பற்பல பாஷைகளை பேசும் வரம்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: செப்டம்பர் 2026
Read Time: 10
அடிக்கடி தவறாகப் புரிந்துகொள்ளப்படும் அந்நிய பாஷை வரத்தின் ஆவிக்குரிய வல்லமை மற்றும் தெய்வீக நோக்கத்தை ஆழமாக அறியுங்கள். மனிதத் தொடர்புகளின் வரம்புகளுக்கு ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட உதவியாக, பரிசுத்த ஆவியானவர் நம் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்து, அவற்றை பரலோக மொழியாக மாற்றுகிறார். டெரெக் பிரின்ஸின் 'ஆவியின் வரங்கள்' தொடரின் 9-வது பகுதி, இந்த அசாதாரண ஆவிக்குரிய வரத்தைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கமாகும்.
Transcript
பரிசுத்த ஆவியின் விலைமதிப்பற்ற, அற்புதமான வரங்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் இன்று உங்களுடன் இருப்பது நல்லது. நேற்று, குரல் வரங்களின் முதலாவது வரமான தீர்க்கதரிசன வரத்தைப் பற்றி நான் உங்களுடன் பேசினேன். இன்று, பலர் புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமாகக் கருதும் வரமாகிய பற்பல பாஷைகளைப் பேசும் வரத்தைப் பற்றி நான் உங்களுடன் பேசப் போகிறேன். புதிய ஏற்பாட்டின் மொழியில், “நாவு” என்ற சொல்லுக்கு “மொழி” என்றும் பொருள்படும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் அதை நாவுகளின் வரம் என்றும் அழைக்கலாம் அல்லது பாஷைகளின் வரம் என்றும் அழைக்கலாம். பொதுவாக, இது தெரியாத (அந்நிய) பாஷைகளின் வரம் என்று குறிப்பிடப்படுகிறது, ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மூல கிரேக்கத்தில் “தெரியாத” என்ற வார்த்தை உண்மையில் உரையில் இல்லை, இருப்பினும், அது தெரியாத மொழி அல்லது தெரியாத பாஷையாக இருக்க வேண்டும் என்ற சூழல் இருக்கிறது.
இப்போது, சில பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள நாக்கைப் பற்றிய சில பொதுவான கொள்கைகளைப் பார்க்க வேண்டும் – நாக்கு உடலின் ஒரு பிரச்சனை உறுப்பாகும். நம் வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளிலும் குறைந்தது 50% இதனால் தான். யாக்கோபு 3:8 கூறுகிறது:
8 நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது.
எந்த ஒரு மனிதனும் தன் நாவை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. நமக்கு நாவு எதற்காக கொடுக்கப்பட்டது? சங்கீதத்தில், தாவீது தனது நாவை “என் மகிமை” என்று அழைக்கிறார். அவர் அதை ஏன் தனது மகிமை என்று அழைக்கிறார்? மனித நாவின் உன்னத நோக்கம் தேவனை மகிமைப்படுத்துவது என்பதே அதற்கான பதிலாகும். அதனால்தான் நம் வாயின் முதல் இடத்தில் நாக்கு வைக்கப்பட்டது. இதன் விளைவாக, தேவனை மகிமைப்படுத்தாத நாவின் ஒவ்வொரு பயன்பாடும் தவறான பயன்பாடாகும். அந்த அடிப்படையில், நம் நாவை தவறாகப் பயன்படுத்துவதில் நாம் அடிக்கடி குற்றவாளிகள் என்பதை நம்மில் யாராவது மறுப்பார்களா என்பது எனக்கு சந்தேகம். பதில் என்னவென்றால், உண்மையிலே, எந்த மனிதனும் தன் நாவை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. அதனால்தான், நம் நாவைச் சரியாகப் பயன்படுத்துவதற்கு நாம் பரிசுத்த ஆவியானவரின் இயற்கைக்கு அப்பாற்பட்ட உதவியைக் கொண்டிருக்க வேண்டும். ரோமர் 6:13 இல், பவுல் கூறுகிறார்:
13 உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நம் உடலின் அனைத்து உடல் உறுப்புகளையும் அவர் பயன்படுத்துவதற்கான கருவிகளாக தேவனுக்கு வழங்க வேண்டும். நமது நாவை தேவனிடம் சமர்ப்பிப்பதே மிகவும் அவசரமான தேவையாகும், ஏனென்றால் மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக நம்மால் கட்டுப்படுத்த முடியாத உறுப்பு அதுதான்.
