நான் இந்த வாரம் தேவனுடைய மக்களிடை

நான் இந்த வாரம் தேவனுடைய மக்களிடையே உள்ள உடன்படிக்கையின் உறவுகளைப் பற்றி பேசிக்கிக்கொண்டு வருகிறேன். நேற்றைய தினம், இயேசுவினால் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் உணவைப் பற்றிப் பேசினேன்—நற்கருணை, திருவிருந்து, ராப்போஜனம், அப்பம் பிட்குதல் அல்லது கர்த்தருடைய பந்தி, என்று நாம் அதை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். அதன் நோக்கம், நினைவூக்கூறுதல், தொடர செய்தல், புதுப்பித்தல் என்று கூறினேன். தேவனுடைய பார்வையில் உடன்படிக்கை மிகவும் புனிதமானது என்பதால், இந்த உடன்படிக்கையின் பந்தியை சரியான முறையில் அனுசரிப்பதற்கு அவர் சிறப்பு ஆசீர்வாதங்களை இணைக்கிறார், ஆனால் நமது உடன்படிக்கையின் கடமைகளை தவிற்கும் எந்தவொரு நடத்தைக்கும் கடுமையான தீர்ப்புகளை வழங்குகிறார்.

இது மிகவும் புனிதமான மற்றும் விளையாட்டல்லதா விஷயமாக இருப்பதால், இன்று நான் உங்களுக்கு ஒரு சிறப்பு எச்சரிக்கை வார்த்தையை கொண்டு வர விரும்புகிறேன். உடன்படிக்கையை வலுவற்றதாக்கும் நடத்தை பற்றி நான் உங்களிடம் பேச விரும்புகிறேன். உறவுக்கான அடிப்படையாக உடன்படிக்கையின் அர்ப்பணிப்பின் கோரிக்கைகளை தேவன் சங்கீதம் 50 இல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளார். சங்கீதம் 50 வசனம் 5 இல், தேவன் கூறுகிறார்:

5 பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்.

தெய்வபக்தியுள்ளோர் என்று தேவன் கருதும் மக்களை வரையறுக்கிறது. ஒரு தியாகத்தின் அடிப்படையில் அவருடன் உடன்படிக்கை செய்தவர்கள் அவர்களே. புதிய உடன்படிக்கு அடிப்படையாக இருக்கும் பலி, நம் சார்பாக நிறைவேறின இயேசுவின் மரணமே.

தேவனுடன் தொடர்புடையவராக இருக்க, அவருடைய தெய்வபக்தியுள்ளவர்களுடன் சேர்த்துக்கொள்ளப்பட, நம் சார்பாக இயேசுவின் தியாக மரணத்தை அடிப்படையாகக் கொண்ட தேவனுடனான அந்த உடன்படிக்கையின் உறவில் நாம் இருக்க வேண்டும்.

தொடர்ந்து, சங்கீதம் 50ல், தேவன் தம் உடன்படிக்கையின் நிபந்தனைகளை நிறைவேற்றுபவர்களுக்கு ஒரு வாக்குத்தத்தத்தை கொடுக்கிறார். தேவைப்படும் நேரத்தில் தமது உதவியை அவர் உறுதியளிக்கிறார். 15ம் வசனத்தில், அவர் கூறுகிறார்:

15 ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.

ஆனால் பின்னர் அதே சங்கீதத்தில், அவர் தனது உடன்படிக்கைக்கு தகுதியற்ற நடத்தை கொண்டவர்களைக் கடுமையாகக் கண்டிக்கும் வார்த்தையையும் பேசுகிறார். இந்த எச்சரிக்கை மற்றும் கண்டிக்கும் வார்த்தைகள் அதே சங்கீதத்தில், 16-20 வசனங்களில் காணப்படுகின்றன:

16 தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.

இந்த மக்கள் தேவனுடன் உடன்படிக்கையின் உறவைக் கொண்டிருப்பதாகக் கூறுவதால் தேவன் கோபமாக இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். அவர்கள் உடன்படிக்கையின் மொழியைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் அவர்களின் நடத்தை அவர்களின் அறிக்கைக்கு ஒத்ததல்ல. தேவனுடன் உடன்படிக்கையின் உறவில் இருப்பதாகக் கூறுவது, தேவனிடமும் ஒருவரையொருவர் நோக்கியும் மிக உயர்ந்த நடத்தையை கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை நம்மீது வைக்கிறது என்பதை இது மிகவும் தெளிவாக்குகிறது. இந்த சங்கீதத்தின் அடுத்த வசனங்களில், தம்முடன் உடன்படிக்கை உறவில் இருப்பதாகக் கூறுபவர்களிடம் தேவன் ஏற்றுக்கொள்ளாத காரியங்களைக் குறிப்பிடுகிறார். அவர் இவ்வாறு கூறுகிறார்:

17 சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய். 18 நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு. 19 உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் பிணைக்கிறது. 20 நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.

