பிரச்சனையுள்ள குழந்தைகளை கையாள்வது எப்படி

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 10
"பிரச்சனைக்குரிய குழந்தைகளை எப்படிக் கையாள்வது" என்ற டெரெக் பிரின்ஸின் போட்காஸ்ட் மூலம், குடும்பச் சவால்களுக்கு நற்செய்தி அளிக்கும் நம்பிக்கையை அறியுங்கள். மல்கியா தீர்க்கதரிசியின் வாக்கின்படி, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவைச் சீரமைப்பதன் அவசியத்தை வேதாகமத்தின் அடிப்படையில் அவர் விளக்குகிறார். "தேவனுடைய வாக்குத்தத்தங்களின் தேசத்தில் நடத்தல், பகுதி 10" நிகழ்ச்சியைக் கேட்டு, கர்த்தருடைய வழிநடத்துதலால் உங்கள் குடும்பத்தின் உள்ளங்கள் எவ்வாறு மாற்றமடையும் என்பதைக் கண்டறியுங்கள்.
Transcript
பல வருட தனிப்பட்ட அனுபவத்தில் கிறிஸ்தவ ஊழியத்தின் மூலம் தேவன் என் கையில் வைத்துள்ள வெற்றிகரமான வாழ்க்கைக்கான சில திறவுகோல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது.
நேற்றைய எனது பேச்சில், வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான தேர்வுகளில் ஒன்றான “துணையை, மனைவி அல்லது கணவனைத் தேர்ந்தெடுப்பது” குறித்து கையாண்டேன்.
ஒரு குடும்பத்தின் நெருங்கிய உறவுகளுக்குள் ஏற்படக்கூடிய சிரமத்தை இன்று நான் கையாளப் போகிறேன். துரதிர்ஷ்டவசமாக, இது இன்று அடிக்கடி எழுகிறது: பிரச்சனையுள்ள குழந்தைகள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேவனுடைய வார்த்தை நமக்கு வழிநடத்துதலையும் உற்சாகத்தையும் அளிக்கிறதா? அது அப்படியே செய்கிறது என்று நான் நம்புகிறேன்.
நமது முதல் வசனமாக, நாம் பழைய ஏற்பாட்டின் கடைசி தீர்க்கதரிசியிடம் திரும்பப் போகிறோம். மல்கியா தீர்க்கதரிசன புத்தகம் 4 ஆம் அதிகாரம் 5 மற்றும் 6 ஆம் வசனங்கள். இது இந்த காலத்தின் முடிவில் நிறைவேறும் காட்சியாகும். இது நாம் வாழ்கிற கடைசி காலம் என்று நான் நம்புகிற இன்றைய காலத்திற்கு குறிப்பாகப் பொருந்தும். கர்த்தர் சொல்கிறார்:
5 இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். [தற்போதைய யுகத்தின் பிரமாண்டமான உச்சக்கட்டத்திற்கு சற்று முன்.] 6 நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.
மிகத் துல்லியமாக தேவனுடைய வார்த்தை அதன் தீர்க்கதரிசன நுண்ணறிவுடன் நமது காலத்தின் மிகப்பெரிய ஒற்றை சமூகப் பிரச்சனையை சுட்டிக்காட்டுகிறது: சீர்குலைந்த குடும்பங்களின் பிரச்சனை, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான வேற்றுமை. இந்த தீர்க்கதரிசனம் கவனம் செலுத்தும் விஷயம் இதுதான், குடும்பத்தில் தந்தைக்கும், அவர்கள் பிள்ளைகளுக்கும் இடையிலான தவறான உறவுகள். மேலும், இந்த உறவுகளை சரி செய்யாமல், நிலைமையை மாற்றவில்லை என்றால், முழு தேசமும் சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதே இதன் அறிகுறியாகும்.
இன்றைய அமெரிக்காவின் நிலைமையை இது விவரிக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இராணுவப் பிரச்சனைகள், அரசியல் பிரச்சனைகள், பொருளாதாரப் பிரச்சனைகள் என மற்ற பிரச்சனைகளை விட இதுவே மிகப்பெரிய பிரச்சனையாகும். சமூகப் பிரச்சனையும், குடும்ப பிரச்சனையுமாகிய சீர்குலைந்த குடும்பங்கள், தந்தை மற்றும் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் சரியான உறவில் இல்லாதது போன்றதே மிகப்பெரிய பிரச்சனையாகும். நாம் தேவனின் தீர்வை ஏற்றுக்கொண்டு, தேவனிடம் திரும்பி, அவருடைய நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால், அமெரிக்காவின் அழகான தேசத்தில் ஒரு சாபம் குடியேறும்.
