தேவனுடைய வார்த்தை ஜீவனுள்ளது

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: செப்டம்பர் 2026
Read Time: 10
தேவனுடைய வார்த்தையின் உருமாற்றும் வல்லமையைக் கண்டறியுங்கள்! 'தேவனுடைய வார்த்தை உங்களுக்கு என்ன செய்யும்' பகுதி 1-ல், வேதாகமம் எவ்வாறு உயிருள்ளதாகவும், கிரியை செய்கிறதாகவும் இருந்து, பரிசுத்த ஆவியின் மூலம் உங்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை டெரெக் பிரின்ஸ் விளக்குகிறார். தேவனுடைய வார்த்தையின் தனித்துவமான தன்மை மற்றும் அதன் வாழ்வை மாற்றும் வல்லமைக்கு உங்கள் இதயத்தைத் திறக்கும்போது ஆசீர்வாதங்களை எதிர்பாருங்கள்.
Transcript
ஒரு புதிய வாரத்தின் தொடக்கத்தில் உங்களுடன் இருப்பது நல்லது, வாழ்க்கை எனக்குக் கற்றுத்தந்த சத்தியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வது நல்லது - என் வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் வித்தியாசத்தை ஏற்படுத்திய அந்த சத்தியங்கள், உங்களுக்கும் அதையே செய்ய முடியும்.
உங்களில் எனக்கு கடிதம் எழுதுபவர்களுக்கு "நன்றி" என்று சொல்லி நான் ஆரம்பிக்கட்டும். நான் இந்தப் பேச்சை முடிப்பதற்கு முன், நீங்கள் எழுதக்கூடிய அஞ்சல் முகவரியை நாங்கள் உங்களுக்குத் தருகிறோம். உங்கள் தனிப்பட்ட தேவைகள், உங்கள் பிரச்சனைகள், உங்கள் ஜெப விண்ணப்பங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள தயங்காதீர்கள்.
இன்றும், இந்த வாரம் முழுவதும், “தேவனுடைய வார்த்தை உங்களுக்கு என்ன செய்யும்” என்ற கருப்பொருளில் நான் பகிர்ந்துகொள்ளப் போகிறேன். அவைகள் தேவன் தம்முடைய வார்த்தை உங்களில் உருவாக்க உத்தேசித்துள்ள விளைவுகள் மற்றும் தேவனுடைய வார்த்தைக்கு உங்களைத் திறந்து கொடுக்கும்பொழுது நீங்கள் அனுபவிக்க எதிர்பார்க்கும் விளைவுகள் ஆகும். உண்மையில், இன்றும் வரவிருக்கும் நாட்களிலும் என்னுடைய இந்த பேச்சை நீங்கள் கேட்கும்போது அவைகளை நீங்கள் அனுபவிப்பீர்கள்.
எனவே இப்போதே உங்கள் இதயத்தைத் திறந்து, நான் சொல்வதை எதிர்பார்ப்பு மனப்பான்மையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் தொடர்ந்து கேட்கும்போது, நல்ல மற்றும் நேர்மறையான ஒன்றைப் பெற எதிர்பார்த்திருங்கள்.
முதலாவதாக, தேவனுடைய வார்த்தையின் தன்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் அது தனித்துவமானது, அது நம் வாழ்நாள் முழுவதும் நாம் சந்திக்கும் எல்லாவற்றையும் விட முற்றிலும் வேறுபட்டது. தேவனின் வார்த்தை என்பது வெள்ளைத் தாளில் உள்ள கறுப்புக் குறிகள் மட்டுமல்ல, அதைவிடப் பெரிய காரியம் இருக்கிறது. தேவனுடைய வார்த்தை அருளும் செய்தியின் ஆதாரத்தை, தேவனுடைய வார்த்தையிலேயேத்தான் கண்டறிய வேண்டும். ஆகவே, தேவனுடைய வார்த்தை தன்னைப் பற்றிச் சொல்லும் சில விஷயங்களை முதலில் உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன்.
சங்கீதம் 33:6 இல் துவங்குகிறேன்.
"கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது."