இப்போது, பதிவுசெய்யப்பட்ட அந்நிய பாஷைகளில் பேசுவதற்கான முதல் உண்மையான நிகழ்வு பெந்தெகொஸ்தே நாளில் நடந்தது. பரிசுத்த ஆவியானவர் இறங்கினார், காத்திருந்த விசுவாசிகள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டனர்; முதல் உடனடி முடிவு என்னவென்றால், ஆவியானவர் அவர்களுக்குப் பேசக் கொடுத்தது போல், அவர்கள் பிற மொழிகளிலோ அல்லது பிற பாஷைகளிலோ பேசத் தொடங்கினார்கள். இது பெந்தெகொஸ்தே பண்டிகையைக் கொண்டாட வந்த ரோமானியப் பேரரசு முழுவதிலுமிருந்த யூதர்களின் கூட்டத்தைக் கூட்டியது. சீஷர்கள் பேசும் மொழிகளை யூதர்கள் புரிந்துகொண்டார்கள், ஆனால் சீஷர்கள் தாங்களாகவே இதை பேசவில்லை என்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்கள் வெறும் கலிலேயர்கள். எனவே, வேறு மொழியில் பேதுவது அல்லது தெரியாத (அந்நிய) மொழியில் பேசுவது என்பது, விசுவாசி, இயற்கைக்கு அப்பாற்பட்ட வழிகாட்டுதலினாலும், பரிசுத்த ஆவியானவரின் உதவியினாலும், அவர் கற்றுக்கொள்ளாத மற்றும் புரியாத மொழியைப் பேசுகிறார், ஆனால், அந்த மொழி தெரிந்த ஒருவர் இருந்தால் புரிந்துகொள்ள முடியும் என்பதை நாம் தெளிவாகக் காணலாம்.
1 கொரிந்தியர் 12:10 & 28 இல், பவுல் இதை “பாஷைகளின் வகைகள்” என்று குறிப்பிடுகிறார். “வகைகள்” என்பது பாஷைகளின் வெவ்வேறு பயன்பாடுகள் அல்லது நோக்கங்களைக் குறிக்கும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். எனவே, பாஷைகளின் மூன்று குறிப்பிட்ட, வெவ்வேறு நோக்கங்களைக் குறிப்பிடப் போகிறேன். முதன்மையானதும், அடிப்படையானதுமாக நான் நம்பும் முதல் பயன்பாடு என்னவென்றால், தேவனுடன் நேரடியான தனிப்பட்ட தொடர்புக்காகவே. 1 கொரிந்தியர் 14:2 இல், பவுல் கூறுகிறார்:
2 ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
இது மிகவும் தெளிவாக உள்ளது. அந்நிய பாஷையில் பேசும்போது, மனிதர்களிடம் பேசுவதில்லை; ஒருவர் தேவனிடம் பேசுகிறார்; ஒருவர் ஆவியினாலே பேசுகிறார்; ஒருவர் இரகசியங்களைப் பேசுகிறார்: அதாவது, இயற்கையான புரிதலால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத விஷயங்கள். மேலும், இரண்டு வசனங்களில் பவுல் கூறுகிறார்:
4 அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.
தன்னையே உருவாக்கிக் கொள்கிறான். எனவே, நாம் என்ன செய்கிறோம் என்பதை அறிவார்ந்த முறையில் புரிந்து கொள்ளாவிட்டாலும், நாம் தேவனிடம் ஒரு பாஷையில் பேசும்போது, நாம் இரகசியங்களைப் பேசுகிறோம், மேலும் ஆவிக்குரிய விதத்தில் நம்மையே கட்டியெழுப்புகிறோம். பவுல், மீண்டும் 1 கொரிந்தியர் 14:14 & 15 இல் சொல்கிறார்:
14 என்னத்தினாலெனில், நான் அந்நிய பாஷையிலே விண்ணப்பம்பண்ணினால், என் ஆவி விண்ணப்பம் பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும். 15 இப்படியிருக்க, செய்யவேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்.
