யோசுவா நமது மாதிரி

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: September 2026
Read Time: 10
'யோசுவா, நமது முன்மாதிரி' - யோசுவாவின் வாழ்க்கை மூலம் தேவ வாக்குத்தத்தங்களின் நிறைவில் வாழ்வது எப்படி என்பதை இது விளக்குகிறது. இறைவல்லமையும் வாக்குத்தத்தங்களும் நம்மைச் செழிப்பான வாழ்விற்கும் தேவபக்திக்கும் எவ்வாறு தகுதியாக்குகின்றன என அறியுங்கள். 'தேவனுடைய வாக்குத்தத்தங்களிலேயே அவருடைய ஏற்பாடுகள் உள்ளன' எனும் உண்மையை டெரெக் பிரின்ஸின் இந்தத் தொடரில் கண்டறியுங்கள். இது 'தேவ வாக்குத்தத்தங்களின் தேசத்தில் நடத்தல்' எனும் வரிசையின் ஒரு பகுதியாகும்.
Transcript
ஒரு புதிய வாரத்தின் தொடக்கத்தில் மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. எனது வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் வித்தியாசத்தை ஏற்படுத்திய உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், அது உங்களுக்கும் அப்படியே செய்யும். இந்த வாரம் எனது பேச்சுகளின் கருப்பொருளுக்கு, “தேவனுடைய வாக்குத்தத்தங்களின் தேசத்தின் வழியாக நடப்பது”, என்ற ஒரு வித்தியாசமான, உற்சாகமான தலைப்பை நான் தேர்ந்தெடுத்துள்ளேன்.
முதலில், எனக்கு கடிதம் எழுதியவர்களுக்கு நன்றி கூறுகிறேன். நான் இந்தப் பேச்சை முடிப்பதற்கு முன், நீங்கள் எழுதக்கூடிய அஞ்சல் முகவரியைத் தருகிறோம். உங்கள் தனிப்பட்ட தேவைகள், உங்கள் பிரச்சனைகள், உங்கள் ஜெப விண்ணப்பங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள தயங்காதீர்கள்.
நமது சுதந்தரத்தை உரிமை கோருதல் என்னும் எனது முந்தைய பேச்சுகளில், இரண்டு முக்கியமான தொடர்புடைய உண்மைகளை நான் வலியுறுத்தியுள்ளேன். இதற்கான முக்கிய வேதபகுதி 2 பேதுரு 1:3-4 ஆகும்:
3 தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய [தேவனுடைய] திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, 4 இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வசனங்களில் ஏற்கனவே செய்த காரியங்களை குறிக்கும் செயல் முடிவுபெற்ற காலத்தில் கூறப்பட்டுள்ள இரண்டு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். வசனம் 3 இல், தேவனின் திவ்விய வல்லமையானது நம் வாழ்க்கைக்கும், தேவபக்திக்கும் தேவையான அனைத்தையும் கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது. தேவன் இனிமேல் நமக்குக் கொடுக்கப்போவதில்லை, அவர் ஏற்கனவே நமக்குக் கொடுத்திருக்கிறார். பின்னர் வசனம் 4 இல், அந்த வாக்கியத்தில் விளக்கப்பட்டுள்ளது, “மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது….”ஆகவே, நமக்குத் தேவையான அனைத்தையும் தேவன் நமக்குக் கொடுத்திருப்பதைக் காண்கிறோம், ஆனால் அவர் அதை அவருடைய வாக்குத்தத்தங்களின் வடிவத்தில் கொடுத்திருக்கிறார்.
நான் இதைச் சுருக்கமாகச் சொல்கிறேன், “தேவனின் ஏற்பாடு அவருடைய வாக்குத்தத்தங்களில் உள்ளது.” நான் அதை மீண்டும் சொல்கிறேன், இது மிகவும் முக்கியமானது. தம் மக்களுக்கான தேவனின் ஏற்பாடு அவருடைய வாக்குத்தத்தங்களில் உள்ளது.
முதலாவது கருத்துடன் ஒத்துப்போகும் இரண்டாவது அம்சம், வாக்குத்தத்தங்கள் நமது சுதந்தரம் என்பதுதான். பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும் இடையே தெளிவான ஒப்பீடு உள்ளது. பழைய ஏற்பாட்டில், யோசுவா என்ற தலைவரின் கீழ், தேவன் தம் மக்களை வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் சென்றார். புதிய ஏற்பாட்டில், எபிரேய வடிவத்தில் அதே பெயரில் இருக்கும் இயேசு என்ற தலைவரின் கீழ், தேவன் தம் மக்களை வாக்குத்தத்தங்களின் தேசத்திற்கு அழைத்துச் செல்கிறார். எனவே, வாக்குத்தத்தங்களே நமது சுதந்தரம். இந்த வாரம் எனது பேச்சுகளில், நாம் வாக்குத்தத்தங்களின் தேசத்தின் வழியாக நடக்கப் போகிறோம், நமது சுதந்தரத்தை பார்த்து, அந்த சுதந்தரத்தை நாம் எப்படி உரிமையாக்கிக் கொள்ளமுடியும் என்பதைப் பார்க்கலாம்.
