சந்தோஷத்தின் கனி

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: செப்டம்பர் 2026
Read Time: 9
ஆவியின் கனியாகிய மகிழ்ச்சியின் உண்மையான தன்மையை அனுபவியுங்கள்! வேதாகமம் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி, சந்தோஷம் மற்றும் சிற்றின்பம் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாட்டைக் கண்டறியுங்கள். 'ஆவியின் கனி' தொடரின் 3-ஆம் பாகமான டெரெக் பிரின்ஸின் இந்த ஆழமான செய்தி, ஆவிக்குரிய திருப்திக்கான பாதையைத் தெளிவுபடுத்துகிறது.
Transcript
மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. இந்த வாரம், “ஆவியின் கனி” என்ற மிகவும் செழிப்பான, அழகான தலைப்பிலே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது கலாத்தியர் 5 இல் பட்டியலிடப்பட்டுள்ள ஆவியின் கனியின் ஒன்பது வடிவங்களாகும்.
நேற்று, கனியின் முதல் வடிவமான அன்பின் கனியைக் கையாண்டேன். இன்று, நான் கனியின் இரண்டாவது வடிவமான “சந்தோஷத்தின் கனி” பற்றிப் பேசப் போகிறேன்.
“சந்தோஷம்” என்பது ஒரு அழகான வார்த்தை. அழகான பெண் குழந்தையை தேவன் பெற்றோருக்கு ஆசீர்வதிக்கும்போது, அவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் பெயர், “சந்தோஷம் (ஜாய்)” ஆகும். மொத்தத்தில், சந்தோஷத்தில் அழகான ஒன்று இருக்கிறது. இருப்பினும், அதன் அழகை நம் வாழ்வில் அனுபவிக்க, சந்தோஷத்தின் உண்மையான தன்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், அதைப் புரிந்து கொள்ள, மனித ஆளுமைகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
முழு மனித ஆளுமையும் மூன்று வெவ்வேறு பகுதிகளால் ஆனது என்று வேதம் வெளிப்படுத்துகிறது: ஆவி – ஆத்துமா – சரீரம். பவுல் இதை 1 தெசலோனிக்கேயர் 5:23 இல் கூறுகிறார், அங்கு அவர் கூறுகிறார்:
23 சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி, ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
கவனியுங்கள், பவுல் நமது முழு ஆளுமையைப் பற்றி பேசும்போது, அவர் மூன்று தனித்துவமான பகுதிகளைக் குறிப்பிடுகிறார்: ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம்.
இப்போது, நம் ஆளுமையின் ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு வகையான திருப்தி உள்ளது. இதைப் புரிந்துகொண்டால், சந்தோஷத்தின் உண்மையான தன்மையை நாம் புரிந்துகொள்ள ஆரம்பிக்கலாம். சரீரத்தைப் பொறுத்தவரை, நாம் தேடும் திருப்தியின் வகையை இன்பம் என்று நான் கூறுவேன். ஆத்துமாவில், நாம் தேடும் திருப்தியின் வகையை மகிழ்ச்சி என்று நான் கூறுவேன். ஆனால், ஆவியில், நாம் தேடும் திருப்தியின் வகையை சந்தோஷம் என்று நான் அழைப்பேன். எனவே, இன்பம் சரீரத்தில் உள்ளது, மகிழ்ச்சி ஆத்துமாவில் உள்ளது மற்றும் சந்தோஷம் ஆவியில் உள்ளது.
நான் அங்கு விவரித்தது போல, மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் வேறுபடுத்திப் பார்ப்பது முக்கியம். நிச்சயமாக, அவை வித்தியாசமாகப் பயன்படுத்தப்படலாம், ஆனால், இந்த வேறுபாட்டை வெளிப்படுத்த, அந்த வழியில் அவற்றைப் பயன்படுத்த தேர்வு செய்கிறேன். அப்படியானால், மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்துக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? அன்றாட வாழ்வின் மகிழ்ச்சிக்கான ஒரு எளிய உதாரணத்தை தருகிறேன். ஒரு இளைஞன் தனது ஸ்போர்ட்ஸ் காரில், அவன் அருகில் காதலியுடன் செல்கிறான், அது ஒரு அழகான வசந்த நாள், அவன் ஒரு அழகான நெடுஞ்சாலையில் ஓட்டுகிறான். எல்லாம் சரியாக நடக்கிறது, பறவைகள் பாடுகின்றன, அவன் பாக்கெட்டில் பணம் இருக்கிறது, அவனுடைய காதலி கையை பிடித்திருக்கிறாள், அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான்.
