வழிகாட்டுதல்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 10
"தேவனுடைய வாக்குத்தத்தங்களின் தேசத்தில் நடத்தல்" தொடரின் 7-ஆம் பகுதியான "வழிநடத்துதல்" புத்தகத்தில், டெரெக் பிரின்ஸ் தெய்வீக வழிநடத்துதலைப் பற்றி விளக்குகிறார். உங்கள் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவருடைய ஞானத்தை நம்புவதன் மூலம் வாழ்க்கையின் சரியான பாதையை எப்படிக் கண்டடைவது என்பதை இதில் அறியலாம். நீங்கள் கர்த்தரில் மகிழ்ச்சியாயிருக்கும்போது, அவர் உங்கள் விருப்பங்களைச் சீரமைத்து, உங்கள் வாழ்விற்குத் தெளிவான திசையையும் நோக்கத்தையும் தருவார்.
Transcript
மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. நாம் தேவனின் வாக்குத்தத்தங்கள் நிறைந்த அற்புதமான தேசத்தின் வழியாக நமது பயணத்தை தொடர்கிறோம்.
நேற்றைய எனது பேச்சில், விசுவாசத்துடன் அவரிடம் கேட்கும் அனைவருக்கும் ஞானத்தை அளிப்பார் என்ற தேவனின் வாக்குத்தத்தத்தை நான் கையாண்டேன். வேதத்தில் வழங்கப்பட்டுள்ள ஞானமானது “மிக மேன்மையான ஆவிக்குரிய காரியமோ” அல்லது சிக்கலான இறையியல் வாசகங்களைப் புரிந்துகொள்வதைச் சார்ந்ததோ அல்ல என்பதை நான் விளக்கினேன். மாறாக, இது எளிமையான, நடைமுறை சார்ந்த, வெளிப்படையான ஒன்றாகும்.
இன்றைய எனது பேச்சில், நமக்கு அடிக்கடி ஞானம் தேவைப்படும் ஒரு குறிப்பிட்ட வழியைக் கையாளப் போகிறேன், அந்த வழியில் தேவன் நமக்கு கிடைக்கச் செய்கிறார். எனது விஷயத்தை ஒரே வார்த்தையில் சுருக்கமாகச் சொல்லலாம்: வழிகாட்டுதல். அல்லது நீங்கள் ஒரு நீண்ட சொற்றொடரை விரும்பினால், நமது வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும், சந்தர்ப்பங்களிலும் சரியான வழியைக் கண்டுபிடிப்பது எப்படி. தேவனின் வாக்குத்தத்தங்கள் இந்த தேவையை பூர்த்தி செய்கின்றன.
முதலில், சங்கீதம் 37:4-5 இல் காணப்படும் வாக்குத்தத்தங்களுக்கு நாம் திரும்புவோம்:
4 கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். 5 உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
இப்போது நான் படித்த முதல் வசனம் இரண்டாவது வசனத்தின் வாக்குத்தத்தத்துக்கு தகுதியான நபர்களை விவரிக்கிறது என்று நம்புகிறேன். வாக்குத்தத்தம் என்னவென்றால், “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.”
ஆனால், வாக்குத்தத்தத்தைப் பார்ப்பதற்கு முன்பு, இந்த வாக்குத்தத்தம் எந்த வகையான நபர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம். தேவன் சொல்கிறார், “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.”
நான் ஒரு இளம் விசுவாசியாக இருந்தபோது, அந்த வசனத்தை நான் இவ்வாறு புரிந்துகொண்டேன்: நான் தேவனில் மகிழ்ச்சி அடைந்து, தேவன் விரும்புவதைச் செய்தால், நான் செய்ய விரும்பும் அல்லது அனுபவிக்க விரும்பும் விஷயங்களை அவர் எனக்குத் தருவார். ஆனால், நான் மிகவும் முதிர்ச்சியடைந்தபோது, அந்த வாக்குத்தத்தம் அதைவிட ஆழமாகச் செல்வதைக் கண்டேன். நான் தேவனில் மகிழ்ச்சியடைகிறேன் என்றால், நான் உண்மையிலேயே தேவனைப் பிரியப்படுத்த முயன்றால், அவரில் என் திருப்தியைக் கண்டால், அவர் இந்த அர்த்தத்தில், என் இதயத்தின் விருப்பங்களை எனக்குத் தருவார்: பரிசுத்த ஆவியானவரின் மூலம் அவர் நிறைவேற்ற விரும்பும் ஆசைகளை என் இதயத்தில் பதியவைப்பார், மேலும், எனது ஆசைகள் சுயநலமாக, சுய மகிழ்ச்சியை சார்ந்திருப்பதை விட தெய்வீகமாகவும், தேவனுக்கு மகிழ்ச்சியாகவும் மாறும்.
