இன்றைய உலகச் சூழ்நிலையை ஊடகங்களின் பார்வையிலிருந்து அல்ல, தேவனுடைய கண்ணோட்டத்திலிருந்து நாம் ஒன்றாகத் தொடர்ந்து பார்க்கும்போது, மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது.

தம்முடைய ஜனங்களுக்காக தேவன் வைத்திருக்கிற முடிவுகால நோக்கத்தைக் குறித்து நேற்று நான் தொடர்ந்து பேசினேன். அதை “புதுப்பித்தல்” என்ற ஒரு வார்த்தையில் தொகுத்துச் சொல்லி விடலாம். “புதுப்பித்தல்” என்றால், காரியங்களை அதற்குரிய சரியான இடத்திலும், அதற்குரிய சரியான நிலையிலும் திரும்பக் கொண்டு வருவதாகும் என்று நான் விளக்கினேன். யோவேல் புத்தகத்தில் காண்பிக்கப்பட்ட அடையாளங்களின்படி, இது எவ்வாறு தேவனுடைய இரண்டு உடன்படிக்கை ஜனங்களுக்கும் பொருந்தும் என்பதை நாம் பார்த்தோம். அதாவது அத்திமரத்தின் அடையாளமாகிய இஸ்ரவேலுக்கும், திராட்சைச்செடியின் அடையாளமாகிய சபைக்கும் இது எவ்வாறு பொருந்தும் என்று நாம் பார்த்தோம்.

பலப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தப் புதுப்பித்தலின் கிரியைக்காக வரலாற்றில் தேவன் ஒரு விசேஷமான நேரத்தை முன் குறித்திருந்தார் என்பதை இன்று நான் உங்களுக்குக் காண்பிக்கப் போகிறேன். அதைக் காட்டிலும் முக்கியமாக, உண்மையில், இன்று நாம் அந்த முன் குறிக்கப்பட்ட நேரத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நான் ஏன் விசுவாசிக்கிறேன் என்பதையும் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.

நான் முதலில் 102-ம் சங்கீதத்திற்குச் செல்லப் போகிறேன். இந்தச் சங்கீதத்தின் ஆரம்பத்தில், சங்கீதக்காரனின் தனிப்பட்ட புலம்பலின் வார்த்தைகளைப் பார்க்க முடியும். அவனைச் சுற்றி எல்லாமே வறண்டு, உலர்ந்து போனதுபோல காணப் படுகிறது. அவனை உற்சாகப்படுத்தக்கூடிய எதையும் அவனால் பார்க்க முடியவில்லை. ஒரு விதத்தில், ஒரு நம்பிக்கையும் இல்லை என்பதாகத்தான் அவன் உணர்ந்தான். அதனால் அவன் தனிப்பட்ட விதத்தில், விரக்தியடைந்தவனாய், மனச்சோர்வுக்குள்ளாகியிருந்தான். ஆனால் 12-ம் வசனத்தில், அவன் தன் கண்களை அவனிடமிருந்து, அவனுடைய தனிப்பட்ட சூழ்நிலையிலிருந்தும் விலக்கினான். அவன் தன் கண்களை கர்த்தருக்கு நேராக உயர்த்தினான். கர்த்தர் மீதும், கர்த்தர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதன் மீதும் அவன் தன் கவனத்தைப் பதித்தான். உடனடியாக, அவனுடைய புலம்பல் சந்தோஷமாய் மாறியது. அவனுக்குள் நம்பிக்கை பிறந்தது. அவனுடைய சிந்தையே உடனடியாய் முற்றிலும் மாறியது. இது நாம் பின்பற்றுவதற்கு ஒரு நல்ல மாதிரியாய் இருக்கிறது. நீங்கள் நம்பிக்கையை இழந்தவர்களாய், மனச்சோர்வுக்குள்ளாகி, உங்களை உற்சாகப்படுத்தக்கூடிய எதுவும் அங்கு இல்லை என்ற நிலையில், உங்களையும், உங்களுடைய தனிப்பட்ட சூழ்நிலைகளையும் பார்த்துக் கொண்டிருப்பதை முதலில் நிறுத்துங்கள். கர்த்தருக்கு நேராக உங்களுடைய கண்களை உயர்த்துங்கள். அவர் என்ன சொல்கிறார் என்று செவி கொடுத்துக் கேளுங்கள். அந்த வார்த்தைகளால் உங்களுடைய சிந்தையை நிச்சயம் மாற்ற முடியும்.