இந்த வாரம் எனது பேச்சுகளில், நம் வாழ்வில் பொதுவாக எழும் பல்வேறு தேவைகள் அல்லது பிரச்சனைகளை நான் குறிப்பாகக் கையாளப் போகிறேன். மேலும், ஒவ்வொரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கும் பொருத்தமான தேவனின் குறிப்பிட்ட வாக்குத்தத்தங்களைக் கண்டறிந்து உரிமை கோருவதன் மூலம் நமது தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்யலாம் என்பதையும், நமது பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பதையும் மிகவும் நடைமுறையான விதத்தில் நான் உங்களுக்குக் காண்பிக்கப் போகிறேன். ஆனால், முதலில், இன்றைய எனது அறிமுக உரையில், ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், அனைத்து வாக்குத்தத்தங்களையும் கோருவதற்கான திறவுகோலாக இருக்கும் வாக்குத்தத்தத்தைக் கருத்தில் கொள்ளப்போகிறேன். கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சுதந்தரத்துக்குள் வழிநடத்தும்படி யோசுவாவுக்கு கட்டளையிட்ட சமயத்தில் அவருக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் இதுவே. இது யோசுவா 1:8 இல் காணப்படுகிறது. கர்த்தர் யோசுவாவிடம் கூறியது இதுதான்:
8 இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.
முதலில், வாக்குத்தத்தத்தைப் பார்ப்போம். யோசுவாவுக்குக் கொடுக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தத்தை விட முழுமையான வெற்றிக்கான முழுமையான உறுதியை அளிக்கும் எந்த வாக்குத்தத்தமும் இல்லை என்று நினைக்கிறேன். “அப்பொழுது நீ உன் வழியை செழிப்பாக்குவாய், அப்பொழுது நீ வெற்றி பெறுவாய்.” செழிப்பு மற்றும் வெற்றி ஆகிய இரண்டு விஷயங்கள் இணைந்துள்ளன. இப்பொழுது நீங்கள், “சரி, அது யோசுவாதான், நான் யோசுவா அல்ல” என்று சொல்லலாம், சரி, அது உண்மைதான், ஆனால் நினைவில் கொள்ளுங்கள், தேவன் நபர்களை பொறுத்தவர் அல்ல. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அவருக்கு எந்த பட்சபாதமுமில்லை. உங்கள் வாழ்க்கையில் விதிக்கப்பட்ட தேவனின் நிபந்தனைகளை நீங்கள் சந்தித்தால், யோசுவாவுக்கோ அல்லது அவருடைய மற்ற பெரிய ஊழியர்களுக்கோ தேவன் என்ன செய்வாரோ அதையே உங்களுக்கும் செய்வார். தேவனை கவர்ந்துகொள்வது ஆளுமை அல்ல, அவருடைய நிபந்தனைகளுக்குக் கீழ்ப்படிவதுதான். எனவே, அதுதான் வாக்குத்தத்தம் ஆகும். “நீங்கள் உங்கள் வழியை செழிப்பாக்குவீர்கள், நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள்.”
பல ஆண்டுகளாக, மனிதர்களுடனான எனது தொடர்புகளில் யாரும் தோல்வியடைய விரும்புவதில்லை என்பதை நான் கண்டுபிடித்தேன். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சாதிக்க வேண்டும் என்ற ஆழமான ஆசையும், ஏக்கமும் உருவாகியிருக்கிறது. எனவே, தோல்வியடைந்தவர்கள் தோல்வியடைய விரும்புவதால் தோல்வியடைவதில்லை, வெற்றிபெறத் தெரியாததால் அவர்கள் தோல்வியடைகிறார்கள். ஆனால் நாம் பார்த்த இந்த வசனம் எப்படி வெற்றி பெறுவது என்று சொல்கிறது. இது வெற்றிக்கான தேவனின் உத்தரவாதமான பாதையாகும்.
