ஆவிகளின் பகுத்தறிதல்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: செப்டம்பர் 2026
Read Time: 10
டெரெக் பிரின்ஸின் 'ஆவியின் வரங்கள்' தொடரின் நான்காம் பகுதியான 'ஆவிகளைப் பகுத்தறிதல்' மூலம் ஆவிக்குரிய உலகத்தைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெறுங்கள். ஆவிகளின் தன்மையை வேறுபடுத்தி அறியும் திறனை இந்தப் பிரசங்கம் விளக்குகிறது. இது ஆவிக்குரிய எதிரிகளைத் திறம்பட எதிர்கொள்ளவும், வஞ்சகங்களைத் தவிர்க்கவும், மறைந்திருக்கும் ஆவிக்குரிய உண்மைகளைக் கண்டறியவும் உதவும் ஒரு சிறந்த வழிகாட்டியாகும். தெய்வீக நுண்ணறிவைப் பெற்று ஆவிக்குரிய சவால்களைக் கையாள இது உங்களுக்கு உதவும்.
Transcript
பரிசுத்த ஆவியின் விலைமதிப்பற்ற அற்புதமான வரங்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் இன்று மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. கடந்த இரண்டு நாட்களாக நான் பேசியதில், ஞானத்தை போதிக்கும் வசனம் மற்றும் அறிவை உணர்த்தும் வசனம் ஆகிய இரண்டு வரங்களை நான் கையாண்டேன். இன்று நான் வெளிப்பாட்டு வரங்களின் மீதமுள்ள வரமான ஆவிகளைப் பகுத்தறிதல் (அல்லது வேறுப்படுத்துதல்) குறித்து பேசப் போகிறேன். இரண்டு மொழிபெயர்ப்புகளும் பயன்படுத்தப்படுகின்றன – ஆவிகளை வேறுபடுத்துதல் அல்லது பகுத்தறிதல்.
“வேறுபடுத்துதல்” அல்லது “பகுத்தறிதல்” என்பதன் பொருள் என்ன என்பதை முதலில் வரையறுக்க முயற்சிக்கிறேன். நம்மை எதிர்கொள்ளும் பல்வேறு வகையான ஆவிகளை உணர்ந்து கொண்டு, அடையாளம் கண்டு, வேறுபடுத்திப் பார்க்கும் திறன் என்றே நான் அதை புரிந்துகொள்கிறேன். அதை நான் மீண்டும் சொல்கிறேன்: நம்மை எதிர்கொள்ளும் பல்வேறு வகையான ஆவிகளை உணர்ந்து கொண்டு, அடையாளம் கண்டு, வேறுபடுத்தி அறியும் திறனாகும். மேலும், இது சம்பந்தமாக, கிறிஸ்தவ ஊழியம் என்பது ஆவிக்குரிய தளத்தில் உள்ள ஒரு ஊழியம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். எபேசியர் 6:12 இல், பவுல் சொல்லுகிறார், நான் மாம்சத்தோடும், இரத்தத்தோடும் உள்ள எதிரிகளையோ அல்லது உடலுடன் கூடிய நபர்களையோ எதிர்த்துப் போராடவில்லை, ஆனால் நாம் ஒரு தீய ஆவிக்குரிய இராஜ்ஜியமாகிய பொல்லாத ஆவிகளுக்கு எதிராக அணிவகுத்து நிற்கிறோம். எனவே, நமது ஆவிக்குரிய எதிரிகளைக் கையாளுவதற்கு நாம் தயாராக இருப்பது அவசியமாகும்.
நான் பரிந்துரைக்கிறேன், இந்த வரத்தின் நோக்கங்கள் நான்கு மடங்குகளாகும். முதலாவதாக, கண்ணுக்குத் தெரியாத ஆவிக்குரிய உலகத்தை மறைக்கும் திரையைத் தூக்குவதாகும். நாம் திறம்பட செயல்பட வேண்டுமானால், அதை நாம் உண்மையில் சமாளிக்க வேண்டிய உலகமாயிருக்கிறது.