உடன்படிக்கை உறவிலிருந்து மக்களைத் தகுதி நீக்கம் செய்யும் சில நடத்தை முறைகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. முதலில் குறிப்பிடப்பட்டவற்றை இவ்வாறு சுருக்கமாகக் கூறலாம்: ஒழுக்கமற்றிருப்பது, தேவனுடைய வார்த்தையை நிராகரித்தல் மற்றும் திருடர்களுடனும் விபச்சாரக்காரர்களுடனும் தொடர்பில் இருப்பது. ஆனால் இங்கு நாவினால் செய்யப்படும் தீமைத்தான் வலியுறுத்தப்படுகிறது. "உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய்," "உன் நாவு சற்பனையைப் பிணைக்கிறது," "நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாகப் பேசுகிறாய்," "உன் சொந்த தாயின் மகனையே அவதூறாகப் பேசுகிறாய்." இவை நாவினால் செய்யப்படும் நான்கு காரியங்கள். நான் இதைச் சொல்ல விரும்புகிறேன்: மற்ற எல்லா பாவங்களையும் விட நாவின் பாவங்கள் உடன்படிக்கையின் உறவுகளை வலுவிழக்க செய்கின்றன. யாக்கோபு 3ம் அதிகாரம் 6ம் வசனத்தில், யாக்கோபு இவ்வாறு கூறுகிறார்:

6 நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!

நாக்கு தவறாகப் பயன்படுத்தப்படும்போது அது முழு உடலையும் தீட்டுப்படுத்துகிறது என்பதை கவனிக்கவும். இது தனிப்பட்ட விதத்தில் தன் சரீரத்தை கறைப்படுத்த விசுவாசி தன் நாவை தவறாக பயன்படுத்துவதை பற்றி மட்டுமல்ல, இது இயேசு கிறிஸ்துவின் சரீரத்தை குறித்தும் உண்மை. விசுவாசிகள் தங்களுக்குள்ளேயே நாக்கை தவறாகப் பயன்படுத்துவது முழு உடலையும் தீட்டுப்படுத்துகிறது. அத்தகைய நபர்களை தேவனுடனும் ஒருவருடன் ஒருவரும் உடன்படிக்கையின் உறவைக் கோருவதற்கு தகுதியற்றவர்களாக ஆக்குகிறது.

கிறிஸ்துவின் சரீரத்திற்கு தீங்கு விளைவிக்கும் நாவின் இரண்டு குறிப்பிட்ட தவறான பயன்பாடுகளை நான் குறிப்பிட விரும்புகிறேன், இது இன்று தேவனுடைய மக்களிடையே புலம்பக்கூடிய விதத்தில் பொதுவாக உள்ளது என்று நான் நம்புகிறேன். முதலாவது சங்கீதம் 15 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கீதம் 15 ஒரு கேள்வியுடன் தொடங்குகிறது: “கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்?" கேள்வியின் சுருக்கம் என்னவென்றால், "தேவனுடன் நெருங்கிய ஐக்கியம் மற்றும் உறவுக்கு தகுதியானவர் யார்?" மேலும் அச்சங்கீதத்தின் மீதமுள்ள வசனங்களில், தேவனுடன் நெருங்கி வந்து ஐக்கியம் கொள்வதாகக் கூறும் நபரின் வாழ்க்கையில் பதினொரு தேவைகளை சங்கீதக்காரர் கூறுகிறார். நான் பதினொன்றையும் கையாளப் போவதில்லை, நான் மூன்றாவது வசனத்தை மட்டுமே படிக்கப் போகிறேன், அதில் தேவனுடனான ஐக்கியத்தில் அந்த பதினொரு தேவைகளில் மூன்று தேவைகள் உள்ளன. அத்தகைய நபரைப் பற்றி பேசுகையில், சங்கீதக்காரன் வசனம் 3 இல் கூறுகிறார்:

அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.