நான் மேற்கோள் காட்டிய இந்த வேதவசனத்தில், பிதாக்கள் மீது நிலைமையைக் குணப்படுத்துவதற்கான முதன்மைப் பொறுப்பை தேவன் வைக்கிறார். அவர் சொல்கிறதாவது, பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான். எனவே, முதன்மை பொறுப்பு தகப்பன்மார்களிடம் உள்ளது. இது தர்க்கரீதியானதும், தேவனுடைய வார்த்தையின் கொள்கைகளுக்கு இணங்கும்படியும் இருக்கிறது, ஏனென்றால், தேவனின் வார்த்தைகளால் குடும்பத்தில் சரியான வரிசைமுறையின் முதன்மையான பொறுப்பு தந்தைகள் மீதே மிகத் தெளிவாக வைக்கப்பட்டுள்ளது.
அதற்காக தாய்மார்களுக்கு பொறுப்பு இல்லை என்று அர்த்தமில்லை. உண்மையில், அவர்கள் தங்கள் கணவருடன் நிற்பதற்கும், குடும்பத்திற்கு தேவைப்படும் விதத்தில் மனைவிகளாகவும், தாய்மார்களாகவும் இருப்பதற்குமான ஒரு பெரிய பொறுப்பு உள்ளது. ஆனால், வீட்டையும் குடும்பத்தையும் ஒழுங்கமைப்பதற்கான ஆரம்ப முதன்மை பொறுப்பு தேவனால் தந்தைகள் மீது வைக்கப்பட்டுள்ளது. இது எபேசியர் 6:4 இல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது:
4 பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.
சிட்சை மற்றும் போதனை ஆகியவை ஒரு தந்தையின் இரண்டு முக்கிய பொறுப்புகளாகும். சிட்சையின் (சரியான ஒழுக்கத்தின் மூலம்) மூலம் அவர் வீட்டில் ஒழுங்கை பராமரிக்க வேண்டும், அதே சமயத்தில், அவருடைய பிள்ளைகளுக்கு தேவனின் வழிகளில் போதனையும், வேதாகமத்தின் கொள்கைகளையும், கிறிஸ்தவ நம்பிக்கையில் சரியான வாழ்க்கையையும் கற்பிப்பது அவருடைய பொறுப்பாகும்.
இன்று, பெரும்பாலான அமெரிக்க தந்தைகள் இதைச் செய்யத் தவறிவிட்டனர் என்பதை எனது கண்கானிப்பின் அடிப்படையில் இப்போது நான் சொல்ல வேண்டும். அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு தேவையான ஒழுக்கத்தையும் போதனையையும் வழங்கவில்லை. நான் எண்ணற்ற நிகழ்வுகளை கையாண்டுள்ளேன், அதில் அடிப்படை பிரச்சனை குடும்பத்தில் பெற்றோர்களின் தோல்வியாக இருக்கும். பெரும்பாலான அமெரிக்க தந்தைகள் இன்று தோல்வியடைந்ததற்கும், தோல்வியடைவதற்கும் காரணம் சரியான முன்னுரிமைகளை வைக்க தவறியதன் மூலம்தான் என்று நான் சொல்வேன். அவர்கள் தங்கள் குடும்பங்களையும் பிள்ளைகளையும் அதிகமாக மதிப்புக்கொடுக்கவில்லை. வியாபாரத்தில் வெற்றி, இன்பம், பொழுதுபோக்கு, பணம் சம்பாதிப்பது, மற்றவர்களைப் போல பொருட்கள் வைத்திருக்க நினைப்பது போன்ற மற்ற விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்கிறார்கள். தேவன் அவர்களின் பிள்ளைகளுக்குக் கொடுத்த அந்த மிகவும் மதிப்புமிக்க, அற்புதமான உடைமையை விட வேறு பல விஷயங்களை முதன்மையாக வைப்பது. இதன் விளைவாக, அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக்கான கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதில்லை. அதுதான் முதன்மையான காரணமாகும்.
இந்த பிரச்சனைக்கு மற்றொரு முக்கிய காரணம், பெற்றோரிடையே, கணவன், மனைவிக்கு இடையே உள்ள ஒற்றுமையின்மையாகும். யாக்கோபு 3:16 இதை நமக்கு சொல்கிறது:
16 வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு.
