சாந்தம்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: செப்டம்பர் 2026
Read Time: 9
பரிசுத்த ஆவியின் அழகான கனியான சாந்தத்தைக் குறித்து அறிந்து கொள்ளுங்கள். டெரெக் பிரின்ஸின் 'ஆவியின் கனி, பகுதி 9' என்ற இந்தச் செய்தி, சாந்தம் என்பது பலவீனம் அல்ல, மாறாக கர்த்தருக்குள் இருக்கும் வல்லமையான பலத்தின் வெளிப்பாடு என்பதை விளக்குகிறது. இந்த முக்கியமான பண்பை வேத வசனங்களின் மூலம் எவ்வாறு வளர்த்துக்கொள்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.
Transcript
உங்களுடன் மீண்டும் இருப்பது நல்லது, முழு வேதத்திலும் மிக அழகான தலைப்புகளில் ஒன்றான: பரிசுத்த ஆவியின் கனியைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.
நேற்று நான் உங்களிடம் உண்மைத்தன்மை அல்லது விசுவாசத்தின் கனியைப் பற்றி பேசினேன். இவை ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது என்று விளக்கினேன். ஒரு பக்கம் சார்ந்திருப்பது – அதுதான் விசுவாசம். மறுபுறம் நம்பகமானதாக இருப்பது – அதுதான் உண்மைத்தன்மை.
இன்று நான் சாந்தத்தின் கனியைப் பற்றி பேசப் போகிறேன். மூல கிரேக்க மொழியில் உள்ள வார்த்தையை சமமாக மென்மை அல்லது சாந்தம் என்று மொழிப்பெயர்க்கலாம். சில பதிப்புகள் ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகின்றன, சில மற்றதை பயன்படுத்துகின்றன. நாம் எந்த வார்த்தையை பயன்படுத்தினாலும், மென்மையில் சாந்தமும், சாந்தத்தில் மென்மையும் அடங்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். சில கணங்களுக்கு, நான் சாந்தம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவேன்.
முதலில், நான் சொல்ல வேண்டியது, சாந்தம் என்பது பலவீனம் அல்ல. பலர் அப்படி நினைக்கிறார்கள், ஆனால், உண்மையிலே, நேர்மறையானதுதான் உண்மையானது. சாந்தம் என்பது வலிமையின் நிரூபணமாகும்.
ஒரு நல்ல வழியில், இதை இயற்கை உலகில் இருந்து விளக்குவதற்கு ஜெட் விமானத்தை கருத்தில் கொள்ளலாம். ஜெட் விமானத்தில் அடிக்கடி பயணம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. நான் பல ஆண்டுகளாக அவற்றில் பயணித்தேன். நான் 707 இல் இருந்து 727க்கும், 727 இல் இருந்து 747க்கும் உயர்ந்துள்ளேன். நான் முதன்முதலில் ஜம்போ ஜெட் விமானங்களில் பயணிக்கத் தொடங்கியபோது, என்னை வியப்பில் ஆழ்த்திய ஒன்று, அவர்கள் கீழே தொட்ட விதம் மென்மையானதாக இருந்தது. இத்தனை டன் எடையுள்ள, 400 மனிதர்களை சுமந்து கொண்டு, இவ்வளவு அற்புதமாக மென்மையுடன் எப்படி ஒரு பிரம்மாண்டமான கட்டுமானம் இறங்க முடியும் என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. 707 அல்லது 727 போன்ற சிறிய ஜெட் விமானத்தை விட 747 மிகவும் மெதுவாக தரையிறங்கும் என்பதுதான் எனது அபிப்ராயம்.
ஒருசமயம் நான் தரையிறங்கும் ஒரு ஜெட் விமானத்தில் இருந்தேன், நான் பிரங்கிப்பதில் மிகவும் மும்முரமாக இருந்ததால், நான் சற்றே சோர்வாக இருந்தேன், நாங்கள் தரையிறங்குவதற்கு சற்றுமுன்பு, நான் என் இருக்கையிலே தூங்கினேன். நான் எழுந்தபோது, நாங்கள் வாசலருகே இருந்தோம். மிகவும் மெதுவாக இறங்கியதால், அது என்னை எழுப்பவில்லை.
ஒரு ஜெட் விமானத்தை உருவாக்கும் உலோகத்தையும் மற்றும் அதன் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கிய பரந்த கட்டுமானத்தை நினைத்துப் பாருங்கள், ஒரு நாற்காலியில் தூங்கிக்கொண்டிருப்பவரைக் கூட எழுப்பாத அளவுக்கு மெதுவாக கீழே இறங்குகிறது. அதை பெலவீனம் என்று சொல்வீர்களா? நிச்சயமாக இல்லை. இதுதான் திறமை மற்றும் வலிமையின் சிறந்த செயல் விளக்கம். அதுதான் சாந்தம். இது திறமை மற்றும் வலிமையின் சிறந்த செயல் விளக்கமாகும்.