அந்தத் தேவைகளில் இரண்டு நாவுடன் தொடர்புடையவை. முதலாவது நாம் அவதூறு பேசாதிருப்பது; இரண்டாவது, ஒரு நண்பருக்கு எதிராக சொல்லப்படும் நிந்தனையை ஏற்காமல் இருப்பது. அவதூறு என்பது மற்ற நபர்களைப் பற்றி தீங்கிழைக்கும் அல்லது தீங்கு விளைவிக்கும் அல்லது புண்படுத்தும் அறிக்கைகளைப் பரப்புவதாகும். "பிசாசு" என்ற வார்த்தையின் அர்த்தம் "அவதூறு செய்பவன்" என்பதை நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறேன். வெளிப்படுத்துதல் 12 ஆம் அதிகாரத்தில், பிசாசு "சகோதரர்களைக் குற்றம் சாட்டுபவன்" என்று நமக்குக் கூறப்பட்டுள்ளது; அவன் தேவனுடைய மக்கள் மீது குற்றம் சாட்டுபவன். ஒவ்வொரு முறையும் நாம் நம் சக விசுவாசிகளைப் பற்றி அவதூறுகளைச் சுமந்து செல்லும்போது அல்லது அவர்களைக் குற்றம் சாட்டும்போது, உண்மையில் பிசாசின் வேலையை அவனுக்காக நாம் செய்வதாகும். நான் உங்களிடம் மன்றாட விரும்புகிறேன்: அதைச் செய்யாதீர்கள். பிசாசுக்கு உங்கள் உதவி தேவையில்லை! தேவனுடைய மக்களிடையே உதவியாளர்களைக் கண்டுபிடிக்காமலேயே அவனுக்கு போதுமானவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் சங்கீதம் 15-ன் அந்த வசனம் 3-ன் இரண்டாவது விஷயம் என்னவென்றால், நாம் மற்றவர் மேல் சொல்லப்படும் ஒரு நிந்தையைப் ஏற்கக்கூடாது. ஒரு சக விசுவாசியைப் பற்றி யாராவது தீங்கிழைக்கும் அல்லது இரக்கமற்ற அறிக்கையுடன் நம்மிடம் வந்தால், அதை நாம் ஏற்றுக்கொள்ள கூடாது. நாம் என்ன செய்ய வேண்டும்? பெரும்பாலான சந்தர்ப்பங்களில், “அந்த சகோதரன் அல்லது அந்த சகோதரிக்கு எதிராக உங்களுக்கு ஏதேனும் இருந்தால், அவர்களிடம் சென்று நேரடியாகச் சொல்லுங்கள். அவர்களிடம் செல்லுங்கள். நீங்கள் வருவதற்கு நான் ஆள் இல்லை." என்று கூறுங்கள்.

நீங்கள் ஒரு இல்லத்தரசி என்று வைத்துக்கொள்வோம், நீங்கள் உங்கள் வீட்டை அழகாக சுத்தம் செய்து, வரவேற்பறையை சுத்தம் செய்துவிட்டு, மேஜைகள் மற்றும் நாற்காலிகள் அனைத்தையும் தூசி தட்டி, நீங்கள் விரும்பியபடி எல்லாவற்றையும் அமைத்த பின், உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் அழுகிய, ஈரமான, குப்பைப் பையுடன் வந்து, அறையின் தரையில் குப்பைகளை கொட்ட ஆரம்பிக்கிறார். நீங்கள் அதை பொறுத்துக்கொள்வீர்களா? நிச்சயமாக இல்லை. “உங்கள் குப்பைகளை வெளியே எடுத்துக்கொண்டு போங்கள். அது இங்கே எனக்கு வேண்டாம்!" என்று நீங்கள் கூறுவீர்கள். ஒரு சக விசுவாசிக்கு எதிராக யாரேனும் ஒரு குற்றச்சாட்டு அல்லது அவதூறுடன் உங்களிடம் வரும்போது நீங்கள் சொல்ல வேண்டியது இதுதான். “உங்கள் குப்பைகளை வெளியே கொட்டுங்கள். நான் அதை என் வீட்டில் விரும்பவில்லை. என் வீடு சுத்தமாக இருக்கிறது. அது தீட்டுப்படுவதை நான் விரும்பவில்லை" என்று சொல்லுங்கள். எனவே தயவு செய்து இதை நினைவில் கொள்ளுங்கள், பிசாசின் வேலையை அவனுக்காக செய்யாதீர்கள்.