எனவே, கணவன் மனைவி இடையே வைராக்கியம் அல்லது போட்டித்தன்மை உள்ள இடத்தில், ஒவ்வொருவரும் சுயநல லட்சியத்தில் குற்றமுள்ளவர்களாக இருந்தால், கலகமும் சகல துர்ச்செய்கைகளும் இருக்கும். அந்த சூழ்நிலையில் வளரும் பிள்ளைகள் கடுமையான பிரச்சனைகளையும், உணர்ச்சி மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும் என்பதை எனது அவதானிப்பு எனக்கு உணர்த்துகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இத்தகைய பிரச்சனைகள் குழந்தை பருவத்திற்கும், வீட்டிற்கும் செல்கின்றன.
கணவன் மனைவிக்கு இடையே உள்ள தவறான உறவு அவர்களின் ஜெபத்திற்கு இடையூறாக இருப்பது இதில் மற்றொரு காரணியாகும். 1 பேதுரு 3:7 இல், பேதுரு கூறுகிறார்:
7 அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்கு தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனே கூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.
கணவன் மனைவிக்கு இடையே உள்ள தவறான உறவு, அவர்களின் பிள்ளைகள் சார்பாகவும், எல்லாப் பகுதிகளிலும் ஜெபங்களைத் தடுக்கிறது என்பதே இதன் உட்குறிப்பு. மறுபுறம், இரண்டு பேர் ஒருமனப்பட்டு, ஒன்றாக இணக்கமாக இருக்க முடிந்தால், அவர்கள் ஜெபிக்கும் எதுவும் கொடுக்கப்படும் என்று இயேசு சொன்னார். கணவன் மனைவியை விட வேறு எந்த இரண்டு நபர்கள் ஒருமனமாகவும், இணக்கமாகவும் இருக்க முடியும்? அவர்கள் அதைச் செய்யும்போது, அந்த இணக்கமான சூழ்நிலை அவர்களின் குடும்பங்களில் ஊடுருவி, அவர்களின் ஜெபங்களுக்கு அவர்களது பிள்ளைகளின் சார்பாக தேவனால் பதிலளிக்கப்படும்.
சரி, நாம் பின்னணியத்தை பார்த்தோம், குடும்ப உறவுகளின் முறிவும் இணக்கமின்மையும், ஒழுக்கக் குறைவும், வரும் அனைத்து தீமைகளுக்கும் சில முக்கிய காரணிகளைப் பார்த்தோம். தீர்வுகள் என்ன? பெற்றோர்கள் எடுக்க வேண்டிய மூன்று படிகளை நான் உங்களுக்கு பரிந்துரைக்க விரும்புகிறேன்.
முதலாவதாக, ஒவ்வொரு பெற்றோரும் மற்ற துணையுடனும், பிள்ளைகளுடனுமான உறவில் எந்த வகையிலும் தனது தோல்விக்காக தேவனுக்கு முன்பாக மனந்திரும்ப வேண்டும். மனந்திரும்புதல் தேவனின் ஆசீர்வாதங்களை மீட்டெடுப்பதற்கான வழியைத் திறக்கிறது.
இரண்டாவதாக, பெற்றோருக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தால், அவர்கள் ஒருவருக்கொருவர் சமரசம் செய்ய வேண்டும். நான் ஏற்கனவே கூறியது போல், அது அவர்களின் ஜெபங்களுக்கு பதிலளிக்கும் வழியைத் திறக்கும். ஆனால், தவறான உறவு இருக்கும்போது, அது அவர்களின் ஜெபங்களைத் தடுக்கிறது.
மூன்றாவதாக, பெற்றோராக, அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் தீவிரமாகத் தவறிவிட்டால், அவர்கள் செய்ய வேண்டிய விஷயம் தங்களைத் தாழ்த்தி, அவர்கள் பிள்ளைகளிடம் சென்று, அவர்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு பெற்றோராக நான் என் வாழ்க்கையில் கடந்த காலத்தில் செய்த காரியம் இதுதான் என்று சொல்கிறேன். என் பிள்ளைகளில் ஒருவரிடம் சென்று, “மன்னியுங்கள். நான் தவறு செய்துவிட்டேன். தயவு செய்து என்னை மன்னித்துவிடு” என்பேன். அது எப்போதும் நல்ல உறவை மீட்டெடுப்பதற்கும், தேவனின் ஆசீர்வாதத்துக்கும் வழி திறக்கிறது.”
பெற்றோர்களாகிய நாம் இந்த நடவடிக்கைகளை எடுத்தவுடன், தேவனுடைய இரட்சிப்பின் ஆசீர்வாதங்களுக்கு நாம் தகுதி பெறுகிறோம். இந்த ஆசீர்வாதங்கள் நமது பிள்ளைகளையும் உள்ளடக்குகிறது. இதற்கு பல வேதவசனங்கள் உள்ளன. சங்கீதப் புத்தகத்திலிருந்து இரண்டு வேதபகுதிகளை மட்டும் மேற்கோள் காட்டுகிறேன். முதலாவதாக, சங்கீதம் 103:17-18:
17 கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும், அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது, 18 அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது.