ஜெபிப்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் இருப்பதாக பவுல் குறிப்பிடுகிறார். நாம் என்ன சொல்கிறோம் என்பதை நாம் மனதில் அறியாமல் இருக்கும்போது, ஆவியோடு ஜெபிப்பதற்கு ஒரு வழி இருக்கிறது. நாம் என்ன சொல்கிறோம் என்பதை நம் மனம் முழுமையாக அறிந்திருக்கும்போது, நாம் கருத்துடன் ஜெபிப்பதற்கு மற்றொரு வழி இருக்கிறது. இரண்டு வழிகளும் முறையானவை என்று பவுல் கூறுகிறார். நமக்கு இரண்டு வழிகளும் தேவையானது. அவர் சொல்கிறார், “நான் ஆவியோடு ஜெபிப்பேன்.” அவர் சொல்கிறார், “நான் கருத்தோடும் ஜெபிப்பேன்.”
கர்த்தராகிய இயேசுவை நான் அறிந்துகொள்வதற்கு முன், என்னுடைய சொந்த பின்னணி ஒரு தத்துவஞானியின் பின்னணியாக இருந்தது. நான் ஒரு துத்துவ நிபுணர், நான் மொழிகளைக் கற்றேன், புத்தகங்களைப் படித்தேன், பயணம் செய்தேன், கலைகளில் ஈடுபட்டேன், இசை, ஓவியம், கவிதை போன்ற எல்லாவிதமான விஷயங்களிலும் ஆர்வமாக இருந்தேன். ஆயினும் கூட, என் வாழ்க்கையில் ஒரு ஆழமான, உள்ளான அதிருப்தி இருந்தது, அது எனக்குப் புரியவில்லை, அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான வழி எனக்குத் தெரியாது.
பின்னர், மிகவும் இறையாண்மையான வழியில், கர்த்தராகிய இயேசுவை தேவன் எனக்கு வெளிப்படுத்தினார், மேலும், அந்நிய பாஷையில் தேவனிடம் பேசும் இந்த அழகான திறனை நான் பெற்றேன். அது நடந்தபோது, எனது தத்துவ அறியாமையிலே, மிக முக்கியமான பகுதியாகிய எனது சொந்த நபரான என் ஆவியை முற்றிலும் புறக்கணித்தேன் என்பதை நான் உணர்ந்தேன். நான் என் ஆத்துமாவை வளர்த்துக் கொண்டிருந்தேன், என் உடலை வளர்த்துக் கொண்டிருந்தேன், ஆனால் என் ஆவி பட்டினி கிடந்தது. இந்த நேரத்தில், என் ஆவி தன்னை வெளிப்படுத்தவும், ஆவிகளின் தந்தையான தேவனுடன் தொடர்பு கொள்ளவும் அழைப்பு விடுக்கும். அந்நிய பாஷையில் பேசும் இந்த இயற்கைக்கு அப்பாற்பட்டத் திறனை தேவன் எனக்குக் கொடுத்தபோது, முதன்முறையாக, எனது சொந்த சிறிய மனதின் குறுகலான வழியில் கடந்து செல்லாமல், என் ஆவி சுதந்திரமாக தேவனிடம் தன்னை வெளிப்படுத்தியது. அது மிகப் பெரிய உள்ளான விடுதலையை எனக்கு கொடுத்தது. உண்மையில், நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்றால், தேவனுடன் தொடர்புகொண்டு, இரகசியங்களைப் பேசி, என்னை நானே வளர்த்துகொண்டேன், இதை நான் வேதத்தை வாசிப்பதன் மூலம் உணர்ந்து கொண்டேன், மேலும், கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக என் வாழ்வின் ஒவ்வொரு நாளும் இந்த அனுபவத்தை நான் தொடர்ந்து அனுபவித்து வருகிறேன், இதற்காக நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நான் இதை மிகவும் பொக்கிஷமாக மதிக்கிறேன். இது எனக்கு மிகவும் விலைமதிப்பற்றது.
