வரங்களின் நோக்கம்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: செப்டம்பர் 2026
Read Time: 9
'வரங்களின் நோக்கம்' என்ற இந்தப் புத்தகத்தின் மூலம் ஆவிக்குரிய வரங்களின் வல்லமையோடு இணைந்து, உங்கள் கிறிஸ்தவப் பயணத்தில் புதிய உத்வேகத்தைப் பெறுங்கள். டெரெக் பிரின்ஸின் 'பரிசுத்த ஆவியின் வரங்கள்' தொடரின் இந்தப் பகுதி, வேதவசனங்களின் ஒளியில் வரங்களின் தன்மையையும் நோக்கத்தையும் ஆழமாக விளக்குகிறது. விசுவாசிகளைத் தேற்றவும், குணமாக்கவும், பெலப்படுத்தவும் தேவன் தந்தருளிய இந்த ஆசீர்வாதங்களை அடையாளம் கண்டு பயன்படுத்துவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.
Transcript
இந்த புதிய வாரத்தின் துவக்கத்தில் உங்களுடன் இருப்பது நல்லது. வாழ்க்கை எனக்கு கற்றுத்தந்த உண்மைகளை பகிர்ந்துகொள்கிறேன். அந்த உண்மைகள், என் வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அது உங்களுக்கும் அப்படியே செய்யும்.
எனக்கு எழுதியவர்களுக்கு நன்றி சொல்லி ஆரம்பிக்கிறேன். நான் இந்தப் பேச்சை முடிப்பதற்கு முன், நீங்கள் எழுதக்கூடிய அஞ்சல் முகவரியை நாங்கள் உங்களுக்குத் தருகிறோம். உங்கள் தனிப்பட்ட தேவைகள், உங்கள் பிரச்சனைகள், உங்கள் ஜெப விண்ணப்பங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள தயங்காதீர்கள்.
இன்றும், இந்த வாரம் முழுவதும், நான் உங்களுடன் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் முக்கியமான தலைப்பில் பேசுவேன்: “பரிசுத்த ஆவியானவரின் வரங்கள்” இந்த வரங்கள் எப்போதும் வேதத்தில் உள்ளன, அவை எப்போதும் திருச்சபைக்கு கிடைக்கின்றன. நீண்ட காலமாக, பெரும்பான்மையான கிறிஸ்தவர்களிடையே, இன்னும் அவை அங்கீகரிக்கப்படாமலும், பயன்படுத்தப்படாமலும் போய்விட்டன. கடந்த சில ஆண்டுகளில், இந்த வரங்களின் தன்னிச்சையான மறுகண்டுபிடிப்பு நடந்துள்ளது, இதன் விளைவாக, இன்றைய கிறிஸ்தவ மண்டலத்தின் ஒவ்வொரு பகுதியிலும், பிரிவுகள் முழுவதும், இந்த ஆவிக்குரிய வரங்களைப் பயன்படுத்துவதன் மூலம், ஆண்களும் பெண்களும், ஊழியர்களும் மக்களும் தங்களின் வாழ்விலும் ஊழியத்திலும் புத்துயிர் பெற்று, மீண்டும் வல்லமை பெற்று, திசைத்திருப்பட்டுள்ளதை அதிகளவில் காண்கிறோம்.
இன்று எனது முதல் உரையில், இந்த ஆவிக்குரிய வரங்களின் தன்மை மற்றும் நோக்கம் குறித்து பேசப் போகிறேன். 1 கொரிந்தியர் 12: 7 -11ஐ வாசிப்பதிலிருந்து தொடங்குகிறேன், இங்கே பவுல் வரங்களை பட்டியலிடுகிறார். அவர் ஆவிக்குரிய ஒன்பது வரங்களைப் பட்டியலிடுகிறார், வசனம் 7 இல் தொடங்குகிறார்.
7 ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. 8 எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், 9 வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும், 10 வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. 11 இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்.
நான் திரும்ப வேறு வார்த்தைகளைச் சேர்க்காமல் வரங்களின் பட்டியலைப் படிக்கிறேன். முதலாவது, ஞானத்தைப் போதிக்கும் வசனம்; இரண்டாவது, அறிவை உணர்த்தும் வசனம்; மூன்றாவது, விசுவாசம்; நான்காவது, குணமாக்கும் வரங்கள்; ஐந்தாவது, அற்புதங்களைச் செய்யும் சக்தி; ஆறாவது, தீர்க்கதரிசனம் உரைத்தல்; ஏழாவது, ஆவிகளைப் பகுத்தறிதல்; எட்டாவது, பற்பல பாஷைகளைப் பேசுதல்; ஒன்பதாவது, பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதல்.
