தேவனுடைய வார்த்தை - நம் கண்ணாடி

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: செப்டம்பர் 2026
Read Time: 10
தேவனுடைய வார்த்தை நம் இதயத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகச் செயல்பட்டு, நமது உண்மையான நிலையை எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பதைக் கண்டறியுங்கள். 'தேவனுடைய வார்த்தை உங்களுக்கு என்ன செய்யும்' தொடரின் 9-ஆம் பகுதியான 'தேவனுடைய வார்த்தை - நமது கண்ணாடி' என்பதில், வேதாகமம் எவ்வாறு தாழ்மை மற்றும் கீழ்ப்படிதலின் அவசியத்தை உணர்த்துகிறது என்பதை டெரெக் பிரின்ஸ் விளக்குகிறார். தேவனுடைய வார்த்தையைச் செயல்படுத்துவதன் மூலம் நற்செய்தியின் உருமாற்றும் வல்லமையை அனுபவியுங்கள்.
Transcript
“தேவனுடைய வார்த்தை உங்களுக்கு என்ன செய்யும்” என்பதில் இருக்கும் அற்புதமான ரகசியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் இன்று மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. நேற்று, தேவனுடைய வார்த்தை நம்மைச் சுத்தப்படுத்துவதற்கும், நம்மை பரிசுத்தப்படுத்துவதற்குமான வழி; அதாவது நம்மை பரிசுத்தமாக்குவது என்பதைப் பற்றி பேசினேன். தேவனின் இறுதி நோக்கம் நம்மை தூய்மையாக்குவதற்கும், பாவத்திலிருந்து நம்மைப் பிரிப்பதற்கும் அப்பாற்பட்டது என்பதை நான் விளக்கினேன். அவருடைய சொந்த பரிசுத்தத்தில் நம்மைப் பங்குகொள்ள வைப்பதே அவருடைய இறுதி நோக்கமாகும். பலருக்கும் அறிமுகமில்லாத, தேவனுடைய வார்த்தையின் ஒரு அம்சத்தைப் பற்றி இன்று நான் பேசப் போகிறேன்: தேவனுடைய வார்த்தை நம் கண்ணாடி போன்றது. யாக்கோபு 1:21-25 இல், தேவனுடைய வார்த்தை நம்மில் செயல்படுவதையும், அதை நாம் எப்படிப் பெறுவது என்பதையும் பற்றி இதில் வாசிக்கிறோம்:
21 ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள். [ஆகவே, நமக்கு இரட்சிப்பைக் கொண்டுவரக்கூடியதும், நம் ஆத்துமாக்களில் பதிக்கப்பட்ட ஒன்றாகிய வார்த்தையைப் பெற வேண்டும். ஆனால், வார்த்தையின்படி நாம் செயல்பட வேண்டும் என்று யாக்கோபு எச்சரிக்கிறார்.] 22 அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாகவும் இருங்கள். 23 என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான். 24 அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம் விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான். 25 சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப் பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.
எனவே, தேவனுடைய வார்த்தை நம்மிடம் வரும்போது, நமக்கு இரண்டு கடமைகள் உள்ளன: பணிவுடன் பெற்றுக்கொள்ளவேண்டும் மற்றும் அது சொல்வதை செயல்படுத்த வேண்டும். பின்னர், யாக்கோபு கண்ணாடியின் உதாரணத்தைப் பயன்படுத்துகிறார். அவர் சொல்கிறார், நாம் தேவனுடைய வார்த்தையை படிக்கும்போது அல்லது அதை எதிர்கொள்ளும்போது, இது நம் கண்களுக்கு முன்னால் நிற்கும் கண்ணாடியைப் போன்றது, இது நாம் உண்மையில் எப்படி இருக்கிறோம் என்பதை காண்பிக்கிறது. இது நமது வெளிபுற அனுபவத்தை காட்டாது, ஆனால் நமது உள்ளார்ந்த இயல்பையும் தன்மையையும் காட்டுகிறது. இப்போது, பல வருடங்களுக்கு முன்பு என் அனுபவத்தில் இது உண்மையென்று நிரூபணமானது.