எனவே, கர்த்தரில் உங்களை மகிழ்விப்பது, உங்கள் ஆசைகள், உங்கள் நோக்கங்கள் மற்றும் உங்கள் லட்சியங்கள் மாறுவதற்கான வழியைவகுக்கும். மேலும், சுயநலமாக, சுயம் சார்ந்து இருப்பதற்குப் பதிலாக, தெய்வீகமான, தேவனை மையமாகக் கொண்ட ஆசைகளையும், நோக்கங்களையும், இலட்சியங்களையும் நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் மூலம், தேவனிடமிருந்து பெறுவீர்கள். அந்த ஆசைகளுக்கு பதிலளிப்பதன் மூலமாகவும், அந்த லட்சியங்களை நிறைவேற்றுவதன் மூலமாகவும், தேவன் தம்மை மகிமைப்படுத்துவார், அவரது ராஜ்யத்தையும் விரிவுப்படுத்துவார். எனவே, அடுத்த வசனத்தில் பின்வரும் வாக்குத்தத்தத்தை உரிமை கோருவதற்கு, தேவன் தாமே நிறைவேற்ற விரும்பும் ஆசைகளை நம் இதயங்களில் பதிக்கும் விதத்தில், தேவனில் நம்மை மகிழ்விக்கும் மனிதர்களாக நாம் மாற வேண்டும். மேலும், அந்த ஆசைகள் நமக்கு மிகவும் நலமானதாகவும், அதிக லாபம் தரக்கூடியதுமாக இருக்கும் என்று சொல்கிறேன்; நமது சுயநலமான, தனிப்பட்ட, இயற்கையான ஆசைகள் மற்றும் லட்சியங்களை விட அவை நமக்கு அதிக நன்மை செய்யும்.
இப்போது, சங்கீதம் 37:5 இல் இருக்கிற பின்வரும் வாக்குத்தத்தத்தைப் பார்ப்போம்:
5 உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
முதலாவது ஒரு செயல் இருக்கிறது: “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவி.” ஒப்புக்கொடுப்பது என்பது ஒரேமுறை செய்ய வேண்டிய ஒரு செயலாகும்.
சுவாரஸ்யமாக, மூல எபிரேய பாஷையில், “உன் வழியை கர்த்தரிடத்தில் திருப்பு” என்று கூறுகிறது. சங்கீதக்காரன், “உன் வழியை கர்த்தர்மேல் வை” என்று ஏன் இவ்வாறு சொல்கிறார் என்று நினைக்கிறீர்கள்? சரி, நான் உங்களுக்குச் சொல்கிறேன். அந்தக் கேள்விக்கு என்னிடம் குறிப்பிட்ட பதில் இருக்கிறது. இது அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது.
ஆப்பிரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு கல்லூரியில் முதல்வராக இருந்தேன். கல்லூரி முதல்வர் என்றால் எல்லோருக்கும் வேலைக்காரன். அவர் எல்லாவற்றையும் செய்ய வேண்டியிருந்தது. ஒரு குழாயில் தண்ணீர் கசிந்தால், அவர் அதை சரிசெய்ய வேண்டும். உணவுப் பற்றாக்குறை என்றால், அவர் உணவைக் கொண்டுவர வேண்டும். நான் அடிக்கடி செய்ய வேண்டிய ஒரு காரியம், உள்ளூர் நகரத்திற்குச் சென்று எங்கள் மாணவர்களுக்கான உணவை சேகரிப்பதாகும், அவர்களுக்கு பிடித்த உணவுகளில் ஒன்று அரிசி. எனவே, ஒவ்வொன்றும், 112 பவுண்டுகள் எடையுள்ள அந்தப் பெரிய அரிசி மூட்டைகளைச் சேகரித்து, அவற்றை எனது சிறிய வண்டியில் கொண்டுவந்து, உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் வாசலுக்கு கொண்டுவருவேன்.