இரண்டாவதாக, தேவன் பார்ப்பது போல் பார்க்க நமக்கு உதவுகிறது. 1 சாமுவேல் 16: 7 இல், கர்த்தர் சாமுவேலை நோக்கி: “மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்.” ஆவிகளை வேறுபடுத்தி அறியும் இந்த வரம், வெளிப்புற தோற்றத்திற்கு கீழே சென்று இதயத்தின் நிலையை பார்க்க உதவுகிறது.
வஞ்சகத்திலிருந்து நம்மைப் பாதுகாப்பதே வரத்தின் மூன்றாவது நோக்கமாகும். சில சமயங்களில் சாத்தான் ஒளியின் தூதனாக தேவனுடைய மக்களிடம் வருகிறான் என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும். அவன் மிகவும் அழகாகவும், நல்லவனாகவும், அதிபுத்திசாலியாகவும் தோன்றுகிறான். ஆனால் அவனது முழு நோக்கமும், எண்ணமும் தீமையும், அழிவுகரமானதுமே ஆகும்.
இந்த வரத்தின் நான்காவது நோக்கம், மக்களின் பிரச்சனைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவுவதற்காக.
இப்போது, இந்த வரம் ஆவிகளைப் பகுத்தறிவதாகும், அது தீய ஆவிகளை மட்டும் பகுத்தறிவது அல்ல. கிறிஸ்தவ வாழ்க்கையில் நம்மை எதிர்கொள்ளும் பல்வேறு வகையான ஆவிகள் உள்ளன. நான்கினை நான் குறிப்பிடுகிறேன்: முதலாவது, தேவனுடைய ஆவியாகிய பரிசுத்த ஆவியானவர். பரிசுத்த ஆவியானவரை அறிந்து கொள்வது மிக முக்கியமானது. இரண்டாவதாக, தூதர்கள் இருக்கிறார்கள், நல்ல தூதர்கள் மற்றும் தீய தூதர்கள் ஆகிய இருவரும். மூன்றாவதாக, பேய்கள் அல்லது அசுத்த ஆவிகள் உள்ளன. மேலும், நான்காவதாக, மனிதனின் ஆவி என்னும் மனுஷீக ஆவி இருக்கிறது.
இப்போது, புதிய ஏற்பாட்டிலிருந்து இந்த வரத்தின் செயல்பாட்டின் சில உதாரணங்களை உங்களுக்கு வழங்க விரும்புகிறேன். முதலாவது, இயேசுவின் ஊழியத்தில். யோவான் 1:47 மற்றும் அதைத் தொடர்ந்து உள்ள வசனத்தில், இயேசுவிடம் நாத்தான்வேல் எப்படி வந்தார் என்று நீங்கள் வாசிக்கலாம், அது சொல்கிறது:
47 இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக் குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.
நாத்தான்வேலிடத்தில் கபடு இல்லை என்று இயேசு எப்படி அறிந்தார்? அதை அறிவதற்கு வெளிப்புற வழி ஏதும் இல்லை, ஆனால் அவர் நாத்தான்வேலில் ஒரு கபடற்ற ஆவியை உணர்ந்தார். நாத்தான்வேல் ஆச்சரியமடைந்தான்.
48 அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்குமுன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார்.
அநேகமாக, இயேசு நின்று பிரசங்கித்துக் கொண்டிருந்தார், பிலிப்பு அத்திமரத்தின் கீழ் பின்னணியில் எங்கோ நின்று கேட்டுக்கொண்டிருந்தான், ஆனால் இயேசு தம்முடன் நெருக்கமாக இருந்தவர்களை தலைநிமிர்ந்து அந்த முகத்தைப் பார்த்து, அந்த கபடமில்லாத ஆவியை உணர்ந்தார். நாத்தான்வேல் ஆச்சரியமடைந்தான், ஆனால் இயேசு அவனிடம், “இது ஆரம்பம் மட்டுமே.” என்று கூறினார்.