நான் அப்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராக இருந்தேன். வேதத்தை தத்துவத்தின் வேலையாக படிப்பது எனது கடமையாக உணர்ந்தேன், அதன் அதிகாரத்தை நம்பவில்லை அல்லது அதற்கும் நான் படித்த மற்ற பல புத்தகங்களுக்கும் இடையில் எந்த வித்தியாசத்தையும் காட்டவில்லை. படிப்படியாக, வேதத்தை படிப்பது என்னை முற்றிலும் மாற்றியது. மேலும், நான் வேதத்தைப் படித்தபோது ஏற்பட்ட மாற்றத்தை விவரிக்கும் என் புத்தகமான, விசுவாசத்தின் அடித்தளம் (ஃபவுண்டேஷன் ஃபார் ஃபேத்) அதிலிருந்து ஒரு பகுதியை உங்களுக்கு படிக்க விரும்புகிறேன். யாக்கோபு 1இல் உள்ள இந்தப் பகுதியை நான் இப்போது குறிப்பிடுகிறேன்.
யாக்கோபு இங்கே தேவனுடைய வார்த்தையின் செயல்பாட்டை ஒரு கண்ணாடியுடன் ஒப்பிடுகிறார். ஒரே வித்தியாசம் என்னவென்றால், ஒரு சாதாரண கண்ணாடிப் பொருள், நமது “இயற்கை முகம்” –என்று யாக்கோபு அழைப்பதை – அதாவது நமது வெளிப்புற, உடல் அம்சங்கள் மற்றும் தோற்றத்தை மட்டுமே காட்டுகிறது. மறுபுறம், தேவனுடைய வார்த்தையாகிய கண்ணாடியை நாம் பார்க்கும் போது, நமது வெளிப்புற, உடல் அம்சங்களை வெளிப்படுத்தாது, ஆனால் நமது உள்ளார்ந்த, ஆன்மீக இயல்பு மற்றும் நிலையை வெளிப்படுத்துகிறது. எந்த ஒரு கண்ணாடிப் பொருளோ, மனித ஞானத்தின் வேலைப்பாடோ வெளிப்படுத்தமுடியாத நம்மைப் பற்றிய விஷயங்களை இது வெளிப்படுத்துகிறது – வேறு வழியிலோ அல்லது வேறு எந்த முறைகளிலோ நாம் அறிந்து கொள்ள முடியாத விஷயங்கள். இதை யாரோ ஒருவர் சுருக்கமாக இவ்வாறு சொல்லியிருக்கிறார்கள், “நீங்கள் உங்கள் வேதத்தை படிக்கும்போது, வேதமும் உங்களைப் படிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” எனது சொந்த அனுபவத்தில் இதை நான் எவ்வளவு உறுதியாகவும், எவ்வளவு தெளிவாகவும் நிரூபித்தேன் என்பதை பல வருடங்கள் கடந்த பிறகும் என்னால் நினைவுகூர முடிகிறது. நான் முதன்முதலில் வேதாகமத்தை ஒரு சந்தேகவாதியாகவும், அவிசுவாசியாகவும் படிக்க ஆரம்பித்தேன் – ஒரு மாணவன் மற்றும் தத்துவ ஆசிரியரின் பின்னணியில். உலகில் உள்ள பல தத்துவ அமைப்புகளில் ஒன்றாக மட்டுமே நான் அதை அணுகினேன். இருப்பினும், அதை நான் தொடர்ந்து படிக்கும்போது, என் சொந்த விருப்பத்திற்கு எதிராகவும் கூட, எனக்குள் நிகழும் சில விசித்திரமான மற்றும் ஆழமான மாற்றங்களை நான் உணர்ந்தேன். எனது அறிவுசார்ந்த மேன்மையும், தன்னம்பிக்கை மற்றும் தன்னிறைவு பற்றிய எனது மனப்பான்மையும் சிதையத் தொடங்கியது. பண்டைய கிரேக்க தத்துவஞானியின் அணுகுமுறையை நான் ஏற்றுக்கொண்டேன், அவர் சொன்னது, “மனிதனே அனைத்தின் அளவுகோலாயிருக்கிறான்.” எனது சொந்த அறிவுசார்ந்த மற்றும் விமர்சன திறன்களால் நான் படிக்க விரும்பும் எந்தவொரு புத்தகத்தையும் அல்லது ஞான அமைப்பையும் அளவிட