதிபதியாய் கிறிஸ்து உட்காரும் பேமா (Bema) என்ற அவருடைய நியாயாசனத்திற்கு முன்பாக நாம் எல்லோருமே நிற்கப் போகின்றோம். நம் சரீரத்தில் வாழ்ந்தபோது செய்த காரியங்களுக்கேற்ற நியாயத்தீர்ப்பை நாம் அங்கே பெற்றுக் கொள்வோம். நம் சரீரத்தில் வாழ்ந்தபோது செய்த காரியங்களைக் குறித்த ஒரு விஷயமாக இது இருக்கிறபடியால், நாம் அங்கே நம் சரீரத்தில்தான் தோன்றுவோம். நல்லவையா அல்லது தீமையானவை, இந்த இரண்டு வகையான காரியங்களுக்கு மட்டுமே பவுல் இங்கு இடம் கொடுத்திருக்கிறார் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
ஆவிக்குரிய தளத்தில், நடுநிலை என்பது இல்லை. நாம் செய்கிற காரியங்கள், ஒன்று, நல்லவையாக இருக்கும் அல்லது தீயவையாக இருக்கும். இதற்கு இடைப்பட்ட ஒன்று இல்லை. ஒன்று, தேவனுடைய மகிமைக்காக, அவருக்குக் கீழ்ப்படிந்து செய்யப்பட வேண்டும். இல்லையென்றால், அது நல்லவையாக இருக்காது. ஆனாலும் இந்த இடத்தில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டியது அத்தியாவசியமானதாக இருக்கிறது. விசுவாசிகளின் மீதான நியாயத்தீர்ப்பு, ஆக்கினைத்தீர்ப்பில் முடிகிற ஒரு நியாயத்தீர்ப்பாக இருக்காது. கிறிஸ்துவுக்குள் உண்மையான விசுவாசியாய் இருப்பவருக்கு ஆக்கினைத்தீர்ப்பு கடந்து விட்டது. யோவான் 5:24-ல் இயேசு இவ்வாறு சொல்கிறார்:
24 “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.”
இதே சத்தியம், திரும்பவும், ரோமர் 8:1-ல் எழுதப்பட்டிருக்கிறது:
1 ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல், ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
நாம் கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றோம் என்றால், கடைசியில் வரப் போகும் தண்டனைத் தீர்ப்பை நாம் ஒருபோதும் எதிர்கொள்ள மாட்டோம். அது முடிந்து விட்டது. நாம் மரணத்தை விட்டுக் கடந்து, ஜீவனுக்குள் வந்திருக்கிறோம். ஆனால் நாம் நிச்சயம் நியாயத்தீர்ப்பை எதிர்கொண்டாக வேண்டும். தண்டனையைப் பெறும்படி அல்ல. நம்முடைய வாழ்க்கையில், நாம் செய்த கிரியைகள் அங்கே மதிப்பிடப்படும். அதற்குரிய பலன்கள் அங்கே கொடுக்கப்படும். 1 கொரிந்தியர் 3:11-15 வசனங்களில், விசுவாசிகளின் மீது வரப்போகும் நியாயத்தீர்ப்பைக் குறித்த ஒரு படத்தை பவுல் இங்கே கொடுக்கிறார். (திரும்பவும் சொல்கிறேன். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது தண்டனையைக் கொடுக்கின்ற ஒரு நியாயத்தீர்ப்பு அல்ல. மாறாக, நம்முடைய வாழ்க்கையை மதிப்பிட்டு, அதற்குரிய பலனையும், வெகுமதியையும் நமக்குக் கொடுக்கின்ற ஒரு நியாயத்தீர்ப்பாய் இது இருக்கும்.)
11 போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. 12 ஒருவன் அந்த அஸ்திபாரத்தின் மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், 13 அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும். நாளானது அதை விளங்கப் பண்ணும். ஏனெனில் அது அக்கினியிலே வெளிப்படுத்தப்படும். அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். 14 அதின் மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் (வெகுமதியை, reward-ஐ பெறுவான். 15 ஒருவன் கட்டினது வெந்து போனால், அவன் நஷ்டமடைவான். அவனோ இரட்சிக்கப்படுவான். அதுவும் அக்கினியில் அகப்பட்டுத் தப்பினது போலிருக்கும்.
