விசுவாசத்தின் வரம்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: செப்டம்பர் 2026
Read Time: 10
டெரெக் பிரின்ஸின் 'விசுவாசத்தின் வரம்' என்ற பிரசங்கத்தின் மூலம் விசுவாசத்தின் ஆழமான அர்த்தத்தை அறிந்துகொள்ளுங்கள். புதிய ஏற்பாடு கூறும் பல்வேறு விசுவாச முறைகளையும், தேவனுடைய வார்த்தையில் உங்கள் வாழ்க்கையை நிலைநிறுத்துவதன் மூலம் கிடைக்கும் வல்லமையையும் இதில் கண்டறியலாம். 'ஆவியின் வரங்கள்' தொடரின் ஒரு பகுதியான இந்தப் பிரசங்கம், உங்கள் ஆன்மீகப் பயணத்தை செழுமைப்படுத்தி, கர்த்தருடனான உங்கள் உறவை பலப்படுத்தும்.
Transcript
மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. இந்த வாரம் முழுவதும் நான் பரிசுத்த ஆவியின் விலைமதிப்பற்ற, அற்புதமான வரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எனது கடைசி மூன்று பேச்சுகளில், நான் வெளிப்பாட்டின் மூன்று வரங்களாகிய ஞானத்தைப் போதிக்கும் வசனம், அறிவை உணர்த்தும் வசனம், ஆவிகளை வேறுபடுத்துதல் (அல்லது பகுத்தறிதல்) குறித்துக் கையாண்டுள்ளேன்.
இன்று வல்லமையின் முதல் வரமாகிய, விசுவாசத்தின் வரத்தைப் பற்றி பேசப் போகிறேன். பல சந்தர்ப்பங்களில், இந்த விசுவாசத்தின் வரம், மற்ற இரண்டு வல்லமை வரங்கள்; அதாவது, அற்புதங்களை செயல்படுத்துவது அல்லது விளைவை ஏற்படுத்துவது மற்றும் குணமாக்கும் வரங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு நம்மைக் கொண்டுவருவதற்கான ஒரு வகையான படிக்கல் என்பதை நான் அனுபவத்தில் கண்டேன்.
நான் இப்போது விசுவாசத்தின் வரத்திற்கு திரும்புகிறேன், புதிய ஏற்பாட்டில் விசுவாசம் பல்வேறு வடிவங்களில் முன்வைக்கப்பட்டுள்ளது என்பதை நான் முதலில் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம். மேலும், விசுவாசத்தின் பல்வேறு வடிவங்களை வேறுபடுத்திப் பார்ப்பது அவசியமானது. விசுவாசத்தின் மூன்று முக்கிய வடிவங்களை நான் சுட்டிக்காட்டுவேன். முதலாவது, “விசுவாசம் வாழ்வதற்கே” என்று நான் சொல்லுவேன். பவுல் சொல்கிறார், “விசுவாசத்தினாலே நீதிமான் [அல்லது நீதியுள்ளவன்] பிழைப்பான்.” இந்த விசுவாசம் தேவனுக்கு அர்ப்பணிப்புக்கான தொடர்ச்சியான, தனிப்பட்ட உறவாகும். மேலும், இது முழு கிறிஸ்தவ வாழ்க்கைக்கான திறனையும், ஊக்கத்தையும், திசையையும் வழங்குகிறது. ஒவ்வொரு கிறிஸ்தவனும், ஒரு கிறிஸ்தவனாக இருக்க வேண்டிய ஒரு வகையான நம்பிக்கை இது.
பின்னர், கலாத்தியர் 5 இல் விசுவாசத்தின் கனிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. கனியானது எப்போதும் குணத்தின் ஒரு அம்சமாக இருக்கிறது. மேலும், உரிய நேரத்தில், எனது உரையில் நான் ஆவியின் கனியைக் கையாளப் போகிறேன். ஆனால் இன்று நான் பேசுவது அதுவல்ல.