இப்போது, கல்வி கற்கும் ஆப்பிரிக்கர்களை ஈர்ப்பதற்கு தேவையான ஒரு காரியமாக நான் உணர்ந்து கொண்டது என்னவென்றால், படித்த ஒருவர் தன் கைகளால் வேலை செய்வது கண்ணியமற்றதல்ல, ஏனென்றால், பள்ளி கல்லூரிகளுக்குச் சென்றால், கையால் வேலை செய்வது கண்ணியத்திற்குக் குறைவு என்ற மனநிலையை அவர்கள் பெற ஆரம்பிக்கிறார்கள். எனவே, சில சமயங்களில், வாகனத்தின் பின்புறத்தில் இருந்து அரிசி மூட்டைகளை இறக்குவதற்கு உதவுவதன் மூலம் அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தேன். அந்த பாரம் சுமக்கும் வாகனத்தின் பின்புறத்தில் ஒரு மூட்டை அரிசி நின்று கொண்டிருந்தால், அதை என் முதுகில் எடுத்துக்கொண்டு அதைக் களஞ்சியசாலைக்குள் எடுத்துச் செல்வது கடினம் அல்ல என்பதை நான் கண்டுபிடித்தேன். ஆனால், அதை மீண்டும் என் முதுகில் இருந்து இறக்குவதுதான் கடினமானது, ஏனென்றால், நீங்கள் தவறான அசைவை செய்தால், உங்கள் முதுகில் காயம் ஏற்படுவது எளிதானது. அதனால்தான், தேவன் மீது என் பாரத்தை சுமத்துவது பற்றி கற்றுக்கொண்டேன். நான் கண்டுபிடித்தது என்னவென்றால், அதை மெதுவாகச் செய்வதற்குப் பதிலாக, நான் ஒரு சிறிய வேகமான அசைவின் மூலம் அந்த மூட்டையை என் முதுகில் இருந்து உருட்ட வேண்டியிருந்தது, அதனால் அந்த மூட்டை எனக்குப் பக்கத்தில் தரையில் அதன் முனையில் நின்றது, அதைச் செய்வதில் நான் மிகவும் திறமையானேன்.
சரி, “உன் வழியை கர்த்தரிடத்தில் திருப்பு” என்று சங்கீதக்காரன் ஏன் இப்படிச் சொன்னார் என்பது தெரிந்தது, ஏனென்றால், நம் வாழ்க்கையின் வழியைத் தேர்ந்தெடுப்பது அந்த 112 பவுண்டு எடையுள்ள சாக்கு போன்றது. நாமே கையாளுவதற்கு இது மிகவும் கனமானது; இது மிகப்பெரிய தீர்மானமும், பொறுப்புமாகும். எனவே, சங்கீதக்காரன் சொல்கிறார், “அந்த மூட்டையை எடுத்துச் செல்ல முயற்சிக்காதே. அதை உங்கள் முதுகில் இருந்து உருட்டி, கர்த்தரின் பாதத்தில் விட்டுவிடுங்கள், அவர் அதை பார்த்துக்கொள்வார்.” எனவே, இது முதல் கட்டம், “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவி,” அல்லது “உன் வழியை கர்த்தரிடத்தில் திருப்பு.”
பின்னர், இரண்டாவது கட்டம் மனப்பான்மை - நம்பிக்கை. ஒப்புவிப்பது என்பது ஒரு செயலாகும்; நம்பிக்கை என்பது ஒரு தொடர்ச்சியான அணுகுமுறையாகும். நாம் ஒப்புவித்தவுடன், நாம் தொடர்ந்து ஒப்புவிக்க வேண்டாம், ஆனால் அது ஒப்புவிக்கப்பட்டது என்ற மனப்பான்மையை நாம் எடுத்துக்கொண்டு, இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம்பிக்கையுடன் செல்வதுதான். ஒப்புவிப்பது என்பது செயல்; நம்பிக்கை என்பது மனப்பான்மை (அணுகுமுறை) ஆகும்.
மூன்றாவது கட்டம், தேவன் அதைச் செய்வார் என்பதாகும். உண்மையில், எபிரேய மொழியில், “தேவன் அதைச் செய்கிறார்” என்று சொல்கிறது. எனவே, நான் இதை இப்படி புரிந்துகொள்கிறேன். முதலில், நம் வழியை தேவனிடம் ஒப்படைப்போம்; பின்னர் நாம் நிலையான, தொடர், நம்பிக்கையின் அணுகுமுறையை செயலாக்குவோம். விஷயம் தேவனின் கைகளில் இருக்கிறது, நாம் தொடர்ந்து நம்பும் வரை, தேவன் அதைச் செய்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் அவரிடம் ஒப்புக்கொடுத்ததை அவர் செயல்படுத்துகிறார். நாம் எந்த முடிவை எடுக்க வேண்டுமோ, எந்தப் போக்கை எடுக்க வேண்டுமோ, அதை தேவன் செயல்படுத்தி வருகிறார்.
