புதிய சுயத்தின் தோற்றம் மற்றும் இயல்பு

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 9
டெரெக் பிரின்ஸின் 'புதிய சுபாவத்தின் தோற்றமும் தன்மையும்' என்ற வேதாகமப் போதனையின் மூலம், பழைய சுபாவத்திலிருந்து புதிய சுபாவத்திற்கு மாறும் தெய்வீக மாற்றத்தைக் கண்டறியுங்கள். சுவிசேஷத்தைச் சத்தியமாக ஏற்றுக்கொள்வது உங்கள் மனதைப் புதிதாக்கி, பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுவித்து, மேசியாவின் சாயலில் வாழ வழிவகுக்கும். இது 'பழைய சுபாவமும் புதிய சுபாவமும்' தொடரின் 3-ஆம் பகுதியாகும்.
Transcript
ஒன்றுக்கொன்று மிகவும் நெருக்கமான இயல்பை கொண்டதும், ஆனால் முற்றிலும் எதிர்மாறானதுமாக இருக்கிற பழைய சுயம் மற்றும் புதிய சுயம் ஆகிய இரண்டையும் பைபிள் சித்தரிப்பதை தொடர்ந்து ஒன்றாகப் படிப்பதில் இன்று உங்களுடன் மீண்டும் இருப்பது நல்லது.
இந்த வாரம் எனது முந்தைய இரண்டு பேச்சுகளில் நான் பழைய சுயத்தின் தோற்றம் மற்றும் இயல்பைக் கையாண்டேன். பழைய சுயத்தை உருவாக்கும் சீரழிவு செயல்முறையை நான் மீண்டும் சுருக்கமாக சொல்கிறேன். பழைய சுயம் என்பது ஏமாற்றத்தின் விளைபொருளாகும்; அதாவது, சாத்தானின் பொய், இது தேவனுடைய வார்த்தையின் உண்மையை மறுக்கிறது. ஏமாற்றம் (வஞ்சகம்) இச்சையை உண்டாக்குகிறது; அதாவது, வக்கிரமான தீங்கை விளைவிக்கும் ஆசைகள். இச்சை, அதற்கு நாம் அடிபணியும்போது, பாவத்தை உண்டாக்குகிறது. பாவம், அதன் போக்கை எடுக்கும்போது, மரணத்தை உண்டாக்குகிறது. எனவே, அதுதான் பழைய சுயத்தின் சீரழிவு செயல்முறையாகும். பழைய சுயம் இரண்டு தனித்துவமான அடையாளங்களைக் கொண்டுள்ளது. முதலில், இது ஆவிக்குரிய ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கேடுபாடுள்ளது. இரண்டாவதாக, இது ஒரு கலகமாகும்.
பழைய சுயத்திற்கு தேவனுடைய தீர்வு மரணதண்டனை என்று நேற்று விளக்கினேன்! இதை ரோமர் 6:6 இல் பவுல் கூறுகிறார்:
6 நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும் பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் (அவர்தான் இயேசு) சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி அதுதான், இயேசு சிலுவையில் இறந்தபோது, உங்கள் பழைய சுயம் தூக்கிலிடப்பட்டது என்பதை உணர்ந்துகொள்வதுதான்.