நாம் இங்கே ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ குறித்து பேசுகிறோம். இந்த நபர், தேவன் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரே அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நீதியின் மீது தன் வாழ்க்கையைக் கட்டியெழுப்பியிருக்கிறார். ஆகையால் இந்த நபர் தண்டனைத் தீர்ப்புக்குள் ஒருபோதும் வர மாட்டார். காரணம், கிறிஸ்துவின் நீதியே, இவருடைய நீதியாயிருக்கிறது. இங்கு அவருடைய ஆத்துமா, நியாயந்தீர்க்கப்படப் போவதில்லை. அவருடைய கிரியைகள்தான் நியாயந்தீர்க்கப்படப் போகிறது. அந்த அஸ்திபாரத்தின் மீது இவர் என்ன கட்டியெழுப்பியிருக்கிறார் என்பதைக் குறித்துதான் இது பேசுகிறது. அவருடைய பணியின் தரத்தைக் குறித்து இது பேசுகிறது. ஆகையால், இந்த நியாயத்தீர்ப்பு, தண்டனைத் தீர்ப்பாக இருக்கப் போவதில்லை. இது ஒரு விசுவாசி செய்த கிரியைகளுக்குத் தக்க நியாயத்தீர்ப்பாய், அதற்கேற்ற பலன்களைக் கொடுக்கிற மதிப்பீடாய் இருக்கப் போகிறது.
எந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் இங்கே கிரியைகள் மதிப்பிடப்படுகின்றன என்பதை நாம் கவனிப்போம் என்றால், சில மிக முக்கியமான விஷயங்களை இங்கே நம்மால் பார்க்க முடியும். முதலில், எண்ணிக்கையைக் காட்டிலும், தரத்திற்குத்தான் தேவன் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும். மரக் கட்டைகள், புல், வைக்கோல் போன்ற பொருட்களெல்லாம் அக்கினியில் வெந்து போய் விடும். இவற்றை நிறைய எண்ணிக்கையில் நாம் சேகரித்து வைக்க முடியும். ஆனால் பிரச்சனை என்னவென்றால், இவையெல்லாம் அக்கினியில் அழிந்து போய் விடும் என்பதுதான். மாறாக, பொன், வெள்ளி மற்றும் விலையேறப்பெற்ற கற்களெல்லாம், அக்கினிச் சோதனையில் நிலைத்து நிற்கக்கூடியவைகளாய் இருக்கின்றன. இவற்றை அதிக எண்ணிக்கையில் உருவாக்குவது கடினமாய் இருக்கும். ஆகையால் நம்முடைய கிரியைகளைப் பொறுத்தவரை, நாம் எவற்றில் ஈடுபடுகிறோம் என்ற காரியங்களைப் பொறுத்தவரை, எண்ணிக்கையைக் காட்டிலும் தரத்தில்தான் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். இது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாயிருக்கிறது. கர்த்தருடைய ஊழியக்காரர்களில் சிலர், நிறைய எண்ணிக்கையில் பெரிய காரியங்களைச் செய்திருப்பார்கள். ஆனால் கிறிஸ்துவின் கடைசி நியாயத்தீர்ப்பு எனும் அக்கினியில் அவையெல்லாம் அழிந்து போகும். அவர்களுடைய கிரியைகளுக்கான மதிப்பீட்டில், அவர்களுக்கு கசப்பான அனுபவம்தான் உண்டாகும். நாம் இதிலிருந்து தப்ப வேண்டுமென்றால், நம்முடைய இலக்கு என்னவாக இருக்க வேண்டும்? மூன்று விஷயங்களை ஒரு ஆலோசனையாக நான் கொடுக்கிறேன். இவற்றை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள். நம்முடைய கிரியை அல்லது நாம் எதை கட்டியெழுப்புகிறோமோ, அது அக்கினியின் சோதனையில் நிலைத்து நிற்க வேண்டுமென்றால், மூன்று விஷயங்களை நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்: நம்முடைய நோக்கம், கீழ்ப்படிதல் மற்றும் பெலன் அல்லது வல்லமை.
1. முதலில், ஒன்றை நாம் செய்கிறோம் என்றால், அதற்கான நம்முடைய நோக்கம் என்னவாக இருக்கிறது என்பதை நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். சுயநல விருப்பங்களினால் நாம் உந்தப்படுகிறோமா என்று சோதித்துப் பார்க்க வேண்டும். மனுஷரைப் பிரியப்படுத்துவது நம் நோக்கமாக இருக்கிறதா என்று நாம் பார்க்க வேண்டும். ஒரு பெரிய சபையை எப்படியாவது கட்டியெழுப்பி விட வேண்டும், ஒரு பிரபலமான பிரசங்கியாராக உருவாக வேண்டும், நிறைய பணத்தை வாரியிறைக்க வேண்டும் என்பதுபோன்ற சுயநல இச்சைகளால் நாம் உந்தித் தள்ளப்படுகிறோமா? இதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒருவேளை, நாம் மற்றவர்களால் கவனிக்கப்படாமல் போகலாம். நமக்கு அதிகமான முக்கியத்துவம் கிடைக்காமல் போகலாம். ஆனாலும் தேவனுடைய நாமத்தை மட்டுமே மகிமைப்படுத்தக்கூடிய காரியங்களை உண்மையாய் செய்வதில் நமக்கு விருப்பமிருக்கிறதா என்பதை நாம் பார்க்க வேண்டும்.