51 பின்னும், அவர் அவனை நோக்கி,: “வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.”
இயேசு சொன்னார், உண்மையில், நாம் மனித ஆவிகளைப் பகுத்தறிவது மட்டுமல்லாமல், தேவதூதர்களின் ஆவிகளையும் பகுத்தறிவோம். நிச்சயமாக, பின்னர், புதிய ஏற்பாட்டில் இது பல முறை நிறைவேற்றப்பட்டது. உதாரணமாக, அப்போஸ்தலர் 27 இல், புயலால் மிகவும் பயங்கரமாக வீசப்பட்ட கப்பலில் இருந்த பவுலைப் பற்றி நாம் வாசிக்கிறோம். அவர்கள் பல நாட்களாக சூரியனையோ. சந்திரனையோ, நட்சத்திரங்களையோ பார்க்கவில்லை. உயிர் பிழைப்பதற்கான அனைத்து நம்பிக்கையும் கைவிடப்பட்டது, ஆனால் தேவதூதன் கப்பலில் பவுலிடம் வந்தார். அதற்கு பிறகு, பவுல் எழுந்து அந்த மனிதர்களிடம் பேசி, அவர்களை உற்சாகப்படுத்தி, அவன் சொன்னது:
23 ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநின்று: 24 பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரை பண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான்.
எனவே, புயலால் அடித்துச் செல்லப்பட்ட அந்தக் கப்பலுக்கு ஒரு தேவதூதன் வந்ததைக் காண்கிறோம், ஆனால் தேவதூதன் இருப்பதை அறிந்தவர் பவுல் மட்டுமே. அந்த கப்பலில், மற்றவர்களால் பார்க்கமுடியாத, ஒரு தேவதூதன் இருப்பை பவுல் உணர்ந்தார்.
இப்போது, பவுலின் ஊழியத்திலிருந்து, ஒரு தீய ஆவியை பகுத்தறிவதற்கான ஒரு உதாரணத்தை நான் உங்களுக்கு கொடுக்க விரும்புகிறேன், இது மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் முக்கியமான உதாரணமாகும். பவுலும், சீலாவும், அவர்களது குழுவினரும் பிலிப்பி பட்டணத்துக்கு நற்செய்தியைக் கொண்டு வர அங்கு இருந்தபோது என்ன நடந்தது என்பதை இது விவரிக்கிறது. அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட ஜெபம் செய்யும் இடத்திற்குச் சென்று கொண்டிருந்தார்கள், ஆனால் அவர்களை பின் தொடர்ந்த ஒரு அடிமைப் பெண் அவர்களைப் பற்றி தத்ரூபமான ஆவிக்குரிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போஸ்தலர் 16:16-18 இல் நாம் காணக்கூடிய பதிவு இது:
16 நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.
சாத்தானின் இராஜ்ஜியத்தில் குறிசொல்லும் ஆவியான, எதிர்காலத்தை முன்னறிவிக்கும் ஆவி இருக்கிறது, அது நீங்கள் பணக்காரராகவோ அல்லது ஏழையாகவோ இருக்கப் போகிறீர்களா, நீங்கள் ஒரு பொன் நிறமான பெண்ணையோ அல்லது கரிய/மாநிறப் பெண்ணை மணக்கப் போகிறீர்களா, உங்கள் அம்மா அல்லது உங்கள் அத்தை மரிக்கப் போகிறார்களா, மற்றும் பல விஷயங்களைப் பற்றி உங்களுக்கு சொல்கிறது. அதுதான் ஜோசியத்தின் ஆவியாகிய குறிசொல்லும் ஆவி. அது தேவனிடமிருந்து அல்ல, சாத்தானிடமிருந்து வருகிறது. பின்னர் வேதம் கூறுகிறது:
17 அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: “இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள்.”