மூன்றாவது வகையான விசுவாசம், விசுவாச வரமாகும். இயற்கைக்கு அப்பாற்பட்ட விசுவாசம், மனித நிலைக்கு மேலான விசுவாசம், தேவனின் இறையாண்மை சித்தத்தின்படி பரிசுத்த ஆவியானவரால் கொடுக்கப்படும் தேவனின் சொந்த விசுவாசமாகும். ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், விசுவாசத்தின் வரம், ஞானத்தை போதிக்கும் வசனத்திற்கும், அறிவை உணர்த்தும் வசனத்திற்கும் ஒத்ததாகும். இது, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்ற, தேவனின் சொந்த விசுவாசத்தின் ஒரு சிறிய பகுதியை இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் பகிர்ந்துகொடுப்பதாகும். கடுகு விதைக்கு ஒப்பான விசுவாசத்தைப் பற்றி இயேசு ஒரு கட்டத்தில் பேசினார். எனவே, இது தேவன் நமக்கு கொடுக்கிற அவரது விசுவாசத்தின் ஒரு கடுகு விதையாகும்.
மாற்கு 11 இல் சொல்லப்பட்ட இயேசுவின் ஊழியத்திலிருந்து ஒரு உதாரணத்துடன் தொடங்க விரும்புகிறேன்.
12 மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டு வருகையில், அவருக்குப் [அவர் இயேசுவானவர்] பசியுண்டாயிற்று. 13 அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்க வந்தார். அத்திப்பழக் காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது அதில் இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை. 14 அப்பொழுது இயேசு அதைப் பார்த்து [அந்த அத்திமரத்திடம் பேசினார்]: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள்.
இந்த அதிகாரத்தின் பிற்பகுதியில், அடுத்த நாள் அவர்கள் மீண்டும் அத்திமரத்தைக் கடந்தபோது என்ன நடந்தது என்பதைக் காணலாம்.
20 மறுநாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, அந்த அத்திமரம் வேரோடே பட்டுப்போயிருக்கிறதைக் கண்டார்கள். 21 பேதுரு நினைவுகூர்ந்து, அவரை நோக்கி: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று என்றான். 22 இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். 23 எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
அந்தச் சம்பவத்தைப் பற்றிய சில எளிய உண்மைகளை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். முதலாவதாக, இயேசு அந்த மரத்திடம் சாதாரணமாகப் பேசினார். அவர் வேறொன்றும் செய்யவில்லை. ஆனால் அவர் விசுவாசத்துடன் பேசினார், அவர் சொன்னது நடந்தது. இதுபற்றி அவருடைய சீஷர்கள் அவரிடம் கேட்டபோது, அவர் “விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்” என்று அவர்களுக்கு பதிலளித்தார். அது ஆங்கில மொழிப்பெயர்ப்பாகும், ஆனால் மூல கிரேக்க மொழியில் அது உண்மையில் சொல்லப்பட்டது என்னவென்றால், “தேவ விசுவாசத்தை கொண்டிருங்கள்” அல்லது “தேவனின் விசுவாசத்தை கொண்டிருங்கள்.” அதுதான் உண்மையான விளக்கமாகும். இந்த வரமே தேவனின் விசுவாசமாகும். இது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, ஒரு குறிப்பிட்ட தருணத்தில் கொடுக்கப்பட்ட தேவனின் விசுவாசத்தின் ஒரு சிறிய கடுகு விதையாகும். அது ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட விசுவாசம். இது மனித மட்டத்தில் உள்ள விசுவாசம் அல்ல, இது தெய்வீக விசுவாசம், இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் பரிசுத்த ஆவியானவர் மூலம் வழங்கப்பட்டது. இது ஞானத்தைப் போதிக்கும் வசனம் மற்றும் அறிவை உணர்த்தும் வசனம் போன்றது. இது ஒரு கடுகு விதை விசுவாசமாகும்.