ஆனால் இப்போது காட்சியை மாற்றுவோம். அதே இளைஞனைப் பார்க்கலாம். அவனது அழகான ஸ்போர்ட்ஸ் கார் உடைந்துவிட்டது, அவனுடைய காதலி அவனை ஏமாற்றிவிட்டாள்; அது ஒரு குளிர்ச்சியான நாள், மழை பெய்கிறது, அவனிடம் பணம் இல்லை. அவன் இப்போது மகிழ்ச்சியாக இருப்பதாக நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. அவனுடைய மகிழ்ச்சி தொலைந்துவிட்டது. ஏன்? ஏனென்றால், மகிழ்ச்சி சூழ்நிலைகளைப் பொறுத்தது. ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய பெரிய உண்மை என்னவென்றால், சந்தோஷம் என்பது சூழ்நிலைகளைச் சார்ந்தது அல்ல.
நீங்கள் “அது எப்படி முடியும்?” என்று கேட்கலாம். பதில் என்னவென்றால், சந்தோஷமானது, சந்தர்ப்பங்கள் அல்லது சூழ்நிலைகள் அல்லது நிதிகள் அல்லது வானிலை ஆகியவற்றால் ஒருபோதும் மாறாத ஒன்றைச் சார்ந்திருக்கிறது. சந்தோஷத்திற்கு ஒரே ஒரு ஆதாரம் இருக்கிறது, அது தேவன் தாமே ஆவார்; ஏனென்றால், தேவன் மாறாதவராய் இருக்கிறது போல, சந்தோஷமும் மாற வேண்டியதில்லை.
இப்போது, நாம் சரீரம் மற்றும் ஆத்துமாவின் தளத்தில் மட்டுமே வாழ்ந்தால், நாம் இன்பத்தையும், மகிழ்ச்சியையும் அறிய முடியும், ஆனால் நாம் சந்தோஷத்தை அறிய முடியாது. சந்தோஷத்திற்கு ஒரே ஒரு ஆதாரம் உள்ளது, அதுதான் தேவன் ஆவார். சந்தோஷம் என்பது தேவனுடனான நேரடியான, தனிப்பட்ட, தொடர்ச்சியான உறவிலிருந்து வருகிறது. அந்த உறவு இல்லாமல், உண்மையான சந்தோஷத்தை அறிய முடியாது.
இப்போது, சந்தோஷத்தின் இரகசியத்தை கண்டறிந்த சில மனிதர்களின் சாட்சியத்தை நான் உங்களுக்கு கொடுக்க விரும்புகிறேன். அவர்களின் சொந்த வார்த்தைகளில் அதை உங்களுக்கு வழங்க விரும்புகிறேன். முதல் மனிதன், நிச்சயமாக, சங்கீதக்காரனாகிய தாவீது. சங்கீதம் 43:4 இல் அவர் சொல்வதை கேளுங்கள். இந்த சங்கீதத்தின் பின்னணி என்னவென்றால், தாவீது ஒடுக்கப்படுகிறார், அவருடைய எதிரிகள் அவரைப் பின்தொடர்கிறார்கள், அவர் சூழ்நிலைகளின் அழுத்தத்தில் இருக்கிறார், காரியங்கள் சரியாக நடக்கவில்லை, எதிர்காலம் மிகவும் நிச்சயமற்றதாக இருந்தது. எனவே, அவர் ஒரு முடிவை எடுக்கிறார், இது தான் அவருடைய முடிவு.
4 அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தண்டைக்கும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன்.
தாவீது தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறார், “இந்த எல்லா பிரச்சனைகளிலிருந்து வெளியே வருவதற்கு என்ன வழி? பதில் எங்கே?” மேலும் அவர், “நான் செல்ல வேண்டிய இடம் ஒன்று இருக்கிறது. அது தேவனின் பீடம். நான் பலிபீடத்திற்கு வந்ததும், நான் தேவனை வணங்கி துதிக்க ஆரம்பிக்க முடியும். தேவனுடனான எனது தொடர்பு புதுப்பிக்கப்பட்டு என் சந்தோஷம் மீட்டெடுக்கப்படும்” என்று சொல்கிறார்.