சரி, இப்பொழுது நாம் எல்லோரும் சங்கீதம் 102:12-ம் வசனத்திலிருந்து வாசிப்போம். சங்கீதக்காரன் தன் கண்களை கர்த்தர் மீது பதித்திருக்கிற நிலையில், அவன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம். 12-ம் வசனம்:

12 (ஆனால்) கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர் (ஓ கர்த்தாவே, நீரோ என்றென்றைக்குமாய் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறீர்). உம்முடைய பெயர் பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும். [தேவன் தம்முடைய சிங்காசனத்தில் வீற்றிருந்து எப்பொழுதும் ஆளுகை செய்கிறார் என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்திருப்பது நமக்கு நல்லது. அவர் ஒருபோதும் தன் ராஜரீகத்தை இழப்பதில்லை, துறப்பதில்லை. அவர் எப்பொழுதும் அங்கேயிருந்து ஆளுகை செய்கிறார். இப்பொழுது முக்கியமான விஷயம் 13-ம் வசனத்தில் வருகின்றது.] 13 தேவரீர் எழுந்தருளி, சீயோனுக்கு இரங்குவீர். அதற்குத் தயை செய்யும் காலமும், அதற்காக குறித்த நேரமும் வந்தது.

சீயோன் என்பது தேவனுடைய உடன்படிக்கை ஜனங்கள் எல்லோரையும் வேதவசனத்தில் குறிக்கின்ற பெயர்களில் ஒன்று என நான் விசுவாசிக்கிறேன். இவர்கள் எல்லோரும் ஒரு உடன்படிக்கையின் மூலம் தேவனோடு உறவு கொண்டிருக்கிறார்கள். ஒரு நேரம் முன் குறிக்கப்பட்டிருக்கிறது. இதை நாம் கவனிக்க வேண்டும். அந்நேரத்தில், தேவன் தம்முடைய உடன்படிக்கையின் ஜனங்களுக்கு தயவு காண்பிக்கப் போகிறார். “தயவு” என்ற வார்த்தை, “கிருபை” என்ற வார்த்தைக்கான புதிய ஏற்பாட்டு வார்த்தையோடு நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கிறது. இது எப்பொழுதுமே நம்மால் சம்பாதிக்க முடியாத அல்லது நமக்குத் தகுதியில்லாத ஒன்றைக் குறிக்கிறது. ஆனாலும் இதை நமக்குக் கொடுப்பது தேவனுடைய சித்தமாயிருக்கிறபடியால், இது நமக்குக் கிடைத்திருக்கிறது.

14 உம்முடைய ஊழியக்காரர் அதின் கல்லுகள் மேல் வாஞ்சை வைத்து, அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள். (பாழாய் கிடக்கிற நிலையில் கூட, தேவனுடைய உடன்படிக்கையின் ஜனங்களுடைய நிலையைக் குறித்து நமக்கு ஆழமான அக்கறை இருக்க வேண்டும். அவர்களுடைய பாழான நிலை, நம்மை பரிதபிக்கச் செய்ய வேண்டும். 17-ம் வசனம் சொல்கிறது:) 17 அப்பொழுது ஜாதிகள் (தேசங்கள்) கர்த்தருடைய நாமத்துக்கும், பூமியிலுள்ள ராஜாக்களெல்லாரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள் (தலைவணங்குவார்கள்).