என்னைப் பொறுத்தவரை, இது வங்கிக்குச் சென்று சேமிப்புக் கணக்கில் பணத்தை போடுவது போன்றது. பணத்தை வைப்புத் தொகை (டெபாசிட்) செலுத்துவது ஒப்புக்கொடுக்கும் செயலாகும். அதன்பிறகு, நீங்கள் ஒவ்வொரு நாளும் வங்கிக்கு திரும்ப ஓடி, உங்கள் பணம் வட்டியைத் தருகிறதா என்று யோசிக்க வேண்டாம். வங்கி உங்கள் பணத்திற்கு நாளுக்கு நாள் வட்டியைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். இது நம்பிக்கையை தொடர்ந்துவரும் மனப்பான்மையாகும், உங்கள் பணத்தை நீங்கள் பாதுகாப்பாக வங்கியில் டெபாசிட் செய்து விட்டு, அந்த நம்பிக்கையின் மனப்பான்மையைக் கடைப்பிடிக்கும் வரை, வங்கி அதைச் செய்யும். அது தேவனிடத்திலும் அப்படித்தான், “உங்கள் வழியை அவரிடம் ஒப்புக்கொடுங்கள், அவரை நம்புங்கள், அவர் அதைச் செய்கிறார்.”
இப்போது, கர்த்தரிடமிருந்து நம்மை வழிநடத்தும் மற்றொரு வாக்குத்தத்தத்தைப் பார்ப்போம். இது நீதிமொழிகள் 3:5-6 இல் காணப்படுகிறது:
5 உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, 6 உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
மாற்று மொழிபெயர்ப்பு என்னவென்றால், “அவர் உங்கள் பாதைகளை வழிநடத்துவார்.” அந்த முறையான மாற்று மொழிபெயர்ப்பை எடுத்துக்கொள்வோம். தேவன் உங்கள் பாதையை வழிநடத்துவார், அவர் உங்களுக்காக வாழ்க்கையில் சரியான வழியை உருவாக்குவார். அதுதான் வாக்குத்தத்தமாகும். இன்றைய சூழ்நிலையில் அதுதான் நமக்குத் தேவையானது.
இப்போது நிபந்தனைகள் என்ன? ஒருவகையில், அவை சங்கீதம் 37இல் உள்ளதைப் போலவே இருக்கின்றன. முதலாவது நிபந்தனை, “உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு.” அந்த நம்பிக்கையின் தொடர்ச்சியான அணுகுமுறையை செயல்படுத்துங்கள், அந்த நம்பிக்கையுடன் எப்போதும் சமாதானம் நிலவுவதை நீங்கள் காணலாம். நீங்கள் பதட்டமாகவும், கவலையுடனும் இருக்கும்போது, நீங்கள் நம்புவதை நிறுத்துவிட்டீர்கள் என்பதற்கான உறுதியான அடையாளமாக அது காணப்படுகிறது.
இரண்டாவது நிபந்தனை எதிர்மறையானது. “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல் இரு.” உங்கள் சொந்த தீர்ப்பை நம்பி, அதை நீங்களே செய்ய முயற்சிக்காதீர்கள். தேவனிடமிருந்து ஜெபத்திற்கு பதில்களைப் பெறுவதற்கு மிகப்பெரிய தடைகளில் ஒன்று, நாம் ஜெபித்துவிட்டு, பின்னர் தேவன் நம் ஜெபத்திற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை செயல்படுத்த முயற்சிக்கிறோம். சரி, நாம் நினைக்கும் விதத்தில் நம்முடைய ஜெபத்திற்கு பதலளிக்க தேவன் உறுதியளிக்கவில்லை. நாம் அதைச் செயல்படுத்த முயற்சிக்கும்போது, உண்மையில், நமது மனதும், ஆவியும் நம்முடைய மனப்பான்மையில் இருக்கிறது, அதில் தேவன் நம் சார்பாக செயல்படுகிறார் என்ற பதிலைப் பெறுவது கடினம். எனவே, உங்கள் சுயபுத்தியின்மேல் சாயாமல் இருங்கள்.