தாவீது தேவனைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள். அவர் கூறுகிறார், “தேவன், என் மிகுந்த சந்தோஷம்.” எனவே, தாவீதின் சந்தோஷம் எந்த சந்தர்ப்பத்திலோ, சூழ்நிலையிலோ, அனுபவத்திலோ, சாதனையிலோ, ஆசீர்வாதத்திலோ இல்லை, மாறாக அவனது சந்தோஷம் அவனது தேவனிடத்தில் இருந்தது. மேலும், அவர் தேவனைப் பற்றி, “எனது மிகுந்த சந்தோஷம்” என்று கூறினார்.
எல்லா பிரச்சனைகளுக்கும், அழுத்தங்களுக்கும் மத்தியில், நீங்கள் சந்தோஷத்தைப் பெறுவதற்கான வழி இன்னும் திறந்திருக்கும் வகையில், நீங்கள் தேவனுடன் அத்தகைய உறவைக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கும் தேவனுக்கும் இடையே உள்ள பாதை தெளிவாக இருந்தால், நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டாலும், நீங்கள் இன்பத்தை அனுபவிக்காவிட்டாலும், உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் இருட்டாகவும், பாதுகாப்பற்றதாகவும் இருந்தாலும், உங்களுக்கு இன்னும் சந்தோஷம் இருக்கும் – உங்கள் ஆவியில் சந்தோஷம் இருக்கும்; ஏனென்றால், உங்கள் ஆவி, சந்தோஷத்தின் ஊற்றாகிய தேவனின் ஆவியுடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது.
சரி, மிகவும் மோசமான நிலையில் இருந்த இன்னொருவரின் சாட்சியைக் கேளுங்கள். உண்மையில், ஒரு குறிப்பிட்ட வகையில், இந்த ஆபகூக் தீர்க்கதரிசியான இந்த மனிதனை விட மோசமான சூழ்நிலையில் நீங்கள் இருக்க முடியாது. இது ஆபகூக் 3: 17 & 18 இல் உள்ள ஆபகூக்கின் சாட்சியம்:
17 அத்திமரம் துளிர்விடாமற் போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், 18 நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் [அல்லது களிப்பு அல்லது சந்தோஷம்], என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
தான் நம்பியிருக்கக்கூடிய பொருட்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்ட சூழ்நிலையை ஆபகூக் எதிர்கொள்கிறார். பட்டியல் உண்மையில் ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது. அத்திமரம் துளிர்விடவில்லை; திராட்சச்செடியில் பழம் இல்லை; ஒலிவமரத்தில் பலன் இல்லை; வயல்களில் உணவு உற்பத்தி இல்லை; மந்தை அங்கு இல்லை; கால்நடைகள் அங்கு இல்லை. அதனால், விவசாயம் செய்து பிழைப்பு நடத்தும் மனிதனுக்கு அதிகம் மிச்சமில்லை. ஆபகூக் என்ன செய்தார்? அவர் உட்கார்ந்து இப்படி சொன்னாரா, “சரி, எல்லாம் முடிந்தது. தேவன் என்னை மறந்துவிட்டார். நானும் விட்டுவிடலாம்.” இதேபோன்ற சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?
தாவீதைப் போலவே ஆபகூக்கும் ஒரு தீர்மானம் எடுத்தார். தாவீது, “நான் தேவனின் பலிபீடத்திற்குச் செல்வேன்” என்றார். ஆபகூக், “ஆனாலும், நான் கர்த்தருக்குள் களிகூருவேன்” என்றான். இது உணர்ச்சியில் தங்கவில்லை, விருப்பத்தில் தங்கியிருக்கிறது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது ஒரு முடிவு. எல்லாம் தவறாகிவிட்டது, ஆனால் நான் இன்னும் கர்த்தரிடம் செல்ல முடியும். நான் கர்த்தரிடம் செல்லும்போது, எனக்கு சந்தோஷம் கிடைக்கிறது, ஏனென்றால், கர்த்தர் என் சந்தோஷம்; சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் மாறினாலும், கர்த்தர் மாறுவதில்லை. இப்படித்தான் ஒரு விசுவாசி தொடர்ச்சியான, தடையற்ற, சந்தோஷத்தைப் பெற முடியும். அவனது சரீரத்தில் இல்லை, அவனது ஆத்துமாவில் இல்லை, ஆனால் அவனது ஆவியில்.