இவ்வுலகத்தின் எல்லா தேசங்களின் மீதும், அவற்றை ஆளுகை செய்பவர்கள் மீதும் ஒரு ஆழமான, அழுத்தமான தாக்கத்தை உண்டாக்கக்கூடிய அளவிற்கு, தேவன் தம்முடைய ஜனங்களுக்காக தலையிடப் போகிறார். தேவன் தம்முடைய ஜனங்களுக்காக என்ன செய்கிறார் என்பதை அவர்கள் பார்க்கும்போது, பயத்தில் பின்வாங்கி, அப்படியே திகைத்துப் போய் நிற்பார்கள். 15-ம் வசனம் சொல்கிறது:

15 கர்த்தர் சீயோனைக் கட்டி (திரும்பக் கட்டியெழுப்பி), தமது மகிமையில் வெளிப்படுவார்.

புதுப்பித்தலின் இன்னொரு பெயர் திரும்பக் கட்டியெழுப்புவதாகும். தேவன் சீயோனைத் திரும்ப மீட்கப் போகிறார். அவர் சீயோனைத் திரும்பக் கட்டியெழுப்பப் போகிறார். அவர் அப்படிச் செய்யும்போது, அவர் தம் மகிமையில் வெளிப்படப் போகிறார். எல்லாவற்றையும் திரும்ப மீட்டெடுக்கின்ற நேரத்தில், இயேசு திரும்பவும் தம் மகிமையில் வெளிப்படும் நேரம் வரும் என்று நான் நேற்று சொன்ன விஷயம் உங்களுடைய நினைவிலிருக்கும். ஆகையால் இந்த இரண்டு வேதவசனங்களூம் அப்படியே ஒத்துப் போகின்றன. 16-ம் வசனம் சொல்கிறது:

16 (தேவன்) திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம் பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்.

கிறிஸ்தவர்கள் ஜெபம், ஜெபம், ஜெபம் என்று எந்நேரமும் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்களே, ஆனால் ஒரு பதிலும் கிடைத்ததுபோலத் தெரியவில்லையே என்று நாம் சில நேரங்களில் நினைக்கிறோம். ஆனால் ஒரு நாள் வரப் போகிறது. மிகவும் குறுகிய காலகட்டத்தில் தேவன் எல்லா ஜெபங்களுக்கும் பதில் கொடுக்கப் போகிறார்.

சமீபத்தில், எருசலேமின் மேற்குச் சுவர்ப் பகுதியில் நான் இருந்தேன். ஒவ்வொருமுறையும், நான் அந்தப் பட்டணத்தில் இருக்கும்போது, நான் வழக்கமாக அங்கு செல்வேன். அந்தச் சுவர்ப் பகுதியில், நான் அமைதியாக கர்த்தரை ஆராதித்துக் கொண்டிருந்தேன். ஆயிரக்கணக்கான தேவனுடைய ஜனங்களின் ஜெப விண்ணப்பங்கள் சிறிய சிறிய காகிதத் துண்டுகளில் எழுதப்பட்டு, சுவற்றின் சிறு சிறு விரிசல்களுக்குள் சொறுகப்பட்டிருந்தன. எண்ண முடியாத அளவிற்கு அவ்வளவு விண்ணப்பங்கள் அங்கே இருந்தன. அவற்றைப் பார்த்தபோது, “இவர்கள் இந்த ஜெப விண்ணப்பங்களை இங்கே சுவற்றில் சொறுகிக் கொண்டே இருக்கிறார்களே. ஆனால் ஒரு பதிலும் கிடைத்தது போலத் தெரியவில்லையே,” என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் தேவனுடைய ஆவியானவர் அந்த நேரத்தில் என்னை ஆட்கொண்டார். தேவனே என்னிடம் இவ்வாறு பேசியதுபோல இருந்தது, “ஒரு நாள் வரப் போகின்றது. அப்பொழுது மிகக் குறுகிய காலகட்டத்திற்குள் இந்த எல்லா ஜெப விண்ணப்பங்களுக்கும் நான் பதில் கொடுக்கப் போகிறேன்.” இப்பொழுது நாம் 18-ம் வசனத்தை வாசிப்போம்:

18 பின் சந்ததிக்காக இது எழுதப்படும். சிருஷ்டிக்கப்படும் ஜனம் (சிருஷ்டிக்கப்படப் போகிற ஜனம்) கர்த்தரைத் துதிக்கும்.