முடியும் என்று நான் கருதினேன். ஆனால், இப்போது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது, நான் வேதாகமத்தை படித்தபோது, என்னால் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் கூட, நானும் அல்ல எந்த மனிதனாலும் அல்லாத சில தரத்தால் நான் அளவிடப்படுகிறேன் என்பதை உணர்ந்தேன். பெல்ஷாத்சாரைப் போல, அவனுடைய விருந்தின் நேரத்திலே, விருப்பமில்லாத வார்த்தைகள் என் கண்களுக்கு முன்பாக திறக்கப்பட்டது: “நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய்.” வெளிப்புற சூழ்நிலையில் எந்த சிறப்பு மாற்றமும் இல்லாமல், நான் உள்ளுக்குள் அமைதியற்றவனாகவும், அதிருப்தியாகவும் இருந்தேன். முன்பு என்னை ஈர்த்து ஆக்கிரமித்திருந்த பல்வேறு வகையான இன்பங்களும் செயல்பாடுகளும், திசைத்திருப்பவோ அல்லது மகிழ்விக்கவோ தங்கள் சக்தியை இழந்தன. என்னால் விவரிக்கவோ அல்லது திருப்திப்படுத்தவோ முடியாத சில ஆழமான தேவைகளை எனக்குள் அதிகளவில் உணர்ந்தேன். என்னால் தெளிவாக புரிந்துகொள்ள முடியவில்லை, ஆனால் அவருடைய வார்த்தையின் கண்ணாடி மூலமாக, என் சொந்த உள்தேவை மற்றும் வெறுமை பற்றிய உண்மையை தேவன் எனக்குக் காண்பித்தார். பல மாதங்களுக்கு பிறகு, எனது ஆவிக்குரிய அறியாமையிலும், குருட்டுத்தன்மையிலும் கூட, எனது தேவையின் இந்த வெளிப்பாடு, மனத்தாழ்மையுடனும், நேர்மையுடனும் தேவனைத் தேடும்படி என்னை தூண்டியது. இந்த வழியில் அவரைக் கண்டுபிடிப்பது, அவருடைய எழுதப்பட்ட வார்த்தையின் மூலமாக என் தேவையை வெளிப்படுத்தின அவரே, அவருடைய உயிருள்ள வார்த்தையின் நபரான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் அதை முழுமையாக திருப்திப்படுத்தவும் முடிந்தது என்பதை நான் கண்டறிந்தேன்.
சரி, அது எனது தனிப்பட்ட சாட்சி. எந்த மனித ஞானமோ அல்லது தத்துவமோ அல்லது அறிவுசார்ந்த ஆய்வுகளோ எனக்கு வெளிப்படுத்த முடியாத விஷயங்களைக் காண்பிக்க வேதாகமம் என் வாழ்க்கையில் ஒரு கண்ணாடியாக இருந்தது. இருப்பினும், நினைவில் கொள்ளுங்கள், நாம் பார்ப்பதைச் செயல்படுத்தினால் மட்டுமே கண்ணாடி நமக்கு உதவும். கண்ணாடியில் பார்க்கும்போது, முகம் அழுக்காக இருப்பதைக் கண்டால் நாம் போய் கழுவ வேண்டும். நம் உடைகள் ஒழுங்காக இல்லாவிட்டாலோ, அல்லது தலைமுடி சரியாக இல்லாவிட்டாலோ, நாமே சென்று தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ள வேண்டும். அது போலவே, நாம் தேவனுடைய வார்த்தையின் கண்ணாடியில் பார்க்கும்போதும் செய்ய வேண்டும். இது நம் வாழ்வில் அசுத்தமான மற்றும் ஒழுங்கற்ற விஷயங்களைக் காட்டுகிறது. ஆனால், இந்த விஷயங்களைப் பார்த்த பிறகு நாம் தேவையான மாற்றங்களைச் செய்து, தேவனின் தேவைகளுக்கு ஏற்ப நம் வாழ்க்கையைக் கொண்டு வந்தால் மட்டுமே அது நமக்கு உதவுகிறது.