இந்த வரங்கள் அனைத்தையும் பற்றிய முக்கியமான நான்கு உண்மைகளை இப்போது நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். முதலாவது உண்மை, அவைகள் வரங்களாக இருக்கிறது. அவைகளை சம்பாதிக்கவோ அல்லது வேலை செய்து பெற்றுக்கொள்ளவோ முடியாது. அவைகள் பாராட்டுக்குரிய பதக்கங்களோ அல்ல. அவை தேவனால் அவரது இறையாண்மை விருப்பப்படி வழங்கப்படுகின்றன, விசுவாசத்தின் எளிய முறையால் நாம் அதைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆவிக்குரிய வரங்களை பெற்றுக்கொள்வதற்கு எந்த நேரமும் எடுக்காது.
இரண்டாவதாக அந்த பட்டியலின் தொடக்கத்திலும், முடிவிலும், பவுல் “ஒவ்வொருவருக்கும்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். ஆரம்பத்தில் அவர் சொல்கிறார், “ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.” பின்னர், முடிவில் அவர் சொல்கிறார், “இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்.” ஆகவே, அந்த ஆவிக்குரிய வரங்களின் பட்டியலில் தொடக்கத்திலும், முடிவிலும் பவுல் வலியுறுத்துகிறதாவது அவர்கள் ஒவ்வொருவருக்கும் – அவை எல்லா விசுவாசிகளுக்கும் கிடைக்கும் என்பதே. எல்லா விசுவாசிகளும் இந்த வரங்களைப் பயிற்சி செய்வதில் பங்கேற்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கை. அவை ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கோ அல்லது ஆவிக்குரிய சிலருக்கோ அல்லது சலுகை பெற்ற சிறுபான்மையினருக்கோ ஒதுக்கப்படவில்லை. அவை ஒவ்வொருவருக்குமானது.
மூன்றாவது உண்மை என்னவென்றால், பவுல் இந்த வரங்களை “வெளிப்பாடு” என்ற ஒரு முக்கியமான வார்த்தையின் மூலம் விவரிக்கிறார். இதுவே ஆவியானவர் நம் வாழ்வில் இடைபடும் இந்த குறிப்பிட்ட வழி மற்ற வழிகளிலிருந்து வேறுபடுகிறது. “வெளிப்பாடு” என்ற வார்த்தை – இது மனித உணர்வுகளால் அறியக்கூடிய ஒன்றைக் குறிக்கிறது. பரிசுத்த ஆவியானவர் தாமே, விசுவாசிகளுக்கு மத்தியில் வசிக்கும் கண்ணுக்கு தெரியாத ஒரு நபராக இருக்கிறார். உணர்வுகளால் அவரை அறியமுடியாது, ஆனால் இந்த வரங்கள் மூலமாக பரிசுத்த ஆவியானவர் ஒரு விசுவாசி மூலம் ஒரு இட/நேர உலகில் தன்னை வெளிப்படுத்துகிறார். இந்த வரங்களின் விளைவாக, பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடியும், ஏனென்றால் உண்மையில் நம்முடைய உணர்வுகளால் தெரிந்துகொள்கிறோம். எனவே, அங்குள்ள முக்கிய வார்த்தை “வெளிப்பாடு” ஆகும். இந்த வரங்கள் ஒவ்வொன்றும் நம் உணர்வுகளால் அறிந்துகொள்ளக்கூடிய இட/நேர உலகில் எப்படியாவது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நான்காவது உண்மை என்னவென்றால், வரங்கள் இயற்கைக்கு அப்பாற்பட்டவை. அவை பரிசுத்த ஆவியானவரின் நபராக உள்ள தேவனின் வெளிப்பாடாகும், மேலும் நாம் சொந்தமாக சாதிக்க உதவும் வெறும் மனித திறன் அல்லது கல்வி ஆகியவற்றைவிட, அவை எப்போதும் உயர் மட்டத்தில் இருக்கின்றது.
இந்த நான்கு உண்மைகளை திரும்ப சொல்கிறேன். முதலாவது, அவை வரங்களாகும் – அவற்றை சம்பாதிக்க முடியாது. இரண்டாவதாக, அவைகள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கின்றன. மூன்றாவது, முக்கியமான வார்த்தை “வெளிப்பாடு” ஆகும். அவைகள் நம் உணர்வுகளால் அறியக்கூடிய முடிவுகளை உருவாகுகின்றன. நான்காவது, அவைகள் எப்போதும் இயற்கைக்கு அப்பாற்பட்டவை. அவைகள் எப்போதும் நமது இயற்கையான திறனால் அடையக்கூடியதை விட உயர்ந்த அளவில் இருக்கும்.