அவள் சொல்வது முற்றிலும் உண்மை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. சாத்தான் ஒளியின் தூதனாக வருவதற்கு இது ஒரு உதாரணம். ஆனால், அவள் தேவனுக்கு ஊழியம் செய்யவில்லை, ஆனால் சாத்தானுக்கு சேவை செய்தாள். பிலிப்பியின் மக்களைக் குழப்புவதே சாத்தானின் நோக்கம். அவர்கள் ஜோசியத்திற்கும், தீய ஆவிகளுடைய மக்களுக்கும் பழக்கப்பட்டவர்களாய் இருந்தார்கள். பவுலும், அவனது கூட்டமும் இந்தப் பெண்ணையும், அவளுடைய சாட்சியையும் ஏற்றுக்கொண்டிருந்தால், பிலிப்பி மக்கள், “சரி, இத்தனை நூற்றாண்டுகளாக நாம் என்ன பழகினோமோ, அதற்கு இங்கே மற்றொரு உதாரணம்,” என்று முடிவு செய்திருப்பார்கள். ஆனால், பவுல் அந்த வலையில் விழவில்லை. ஆவிகளைப் பகுத்தறிவதன் மூலம், அவர் அந்த ஆவியை ஒரு தீய ஆவி என்று அடையாளம் கண்டுகொண்டு, அதைக் கையாண்டார்:
18 இப்படி அநேகநாள் செய்து கொண்டுவந்தாள். பவுல் சினங்கொண்டு [சில நேரங்களில் எரிச்சலடைவது நியாயமானது என்பது உங்களுக்குத் தெரியுமா? பிசாசுடன் கோபப்படுவது பாவம் அல்ல], திரும்பிப்பார்த்து: நீ இவளை விட்டுப் புறப்படும்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே [பெண்ணுக்கு அல்ல, அந்த ஆவிக்கு] சொன்னான்; அந்நேரமே அது [ஆவி] புறப்பட்டுப்போயிற்று.
எனவே, பொல்லாத ஆவி பவுலால் அறியப்பட்டு, இயேசுவின் நாமத்தினாலே துரத்தப்பட்டது. அது ஒரு முக்கியமான விஷயமாக இருந்தது. அது முழு பட்டணத்தையும் சலசலப்பில் ஆழ்த்தியது. சாத்தானின் நோக்கங்கள் வெளிப்படுத்தப்பட்டது, அவன் விரக்தியடைந்து, மிகவும் கோபமடைந்தான், அந்த பட்டணத்தில் மிகவும் இயற்கைக்கு மாறான கொந்தளிப்பு வெடித்தது. அவனுடைய சூழ்ச்சிகள் வெளிப்படுத்தப்பட்டதற்கு சாத்தானின் பதிலாக அது இருந்தது.
இப்போது எனது சொந்த அனுபவத்திலிருந்து சற்று அதற்கு ஒத்த ஒரு உதாரணத்தை மட்டும் தருகிறேன். உண்மையில், என் வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவம் கேத்தரின் மார்ஷலின் சம்திங் மோர் என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிகாகோவில் ஒரு தேவாலயத்தில் நான் ஊழியம் செய்து கொண்டிருந்தபோது இது நடந்தது. ஒரு ஆராதனை முடிந்ததும், ஒரு பெண் என்னிடம் வந்து ஜெபிக்கக் கேட்டுக்கொண்டாள். தனக்கு தனிப்பட்ட பிரச்சனைகள் இருப்பதாக அவள் சொன்னாள். அநேகமாக, அறிவை உணர்த்தும் வசனத்தின் மூலம், அவள் ஒரு ஆவியுலக ஊடகமாக இருந்தாள் என்று கர்த்தர் எனக்குக் காட்டினார். நான் அவளுக்காக ஜெபம் செய்ய தயாராக இல்லை என்று சொன்னேன். எனவே அவள் போய் விட்டாள், ஆனால், சில வாரங்களுக்கு பின்னர் திரும்ப வந்தாள். அவள் சொன்னாள், “நான் ஒரு ஊடகமாக இருப்பதை விட்டுவிட்டேன். நீங்கள் எனக்காக ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” ஆகவே, என்னால் மறுக்க முடியாது என்று உணர்ந்தேன். அவளுடைய நேர்மையில் எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் நான் அவளுடன் ஜெபிக்க ஆரம்பித்தேன், அது கடினமாக இருந்தது.