இன்று நாம் நாணயத்தின் எதிர்பக்கமான புதிய மனிதனைப் பார்க்கப் போகிறோம். புதிய மனிதனின் இயல்பு மற்றும் தோற்றத்தைப் பற்றி நான் உங்களுக்கு விளக்கப் போகிறேன். எபேசியர் 4:22-24இல் உள்ள பகுதிக்கு மீண்டும் செல்வோம், இது பழைய சுயத்தையும் புதிய சுயத்தையும் சித்தரிக்கிறது. பவுல் கூறுகிறார்:
22 அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே, கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, 23 உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, 24 மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
“நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷன்” குறித்த அந்த கடைசி சொற்றொடரை இப்போது பகுப்பாய்வு செய்யப் போகிறோம். இது புதிய சுயத்தின் நான்கு முக்கிய அம்சங்களை கொடுக்கிறது. முதலாவதாக, இது தேவனுடைய படைப்பின் செயலால் உருவாக்கப்பட்டது. இது மனிதன் தனது சொந்த முயற்சியால், மதத்தால் அல்லது நற்செயல்களால், அல்லது சட்டத்தால் அல்லது அதைபோல உள்ள எந்த இயல்பினாலும் எப்போதும் உருவாக்க முடியாது. அது தேவனுடைய படைப்பின் செயலைச் சார்ந்தது. இரண்டாவதாக, தேவனுடைய படைப்புச் செயல் சத்தியத்திலிருந்து வெளிவருகிறது; அதாவது, தேவனுடைய வார்த்தையின் சத்தியம். இது சாத்தானுடைய பொய்யின் விளைபொருளான பழைய சுயத்திற்கு நேர் எதிரானது. எனவே பொய்யும் உண்மையும் ஒன்றுக்கொன்று எதிராக உள்ளது. மூன்றாவதாக, புதிய சுயத்தின் தன்மை இரண்டு வார்த்தைகளில் விவரிக்கப்பட்டுள்ளது: நீதி மற்றும் பரிசுத்தம். நான்காவதாக, அது தேவனுடைய சாயலில் (அதற்கான மாற்று வாசிப்பு “தேவனுடைய நோக்கத்தின்படி”) இருப்பதாக பவுல் கூறுகிறார். இரண்டும் முறையானது, மேலும் பவுல் இரண்டு அர்த்தங்களையும் உள்ளடக்கியுள்ளார் என்று நான் நம்புகிறேன். மனிதனுக்கான தேவனுடைய உண்மையான நோக்கத்தின்படி புதிய சுயம் உருவாக்கப்பட்டது, மேலும், புதிய சுயத்தில் தேவனுடைய சாயல் மீட்டெடுக்கப்படுகிறது.
எனவே, புதிய மனிதனின் அந்த நான்கு அம்சங்களை மட்டும் சுருக்கமாகக் கூறுகிறேன். முதலில், அவன் தேவனுடைய படைப்பு செயலால் உருவாக்கப்படுகிறான். இரண்டாவதாக, அவன் பழைய சுயத்தை உருவாக்கும் சாத்தானுடைய பொய்யின் ஏமாற்றத்திற்கு மாறாக இருக்கும் தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தின் தயாரிப்பாக இருக்கிறான். மூன்றாவதாக, புதிய சுயத்தின் தன்மை நீதி மற்றும் பரிசுத்தம் ஆகிய வார்த்தைகளில் சுருக்கப்பட்டுள்ளது. நான்காவதாக, புதிய சுயம் படைப்பில் தேவனுடைய உண்மையான நோக்கத்தை நிறைவேற்றுகிறது, இது தேவனுடைய சாயலை மீண்டும் உருவாக்குகிறது.
கொலோசெயர் 3:9-10இல் பழைய சுயம் மற்றும் புதிய சுயம் பற்றி பவுல் கூறுவதை இதனுடன் ஒப்பிடலாம்:
9 ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, [மீண்டும் கவனியுங்கள், பொய் சொல்வது பழைய சுயத்தின் முதன்மையான வெளிப்பாடாகும். அவன் பிசாசின் பொய்யின் தயாரிப்பு ஆவான், மேலும் அவன் சுபாவப்படி ஒரு பொய்யன். ஆனால், பவுல் தொடர்கிறார்:] 10 தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் [நீங்கள்] தரித்துக் கொண்டிருக்கிறீர்களே.