இரண்டாவது பயன்பாடு அல்லது இரண்டாவது வகையான பாஷைகள் என்பது ஒரு பொதுக் கூட்டத்தில் அந்நிய (தெரியாத) பாஷையில் பேசும்போது, அதைத் தொடர்ந்து தெரிந்த பாஷையில் விளக்கம் அளிக்கப்படுவதாகும். பாஷைகளைப் பேசுதல் மற்றும் அதைப்பற்றிய விளக்கம் போன்ற ஒருங்கிணைந்த செயல்பாடு நிகழும்போது, தீர்க்கதரிசனத்தைப் பயன்படுத்துவதற்கு சமமாகிறது. இருப்பினும், நாளைய எனது பேச்சில், நான் குறிப்பாக பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதல் குறித்துக் கையாளப் போகிறேன். எனவே, இன்று எனது பேச்சில் அந்த குறிப்பிட்ட பயன்பாட்டைப் பற்றி அதிகமாக சொல்ல இயலாது.
எனவே, நான் அந்நிய பாஷை அல்லது பாஷைகளின் மூன்றாவது பயன்பாட்டிற்கு செல்கிறேன்; இது குறித்து பலருக்கு உண்மையில் தெளிவாக தெரியவில்லை. அதாவது: அந்நிய பாஷை அவிசுவாசிகளுக்கு ஒரு அடையாளமாய் இருக்கிறது. 1 கொரிந்தியர் 14:22 இல், பவுல் கூறுகிறார்:
22 அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.
அந்நியபாஷைகள் அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது என்பதைக் கவனியுங்கள். அதன் அர்த்தம் என்ன? சரி, பெந்தெகொஸ்தே நாளுக்கு ஒரு கணம் செல்வோம். என்ன நடந்தது? பரிசுத்த ஆவியானவர் சீஷர்கள் மீது வந்தார், அவர்கள் நிரப்பப்பட்டார்கள், அவர்கள் தங்களுக்குத் தெரியாத அந்நிய பாஷைகளில் பேச ஆரம்பித்தார்கள். ஆனால், சுற்றிலும் இருந்த அவிசுவாசிகள் கூடி வரும்போது, பாஷைகளை அடையாளம் கண்டுகொண்டார்கள். மேலும், இந்த மனிதர்கள் பாஷைகளை மிகச் சரியாகவும், சரளமாகவும் பேசுகிறார்கள் என்பதை உணர்ந்து, அவர்களே புரிந்து கொண்டதால், அவர்கள் திகைத்துப் போனார்கள், ஆனால், அவைகளைப் பேசிக் கொண்டிருந்த மனிதர்களுக்குப் புரியவில்லை, அதன் விளைவாக, அவர்களின் கவனம் ஈர்க்கப்பட்டு, பேதுரு அவர்களுக்கு பிரசங்கிக்கப் போகும் செய்தியைப் பெற அவர்கள் ஆயத்தமானார்கள். எனவே, அந்த அந்நியபாஷைகள் அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது. இது அசாதாரணமானது, ஆனால் அது நிறுத்தப்படாத ஒன்றாகும்.
அமெரிக்காவில் குறிப்பிட்ட நகரத்தில் உள்ள ஒரு தேவாலயத்தை நான் அறிவேன், அங்கு ஒரு ஆயர் தேவாலயத்தில் உள்ள ஒரு பெண்மணி, குறிப்பிட்ட மருத்துவமனையில் வியாதியுள்ளவர்களை சென்று பார்த்து, அவர்களுக்கு ஊழியம் செய்வதில் மகிழ்ச்சியடைவாள். அவள் ஒரு நாள் அறைகள் வழியாக நடந்து சென்றபோது, படுக்கையில் முட்டுக்கொடுத்து அமர்ந்திருந்த ஒரு மனிதனிடம் சென்றாள், அவன் மிகவும் இருளடைந்தவனாகவும், மகிழ்ச்சியற்றவனாகவும் இருந்தான். எனவே, அவள் அவனிடம் சென்று பேச ஆரம்பித்தாள், அவனுக்கு ஆங்கிலம் புரியவில்லை என்பதைக் கண்டுபிடித்தாள். இப்போது, இந்த பெண்ணுக்கு நம்மில் பலரை விட அதிக விசுவாசம் இருந்தது, எனவே அவள் தெரியாத (அந்நிய) பாஷையில் பேச முடிவு செய்தாள். அவள் என்ன மொழியில் பேசுகிறாள் என்று அவளுக்குத் தெரியவில்லை, ஆனால் அவள் பேச ஆரம்பித்தாள், அந்த மனிதனின் முகம் பிரகாசமாக இருந்தது, அவன் கேட்க ஆரம்பித்தான். அவன் அவளுக்கு அதே பாஷையில் பதிலளித்தான், அவளும் அவனுக்குப் பதிலளித்தாள், அவர்கள் உரையாடினார்கள். மேலும் அந்த மனிதனின் முழு அணுகுமுறையும் மாறியது. பின்னர், அவள் கேனரி தீவில் பேசும் ஸ்பானிஷ் பாஷை என்று கண்டுபிடித்தாள். அதுதான் அவனது தாய்மொழி ஆகும். ஸ்பானிஷ் பாஷை பேசும் ஒருவரை அவளால் கண்டுபிடிக்க முடிந்தது, மேலும், அந்த நபர் வந்து அந்த மனிதனுக்கு தனது சொந்த புரிதலில் ஊழியம் செய்ய முடிந்தது; ஆனால், அந்நிய பாஷையின் ஆரம்பப் பயன்பாடே அந்த மனிதனின் கவனத்தை ஈர்த்து, நற்செய்திக்கு அவனைத் திறந்திருக்க செய்தது.