பின்னர் இயேசு சொன்னார், “அப்படிப்பட்ட விசுவாசம் உங்களுக்கு இருக்கும்போது, நீங்கள் மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னால், அவன் சொன்னபடியே ஆகும்.” அப்படிப்பட்ட விசுவாசத்துடன் நீங்கள் எதைச் சொன்னாலும், அது தேவனின் சொந்த விசுவாசம் என்பதால், அது தேவன் சொன்னதைப் போலவே பயனுள்ளதாக இருக்கும். மேலும் கடுகு விதையால் மலையை தள்ள முடியும். நிங்கள் காணலாம், அங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது விவாசத்தின் அளவுக்கு அல்ல, ஆனால் தரத்துக்கு. அது தேவனின் சொந்த விசுவாசமாகும், ஒரு மலையை நகர்த்துவதற்கு, வெறும் கடுகு விதை எடுத்துக்கொள்கிறது.
இப்போது புதிய ஏற்பாட்டிலிருந்து இந்த விசுவாச வரத்திற்கு வேறு சில உதாரணங்களைத் தர விரும்புகிறேன். இது பொதுவாக தீய ஆவிகளை வெளியேற்றுவதில் பயன்படுத்தப்படும் வரமாகும். பொதுவாக இது விசுவாசத்தில் பேசப்படும் வார்த்தையே, அது இந்த முடிவை உருவாக்குகிறது. உதாரணமாக, மத்தேயு 8:16 இல் இயேசுவின் ஊழியத்தைப் பற்றி அது கூறுகிறது:
16 அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்.
அவர் தீய ஆவிகளை எதிர்கொண்ட போது, அவர் அவைகளிடம் விசுவாத்தின் வார்த்தையோடும், அதிகாரத்தோடும் பேசினார், அவைகள் அவருக்கு கீழ்ப்படிய வேண்டியிருந்தது.
ஆவிகளைப் பகுத்தறியும் வரத்தைப் பற்றி நேற்று நான் உங்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போஸ்தலர் 16 இல் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டேன், அங்கே பவுலையும், அவன் கூட்டத்தாரையும் குறிசொல்லும் ஆவி கொண்ட அடிமைப் பெண் பின் தொடர்ந்தாள், அங்கே பவுல் அந்த ஆவியிடம் எப்படிப் பேசினார் என்பதை நாம் வாசித்தோம். “நீ இவளை விட்டுப் புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன்.” என்று அவன் சொன்னான். ஆவி அவனுக்கு கீழ்ப்படிய வேண்டியிருந்தது. அவன் தெய்வீக விசுவாசத்தோடும், தெய்வீக அதிகாரத்தோடும் பேசினான்.
மேலும், புதிய ஏற்பாட்டில், மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்ட, உயிர் மீண்டும் பெறப்பட்ட நபர்களின் பல சம்பவங்கள் உள்ளன. பெரும்பாலும், ஒவ்வொரு விஷயத்திலும் இந்த விசுவாசத்தின் வரம்தான் இந்த முடிவை உருவாக்கியது என்பதை நீங்கள் காணலாம். உதாரணமாக, நாயீன் ஊர் விதவையின் மகனுடைய இறுதி ஊர்வலத்தில் இயேசு சந்தித்தார், அவர் ஊர்வலத்தை நிறுத்தி, பாடையைத் தொட்டு சொன்னார், “வாலிபனே, எழுந்திரு! என்று உனக்கு சொல்லுகிறேன்” என்றார். மரித்தவன் எழுந்து உட்கார்ந்து பேசத்தொடங்கினான். அதிகாரம் மற்றும் விசுவாசத்தின் வார்த்தையானது அந்த மனிதனை மீண்டும் உயிர்ப்பித்தது.
மீண்டும், நான்கு நாட்கள் கல்லறையில் வைக்கப்பட்ட லாசருடைய கல்லறைக்கு வெளியே இயேசு நின்றபோது, இயேசு உரத்த சத்தமிட்டு கூப்பிட்டார், “லாசருவே, வெளியே வா!” உடனடியாக இறந்த மனிதன் கல்லறையை விட்டு வெளியேற ஆரம்பித்தான். விசுவாச வரமானது அதிகாரமுள்ள வார்த்தையில் வெளிப்பட்டது.