பாருங்கள், இந்த வார்த்தைகள் நம்முடைய நன்மைக்காக எழுதப்பட்டிருக்கின்றன. காரணம், நாம் அந்தத் தலைமுறையில்தான் வாழ்கின்றோம் என்று நான் விசுவாசிக்கிறேன்.

இதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்: பல நூற்றாண்டுகளாக தேவனுடைய ஜனங்கள், தேவனுக்குத் தகுதியான விதத்தில் அவரைத் துதிப்பதில் ரொம்பவும் அசதியாக, மந்தமாக இருந்து விட்டனர் என்றுதான் நான் விசுவாசிக்கிறேன். அவர் சொன்னார், “எனக்குத் தகுதியான விதத்தில் நான் துதிக்கப்பட வேண்டுமென்றால், அதைச் செய்யும்படி ஒரு கூட்ட ஜனங்களை காலத்தின் முடிவில் நான் சிருஷ்டிக்கப் போகிறேன்.” நான் என்ன விசுவாசிக்கிறேன் என்று தெரியுமா? தேவன் இன்று பரிசுத்த ஆவியானவரை ஊற்றிக் கொண்டிருப்பதன் மூலம், அவர் ஒரு கூட்ட ஜனங்களை புதிதாய் சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறார் என்றுதான் நான் விசுவாசிக்கிறேன். கர்த்தரை துதிக்கும்படி சிருஷ்டிக்கப்பட்ட அந்தத் தலைமுறையின் ஒரு பகுதியினராய் நாம் இருக்கிறோம். காரணம், தேவன் தம்முடைய ஜனங்களின் சார்பில் தலையிடுவதை இப்பொழுது நாம் பார்க்கின்றோம்.

நான் வாசித்திருக்கிற தீர்க்கதரிசனத்தைக் குறித்த சில எளிமையான உண்மைகளை நான் இங்கு சொல்லி விடுகிறேன். முதலில், தேவனுடைய தீர்க்கதரிசனக் காலண்டரில், அவர் தம்முடைய ஜனங்களுக்கு மனதுருக்கத்தையும், தயவையும், கிருபையையும் காண்பிப்பதற்கென்று ஒரு நேரம் முன் குறிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக, அது தேவனுடைய தலையீட்டின் வடிவத்தை எடுத்துக் கொண்டு, எல்லா தேசங்களிடமும் பேசும். மூன்றாவதாக, கர்த்தர் சீயோனை திரும்பக் கட்டியெழுப்புகிற அல்லது திரும்ப மீட்டெடுக்கிற கிரியை, அவருடைய மகிமையான மறுவருகைக்கு முன் உடனடியாக நடக்கின்றது. நான்காவதாக, எண்ணற்ற ஜெபங்களுக்கு பதில் கிடைக்கும் நேரமாக அது இருக்கும். ஐந்தாவதாக, இந்த நேரத்தில், விசேஷமாக தம்மைத் துதிக்கும்படி கர்த்தர் ஒரு கூட்ட ஜனத்தை சிருஷ்டிக்கின்றார்.

எவ்வாறு இந்த புதுப்பித்தலின் காலகட்டம் அல்லது தேவனுடைய தயவிற்காக முன் குறிக்கப்பட்ட நேரம் குறிப்பாக அத்திமரத்தின் அடையாளமாகிய இஸ்ரவேலுக்குப் பொருந்தும் என்று இப்பொழுது நான் உங்களுக்குக் காண்பிக்கப் போகிறேன். கடந்த நூற்றாண்டின் முடிவுக்குத் திரும்பிச் சென்று, இஸ்ரவேலின் வரலாற்றில் முக்கியமான சம்பவங்கள் நிகழ்ந்த தேதிகளை சுருக்கமாக பட்டியலிட்டுக் கொடுக்கப் போகிறேன். இஸ்ரவேலை திரும்ப மீட்டெடுக்கிற கிரியை முக்கியமாக இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் நிகழ்ந்தது. நான் அந்தத் தேதிகளை சுருக்கமாக உங்களுக்குக் கொடுக்கிறேன்:

