வாழ்க்கை எனக்குக் கற்றுத்தந்த உண்மைகளையும், வெற்றி மற்றும் தோல்விக்கு இடையேயான வித்தியாசத்தை என் வாழ்க்கையில் உண்டாக்கியது போல உங்கள் வாழ்விலும் உண்டாக்க வல்ல உண்மைகளையும் பகிர்ந்துகொள்ளும்படி இந்தப் புதிய வாரத்துவக்கத்தில் உங்களுடன் மீண்டும் இருப்பது நல்லது. இன்றைக்கும் இந்த வாரம் முழுவதும், வேத வெளிப்பாட்டின் சிறந்த கருப்பொருள்களுள் ஒன்றான “தந்தைத்துவம்” என்பதன் அடிப்படையில் பகிரப்போகிறேன். விந்தையாக, இந்த கருப்பொருள் பல கிறிஸ்தவ வட்டாரங்களில் எப்படியோ புறக்கணிக்கப்பட்டதாக உள்ளது.

இந்தப் பாடத்தை வேதத்தில் படித்தது மட்டுமன்றி, எனது சொந்த தனிப்பட்ட அனுபவத்தில் சந்தித்ததுமுண்டு. நானும் என்னுடைய முதல் மனைவியும் ஒன்பது பேர் கொண்ட குடும்பத்தை வளர்த்தோம், சமீபத்தில் என்னுடைய இர‌ண்டாவது மனைவி எங்கள் மொத்த குடும்பத்தில் இன்னும் மூன்று பிள்ளைகளை கூட்டியுள்ளார். ஒ‌ட்டுமொ‌த்தமாக ஒரு டஜன் நபர்களுக்கு தகப்பன் என்ற உறவில் நான் நிற்கிறேன், அதிலும் பலர் வளர்ந்து தங்களுக்கான சொந்தக் குடும்பங்களைப் பெற்றுள்ளனர். எப்படியிருந்தாலும், இன்று நான் ஆரம்பிக்க விரும்புவது மனிதத் தந்தைத்துவத்தைப் பற்றியது அல்ல.

முதலாவது, தேவனுடைய தந்தைத்துவத்தை பற்றி நான் பேச விரும்புகிறேன். இதுவே பிரபஞ்சத்திற்கு பின்னால் இருக்கும் மிகப்பெரிய உண்மை. நமக்கொரு தந்தை உண்டு அவரே நம்முடைய தேவன், பிதாவாக இருந்து இந்த பிரபஞ்சத்தை உருவாக்கிய ஒரு தந்தை, இந்த பிரபஞ்சத்தின் அனைத்து காட்சிகளிலும் நம்முடைய பிதா தனது தந்தைத்துவத்தை முத்திரையாக வைத்திருக்கிறார் ஆகிய சத்தியங்களுக்கு பின்னாக இருக்கக்கூடிய உண்மையும் இதுவே. எபேசியர் 3:14-15 இல் பவுல் தன்னுடைய பெரிதும் அற்புதமான ஒரு ஜெபத்தை ஜெபிக்கிறார். அவர் சொல்கிறார்:

14 இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய, 15 நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு,

இதில் பிதா என்ற வார்த்தை, பாட்ரியா என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தை கிரேக்க மொழியில் இலக்கியத்தின்படி ஒரு தந்தையை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, இதன் நேரடியான மற்றும் எழுத்தியல்பான மொழிபெயர்ப்பு “தந்தைத்துவம்” ஆகும்.

ஒரு குறிப்பிடத்தக்க சத்தியம் என்னவென்றால் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து தந்தைத்துவமும் கடைசியாக தேவனுடைய தந்தைத்துவத்திற்கு திரும்ப போய்ச் சேரும், அதோடுகூட இந்த தந்தைத்துவம் துவங்கியது பூமியில் அல்ல, அது பரலோகத்தில் துவங்கப்பட்டது.