ரோமர் 5 இல், பவுல் சந்தோஷத்தின் ஒரு சுவாரஸ்யமான முன்னேற்றத்தைக் கூறுகிறார். வசனம் 2 இல் அவர் கூறுகிறார், “தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம் [நம்புகிறோம் அல்லது சந்தோஷமடைகிறோம்]” நம்முடைய சந்தோஷத்தின் முதல் ஆதாரம் தேவனின் மகிமையின் நம்பிக்கை. வசனம் 4 இன் அடுத்த கூற்று இயற்கையான மனதை ஆச்சரியப்படுத்துகிறது. அவர் சொல்கிறார், “உபத்திரவங்களிலேயும் [நமது பிரச்சனைகளில்] மேன்மைபாராட்டுகிறோம்.” அவற்றில் சந்தோஷமடைகிறோம். அது எப்படி இருக்க முடியும்?
சரி, பின்வரும் வசனங்களில், பவுல் அதை விளக்குகிறார். ஏனென்றால், உபத்திரவங்கள் நம் குணத்தில் சில விளைவுகளை உருவாக்குகின்றன, அதை வேறு எந்த வகையிலும் உருவாக்க முடியாது. அதனால் நமக்கு உபத்திரவம் பிடிக்கவில்லை என்றாலும், அதில் நாம் சந்தோஷம் அடைகிறோம், அதில் மகிழ்கிறோம், ஏனென்றால், அது நம் குணத்தை என்ன செய்கிறது என்பதை நாம் அறிவோம்.
ஆனால், முன்னேற்றத்தின் மூன்றாம் நிலை, ரோமர் 5 இல் 11ஆம் வசனத்தில் பவுல் இவ்வாறு கூறுகிறார், “அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாக்குதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மை பாராட்டுகிறோம்." களிப்பான சந்தோஷத்தின் உச்சக்கட்ட நிலை தேவனிடத்திலேயே உள்ளது. நிச்சயமாக, நான் ஏற்கனவே கூறியது போல, அதை உங்களிடமிருந்து ஒருபோதும் பறிக்க முடியாது. உண்மையான ஆவிக்குரிய முதிர்ச்சியின் அடையாளம் தேவனிடத்தில் உங்கள் சந்தோஷத்தைக் கண்டறிவதே என்று நான் கூறுவேன்; ஒரு அனுபவத்திலோ, அல்லது ஒரு ஆசீர்வாதத்திலோ அல்லது ஒரு ஏற்பாட்டிலோ அல்ல – அவை அற்புதமானவை என்றாலும்- அது தேவனாகிய அவரிடத்திலேயே உள்ளது.
முடிவில், அப்போஸ்தலர் 13:52 லிருந்து ஒரு வசனத்தை உங்களுக்குப் படிக்கிறேன். பிசீதியாவில் அந்தியோகியா பட்டணத்தில் உள்ள சீஷர்களைப் பற்றி அங்கு கூறப்படுகிறது: “சீஷர்கள் சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டார்கள்.” அவர்களின் பின்னணியைப் பார்த்தால், அந்த சீஷர்கள் புதிதாக மதமாறியவர்கள். அவர்கள் பெரும் அழுத்தத்தில் இருந்தனர், பட்டணத்தில் துன்புறுத்தல் இருந்தது, அவர்களை கர்த்தரிடம் அழைத்துச் சென்ற மனிதர்கள் – பவுல் மற்றும் பர்னபா என்பவர்கள் – செல்ல வேண்டியிருந்தது, எனவே அவர்கள் துன்புறுத்தலின் கீழ் தாங்களாகவே தனியே விடப்பட்டார்கள்.
அவர்களின் பதில் என்ன? விரக்தியடைந்து விட்டுவிட்டு, “சரி, தேவன் நம்மைத் தவறவிட்டார்” என்று சொன்னார்களா? இல்லை, அவர்களின் பதில் ஆச்சரியமாக இருந்தது. சீஷர்கள் தொடர்ந்து சந்தோஷத்தினாலும், பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டனர். நீங்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்படும் வரை நீங்கள் சந்தோஷத்தால் நிரப்பப்பட முடியும்.
இரண்டு இணையான கூற்றுகளுடன் முடிக்கிறேன். முதலாவதாக, பரிசுத்த ஆவியில்லாமல் சந்தோஷத்தால் நிரப்பப்படுவது சாத்தியமற்றது, இரண்டாவது, சந்தோஷம் இல்லாமல் பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுவது சாத்தியமற்றது.
சரி, இன்றைக்கு என்னுடைய நேரம் முடிந்துவிட்டது, நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை, நான் ஆவியின் கனியின் மூன்றாவது வடிவமான “சமாதானத்தின் கனி” பற்றி பேசுகிறேன்.
குறியீடு: RP-R009-103-TAM