கொலோசெயரில் இந்தப் பகுதியில் பவுல் வெளிப்படுத்தும் புதிய சுயத்தின் அம்சங்களைப் பார்ப்போம். முதலாவதாக, நான் ஏற்கனவே கூறியதுபோல, பழைய மனிதன் மீண்டும் பொய்களுடன் தொடர்புடையவன் என்பதை நாம் கவனித்தோம். அவன் பிசாசினுடைய பொய்யின் தயாரிப்பாக இருக்கிறான், மேலும் அவன் ஒரு பொய்யனாக இருக்கிறான். பொய் சொல்வது பழைய சுபாவத்தின் அடையாளமாக இருக்கிறது. பொய் எப்போதும் புதிய சுபாவத்தில் இருந்து வராது. “பொய்க்கு பிதா சாத்தான்” என்று இயேசு சொன்னது உங்களுக்கு நினைவிருக்கிறதா. இரண்டாவதாக, கொலோசெயரில் உள்ள இந்தப் பகுதியில், புதிய மனிதன் படிப்படியாகப் புதுப்பிக்கப்படுவதை பவுல் சுட்டிக்காட்டுகிறார். எபேசியரில் அவர் படைப்பின் செயலை வலியுறுத்தினார், ஆனால் கொலோசெயரில் அவர் புதுப்பிக்கப்படும் செயல்முறையை வலியுறுத்துகிறார். படைப்பிற்கு பிறகு, புதுப்பிக்கும் செயல்முறை நடந்துகொண்டிருக்கிறது. பின்னர், கொலோசெயரில், புதிய சுயத்திற்கான இரண்டு இறுதி நோக்கங்களை பவுல் கூறுகிறார். முதலில், தேவனைப் பற்றிய உண்மையான அறிவு, அவன் அந்த உண்மையான அறிவிற்கு மீண்டும் வரவேண்டும். இரண்டாவதாக, அவனுடைய சிருஷ்டிகரின் “தோற்றம்”, அதாவது தேவனுடைய சாயல் என்ற வார்த்தையை மீண்டும் அவர் பயன்படுத்துகிறார்.
கொலோசெயரில் கூறப்பட்ட புதிய சுயத்தின் அந்த இரண்டு அம்சங்களையும் சுருக்கமாகக் கூறுவோம். முதலாவதாக, அவன் படிப்படியாக புதுப்பிக்கப்படுகிறான். இரண்டாவதாக, அவன் தேவனுடைய இரண்டு இறுதி நோக்கங்களையும் நிறைவேற்றுகிறார்; அதாவது, தேவனைப் பற்றிய உண்மையான அறிவு மற்றும் தேவனுடைய தோற்றம் அல்லது தேவனுடைய சாயலை மீட்டெடுப்பதாகும்.
இப்போது, நான் கேள்வியை கையாளப் போகிறேன்: புதிய மனிதன் எவ்வாறு உருவாகிறான்? முதலாவதாக, அவன் “பிறப்பால்” உருவாக்கப்படுகிறான். யோவான் 1:12- 13இல், நாம் இந்த வார்த்தைகளை வாசிக்கிறோம்:
12 அவருடைய [அவர்தான் இயேசு] நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். 13 அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
கடைசி வசனத்தில் உள்ள முக்கிய வார்த்தைகளை நாம் எடுத்துக்கொள்வோம், அது “தேவனாலே பிறந்தவர்கள்” ஆகும். புதிய மனிதனின் தோற்றத்தை பற்றிய முதல் கூற்று அதுதான். அவர்கள் தேவனாலே பிறந்தவர்கள். யோவான் 3:5இல், இயேசு இவ்வாறு கூறுகிறார்:
5 இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
அங்கு பிறப்பு என்பது “ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறப்பதை” குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. பின்னர் 1 பேதுரு 1:23இல் பேதுரு இவ்வாறு கூறுகிறார்:
23 அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.