அல்லது, நான் லண்டனில் ஒரு தேவாலயத்தில் போதகராக இருந்தபோது, என் வாழ்க்கையின் முந்தைய பகுதிக்குச் செல்கிறேன்; ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலையையும், நாங்கள் நற்செய்தி ஆராதனை என்று அழைப்போம், எங்கள் மகள்களும், சபையின் மற்ற உறுப்பினர்களும் ஆர்வமுள்ளவர்களை அழைத்து வருவார்கள். ஒரு நாள் எங்கள் மூத்த மகள் திக்வா, வேல்ஸில் இருந்து வெல்ஷ் தாய் மொழியைக் கொண்ட ஒரு இளைஞனை அழைத்து வந்தாள். சரி, நாங்கள் ஊழியத்துக்கு சென்று, நான் எனது செய்தியை பிரசங்கித்தேன், என்ன நடக்கிறது என்று அறிவதற்கு முன்பு, சபையில் எங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு வயதானவர், எழுந்து நின்று, அந்நிய பாஷையில் மிகத் தெளிவாக பேசத் தொடங்கினார். சரி, நான் கொஞ்சம் விரக்தியடைந்தேன். அவர் என்னைக் குறுக்கிட்டு எனது செய்தியைக் கெடுத்துவிட்டார் என்று நான் நினைத்தேன், ஆனால் அந்த இளைஞன் எங்கள் மகளின் பக்கமாக திரும்பி, “அந்த மனிதர் ஏன் என் பாவங்களைப் பற்றி எல்லோரிடமும் பொதுவில் கூறுகிறார்?” என்றான். அந்த வயதானவருக்கு வெல்ஷ் மொழியில் ஒரு வார்த்தையும் தெரியாது, அவர் என்ன பாஷை பேசுகிறார் என்பதும் தெரியாது என்று அந்த வேல்ஸை சேர்ந்த இளைஞனை நம்பசெய்வதற்கு எங்களுக்கு பத்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. என்னை நம்புங்கள், அந்த இளைஞனின் கவனம் அன்று ஈர்க்கப்பட்டது, மேலும், நான் உங்களுக்கு சொல்லுகிறேன், அவர் பின்னர், அவரை கூட்டத்துக்கு அழைத்து வந்த அந்த இளம்பெண்ணை மணந்து இப்போது என் மருமகன்களில் ஒருவராக இருக்கிறார். எனவே, அவிசுவாசிகளுக்கு அடையாளமாக அந்நிய பாஷைகள் பயன்பட்டதற்கு இது ஒரு சுவாரஸ்யமான உதாரணமாகும்.
சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. ஆனால், நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை, நான் மூன்றாவது குரல் வரத்தைக் கையாள்வேன், இன்று என் பேச்சில் அதை நான் குறிப்பிட்டேன், ஆனால் அதைப் பற்றி விளக்கமாக சொல்லவில்லை: அது தான் பாஷைகளை வியாக்கியானம் பண்ணும் வரமாகும்.
குறியீடு: RP-R008-104-TAM