இப்போது நிபந்தனைகளைப் பார்ப்போம். சில முக்கிய சொற்றொடர்கள் உள்ளன. “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக.” “வாய்” என்ற வார்த்தையைக் கவனியுங்கள். பின்னர், “இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக.” தியானம் என்பது இதயத்தையும், மனதையும், உள்ளத்தையும் குறிக்கிறது. பின்னர், “இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி.” முக்கிய வார்த்தைகள் வாய், தியானம் மற்றும் செயல் போன்றவையாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நான் ஒரு கணம் வரிசையை மாற்றப் போகிறேன், நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் தேவனின் சட்டத்தை சிந்திக்க வேண்டும், தேவனின் சட்டத்தைப் பேச வேண்டும் மற்றும் தேவனின் சட்டத்தை செயல்படுத்த வேண்டும். சரியான தியானம், சரியான பேச்சு மற்றும் சரியான செயல். தேவனுடைய சட்டத்தின்படி அவர்கள் இருப்பதன் மூலம், சரியானது தீர்மானிக்கப்படுகிறது.
இப்போது, யோசுவாவிடம் மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகமாகிய பஞ்சாகமம் என்னும் வேதத்தின் முதல் ஐந்து புத்தகங்கள் மட்டுமே இருந்தன; ஆனால் 66 புத்தகங்களைக் கொண்ட மொத்த வேதமான தேவனைப் பற்றிய முழுமையான வெளிப்பாடு நம்மிடம் உள்ளது. மோசேயின் ஐந்து புத்தகங்கள் யோசுவாவுக்கு இவ்வளவு செய்யும் என்றால், வேதத்தின் மொத்த வெளிப்பாட்டிலிருந்து, 66 புத்தகங்களிலிருந்து எவ்வளவு எதிர்பார்க்க வேண்டும்? நமது வெளிப்பாடு பெரியது, ஆனால் செயல்பட வேண்டிய கொள்கைகள் ஒன்றே. நாம் தேவனின் சட்டத்தை சிந்திக்க வேண்டும், தேவனின் சட்டத்தைப் பேச வேண்டும் மற்றும் தேவனின் சட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இப்போது நாம் புதிய ஏற்பாட்டில் உள்ள ஒரு பகுதியைப் பார்க்கிறோம், இது புதிய ஏற்பாட்டின்படி இரட்சிப்புக்கான தேவைகளைக் கூறுகிறது. இந்தப் பகுதி ரோமர் 10:8-10 இல் உள்ளது. பவுல் தேவனுடைய வார்த்தையைப் பற்றி பேசுகிறார், மேலும், அவர் கூறுகிறார்:
8 இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே. 9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். 10 நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
“மனிதன் இதயத்தால் நீதியை விசுவாசிக்கிறான், வாயினாலே இரட்சிப்பை அறிக்கையிடுகிறான்” என்பது இன்னும் நேரடியான மொழிப்பெயர்ப்பாகும். இதயமும், வாயும் ஒன்று சேர்வதில்தான் அனைத்தும் இருக்கிறது என்பதைக் கவனியுங்கள். நாம் சிறிது நேரத்துக்கு அதற்கு திரும்பச் சென்று, பவுல் முன்வைக்கும் வரிசையைப் படிப்போம்.
முதலில், அங்கு பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு முக்கியமான வார்த்தைகளை விளக்க வேண்டும். “அறிக்கையிடுதல்” என்ற வார்த்தைக்கு வேதத்தில் ஒரு சிறப்பு அர்த்தம் உள்ளது. அதன் நேரடி அர்த்தம் “அதே போல் சொல்வது” என்பதாகும். ஆகவே, நாம் அறிக்கையிடும்போது, பாவத்தைப் பற்றி, இரட்சிப்பைப் பற்றி, குணமாகுதல் பற்றி, ஜெபத்தைப் பற்றி, எதுவாக இருந்தாலும், தேவன் தம்முடைய வார்த்தையில் கூறுவதைப் போலவே நாமும் வாயால் சொல்கிறோம். அறிக்கைப் பண்ணுதல் என்பது நம் வாயின் வார்த்தைகளை தேவனுடைய வார்த்தையுடன் ஒத்துப்போகச் செய்வதாகும்.