2. இரண்டாவது விஷயம், தேவனுக்குக் கீழ்ப்படிவதாகும். தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில், தேவனுடைய கட்டளைகள் மற்றும் அவருடைய கோட்பாடுகளின் அடிப்படையில் நாம் தேவனுக்கு ஊழியம் செய்கிறோமா? அல்லது வேதவசனத்திற்கு முரண்பட்ட நம்முடைய சொந்த எண்ணங்கள் மற்றும் மனுஷரின் கோட்பாடுகளின் அடிப்படையில் நாம் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறோமா? தேவனுக்குக் கீழ்ப்படிகிறதன் அடிப்படையில், நாம் சோதிக்கப்படப் போகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
3. மூன்றாவதாக, பெலல் அல்லது வல்லமையைக் குறித்த விஷயமாயிருக்கிறது. பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில், அவருடைய பெலத்தில் நாம் தேவனுக்கு ஊழியம் செய்கிறோமா? அல்லது நம்முடைய சொந்த மாம்ச பெலத்தில், மனவலிமையில் ஊழியம் செய்கிறோமா? மாம்ச பெலத்தில் செய்யப்பட்ட காரியம் எதுவாயிருந்தாலும், மாம்சத்தைப்போலவே அழிந்து போகும். பரிசுத்த ஆவியானவரின் அக்கினி வல்லமையில் செய்யப்பட்ட காரியம் மட்டுமே, நியாயத்தீர்ப்பின் அக்கினியில் நிலைத்து நிற்கும். ஆகையால் இந்த மூன்று காரியங்களை நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்: நோக்கம், கீழ்ப்படிதல் மற்றும் பெலன்.
விசுவாசிகளின் மீது வரப்போகிற நியாயத்தீர்ப்பைக் குறித்த மற்ற படங்களும், பல்வேறு உவமைகளில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மத்தேயு 25- ம் அதிகாரத்தில், தாலந்துகளின் உவமை எழுதப்பட்டிருக்கிறது. இயேசுவே இதைச் சொல்கிறார். இந்த உவமையில் சில முக்கியமான விஷயங்களை நாம் பார்க்கிறோம். மூன்று வேலையாட்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு எண்ணிக்கையில் தாலந்துகளைப் பெற்றுக் கொண்டனர். ஒருவன் ஐந்து தாலந்துகளைப் பெற்றுக் கொண்டான். இன்னொருவன் இரண்டு தாலந்துகளைப் பெற்றுக் கொண்டான். கடைசி நபர், ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டான். ஐந்து தாலந்துகளைப் பெற்றுக் கொண்டவன், இன்னும் ஐந்து தாலந்துகளைப் பெருக்கினான். இரண்டு தாலந்துகளைப் பெற்றுக் கொண்டவன், இன்னும் இரண்டு தாலந்துகளைப் பெருக்கினான். இவர்கள் இருவருக்கும் 100 சதவீத லாபம் கிடைத்தது. இவர்களுடைய எஜமான், இவர்கள் இருவரையும் சமமாக ஏற்றுக் கொண்டதுபோலத்தான் தெரிகிறது. அங்கீகார வார்த்தைகள், அதே வார்த்தைகளாகத்தான் இருக்கின்றன. வேறு வார்த்தைகளீல் சொன்னால், நாம் எவ்வளவு எண்ணிக்கையில் ஆரம்பிக்கிறோம் எனப்து முக்கியமல்ல. மாறாக, நமக்குக் கொடுக்கப்பட்ட விஷயங்களில் நாம் எவ்வளவு உண்மையாய் இருக்கிறோம், அவற்றை நாம் எவ்வளவு உண்மையாய் பயன்படுத்துகிறோம் என்பதுதான் மிக முக்கியமானதாயிருக்கிறது. முதல் இரண்டு வேலையாட்களுக்கும், அவர்களுக்குரிய பலன் கொடுக்கப்பட்டது. ஆனால் மூன்றாவது நபர், தனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு தாலந்தைக் கொண்டு, ஒன்றும் செய்யவில்லை. அவன் அதை பூமியில் புதைத்து வைத்தான். அவன் தேவனால் நிராகரிக்கப்பட்டான். பயம்தான் அவனை அவ்வாறு உந்தித் தள்ளியது. “நான் பயந்தேன்,” என்று அவன் சொன்னான். தேவன் உண்மையை எதிர்பார்க்கிறார். இன்னொரு பக்கத்தில், பயமும், சோம்பேறித்தனமும் தேவனுடைய நியாயத்தீர்ப்பைத்தான் கொண்டு வரும். நான் உங்களுக்கு ஒரு ஆலோசனை கொடுக்கிறேன். நீங்கள் வேதாகமம் முழுவதையும் வாசித்துப் பாருங்கள். சோம்பேறித்தனத்தைக் குறித்து அது என்ன சொல்கிறது என்று கவனியுங்கள். சோம்பேறித்தனத்தைக் குறித்து ஒரு நல்ல வார்த்தை கூட வேதாகமம் பேசியிருக்கவில்லை. ஆனால் இன்று சோம்பேறித்தனத்தைக் காட்டிலும், மதுப்பழக்கம்தான் மிகவும் அதிகமாய் கண்டித்து உணர்த்தப்படுகிறது.