மீண்டும், அப்போஸ்தலர் 9:40 இல், மேல் அறையில், படுக்கையில் இறந்து கிடந்த தபீத்தாளை பேதுரு எதிர்கொள்கிறான். விதவைகளெல்லாரும் துக்கித்து அழுகிறார்கள். பேதுரு தாமாக மேலே சென்று, முழங்காற்படியிட்டு, ஜெபித்து, பிரேதத்தின் புறமாய்த் திரும்பி, அவர், “தபீத்தாளே, எழுந்திரு” என்று சொல்கிறார். அவள் கண்களைத் திறந்து பேதுருவைப் பார்த்ததும் எழுந்து அமர்ந்தாள்.
ஆகவே, ஒரு நபர் மரித்தோரிலிருந்து எழுப்பப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அந்த முடிவை உருவாக்கிய வரம், விசுவாசத்தின் வரம்தான் என்பதை நீங்கள் காணலாம்.
இப்போது நான் எனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து ஒரு உதாரணம் கொடுக்கப் போகிறேன். நான் சொல்ல விரும்புகிறேன், நீங்கள் அதைப் பெறுவீர்கள் என்று நம்புகிறேன், சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஆப்பிரிக்காவில் தேவனுக்கு ஊழியம் செய்து கொண்டிருந்த போது, நானும், எனது முதல் மனைவியும், எங்கள் கல்லூரியில் இரண்டு மாணவர்கள் இறந்து, உயிரோடு எழுப்பப்பட்ட சம்பவங்களைப் பார்த்தோம். அதனால், இன்றும் அது நடக்கிறது என்பதை நான் அறிவேன். ஆனால் நான் அதைப் பற்றி பேசப் போவதில்லை. நான் விசுவாசத்தின் வரத்தைப் பற்றிய எனது சொந்த ஊழியத்தின் மற்றொரு உதாரணத்தை எடுக்கப் போகிறேன், இது மிகவும் அசாதாரணமானது. நீங்கள் அதைப் பெறுவீர்கள் என்று நம்புகிறேன். இந்தச் சம்பவத்தைச் சொன்ன பிறகும் நாம் நண்பர்களாக இருப்போம் என்று நம்புகிறேன்.
நான் சிகாகோவில் ஒரு குறிப்பிட்ட தேவாலயத்தில் ஊழியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன், தேவாலயம் இருந்த மூலையில் ஒரு மதுபானக் கடை இருந்தது. இது தேவாலயத்துடன் முற்றிலும் சுவருடன் சுவராக கட்டப்பட்டிருந்தது. இப்போது, அது மதுபானம் மட்டும் விற்கவில்லை, ஆனால் அது விபசாரம், போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றை கையாண்டது, அது மிகவும் பொல்லாத தீய இடமாக இருந்தது, மேலும், முழு சுற்றுப்புறத்திலும் அது ஒரு புண் போலவே இருந்தது.
ஒரு வருடம் அக்டோபரில், நாங்கள் தேவாலயத்தில் ஒரு ஜெபக்கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தோம், இந்த மதுபானக் கடையின் பிரச்சனையை ஒருவர் குறிப்பிட்டார். சிறிது நேரம் கழித்து, ஜெபக்கூட்டத்தின் நேரத்திலே, நான் ஜெபம் செய்து கொண்டிருந்தபோது, நான் சொன்னேன், “அந்த மதுபானக் கடையின் மீது நான் தேவனின் சாபத்தை இயேசுவின் நாமத்தினாலே வைக்கிறேன்.” உண்மையில் நான் அதைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை.