அந்த பெரிய ஜெட் பலத்த சத்தத்துடனும், மோதலுடனும், பாய்ச்சலுடனும், கடகடவென்று, பேரடியுடன் தரையிறங்குகிறது என்று வைத்துக்கொள்வோம். அது எதைக் குறிப்பிட்டிருக்கும்? வலிமையா? அல்லது பலவீனமா? சந்தேகத்துக்கிடமில்லாமல் பலவீனம்தான். தாங்கள் வலிமையானவர்கள் என்று நினைக்கும் சிலர் அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்கள் கத்துவார்கள், அவர்கள் தங்கள் கால்களை தரையிலே அடிப்பார்கள், அவர்கள் தங்கள் குரலை உயர்த்துவார்கள், அவர்கள் பழிதூற்றுகிறவர்கள். அது பலம் அல்ல, பலவீனம்.
நாம் புரிந்துகொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், மென்மை அல்லது சாந்தம் என்பது அதிகாரத்துடன் சேர்ந்து செல்கிறது. அது, மீண்டும், இயற்கை சிந்தனைக்கு முரணானது.
ஐந்து வருடங்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் கல்லூரியின் முதல்வராக இருந்தேன். நான் அங்கு அறிந்தது, ஒரு ஆசிரியரின் அதிகாரம் பற்றிய ஆப்பிரிக்க யோசனை என்னவென்றால், ஒரு பெரிய குச்சியை எடுத்துக்கொண்டு கூச்சலிடுவது என்பதாகும். சரி, இதற்கு எதிராக நான் செல்ல வேண்டியிருந்தது. அதிகாரம் என்பது பெரிய குச்சியை ஏந்திக்கொண்டு கூச்சலிடுவதில் இல்லை என்பதை என் மாணவர்களுக்கு விளக்கினேன். உண்மையிலே, அது பாதுகாப்பின்மை மற்றும் அதிகாரமின்மையின் அறிகுறியாகும். நீங்கள் கத்த வேண்டுமென்றால், உங்களுக்கு அதிகாரம் இருக்காது. அதிகாரத்தின் திறவுகோல் அதிகாரத்தின் கீழ் இருப்பதுதான் என்று நான் அவர்களிடம் சொன்னேன். நீங்கள் அதிகாரத்தின் கீழ் இருந்தால், உங்களுக்கு அதிகாரம் இருக்கும்.
மோசேயின் உதாரணத்தை ஒரு கணம் பார்ப்போம். இது எண்ணாகமம் 12:3இல் மோசேயைப் பற்றி கூறப்பட்டுள்ளது:
3 மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.
எனவே, மோசே, அவருடைய காலத்தில், பூமியில் மிகவும் சாந்தகுணமுள்ள மனிதராக இருந்தார். மோசே பலவீனமானவரா? மோசேக்கு அதிகாரம் இருக்கவில்லையா? மிகவும் எதிராக இருந்தது. வேதாகமத்தில் மோசேயை விட மேலான அதிகாரம் பெற்ற எந்த மனிதப் பாத்திரமும் இல்லை, ஆனால் அவருடைய அதிகாரம் அவருடைய சாந்தத்திலிருந்து வந்தது.
மோசே தனது சாந்தத்தை அல்லது மென்மையை எவ்வாறு பெற்றார்? பதில் என்னவென்றால், அவரது வாழ்க்கையில் தேவனின் செயல்களுக்கு அடிபணிவதன் மூலம் பெற்றார். 40 வயதில், மோசே தனது சொந்த பலத்தில் தனது இஸ்ரவேல் மக்களை விடுவிக்க தயாராக இருந்தார். அவர் வெளியே சென்று, கோபமடைந்து, ஒரு எகிப்தியனைக் கொன்று, உயிருக்கு ஓட வேண்டியிருந்தது. தனது சொந்த பலத்தில் அதைச் செய்ய அவர் எடுத்த முயற்சி முற்றிலும் தோல்வியடைந்தது. அதன்பின் நாற்பது வருடங்கள் வனாந்தரத்தில் ஒரு பெயர் அறியாதவராய், தன் மாமனாரின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். உங்கள் மாமனாரின் ஆடுகளை கவனித்துக்கொள்வது – அதை கிங் ஜேம்ஸ் பதிப்பு “வனாந்தரத்தின் பின்புறம்” என்று அழைக்கிறது, இது மிகவும் தாழ்மையான வழி என்று நான் கற்பனை செய்கிறேன்.