இதே போன்றதொரு உவமை, லூக்கா 19:12-27 வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த உவமையில், ஒவ்வொரு வேலையாளுக்கும் ஒரு ராத்தல் கொடுக்கப்படுகிறது. ஒரே அளவுதான் எல்லோருக்கும் கொடுக்கப்படுகிறது. ஆனால் அவர்களுடைய லாபங்கள் வித்தியாசமாக இருந்தது. ஒருவன் பத்து ராத்தல்களை லாபமாகப் பெற்றான். இன்னொருவன், ஐந்து ராத்தல்களை லாபமாகப் பெற்றான். இங்கு திரும்பவும், இன்னொரு வேலையாளைப் பார்க்கிறோம். அவன் தனக்குக் கொடுக்கப்பட்ட ராத்தலைக் கொண்டு ஒன்றும் செய்யவில்லை. அவன் இங்கும் நிராகரிக்கப்பட்டான். பத்து ராத்தல்களை லாபமாகப் பெற்றவன், பத்து பட்டணங்களுக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டான். அதுதான் அவனுக்குக் கிடைத்த பலன். ஐந்து ராத்தல்களைப் பெற்றவன், ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டான். அது அவனுக்குக் கிடைத்த பலனாயிருந்தது. ஆக, இங்கே இரண்டு கோட்பாடுகள் வெளிப்படுவதை நாம் பார்க்கிறோம். முதலில், செயலாற்றும் திறனைக் காட்டிலும், உண்மையைத்தான் தேவன் பிரதானமாகப் பார்க்கிறார். இது உண்மையான நிகர லாபம் அல்ல. இது லாப சதவீதம் என்றுதான் நான் சொல்வேன். 100 சதவீத லாபத்தைப் பெற்ற ஒவ்வொருவரும், சம நிலையில் அங்கீகரிக்கப்பட்டார்கள்.
இரண்டாவது கோட்பாடு இதுதான்: இவ்வாழ்க்கையில் உண்மையாய் ஊழியம் செய்தால், நித்தியத்தில் ஊழியம் செய்வதற்கான வாய்ப்புகளும், பொறுப்புகளும் அதிகமாய் உண்டாகும். இதுவே பலனாயிருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், மெய்யான ஜீவ தேவனுக்கு ஊழியம் செய்வதுதான், இப்பிரபஞ்சத்தில் ஒருவர் செய்யக்கூடிய மிக முக்கியமான ஊழியமாயிருக்கிறது. இவ்வாழ்க்கையில் நாம் அவருக்கு உண்மையாய் ஊழியம் செய்வோம் என்றால், ஊழியத்திற்கான நிறைய வாய்ப்புகள் பலனாக அடுத்த வாழ்க்கையில் நமக்கு உண்டாகும். ஆக, இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு விசுவாசியாய், உங்களுடைய வாழ்க்கையைக் குறித்து நீங்கள் கணக்கு ஒப்புவித்தாக வேண்டும். இந்த இரண்டு கோட்பாடுகளையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். முதலாவது, செயலாற்றும் திறனைக் காட்டிலும், தேவன் உண்மையைப் பார்க்கிறார். இரண்டாவது, உண்மையான ஊழியத்திற்கான பலனாய், பொறுப்புகள் அதிகரிக்கப்படுகிறது.
இன்றைக்கு நம்முடைய நேரம் முடிந்து விட்டது. நாளை இதே நேரம், நான் திரும்பவும் உங்களைச் சந்திப்பேன். நாணயத்தின் மறுபக்கத்தைக் குறித்து, அதாவது, “உயிர்த்தெழுதல் மற்றும் அவிசுவாசிகளின் மீது வரும் நியாயத்தீர்ப்பைக்” குறித்து நாளைய செய்தியில் நான் பேசுவேன்.
குறியீடு: RP-R017-102-TAM