இப்போது இந்த வரங்களை நீங்கள் புரிந்துகொள்ள உதவுவதற்காக நான் சொல்ல விரும்பும் அடுத்த விஷயம் என்னவென்றால், நாம் கருத்தில்கொள்வதற்கு, இந்த வாரம் முழுவதும், நான் அவைகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறேன் – மூன்று பிரிவுகள் ஒவ்வொன்றும் மூன்று வரங்களைக் கொண்டிருக்கும்.
முதல் பிரிவு வெளிப்பாட்டின் வரங்கள் ஆகும், இந்த தலைப்பின் கீழ் ஞானத்தைப் போதிக்கும் வசனம், அறிவை உணர்த்தும் வசனம் மற்றும் ஆவிகளை வேறுபடுத்துதல் அல்லது பகுத்தறிதல் ஆகியவை உள்ளன.
இரண்டாவது பிரிவு வல்லமையின் வரங்கள் என்று நான் அழைப்பேன், இந்த தலைப்பின் கீழ் விசுவாசம், அற்புதங்கள் மற்றும் குணமாக்குதல் ஆகியவை உள்ளன.
மூன்றாவது பிரிவு குரல் வரங்கள், மனித குரல் உறுப்புகள் மூலம் அவசியமாக செயல்படும் வரங்கள் ஆகும். இந்த தலைப்பின் கீழ் பாஷைகளைப் பேசுதல், பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதல் மற்றும் தீர்க்கதரிசனம் உரைத்தல் ஆகியவை உள்ளன.
இந்த வரங்கள் தேவனால் நமக்கு கிடைக்கப்பெறும் நோக்கத்தைப் பற்றி இப்போது நான் உங்களிடம் பேச விரும்புகிறேன். அவை நிறைவேற்றும் நான்கு நோக்கங்களை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். முதலாவது, வரங்கள் தேவனின் இறையாண்மைக்கு இடமளிக்கின்றன. இது சமகால கிறிஸ்தவம் எப்போதும் அதிகளவில் இடமளிக்காத ஒன்று. ஆனால் தேவன், தம்முடைய சபையை தனது மேலான கட்டுபாட்டில் வைக்கிறார். மேலும், சபை முற்றிலும் மனித வழிநடத்துதலின் கீழ் இருக்கிறதையும் மற்றும் அவரது தலையீடு அல்லது அதிகாரத்திற்கு இடமளிக்காத எதையும் அவர் விரும்பவில்லை. ஆனால், இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட வரங்களின் மூலமாக தேவன் தலையிட முடியும், மேலும் அவரது இறையாண்மையையும்; முழு திருச்சபையில் அவரது இறுதியான உச்ச கட்டுப்பாட்டையும் வெளிப்படுத்த முடியும்.
இரண்டாவதாக, வரங்கள், நான் அவற்றை விவரித்தது போல, நமது இயற்கையான திறனின் எல்லைக்கு மேலே நம்மை உயர்த்தும். இது மிக முக்கியமானது. கிறிஸ்தவ மதம், வாழ்க்கை மற்றும் திருச்சபையின் செயல்பாடு ஆகியவற்றில் எந்த இடத்தில், இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட வெளிப்பாட்டிற்கு பங்கு இருக்கிறது என்பதை நானே கண்டறிய ஒருமுறை முற்பட்டேன். செல்ல வேண்டிய சிறந்த பதிவு அப்போஸ்தல நடபடிகள் புத்தகம் என்று நான் முடிவு செய்தேன், இதுவே கிறிஸ்தவ செயல்பாட்டின் ஒரே உண்மையுள்ள வேதப்பூர்வமான வரலாற்றுப் பதிவாகும். எனவே, நான் அப்போஸ்தலர் புத்தகத்தை வாசித்தேன், அதில் 28 அதிகாரங்கள் இருக்கிறது, வெளிப்படையாக இயற்கைக்கு அப்பாற்பட்ட அனைத்து குறிப்புகளையும் நீக்கிவிட்டால் என்ன நடக்கும் என்று கண்டுபிடிக்க முயற்சி செய்தேன். அந்த 28 அதிகாரங்களையும் படித்து முடித்தவுடன் நான் என்ன கண்டுபிடித்தேன் என்று உங்களுக்கு தெரியுமா? இயற்கைக்கு அப்பாற்பட்ட அனைத்து குறிப்புகளையும் நான் நீக்கிவிட்டால், அந்த 28 அதிகாரங்களில் ஒன்று கூட அப்படியே விடப்படாது. எனவே, புதிய ஏற்பாட்டின் படி, கிறிஸ்தவம் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட விசுவாசம் என்பதை நான் அறிவார்ந்த முறையில் நம்பினேன். முற்றிலும் இயற்கையான மட்டத்தில்தான் புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவம் வாழ்ந்தது என்று நாம் ஒருபோதும் பேச முடியாது.