நீதிமொழிகள் 3 இல், இங்கே கொடுக்கப்பட்ட மூன்றாவது நிபந்தனை என்னவென்றால், “உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்.” அதன் அர்த்தம் என்ன? சரி, “தேவனை அங்கீகரிப்பது” என்பதன் அர்த்தத்தை நான் புரிந்துகொண்டதை விளக்குகிறேன். எந்த ஒரு தருணத்திலும், எந்த சூழ்நிலையிலும், நேரத்திலும் அல்லது இடத்திலும், நீங்கள் தேவனை நினைத்துக்கொள்ள (அங்கீகரிக்க) விரும்பினால், நீங்கள் உங்கள் வேலையை நிறுத்திவிட்டு, “தேவனே, நீர் எனக்கு உண்மையுள்ளவராய் இருப்பதற்கு நன்றி. நீங்கள் ஏற்கனவே எனக்கு செய்த அனைத்து நன்மைகளுக்கும் நான் நன்றி செலுத்துகிறேன். என் வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களிலும், சூழ்நிலைகளிலும் நீர் உம்மை நிரூபித்த விதத்திற்கு நன்றி. நீர் என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்தீர், நீர் தொடர்ந்து என்னை வழிநடத்துவீர் என்று நம்புகிறேன்” என்று சொல்லுங்கள். அது எல்லா வழிகளிலும், தேவனை அங்கீகரிப்பது (நினைத்துக்கொள்வது) ஆகும்.
1964 ஆம் ஆண்டு பசிபிக் வடமேற்கில் உள்ள ஒரு நகரத்தில் நான் ஒரு பாதுகாப்பான போதகர் பதவியை ராஜினாமா செய்தேன் என்பது என் நினைவுக்குவருகிறது, எந்த ஒரு நிலையான சம்பளமோ அல்லது நிலையான தங்குமிடமோ, எந்த மூலதனமும் இல்லாமல் - சொந்த கார் இல்லாமல் ஊரூராகச் சென்று ஊழியம் செய்யும் ஊழியராவதற்கு நான் உறுதியளித்தேன். ஆதரவிற்கு மனைவியும், குழந்தையுமாக, தேவன் இந்த புதிய ஊழியத்திற்கு தள்ளுகிறார் என்பது எனக்குத் தெரியும். நான் தேவனிடத்தில் காத்திருந்து, இந்தப் புதிய ஊழியத்தில் ஒருவித பாதுகாப்புக்காக அவரைத் தேடிகொண்டிருந்தபோது, நான் மேற்கோள் காட்டிய இந்த வேதத்தை தேவன் எனக்குக் கொடுத்தார்: “உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.” தலையிட்ட எல்லா வருடங்களிலும் (அது பதினைந்து வருடங்கள் அல்லது அதற்கும் மேலாக இருக்கும்) உண்மையை நிரூபித்துள்ளேன் என்று என்னால் சாட்சியமளிக்க முடியும். இந்த
அழகான வேதத்தின் நம்பிக்கையை நான் நிரூபித்துள்ளேன் “உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”
ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு திருப்புமுனைக்கு வரும்போது அல்லது உங்கள் வாழ்க்கையில் ஒரு வழியைத் தேர்ந்தெடுக்கும்போது, நிறுத்திவிட்டு, தேவனை அங்கீகரிக்க தொடங்குங்கள். அவர் உங்களுக்காக ஏற்கனவே செய்த அனைத்திற்காகவும், அவருடைய உண்மைத்தன்மைக்காகவும், கடந்த காலங்களில் அவர் பல ஜெபங்களுக்கு பதிலளித்ததற்காகவும், பல பிரச்சனைகளை தீர்த்ததற்காகவும் அவருக்கு நன்றி செலுத்துங்கள். பின்னர், அவரை நினைத்துக்கொண்ட பிறகு, அவர் கடந்த காலத்தில் இருந்ததைப் போலவே எதிர்காலத்திலும் உண்மையுள்ளவராக இருப்பார் என்பதை தொடர்ந்து நம்புங்கள். அவர் உங்கள் பாதையை வழிநடத்துவார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. ஆனால், நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். குறிப்பாக, வேலை செய்யும் இடங்களில் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை நாளை நான் கையாள்வேன். எனது தலைப்பு, “ஒரு வேலை சூழ்நிலையில் ஏற்றுக்கொள்ளுதலை எவ்வாறு கண்டறிவது” என்பதாக இருக்கும். இது தொடர்பாக, எனது சொந்த அனுபவத்தில் நான் நிரூபித்த சில வாக்குத்தத்தங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
குறியீடு: RP-R025-102-TAM