தந்தைத்துவம் என்பது தேவனோடு நித்தியமாய் உள்ளது. இது காலத்தோடு துவங்கியது அல்ல. இது மனித வரலாற்றோடு துவங்கியதும் அல்ல. சொல்லப்போனால், இது நித்தியத்தில் துவங்கிய ஒன்று. நித்திய காலமாய் தேவன் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாக (தந்தையாக) இருக்கிறார் என்பது வேதத்தின் பல பாகங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. யோவானுடைய சுவிசேஷத்தில், யோவான் சொல்கிறார், “ஆதியிலே .....அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது.” இது சிருஷ்டிப்புக்கு முன்பாகவே நடந்த காரியம். தெய்வீகமான வார்த்தை, தேவனுடைய நித்திய குமாரன், பிதாவோடு இருந்தார். அவர் பிதாவின் மடியில் இருந்ததாக வேதம் சொல்கிறது. தேவனுக்கும் குமாரனுக்கும் இடையேயான நெருங்கிய மற்றும் தனிப்பட்ட உறவுமுறை சிருஷ்டிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே இருந்தது. இது கிறிஸ்தவ வெளிப்பாட்டின் சாலச்சிறந்த அம்சமாகும். இதுவே கிறிஸ்தவத்தை, இந்த உலகில் நான் சந்தித்த எந்த ஒரு மத நம்பிக்கையிலிருந்தும் வேறுபடுத்தி காட்டுகிறது. இது, குறிப்பிட்ட மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த தேவனுடைய குணாதிசயத்தை நமக்கு வெளிப்படுத்துகிறது, அதென்னவென்றால் தேவனுக்குள் தந்தைத்துவமானது நித்திய காலமாய் உள்ளது. அங்கே ஒரு உறவு உண்டு.

இயேசு இந்த பூமிக்கு வந்தபோது, அவருடைய பிரதான நோக்கம் நம்மை அவரிடமும் பிதாவிடமும் திருப்புவது தான். இதை பல இடங்களில் அவர் குறிப்பிட்டுள்ளார். உதாரணமாக, 1 பேதுரு 3:18 இல், பேதுரு சொல்கிறார்,

ஏனெனில், கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.

இயேசு ஏன் மரித்தார்? நம்மை தேவனிடம் கொண்டு சேர்ப்பதற்காகத் தானே. இயேசு முடிவு அல்ல; அவர் தான் வழி. யோவான் 14:6 இல் இயேசு தன்னைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

இயேசு வழி; பிதா நாம் சேருமிடம். நம்முடைய கிறிஸ்தவ விசுவாசத்தில் அநேக நேரங்களில், நாம் பேசும்போது தேவனுடைய நோக்கத்தை உண்மையாகவே விட்டுவிடுகிறோம். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை குறித்து இரட்சகராக, பரிந்து பேசுபவராக, மத்தியஸ்தராக மற்றும் பல விதங்களில் பெரிய காரியங்களை பேசுகிறோம். அவை எல்லாம் அருமையானவைகள் தான், ஆனால் தேவனுடைய நோக்கத்தில் அவை சற்று குறைவாகவே உள்ளது. தேவனுடைய திட்டம் என்பது நாம் குமாரனிடம் வருவது மட்டுமல்ல, அவர் மூலமாய் பிதாவிடம் வர வேண்டும்.

யோவான் 17 இல் இயேசு செய்த ஜெபத்தில் இயேசு பயன்படுத்திய மொழி நடையில் ஏதோ ஒரு அழகு உள்ளது. அந்த ஜெபம் தொடங்குவது பிதாவே என்ற வார்த்தையில் தான், அதோடு கூட பிதாவே என்ற வார்த்தை அந்த ஜெபத்தில் ஆறு முறை வருகிறது. இயேசு தேவனுடைய நாமத்தை தன்னுடைய சீஷர்களுக்கு தெரியப்படுத்தியதை குறித்து அங்கே பேசுகிறார். வசனம் 6 இல் அவர் சொல்கிறார்:

6 "நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன்..." வசனம் 11 லும் அதைச் சொல்கிறார் 11 "...பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்." அந்த ஜெபத்தின் முடிவிலும் அதையே திரும்பவும் சொல்கிறார்: 26 "நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்."

இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு யாருடைய நாமத்தை தெரியப்படுத்த விசேஷமாக வந்தார்? அது யெகோவா என்ற பரிசுத்த நாமம் அல்ல; ஏனென்றால், யூத மக்கள் அந்த நாமத்தை 15 நூற்றாண்டுகளாக அறிந்திருந்தார்கள். இயேசு அவர்கள் அறிய வேண்டுமென்று விரும்பின அந்த புதிய மற்றும் விசேஷ வெளிப்பாடு, உன்னத நோக்கம், நாமம் என்னவாயிருந்தது? அந்த நாமம் பிதா. அதுவே தேவனுடைய உன்னதமான நாமம். தேவனுடைய தன்மையையும், அவருடைய நித்திய சுபாவத்தையும் இந்த நாமத்தை விட தெளிவாக விளக்கிச் சொல்லும் வார்த்தை எந்த மனித மொழிகளிலும் கிடையாது. ஆகையால், பிதா என்ற வெளிப்பாடுதான் மிக உன்னதமான தேவனுடைய வெளிப்பாடு. அதுவே புதிய ஏற்பாட்டின் மிக உன்னதமான நோக்கமும் ஆகும்.