1987 - சுவிட்சர்லாந்தில் முதல் சீயோனிஸ்ட் உலக மாநாடு நிகழ்ந்தது. 1904 - சீயோனிசம் அமைப்பின் தொலைநோக்கு தரிசனம் உள்ள தீர்க்கதரிசி தியோடர் ஹெர்ஸில் தனது 44வது வயதில் மரித்தார். அவருடைய மரணப்படுக்கையில், அவர் ஒரு தரிசனத்தோடு நம்பிக்கையாய் தெரிவித்த வார்த்தைகள் இவை: “மற்றவர்கள் என்னை தரிசனக்காரன், சொப்பனக்காரன் என்றெல்லாம் அழைக்கிறார்கள். ஆனால் ஐம்பது வருடங்களுக்குள், என் தரிசனம் நிச்சயமாய் நிறைவேறும்.” அவருடைய மரணம் நிகழ்ந்து 44 வருடங்களுக்குப் பிறகு, இஸ்ரவேல் தேசம் பிறந்தது. தரிசனமும் நிறைவேறியது. 1917 - நான்கு நூற்றாண்டுகளாக இஸ்ரவேல் மீதிருந்த துருக்கியின் ஆதிக்கம் இவ்வருடத்தில்தான் முடிவுக்கு வந்தது. இது ஒரு முக்கியமான நிகழ்வு. அதோடு யூதர்களுக்கென்று தனியாக இஸ்ரவேல் தேசம் உருவாக வேண்டும் என்பதற்கு ஆதரவாக பிரிட்டிஷ் அரசாங்கம் பால்போர் அறிக்கையின் (Balfour Declaration) மூலம் தெரிவித்தது. அதுவும் இவ்வருடத்தில்தான் நிகழ்ந்தது.

இப்பொழுது நாம் இன்னும் இரண்டு முக்கியமான சம்பவங்களைப் பார்க்கலாம்:

1948 - கடைசியாக, இஸ்ரவேல் தேசம் இறையாண்மை உள்ள ஒரு சுதந்திர தேசமாக உண்மையில் திரும்பவும் உருவெடுத்தது. 1967 - 2500 வருடங்களில் முதல் முறையாக, பழைய நகரமான எருசலேம், அதாவது உண்மையான எருசலேம் நகரம் திரும்பவும் இஸ்ரேல் அரசாங்கத்தின் கீழ் வந்தது. இஸ்ரேல் அதை முழுமையாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் மனுஷ வரலாற்றின் மையமாக இருக்கிற அந்தச் சிறிய நிலப்பகுதியை அவர்கள் திரும்பவும் நிர்வகிக்க ஆரம்பித்தார்கள்.

லூக்கா 21-ல் இயேசு பேசின வார்த்தைகளை நம் நினைவுக்குக் கொண்டு வருவோம்: “புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் (அதன் பழைய நகரப் பகுதி) புறஜாதியாரால் மிதிக்கப்படும்.”

இந்த முக்கியமான சம்பவங்களில் சில நிகழ்ந்தபோது, இஸ்ரவேல் தேசத்தில் இருக்கக்கூடிய விசேஷமான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பிரிட்டிஷ் ராணுவத்தின் ஒரு போர் வீரனாய் நான் அங்கு 1944-ம் வருடம் சென்றேன். பிரிட்டிஷ் ராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகும், 1948-ம் வருடம் வரை நான் இஸ்ரவேல் தேசத்திலேயே தொடர்ந்து வாழ்ந்தேன். முதல் அரபு-யூத யுத்த காலகட்டம்வரை அது நீடித்தது. ஆகையால் நான் நேரில் பார்த்த காரியங்களைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன். என் தனிப்பட்ட கருத்தையும் நான் உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன். எகிப்திலிருந்து இஸ்ரவேல் விடுதலையானபோது, மோசேயின் கீழ் நிகழ்ந்த மிகப் பெரிய ஒரு விடுதலைப் பிரயாணத்தையும், பெரிய அற்புதத்தையும் காட்டிலும், மிகவும் பயங்கரமாய் பெரிய அளவில் இஸ்ரவேல் திரும்ப மீட்டெடுக்கப்பட்ட இந்தக் காலகட்டத்தில் தேவனுடைய இறையாண்மையும், வல்லமையும் வெளிப்பட்டதை நாங்கள் கண்டிருக்கிறோம். அதோடுகூட, அப்படி நடக்கும் என்று தீர்க்கதரிசன வசனங்களும் அதை அறிவிக்கின்றன என்று நான் விசுவாசிக்கிறேன்.