அடுத்த நாற்பது வருடங்கள் மோசே அப்படித்தான் செய்தார். 80 வயதில் முடித்துவிட்டாரா? இல்லை, அவர் தொடங்க தயாராக இருந்தார். ஏன்? ஏனென்றால், அவர் தனது சொந்த பலத்தையும், தன்னம்பிக்கையையும் இழந்துவிட்டார். மனிதர்கள் வலிமை என்று அழைப்பதை மோசேயிடமிருந்து முற்றிலும் நீக்க தேவனுக்கு எண்பது ஆண்டுகள் பிடித்தன. ஆனால் அவர் தனது சொந்த பலத்தையும், தன்னம்பிக்கையையும் இழந்தவுடன், தேவனின் வலிமைக்கு அவரிடம் இடமிருந்தது, இது சாந்தத்தில் வெளிப்பட்டது.
நீங்கள் பார்க்கலாம், நாம் நமது சொந்த பலத்தில் செயல்படும் வரை, தேவனின் பலத்திற்கு இடமளிக்க மாட்டோம். ஏசாயா 40 ஆவது அதிகாரத்தில், பலம் இல்லாதவர்களுக்கு தேவன் பலத்தை பெருகப்பண்ணுகிறார் என்று கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் நமது பலத்தின் முடிவுக்கு வரும்போது, தேவனின் பலம் நம் வாழ்வில் தொடங்கும். நடத்தையில் நம்முடைய சொந்த பலத்தின் முடிவுக்கு வருவது சாந்தத்தில் வெளிப்படுகிறது.
இப்போது, வனாந்தரத்தில் இருந்த அந்த நாற்பது வருடங்களில் மோசேக்கு ஊக்கமளிப்பதற்கு மிகக் குறைவான சூழ்நிலைகள் இருந்தபோது எப்படித் தாங்கினார்? பதில் என்னவென்றால், அவன் தன் கண்களை தேவனின் மேல் வைத்தான். எபிரெயர் 11:27 இல் மோசேயைப் பற்றி இவ்வாறு கூறுகிறது:
27 விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.
அதரிசனமான அவரை மோசே எப்படி பார்த்தார்? அதாவது, வனாந்தரத்தில் இருந்த அந்த நாற்பது வருடங்கள் முழுவதும் அவன் எப்படி தேவனின் மீது கண்களை வைத்திருந்தான்? “விசுவாசத்தினாலே” என்று வேதம் கூறுகிறது. அதை மனதில் கொள்ளுங்கள். காணமுடியாததை காண நமக்கு உதவுவது விசுவாசம்தான். மேலும், நம் சூழ்நிலையில் நம்மை ஊக்கப்படுத்த எதுவும் இல்லாதபோது விசுவாசம்தான் நம்மைத் தொடர வைக்கிறது.
நீங்கள் கேட்கலாம், “சரி, தேவன் நம்மீது மென்மை அல்லது சாந்தத்தை உருவாக்க என்ன செய்ய வேண்டும்? வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு தனித்துவமான சொற்றொடரில் அதற்கான பதில் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். அந்த சொற்றொடர் “உடைந்த ஆவி” ஆகும். சங்கீதம் 51:17 இல் தாவீதின் வார்த்தை உள்ளது. இது ஏத்தியனான உரியாவின் மனைவியான பத்சேபாளிடம் விபச்சாரப் பாவத்தின் கொடூரத்தை உணர்ந்த பிறகு, மனந்திரும்புதலின் ஜெபத்தின் மத்தியில் இது வருகிறது. மிகுந்த மனவருத்தத்தில் (மனந்திரும்புதல்), அவர் தேவனுக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தி ஊற்றினார், சங்கீதம் 51 இல் இந்த அழகான ஜெபம் உள்ளது. ஆனால் வசனம் 17இல், சங்கீதத்தின் முடிவில், தாவீது இவ்வாறு கூறுகிறார்:
17 தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.