நம்மை தேவனிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே இயேசு தாமே இவ்வுலகிற்கு வந்தார். இந்த தேவனுடைய வெளிப்பாட்டில் நாம் குறைவுபட்டால், இரட்சிப்பின் நோக்கத்தினுடைய முழுமையான செயல்பாட்டில் நாம் குறைவுபட்டு போவோம். தேவனுடைய இந்த வெளிப்பாட்டின் முழுமை மற்றும் பிதாவாகிய தேவனின் நேரடி உறவுக்குள் நாம் வரும்போது, இன்றைய கலாச்சாரத்தில் வாழும் அநேக மக்கள் வாழ்வில் இழந்து போய் இருக்கின்ற உணர்வு ரீதியான அனுபவங்களை இந்த உறவு நமக்கு மீட்டுத்தரும். இந்த வெளிப்பாடு மற்றும் உறவுமுறை நமக்கு பெற்றுத் தரும் மூன்று காரியங்கள் அடையாளம், சுயமதிப்பு மற்றும் பாதுகாப்பு.

அடையாளம் என்பது நாகரிக மனிதனின் உண்மையான பிரச்சனை. இதன் மீது வர்ணனையாக சமீபத்தில் வெளிவந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியாக நிகழ்ச்சியான ரூட்ஸ், மிகவும் வெற்றியடைந்தது. அந்த கதையின் சாராம்சம் என்னவென்றால், ஒரு மனிதனின், தான் எங்கே இருந்து வந்தேன் என்ற தேடல் ஆகும். இதில் தான் முழு மனுக்குலமும் தீவிரமாக உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் அறிய விரும்புவது அவர்கள் எங்கே இருந்து வந்தார்கள்? அவர்களுக்கு பின்னாக இருப்பது யார்? இதெல்லாம் எப்படி தொடங்கியது? நான் யார்? என்பவையே. என்னுடைய நம்பிக்கையானது ஒரு நபர் தன்னுடைய தந்தை யார் என்பதை அறியும் வரை, நான் யார் என்ற கேள்விக்கு பதில் தர முடியாது என்பதுதான். இதனை வேதாகமமும், மனோதத்துவமும் ஒப்புக்கொள்கின்றன. இன்றைக்கு பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கிடையேயான மனித உறவு உடைந்து போய் அடையாள பிரச்சனையை உருவாக்கியுள்ளது. இந்த அடையாள பிரச்சனைக்கு கிறிஸ்தவம் தருகிற பதில், மனிதர்களை இயேசு கிறிஸ்துவின் மூலம் பிதாவாகிய தேவனுடன் நேரடி தனிப்பட்ட உறவுக்குள் கொண்டு வருவதுதான்! தேவனை தகப்பனாக அறிந்துள்ள ஒரு நபருக்கு அடையாளப் பிரச்சனை இருக்காது; மேலும், அந்த நபர், தான் யார் என்பதை அறிவார். அவருடைய தகப்பன் அண்ட சராசரத்தை சிருஷ்டித்தவர். அவருடைய தகப்பன் அவரை நேசிக்கிறார் மற்றும் ஆதரிக்கிறார்.

தந்தை என்ற தேவனுடைய இந்த வெளிப்பாட்டின் மூலம் வழங்கப்படும் இரண்டாவது தேவைக்கு அது நம்மைக் கொண்டுவருகிறது. அது சுய மதிப்பின் தேவை. என் ஊழியத்தில் எத்தனை பேரை நான் கையாண்டிருக்கிறேன் என்று எண்ண முடியவில்லை, அவர்களுடைய பெரிய பிரச்சனை அவர்கள் தங்களை போதுமான அளவு மதிக்கவில்லை என்பதுதான். அவர்கள் தங்களைப் பற்றிய மிகக் குறைவான எண்ணம் கொண்டிருந்தனர், அது அவர்களுக்கு பல ஆவிக்குரிய மற்றும் உணர்ச்சி ரீதியான வேதனைகளை ஏற்படுத்தியது. யோவான் தனது முதல் நிருபத்தின் 3:1 இல் சொல்வதைக் கேளுங்கள்:

1 "நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்."