எரேமியா 16:14-15 வசனங்களை நான் வாசிக்கிறேன்:

14 ஆதலால் இதோ, நாட்கள் வரும். அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு இனிமேல் சத்தியம் பண்ணாமல், 15 இஸ்ரவேல் புத்திரரை வட தேசத்திலும், தாம் அவர்களைத் துரத்தி விட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு, சத்தியம் பண்ணுவார்கள். நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பி வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்கிறார்.

இந்த விடுதலைப் பிரயாணம் மிகவும் பெரிய அளவில் நிகழ்ந்த பயங்கரமான ஒரு அற்புதம். பலப் பலப் பல நூற்றாண்டுகளாக, அந்தப் பழைய விடுதலைப் பிரயாணத்தின் நினைவிலேயே இஸ்ரவேல் ஜனங்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வருடமும் பஸ்காவைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதைக் காட்டிலும் மிகப் பெரிய ஒரு விடுதலைப் பிரயாணம் வரப் போகிறது என்று அவர்களுடைய சொந்த தீர்க்கதரிசன வசனங்களே அறிவிக்கின்றன. எகிப்திலிருந்து மட்டுமல்ல, ஏதோ ஒரு தேசத்திலிருந்து மட்டுமல்ல, அடிமைத்தனம் மற்றும் உபத்திரவம் என்ற ஒரு சூழ்நிலையிலிருந்து மட்டுமல்ல, வட தேசத்திலிருந்து அது ஆரம்பிக்கிறது (அதிலும் முக்கியமாக, ஐரோப்பா மற்றும் ரஷ்யாவிலிருந்து அது ஆரம்பிக்கிறது. காரணம், அது இஸ்ரவேல் தேசத்திற்கு வடக்கே இருக்கிறது). எங்கெல்லாம் தேவன் அவர்களை துரத்தி விட்டிருந்தாரோ, அங்கிருந்தெல்லாம் தேவன் அவர்களைக் கூட்டிச் சேர்க்கிறார், அவர்களுடைய விடுதலைப் பிரயாணமும் ஆரம்பிக்கிறது. “நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய சொந்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பி வரப்பண்ணுவேன்,” என்று தேவன் சொல்கிறார். “நான் திரும்பி வரப் பண்ணுவேன் அல்லது திரும்ப மீட்டுக் கொடுப்பேன்,” என்ற முக்கியமான வாக்குத்தத்தத்தைத் திரும்பவும் கவனியுங்கள். எரேமியா புத்தகத்தில் முன் கூட்டியே சொல்லப்பட்ட இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறுகிற நாட்களில்தான் இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்ன ஒரு உற்சாகம்! என்ன ஒரு விசேஷமான சிலாக்கியம்!

ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இஸ்ரவேல் திரும்ப மீட்கப்படுகிற இந்த நிகழ்வு முதலில் பூகோள நிலப்பரப்பின் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நடக்கிறது. ஆனால் முடிவில் அது ஆவிக்குரிய புதுப்பித்தலின் கிரியையாக நிகழ்ந்து முடியும்.

சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை தேவனுடைய ஜனங்களுக்கான புதுப்பித்தல் திட்டத்தின் மற்றொரு பகுதியான, திராட்சைக் கொடியாகிய சபையின் புதுப்பித்தலைப் பற்றி பேசப் போகிறேன்.

லைக்
பகிரவும்