சுமார் ஒரு மாதத்திற்கு பின்னர், அந்த நேரத்தில் நாங்கள் வசித்து வந்த பார்க் ரிட்ஜ் என்ற பகுதியில் நான் தூங்கிக் கொண்டிருந்தேன். அதிகாலை 2 மணிக்கு, தொலைபேசி ஒலித்தது, நான் விழித்தேன், தொலைபேசியின் மறுமுனையில் மிகவும் பரபரப்பான குரல் சொன்னது என்னவென்றால், “சகோதரர் பிரின்ஸ், சகோதரர் பிரின்ஸ், சபை எரிகிறது!” அதனால் நான் படுக்கையில் இருந்து குதித்து சில ஆடைகளை அணிந்தேன். அது ஒரு கடுமையான குளிர் நிறைந்த இரவு நேரம். நான் சிகாகோவிற்குச் சென்றேன், அங்கு முழு வானமும் தீப்பிழம்புகளாலும், புகையாலும் நிரம்பியிருந்தது, அவை தேவாலயம் முழுவதும் இருந்தன. ஆனால் நான் நெருங்கி வந்தபோது, தேவாலயம் உண்மையில் தீப்பிடிக்கவில்லை, அது மதுபானக் கடை என்பதை கவனித்தேன். அங்குள்ள ஏரியிலிருந்து தேவாலயத்தை நோக்கி காற்று வடக்கே வீசியதால், தேவாலயத்தின் மீது தீப்பிழம்புகள் பரவிக்கொண்டிருந்தன. ஆனால் திடீரென வீசிய காற்று 180 டிகிரியாக மாறி தேவாலயத்தில் இருந்து தீப்பிழம்புகளை தூரமாக வீசியது. மதுபானக் கடை அழிக்கப்பட்டது, தேவாலயமோ முற்றிலுமாக பாதிப்பில்லாமல் இருந்தது, புகை சேதத்தைத் தவிர, அதுவும் எளிதில் சரிசெய்யப்பட்டது.
தேவன் செய்ததைப் பற்றி நான் உண்மையிலேயே தியானித்தபோது, எனக்குள் ஒருவித பயமும், பிரமிப்பும் நிறைந்திருந்தது. சிகாகோவின் தீயணைப்புப் படைத்தலைவர், அவர் நிலைமையை ஆய்வு செய்ததை நான் குறிப்பிடுகிறேன், அவர் என்ன நடந்தது என்று பகுப்பாய்வு செய்து, சபையின் மூப்பரிடம் தனது சொந்த உலக வழக்கத்தில் சொன்னதாவது, “மாடியில் இருக்கும் மனிதருடன் நீங்கள் நல்ல உறவில் இருக்க வேண்டும்.” ஏனென்றால், திடீரென ஏற்பட்ட காற்றின் திடீர் மாற்றம், தேவாலயத்தை நெருப்பால் உண்டாக்கும் சில அழிவிலிருந்து காப்பாற்றியது.
பிறகு, எனக்குள் சொல்லிக் கொண்டேன், “நான் எப்படி ஜெபிக்கிறேன் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.” எனது சொந்த முக்கியத்துவமும், வல்லமையும் கொண்ட உயர்ந்த உணர்வை நான் பெறவில்லை. நான் ஒரு மிகப்பெரிய பொறுப்புணர்வை உணர்ந்தேன். ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், கிட்டத்தட்ட பயமுறுத்தும் ஒரு வகையான வல்லமையை தேவன் நமக்கு ஒப்படைத்துள்ளார் என்பதை நான் உணர்ந்தேன். அத்திமரத்தை இயேசு எப்படி சபித்தார், அது வேரிலிருந்து வாடியதை நாம் வாசித்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? மேலும், இயேசு தம் சீஷர்களிடம் குறிப்பாகச் சொன்னார், “அத்திமரத்திற்குச் செய்ததை நீங்களும் செய்யலாம். நீங்கள் ஒரு மலையைப் பார்த்து, ‘நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ’ என்று கூட சொல்லலாம். உங்களுக்கு சரியான விசுவாசம், தேவனின் விசுவாசம் இருந்தால், நீங்கள் என்ன சொன்னாலும் நடக்கும்.”
எனவே, இது விசுவாசத்தின் வரம் மற்றும் அது செயல்படும் விதத்தின் ஒரு சிறிய காட்சியாகும்.
இப்போது, நான் இன்றைக்கு முடிக்கப் போகிறேன், ஆனால் அடுத்த வாரம் இதே நேரத்தில், திங்கள் முதல் வெள்ளி வரை உங்களுடன் மீண்டும் வருவேன். பரிசுத்த ஆவியின் இந்த அற்புதமான வரங்களைப் பற்றி நான் தொடர்ந்து பேசுவேன். அடுத்த வாரம், இன்னும் ஐந்து ஆவியின் வரங்களைப் பற்றி உங்களுக்குச் சொல்வதற்கு என்னிடம் உள்ளது.
குறியீடு: RP-R007-105-TAM