அப்படியானால், தேவனுடைய வார்த்தையின் கண்ணாடி நம் உள் நிலையை நமக்குக் காட்டும்போதும், தவறான விஷயங்களை, சுத்திகரிப்பு அல்லது சரிசெய்தல் அல்லது ஒழுங்கமைக்க வேண்டிய விஷயங்களைக் காட்டும்போதும், அதற்கு பொருத்தமான பதில்கள் என்ன? தேவையான மூன்று விஷயங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். முதலாவது, நாம் அந்த வெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்வோம். நாம் அதனுடன் வாதிடவேண்டாம். “அது சரியே. நான் உண்மையில் அப்படித்தான் இருக்கிறேன்.” என்று நாம் சொல்லவேண்டும். இரண்டாவதாக, தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எப்போதும் அவருடைய வெளிப்பாடுகளுடன் வரும் என்று நாம் நம்புவோம். மூன்றாவதாக, விசுவாசத்தின் மூலம், தேவனுடைய ஏற்பாட்டை உபயோகித்துக் கொள்வோம்.
இப்போது, நாம் இந்த மூன்று எளிய வழிமுறைகளை நாம் செய்தால், கண்ணாடி நமக்குக் காண்பிக்கும் ஒரு அற்புதமான மாற்றம் வரும். ஏனெனில், அது கிறிஸ்து இல்லாமல், நமது பாவ நிலையில் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதைக் காட்டாது, ஆனால், கிறிஸ்துவுக்குள் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை அது நமக்குக் காண்பிக்கும். அது நமக்குள் நிகழ்ந்த ஓர் அற்புதமான உள்மாற்றத்தைக் காட்டும். மேலும், 2 கொரிந்தியர் 5: 17 இல் சொல்லப்பட்ட விஷயங்களைப் பார்க்கத் தொடங்குவோம்.
17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கும்போது கண்ணாடி நமக்குக் காட்டுவது இதுதான். பின்னர் இன்னும் கொஞ்சம் மேலே, 2 கொரிந்தியர் 5:21 இல்:
21 நாம் அவருக்குள் [இயேசு] தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை [அது இயேசுவை] நமக்காகப் பாவமாக்கினார்.
நாம் இப்போது கண்ணாடியில் பார்க்கும்போது, நம்முடைய பாவமான நிலையில் நம்மைப் பார்ப்பதில்லை, ஆனால் கிறிஸ்து மீது சுமத்தப்பட்ட விசுவாசத்தின் மூலம் நாம் தேவனுடைய நீதியோடு நம்மைக் காண்கிறோம். நாம் ஏசாயா 61:10 க்கு திருப்புவோம், அங்கே அது சொல்கிறது:
10 கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக் கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக் கொள்ளுகிறதற்கும், ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்.
நாம் கிறிஸ்துவில் இருக்கும்போது கண்ணாடி நமக்குக் காட்டுவது இதுதான். நமது சுயநீதி, நமது சொந்த சாதனைகள், புத்திசாலித்தனம் மற்றும் அறிவுசார்ந்த திறன் போன்ற அழுக்கு துணிகளை இனி நாம் பார்க்க மாட்டோம், ஆனால் நாம் முற்றிலும் மாறுபட்ட பாணியில் ஆடை அணிவதைப் பார்க்கிறோம். இரட்சிப்பின் வஸ்திரத்தோடும், இயேசு கிறிஸ்துவின் நீதியாகிய, நீதியின் சால்வையோடும் இருப்போம், மேலும், தேவன் நமக்கு ஆவிக்குரிய கிருபையும், ஆவிக்குரிய அழகையும் வழங்குவதை நாம் பார்க்க ஆரம்பிக்கிறோம்.