இன்று தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது, பலிபீடத்தின் மீது காளையோ அல்லது ஆடுகளோ அல்ல, ஆனால் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிற ஆழமான ஒன்று – உடைந்த ஆவி தான் அது. ஒப்புவிக்கப்பட்ட விருப்பத்திற்கும், உடைந்த ஆவிக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. ஒப்புவிக்கப்பட்ட சித்தம் சொல்கிறது, “நான் என்ன விலை கொடுத்தாலும் தேவனின் சித்தத்தைச் செய்யப் போகிறேன்.” பின்னர், தேவனின் விருப்பம் விரும்பத்தகாததாகவும், நாம் நினைத்தது போல் இல்லாதபோதும், பற்களைக் கடித்து, கைகளை இறுக்கி பிடித்துக்கொண்டு, “நான் தேவனின் சித்தத்தை செய்யப் போகிறேன்.” “நான் தேவனின் சித்தத்தை செய்யப் போகிறேன்.” என்று சொல்வோம். ஆனால் மிகப்பெரிய அளவிலான உள்போராட்டம் இருக்கும். தேவனின் விருப்பத்தை எதிர்க்கிற காரியம் நம்மில் நிறைய இருக்கிறது. நாம் வெளிப்புறமாக ஒத்துப்போகலாம், ஆனால் உள்ளத்தில் இன்னும் தேவனின் சித்தத்திற்கு எதிர்ப்பு இருக்கிறது.
தேவாலயத்தில் சிறுவன் ஒருவன் தன் தந்தையின் அருகே இருக்கையில் நின்று கொண்டிருக்கும் அந்தக் கதை எனக்கு நினைவிற்கு வருகிறது. அவன் எழுந்து நிற்கும் ஒவ்வொரு முறையும் அவனது தந்தை அவனை கீழே இழுத்து உட்கார வைத்தார். அது நடந்த மூன்றாவது முறை, தந்தை அவனை கீழே இழுத்து அடித்தார். அதனால் அந்த சிறுவன் அமர்ந்திருந்தான், ஆனால் அவன் தன் தந்தையை நிமிர்ந்து பார்த்து, “நான் வெளிபுறம் அமர்ந்திருக்கலாம், ஆனால் உள்ளே நான் எழுந்து நிற்கிறேன்!” என்றான். சரி, அது பெரும்பாலும் தேவனிடம் நம் அணுகுமுறையை போன்றது. நாம் வெளிப்புறமாக இணக்கமாக இருக்கிறோம், ஆனால் உள்ளே, நாம் இன்னும் எதிர்க்கிறோம். இப்போது, அதுதான், ஒப்புவிக்கப்பட்ட விருப்பத்திற்கும், உடைந்த ஆவிக்கும் உள்ள வித்தியாசம். உடைந்த ஆவி எதிர்வினையாற்றாது, எதிர்த்துப் போராடாது, பதில் சொல்லாது, அது தன்னை நியாயப்படுத்தாது, ஆனால் அது பரிசுத்த ஆவியானவர் வேலை செய்ய இடமளிக்கிறது.
ஒருமுறை தன் தாயுடனான உறவில் பெரும் பிரச்சனைகளை எதிர்கொண்ட இளம்பெண்ணின் சாட்சியத்தை கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. ஒவ்வொரு முறையும் அவளுடைய அம்மா அவளைக் கடிந்து கொள்ளும்போதும் அல்லது ஏதாவது செய்யுமாறு சொல்லும்போதும், அவள் பதிலுக்கு பதில் சொல்லி தன்னை நியாயப்படுத்த விரும்பினாள். ஆனால் அவள் ஒருநாள் இந்த சாட்சியை சொன்னாள்: அவள் தன் தாயுடனான சண்டையின்போது, அவள் சொன்னது, “உங்களுக்குத் தெரியுமா, அற்புதமான விஷயம் என்னவென்றால், நான் பதில் பேச விரும்பவில்லை.” அதுதான் உடைந்த ஆவியாகும்.
சரி, உடைந்த ஆவி உங்கள் வாழ்க்கையிலோ, அல்லது என்னுடைய வாழ்க்கையிலோ எப்படி வரும்? இரண்டு சாத்தியமான வழிகளை நான் உங்களுக்கு பரிந்துரைக்க விரும்புகிறேன். ஒன்று, மோசேயை போல படிப்படியான செயல்முறை மூலம். நாற்பது வருடங்கள் வனாந்தரத்தில். மற்றொன்று, தாவீதைப் போல நெருக்கடியின் மூலம். திடீரென்று, அவர் தனது பாவத்தின் கொடூரத்தை எதிர்கொண்டார், அவருடைய ஆவி உடைந்தது.
எனவே, இன்று எனது பேச்சை முடிக்கையில், நான் உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்: உடைந்த ஆவி உங்களில் வேலை செய்ய தேவனுக்கு அனுமதி கொடுப்பீர்களா? உண்மையான மென்மையா? உண்மையான சாந்தமா?
சரி, இன்றைக்கு எங்களின் நேரம் முடிந்துவிட்டது, ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நான் ஆவியின் கனியின் இறுதி வடிவமாகிய இச்சையடக்கத்தின் கனியைக் கையாள்வேன்.
குறியீடு: RP-R010-104-TAM