இதில், "சுவாசம்" என்று தமிழ் மொழிபெயர்ப்பில் கூறப்படும் இடத்தில், வரக்கூடிய எபிரேய வார்த்தை உண்மையில் "ஆவி" ஆகும். நிச்சயமாக, "ஆவி" மற்றும் "சுவாசம்" மற்றும் "பரிசுத்த ஆவியானவர் (தேவனின் ஆவி)" ஆகிய வார்த்தைகளுக்கு இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது மற்றும் வேதத்தில் அது "சர்வவல்லவரின் சுவாசம்" என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த வசனத்தில் இங்கு பேசப்படும் இரண்டு காரியங்கள் கர்த்தருடைய வார்த்தையும் கர்த்தருடைய ஆவியும் என்பதை நாம் பார்க்க வேண்டும். கர்த்தருடைய வார்த்தை மற்றும் கர்த்தருடைய ஆவியானவர் ஒன்றுசேர்ந்து வேலைசெய்துதான் வானங்களும், அவைகளின் சர்வ சேனையும் உண்டாக்கப்பட்டன. உண்மையில், சிருஷ்டிக்கப்பட்ட முழு பிரபஞ்சமும் இந்த இரண்டு காரியங்களால் தான் உருவாக்கப்பட்டது—தேவனுடைய வார்த்தையும் ஆவியும்.
நாம் புரிந்து கொள்ள வேண்டிய சில கோட்பாடுகள் உள்ளன. முதலாவதாக, தேவனுடைய வார்த்தையும் தேவனுடைய ஆவியும் எப்போதும் ஒன்றாக வேலை செய்கின்றன மற்றும் அவை சரியான இணக்கத்துடன் செயல்படுகின்றன. வேதாகமத்தின் தொடக்கத்திலேயே, ஆதியாகமம் 1:2 இல், “தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்” என்ற கூற்று உள்ளது. பின்னர் அடுத்த வசனத்தில், "தேவன் கூறினார்"; அதாவது, தேவனுடைய வார்த்தை வெளிப்பட்டது. ஆகவே, படைப்பின் தொடக்கத்திலேயே, வார்த்தையும் தேவனுடைய ஆவியும் உள்ளது. அந்த வகையில் தேவனுடைய வார்த்தையும் ஆவியும் ஒன்றுபட்டபோது, அதன் விளைவு சிருஷ்டிப்பாகும். தேவன், "வெளிச்சம் உண்டாகக்கடவது" என்று கூறினார், மேலும் வெளிச்சம் தோன்றியது.
எனவே முழு பிரபஞ்சத்தின் பின்னால் உள்ள படைப்பாற்றல் என்பது தேவனுடைய வார்த்தையும் ஆவியும் ஒன்றாக வேலை செய்வதுதான். இதைப் புரிந்துகொள்வது மிக முக்கியம், ஏனென்றால் நீங்கள் தேவனுடைய வார்த்தையையும் ஆவியையும் உங்கள் இதயத்திலும் வாழ்க்கையிலும் பெறும்போது தேவனுடைய மொத்த படைப்பாற்றலையும் பெறுகிறீர்கள். இந்த முழு பரந்த பிரபஞ்சத்தையும் கொண்டு வந்த வல்லமை, வார்த்தை மற்றும் தேவனுடைய ஆவியின் மூலம் உங்களுக்குக் கிடைக்கிறது.
பின்னர் ஏசாயா 55:11 இல், தேவன் தம் வார்த்தை அதன் நோக்கத்தில் ஒருபோதும் தோல்வியடையாது என்று அறிவிக்கிறார். அவர் சொல்கிறார்:
"அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்."
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனுடைய வார்த்தை வெளிவரும்போது, அவர் விரும்புவதை அது நிறைவேற்றுகிறது, அவர் அதை அனுப்பும் நோக்கத்தில் வெற்றி பெறுகிறது. எனவே நீங்கள் தேவனுடைய வார்த்தையை முழுமையாக நம்பலாம், அது அனுப்பப்பட்டதைச் செய்யும் எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் இருப்பதாக நாம் கூறலாம். இன்று நீங்கள் அமெரிக்காவில் உள்ள பெரிய கடைகளில் ஏதேனும் உபகரணங்களை வாங்கினால், உற்பத்தியாளர் நீங்கள் வாங்கும் பொருளுக்கு எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை வழங்குவார். இது தேவனுடைய வார்த்தையின் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் ஆகும், அது அவர் சொல்வதைச் நேர்த்தியாகச் செய்யும்.
மேலும், புதிய ஏற்பாட்டில் யோவான் 6:63 இல் இயேசு சொல்கறார்:
"...நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும், ஜீவனாயும் இருக்கிறது."
அவை காற்றில் உள்ள ஒலிகள் மட்டுமல்ல, அவை காகிதத்தில் உள்ள குறிகள் மட்டுமல்ல, அவற்றில் ஆவியும் ஜீவனும் இருக்கிறது, அது தேவனுடைய ஆவி மற்றும் ஜீவன் ஆகும்.
பின்னர் எபிரெயர் 4:12 இல், தேவனுடைய வார்த்தையைப் பற்றிய இந்த அறிக்கை நமக்கு உள்ளது:
"தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது."