கண்ணாடியைப் பற்றிய மற்றொரு அழகான பகுதியை 2 கொரிந்தியர் 3:18 இல் நான் உங்களுக்குப் படிக்க விரும்புகிறேன்.
18 நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.
மாற்றத்தில் தொடர்ச்சியான செயல்முறை உள்ளதை நீங்கள் காணலாம். எல்லா நேரங்களிலும் நாம் தேவனுடைய வார்த்தையின் கண்ணாடியில் பார்க்கிறோம். நாம் பரிசுத்த ஆவியானவருக்கு நாம் திறந்திருக்கிறோம், பரிசுத்த ஆவியானவர் நாம் எதைப் பார்க்கிறோமோ அதைப் போலவே நம்மை மாற்றுகிறார். நாம் இயேசுவைப் பார்க்கிறோம், பரிசுத்த ஆவியானவர் நம் இதயத்தில் இயங்குகிறார், அந்த வகையில் நாம் இயேசுவைப் போல் ஆகிறோம். மீண்டும் கண்ணாடியில் திரும்பப் பார்க்கிறோம், நாம் இயேசுவின் புதிய பார்வையைப் பெறுகிறோம். பரிசுத்த ஆவியானவர் அந்த வகையில் நம்மை மாற்றுகிறார். எனவே, இந்த கண்ணாடியை நாம் எவ்வளவு அதிகமாகப் பார்க்கிறோமோ, அவ்வளவு அதிகமாக இந்தக் கண்ணாடியில் வெளிப்படும் கர்த்தரின் மகிமையைக் காண்கிறோம், பரிசுத்த ஆவியானவரால் அவ்வளவு அதிகமாக நாம் மாற்றப்படுகிறோம். இந்த முக்கியமான உண்மையை மனதில் கொள்ளுங்கள்: தேவனுடைய வார்த்தையின் கண்ணாடியில் நாம் பார்க்கும்போதுதான் ஆவியானவர் நம்மை மாற்றுகிறார். கண்ணாடியில் இருந்து நம் கண்களை எடுக்கும்போது, நாம் மனித ஞானம் அல்லது மனித கோட்பாடுகள் அல்லது மனித இறையியலுக்கு திரும்பும்போது, பரிசுத்த ஆவியானவர் இனி நம்மீது செயல்பட முடியாது. நாம் விசுவாசத்தில், தேவனுடைய வார்த்தையைப் பார்க்கும்போது பரிசுத்த ஆவியானவர் செயல்படுகிறார், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதையும், கிறிஸ்துவில் நாம் என்னவாக மாறமுடியும் என்பதையும் அது நமக்கு வெளிப்படுத்த அனுமதிக்கிறது. பின்னர் நாம் தொடர்ந்து மகிமையின் மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். தேவனுடைய ஆவியானவர் நமக்குள் இயங்கி, நம் இதயங்களிலும், நம் வாழ்விலும் கிரியை செய்து, வார்த்தையின் கண்ணாடியில் நாம் பார்த்ததைப் போன்றே நம்மை உருவாக்குகிறார்.
சரி, இன்றைக்கு நம் நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் உங்களுடன் மீண்டும் வருவேன். “தேவனுடைய வார்த்தை உங்களுக்கு என்ன செய்யும்” என்ற இந்த தலைப்பில் எனது கடைசிப் பேச்சை உங்களிடம் கொண்டு வருவேன். “தேவனுடைய வார்த்தை நமது நீதிபதி” என்பதைப் பற்றி பேசுவேன்.
குறியீடு: RP-R006-104-TAM