சிறிது நேரம் கழித்து இடையில் நிறுத்திவிட்டேன். நான் நிறுத்தியபோது, அவள் என்னை உன்னிப்பாகப் பார்க்க ஆரம்பித்தாள், அவள் கண்களில் ஒருவித விசித்திரமான நிலையான பார்வை இருந்தது, அவள் சொன்னாள், “நான் உங்களை ஒரு காரில் பார்க்கிறேன், அது ஒரு மரத்தின் மீது இடிக்கப்பட்டது, அங்கே இரத்தம் இருக்கிறது.” சற்று நேரம் என் உள்ளம் அசைந்தது, நான் நினைத்தேன், “நான் மரத்தில் மோதிய காரில் இருக்கப் போகிறேன்.” அதன் பின்னர், அது பரிசுத்த ஆவியானவர் அல்ல என்பதை உணர்ந்தேன். அவள் ஒரு ஊடகமாக செயல்பட்ட அந்த ஜோசியத்தின் ஆவி அது. அதனால் தேவனின் கோபம் எனக்குள்ளே வந்தது, நான் சொன்னேன், “ஜோசியத்தின் ஆவியே, நான் உன்னை நிராகரிக்கிறேன்! அதை என் விதியாக நான் ஏற்கவில்லை! மரத்தின் மீது மோதும் எந்த காரிலும் நான் இருக்கப் போவதில்லை! நான் அதை மறுக்கிறேன்! உன்னிடமிருந்து நான் அதை ஏற்க மாட்டேன்!”
அந்தப் பெண் விடுதலைப்பெற்றாள் என்று நான் நம்பவில்லை. குறைந்தபட்சம் அந்த நேரத்தில் இல்லை. ஏனென்றால், அவள் தீய பழக்கவழக்கங்களுக்காக மனம் வருந்தினாள் என்று நான் உண்மையில் நம்பவில்லை. ஆனால், அது என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருந்தது என்று நான் நம்புகிறேன்.
நீங்கள் பாருங்கள், நீங்கள் ஒரு குறிசொல்லுகிறவனிடம் சென்றால், அடிக்கடி நடப்பது போல, அவன் உங்கள் வாழ்க்கையைப் பற்றி ஏதாவது கெட்டதை கணிக்கிறான். “ஓ, இது பயங்கரமானது அல்லவா! எனக்கு என்ன நடக்கும் என்று யோசி!” என்று நீங்கள் சொன்னால், ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், நீங்கள் உங்கள் பொய்க்காக சாத்தானின் விதிக்கு அடிபணிகிறீர்கள். நீங்கள் அதற்கு சமர்ப்பித்தால், அநேகமாக அது செயல்படும். நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால், சாத்தானின் வஞ்சகத்தில் அவனை அடையாளம் கண்டு, அவனை நிராகரித்து, அவனை விட்டு விலகி, தேவனிடமும், வேதாகமத்திற்கும், பரிசுத்த ஆவியானவரிடமும் திரும்பி, நம் வாழ்க்கைக்கான தேவனின் விதியைப் பெறுங்கள், சாத்தானின் விதியை விட அதை நம்புங்கள். ஆனால், இந்த நாட்களில் சாத்தான் ஒளியின் தூதன் வேடத்தில் நம்மிடம் வரும்போது கூட நாம் பகுத்தறிவது மிகவும் முக்கியமானது.
சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் உங்களுடன் மீண்டும் வருவேன். நாளை, ஆவியின் வரங்கள் என்ற இந்த தலைப்பில் நான் தொடர்கிறேன். வல்லமையின் வரங்களில் முதலாவதான, விசுவாச வரத்தைப் பற்றி நான் பேசுகிறேன்.
குறியீடு: RP-R007-104-TAM