இது தேவனுடைய வார்த்தையின் ஒரு தெளிவான காட்சி என்று நான் நினைக்கிறேன். அது உயிருடன் இருக்கிறது, ஆற்றல் மிக்கது, ஊடுருவிச் செல்கிறது, மேலும் அது மனித ஆளுமையின் ஒவ்வொரு பகுதியிலும்-மனதுக்குள், ஆவிக்குள், ஆன்மாவிற்குள், மற்றும் சரீரத்துக்குள் சென்றடைகிறது. அது எங்கு வந்தாலும், அது உங்களுக்கு நல்லது செய்யும் என்ற எழுத்துப்பூர்வ உத்தரவாதத்துடன் வருகிறது. தேவன் அனுப்பிய நோக்கத்தை அது உங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றும்.
இப்போது நான் நாணயத்தின் மறுபக்கம் திரும்பப் போகிறேன். இது தேவனுடைய வார்த்தை என்பது என்ன அல்லது தேவனுடைய வார்த்தை உங்களுக்கு என்ன செய்யும் என்ற கேள்வி மட்டுமல்ல - அது உத்தரவாதமுள்ளது மற்றும் அது தேவனைப் போலவே மாறாதது. ஆனால் தேவனுடைய வார்த்தை உங்களிடமோ என்னிடமோ உருவாக்கும் விளைவுகள், நாம் அதற்கு எவ்விதம் பதிலளிக்கிறோம் என்பதைப் பொறுத்துள்ளது. ஆகவே, நாம் தேவனுடைய வார்த்தையின் மூலம் பெற விரும்பும் அனைத்து நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் பெறுவதற்கு, தேவனுடைய வார்த்தைக்கு நாம் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை இப்போது நான் உங்களுக்குச் சுருக்கமாக விளக்கப் போகிறேன்.
1 தெசலோனிக்கேயர் 2:13 இல், தெசலோனிக்கேயிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு பவுல் இந்த வார்த்தைகளை எழுதுகிறார்:
"ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது."
பாருங்கள், இங்கே இரண்டு தேவைகள் உள்ளன. தேவனுடைய வார்த்தை நம்மிடம் வரும்போது அதை ஒருவித மனித எழுத்து அல்லது மனித செய்தியாக மட்டும் கருதாமல், அது தேவனிடமிருந்து நேரடியாக வந்த செய்தி என்பதை ஒப்புக்கொள்கிறோம். இது தேவனுடைய வார்த்தை, மனிதனின் வார்த்தை அல்ல.
இரண்டாவதாக, நாம் அதை விசுவாசத்தில் பெற வேண்டும். நாம் அதை நம்ப வேண்டும். பின்னர் நாம் அதை தேவனுடைய வார்த்தையாகப் பெற்று அதை நம்பும்போது, அது நமக்குள் தன் வேலையைச் செய்கிறது என்று பவுல் கூறுகிறார். அது தேவன் நினைத்ததைச் செய்கிறது. எனவே அங்குள்ள இரண்டு தேவைகளை மனதில் கொள்ளுங்கள். நீங்கள் அதை மனிதனிடமிருந்து ஒரு செய்தியாக இல்லாமல் தேவனுடைய வார்த்தையாகப் பெற வேண்டும், நீங்கள் அதை விசுவாசத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். பிறகு அது தேவன் கோருவதை உன்னில் செய்கிறது.
இருப்பினும், தேவனுடைய வார்த்தையின் முழுப் பயனைப் பெறுவதற்கு நம் வாழ்வில் தார்மீகத் தேவைகளும் உள்ளன. யாக்கோபு 1:21 இல், யாக்கோபு இவ்வாறு கூறுகிறார்:
"ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்."
"நாட்டப்பட்டதாயும்" என்ற வார்த்தையை கவனியுங்கள். அது உயிருள்ள வளரக்கூடிய ஒன்று. எனவே நீங்கள் அதைப் பெற்றுக்கொண்டால், அதை உங்கள் இதயத்திலும் உயிரிலும் விதைத்தால், அது அங்கே வேரூன்றிவிடும். அது வளரும், அது தேவன் நினைத்துள்ள பலன்களைப் கனி போல் பிறப்பிக்கும்.
ஆனால் இரண்டு தேவைகள் உள்ளன என்று தேவன் கூறுகிறார். முதலில், எதிர்மறை: நாம் அழுக்கு மற்றும் துர்க்குணத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். நம் வாழ்க்கையை நாம் சுத்தம் செய்ய வேண்டும். பாவம் மற்றும் கலகம் மற்றும் பிற தீய காரியங்களை நம் இதயங்களிலும் மனதிலும் வைத்திருப்பது நல்லதல்ல, அப்படி வைத்துக்கொண்டு தேவனுடைய வார்த்தை அவர் வாக்குறுதியளிப்பதைச் செய்யும் என்று எதிர்பார்த்தால், அது அதைச் செய்யாது.