நாம் தேவனின் பிள்ளைகள் என்பதையும், தேவன் நம்மை நெருக்கமாக, தனிப்பட்ட முறையில் நேசிக்கிறார் என்பதையும், அவர் நம்மீது அக்கறை காட்டுகிறார் என்பதையும், அவர் ஒருபோதும் நமக்கு மிகவும் பிஸியாக இல்லை என்பதையும், அவர் நம்முடன் நேரடியான மற்றும் தனிப்பட்ட உறவை விரும்புகிறார், அது நமக்கு சுய மதிப்பைத் தருகிறது என்பதையும் நாம் உண்மையில் புரிந்துகொள்ளும்போது, அது நமக்கு சுய மதிப்பைப் பெற்றுத்தருகிறது. மக்களுடைய வாழ்வில் இது மீண்டும் மீண்டும் நடப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

ஒருமுறை நான் ஒரு கூட்டத்தில் இருந்தபோது நான் ஒரு பெண்ணிடம் ஓடியது எனக்கு நினைவிருக்கிறது- அதாவது உண்மையில் அவளை நோக்கி ஓடினேன். நாங்கள் கணிசமான வேகத்தில் எதிர் திசையில் சென்று கொண்டிருந்தோம். அவள் தன்னை நிறுத்திக்கொண்டு, “மிஸ்டர். பிரின்ஸ், நீங்கள் என்னுடன் பேச வேண்டும் என்று தேவன் விரும்பினால், நாம் நிச்சயம் சந்திப்போம் என்று நான் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன்" என்று சொன்னாள்.

நான் சொன்னேன், "சரி, நாம் சந்தித்துவிட்டோம், ஆனால் நான் உங்களுக்கு இரண்டு நிமிடங்கள் மட்டுமே கொடுக்க முடியும். நான் மிகவும் வேலையாக உள்ளேன்."

அவளுக்கு என்ன பிரச்சனை என்று அவள் என்னிடம் கூற ஆரம்பித்தாள், சிறிது நேரம் கழித்து நான் அவளை குறுக்கிட்டு, "என்னை மன்னிக்கவும், ஆனால் எனக்கு ஒரு நிமிடம் மட்டுமே உள்ளது, ஆனால் உங்கள் பிரச்சனை எனக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.

இந்த ஜெபத்தில் என்னைப் பின்பற்றுவீர்களா?" என்று சொல்லி, நான் அவளை ஒரு ஜெபத்தில் வழி நடத்தினேன், அதில் அவள் தேவனுக்கு நன்றி சொன்னாள், தேவன் அவளுடைய தந்தை என்றும், அவள் அவருடைய குழந்தை, தேவன் அவளை நேசித்தார், தேவன் அவளைக் கவனித்துக்கொண்டார், அவள் சிறப்பு வாய்ந்தவள், அவள் இந்த பிரபஞ்சத்தின் சிறந்த குடும்பத்தைச் சேர்ந்தவள் என்றெல்லாம் சொன்னாள். பிறகு, “குட் பை, நான் போக வேண்டும்” என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, அந்தப் பெண்ணிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது, அதில் அவள் சொன்னாள், “உங்களுடன் ஒன்றாக இருந்ததும், பிரார்த்தனை செய்ததும், வாழ்க்கை மீதான எனது அனைத்து அணுகுமுறையையும் முழுவதுமாக மாற்றிவிட்டது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். முதன்முறையாக, என் சுய மதிப்பை நான் உணர்ந்திருக்கிறேன்!"

தந்தையின் வெளிப்பாட்டின் மூலம் தேவனின் மூன்றாவது பெரிய கொடை பாதுகாப்பு ஆகும். பிரபஞ்சத்திற்குப் பின்னால் ஏதோ ஒரு விஞ்ஞான சக்தியோ அல்லது சில பெருவெடிப்போ மட்டுமல்ல, நம்மை நேசிக்கும் ஒரு தந்தை இருக்கிறார்.

எனது நண்பர் ஒருவர் ஒருமுறை நகரத்தின் தெருக்களில் தனிமையாகவும் பயமாகவும் உணர்ந்தார், வெறிச்சோடிய இரவுநேரம், காற்றும் பலமாக வீசுகிறது, மேலும் அவர் அதைச் சமாளிக்கப் போகிறாரா இல்லையா என்று அவருக்குத் தெரியவில்லை. தெரு முனையில் நின்றுகொண்டே அவர் மீண்டும் மீண்டும் சொல்லத் தொடங்கினார், “அப்பா . . . அப்பா . . . அப்பா . . . அப்பா." அவர் அதைச் செய்யும் வேளையில், அவருக்கு பாதுகாப்பு வந்தது. அவரைச் சுற்றி விஷயங்கள் குளிர்ச்சியாகவும் இருண்டதாகவும் இருந்தாலும், தேவன் தனது குழந்தைகளுக்காக உருவாக்கிய பிரபஞ்சத்தில், அவர் தேவனின் குழந்தை என்பதை அவர் அறிந்திருந்தார்.

சரி. இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களிடம் வருவேன். நாளை நான் மனித தந்தைத்துவத்தைப் பற்றி பேசுவேன்.

லைக்
பகிரவும்