இப்போது, “இரட்சிப்பு” என்ற வார்த்தையானது இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் மூலம் நமக்கு வழங்கப்பட்ட அனைத்து நன்மைகளையும் கொண்டுள்ள அனைத்தையும் உள்ளடக்கிய வார்த்தையாகும். இது ஆவிக்குரிய நன்மைகள், சரீர நன்மைகள், பொருள் நன்மைகள், இம்மையிலும், மறுமையிலும், இந்த காலத்திலும், நித்தியத்திலும் உள்ள நன்மைகளை உள்ளடக்கியது. இதை மனதில் கொண்டு, வாய்க்கும், இதயத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றி பவுல் இந்தப் பகுதியில் கூறுவதைப் பார்ப்போம். ஒவ்வொரு வசனத்திலும், அந்த ஜோடி வார்த்தைகளை ஒவ்வொரு முறையாக மூன்று முறை பயன்படுத்துகிறார். வசனம் 8 இல் அவர் கூறுகிறார், “இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது.” முதலாவது வாய், பின்னர் இதயம் வருகிறதை கவனியுங்கள். வசனம் 9இல் அவர் சொல்கிறார், “என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.” மீண்டும் கவனியுங்கள், முதலாவது வாய், பின்னர் இதயம் வருகிறது. ஆனால், வசனம் 10இல், அந்த ஜோடி வார்த்தைகளை மூன்றாவது முறையாக மறுபடியும் சொல்லும் இடத்தில், அவர் வரிசையை மாற்றியமைக்கிறார், “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.” இங்கே இதயம் என்ற வார்த்தை வாய்க்கு முன்னால் வருகிறது.
இப்போது, இதற்கு நடைமுறை காரணம் இருப்பதாக நான் நம்புகிறேன். பல சமயங்களில் அனுபவத்தில் தேவனின் உண்மையை உறுதிப்படுத்துவதற்கான வழி சரியான அறிக்கை பண்ணுதலாகும். தேவனுடைய வார்த்தையின் குறிப்பிட்ட உண்மையை நீங்கள் நம்புவதை உங்கள் இதயத்தில் சரியாக உணராவிட்டாலும், அது தேவனுடைய வார்த்தை என்று நீங்கள் நம்புகிறீர்கள், அது ஆரம்பம் முதல் இறுதி வரை உண்மை என்று நீங்கள் நம்புகிறீர்கள். ஏனென்றால், தேவன் சொல்வதால், நீங்கள் அதைச் சொல்லத் தயாராக இருக்கிறீர்கள். ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், நீங்கள் உங்களைத் தாழ்த்திக் கொள்கிறீர்கள், மேலும், தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்திற்கு முன்பாக உங்கள் சொந்த சரீர மனதைத் தாழ்த்துகிறீர்கள். எனவே, தேவன் சொல்வதால், நீங்கள் அதை உங்கள் வாயால் சொல்கிறீர்கள், உங்கள் வாயிலிருந்து அது உங்கள் இதயத்தில் நகர்கிறது. நீங்கள் அதை இரண்டு முறை சொல்கிறீர்கள், உங்கள் வாயினால், மற்றும் அந்த நேரத்தில் அது உங்கள் இதயத்தில் நிலைநிறுத்தப்படும். அது உங்கள் இதயத்தில் இருப்பதால், நீங்கள் அதைச் சொல்வது இயற்கையானது, எனவே அது உங்கள் இதயத்திலிருந்து உங்கள் வாய்க்கு வருகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தில் நீங்கள் உங்களை நிலைநிறுத்துவதற்கான வழி இதுவாகும். நீங்கள் தேவனின் இரட்சிப்புக்கு அறிக்கை செய்கிறீர்கள், முதலில், வாயால், வாயிலிருந்து இதயத்திற்கு, பின்னர், இதயத்திலிருந்து மீண்டும் வாய்க்கு. அறிக்கைபண்ணுதல் இரட்சிப்புக்காக செய்யப்படுகிறது. பின்னர், அது உங்கள் வாயிலும், உங்கள் இதயத்திலும் நிலைநிறுத்தப்பட்ட பிறகு, நீங்கள் அதைச் செயல்படுத்துகிறீர்கள். யாக்கோபு 2:17 மற்றும் 26 இதை சொல்கிறது:
17 அப்படியே விசுவாசமும், கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.
பின்னர் மீண்டும்,
26 அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், விசுவாசித்து, அதைச் சொன்னால் மட்டும் போதாது, ஆனால் நீங்கள் அதைச் செயல்படுத்த வேண்டும். ஆகவே, யோசுவாவிற்காக நிறுவப்பட்ட அதே கோட்பாட்டிற்கு நாம் திரும்பி வருவோம்: தேவனின் வார்த்தையை சிந்தியுங்கள், தேவனுடைய வார்த்தையை பேசுங்கள்; தேவனுடைய வார்த்தையை செயல்படுத்துங்கள். உத்தரவாதமான முடிவு : வெற்றி ஆகும்.
சரி, இன்றைக்கு நம் நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நம் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான ஒரு தலைப்பாகிய “தேவனின் மன்னிப்பை எப்படி பெறுவது” என்பது பற்றி நாளை நான் கையாள்வேன். உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்பதை நீங்கள் எவ்வாறு முழுமையாக அறிந்துகொள்ள முடியும் என்பதை நான் விளக்குவேன்.
Code: RP-R024-101-TAM