வரங்களின் நோக்கத்திற்கான மூன்றாவது காரணம், அவை இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நமது சாட்சியை உறுதிப்படுத்துவதாகும். இதை பவுல் 1 கொரிந்தியர் 1:4-8 இல் மிகத் தெளிவாகக் கூறுகிறார், அங்கு அவர் கொரிந்து பட்டணத்து கிறிஸ்தவர்களுக்கு இதைச் சொல்கிறார்.
4 கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே ஸ்திரப்படுத்தப்பட்டபடியே, 5 நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும், எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால், 6 அவர் மூலமாய் உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவகிருபைக்காக, நான் உங்களைக் குறித்து எப்பொழுதும் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். 7 அப்படியே நீங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள். 8 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்.
கொரிந்து பட்டணத்து கிறிஸ்தவர்களின் சார்பாக, பவுல் தேவனுக்கு நன்றி கூறுவதைக் கவனியுங்கள், கிறிஸ்துவின் சாட்சி அவர்கள் மத்தியில் உறுதிப்படுத்தப்பட்டது அல்லது பலப்படுத்தப்பட்டது அல்லது நிறுவப்பட்டது, மேலும், அவர்கள் எந்த வரத்திலும் குறைவில்லாமல் இருந்ததால் அப்படி நடந்தது. மேலும், அவர் குறிப்பாக பேச்சு வரங்களையும் (அதைதான் நாம் குரல் வரங்கள் என்று அழைப்போம்), அறிவின் வரங்களையும் (அதை நாம் வெளிப்பாட்டின் வரங்கள் என்று அழைப்போம்) குறிப்பிடுகிறார். ஆகவே, நாம் காணலாம், இந்த வரங்களின் ஒரு முக்கிய நோக்கம் என்னவென்றால், இயேசு கிறிஸ்துவின் சாட்சியை, தம்முடைய மக்களாகிய திருச்சபையில் உறுதிப்படுத்துவது அல்லது பலப்படுத்துவதே ஆகும்.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாட்டிற்காகக் காத்திருக்கும் எந்த வரத்திலும் இந்தக் கிறிஸ்தவர்கள் குறையவில்லை என்று பவுல் கூறுவதையும் நாம் கவனிக்கிறோம். அவர் பின்னர் சொல்கிறார், “முடிவுபரியந்தம் தேவன் உங்களை ஸ்திரப்படுத்துவார்.” வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், ஆவிக்குரிய வரங்களின் செயல்பாடு யுகத்தின் இறுதிவரை திருச்சபையில் தொடரும் என்று பவுல் தெளிவாகக் கருதுகிறார்.
இந்த வரங்களின் நான்காவது காரணம் அல்லது நோக்கம் என்னவென்றால், அந்த வரங்கள் அனைத்து விசுவாசிகளையும் பொது நலனுக்காக பங்களிக்க உதவுகின்றன, 1 கொரிந்தியர் 12 ஆம் அதிகாரத்தில் பவுல் அவர்களுக்காக கூறிய காரணம் இதுதான். வரங்களை பட்டியலிட்ட உடனேயே அவர் உடல் மற்றும் அதன் உறுப்புகளைப் பற்றி பேசுகிறார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், உடலின் உறுப்புகள் பொது நன்மைக்காக பங்களிக்க உதவும் முதன்மை வழிகளில் ஒன்று ஆவிக்குரிய வரங்கள் ஆகும்.
1 கொரிந்தியர் 14:26 இல், திருச்சபையின் ஒன்றுகூடுதலைப் பற்றி பவுல் இவ்வாறு கூறுகிறார்:
26 நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம்பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம்பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது.
ஆகவே, இங்கே நீங்கள் காணலாம், விசுவாசிகள் ஒரு கூட்டத்திற்கு வருவது, பெற்றுகொள்வதற்கோ அல்லது கவனிப்பதற்கோ அல்ல, மாறாக அவர்கள் பங்களிக்க வருகிறார்கள். இந்த வரங்கள் மூலமாக அவர்கள் பெற்றுக்கொண்ட அந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆவிக்குரிய திறன்களில் பங்களிக்கவே வருகிறார்கள்.
இன்றைக்கு நம் நேரம் முடிந்துவிட்டது. ஆனால், நாளை இந்த நேரம் உங்களுடன் மீண்டும் வருவேன், மேலும் இந்த ஆவிக்குரிய வரங்களின் தலைப்பில் நான் தொடர்வேன். நாளை, நான் வெளிப்பாட்டின் வரங்களில் முதன்மையானதைக் கையாள்வேன் – அது ஞானத்தைப் போதிக்கும் வசனம் ஆகும்.
குறியீடு: RP-R007-101-TAM