கிறிஸ்தவர்களிடையே மிகவும் பொதுவான மற்றொரு பிரச்சனை, ஒருவரையொருவர் நியாயந்தீர்ப்பது. யாக்கோபு 4ம் அதிகாரம் வசனங்கள் 11-12 இவ்வாறு கூறுகிறது:

11 சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய். 12 நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?

பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தங்கள் சக விசுவாசிகளின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கருதுகிறார்கள். இது ஒரு பயங்கரமான தவறு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு சட்ட நீதிமன்றத்தை ஒரு நிமிஷம் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் ஒன்றில் இருந்திருப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் - நான் இருந்திருக்கிறேன். நீங்கள் நீதிமன்றத்திற்குச் செல்லும்போது, நீங்கள் உட்காரும் பெஞ்சுகள் அல்லது நாற்காலிகள் உள்ளன, பின்னர் அங்கே ஒரு இடைவெளி இருக்கும், பொதுவாக உங்களை தனியாக பிரிக்க சில வகையான தடுப்புகள் இருக்கும், பின்னர் நீதிபதியின் இருக்கை உள்ளது. மேலும் வழக்கமாக நீதிமன்றத்திற்குள் நுழையும் கடைசி நபர் நீதிபதிதான். அவர் உள்ளே வரும்போது, ஒரு குறிப்பிட்ட சடங்கு முறையுடன் நுழைவார் அப்போது மக்கள் எழுந்து நிற்க வேண்டும்.

நீங்கள் ஒரு நாள் அந்த நீதிமன்றத்திற்குச் சென்று, அங்கே உட்கார்ந்து, வழக்கு தொடங்குவதற்கும், நீதிபதி உள்ளே வருவதற்கும் காத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். திடீரென்று, "நான் ஏன் இன்று இந்த நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கக்கூடாது?" என யோசித்து, நீங்கள் உங்கள் இருக்கையை விட்டு எழுந்து, நேரே சென்று, தடுப்புகளை தகர்த்து, நீதிபதியின் இருக்கையில் அமர்ந்தீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். உங்களுக்கு என்ன நடக்கும் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் சட்டத்தை மீறுபவராக இருப்பீர்கள். நீங்களே தீர்ப்பின் கீழ் வருவீர்கள். நீங்கள் வெளியேற்றப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம். ஏன்? ஏனென்றால், நீங்கள் சட்டப்பூர்வ உரிமையின் மூலம் உங்களுடையது அல்லாத ஒரு நீதிபதியின் நிலையை எடுக்கிறீர்கள். அதனால்தான் உங்கள் சக விசுவாசியை நீங்கள் நியாந்தீர்க்கும் போது நீங்கள் சட்டத்தைக் கடைப்பிடிக்காமல், நீங்கள் சட்டத்தை மீறுகிறீர்கள் என்று யாக்கோபு கூறுகிறார். யார் நீதிபதியாக இருக்க வேண்டும் என்பதை சட்டம் தான் தீர்மானிக்கிறது, சட்டத்திற்கு மாறாக உங்களை நீதிபதியாக்கினால், நீங்கள் சட்டத்தை மீறுகிறீர்கள். இது கிறிஸ்தவர்களிடையே பொதுவான தவறுகளில் ஒன்றாகும் என்று நான் நம்புகிறேன். தேவன் நமக்கு அந்த உரிமையை வழங்காதபோதிலும், ஒருவரையொருவர் நியாயந்தீர்க்கும் உரிமையை நாமே எடுத்துக்கொள்கிறோம், அதன் விளைவாக, ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருப்பதற்கான நம்முடைய உடன்படிக்கையின் கடமைகளில் நாம் தவறுகிறோம்.

எனவே இன்று நான் இந்த செய்தியை நிறைவு செய்கையில் உங்களிடம் மன்றாடுகிறேன், உங்கள் நாவைக் காத்துக்கொள்ளுங்கள். உங்கள் சக விசுவாசிகளின் முதுகில் குத்தாதீர்கள்.

தேவன் உங்களை நீதிபதியாக்காதபோது அவதூறு செய்பவராகவோ, ஏளனம் செய்பவராகவோ அல்லது நீதிபதியாகவோ இருக்காதீர்கள்.

லைக்
பகிரவும்