இரண்டாவதாக, நாம் தாழ்மையுடன் வார்த்தையைப் பெற வேண்டும். தேவனுடைய வார்த்தையைப் பெறுவதற்கான முக்கியமான தேவைகளில் ஒன்று, நாம் மனத்தாழ்மையுடன் இருப்பதுதான். நாம் கற்றுக்கொள்ளக்கூடியவர்கள். நாம் ஒரு குறும்புக்காரக் குழந்தையாக நடந்து கொள்ளாமல், தேவனுக்குப் பதில் சொல்லி, அவர் நாம் சொல்ல விரும்புவதை அவரிடம் சொல்ல முயற்சிக்கிறோம். ஆனால் அவர் உண்மையில் நமக்குச் சொல்வதை நாம் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறோம்.
தேவன் தம்முடைய மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறார் என்பதை உங்களுக்குச் சுட்டிக்காட்டி இந்தப் பேச்சை நான் முடிக்க விரும்புகிறேன். நாம் தேவனின் மாணவர்களில் ஒருவராக, தேவனிடமிருந்து கற்றுக்கொள்பவர்களில் ஒருவராக இருக்க விரும்பினால், நாம் அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அவரது தேவைகள் சங்கீதம் 25 இல் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. நான் படிக்க விரும்பும் சில வசனங்கள் அங்கே உள்ளன.
8 கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார். 9 சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார். 12 கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். 14 கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.
தேவன் நமக்கு அவருடைய வழியைக் கற்பித்து, அவருடைய உடன்படிக்கையைப் புரிந்துகொள்ளச் செய்யப் போகிறார் என்றால் இரண்டு குணாதிசயத் தேவைகள் உள்ளன என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். முதலாவது, நாம் தாழ்மைப்பட வேண்டும். இரண்டாவது, நாம் தேவனுக்கு பயப்பட வேண்டும் அல்லது பயபக்தியுடன் அவரை மதிக்க வேண்டும். ஆகவே, நம் வாழ்வில் நிறைவேற்றும்படி தேவன் அனுப்பியதை தேவனின் வார்த்தையிலிருந்து பெற வேண்டுமானால் இரண்டு முழுமையான தேவைகள் உள்ளன. நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், நாம் தேவனின் அற்புதமான இரகசியங்களில் தொடங்கப்பட வேண்டும் என்றால், அவர் தனது ஆழமான மற்றும் அற்புதமான எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால், நாம் குணாதிசயத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் அவை: தாழ்மை மற்றும் தேவனுடைய பயபக்தி.
வேதாகமப் பள்ளிகளிலோ அல்லது செமினரிகளிலோ அல்லது இறையியல் கல்லூரிகளிலோ சேர்ந்த பலர் மூளை அறிவைப் பெறுகிறார்கள். ஒருவேளை அவர்கள் பட்டங்களுடன் வெளிவரலாம். ஆனால் தேவன் அவர்களை ஒருபோதும் தனது மாணவர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை, ஏனென்றால் அவர்கள் அவருடைய குணாதிசயத் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை. தாழ்மையுடன் இருத்தல் மற்றும் தேவன் மீது பயபக்தியும் மரியாதையும் கொண்ட குணாதிசயத் தேவைகள் தான் அவை.
இந்த வாரம் முழுவதும் மற்றும் அடுத்த வாரத்திலும் நான் இந்த கருப்பொருளைப் பற்றி தான் பேசப் போகிறேன். ஆனால் இந்த வார தொடக்கத்தில் நான் உங்களுக்கு ஒரு சவால் விட விரும்புகிறேன். இதை நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். தேவனுடைய வார்த்தைக்கு தேவையான அணுகுமுறையை ஏற்க இப்போதே முடிவு செய்வீர்களா? தேவனுக்கும் அவருடைய வார்த்தைக்கும் உள்ள உங்கள் அணுகுமுறையில் நீங்கள் தாழ்மையாகவும் பயபக்தியுடனும் இருப்பீர்களா?
சரி, இப்போது நமது நேரம் முடிந்துவிட்டது. ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களிடம் வருவேன். தேவனுடைய வார்த்தை உங்களுக்குள் உருவாக்கும் முதல் குறிப்பிட்ட விளைவைப் பற்றி நான் பேசுவேன், அது விசுவாசம். விசுவாசம் எப்படி வருகிறது என்பது பற்றி தேவன் எனக்குக்
குறியீடு: RP-R005-101-TAM