நீங்கள் பார்க்கலாம், அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்களுக்கு ஒரு வாக்குத்தத்தம் இருக்கிறது. வாக்குத்தத்தத்தின் ஒரு பகுதி என்னவென்றால், தேவனுடைய நீதி அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளிடத்தில் இருக்கிறது. அடுத்த தலைமுறை மட்டுமல்ல, அதற்கு அடுத்த தலைமுறையும் தேவனுடைய நீதியின் ஆசீர்வாதங்களில் சேர்க்கப்படும்.
எனவே, அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி கீழ்ப்படியும்போது, தேவன் இதைச் செய்வார் என்றும், அவருடைய நீதி நம் பிள்ளைகளுக்கும், பிள்ளைகளின் பிள்ளைகளிடத்துக்கு இறங்கும் என்றும் எதிர்ப்பார்க்க நமக்கு உரிமை உண்டு.
பின்னர், மீண்டும் சங்கீதம் 112:1-2 இல்:
1 அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். 2 அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.
நம் வழிகளில் தேவனைப் பிரியப்படுத்தினால், நம் சந்ததியினர் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று மற்றொரு தெளிவான வாக்குத்தத்தம் உள்ளது.
பின்னர், நமது பிள்ளைகளை மீட்டெடுப்பதற்கான வாக்குத்தத்தங்கள் இருக்கின்றன. ஏசாயா 49:24-25 இவ்வாறு கூறுகிறது:
24 பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப் பொருளைப் பறிக்கக்கூடுமோ அல்லது நீதியாய்ச் சிறைப்பட்டுப்போனவர்களை விடுவிக்ககூடுமோ? 25 என்றாலும் இதோ, பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும், விடுவிக்கப்படுவார்கள்; பெலவந்தனால் கொள்ளையிடப்பட்டதும் விடுதலையாக்கப்படும்; உன்னோடு வழக்காடுகிறவர்களோடே நான் வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்ளுவேன்.
எனவே, தீய சக்திகள், சாத்தான் மற்றும் அவனது படையெடுக்கும் சேனைகள், நமது குடும்பங்களுக்குள் நுழைந்து, நம் பிள்ளைகளைப் பிடித்து நம்மிடமிருந்து பறித்துக்கொண்டன – போதைப் பொருள் அல்லது சட்டவிரோதமான உடலுறவு அல்லது மாய வித்தை அல்லது எந்த வடிவத்திலான தீமை அல்லது ஏமாற்றுதல் போன்றவையாக இருக்கலாம். இது ஒரு தீய ராணுவத்தால் நம்மை படையெடுத்ததைப் போன்றது, ஆனால் தேவன் உறுதியளிக்கிறார், “உன்னோடு வழக்காடுகிறவர்களோடே நான் வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்ளுவேன். அவர்கள் கடுமையாகக் கைப்பற்றியவர்களிடமிருந்து விடுவிக்கப்படுவார்கள்.”
பின்னர், நிறைவாக, எரேமியா 31:15-17இல், தாய்மார்களுக்கு ஒரு அழகான வாக்குத்தத்தம் இருக்கிறது:
15 ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 16 நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பி வருவார்கள். 17 உன் முடிவைப் பற்றி உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் தங்கள் தேசத்துக்குத் திரும்பிவருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
விசுவாசமுள்ள தாய்மார்களுக்கு இது ஒரு வாக்குத்தத்தமாகும். நீங்கள் அதைப் பிடித்துக் கொண்டால், தேவன் அதற்குப் பதிலளிப்பார். நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.
சரி, இன்றைக்கு எனது நேரம் முடிந்துவிட்டது. திங்கள் முதல் வெள்ளி வரை இதே நேரத்தில் அடுத்த வாரம் உங்களுடன் மீண்டும் வருவேன்.
அடுத்த வாரம், இதே கருப்பொருளாகிய, “தேவனுடைய வாக்குத்தத்தங்களின் தேசத்தின் வழியாக நடப்பது” குறித்து தொடர்கிறேன். அடுத்த வாரம் நான் கையாளும் வாக்குத்தத்தங்கள், செழிப்பு மற்றும் குணமாக்குதலில் தேவனுடைய ஏற்பாடுகளுடன் தொடர்புடையதாக இருக்கும்.
குறியீடு: RP-R025-105-TAM