ஆகவே, புதிய சுயம் என்பது ஒரு பிறப்பின் விளைபொருளாக இருப்பதைக் காண்கிறோம், அவன் தேவனாலே பிறந்தவன், ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறந்து, தேவனுடைய வார்த்தையின் அழியாத விதையைப் பெறுவதன் மூலம் பிறக்கிறான். இதை நாம் இவ்வாறு சுருக்கமாகக் கூறலாம்: “நாம் விசுவாசத்தால் தேவனுடைய வார்த்தையைப் பெற்று அதற்குக் கீழ்ப்படிந்தால், தேவனுடைய ஆவி நமக்குள் தேவனின் இயல்பை வெளிப்படுத்துகிறது: தெய்வீகம், அழியாமை, நித்தியம். அந்த விதை தெய்வீகமானது, அழியாதது, நித்தியமானது. தேவனுடைய வார்த்தையின் விதை, அதை வெளிப்படுத்தும் இயல்பு தெய்வீகமானது, அழியாதது, மற்றும் நித்தியமானது.” இதை நாம் ஒருபடி மேலே கொண்டு செல்ல முடியும். வேதத்தில் இயேசுவே “தேவனுடைய வார்த்தை” என்று அழைக்கப்படுகிறார். யோவான் 1:1இல், ஒரே வசனத்தில் இந்த தலைப்பு மூன்று முறை பயன்படுத்தப்பட்டுள்ளது:
1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
அது யாரைக் குறிக்கிறது? இது காலத்திலும், மனித உடலிலும் வெளிப்படுத்தப்பட்ட நசரேயனாகிய இயேசுவையே குறிப்பிடுகிறது. மீண்டும், வெளிப்படுத்துதல் 19:13இல், இயேசு மகிமையிலும், ஆட்சி செய்யும் வல்லமையிலும் பூமிக்கு திரும்பி வருவதைப் பற்றிய விளக்கம் நமக்கு உள்ளது, அது இவ்வாறு கூறுகிறது:
13 இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
எனவே, இயேசு தேவனுடைய வார்த்தை ஆவார். வேதத்தின் சுவிசேஷம் தேவனுடைய வார்த்தை ஆகும். சுவிசேஷம் என்பது பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையாகும். இயேசு ஜீவனுள்ள வார்த்தையாக இருக்கிறார். மேலும், இருவருக்கும் இடையே நேரடியான தொடர்பு உள்ளது. நாம் பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையாகிய சுவிசேஷத்தை, வேதத்தை நாம் பெற்றுக்கொண்டு, விசுவாசித்து, கீழ்ப்படிந்தால் அது ஒரு விதையாகும். அந்த விதையானது, பரிசுத்த ஆவியின் செயல்பாட்டினால், நமது கீழ்ப்படிதலின் மூலமாக, ஒரு புதிய இயல்பை, புதிய சுயத்தை நமக்குள் கொண்டுவருகிறது. மேலும், இந்த இயல்பானது அதை உண்டாக்கிய விதை போன்றது. அது தெய்வீகமானது, அது நித்தியமானது, அது அழியாதது ஆகும். அடிப்படை வித்தியாசத்தை இங்கே நீங்கள் காணலாம். பழைய சுயம் அடிப்படையில் அழிந்துபோகக்கூடியது. புதிய சுயம் அழியாதது. தேவனுடைய வார்த்தையின் விதையிலிருந்து வெளிவருவது தேவனுடைய இயல்பாகும். தேவனுடைய பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையின் விதை, நம் இதயங்களில் பெறப்பட்டு நம்பப்படுகிறது, அது தேவனுடைய வார்த்தையின் இயல்பை வெளிப்படுத்துகிறது, அது இறுதியில் கர்த்தராகிய இயேசு தாமே ஆவார். இது கலாத்தியர் 2:20இல், பவுல் மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறார்:
20 கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்;….
அங்கு நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் காண்கிறோம். பழைய சுயத்திற்கான தேவனுடைய திட்டம் மற்றும் புதிய சுயத்திற்கான தேவனுடைய திட்டம். முதலில், பழைய சுயத்தை அழிக்க வேண்டும், ஆனால் கிறிஸ்து சிலுவையில் இறந்தபோது அந்த சுயம் அழிக்கப்பட்டது. நம்முடைய பழைய சுயம் அவருடன் சிலுவையில் அறையப்பட்டது! எனவே, பவுல் இதை வரலாற்றின் நிறைவேற்றப்பட்ட உண்மை என்று கூறுகிறார், “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன் – நான் என்னுடைய பழைய சுயம். ஆயினும்,” அவர் சொல்கிறார், “பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, எனக்குள் வாழ்கிற பழைய சுயம் அல்ல, ஆனால் புதிய சுயம். தேவனுடைய பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையான தெய்வீக, நித்திய, அழியாத தேவனுடைய வார்த்தையின் விதையை நான் விசுவாசித்து பெற்றபோது, அது தேவனுடைய குமாரனாகிய இயேசுவின் சாயலை எனக்குள் உருவாக்குகிறது.”
சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது, ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை இந்த புதிய சுயத்தின் தலைப்பில் தொடர்கிறேன். புதிய சுயத்தை எவ்வாறு வளர்ப்பது என்பதை நான் விளக்குகிறேன்.
குறியீடு: RP-R027-103-TAM









